Saturday 20 February 2016

இமான் அண்ணாச்சிக்கு இது தேவை தானா? அதிருப்தியில் கோலிவுட் மற்றும் ரசிகர்கள்

சின்னத்திரை தொகுப்பாளரிலிருந்து முன்னேற்றம் அடைந்து வெள்ளித்திரை படங்களில் நடிகர் என்ற இடத்திற்கு வந்தவர் இமான் அண்ணாச்சி. இவர் தற்போது தமிழகத்தின் முன்னணி கட்சி ஒன்றில் இணைந்துள்ளார்.

இந்த கட்சிக்காக வரும் தேர்தலில் பிரச்சாரம் செய்வார் என எதிர்ப்பார்க்கப்படுகின்றது. ஏற்கனவே வடிவேலு அந்த கட்சிக்காக பிரச்சாரம் செய்து பின் நடந்தது எல்லாம் அனைவரும் அறிந்ததே.

அதேபோல் இப்படி வளர்ந்து வரும் நேரத்தில் இந்த முடிவு கோலிவுட் மட்டுமின்றி ரசிகர்களையும் அதிருப்தியில் ஆழ்த்தியுள்ளது.

விஜய் சேதுபதி என்கவுண்டர் செய்தது சரியா? - சேதுபதி விமர்சனம்

பண்ணையாரும் பத்மினியும் என்ற ஒரு ரசனையான படம் கொடுத்த இயக்கநர் அருண்குமார், அதே நாயகனுடன் கைகோர்த்திருக்கும் படம், சேதுபதி.

போஸ்டரிலும், டிரெய்லரும் அதிரடியாக மிரட்டும் இந்தப் படம், நிவாஸின் இசையில் அழகானதொரு மெலடியோடு துவங்கி, டைட்டில் கார்டில் காவல்துறையினரின் சின்னச் சின்ன சங்கடங்களை -  நிஜத்தோடு ஒப்பிடுகையில் - மிகைப்படுத்தல் இருந்தாலும், மாண்டேஜ்களாக சொல்லி.. பாடல் முடிந்ததும் ஒரு போலீஸ்காரர் கொலை செய்யப்படுவதில் ஆரம்பிக்கிறது.

கறாரான, நேர்மையான, பயப்படாத, மக்களை சந்திப்பதில் மகிழ்கிற, புல்லட் வைத்திருக்கிற, கூலிங்க்ளாஸை ஸ்டைலாக மாட்டுகிற, குடும்பத்தை நேசிக்கிற, மீசை முறுக்குகிற என்று வழக்கமான தமிழ்ப்பட இன்ஸ்பெக்டர் விஜய் சேதுபதி. ASP ப்ரமோஷனுக்குக் காத்திருக்கிறவருக்கு, அவரது எல்லைக்குள் நடந்த இன்னொரு போலீஸ்காரரின் கொலையை விசாரிக்கும்போது சிலபல சிக்கல்கள் நடக்கிறது. அதையெல்லாம் தாண்டி, சிக்கல்களை அவிழ்த்து யார் காரணமென்று கண்டுபிடித்து இடைவேளைக்கு முன்பே அரெஸ்ட் செய்துவிடுகிறார் விஜய் சேதுபதி.

பழிவாங்கும்விதமாக, வில்லன் செய்யும் ஒரு காரியம் விஜய் சேதுபதியை மீண்டும் சிக்கலில்  மாட்டிவிட்டு பதவி உயர்வுக்கு மட்டுமின்றி, வேலைக்கே பாதிப்பைக் கொண்டுவருகிறது. அதை எப்படி ஹீரோ உடைக்கிறார் என்பதை கொஞ்சமும் சலிப்படைய வைக்காமல் சொல்லியிருக்கிறார்கள்.

ஒரு கதையாக, சாதாரணக் கதைதான். நாடே எதிர்நோக்குகிற பிரச்னையையோ, மாநில அளவில் சீரியஸான கேஸையோ இந்த ஹீரோ கையாளவில்லை. ஆனாலும் ஒரு இன்ஸ்பெக்டரின் குடும்பம், குடும்பம் சார்ந்த அவரது நடவடிக்கைகளை உள்ளே புகுத்தியதில் இயக்குநர் ஈர்க்கிறார்.

