Wednesday 27 January 2016

ஆமாம்... நாங்கள் அடையாற்றில்தான் குப்பை கொட்டுகிறோம்!' - ஊராட்சியின் 'தில்' வாக்குமூலம்!

பெருமழையோ, வெள்ளமோ... எதுவும் அரசின் மெத்தனப் போக்கை மாற்ற முடியாது என்பது மீண்டும் ஒரு முறை நிரூபணம் ஆகி உள்ளது.

தகவல் அறியும் உரிமை சட்டத்தின் கீழ்,  பொழிச்சலூரை சேர்ந்த மு. கவியரசன் கேட்ட கேள்விகளுக்கு பதில் அளித்துள்ள புனிததோமையார்மலை ஊராட்சி ஒன்றிய தகவல் அலுவலர், "பொழிச்சலூர்  பகுதியில் சேகரிக்கப்படும் குப்பைகள் அனைத்தையும் நாங்கள் அடையாறு ஆற்றங்கரை ஓரமாகதான் கொட்டுகிறோம்"  என ஒப்புதல் வாக்குமூலம் அளித்துள்ளார்.

சமீபத்திய வெள்ளத்தில் சென்னையில் மிகவும் மோசமாக பாதிக்கப்பட்ட பகுதிகளில் ஒன்று பொழிச்சலூர். சமூக கட்டமைப்பில், கீழ் தட்டில் இருக்கும் மக்கள் பெரும் அளவில் வசிக்கும் பகுதி இது.  தமிழக இளைஞர் முன்னணி அமைப்பின் பொழிச்சலூர் பகுதி செயலாளர் கவியரசன்,  அண்மையில் புனிததோமையார்மலை ஊராட்சி ஒன்றிய தகவல் அலுவலருக்கு சில கேள்விகளை அனுப்பி உள்ளார்.

அதற்கான பதிலில்,  புனிததோமையார்மலை ஊராட்சி ஒன்றியத்திற்கென தனி குப்பை கிடங்கு எதுவும் இல்லை என்றும்,  பொழிச்சலூர் ஊராட்சி பகுதியில் சேகரிக்கப்படும் குப்பைகள் அனைத்தும் அடையாறு ஆற்றங்கரை ஓரமாக விநாயகர் நகர் பகுதியில் கொட்டப்படுகிறது என்றும் தெரிவித்துள்ளார் ஊராட்சி ஒன்றிய தகவல் அலுவலர்.

இது குறித்து தமிழக இளைஞர் முன்னணியின் பொதுச் செயலாளர் க அருணபாரதி கூறுகையில், “ இது போல் நீர் நிலைகளில், ஆற்றங்கரைகளில் குப்பைகளை கொட்டியதால்தான்  சென்னையில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு பேராபத்து ஏற்பட்டு என்பதால், கடந்த 16.12.2015  அன்று, வழக்கு ஒன்றில் தீர்ப்பளித்த சென்னை உயர் நீதிமன்றத் தலைமை நீதிபதி எஸ்.கே. கவுல், நீதிபதி புஷ்பா சத்தியநாராயணா ஆகியோர் கொண்ட முதல் அமர்வு, "ஏரிகள், ஆறுகளில் குப்பைகள் மற்றும் திடக்கழிவுகள் கொட்டுவதை உடனடியாகத் தடுக்க வேண்டும். இனிமேல் குப்பைகள் கொட்டுவைதயும் தடுக்க ஏரிகள், ஆறுகளில் தடுப்பு வேலி அமைக்க வேண்டும்"  என உத்தரவிட்டிருந்தனர்.

ஆனால், இந்த உத்தரவுகள் எதையும் மதிக்காமல், குப்பைகள் கொட்டுவதால் பொது மக்களுக்கு ஏற்படும் சுகாதார பாதிப்புகளையும் கணக்கில் கொள்ளாமல் ஊராட்சி நிர்வாகம்,  அடையாறு ஆற்றங்கைரையில் தொடர்ந்து குப்பைகளை கொட்டிவருகிறது”

இந்த பெருமழை சேதாரத்திலிருந்தும்  அரசு பாடம் படிக்கவில்லை என்பதுதான் வெட்கக் கேடு. இனியும் ஆற்றங்கரை ஓராமாக குப்பைகள் கொட்டுவதை உடனடியாக நிறுத்தாவிட்டால் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்வோம்" என்றார்.

மாடி வீட்டுத் தோட்டம்... மர்மத்தை விளக்குமா அரசு?

'நீங்களே செய்து பாருங்கள்' என மாடிவீட்டுத் தோட்டம் திட்டத்தைக் கொண்டு வந்தது தமிழக அரசு. இத்திட்டத்தின் பின்னணியில் நடக்கும் விஷயங்களைக் கண்டு கதிகலங்கிப் போயிருக்கிறார்கள் விவசாயிகள்.

தமிழ்நாடு தோட்டக் கலைத்துறை சார்பில் 2013-ம் ஆண்டு, சென்னை மற்றும் கோவையில் மாடி வீட்டுத் தோட்டம் திட்டத்தை வேளாண்துறை அமைச்சர் தாமோதரன் தொடங்கி வைத்தார். ' 50 சதவீத மானியத்தில்,  வீட்டு மாடியில் தோட்டம் அமைக்கத் தேவையான காய்கறி விதைகள், உரங்கள், பாலிதீன் பைகள் உள்ளிட்டவை வழங்கப்படும்' என அமைச்சர் அறிவித்தார்.

