Sunday 31 January 2016

“இறுதிச் சுற்று” – தமிழுக்குப் புதுசு! இந்திக்குப் பழசு! பெண்களுக்குப் பெருமை சேர்க்கும்!

கோலாலம்பூர் – ஏறத்தாழ நான்கு ஆண்டுகளாக தமிழ்த் திரையுலகில் இருந்து ஒதுங்கி இருந்த மேடி  என்ற மாதவன் விசுவரூபம் எடுத்து, முடி-தாடி வளர்த்து திரும்பியிருப்பது “இறுதிச் சுற்று” படத்தின் மூலம்! ஒரே நேரத்தில் இந்தியிலும், தமிழிலும் வெளியாகின்றது இந்தப் படம்!

மாதவனுக்கு இன்னொரு மகுடம் என்று சொல்லும் அளவுக்கு அவர் கடுமையாக உழைத்திருக்கின்றார் – உடலைச் செதுக்குவதிலும் – குத்துச் சண்டை பயிற்சிகளில் ஈடுபடுவதிலும் – நடிப்பிலும்!

தமிழில் மட்டுமே படம் பார்ப்பவர்களுக்கு, தடம் மாறாத திரைக்கதையும், பெண்களுக்கான குத்துச்சண்டை விளையாட்டு என்ற இதுவரை யாரும் கையாளாத கதைக்களம் என்பதும் மிகவும் பிடித்துப் போகும்.

ஆனால், இந்தி, ஆங்கிலப் படங்கள் பார்ப்பவர்களுக்கோ ஏற்கனவே பல படங்களில் பார்த்த காட்சிகள், எதிர்பார்த்தபடியான கதைப் போக்கு என புதுமையாக ஏதுமில்லை.

Iruthi Chuttru-Mathavan training“இறுதிச் சுற்று” படத்திற்காக நிஜ வாழ்க்கைப் பயிற்சியில் மாதவன்…

அதிலும், இந்தியில் பிரியங்கா சோப்ரா நடித்து வெற்றி பெற்ற மேரி கோம் என்ற இந்திய குத்துச்சண்டை வீராங்கனையின் கதையைக் கொண்ட இந்திப் படத்தையும், ஷாருக்கான் நடித்த “சக்டே இந்தியா” படத்தையும் பார்த்தவர்களுக்கு “இறுதிச் சுற்று” அதன் பாதிப்பு என்பதை சுலபமாகப் புரிந்துகொள்ள முடியும்.

அதைவிட, சில்வர்ஸ்டர்ன் ஸ்டால்லோன் நடித்த ரோக்கி (Rocky) ஆங்கிலப் படவரிசைகளின் பாதிப்புகளும் ஆங்காங்கே பளிச்செனத் தெரிகின்றது. குறிப்பாக, ரஷிய வீராங்கனையோடு, இறுதிப் போட்டியில் மோதுகின்ற காட்சிகளில்!

இப்போது, தமிழிலும் சில படங்கள் விளையாட்டுப் போட்டிகளை மையமாக வைத்து வந்து விட்டதால், பெண் இயக்குநர் சுதா கொங்கரா (படம்) திரைக்கதையில் இன்னும் கொஞ்சம் கூடுதல் கவனம் செலுத்தியிருக்கலாம்.

Sudha Kongara Prasad @ Irudhi Suttru Movie Audio Launch Stillsஇருப்பினும், ஒரு பெண் என்பதாலோ என்னவோ, பெண்மன உணர்வுகளை பல காட்சிகளில் அழகாக வெளிப்படுத்தியிருக்கின்றார் இயக்குநர்.

படத்தை மொத்தமாக கொள்ளை கொண்டு போகின்றவர் – நமது மனங்களை அள்ளிக் கொண்டு போகிறவர் – கதாநாயகியாக நடித்திருக்கும் ரித்திகா சிங். நிஜ வாழ்க்கையிலும் தற்காப்புக் கலை போட்டிகளில் இவர் வீராங்கனையாம்!

கதை-திரைக்கதை

முன்னாள் குத்துச் சண்டை வீரரான மாதவன், பயிற்சியாளராக மாறி புதுடில்லியில் பணிபுரிந்து கொண்டிருக்க, ஒரு பிரச்சனையில் தலைமைப் பயிற்சியாளரிடம் ஏற்படும் மோதலால், சென்னைக்கு மாற்றப்படுகின்றார். சென்னையில் குத்துச்சண்டை போட்டிகளுக்கான வாய்ப்புகள் குறைவு என்பதால் ஒரு தண்டனையாக மாதவனை சென்னைக்கு அனுப்புகின்றார்கள்.

