Friday 5 February 2016

விசாரணை, விசா‘ரணம்’! டைரக்டர் வெற்றி மாறனுக்கு ஒரு பூ ‘விலங்கு’ பார்சேல்…!

‘இதுதாண்டா போலீஸ்’ என்ற கதைகளும், ‘இதுவும்தாண்டா போலீஸ்’ என்ற கதைகளும் தமிழில் மட்டுமல்ல, சகல மொழிப் படங்களிலும் சகஜம்! ஆனால் அதிகாரத்தின் பூட்ஸ் கால்களில் சிக்கி அநியாயமாக செத்துப் போகும் மூன்று கூலிகளின் வலியை அப்படியே மனசுக்குள் இறக்கி வைத்த வகையில் இந்த விசாரணை, விசா‘ரணம்’! டைரக்டர் வெற்றி மாறனுக்கு ஒரு பூ ‘விலங்கு’ பார்சேல்…!

பார்க்கில் படுத்துறங்கி, பக்கத்து கிராமத்தில் வேலை பார்த்து வரும் தினேஷை போலீஸ் அள்ளிக் கொண்டு போகிறது. கூடவே அவருடன் பார்க்கில் தஞ்சமான மேலும் மூன்று பசங்களும் ஸ்டேஷனுக்கு அள்ளி வரப்பட, பிரித்து மேய்கிறார்கள் நால்வரையும். ‘ஒத்துக்கோ ஒத்துக்கோ…’ என்று அடிக்கும் அவர்களிடம், ‘எதை ஒத்துக்கணும்?’ என்பதை கூட அறிந்து கொள்ள முடியாத அந்த அப்பாவிகளுக்கு அப்புறம்தான் தெரிகிறது, நமக்கு திருட்டுப்பட்டம் கட்டப் போகிறார்கள் என்பது. இறுதிவரை “நாங்க தப்பு செய்யல. ஏன் செய்யாத தப்பை ஒத்துக்கணும்” என்று பிடிவாதம் பிடிக்கும் அவர்கள், கந்தலாக கிழிந்து காகிதமாக நைந்து போன பின் நீதிமன்றத்தால் விடுவிக்கப்படுகிறார்கள். விட்டாலும் விதி துரத்துமல்லவா? தங்கள் விடுதலைக்கு, போகிற போக்கில் உதவிய வேறொரு போலீஸ் இன்ஸ்பெக்டருக்கு உதவப்போக, அதற்கப்புறம் அவர்கள் அனுபவிக்கும் அடிஷனல் அவஸ்தைதான் மீதிப்படம்! படம் ஆரம்பித்து முடியும் வரை, ஒரு இனம் பிரியாத பீதி தலைக்குள் இறங்கி, நெஞ்சுமேல் நடந்து, வயிற்றுக்குள் விரவி, அப்படியே கால்கள் வழியாக மெல்ல மெல்ல இறங்குகிறது. படத்தில் சம்பந்தப்பட்ட ஒவ்வொருத்தரும் மிரட்டிபுட்டாய்ங்களே…!

ஒரு லாக்கப், அதற்குள் ஆடு போல அடைக்கப்பட்டிருக்கும் கைதிகள். லாக்கப் கொடூரங்கள். அந்த முதல் பாதியை பார்க்கிற எவரும், போலீஸ் ஸ்டேஷன் அமைந்திருக்கும் தெருவழியாக கூட செல்ல மாட்டார்கள். அதுவும் தினேஷ் வாங்குகிற அடி, அப்படியே நிஜம். விழுகிற ஒவ்வொரு லத்தி அடிக்கும் அந்த தோலும், சதையும் எம்பி எம்பி அடங்குகின்றன. இவர் வைக்கிற காலடி ஸ்டெப்ஸ்சில் கூட, அவ்வளவு பாந்தமான நடிப்பு. ஹார்ட்ஸ் ஆஃப் தினேஷ்! சிறைக்குள் இவர்கள் நடத்துகிற உண்ணாவிரதத்தை, போலீஸ் மூளை எப்படி முறியடிக்கிறது என்பதெல்லாம் ஜஸ்ட் லைக் தட்டாக கடந்து போகும் அராஜகம். அந்த நீதிமன்றத்தில் காவல் அதிகாரியை, “யோவ்… அப்படியே திரும்பி நில்லு. சாயங்காலம் வரைக்கும் இப்படியே நிக்கணும்” என்று நீதிபதி சொல்கிற காட்சி, அவ்வளவு நேர அராஜகத்தின் மீதும் தடவப்பட்ட கருணை ஆயின்ட்மென்ட். தினேஷூடன் நடித்திருக்கும் முருகதாஸ் மற்றும் இரு இளைஞர்களுக்கும் ஸ்பெஷல் பாராட்டுகள்.

