Friday 19 February 2016

மிருதன் - திரைவிமர்சனம் - ‘தனி ஒருவனாக’

ஹாலிவுட்டில் Resident evil, Warm Bodies , Dawn of the dead எண்ண முடியாத அளவிற்கு சோம்பி வகை படங்கள் வந்து விட்டது. முதலில் சோம்பி என்றால் என்ன? வேறு ஒன்றும் இல்லை, ஊரில் எங்காவது ஒரு வைரஸ் பரவும், அந்த வைரஸ் ஒருவர் உடலுக்கு புகுந்துவிட்டால், மிருக குணம் வந்து அனைவரையும் கடித்து கொன்றுவிடுவோம். இது தான் சோம்பி கான்செப்ட்.

இவை பாலிவுட்டில் கூட சையிப் அலிகான் நடிப்பில் go goa gone என்று ஒரு படம் வெளிவந்தது, தமிழில் முதன் முறையாக நாய்கள் ஜாக்கிரதை இயக்குனர் சக்தி சௌந்தர் ராஜன் இயக்கத்தில் வெளிவந்துள்ள தமிழ் சோம்பி படம் தான் இந்த மிருதன்.
கதைக்களம்

ஊட்டியில் ஒரு கெமிக்கல் தொழிற்சாலையில் சில கெமிக்கல்களை ஊழியர்கள் தெரியாமல் தவறவிடுகிறார்கள். இது தேங்கியிருக்கும் ஒரு நிலத்தடி நீரில் கலக்க, அதை ஒரு நாய் குடிக்கின்றது. இதைத் தொடர்ந்து அந்த நாய் சோம்பியாக மாற, பின் ஊர் முழுவதும் அந்த வைரஸ் பரவுகின்றது.

இதே ஊட்டியில் அண்ணன் -தங்கையாக ஜெயம் ரவி-அனிகா சந்தோஷமாக வாழ்ந்து வருகின்றனர். ரவி சாதுவான ட்ராபிக் போலிஸாக இருந்தாலும், தன் நண்பருக்காக MLA R.N.R.மனோகரிடம் முறைக்கின்றார்.

இதை தொடர்ந்து அனிகா திடிரென்று ஒரு நாள் தொலைந்து போக, பதறி வெளியே வரும் ஜெயம் ரவியை சோம்பிகள் துரத்துகின்றது, இதே ஊரில் மருத்துவராக இருக்கும் லட்சுமி மேனன் தன் சக மருத்துவர்களுடன் இணைந்து இந்த வைரஸிற்கு மாற்று மருந்து கண்டுப்பிடிக்க முயற்சி செய்கின்றார். தங்களை ஒரு இடத்திற்கு அழைத்து செல்ல இவர்களுக்கு ஜெயம் ரவி உதவி தேவைப்படுகிறது.

இதற்காக லட்சுமி மேனன், அனிகாவை காப்பாற்ற ரவிக்கு உதவி செய்ய, பிறகு ‘எங்களை பாதுகாப்பாக கோயமுத்தூர் அரசு மருத்துவமனைக்கு அழைத்து செல், அப்போது தான் இதற்கு மாற்று மருந்து கிடைக்கும்’ என லட்சுமி மேனன் கூறுகிறார். பின் தன் “மிஷின் கன்”னை முதுகில் மாட்டி கிளம்ப, ஜெயம் ரவி இவர்களை காப்பாற்றி சொன்ன இடத்திற்கு அழைத்து சென்றாரா? இதற்கு மாற்று மருந்து கண்டிப்பிடித்தார்களா? சோம்பிகளை எப்படி வேட்டையாடுகிறார் என்பதை எதிர்ப்பாராத கிளைமேக்ஸுடன் கூறியிருக்கிறார் இயக்குனர்.
படத்தை பற்றிய அலசல்

ரோமியோ ஜுலியட், தனி ஒருவன், பூலோகம் என தொடர் வெற்றிகளை தொடர்ந்து மீண்டும் அதே வேகத்தில் இந்த ஆண்டும் வெற்றி கணக்கை தொடங்கிவிட வேண்டும் என ரவி களத்தில் இறங்கியுள்ளார். படத்தில் அன்புள்ள அண்ணனாக மனதை ஈர்க்கின்றார். அதே நேரத்தில் சோம்பிகளை வேட்டையாட துப்பாக்கியை தூக்கி வேட்டைக்கு கிளம்பும் இடத்திலும் சபாஷ் பெறுகிறார். ஆனால், எப்படி இவருக்கு இத்தனை புல்லட் கிடைத்தது என்பது லாஜிக் மீறலோ மீறல். இன்னும் கொஞ்சம் சுட்டால் ஸ்கிரீனை தாண்டி இரண்டு புல்லட் நம் மீது பாய்ந்திருக்கும்.