இத்திட்டத்திற்கு முதல்கட்டமாக 5 கோடி ரூபாய் நிதியும் ஒதுக்கப்பட்டது. ' கத்தரி, வெண்டை, தக்காளி, மிளகாய், அவரை, கொத்தவரை, முள்ளங்கி, கீரை, கொத்தமல்லி ஆகியவற்றை மாடியில் வளர்க்கலாம். உங்கள் வீட்டுக்குத் தேவையான காய்கறிகளை நீங்களே உருவாக்கிக் கொள்ளலாம்' என கவர்ச்சிகரமான விளம்பரங்களால் மக்கள் கவரப்பட்டனர். ரூ.2,414 மதிப்புள்ள பொருட்களை,  50 சதவீத மானியத்தில் ரூ.1,207 ரூபாய்க்கு அரசு வழங்கியது.

மக்கள் கொடுத்த தொகைக்கு,  2 கிலோ தேங்காய் நார் கழிவுடன் கூடிய 20 பாலிதீன் பைகள், 9 வகையான காய்கறிகளின் விதைகள், 6 வகையான உரங்கள், மண் கரண்டி, மண் அள்ளும் கருவி, நீர்த் தெளிப்பான், பிளாஸ்டிக் பூவாளி, குழித்தட்டுகள் மற்றும் பாலிதீன் விரிப்புகள் உள்ளட்டவை வழங்கப்படும் எனவும் அரசு அறிவித்தது.

" அரசின் அறிவிப்பு எல்லாம் சரி. இவர்கள் வழங்கும் விதைகள் அத்தனையும் கலப்பின விதைகள். இந்த விதைகளை வளர்க்க பூச்சிக் கொல்லி மருந்துகள் வழங்கப்படுகிறது. இதனால் வரும் பாதிப்புகளைப் பற்றி அரசு கவலைப்படவில்லை. நாட்டுக் காய்கறி விதைகளைக் கொடுக்காமல், இந்தோ-அமெரிக்கன் விதைகளை அரசு கொடுக்கிறது. இதன் பின்னால் நடந்துள்ள பேரங்கள் பற்றி தெளிவுபடுத்தப்பட வேண்டும்" என சமூக வலைத்தளங்களில் சிலர் கொந்தளித்து வருகின்றனர்.

தொடர்ந்து அவர்கள், " மொட்டை மாடியில் கத்திரியும் வெண்டையும் விளைவது மகிழ்ச்சிதான். அரசு வழங்கிய விதைகள் அத்தனையும் கலப்பின வீரிய விதைகள். இதில் இருந்து உருவாகும் வெண்டையில் நாம் விதைகளை எடுக்க முடியாது. இயற்கை விவசாயம், பாரம்பரிய விதைகள் என பேசிவரும் வேளையில், அமெரிக்க கம்பெனியிடம் இருந்து விதைகளை வாங்குவது சரியா? அத்தனையும் சாயமூட்டப்பட்ட விதைகள். விதைகளுக்குப் பின்னால் இருக்கும் ரகசியங்களை வெளிக்கொண்டு வர வேண்டும்" எனவும் கொந்தளிக்கிறார்கள்.

' அரசு கொடுக்கும் மாடி வீட்டுத் தோட்ட விதைகள் அவ்வளவு ஆபத்தானதா?' என்ற கேள்வியை தமிழ்நாடு இயற்கை விவசாயிகள் கூட்டமைப்பின் மாநில ஒருங்கிணைப்பாளர் அரச்சலூர் செல்வத்திடம் கேட்டோம்.

" இந்தோ- அமெரிக்கன் விதை கம்பெனி பதினைந்து ஆண்டுகளாக செயல்பட்டு வருகிறது. அமெரிக்காவைச் சேர்ந்த நிறுவனம் இது. இவர்களிடம் விதைகள் வாங்குவதற்கான மர்மம் என்ன என்பதை அரசுதான் தெளிவுபடுத்த வேண்டும். இந்தக் கம்பெனி தங்களுடைய விதைகளை, மரபணு மாற்றப் பயிர் மூலம் கள்ளத்தனமாக கொண்டு வருகிறார்கள் என்பதை நான் நம்பவில்லை.

இவர்கள் கொடுப்பது வீரிய வித்துக்கள் என சொல்லப்படும் கலப்பின விதைகளைத்தான். இந்தக் காய்கறிகளின் விதைகள் அதிகப்படியான விதைகளை உருவாக்காது. முதல் முறையில் அதிகப்படியான மகசூலைக் கொடுக்கும். இரண்டாவது முறை இதன் விதைகளைப் பயிரிடும்போது முளைக்கும். ஆனால், காய்க்காது. விவசாயிகள் அதிக மகசூலுக்காக கலப்பின விதைகளைப் பயன்படுத்துவார்கள்.

பொதுமக்களுக்கு நாளொன்றுக்கு எட்டு தக்காளிகள் வீட்டு சமையலுக்குப் போதும். அவர்களுக்கு கலப்பின விதைகளைக் கொடுக்க வேண்டிய அவசியம் இல்லை. ரசாயன பூச்சிக் கொல்லி கொடுப்பதாகவும் சொல்கிறார்கள். குடியிருப்புப் பகுதிகளில் பூச்சிக் கொல்லி மருந்துகளை அனுமதிக்கவே முடியாது.

கலப்பின விதைகள் பூச்சிக் கொல்லி இல்லாமல் வளரவே முடியாது. பெயர்தான் வீரியவித்து. ஆனால், அதிக ஈரம், பூச்சிகளின் தாக்கம் ஆகியவற்றைத் தாங்கும் சக்தி இதற்கு இல்லவே இல்லை. ஆரோக்கியமான சூழலைக் கொடுக்கும் வாய்ப்பு இந்த விதைகளுக்கு இல்லை.

