Monday 8 February 2016

இதற்காகதான் கோபப்பட்டீர்களா பழ.கருப்பையா? கோடம்பாக்கம் கீச் கீச்!

‘வாலு போயி கத்தி வந்துச்சு டும் டும்’ என்றாக்குவார்கள் போலிருக்கிறது பழ.கருப்பையாவின் கோபத்தை! அதிமுகவிலிருந்து சமீபத்தில் நீக்கப்பட்ட பழ.கருப்பையாதான் மீடியாவின் தற்போதைய மெது பக்கோடா. எந்த சேனலை திருப்பினாலும் அவரது தெள்ளந் தெளிவான பேட்டிதான் வருகிறது. சமயங்களில் அவர் கோபப்படுவதை கூட மனம் நிறைய ரசிக்க முடிகிறது.

தமிழ்சினிமாவின் பாரம்பரியமான தயாரிப்பாளர்களில் ஒருவர், இசைஞானி இளையராஜாவின் குட் புக்கில் இருப்பவர், ஆகச்சிறந்த படைப்பாளி, அற்புதமான பேச்சாளி, என்று அவருக்கான அலங்காரங்கள் கொஞ்சநஞ்சமல்ல. அங்காடி தெரு படத்தில் கடை முதலாளியாக தோன்றி அப்படியே அச்சு அசலாக ரங்கநாதன் தெரு வியாபார பெருங்குடி மக்களின் ஆச்சர்யத்தையும் சேர்த்து வாரிக் கொண்ட அற்புதமான நடிகரும் கூட.

துறைமுகம் எம்.எல்.ஏவாகதான் தோற்றுப் போய்விட்டார் அவர். அதிமுக விலிருந்து அவர் நீக்கப்பட்டதற்கு காரணம், துக்ளக் விழாவில் அவர் பேசிய பேச்சுதான் என்பது ஊரறிந்த ஒப்புதல் செய்தி. ஆனால் ஏன் அவர் அப்படி பேசினார் என்பதைதான் இப்போது (இரட்டை)இலை மறைவு காய்மறைவாக கிசுகிசுத்துக் கொண்டிருக்கிறது கோடம்பாக்கம். அது என்னவாம்?

‘நாடித் துடிக்குதடி’ என்றொரு படத்தை தயாரித்து முழு படமாக்கி வைத்திருக்கிறார் அவர். இந்த படத்திற்கு இசை இளையராஜா. தயாரித்து சில வருஷங்கள் ஆன பின்பும், பெட்டியை விட்டு வெளியே வருகிற பாக்கியம் அதற்கு இன்று வரை இல்லை. அவரும் தனது சட்டமன்ற உறுப்பினர் பதவியையும் தனிப்பட்ட செல்வாக்கையும் பயன்படுத்தி, படத்தை சேட்டிலைட்டுக்காவது விற்றுவிடலாம் என்று கனவு கண்டாராம். அவரது தலைமையின் செய்தி குழலான ஜெயா தொலைக்காட்சி கூட அந்த படத்தை வாங்க முன் வரவில்லையாம். இதில்தான் அப்புச்சி கடும் அதிருப்திக்கு ஆளானாராம்.

நமது கட்சி டி.வியே நமக்கு உதவவில்லை என்றால், நாம் அந்த கட்சியில் இருந்தென்ன, இல்லாமலிருந்தென்ன என்ற விரக்திக்கு ஆளாகி கொட்டிய வார்த்தைகள்தான் அது என்கிறார்கள் இப்போது. இதெல்லாம் உண்மை என்று சொல்லவா போகிறார் பழ.கருப்பையா? ஒருவேளை இதெல்லாம் உண்மையாக இருந்தால், ‘நாடித் துடிக்குதடி’ என்ற தலைப்பு அவருக்கே முற்று முழுதாக பொருந்திய அற்புதமான தலைப்புதான்!

0 comments:

Post a Comment