லட்சுமி மேனன் மருத்துவராக வருகிறார், ரவியுடன் பின்னாலே ஓடுகிறார், இரண்டு டூயட்டுக்கு உதவுகிறார் தவிர பெரிதாக நடிக்கும் கதாபாத்திரம் இல்லை, உண்மையை சொல்ல வேண்டுமென்றால் ரவி-லட்சுமி மேனன் கெமிஸ்ட்ரியை விட ரவி-காளி வெங்கட் கெமிஸ்ட்ரி நன்றாக ஒர்க் அவுட் ஆகியுள்ளது. எப்போதும் போல் தன் கவுண்டர் வசனங்களால் காளி கலக்குகின்றார். அதிலும், சுட தெரியாமல், அவர் சரியாக சுட்டு, அங்க எய்ம் வச்சேன் மச்சான், அதான் இங்க சுட்டேன், தப்பா சரியாக சுட்டேன்ல என்று கேட்கும் காட்சிகள் சிரிப்பு சரவெடி. அதேபோல் சில நேரம் வந்தாலும் ஸ்ரீமனும் தன் பங்கிற்கு கலகலப்பூட்டுகிறார். மனோகரும் வில்லன் போல் காட்டினாலும் போக போக, ‘எல்லாரும் சொல்லிட்டாங்க இருந்தாலும் நானும் சொல்றேன், என்னம்மா இப்படி பண்றீங்களேமா’ என தன் பங்கிற்கு சிரிக்க வைக்கின்றார்.

தமிழ் சினிமாவின் முதல் முயற்சி என்பதால் கண்டிப்பாக சோம்பி படம் பார்க்காதவர்களுக்கு இது புது அனுபவத்தை தந்தாலும், ஹாலிவுட் படங்கள் பார்த்தவர்களுக்கும் இது பல படங்களை நியாபகப்படுத்தும். இயக்குனர் காதலை வைத்து திரைக்கதையை நகர்த்தியிருந்தாலும், ரவி-அனிகாவின் அண்ணன், தங்கை பாசம் ரசிகர்களை கவர்ந்த அளவிற்கு காதல் காட்சிகள் எடுபடவில்லை. கொஞ்சம் தேவையில்லாத திணிப்புகள், இப்படி மாற்றியிருக்கலாமே என ரசிகர்களையே முணுமுணுக்க வைக்கின்றது.

வெங்கடேஷின் ஒளிப்பதிவு படத்தில் பல காட்சிகள் சோம்பிகளை அருகில் காட்டி அச்சுறுத்துகின்றனர், இதற்கெல்லாம் மேல் டி.இமான் தான் இப்படத்திற்கு இசையா என்று கேட்கும் அளவிற்கு மிரட்டியுள்ளார் பின்னணி இசையில்.
க்ளாப்ஸ்

இதுவரை தமிழ் சினிமா ரசிகர்கள் தமிழில் கண்டிராத கதைக்களம் என்பதால் அதற்காகவே மனம் திறந்து பாராட்டலாம்.

ஜெயம் ரவி-அனிகா செண்டிமெண்ட் காட்சிகள், படத்தின் முதல் பாதி விறுவிறுவென செல்கின்றது.

டி.இமான் பின்னணி இசையில் மிரட்டியுள்ளார், மேலும், படம் ஆரம்பித்து வேறு திசையில் செல்லாமல் ஆரம்பத்திலேயே கதைக்குள் செல்கின்றது.
பல்ப்ஸ்

இரண்டாம் பாதி என்ன தான் சுவாரசியமாக சென்றாலும், முதல் பாதி அளவிற்கு இல்லையே என்று சொல்ல வைக்கின்றது.

பல இடங்களில் லாஜிக் மீறல்கள், பெரிய ஆக்ஷன், விறுவிறுப்புடன் செல்கையில் காதலை வைத்து கிளைமேக்ஸை நகர்த்தி செல்வது சில தரப்பு ரசிகர்களுக்கு ஏமாற்றம் தான்.

படத்திற்கு மிகப்பெரிய பலம் டி.இமானின் பின்னணி இசை என்றாலும், கிளைமேக்ஸில் மீண்டும் மீண்டும் வரும் ஒரே இசை கொஞ்சம் காதை பதம் பார்க்கின்றது.

மொத்தத்தில் ஹாலிவுட்டில் சோம்பி கதைகள் எத்தனை வந்தாலும், தமிழில் ‘தனி ஒருவனாக’ நின்று படத்தை சுமந்து செல்லும் ஜெயம் ரவிக்காகவும், புதிய முயற்சிக்காகவும் கண்டிப்பாக இந்த சோம்பியுடன் பயணிக்கலாம்.

நவரச திலகம் - விமர்சனம் கொஞ்சம் காமெடி தூக்கலாக இருந்திருந்தால் அனைத்து தரப்பு ரசிகர்களையும் கவர்ந்திருக்கும்.

சின்னத்திரை நடிகர்கள் கூட வெள்ளித்திரையில் ஜொலிக்கலாம் என விதைப்போட்டவர்கள் சந்தானம், சிவகார்த்திகேயன். இவர்களின் வரிசையில் ஏற்கனவே வானவராயன் வல்லவராயன் படத்தில் இரண்டாவது ஹீரோவாக நடித்தவர் மா.கா.பா.ஆனந்த்.