நெல், கோதுமை உள்ளிட்ட பயிர்களைத் தவிர்த்து, இதுபோன்ற கம்பெனிகள் காய்கறிகளில் கவனத்தைச் செலுத்த முக்கியக் காரணம் ஒன்றும் உள்ளது. நெல், கோதுமையைவிட அதிக லாபம் காய்கறி விதைகளில்தான் உள்ளது. ஏற்கெனவே, பாரம்பரிய விதைகளில் பெரும்பாலானவற்றை நாம் இழந்துவிட்டோம். கத்திரிக்காயில் 35 வகைகள்தான் தற்போது உள்ளன.

முன்பு நூற்றுக்கணக்கான பாரம்பரிய கத்திரி விதைகள் நம்மிடம் இருந்தன. எண்ணெய் கத்திரிக்கு என தனியாக ஒரு ரகம் இருந்தது. இப்போது மாடிவீட்டுத் தோட்டம் என்ற பெயரில் இருக்கும் சிலவற்றை அழிக்க நினைக்கிறார்கள். தனியார் கம்பெனியிடம் இருந்து வாங்குவதற்குப் பதிலாக, விவசாய பல்கலைக்கழகம் வழங்கும் பாரம்பரிய காய்கறி விதைகள், நமது ஊரில் இருக்கும் விதை கம்பெனிகள் ஆகியவற்றிடம் இருந்து விதைகளை வாங்கிப் பயன்படுத்தலாம்.

ரசாயன உரங்களுக்குப் பதிலாக, வீட்டில் இருந்து எறியப்படும் காய்கறிக் கழிவுகளின் மீது புளித்த தயிரை ஊற்றி மண் போட்டு மூடி வைத்தால், பத்து நாளில் நல்ல உரம் தயாராகிவிடும். அவற்றை காய்கறிகளுக்குப் பயன்படுத்தினாலே போதும்.

பாரம்பரிய காய்கறி விதைகளில் நுண் சத்துக்குள் 250-க்கும் மேல் இருக்கிறது. கலப்பின விதை காய்கறிகளில் இந்த நுண் சத்துக்களை கொஞ்சம்கூட எதிர்பார்க்க முடியாது. இவற்றால் உடலுக்கு தீங்கு ஏற்படாது என அவ்வளவு எளிதில் நாம் புறந்தள்ளிவிட முடியாது.

வேளாண் பல்கலைக்கழகத்திடமே போதிய பாரம்பரிய காய்கறி விதைகள் இருக்கும்போது, தனியாரை நோக்கி அரசாங்கம் ஓட வேண்டிய அவசியம் ஏன் வந்தது? வீட்டுத் தோட்டம் அமைக்கும் பொதுமக்கள்தான் எச்சரிக்கையாக இருக்க வேண்டும்" என எச்சரிக்கை மணி அடிக்கிறார் அறச்சலூர் செல்வம்.

மாடி வீட்டுத் தோட்ட மர்மத்திற்கான புதிர்களை அரசு விளக்குமா?

'தெறி'யில் 'நான்-ஸ்டாப்' ராஜேந்திரன் காமெடி.?

'தெறி' படத்தில் நடித்து வரும் 'நான் கடவுள்' ராஜேந்திரனை இனி 'நான்-ஸ்டாப்' ராஜேந்திரன் என்று அழைக்கும் அளவிற்கு காமெடியில் தெறிக்க விடுவார் என்கிறார்கள். சீரியசான வில்லனாக 'நான் கடவுள்' படத்தில் அறிமுகமான ராஜேந்திரன் அப்படியே காமெடி பக்கமும் பயணிக்க ஆரம்பித்தார். இன்று அவர் திரையில் வந்தாலே ரசிகர்கள் சிரிக்கும் அளவிற்கு அவருடைய சீரியஸ் இமேஜ் போய்விட்டு சிரிப்பு இமேஜ் வந்துவிட்டது.

அட்லீ இயக்கிய 'ராஜா ராணி' படத்தில் ராஜேந்திரன் கார் ஏஜென்சி ஓனராக ஒரு நகைச்சுவை கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். அந்தப் படத்தில் அவர் பேசிய 'சூப்பர்பா, 5000 இன்க்ரிமென்ட்' என்ற வசனம் அவருக்கு பெரிய புகழைப் பெற்றுத் தந்தது. அந்தப் படத்தைப் பார்த்து ரசித்த நடிகர் விஜய், ராஜேந்திரனின் நகைச்சுவையை வெகுவாக ரசித்தாராம். அதனால், அட்லீ இயக்கும் 'தெறி' படத்திலும் அவரையே நகைச்சுவைக் கதாபாத்திரத்தில் நடிக்க வையுங்கள் என்று சொல்லியிருக்கிறார்.

ராஜேந்திரன் ஏற்று நடித்துள்ள கதாபாத்திரம் வடிவேலுவுக்குப் பொருத்தமான ஒரு கதாபாத்திரம் என்கிறார்கள். இருந்தாலும ராஜேந்திரன் மீது கொண்ட நம்பிக்கையில் விஜய்யே அவரைப் படப்பிடிப்பிலும் வெகுவாகப் பாராட்டினாராம். 'தெறி' படம் வந்த பிறகு ராஜேந்திரனும் நகைச்சுவையில் தெறிக்க விடுவார் என்கிறார்கள். 

ஓட்டுனருக்குகளுக்கு தெரிந்த விஷயம்; தெரியாத உண்மை...!