போலீஸ் கெட்டப்பில் முதல்முறையாக விஜய் சேதுபதி. கச்சிதமாகப் பொருந்தியிருக்கிறார். முறைத்துக் கொண்டே சீரியஸான இன்ஸ்பெக்டராக இருக்கும் அதே சமயம் வீட்டுக்கு வந்ததும் மனைவியைக் கொஞ்சுவதிலும், மாமனார் - மாமியாரோடான சண்டையிலும் (அது என்னதான் சண்டை? சொல்லவேல்ல? பார்ட்-2 ஏதும் வருதோ?), குழந்தைகளுடனான ஜாலி நேரங்களிலும் தேர்ந்த நடிப்பைக் காட்டத் தவறவில்லை. ஆனா அதென்ன பாஸ், சக போலீஸ்காரரிலிருந்து வில்லன் வரை ப்பளார்னு விடற ஒரே அறையில வழிக்குக் கொண்டு வந்துடறீங்க?

பீட்சாவுக்குப் பிறகு, விஜய் சேதுபதியுடன் ரம்யா நம்பீசன். பீட்சா போலவே ரொமாண்டிக் காட்சிகளில் நெருக்கம் காட்டியிருந்தாலும், இவ்வளவு அழகான பொண்டாட்டி சண்டை போட்டுட்டாவே இருப்பாங்க? இட்லிப் பொடியை தொட்ட விரலை.. விடுங்க... அவ்ளோ ஆசையை வெச்சிருந்து, ஒவ்வொருக்கா புருஷன் வரும்போதும் தள்ளிவிட்டுட்டேவா இருப்பாங்க? ஒருகட்டத்தில் விஜய் சேதுபதியே காலில் விழுந்தபிறகுதான் போனாப்போவுது என்று கட்டிப்பிடிக்கிறார். நடிப்பில்.. நச்! கணவனுடன் சண்டையிட்டுக் கொண்டிருக்கும்போது, மகள் பார்த்துவிட கண்ணில் நீருடன் ஒரு எக்ஸ்ப்ரஷன் தருகிறார். ரம்யம்!

வில்லனாக வேல ராமமூர்த்தி. வழக்கம்போலவே சிறப்பு. காமெடி என்று எதையும் இயக்குநர் முயற்சிக்காதது கதையோட்டத்துக்காக என்றிருந்தாலும், அங்கங்கே நகைச்சுவையை தெளித்திருக்கலாம். எஸ்.ஐ- உடனான உரையாடல்கள் அவ்வளவு சிரிப்பைத் தரத்தவறினாலும்,அந்த ‘அவன் மொறைக்கறான். சிரிப்பு சிரிப்பா வருது வெளில போகச்சொல்லு’ - கலகலகல. குழந்தைகளாக நடித்திருக்கும் இரண்டு குட்டீஸ்க்கும் ஒரு மூட்டை சாக்லேட் பார்சல். அவ்வளவு அழகு + கச்சிதம். குறைந்த நிமிடங்களே வந்தாலும், அந்த கமிஷனை விசாரிக்கும் அதிகாரி.. செம.

இசை நிவாஸ் கே பிரசன்னா. தெகிடி படத்தின் பாடல்கள் மூலம் கவனமீர்த்தவர், இதிலும் மெலடிக்களில் முத்திரை பதித்திருக்கிறார். ‘நான் யாரு.. நான் யாரு’ வில்லனுக்கு வரும்போது எடுபட்டத்தை விட, ஹீரோவுக்கு வரும்போது அதிக க்ளாப்ஸ் அள்ளுகிறது. ஆனால் பின்னணி இசை? ஒரு சில ஆக்‌ஷன் காட்சிகளில் ஓகே என்றாலும், காதுவலிக்குது சார். பல நேரம் சைலண்டாக இருந்திருக்க வேண்டிய இடத்திலெல்லாம் ஓவர் டைம் வேலை செய்திருக்கிறார். ஒரு இடத்தில் வசனமே கேட்காத அளவுக்கெல்லாம் துருத்திக் கொண்டிருந்தது.