இவர் தற்போது சோலோ ஹீரோவாக களமிருக்கியிருக்கும் படம் தான் நவரச திலகம்.
கதைக்களம்

தமிழ் சினிமாவில் தொன்று தொட்டு இருக்கும் ஹீரோவிற்கான தகுதி வேலைக்கு போகமால் அப்பாவிடம் திட்டு வாங்கி அவர் பணத்தை வீணாக்குவது அதை தான் மா.கா.பாவும் செய்கின்றார்.

பின் ஸ்ருஷ்டியை பார்த்தவுடன் காதல் வயப்பட ஸ்ருஷ்டியின் தந்தை ஜெயபிரகாஷ் தன் மகள் வாய் பேச முடியாதவர் என சொல்கின்றார். இவர்கள் காதலை பிரிக்க. ஆனால், மா.கா.பாவிற்கு இதுவே இவர் மீது ஒரு காதலை மேலும் அதிகப்படுத்துகின்றது.

இதை தொடர்ந்து ஸ்ருஷ்டியின் குடும்பத்தில் இன்னும் நெருக்கமாக, ஸ்ருஷ்டியின் அக்காவிற்கு அரச வேலைப்புரியும் சித்தார்த் விபினை திருமணம் செய்து வைக்க முயற்சி செய்கின்றார் மா.கா.பா.

நிச்சயதார்த்த தேதி நெருங்கும் வேளையில், சித்தார்த் விபின் தனது அத்தை மகன் என்பது மா.கா.பா.விற்கு தெரிய வருகிறது.

விபின், சிருஷ்டியின் அக்காவை திருமணம் செய்துகொண்டால், சிருஷ்டி தனக்கு தங்கை உறவு வரும் என்பதால், இந்த திருமணத்தை எப்படியாவது நிறுத்தவேண்டும் என மா.கா.பா. முடிவெடுக்க, பிறகு என்ன ஆனது என்பதே மீதிக்கதை.
க்ளாப்ஸ்

படத்தின் மிகப்பெரும் பலமே சித்தார் விபின் வரும் காட்சிகள் தான், அவர் பேச ஆரம்பித்தாலே சிரிப்பு வரத்தொடங்குகின்றது.

இளவரசு மா.கா.பாவின் அப்பாவாக தன் கதாபாத்திரத்தை அழகாக செய்துள்ளார்.

மா.கா.பாவும் கிட்டத்தட்ட நாங்களும் ஹீரோ தான் என சொல்லு அளவிற்கு நன்றாக நடிப்பை வெளிப்படுத்தியுள்ளார்.
பல்ப்ஸ்

நடிப்பில் கவனம் செலுத்திய சித்தார்த் இசையிலும் கொஞ்சம் கவனத்தை செலுத்தியிருக்கலாம்.

முன்னணி காமெடி நடிகர் கருணாகரனை பெரிய அளவில் பயன்படுத்தபடவில்லை.

மொத்தத்தில் நவரச திலகம் கொஞ்சம் காமெடி தூக்கலாக இருந்திருந்தால் அனைத்து தரப்பு ரசிகர்களையும் கவர்ந்திருக்கும்.

சேதுபதி - திரைவிமர்சனம்


தமிழ் சினிமாவில் ஹீரோக்கள் என்ன தான் கேங்ஸ்டர் படம் நடிச்சாலும் சூப்பர் ஸ்டார் முதல் சமீபத்திய ரைசிங் ஸ்டார் வரைக்கும் போலிஸ் ட்ரஸ் அணிந்தால் தான் செம்ம கெத்து. அப்படியிருக்க தொடர்ந்து கிளாஸ் வகை படங்களை செய்து வரும் விஜய் சேதுபதிக்கு மட்டும் மாஸ் காட்ட ஆசை இருக்காதா என்ன?.

அதனால் தான் தன் பேவரட் இயக்குனர் அருணுடன் இணைந்து போலிஸ் லத்தியை கையில் எடுத்திருக்கிறார் சேதுபதி.
கதைக்களம்

படத்தின் ஆரம்ப காட்சியிலேயே ஒரு போலிஸை ஸ்கெட்ச் போட்டு எரித்து விடுகின்றனர். அந்த கொலை விஜய் சேதுபதி போலிஸாக இருக்கும் ஏரியாவில் நடக்க, இந்த கேஸை விஜய் சேதுபதி கையில் எடுக்கிறார்.

போலிஸை கொன்றால் அவன் எவனாக இருந்தாலும் தூக்க வேண்டும் என துடிப்புடன் பல தடயங்களை கண்டுப்பிடிக்க, அந்த ஊரில் மிகப்பெரும் கட்டப்பஞ்சாயத்து நடத்தும் வாத்தியார் என்பவர் தான் இந்த கொலைக்கு காரணம் என தெரிகின்றது.

ஊரே அவரை பார்த்து பயந்து நடுங்கும் நேரத்தில் சேதுபதி தைரியமாக அவரை கைது செய்கின்றார். இந்த அவமானத்திற்காக விஜய் சேதுபதியை பழிவாங்க, செயின் திருட்டு வழக்கில் வரும் சிறுவர்களை துப்பாக்கியை காட்டி மிரட்டி விசாரிக்கும் போது, யாரோ துப்பாக்கியை ரீலோட் செய்து அவர் கையில் கொடுக்கின்றனர்.