வாகனங்களை ஓட்டத் தெரிந்த பலர், சாலைகளில் இடம் பெற்றவை குறித்து அறிந்திருப்பதில்லை. இது குறித்து மதுரை டிரைவிங் நீட்ஸ் அகாடமியின் பயிற்சியாளர் ஏ.நரசிம்மமணி கூறியதாவது:

o பகலில் முகப்பு விளக்குகளை எரியவிட்டு எதிரே வரும் வாகனத்தை எச்சரித்தபடி முன்னேறுவது குற்றம்.

o சாதாரண நேரங்களில் நான்கு புறங்களிலும் உள்ள எச்சரிக்கை விளக்கை எரிய விடுவது தவறு.

o அபாயகரமான அல்லது வாகனம் பழுதாகி நிற்கும்போதோ, பழுதான வாகனத்தை பிற வாகனங்கள் இழுத்துச்செல்லும்போதோ எரியவிட வேண்டும்.

o சிக்னல்கள் அல்லது ரோட்டில் வாகனங்களை நிறுத்தி இருக்கும்போது, அனைத்து விளக்குகளையும் எரியவிடக் கூடாது.

o ரோட்டின் நடுவில் கோடுகளை குறிப்பிட்ட இடைவெளியில் விட்டுவிட்டு போட்டிருந்தால், ஒரு வாகனத்தை நாம் இந்த இடத்தில் முந்திச் செல்லலாம் என்று பொருள். அதேசமயம் தொடர்ச்சியான நீண்ட கோடுகளாக போட்டிருந்தால் முந்தக் கூடாது என்று பொருள்.

o ரோட்டின் நடுவில் தொடர்ச்சியாக இரட்டைக் கோடுகள் போட்டிருந்தால், அதை ஒரு தடுப்புச் சுவராக கருதவேண்டும்.

o ஓட்டுனருக்கு 20.5 மீ (67 அடி) தொலைவில் இருந்து வரும் வாகனத்தின் பதிவு எண்ணை படிக்க முடிந்தால், கண்கள் நல்ல பார்வையுடன் உள்ளது என பொருள். எனவே, ஆண்டுக்கு ஒருமுறை ரத்த அழுத்தம், சர்க்கரை, கண் பரிசோதனை செய்வது நல்லது.

o கனகர வாகனங்களின் பின்புறம் சிவப்பு நிற முக்கோண வடிவச் சின்னம் உள்ளது. இது முற்றிலும் தவறு. மோட்டார் வாகன சட்டப்படி, அது ஒரு எச்சரிக்கை சின்னம். ரோட்டில் ஒரு வாகனம் பழுதாகி நின்றாலோ, அவசர நிலையிலோ அதை வாகனத்தின் பின்புறம் 15 அடி தள்ளிதான் வைக்க வேண்டும்.

o நெடுஞ்சாலையில் எதிரே வரும் வாகனத்திற்கு வசதியாக முகப்பு விளக்குகளை 250 மீ.,க்கு முன்பே "டிம்' செய்ய வேண்டும்.

o வளைவுகளில் அதிவேகமாக ஓட்டிச் சென்றால் விபத்து நடக்கும். அதற்கு "இன் ஸ்லோ-அவுட் பாஸ்ட்' என்ற முறையில் செல்ல வேண்டும். அதாவது, மைய ஈர்ப்பு விசை, விலக்கு விசைகளின் அடிப்படையில், வளைவுகளில் நுழையும்போது மெதுவாகவும், பின் ஆக்ஸிலேட்டரை லேசாக அழுத்தியும் செல்ல வேண்டும். ஆனால் பலர் வேகமாகவே நுழைந்து பிரேக் அடித்து திரும்புகின்றனர். இதனால் வாகனம் கவிழ்ந்துவிடும்.

o கார்களில் செல்வோர் "சீட் பெல்ட்' அணியும்போது சட்டைப் பையில் போன், பேனா, சில்லரை காசுகள் வைத்திருப்பதை தவிர்க்க வேண்டும். பெண்கள் அதிக நகை அணிந்திருக்கக் கூடாது. அசம்பாவிதம் நேரிட்டால் அந்த பொருட்களே பயணிக்கு எமனாக மாறிவிடும்.

o நான்கு வழிச் சாலையின் நடுவே மீடியனில் அரளி செடிகளையே வைத்துள்ளனர். காரணம் எதிரே வரும் வாகனத்தின் முகப்பு விளக்கு ஒளியில் இருந்து கண்களை பாதுகாக்கும். வறட்சியையும் தாங்கும் இச்செடிகளின் வேர்கள் அதிகம் வெளி வராது. இது வாகனங்களின் கார்பன் டை ஆக்சைடை அதிகம் "அப்சர்வ்' செய்கிறது. விலங்குகளும் இவற்றை உண்பதில்லை.

o நமக்கு அவசர அழைப்பு எண் 108 என்பது தெரியும். மற்றுமொரு எண் 112 என்பது பலருக்கு தெரியாது. மொபைல் போன் "சிக்னல்' இல்லாத இடங்களிலும், மொபைலின் "கீ லாக்' செய்யப்பட்ட நிலையிலும், ஏன் "சிம்கார்டு' இல்லாத நிலையிலும்கூட இந்த எண்ணை அவசர உதவிக்கு பயன்படுத்தலாம்.

மொத்தத்தில் விவேகமான வேகமே விபத்துக்களில் இருந்து நம்மை பாதுகாக்கும்

இதை ஏற்றுக்கொள்வாரா மாதவன்?