தினேஷ் கிருஷ்ணனின் காமெரா, ஆக்‌ஷன் காட்சிகளிலும், ரொமாண்டிக் காட்சிகளிலும் இருவேறு விதமாக காண்பித்து அசத்தியிருக்கிறது. ஸ்ரீகர் ப்ரசாத்தின் எடிட்டிங் படத்துக்கு மிகப் பொருத்தம். ஒன்றே ஒன்று, ஒரு காட்சியில் கணவனுடனான சண்டையில் அழுதபடி இருக்கும் மனைவி, குழந்தை பார்த்ததும் டக்கென்று எக்ஸ்ப்ரஷனை மாற்றிக் கொண்டு சமாளித்து பேசுவதோடு அதை முடித்திருக்கலாம். உடனேயே அம்மா ஏதோ கேட்க, அதற்கு இவர் ஒன்று சொல்ல என்று இழுத்தது அந்த அழகை மறக்கடித்துவிட்டது.  அதை வெட்டித்தூக்கியிருக்கலாம்.

காவல்துறையின் ’சிஸ்டத்தை’ விமர்சித்திருக்கும் விசாரணை படம் வெளிவந்து இரண்டே வாரங்களில் இது வெளியாவதால், இரண்டையும் நம் மனது ஒப்பிடுவதைத் தவிர்க்க முடியவில்லை. அப்படி ஒப்பிடுகையில், அதில் காவல்துறை செய்த அதே என்கவுண்டரை இதில் அதே துறை ஹீரோ செய்கிறார். கமர்ஷியல் படத்தில் ஹீரோ என்கவுண்டர் செய்கிறார் என்பதால் அதை ஏற்கமுடியாது. அதே ஹீரோ, வில்லனை, முதல்முறை கைது செய்யும்போது வெறுமனே இரண்டுநாள் சுற்ற விடுகிறாரே தவிர, வேறெதுவும் செய்வதில்லை. ஆக, அடியாட்கள் என்றால் என்கவுண்டர் செய்யலாம், அவரை ஏவி விட்ட செல்வாக்குள்ள மனிதர் என்றால் செய்ய வேண்டியதில்லை என்றெல்லாம் இருப்பதும், காவல்துறையின் முகத்தை இன்னொரு விதமாக வெளிப்படுத்தியதாகவே பார்க்க வேண்டியதாய் இருக்கிறது.

நாயகனாக இருக்கும் எல்லோருக்கும் பொதுவான, காக்கிச்சட்டைக் காதலில் விஜய்சேதுபதியும் தப்பவில்லை. போலீஸ் என்றாலே விஜய்காந்த், போலீஸாக அவர் நடித்த சேதுபதியும் மக்களுக்கு ஹிட் மெமரி. அது தன் பெயராகவும் இருப்பதில் விஜய் சேதுபதிக்கு டபுள் குஷியாக இருந்திருக்க வேண்டும். ஒரு போலீஸ் கதையில் அழகான குடும்பம் + ரொமான்டிக்கைக் கொண்டுவந்து சோர்வடையச் செய்யாமல் படத்தை நகர்த்திச் சென்ற விதத்தில்.. சேதுபதிக்கு ஒரு சல்யூட்!

மிருதன் விமர்சனம் -“செஞ்சுதான் பார்ப்போமே”

காலி பெருங்காய டப்பாவுக்குள் கட்டி சூடத்தை தட்டிப் போட்ட மாதிரி, “செஞ்சுதான் பார்ப்போமே” என்ற எண்ணம் சில நேரங்களில் வரும்! அப்படி இந்த படத்தின் டைரக்டருக்கு வந்த கற்பனைதான் இந்த ‘ஆயிரமாயிரம் ஸோம்பிகளும், அஞ்சாத சார்ஜன்டும்’ கதை! குழந்தை மனசோடு போகிறவர்களுக்கு குதூகலத்தையும், குந்தாங்குறையாகப் போகிறவர்களுக்கு குழப்பங்களையும் அள்ளி வழங்குகிறது ‘மிருதன்’! ஆனால் தமிழ்சினிமாவில் புதிய முயற்சி என்பதால், இயக்குனர் ஷக்தி சவுந்தர்ராஜன் ஒரு லாரி துப்பாக்கி ரவைகள் பார்சேல்ல்ல்ல்ல்!