அவரும் யதார்த்தமாக சுட, சிறுவன் கழுத்தில் புல்லட் பாய்கின்றது. இதன் பிறகு விஜய் சேதுபதியை தற்காலிக வேலை நிறுத்தம் செய்ய, வாத்தியார் ஆட்டம் அதிகமாகின்றது. பின் வழக்கம் போல் தன் மீசையை முறுக்கி, விஜய் சேதுபதி தன் இரண்டாவது இன்னிங்ஸில் வாத்தியாரை எப்படி பந்தாடுகிறார் என்பதை மாஸ் கமர்ஷியலாக கூறியிருக்கிறார் அருண்.
படத்தை பற்றிய அலசல்

அட..இது விஜய் சேதுபதி தானா!!! என ஆச்சரியப்பட வைக்கின்றது. முறுக்கு மீசை, தைரியமான போலிஸ் ரம்யா நம்பீசனுக்கு அன்பான கணவன், குழந்தைகளுக்கு பாசமுள்ள அப்பா என்று முழு மாஸ் ஹீரோவாகவே மாறிவிட்டார். கிளாஸில் இருந்து மாஸிற்கு ப்ரோமோஷன் கிடைத்து விட்டது சேதுபதி. வாழ்த்துக்கள்.

ரம்யா நம்பீசன் இரு குழந்தைகளுக்கு அம்மாவாக நடித்ததற்கே பாராட்டலாம், இளம் நடிகைகள் யாரும் துணிந்து நடிப்பார்களா என்றால் கேள்விக்குறி தான், ‘என் புருஷன் காலையில சண்டைப்போட்டா, மாலையில் என்னை கொஞ்ச வருவான், அதுக்காகவாது நான் அவர் கூட இருக்க வேண்டும்’ என விஜய் சேதுபதிக்கு சப்போர்ட்டாக கலக்கியுள்ளார்.

படத்தின் மிகப்பெரிய ஹைலைட் விஜய் சேதுபதியின் கதாபாத்திர வடிவம் தான், ஒரு மாஸ் போலிஸ் என்றாலும் எந்த இடத்திலும் செயற்கையாக தெரியக்கூடாது என்று கொஞ்சம் மெனக்கெட்டுள்ளனர். குழந்தை முன்பு புகார் கொடுக்க வரும் கணவனை, குழந்தையை வெளியே போகச் சொல்லி விட்டு திட்டுவது, தன் மகள் முன்பு மனைவியை அடித்தததை சமாளிப்பது என யதார்த்த காப் இந்த சேதுபதி.

தினேஷ் கிருஷ்ணன் ஒளிப்பதிவு பல காட்சிகள் மிகவும் ரியலாக உள்ளது, அதை விட ஸ்ரீகர் பிரசாத்தின் எடிட்டிங், வேகமான திரைக்கதைக்கு செம்ம ப்ளஸ் கூட்டியிருக்கின்றது. தெகிடி படத்தை தொடர்ந்து நிவாஸின் இசை சேதுபதியிலும் மிரட்டல். ஆனால், தீவிர அனிருத் ரசிகராக இருப்பார் போல, விஐபி, காக்கிசட்டை இசையெல்லாம் வந்து போகின்றதே.
க்ளாப்ஸ்

படத்தின் இரண்டாம் பாதி, விறுவிறுவென செல்கின்றது, அதிலும் விஜய் சேதுபதி வீட்டை முற்றுகையிடும் வில்லன் கும்பலை போனிலேயே மிரட்டும் சீன் தியேட்டர் விசில் சத்தத்தில் அதிர்கின்றது.

படத்தில் முதல் பாதியில் ஆங்காங்கே வரும் சின்ன சின்ன டுவிஸ்டுகள், நம் கவனம் ஒரு போலிஸிடம் இருக்கும் போது, அதை அழகாக திசை திருப்பும் காட்சி.

ஸ்ரீகர் பிரசாத்தின் விறுவிறு எடிட்டிங். விஜய் சேதுபதி- ரம்யா நம்பீசன் காதல் காட்சிகள்.
பல்ப்ஸ்

பார்த்து பழகி போன வில்லன், இரண்டாம் பாதியில் யூகிக்க கூடிய டுவிஸ்டுகள்.

படத்தின் முதல் பாதியில் பல காட்சிகள் பெரிய விளக்கம் இல்லாமல் உடனே முடிவது போல் இருக்கும் காட்சியமைப்புகள்.

வில்லன் விஜய் சேதுபதி மீது காட்டும் கோபம், அவர் குடும்பதை தூக்க ப்ளான் போடுவது தான் ஏன் இத்தனை தாமதம் என்று தெரியவில்லை, அதற்குள் கிளைமேக்ஸே நெருங்கிவிடுகின்றது.

மொத்தத்தில் ரவுடி விஜய் சேதுபதியை விட இந்த போலிஸ் சேதுபதி செம்ம கெத்து.

’மிருதன்’ ஸோம்பி - நிஜமா கற்பனையா?