ஜனவரி 29, வரும் வெள்ளி அன்று வெளியாகவிருக்கும் படங்களில், நீண்ட இடைவெளிக்குப் பின்னர் மாதவன் நடிப்பில் தமிழ் மற்றும் ஹிந்தி மொழிகளில் வெளியாக இருக்கும் படம் "இறுதிச்சுற்று", ஹிந்தியில் "சால காதூஸ்".

இப்படத்தின் டிரெய்லர்கள் மற்றும் பாடல்கள் அனைவரையும் வெகுவாகக் கவர்ந்துள்ள நிலையில், இப்படத்தினை தெலுங்கிலும் எடுக்க உள்ளதாக இப்படத்தின் இயக்குநர் சுதா கோங்கரா பிரசாத் கூறியுள்ளார். தெலுங்கின் முன்னணி நடிகர் ஒருவர் இப்படத்தை சமீபத்தில் பார்த்துவிட்டு, இப்படத்தில் தான் நடிக்க விருப்பம் தெரிவித்துள்ளதகவும், இப்படத்தை தெலுங்கில் ரீமேக் செய்யப் போவதில் தனக்கு மகிழ்ச்சி என்றும், ஆனால் இதற்கு மேல் வேறு எதுவும் தற்சமயம் கூற இயலாது எனவும் இயக்குநர் சுதா கூறியுள்ளார்.

சுதா அந்த நடிகரின் பெயரைக் கூறாத போதிலும், தெலுங்கின் முன்னணி நடிகர்களுள் ஒருவரான வெங்கடேஷ் தான் அந்த நடிகர் என்று கூறப்படுகிறது. சமீபத்தில் சால காதூஸ் படத்தைப் பார்த்த வெங்கடேஷ், இப்படத்தை தானே தயாரித்து, நடிப்பதில் ஆர்வமாக உள்ளதாக வெங்கடேஷின் நெருங்கிய வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. எனினும் தனது சொந்தப் படம் போல் பாவித்து தமிழ், இந்தி என இரு மொழிகளிலும் முயற்சி செய்து புரமோட் செய்து வரும் மாதவன் இதற்குச் சம்மதிப்பாரா என்பது தான் நமது கேள்வி.

ஏனெனில் சமீபத்திய பேட்டி ஒன்றில் இயக்குநரின் இந்தக் கதையை வைத்துக்கொண்டு பல தயாரிப்பு கம்பெனிகளில் ஏறி இறங்கியதாகக் கூறியுள்ள நிலையில் தெலுங்கில் மட்டும் வேறு ஒரு நடிகர் நடிப்பதற்கு ஒப்புக்கொள்வாரா என்பதைப் பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும். 

நியாயம் இல்லாத போது விலகுவேன் - எஸ்பி பாலசுப்ரமணியம்

தமிழ், தெலுங்குத் திரைப்படங்களில் எண்ணற்ற பாடல்களைப் பாடியுள்ளவரும், 69 வயதைக் கடந்த பிறகும் இப்போதும் தன்னுடைய இனிமையான குரலால் இன்றைய இளம் நாயகர்களுக்காகவும் பாடி வரும் சிறந்த பின்னணிப் பாடகர் எஸ்.பி.பாலசுப்ரமணியம். திரையுலகத்தில் பாட வந்து 50 ஆண்டுகளை கடந்த வாரம்தான் வெற்றிகரமாக கடந்தார். எம்எஸ் விஸ்வநாதன், கேவி மகாதேவன், சங்கர் கணேஷ், இளையராஜா, ஏஆர் ரகுமான், தேவா, வித்யாசாகர் இன்றைய இளம் இசையமைப்பாளர்கள் என பலருடைய இசையில் தமிழ், தெலுங்கில் சுமார் 40,000 பாடல்களைப் பாடி சாதனை படைத்துள்ளவர்.

சமீபத்தில் அளித்த ஒரு பேட்டியில் திரையுலகில் பாடுவதை எப்போது நிறுத்துவேன் என்பது குறித்து உருக்கமான பேட்டி ஒன்றை அளித்துள்ளார். அதில், மன ரீதியாகவும், உடல் ரீதியாகவும் ஒரு பாடலுக்கு நியாயமாக இல்லாத போது நானாகவே பாடுவதை நிறுத்திக் கொள்வேன் என அந்தப் பேட்டியில் தெரிவித்துள்ளார். இப்போதும் ஒரு நாளைக்கு 11 மணி நேரத்திற்கும் மேலாக பாடிக் கொண்டிருக்கிறேன் என்றும் அப்போது அவர் குறிப்பிட்டுள்ளார். 80களில் ரஜினிகாந்த், கமல்ஹாசன், மோகன் உள்ளிட்ட பலருக்கு எஸ்பிபி பாடிய பாடல்களை இன்றும் இசை ரசிகர்கள் கேட்டுக் கொண்டிருக்கிறார்கள். பல வானொலிகளில் ஒரு மணி நேரத்திற்கு ஒரு முறையாவது எஸ்பிபி பாடிய பாடல்கள் கண்டிப்பாக இடம் பெறும் என்பதே உண்மை.

இந்தியாவில் தடை செய்யப்பட்ட படங்களுக்கு உலக அளவில் அங்கீகாரம்!

63வது மோசன் பிக்சர்ஸ் சவுண்ட் எடிட்டர்ஸ் கோல்டன் ரீல் விருதுகளில்,ஆஸ்கார் விருது வென்ற சவுண்ட் டிசைனர் ரசூல் பூக்குட்டி, இந்தியாவில் தடை செய்யப்பட்ட இரண்டு படங்களுக்காக பரிந்துரைக்கப்பட்டுள்ளார்.