ஊட்டியில் ஏதோ ஒரு ரசாயனக் கழிவை நாய் ஒன்று நக்கி வைக்க, அதற்கப்புறம் அது கடிக்கிற ஒரு கடிதான் இந்த படத்தின் முதல் படி! கடிபட்ட ஆசாமி அம்மாவை கடிக்க, அந்த அம்மாவோ மருமகளை கடித்து வைக்கிறாள்… அதற்கப்புறம் அவர்களும் ஒவ்வொருவராக கடித்து வைக்க… கடிபடுகிற எல்லாரும் ரத்தவெறி பிடித்து மற்றவர்களை கடிக்க ஓடுகிறார்கள். ஒன்று பத்தாகி, பத்து நூறாகி, நூறு ஆயிரமாகி… (தமிழ்சினிமாவில் ஜுனியர் ஆர்ட்டிஸ்டுகளுக்கு அதிக சம்பளம் கொடுத்த படம் இதுவாகதான் இருக்கும்) இந்த களேபரத்துக்கு நடுவில் எங்கேர்ந்து வர்றாரு ஹீரோ? அவருடைய ரோல் என்ன? இதுதான் பர்ஸ்ட் ஹாஃப், மற்றும் செகன்ட் ஹாஃப். இதற்குள் தங்கச்சி சென்ட்டிமென்ட், காதல், சோகம் என்று சாமர்த்தியமாக நுழைத்து, சபாஷ் போட வைத்திருக்கிறார் ஷக்தி சவுந்தர்ராஜன்.

போர்ட்டர் கிடைச்சுட்டாரே என்று பெட்டியையும் அடுக்கி, போதாக்குறைக்கு ஒரு ரயில் பெட்டியையும் அவர் தலைக்குள் ஏற்றி வைக்கிற ஆள் போலிருக்கிறது டைரக்டர். இவருக்கு கிடைத்த பலசாலி மிஸ்டர் ஜெயம் ரவி. இந்த முழு படத்தையும் அவர் தலையில் ஏற்றி வைத்திருக்கிறார். சும்மா சொல்லக் கூடாது. நன்றாகவே தாங்குகிறது அவர் தோள்களும், சிரசும்! அதுவும் தன் கண்ணெதிரிலேயே உயிர் தங்கை பலியாகப் போகிறாள் என்பதும், அவளும் ஸோம்பியாக மாறி கடிக்கப் போகிறாள் என்பதும் தெரிந்த பின்பும், தப்பித்து ஓடாமல் அவளுக்காக சாகத் துணிகிற ஜெயம் ரவிக்கு, கண்ணும் உதடும் துடிக்கிறது. அந்த நேரத்தில் துப்பாக்கியோடு உள்ளே வரும் டாக்டர்களை அவர் பார்க்கும் பார்வை மிரள வைக்கிறது. படத்தில் வரும் அந்த ஒரு பகுதி, பாசமலர் பார்ட் 2.

ஹீரோ, ஹீரோயின் என்று ரவியும், லட்சுமிமேனனும் இருந்தாலும், இப்படத்தில் சொல்லப்படும் காதல் புதுசு. பிடித்த காதலி அருகே இருந்தும் இருவரையும் காதலிக்கவா விடுகிறார்கள் அந்த ஸோம்பிகள்? நல்லவேளை… எல்லாவற்றுக்கும் சேர்த்து கடைசி நேரத்தில் கொட்டி தீர்த்திருக்கிறார் ஜெயம் ரவி. எப்படியாவது காதலியை தப்பிக்க வைத்துவிட வேண்டும் என்று மினி ராட்சசனாக மாறி, அவர் ஸோம்பிகளை சுட்டுத் தள்ளும் அந்த காட்சி சோகத்திலும் ஈரம்!

லட்சுமிமேனன் படத்தில் எங்காவது சிரிக்கிறாரா என்று யோசித்து மண்டையை கசக்கினாலும் பிடி பட மாட்டேன் என்கிறது. “அவ்ளோ பேர் பார்த்துகிட்டு இருக்கும் போது நீ மட்டும் என்னை காப்பாற்ற வந்தியே, ஏன்?” என்று அவர் கேட்க, கேட்க, நமக்கு பி.பி.ஏறுகிறது. (கேட்கிற இடமாம்மா அது?) எப்படியோ… ஒருவர் காதலை மற்றவர் உணர்ந்து கொள்கிற அந்த கடைசி வினாடியாவது கூட்டம் கூட்டமாக ஸோம்பிகள் இல்லாத இடமாக இருக்கிறது.