தமிழின் முதல் ஸோம்பி படம் மிருதன். ஏதோ வைரஸால் தாக்கப்பட்டு மனிதர்களெல்லாம் ஸோம்பிக்களாக மாறி நாசம் செய்கிறார்கள் என்பது போன்று அமைக்கப்பட்ட கதை. காலம் காலமாக இதேபோல பல ஹாலிவுட் ஸோம்பி படங்களும் வந்து கல்லா கட்டிக்கொண்டுதான் இருக்கின்றன. நிஜமாகவே ஸோம்பிக்கள் அத்தனைக் கொடூரமானவையா? உண்மையாகவே ஸோம்பி என்ற ஒன்று இருக்கின்றதா? அல்லது கட்டுக்கதையா?


சற்றே விரிவாகப் பார்த்துவிடலாம்.

ஒரு மனிதனை இறந்த நிலைக்குக் கொண்டு சென்று, மீண்டும் அவனை உயிரோடு ஆனால் ஓர் அடிமைபோல மாற்றி வேலை வாங்கும் ஆப்பிரிக்க மந்திரக் கலையை ‘வூடு’ (Voodoo) என்று அழைக்கிறார்கள். அந்த மந்திரக் கலைக்குள் சிக்கி, ஓர் அடிமையாக, நடைபிணமாகத் திரியும் மனிதர்களைத்தான் ‘ஸோம்பி’ என்கிறார்கள்.

உயிருடன் இருக்கும் ஒரு மனிதனைக் கொல்லாமல் கொல்லலாம். பேச்சு, மூச்சு, இதயத் துடிப்பு, நாடித் துடிப்பு எதுவுமின்றி அவனை ஜடமாக மாற்றலாம். அவனைப் பரிசோதிக்கும் மருத்துவர், கண்ணாடியைக் கழற்றியபடியே வருத்தப்பட்டு ‘ஆள் காலி’ என்று அறிவிப்பார். அந்த மனிதனைப் பிணமாக எண்ணி, உறவினர்கள் புதைப்பர். பின் அவனைக் கொல்லாமல் கொன்ற சதிகாரர்கள் வந்து உடலைத் தோண்டி எடுத்து, ‘மாய மருந்து’ கொடுத்து உயிர் நிலைக்கு மீட்டு வருவர். ஆள்தான் உயிரோடு வருவானே தவிர, அவனுக்கு நினைவுகள் எல்லாம் மறந்து போயிருக்கும். எங்கோ, யாரிடமோ அடிமையாக சொன்ன வேலைகளைச் செய்யும் நடைபிணமாக ‘வாழ’ ஆரம்பிப்பான். அந்த நடைபிண மனிதர்களுக்குப் பெயர்தான் ‘ஸோம்பி.’




வறுமைக்கு வாக்கப்பட்ட தேசமான ஹைதியில், இம்மாதிரி ஸோம்பிக்கள் உருவாக்கப்பட்டு அவர்கள் அடிமைகளாக விற்கப்படுவது சகஜம். கூலியே கொடுக்க வேண்டாம். அவர்களுக்குக் கொடுக்கப்படும் ‘மாய மருந்து’, பசியையும் மறக்கடித்துவிடும். எப்போதாவது சாப்பாடு கொடுத்தால் போதும். மிகக் கடினமாக உழைப்பார்கள் என்பதால் சில பண்ணையார்கள் தம் தோட்டத்தில் இம்மாதிரியான ஸோம்பிக்களை நூற்றுக்கணக்கில் அடிமையாக வைத்திருந்தார்கள் என்ற கருத்து காலம் காலமாகச் சொல்லப்படுவது.

அமெரிக்க ஆராய்ச்சியளாரான வேட் டேவிஸ் ஹைதி ஸோம்பிக்கள் குறித்து ஆராய்ச்சி செய்வதற்கென்றே 1982-ம் ஆண்டு அங்கு சென்றார், சில ஆண்டுகள் தங்கியிருந்தார். பல ஸோம்பிக்களைச் சந்தித்தார். இத்தனைப் பாதிப்புகளும் நிகழ்வதற்குக் காரணமாக வேட் டேவிஸ் சொல்வது, ‘ஸோம்பி பவுடர்’ என்ற மாய மருந்தைத்தான். வூடு மந்திரவாதிகளிடமிருந்தும், ஹைதியின் வேறு பகுதிகளிலிருந்தும் விதவிதமான ‘ஸோம்பி பவுடரைச்’ சேகரித்த டேவிஸ், அவற்றில் என்னென்ன கலந்திருக்கின்றன என்று சோதனை செய்து, அதனை மூன்று வகையாகப் பிரித்தார்.

முதலாவது ‘பஃபர்’ என்ற விஷ மீனைக் கொண்டு தயாரிக்கப்படும் மருந்து. இரண்டாவது ஒரு வகை கடல் தவளை அல்லது ஹைலா மரத் தவளையிலிருந்து தயாரிக்கப்படும் மருந்து. மூன்றாவது இறந்த மனிதனின் எலும்புகளிலிருந்தும் பிற கழிவுகளிலிருந்து உருவாக்கப்படும் மருந்து. இந்த மூன்று வகையிலும் வேறு சில விஷத் தாவரங்கள், விலங்குகளின் கழிவுகள், பல்லி, சிலந்தி, தேள், கண்ணாடித் தூள் போன்ற பல பொருள்களும் கலந்துள்ளன.

