Sunday 7 February 2016

பெங்களுர் நாட்கள் - விமர்சனம்-எல்லாம் இருக்கு. ஆனால் என்னவோ இல்லாதது மாதிரியும் இருக்கு! அது ஏண்ணே?

க்ளைடாஸ் கோப்புக்குள் வளையல்களுக்கு பதிலாக வண்ணங்களை கொட்டி வைத்த மாதிரி ‘டாப் கிளாஸ்’ படங்கள் எப்போதாவது வரும்! தியேட்டருக்கு வந்திருப்பதை ரசிகன் அறிவதற்குள், அப்படத்தின் ‘வாய்தாவே’ முடிந்திருக்கும்! ஆனால், ஆர்யா, பாபிசிம்ஹா, ராணா, சமந்தா, பார்வதி, ஸ்ரீதிவ்யா என்று நட்சத்திரங்கள் நிரம்பியிருப்பதால், ரசிகர்களின் மூக்கிலேயே போஸ்டர் தடவி ஒட்டப்பட்டது போல ஒரு களேபர ‘வௌம்பரம்’ கிடைச்சிருக்குமே? அதை நம்பி தியேட்டருக்கு வருகிறவர்களை தாலாட்டுதா படம்? பார்க்கலாம்…

ஸ்ரீதிவ்யாவின் கசின்கள்தான் ஆர்யாவும், பாபிசிம்ஹாவும். இந்த மூவருக்குமே மூன்று பேமிலி. மூன்று விதமான பேக்ரவுண்ட் ஸ்டோரி. பெங்களூரில் செட்டில் ஆகணும் என்று கனவு காணும் இவர்களுக்கு கனவு கண்ட அதே பெங்களுரே வாய்க்கிறது. அதற்குள் ஸ்ரீதிவ்யாவுக்கு ராணாவுடன் கல்யாணம் ஆகி பெங்களுர் வருகிறார். பாபிசிம்ஹாவுக்கு அங்கு சாஃப்ட்வேர் வேலை. ஆர்யா பைக் ரேசர் வித் மெக்கானிக்! வந்த இடத்தில் ஸ்ரீதிவ்யாவுக்கும் புதுக்கணவன் ராணாவுக்கும் நடுவில் ஒட்டவே ஒட்டாத ஒரு ஒப்பு வாழ்க்கை. ஏன்? அவர்தான் சமந்தாவை லவ் பண்ணி டிராஜடியில் கிடக்கிறாரே?

வாழ்க்கையை அதன் போக்கில் வாழப் பழகும் இந்த மூவரும், ராணாவையும் சோகத்திலிருந்து மீட்டு வரும்போது எண்ட் கார்டு! அந்த நேரம் வாழுறதுதான் வாழ்க்கை. அடுத்த நாள் அது கிடைக்குமா? என்பதுதான் இந்த படத்தின் நீதி, நியாயம், கதைக்கரு, வெள்ளைக்கரு, மஞ்சள் கருவாக இருக்க வேண்டும். கொஞ்சம் எய்ட்டீஸ் பக்கம் போன உணர்வையும் படம் ஏற்படுத்த… அது ப்ளஸ்சா, மைனசா? என்பதே புரியாமல் வெளியே வரும்போது முகத்தில் மெல்லிய ஈரக்காற்று அடிக்கிறது. முதலில் இதை அனுபவிச்சுக்கலாம்… என்ற மனநிலைக்கு ரசிகன் தள்ளப்படுவதுதான் இந்த படம் செய்த மாயம்!

படத்தில் வரும் நால்வருக்கும் தனித்தனிக் கதை இருக்கிறது. அதில் துள்ளலும் துடிப்புமாக நம்மை கவர்வது ஸ்ரீதிவ்யாதான். என்னதான் பிரதர்ஸ் என்றாலும் இவர் அவர்களிடம் பழகும் அந்த அந்நியோன்யம், நமக்கே ஜர்க் அடிக்கிறது. கணவன் மனைவிக்குள் நடுவேயிருக்கும் அந்த ஈகோவும் பலத்த மவுனமும் ஒரு கட்டத்தில் உடையும் போது ‘அப்பாடா’ என்றாகிறது மனசு. இருந்தாலும், சில காட்சிகள் ஜவ்வு ஜவ்வு மேலும் ஜவ்வு. ராணாவுக்கு அவர் இடுப்பளவே உயரம் கொண்ட ஸ்ரீதிவ்யா ஜோடி என்பதே ஒரு வித சுவாரஸ்யத்தை ஏற்படுத்துகிறது. ஆனால், ஒளிப்பதிவாளரில் புண்ணியத்தில், மேட் வித் ஈச் அதர் ஆகிறார்கள். மேஜிக்?