வட சென்னையில், ஒரு மீன் குப்பத்தில், குத்துச்சண்டையில் ஆர்வத்தோடு ஈடுபடும் ஒரு குடும்பத்தின் இரண்டு சகோதரிகளை மாதவன் கண்டெடுத்து, அவர்களுக்குப் பயற்சியளித்து, அந்த இருவரில் மதி என்ற பெயர் கொண்ட தங்கையை எப்படி ஒரு குத்துச் சண்டை வீராங்கனையாக உருமாற்றுகின்றார் என்பதும் அதில் அவர் சந்திக்கும் சவால்களும், சம்பவங்களும்தான் படம்.

Iruthi Chuttru-poster 2ஆரம்பம் முதல் இறுதிக் காட்சி வரை பெண்களுக்கான குத்துச் சண்டை என்பதை மட்டுமே மையமாக வைத்து நகரும் திரைக்கதை தமிழுக்குப் புதுசு. வழக்கமான காதலர் பாடல்கள் இல்லை, நகைச்சுவைக்கென தனிக் கதை இல்லை. இருந்தாலும், வலுவான சம்பவங்களின் மூலம் நம்மை இறுதிக்காட்சி வரை கட்டிப்போட்டு விடுகின்றார் இயக்குநர்.

இருந்தாலும், பல இடங்களில் திரைக்கதை எதிர்பார்ப்பதைப் போலவே இருப்பதும், கதையில் வரக் கூடிய திருப்பங்களில் சுவாரசியங்கள் இல்லாதிருப்பதும் இன்னொரு கோணத்தில் பார்த்தால் திரைக்கதையில் விழுந்திருக்கும் சில ஓட்டைகளாகச் சொல்லலாம்.

அதே போல, விளையாட்டுப் போட்டிகளில் இருப்பதாகக் காட்டப்படும் அரசியலும் பல படங்களில் ஏற்கனவே பார்த்ததுதான்.

நடிப்பு

iruthi suttru-mathavan-saala khadoosபயிற்சியில் ஈடுபடும் மாதவன், ரித்திகா – இந்தியில் சாலா காடூஸ் என்ற பெயரில் வெளியாகியுள்ளது ‘இறுதிச் சுற்று…

படத்தின் பலம் மாதவனும், கதாநாயகி ரித்திகா சிங்கும்தான்!

அதற்கேற்ப, இருவரும் கடுமையாக உழைத்திருக்கின்றார்கள். அந்தக் காலப் படங்களில் பார்த்ததைப் போல் ‘சாக்லேட் பாய்’ காதலனாகவே, மீண்டும் மீண்டும் தன்னைக் காட்டிக் கொள்ள முயற்சி செய்யாமல், வயதுக்கு ஏற்ற பாத்திரத்தைத் தேர்ந்தெடுத்ததில் மாதவன் முத்திரை பதித்திருக்கின்றார்.

குத்துச் சண்டைப் பயிற்சியில் அவர் காட்டும், ஆர்வம், ஆக்ரோஷம், வெறி என அனைத்தையும் தனது முக பாவனைகளில் வெகு சிறப்பாக கொண்டு வந்து, மீண்டும் ஒரு சுற்று வருவேன் என இன்றைய கதாநாயகர்களை பயமுறுத்தியிருக்கின்றார்.

ரித்திகா சிங் மனது வைத்தால் இந்தி, தமிழ் என ஒரு புதிய கதாநாயகியாக வலம் வருவார். அவ்வளவு திறமைகளும், அழகும், கொட்டிக் கிடக்கின்றன. நடிப்பிலும் குறை வைக்கவில்லை.

Ritika-Singh-Irudhi-Suttru-படத்தின் கதாநாயகி ரித்திகா சிங்…ஒரு பத்திரிக்கையாளர் சந்திப்பில்….

மீன் குப்பத்தில் மீன் விற்பவளாக அலட்டல், தன்னை நெருங்க நினைப்பவர்களிடம் நெருப்பாக சீறுவது, குத்துச் சண்டை என இறங்கி விட்டால் வெறியோடு போராட்டம் நடத்துவது, பயிற்சியாளரை மட்டம் தட்டுவது, பின்னர் அதே பயிற்சியாளர் மாதவனோடு காதலில் விழும்போது காட்டும் நெகிழ்வு, நளினம், கடைசிக் காட்சிகளில் பயிற்சியாளர் பக்கத்தில் இல்லாததால் ஏற்படும் ஏக்கம் என அனைத்து முனைகளிலும் தேர்ச்சி பெறுகின்றார் ரித்திகா.

வசனங்களைக் கூட சொந்தக் குரலில் பேசியிருக்கின்றார் – அதுவும் அதே வடசென்னை மொழியில்!

சாதாரண தமிழ் இரசிகனுக்கு ஆர்வமில்லாத பல அம்சங்களைக் கொண்டிருக்கும் திரைக்கதை கொண்ட படத்தைக் காப்பாற்றுவது மாதவன், ரித்திகா இருவரும்தான்.