ஸோம்பி பவுடர் வகையில் டேவிஸ் முன்னிலைப்படுத்துவது பஃபர் மீனிலிருந்து தயாரிக்கப்படும் மருந்தைத்தான். அந்த மீன் ‘டெட்ரோடோடாக்ஸின்’ என்ற கொடிய விஷத்தைக் கொண்டது. அந்த விஷம் மனிதனின் ரத்தத்தில் கலந்தால், ரத்த வாந்தியிலிருந்து நுரையீரல் பாதிப்பு வரை அனைத்தும் நிகழும். நாடித் துடிப்பு எல்லாம் குறைந்து, ‘இறந்த நிலை’க்குக் கொண்டு சென்றுவிடும். ஆனால், அந்த நபரால் சுற்றி நிகழ்வதை உணர முடியும். வினையோ, எதிர்வினையும் புரிய முடியாது.

1985-ம் ஆண்டு வேட் டேவிஸ் வெளியிட்ட புத்தகமும் (The Serpent and the Rainbow), அதன்பின் அவர் எழுதிய பல்வேறு கட்டுரைகளுமே, ஸோம்பிக்கள் குறித்த தெளிவை உலகத்துக்கு உருவாக்கின.
ஆண்கள் மட்டும்தான் ஸோம்பிக்களாக மாற்றப்படுகிறார்களா? அடிமையாக விற்கப்படுவதற்காக மட்டுமே ஸோம்பிக்கள் உருவாக்கப்படுகிறார்களா? இரண்டு கேள்விகளுக்கும் பதில்..

‘இல்லை.’

பெண் ஸோம்பிக்களும் உண்டு. பழி வாங்குவதற்காக, உடல் இச்சையைத் தீர்த்துக் கொள்ள, வேறு பல    காரணங்களுக்காகவும் ஸோம்பிக்கள் உருவாக்கப்பட்டிருக்கிறார்கள். ஆண், பெண் ஸோம்பிக்கள் தவிர, பலரும் அஞ்சி நடுங்கும் இன்னொரு ரக ஸோம்பிக்களும் உண்டு. அவற்றை நீங்கள் ஆங்கில நாவல்களில் சந்தித்திருக்கலாம். ஹாலிவுட் படங்களில், வீடியோ கேம்களில் தரிசித்திருக்கலாம். அல்லது யாரோ ஒருவர் சொன்ன பேய்க் கதைகளில் உணர்ந்திருக்கலாம்.


அவை அருவருப்பான தோற்றம் கொண்டவை. அளவில்லா வலிமையுடையவை. பழி வாங்கும் குணம் கொண்டவை. நாக்கைச் சுழட்டியபடி நர மாமிசத்துக்காக அலைபவை. குரல்வளையைக் கடித்து, மனித ரத்தத்தைக் குடித்து தாகம் தீர்த்துக் கொள்ளும் காட்டேரி வகையைச் சேர்ந்தவை. அவற்றை அழிப்பது அத்தனைச் சுலபமல்ல. ஹிட்லர்கூட அப்படித்தான் எண்ணினார்போல.


ஹிட்லர், ‘The Brotherhood of Death’ என்ற பெயரில் மந்திரவாதிகளும் சூனியக்காரர்களும் அடங்கிய ரகசியக் குழு ஒன்றை அமைத்திருந்தார். 1935-ம் ஆண்டு அதில் சுமார் நாற்பது கைதேர்ந்த மந்திரவாதிகள் இருந்தனர். நூற்றுக்கணக்கனோர் அதில் பயிற்சி நிலையிலும் இருந்தனர். அந்த மந்திரவாதிகளைக் கொண்டு ஆயிரக்கணக்கான நாஸி ஸோம்பிக்களை உருவாக்குவதே ஹிட்லரின் எண்ணம். எதையும் சாதிக்கும் வல்லமை வாய்ந்த, தோற்கடிக்கவே முடியாத, தேவைப்பட்டால் தற்கொலைப் படையாக மாறி பெரும் சேதாரத்தை விளைவிக்கும் ஆற்றல் கொண்ட நாஸி ஸோம்பி வீரர்கள் அடங்கிய ‘சூப்பர் ஆர்மி’ அமைப்பதே ஹிட்லரின் கனவு.


அப்படி ஒரு படையை உருவாக்குவதற்கான முயற்சிகள் நடந்தன. ஆனால் முழுமையாகவில்லை. ஹிட்லர் அதுபோன்ற சூப்பர் ஆர்மியை உருவாக்கியிருந்தால் இரண்டாம் உலகப் போரின் வரலாறும் உலகின் தலையெழுத்தும் மாறியிருக்கும் என்கிறார்கள் சில வரலாற்றாளர்கள். இதற்கான முறையான ஆதாரங்கள் இல்லை அல்லது வெளிவரவில்லை.