1953 முதல் ஒவ்வொரு வருடமும் சவுண்ட் எபக்ட்ஸ், சவுண்ட் எடிட்டிங், சவுண்ட் டிசைனிங் துறையில் சிறந்து விளங்கும் கலைஞர்களுக்கு விருதுகள் வழங்கி சிறப்பித்து வருகிறது மோசன் பிக்சர்ஸ் சவுண்ட் எடிட்டர்ஸ்(M.P.S.E.). அந்த வகையில் 2009ம் ஆண்டு ஸ்லம்டாக் மில்லினியர் படத்திற்காக சிறந்த சவுண்ட் மிக்சிங் ஆஸ்கார் விருதை வென்ற, சவுண்ட் டிசைனர் ரசூல் பூக்குட்டி, இதில் இரண்டு விருதுகளுக்காக பரிந்துரைக்கப்பட்டுள்ளார். அதிலும் இந்தியாவில் தடை செய்யப்பட "அன்ப்ரீடம்" மற்றும் "இந்தியாஸ் டாட்டர்" எனும் இரு திரைப்படங்களுக்காக என்பது குறிப்பிடத்தக்கது.

இதனை தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவு செய்துள்ள ரசூல் பூக்குட்டி, இப்படத்தில் தன்னுடன் பணியாற்றிய அத்தனை பேருக்கும் நன்றிகள் மற்றும் இந்த 63வது கோல்டன் ரீல் விருதுகளில் தான் பரிந்துரைக்கப்பட்டிருப்பதை, 2012ம் வருடம் டிசம்பர் மாதம் பாலியல் வன்முறையால் உயிரிழந்த ஜோதி சிங்கிற்கு அர்ப்பணிப்பதாகக் கூறியுள்ளார். ராஜ் அமித் குமார் இயக்கிய "அன்ப்ரீடம்" ஓரினச்சேர்க்கையாளர்களைப் பற்றிய படம்.

பிறநாட்டு படங்கள் (சவுண்ட் எபக்ட்ஸ், போலே, டயலாக் & ADR) பிரிவில் பரிந்துரைக்கப்பட்டுள்ளது. "இந்தியாஸ் டாட்டர்" 2012ல் டெல்லியில் நடந்த கூட்டு பாலியல் பலாத்காரம் சம்பவத்தை மையமாக கொண்டு எடுக்கப்பட்ட குறும்படம், BBC தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி கொண்டிருக்கும் தொடர், சிறந்த தொலைக்காட்சி குறும்படம், டாக்குமெண்டரி பிரிவில் பரிந்துரைக்கப்பட்டுள்ளது. இதில் வென்றவர்களின் பெயர்கள் பெப்ரவரி 27ம் தேதி அறிவிக்கப்படும்.

ரஜினி என்ன செய்து விட்டார், அவருக்கு எதற்கு விருது? பெண் வழக்கறிஞர் அதிரடி

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அவர்களுக்கு சில தினங்களுக்கு முன் இந்தியாவின் உயரிய விருதான பத்மவிபூசன் விருது அளிக்கப்பட்டுள்ளது. இதற்கு நாடெங்குமிருந்து வாழ்த்துக்களும், எதிர்ப்புகளும் ஒரு சேர வருகின்றது.

பலரும் இதற்கு பின்னால் அரசியல் இருக்கின்றது என கூறி வருகின்றனர். இந்நிலையில் சமீபத்தில் ஒரு தொலைக்காட்சி விவாத மேடையில் திராவிடர் கழக பிரச்சார செயலாளர் வழக்கறிஞர் அருள்மொழி கலந்துக்கொண்டார்.

அவர் ‘எதற்கு ரஜினிக்கு பத்மவிபூசன் விருது, அவரின் நடிப்பு, அவர் சினிமாவிற்கு ஆற்றிய தொண்டு இதை நான் ஒரு போதும் குறை கூறவில்லை.

அதற்காக தான் அவருக்கு பத்மபூசன் விருது அளிக்கப்பட்டது, ஆனால், அந்த விருதிற்கு பிறகு ரஜினி என்ன செய்து விட்டார், அவருக்கு எதற்கு தற்போது விருது’ என கேள்வி மேல் கேள்வி கேட்டார்.

இவர்கள் திரைக்கு வருவதற்கு முன் என்ன செய்துகொண்டிருந்தார்கள்?

1. ஜெமினி கணேசன் - உதவிப் பேராசிரியர்

2. சிவக்குமார் - ஓவியர்

3. விஜயகாந்த் - அரிசிக் கடை

4. பாக்யராஜ் - ஜவுளிக்கடை

5. ரகுவரன் - உணவு விடுதி

6. பாலசந்தர் - அக்கவுண்டண்ட்

7. விசு - டி .வி.எஸ். ஊழியர்

8. மோகன் - வங்கி ஊழியர்

9. எஸ். வி. சேகர் - மேடை நாடக ஒலி அமைப்பாளர்

10. ரஜினிகாந்த் - பஸ் கண்டக்டர்

11. நாகேஷ் - ரயில்வே குமாஸ்தா

12. அஜித் - டூ வீலர் மெக்கானிக்

13. பாரதிராஜா - மலேரியா ஒழிப்பு இன்ஸ்பெக்டர

‘பக்தனாக நடிப்பேன்.. கடவுளாக முடியாது..’ காரணம் சொன்ன கமல்..!

உலகநாயகன் கமல், சினிமா இந்த இரண்டையும் எப்போதும் பிரித்து பார்க்க முடியாது. அவரின் அனைத்துமே சினிமாதான் என்பது நமக்கு தெரிந்ததுதான்.