மிக சீரியசான படம். அப்படியிருந்தும் ஆங்காங்கே சிரிக்க முடிகிறது என்றால், அது காளி வெங்கட்டினால்தான்! வழக்கம் போல தன் வேலையை கச்சிதமாக செய்துவிட்டு ஒதுங்கிக் கொள்கிறார். படத்தில் ‘ஓவர் ஆக்டிங் புகழ் ’ ஸ்ரீமன் இருக்கிறார். நல்லவேளை ரசிக்க முடிகிறது அவரை.

படத்தில் அதிகம் பாடல்கள் இல்லை. வருகிற இரண்டு பாடல்களும் எக்குத்தப்பான சூழலில் இருக்கிறது. இருந்தாலும் நம்மை ரசிக்க வைக்கிறது இமானின் வித்தை. ஆனால் பின்னணி இசை மட்டும் பேரிரைச்சலாக ஒலிக்கிறது.

அவ்வளவு பெரிய கூட்டத்தை ஒருங்கிணைத்து படமாக்குவதே பெரிய சவால்தான். தனியாக வேறு இடம் சுட்டி பொருள் விளக்கி பாராட்ட வேண்டுமா ஒளிப்பதிவாளர் வெங்கடேஷை?

தமிழ் சினிமாவில் சொல்லப்படாத ஒரு கதையை எடுத்துக் கொண்ட வரைக்கும் ஓ.கே. ஆனால் அவ்வளவு பெரிய சம்பவம் தமிழ்நாட்டில் நடக்கும் போது, முதல்வர் எங்கு போனார். அதிகாரிகள் எங்கு போனார்கள்? “எவனாவது கேள்வி கேட்டு தொலைவான்யா…” என்ற பிரக்ஞை சிறிதும் உங்களுக்கு இல்லையே டைரக்டரய்யா?

கொஞ்சம் மெனக்கெட்டிருந்தால் சுவாரஸ்யமான திரைக்கதையால் தெறிக்க விட்டிருக்கலாம். ஐயோ பாவம் வெறுமனே கொறிக்க விட்டிருக்கிறார் ஷக்தி சவுந்தர்ராஜன்! மிச்ச மீதி ஸோம்பிகள் யாராவது இருந்தால், டைரக்டரின் அட்ரஸ் தர்றேன்… போயிட்டு சீக்கிரம் வேலைய முடிங்கப்பா!

குரு சிஷ்யன் உறவு டமார்! பாலாவுக்கு எதிராக அமீரிடம் தஞ்சமான சசிகுமார்?

ஒட்டகமும் எலியும் ஒண்ணா சேர்ந்து கூட்டணி வைச்ச கதையாகதான் இது முடியும் என்று திரையுலகத்தில் பலரும் பேச, ஒரு சுபயோக சுபநாளில் பாலா படத்தில் என்ட்ரியானார் சசி. சுமார் 60 சதவீதம் சசியும், 30 சதவீதம் பாலாவும் பணம் போட, 10 சதவீதத்தை பாலாவின் நண்பர் உள்ளே போட்டாராம். படமும் தாரை தப்பட்டை முழங்க வெளியானது. ரிசல்ட்? அதான் ஊரறிந்த கதையாச்சே?

இருந்தாலும், இளிச்ச முகத்தோடு இம்போர்ட் ஆகியிருக்கும் லைக்கா அண்டு ஐங்கரன் தயவால் படத்தை பெரும் விலைக்கு தள்ளிவிட்ட பாலா, அவர்கள் போட்ட பணம் முழுசாக திரும்பி வந்து சேர்ந்ததா என்ற கவலைக்கெல்லாம் இடம் கொடுக்கவே இல்லை. நம்ம பணம் லாபத்தோடு சேஃப்டி என்கிற மன நிலையோடு வெளியே நின்று தென்றலை அனுபவித்தாலும், 60 சதவீதம் பணம் போட்ட சசிக்கும் அந்த தென்றல் போய் சேர வேண்டும்தானே? அதுதான் இல்லையாம். அவருக்கான லாபம் இன்னும் சசி வசம் செல்லவேயில்லையாம். கேட்டு கேட்டு பார்த்து பொறுமையிழந்த சசி, இயக்குனர் புகழேந்தியை பஞ்சாயத்திற்கு அழைக்க, அவரும் முடிந்தவரை பேசிப் பார்த்திருக்கிறார். ரிசல்ட்? பூஜ்யத்திலும் பூஜ்யம்.