தமிழில் மிருதன் முதல் ஸோம்பி படம் எனச் சொல்லப் படுகிறது. ஹாலிவுட்டின் முதல் ஸோம்பி படம், 1932-ம் ஆண்டு வெளியான White Zombie. அதற்குப் பின் நூற்றுக்கணக்கான படங்கள் வெளிவந்துவிட்டன. 2009-ம் ஆண்டு நாஸி ஸோம்பிக்களை வைத்து Dead Snow என்ற நார்வே மொழிப் படம் வெளிவந்தது. ஆனால் ஒன்றை மட்டும் உறுதியாகச் சொல்லலாம். திரைப்படங்களும் நாவல்களும் வீடியோ கேம்களும் சித்தரிக்கும் கொடூர ஸோம்பிக்களுக்கும், நிஜமாகவே ஸோம்பிக்களாகப்படும் பாவப்பட்ட ஹைதி மனிதர்களுக்கும் சம்பந்தமே இல்லை.

புதிய நியமம் - திரைவிமர்சனம்

திருஷ்யம் என்ற திரைப்படம் உண்டாக்கிய அதிர்வலைகள், மலையாள திரைப்பட உலகத்தை சற்று புரட்டித்தான் போட்டது. அதே போன்ற ஒரு முயற்சியை நாமும் மேற்கொள்வோம் என மம்முட்டியும் நினைத்தாரோ என்னவோ ! சுரேஷ் கோபியை வைத்து ஏ.கே.சாஜன் உருவாக்கவிருந்த "சாலமன்டே கூடாரம்" மம்முட்டியின் என்ட்ரியால் புதிய நியமமானது.

பாலியல் கொடுமைகளை அரங்கேற்றும் அயோக்கியர்களுக்கு பாரபட்சமின்றி மரணத்தை பரிசளிக்க வேண்டும் என்பது தான் "புதிய நியமத்தின்" ஒன் - லைன்.

சூழ்நிலைகளின் கட்டாயத்தால் அப்பார்ட்மெண்டில் வசிக்கும் நடுத்தர வர்க்க குடும்பத்திற்கு ஏற்படும் ஓர் அதிர்ச்சி சம்பவமும், அதிலிருந்து மீண்டு வரும் நெகிழ்ச்சித் தருணமுமாக இத்திரைப்படம்,  "திருஷ்யத்தின்" மம்முட்டி வெர்ஷன்.

லூயிஸ் போத்தன் - வாசுகி ஐயர் தம்பதிக்கு ஒரு அழகான பெண் குழந்தை. கிருஸ்துவ மதத்தைச் சேர்ந்த லூயிஸ், கதக்களி நடனக் கலைஞரான வாசுகி ஐயரை காதலித்து கலப்புத் திருமணம் செய்துகொண்டதால் அப்பார்ட்மெண்டில் தனிக் குடித்தன வாழ்க்கை.

குடும்ப நல நீதி மன்றத்தில் வழக்குரைஞராகவும், பகுதி நேரமாக தனியார் தொலைக்காட்சியில் சினிமா விமர்சனம் செய்பவராகவும் வலம் வரும் மம்முட்டி, வாழ்க்கையை மகிழ்ச்சிகரமாகவும், எந்த ஒரு விஷயத்தையும் பாஸிடிவ் எனர்ஜியோடும் பார்க்கும் மனோபாவமும் கொண்டவர். விவாகரத்து வழக்குகளுக்காக தன்னைத் தேடி வரும் நபர்களை பெரும்பாலும் கவுன்சிலிங் செய்து மீண்டும் இல்லறத்தில் இணைத்துவிடுவார்.

படத்தின் ஆரம்பக் காட்சியிலிருந்தே ஒரு இறுக்கமான மனநிலையோடு இருப்பது, பள்ளிப் பேருந்தில் ஏறும் தன் பெண் குழந்தையை தொட்டு தூக்கும் பேருந்துப் பணியாளரை அதட்டுவது, தன் கணவரை மயக்கி விடுவாரோ என பக்கத்து வீட்டு பெண் நிருபரை வெறுப்பது, என்று தன்னையும், தன் குடும்பத்தைச் சுற்றியும் தவறுகள் நிறைந்திருப்பதாக நெகட்டிவ் சிந்தனைகளில் மூழ்கியிருப்பவர் வாசுகி.

இப்படி இரு வேறு மனநிலைகளைக் கொண்டவர்களின் இல்லற வாழ்க்கை நல்ல முறையிலேயே சென்றிகொண்டிருக்க, ஓர் எதிர்பாரா சம்பவம் வாசுகியை நிலைகுலையச் செய்கிறது. தன் கணவனிடம்கூட சொல்வதற்குப் பயந்து வீட்டிலேயே முடங்கிக் கிடக்கும் வாசுகிக்கு, அந்த ஊரில் நடந்த ஒரு கொலை சம்பவத்தை விசாரித்து வரும் டி.சி.பி ஜீனாபாய் மீது நம்பிக்கை ஏற்பட்டு, தன் கணவருக்குத் தெரியாமல் அவரைத் தொடர்புகொள்கிறார். வாசுகி இப்படியொரு இறுக்கமான மன உளைச்சல் ஏற்பட்டு, வீட்டிலேயே முடங்கிக்போகும் நிலை ஏற்படக் காரணமென்ன என்பதை பிளேஷ் - பேக் காட்சிகளில் நடந்த ஒரு கொடூரமான சம்பவம் மூலம் விவரிக்கிறது திரைக்கதை. செல்போன் உரையாடலின் மூலமாகவே நடந்ததை கேட்டுத் தெரிந்துகொள்ளும் டி.சி.பி. ஜீனாபாய், வாசுகியை நேரில் சந்திக்காமலேயே, ஒரு தோழியாக இருந்து அவருக்கு ஆலோசனையளித்து, ஸ்மார்ட்டான சில முயற்சிகளின் மூலம், அந்தப் பிரச்சனைக்கு முற்றுப்புள்ளி வைக்கிறார்.