மேலும் அவர் தன்னை ஒரு பகுத்தறிவாளர் என்றும் கடவுள் நம்பிக்கை இல்லாதவர் என்று கூறிவருவதும் அறிந்ததே.

சமீபத்திய பேட்டி ஒன்றில்.. “கடவுள் மற்றும் பக்தன் வேடங்கள்” பற்றி அவரிடம் கேட்கப்பட்டது. அதற்கு பதிலளித்த கமல்…

“பல படங்களில் பக்தனாக நடித்துள்ளேன். இனியும் நடிப்பேன்”.

காரணம் அப்படியான பக்தர்களை பார்த்துள்ளேன். ஆனால் கடவுளை பிரதிபலிக்கும் கேரக்டர்களில் நடிக்க மாட்டேன்” என உறுதியாக தெரிவித்தார்.

ரஜினி படத்திற்கு ஷங்கர் பிறப்பித்த கட்டளைகள்.!

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த், ஷங்கர் ஆகிய இருவரும் தங்களின் ஹாட்ரிக் வெற்றிக்காக இணைந்துள்ளனர். ரூ. 350 கோடி பட்ஜெட்டில் உருவாகும் ‘2.ஓ’ படத்தை லைக்கா நிறுவனம் தயாரிக்கிறது.

இந்நிலையில் இப்படத்தில் பணியாற்ற உள்ள கலைஞர்களுக்கு இயக்குனர் ஷங்கர் கட்டளைகளை பிறப்பித்துள்ளார். அவை பின்வருமாறு…

     சூட்டிங் ஸ்பாட்டின் உள்ளே விருந்தினர்களோ, நண்பர்களோ என எவருக்கும் அனுமதியில்லை.
    சூட்டிங் ஸ்பாட்டுக்குள் யாரும் செல்போன், லேப்டாப், பென் டிரைவ் உள்ளிட்ட பொருட்களை கொண்டு வரக்கூடாது. முக்கிய நடிகர்கள் மட்டும் கேரவனுக்குள் அமர்ந்து போன் பேசலாம்.
    மற்றவர்கள் அவசரத் தேவைக்கு பொதுவான தொலைபேசியை பயன்படுத்தலாம்.
     படம் குறித்த தகவல்களை எக்காரணம் கொண்டும் யாரிடமும் பகிரக் கூடாது. மற்ற படத்தின் பேட்டியின்போதும் இப்படம் குறித்து தகவல்களை சொல்லக் கூடாது.
    படப்பிடிப்பு தளத்தில் பத்திரிகையாளர்களுக்கு அனுமதி கிடையாது. படம் குறித்த தகவல்கள் மக்கள் தொடர்பாளர் மூலம் வெளியிடப்படும்.
    சூட்டிங் சமயத்திற்குள் மட்டும் கலைஞர்கள் உள்ளே அனுமதிக்கப்படுவார்கள். மற்ற நேரங்களில் செட்டில் நிற்கக் கூடாது. செட்டில் வேலை செய்யும் தொழிலாளர்கள் இதற்கு விதிவிலக்கு.
    உதவி இயக்குனர்கள் அவர்களுக்கு கொடுக்கப்பட்ட பணிகளை மட்டும் செய்தால் போதும்.
    மேக் அப் அறைக்குள் அத்துறை சம்பந்தப்பட்ட கலைஞர்கள் மட்டுமே இருக்க வேண்டும்.
    வசன பயிற்சி அளிக்கும் உதவி இயக்குனர்கள் தவிர மற்றவர்கள் நடிகர், நடிகைகளுடன் பேசக்கூடாது
    பாதுகாப்பு பணியில் இருப்பவர்கள் படப்பிடிப்புக்கு பாதிப்பு இல்லாத வகையில் பணிகளை மேற்கொள்ள வேண்டும்.
    படப்பிடிப்பு தளங்களில் மற்றவர்கள் காட்சி பற்றி விவாதம் செய்யக்கூடாது.
    படப்பிடிப்பு எங்கு? எப்போது நடக்கிறது போன்ற விவரங்கள் யுனிட்டில் உள்ளவர்களுக்கு மட்டுமே தெரியப்படுத்தப் படவேண்டும்.

மார்பிள் தரையில் உள்ள கறையைப் போக்க சில சூப்பர் டிப்ஸ்...

வீட்டில் உள்ள மார்பிள் தரையில் கறை படிந்துள்ளதா? அதை சுத்தப்படுத்தி சோர்ந்துவிட்டீர்களா? அப்படியெனில், அந்த கறையை எளிதில் போக்குவதற்கு ஒருசில பொருட்கள் உள்ளன. பொதுவாக மார்பிள் கல்லானது மிகவும் விலை உயர்ந்தது. தற்போது அத்தகைய விலை உயர்ந்த மார்பிள் கல் தான் பெரும்பாலான வீடுகளில் உள்ளது. இந்த மார்பிள் கல் வீட்டிற்கு மிகவும் அழகான தோற்றத்தைத் தரும். அதே சமயம் அதில் கறை படிந்தால், அதனைப் போக்குவது சற்று கடினம்.

ஏனெனில் மற்ற தரைகளை சுத்தம் செய்வது போல், இந்த மார்பிளால் செய்த தரையை சுத்தம் செய்தால், மார்பிள் கல்லில் பாதிப்பு ஏற்படும். ஆகவே இந்த கரையை சுத்தம் செய்யும் போது மிகவும் கவனமாக இருக்க வேண்டும். இப்போது அத்தகைய மார்பிள் தரையில் உள்ள கறையைப் போக்குவதற்கு ஒருசில எளிமையான பொருட்களைக் கொடுத்துள்ளோம். அந்த பொருட்களைக் கொண்டு எப்போதும் சுத்தம் செய்தால், மார்பிள் தரைகள் பொலிவுடன் காணப்படுவதோடு, வீட்டில் நல்ல மணம் இருக்கும்.