எப்படியாவது காதலிக்க வேண்டும் என்று அலையும் பாபிசிம்ஹாவுக்கு ராய்லட்சுமி என்கிற மாடர்ன் ஏர் ஹோஸ்டஸ் கிடைப்பதும், அவர் இவரை எப்படி பந்தாடுகிறாள் என்பதும் காமடியாக இருந்தாலும், “என்னங்கடா இது லவ்வு?” என்று வியப்பையும் ஏற்படுத்திவிடுகிறது.

சமந்தா இருக்கிறார். ஆனால் அதிகம் நடமாட்டமில்லை படத்தில். ஒரேயொரு பிளாஷ்பேக். அப்புறம் கோஹயா! டேக் இட் ஈஸியாகவே நடந்து கொள்ளும் ஆர்யாவுக்கு பின்னால் அப்படியொரு அழுத்தமான பிளாஷ்பேக்? நம்ப முடியாத சோகம்தான் அது. இருந்தாலும் கடைசிவரை உற்சாகத்தை இழக்காத அவரது முகமும் அவருக்கும் பார்வதிக்குமான காதலும் இந்த படத்தின் கவிதை பக்கங்கள். டெலிபோன் டவர் மேல் ஏறிக் கொண்டு அந்த உசரத்தில் அவர் செல்ஃபி எடுத்துக் கொள்ளும் ஸ்டைல், யம்மா…. யாராவது பரீட்சித்து பார்க்காமலிருக்க வேண்டும். அப்படியொரு சொரேர். அழகு. தைரியம்.

ஆவ்சம் பார்வதி. வழக்கம் போல துளி கூட அலட்டிக் கொள்ளாமல் லைக்ஸ்களை அள்ளிக் கொள்கிறது அவரது பர்பாமென்ஸ்!

பாகுபலியில் பல்லாள தேவனாக பார்த்த அந்த ராணாவா இது? என்னவொரு அடக்கம்! காரை மாட்டு வண்டிபோல ஓட்டும் இவர், நிஜத்தில் ஒரு ரேஸ் வீரர் என்பதையும் வேகத்தை அவர் ஏன் விரும்பவில்லை என்று அறியும்போதும் ஒரு சின்ன திகைப்பு.

வில்லேஜிலிருந்து பெங்களுர் வந்து சிட்டி லேடியாகவே மாறிவிடும் சரண்யாவின் கேரக்டர், தியேட்டரையே ரகளையாக்குகிறது. கணவர் ஓடிப்போன துக்கத்தில் அவர் இருப்பதாக ஊரே நினைத்துக் கொண்டிருக்க, மகனிடம் மனம் திறக்கும் அந்த காட்சி, ஜிலிர் குளிர் சரண்யா மேம். (எங்க இப்பல்லாம் நிறைய படங்களில் காணோம்?)

சமந்தாவுக்கு அப்பாவாக பிரகாஷ்ராஜ். நடிப்பு சுரங்கமல்லவா? சும்மா திரும்பினால் கூட, அதற்குள் ஒரு அர்த்தம் சுமக்கிறார். மெல்ல இவர் வீட்டிற்குள் நுழைந்து மகள் போல பழகி கடைசியில் ஸ்ரீதிவ்யா தன் நிஜம் சொல்லும்போது, பொசுக்கென தொண்டை அடைத்துக் கொள்கிறது. இப்படி காட்சிகளை ஆங்காங்கே செதுக்கியிருக்கிறார் இயக்குனர் பொம்மரிலு பாஸ்கர். சந்தோஷ் சுப்ரமணியம் தந்தவரல்லவா? குடும்ப உறவுகளின் உன்னதங்களை அப்படியே நிஜமாக வடித்தெடுக்க முடிகிறது திரையில்.

இசை கோபிசுந்தர். அழகான மெலடிகளால் நிரம்புகிறார். மவுனம் கூட நல்ல இசைதான் என்று அவர் காக்கிற சில காட்சிகள், இன்னும் உயரத்திற்கு செல்கின்றன. கே.,வி.குகனின் ஒளிப்பதிவில் பெங்களூருவும், ஆர்யாவின் அந்த பைக் சேசிங்கும் விசேஷம்.

எல்லாம் இருக்கு. ஆனால் என்னவோ இல்லாதது மாதிரியும் இருக்கு! அது ஏண்ணே?