கேரளா என்றாலே பாரம்பரிய வீடு, அதில் வாழும் குடும்ப உறவுமுறை என்பதைத் தாண்டி, அப்பார்ட்மெண்ட்களில் வசிக்கும் மனிதர்கள், லோ-ஹிப் ஜீன்ஸும், பாப் -மார்லியின் உருவம் வரைந்த டி-சர்ட்டும் அணிந்துகொண்டு போதைக்கு அடிமையான இளைஞர்கள் என தற்கால கேரளத்தின் ஒரு சிறிய முகத்தைப் பதிவு செய்திருக்கிறார்கள்.

ஒட்டுமொத்தப் படத்தையும் தன் தோலில் தாங்கிச் செல்வது ஹீரோயின் கதாபாத்திரமே என்று தெரிந்தும், படம் முழுவதும் அண்டர் - பிளே பெர்ஃபார்மன்ஸ் காட்டியிருக்கிறார் மம்முட்டி. இப்படி ஒரு சாதாரணமான கதாபாத்திரத்திற்கு மம்முட்டியை எதற்க்கு நடிக்க வைக்க வேண்டும் என்று நாம் யோசிக்கும்போதே, கிளைமாக்ஸ் காட்சிகளில் கொடுக்கும் அதிரடி ட்விஸ்டுகளின் மூலம், மெகா ஸ்டார் தன் பங்களிப்பை சுவாரஸ்யப்படுத்துகிறார்.

நிஜத்தில் மனிதருக்கு 64 வயது ஆகிறதென்று அவரே சொன்னாலும் யாரும் நம்பமாட்டார்கள். கல்யாணதுக்கு மட்டும் பல லட்சம் செலவு செய்வாங்க.. ஆனா டைவர்ஸ்னு வந்துட்டா பத்து பைசா செலவு பண்ண, பத்து மாசம் யோசிப்பானுங்க என்று படம் முழுவதும் கலகலப்பாகவே இருக்கிறார்.

கேரளாவில் வசிக்கும் தமிழ் ஐயர் வம்சத்தைச் சேர்ந்த பெண்மணியான தன் கதாபாத்திரத்திற்கு, தன் சொந்தக் குரலிலேயே டப்பிங் பேசியிருக்கிறார் நயன்தாரா. மாயா, நானும் ரவுடிதான் படங்களைத் தொடர்ந்து இதிலும் அவருடைய பெர்ஃபார்மன்ஸ் அசத்தல்.

குறைந்த அளவிலான நடிகர்கள், ஒரே மாதிரியான லொகேஷன்கள் என கிடைத்திருக்கும் சிறிய கிரவுண்டையும் கச்சிதமாக கையாண்டிருக்கிறார் அறிமுக ஒளிப்பதிவாளர் ரோபி வர்கீஸ். படத்திற்கு பக்கபலமாக இருப்பது விவேக் ஹர்சனின் படத்தொகுப்பு. முன்பாதியில் போரடித்த கோபி சுந்தரின் பின்னணி இசை, இடைவேளைக்குப் பிறகு தடதடக்க வைக்கிறது.

மூன்று வருடங்களுக்கு முன்பு வெளியாகி மலையாௐளத்தில் பிளாக்பஸ்டர் ஹிட்டடித்த "திருஷ்யம்" திரைப்படத்தைப் பற்றியெல்லாம் கவலைப்படாமல் அதே மாதிரியான ஒரு திரில்லர் டிரீட்மென்டை சினிமாவாக்கியிருக்கும் தைரியத்திற்காகவே இயக்குனர் ஏ.கே சாஜனை பாராட்டியாக வேண்டும்.

ஆனால் படத்தின் மையமே "பிளாஷ் - பேக்கில்" என்ன நடந்தது என்று எதிர்பார்ப்பில் இருக்கும்போது, அதை இன்னும் சற்று பரபரக்க வைத்திருக்கலாம். ஆங்காங்கே இடரும் ஒரு சில லாஜிக் குறைபாடுகளால், திருஷ்யம் ஏற்படுத்திய பிரமிப்பு இதில் கொஞ்சம் மிஸ்ஸிங் என்றாலும், திரைக்கதை சொன்ன விதமும், அந்த கிளைமாக்ஸ் டுவிஸ்டுகளும் நம்மை ஆர்ப்பரிக்க வைக்கின்றன.

மம்முட்டி, நயனுக்காகவும், தெளிவான திரைக்கதைக்காகவும் புதிய நியமத்தை நிச்சயம் ரசிக்கலாம்.