வேறு வழியில்லாத சசிகுமார், பாலாவின் நேரடி போட்டியாளரும் (வெற்றி தோல்வி, படம் கொடுக்கும் ஸ்டைல் எல்லாவற்றிலும்தான்) பாலாவின் முன்னாள் நண்பருமான அமீரிடம் போய் அழுது புலம்பினாராம். “நான் இருக்கேன்.. கவலைப்படாதே” என்று கூறிய அமீர், சசிக்கு வரவேண்டிய லாபத்தை பெற்றுத்தரும் முயற்சியில் இறங்கியிருப்பதாக தெரிகிறது. தயாரிப்பாளர் சங்கத்தில் பஞ்சாயத்து கூட்டப்பட்டால் ஆச்சர்யமில்லை என்கிறார் கோடம்பாக்கத்து குலேபகாவலி!

ஒரு காலத்துல ஒண்ணு மண்ணா இருந்தவங்க இப்படி கண்ணு மண்ணு தெரியாம காசு விஷயத்துல நடந்துகிட்டா, நட்பாவது… உப்பாவது? அட போங்கப்பா….

'பாஸ்கர் தி ராஸ்கல்' ரீமேக்கில் ரஜினி: உறுதி செய்தார் சித்திக்

 'பாஸ்கர் தி ராஸ்கல்' படத்தின் தமிழ் ரீமேக்கில் ரஜினி நடிப்பது உறுதியாகிவிட்டது என்று இயக்குநர் சித்திக் தெரிவித்திருக்கிறார்.

மம்முட்டி, நயன்தாரா, ஜே.டி. சக்ரவர்த்தி உள்ளிட்ட பலர் நடிப்பில் சித்திக் இயக்கத்தில் வெளியான மலையாள படம் 'பாஸ்கர் தி ராஸ்கல்'. கடந்தாண்டு ஏப்ரல் 15ம் தேதி வெளியான இப்படம் வசூல் ரீதியாகவும், விமர்சன ரீதியாகவும் நல்ல வரவேற்பைப் பெற்றது.

இப்படத்தின் தமிழ் ரீமேக் உரிமையை தயாரிப்பாளர் எஸ்.எஸ்.துரைராஜ் வாங்கியிருக்கிறார். தமிழ் ரீமேக்கில் ரஜினி நடிக்கவிருக்கிறார், அஜித் நடிக்கவிருக்கிறார் என்று செய்திகள் வெளியான வண்ணம் இருந்தன.

இந்நிலையில் மலையாள நாளிதழ் ஒன்றுக்கு 'பாஸ்கர் தி ராஸ்கல்' தமிழ் ரீமேக் குறித்து பேசியிருக்கிறார் இயக்குநர் சித்திக். அதில், "ரஜினி மற்றும் அஜித் இருவரும் ரீமேக்கில் நடிக்கவிருப்பதாக செய்திகள் வெளியான வண்ணம் இருக்கிறது.

'பாஸ்கர் தி ராஸ்கல்' படத்தைப் பார்த்த ரஜினி சார், மம்மூட்டி பாத்திரத்தில் நடிக்க ஆர்வமாக இருப்பதாக தெரிவித்தார். தயாரிப்பாளரும் முடிவாகிவிட்டது. ரஜினி நடிப்பது உறுதி.

தற்போது 'கபாலி' மற்றும் '2.0' ஆகிய படங்களில் நடித்து வரும் ரஜினி, அடுத்தாண்டு இப்படத்தின் ரீமேக்கில் நடிக்க தேதிகள் ஒதுக்குவார்" என்று தெரிவித்திருக்கிறார் இயக்குநர் சித்திக்.