பிற்பாதியில் கதை அப்படியே ஜம்ப் ஆகி, இன்னொரு பரபரப்புக்குள் நுழைந்து கொள்கிறது. இது தமிழ்நாட்டு எல்லை. அதே போலீஸ் ஸ்டேஷன். அதே தினேஷ் அண்டு நண்பர்கள் குழு. ஆனால் தெலுங்குக் காரனாவது உசிரோட விட்டான். இவனுங்க? என்ற கேள்வியை எழுப்பி, கிறுகிறுப்பாக ஒரு வணக்கத்தை போட்டு படத்தை முடிக்கிறார் வெற்றிமாறன். நாடு முழுக்க ஒரே காக்கிதான். ஆள்தான் வேறுவேறு…

வரவர சமுத்திரக்கனி, எந்த கேரக்டரில் நடித்தாலும் பிடிக்கிறது. மேலதிகாரியின் கட்டளைக்காக ஓடி ஓடி வேலை பார்க்கும் அவர், கடையில் அதே அதிகாரத்தால் மிரட்டப்பட்டு அதற்கும் கட்டுப்படுகையில், அவர்கள் கண்களில்தான் எத்தனை வேதனை? ‘‘இல்லீங்கய்யா… நான் ஆஸ்பிடலுக்கு கூட்டிகிட்டு போவேங்கய்யா” என்று மேலதிகாரிக்கு கட்டுப்பட்டும், படாமலும் முரண்டு பிடிக்கிற காட்சியில் யாருக்கும் ஒரு சொட்டு கண்ணீர் நிச்சயம். “என்னை நம்பி வந்த பசங்கய்யா” என்று தினேஷ் அண்டு நண்பர்களுக்காக கெஞ்சுகிற காட்சியிலும் கூட அந்த கண்ணீர் ரிப்பீட்!

அரசியல்வாதிகளுக்கு நட்பு வட்டத்தில் மட்டுமல்ல, அவர்ககளுக்கு ஆடிட்டராக இருந்தால் கூட எவ்வளவு சிக்கல் என்பதை துல்லியமாக்குகிறார் கிஷோர். சும்மாவே அவர் நடிப்பு அவார்டுகளுக்குரியது. இதில் கட்டித் தொங்கவிட்டு காலி பண்ணுகிறார்கள். பிணமாக கிடக்கிற போது கூட, அப்படியே அதுவாக மாறியிருக்கிறார் கிஷோர். வாழ்த்துட்டீங்க கிஷோர்.

ஒரு அராஜகமான போலீஸ் ஸ்டேஷனில் சிரித்துக் கொண்டே கழுத்தறுக்கும் எஸ்.ஐ ஆக டைரக்டர் ராமதாஸ். ஒரு உயிர் போவதற்கு அவர் கொடுக்கிற அந்த தத்துவ விளக்கம், தியேட்டரை கொல்லென சிரிக்க வைக்கும். சட்டைக்கு போடுகிற கஞ்சியை சாப்பிட எடுத்துக் கொண்ட மாதிரியே எந்நேரம் விரைப்போடு நிற்கும் சரவண சுப்பையாவை, உட்கார வைத்தே பேச வைத்திருக்கிறார் வெற்றி மாறன். (விஷயம் தெரிஞ்சவராச்சே?)

வசனங்களில் ஊசியை தடவிக் கொண்டு எழுதியிருப்பார் போலிருக்கிறது. தனி அட்ராக்ஷன் பெறுகிற வசனங்கள் ஒவ்வொன்றும். “கோட்டாவுல உள்ள வந்துட்டு சிஸ்டம் புரியாம பேசாதே…” என்று ஏ.சி, சமுத்திரக்கனியை அடக்குகிற அந்த காட்சியும் வசனமும், போலீஸ் அரசியலுக்கும் அதற்குள் உலவும் ஜாதி அரசியலுக்கும் ஒரு சின்ன உதாரணம்.

ஆங்… சொல்ல மறந்தாச்சு. இந்த படத்தில் கயல் ஆனந்தியும் இருக்கிறார். ஒரு சில காட்சிகள்தான். கண்ணாலேயே பேசி, அதே கண்ணாலேயே அழுது, அப்படியே ஜகா வாகிக் கொள்கிறார். பட்… மனசில் நிற்கிற கேரக்டர்தான் அதுவும்.

கதையும் சதையுமாக இயங்கும் இந்த படத்தில், இதையும் என் பங்கா வச்சுக்கோங்க என்று அழகான பின்னணி இசையை கொடுத்திருக்கும் ஜி.வி.பிரகாஷ்குமாரும், ஒளிப்பதிவாளர் ராமலிங்கமும் தனித்துவம் மிக்கவர்கள்.

தமிழ்சினிமாவுக்கு ‘பொட்டு’ வைப்பது போல சிறந்த படங்களையே தருவதால், இனி இவர் வெற்றி மாறனல்ல, அந்த திலகங்களையே தாங்கும் ‘நெற்றி’ மாறன்!

பின்குறிப்பு-

ஆட்டோ டிரைவர் சந்திரகுமார் தன் வாழ்வில் நடந்த இந்த சம்பவத்தை ஒரு நாவலாக எழுத, அதை பின்னணியாக கொண்டு இந்த கதையை வடித்திருக்கிறார் வெற்றிமாறன். Venice Film Festival Amnesty International Award உள்ளிட்ட பல்வேறு உலக திரைப்பட விழாக்களில் ஏராளமான விருதுகளை பெற்றிருக்கிறது இப்படம்.

0 comments:

Post a Comment