அதே சமயம் மற்றவர்களின் நடிப்பும் குறை சொல்லும் அளவிற்கு இல்லை. குறிப்பாக நாசரும், ராதாரவியும் கவர்கின்றார்கள்.

Iruthi Suttru poster-3கதாநாயகியின் குடும்பக் காட்சிகளும், அவர்களுக்குள் நடக்கும் சில்லறைச் சண்டைகளும் அசல் மீன் குப்பத்து குடும்பத்தை நம் கண் முன்னே கொண்டு வந்து காட்டுகின்றன.

போட்டி விளையாட்டு என்று வரும்போது அக்காள்-தங்கைக்கு இடையிலும் விரிசல் வரும் என்பதை உறைக்கும்படி உணர்த்தியிருக்கின்றார்கள்.

பலவீனங்கள்

படத்தில் பச்சையாக என் மனைவி வேறொருவனுடன் ஓடிப் போய்விட்டாள் என அடிக்கடி கூறுகிறார் மாதவன். அந்தக் கிளைக் கதையையும் சுருக்கமாக கூறியிருந்தால், மாதவன் கதாபாத்திரத்தின் மீது அனுதாபமோ அல்லது ஒரு தாக்கமோ இருந்திருக்கும்.

பயிற்சியாளர் என்று கூறிக் கொண்டு, அதுவும் பெண்களுக்கான குத்துச் சண்டை பயிற்சியாளர் என வரும் ஒரு பாத்திரம், மது அருந்திக் கிடப்பதும், மற்றவர்களின் மனைவியரோடு உடலுறுவு வைத்துக் கொள்வது போன்ற காட்சிகளும் அந்தக் கதாபாத்திரத்தின் தன்மையை, சிதைத்து விடுகின்றது. நமக்கும் அந்தக் கதாபாத்திரத்தின் மீது அனுதாபம் பிறக்கவில்லை.

சாதாரண பயிற்சியாளராக, மிகவும் பின்தங்கிய இடத்தில் தங்கி பயிற்சி கொடுக்கும் மாதவன் – டில்லியிலிருந்து மோட்டார் சைக்கிளிலேயே வரும் மாதவன் – பணம் போதவில்லை என தனது மோட்டார் சைக்கிளையே ஒரு கட்டத்தில் விற்று விடுகின்றார். ஆனால், பல இடங்களில் கத்தை கத்தையாக பணத்தை அள்ளி வீசுகின்றார். சர்வ சாதாரணமாக ஒரு இலட்சம் ரூபாய் கொடுத்து கதாநாயகியை போலீஸ் சிக்கலில் இருந்து காப்பாற்றுகின்றார்.

இவையெல்லாம் முரண்பாடுகள் இல்லையா?

இப்படி ஆங்காங்கே சில ஓட்டைகள் கதையில் ஆங்காங்கே காணப்படுகின்றன.

மற்ற தொழில் நுட்பங்கள்

இசை சந்தோஷ் நாராயணன் சிறப்பாக செய்திருந்தாலும், ஏறத்தாழ எல்லாப் பாடல்களும் ஒரே சாயலில் ஒலிக்கின்றன. அதிலும் 36 வயதினிலே படத்தின் பாடல்களைத் திரும்பக் கேட்பது போல் ஒரு பிரமை. பாடல் பாடுபவர்களும் அதே சாயலில் பாடுகின்றார்கள். தடத்தை மாற்றிக் கொள்ளுங்கள் இசையமைப்பாளரே!

ஒளிப்பதிவு சிவகுமார் விஜயன். மீன் குப்பத்தையும், அதன் வாழ்வியலையும் அப்படியே படம் பிடித்துக் காட்டியிருக்கின்றார். பயிற்சிக் காட்சிகளும், குத்துச் சண்டை போட்டிக் காட்சிகளின் ஒளிப்பதிவும் கவரவே செய்கின்றன.

சாதாரண பெண்ணும் தகுந்த பயிற்சியும், கவனிப்பும், வழிகாட்டுதலும் இருந்தாலும் சாதனை புரியலாம் என்பதைக் காட்டிய வரையில் – பெண்களையும், போட்டி விளையாட்டுகளில் ஈடுபடுத்த குடும்பத்தினர் இயக்குநர் சுதாவுக்கு ஒரு பாராட்டு!

ஆனால், ‘அரண்மனை’யைப் பார்க்கப் போகலாம் வாருங்கள் – ஒன்றுக்கு இரண்டு மூன்றாக அழகுக் கதாநாயகிகள் – போதாக் குறைக்கு பேயும் இருக்கின்றது – என வரிசை கட்டிக் கொண்டு நிற்கும் தமிழ் இரசிகனை இறுதிச் சுற்று ஈர்க்குமா? சந்தேகம்தான்!

0 comments:

Post a Comment