பேக்கிங் சோடா

மார்பிள் தரையில் உள்ள கறைகளைப் போக்க சிறந்த வழியென்றால், அது பேக்கிங் சோடா தான். அதற்கு 1 டேபிள் ஸ்பூன் பேக்கிங் சோடாவை வெதுவெதுப்பான நீரில் கலந்து, வீட்டைத் துடைத்தால், கறைகள் முற்றிலும் நீங்கிவிடும். குறிப்பாக பேக்கிங் சோடாவை அளவுக்கு அதிகமாக போட வேண்டாம்.

டூத் பேஸ்ட்

டூத் பேஸ்ட் பற்களை மட்டும் சுத்தம் செய்யப் பயன்படுவதில்லை. மார்பிள் தரைகளில் உள்ள கறைகளைப் போக்கவும் தான் உதவுகிறது. அதற்கு செய்ய வேண்டியது எல்லாம், டூத் பிரஷ்ஷில் சிறிது டூத் பேஸ்ட் வைத்து, கறை உள்ள இடத்தில் தேய்த்து, பின் ஈரமான துணி கொண்டு துடைத்தால், கறைகள் எளிதில் போய்விடும்.

எலுமிச்சையில் உள்ள ப்ளீச்சிங் தன்மையால், இதனை கறை உள்ள மார்பிள் தரையில் தேய்த்தால், கறைகள் இருந்த இடமே தெரியாமல் போகும்.

வினிகர்

மார்பிள் தரையில் உள்ள கெட்சப் மற்றும் ஒயின் கறைகளைப் போக்குவதற்கு, வெள்ளை வினிகரை ஒரு துணியில் நனைத்து, கறை உள்ள இடத்தில் தேய்த்தால், கறை நீங்கி மார்பிள் தரையானது பளிச்சென்று மின்னும்.

டிஷ் வாஷ் திரவம்

 எளிய முறையில் மார்பிள் தரையில் உள்ள கறையைப் போக்க வேண்டுமெனில், பாத்திரம் கழுவப் பயன்படுத்தும் டிஷ் வாஷ் திரவத்தைப் பயன்படுத்துவது தான். இதற்கு அந்த திரவத்தை கறை உள்ள இடத்தில் ஊற்றி நன்கு தேய்த்து, கழுவ வேண்டும். முக்கியமாக, மார்பிள் தரைக்கு கடினமான சோப்பைப் பயன்படுத்தக்கூடாது. அது மார்பிள் தரைக்கு பாதிப்பை ஏற்படுத்திவிடும்.

சோப்பு தண்ணீர்

 மார்பிள் தரை எப்போதும் சுத்தமாகவும், பளிச்சென்று மின்ன வேண்டுமெனில், ஸ்பாஞ்சை சோப்புத் தண்ணீரில் நனைத்து பிழிந்து, தரையைத் துடைக்க வேண்டும். அதிலும் இந்த முறையை, தரையில் ஏதேனும் கொட்டும் போது செய்தால், தரையில் கறை படிவதை தவிர்க்கலாம்.

ஆஸ்கார் விருது பெறும் கோவை தமிழர்!

கோவை நகரத்தைச் சேர்ந்த பொறியியலாளர்  கோட்டலாங்கோ லியோன். இவர் இந்த ஆண்டிற்கான தொழில்நுட்ப கண்டுபிடிப்பு சாதனைக்கான ஆஸ்கார் விருதைப் பெறுகிறார்.

சினிமா துறையில் இந்த ஆண்டு பல தொழில்நுட்ப கண்டுபிடிப்புகளை  கண்டறிந்து பெரும் பங்காற்றியுள்ளார். ஒவ்வொரு ஆண்டும் சிறந்த இசை, நடிப்பு ஆகியவற்றை கவுரவிக்க  ஆஸ்கார் அவார்ட் விருதுகள் வழங்கப்படுகின்றன.

அந்த வரிசையில் சினிமா துறையில் அறிவியல் , பொறியியல் தொழில்நுட்பம் போன்ற துறையிலும் சிறந்த கண்டுபிடிப்புக்கான விருதுகள் ஒவ்வொரு ஆண்டிலும் வழங்கப்பட்டு வருகின்றன. இந்தியாவை தனது தாயகமாகக் கொண்ட கோவைக்காரரான இவர் அறிவியல் மற்றும் தொழில்நுட்பத்திற்கான சாதனையை  செய்ததற்காக தேர்வு செய்யப்பட்டுள்ளார். முன்னர்அறிவிக்கப்பட்ட போது இந்த தொழில்நுட்ப விருது, இந்தியாவை சேர்ந்த ராகுல் தாக்கர் என்பவருக்கு மட்டுமே அறிவிக்கப்பட்டிருந்தது.

இந்த நிலையில் தற்போது அவருடன் சேர்த்து நம் தமிழ்நாட்டின் கோயம்புத்தூர் மாவட்டத்தைச் சேர்ந்தவரும் தேர்வு பெற்றுள்ளார்.அவர்தான் கோட்டலாங்கோ லியோன் ஆவார்.வெளிநாடு வாழ் இந்தியரான  இவர் அமெரக்காவின் கலிபோர்னியா நகரத்தில் மனைவி,குழந்தைகள் என  தனது குடும்பத்துடன் வசித்து வருகிறார்.

இவர் இதுபற்றி தனது முகநூல் பக்கத்தில் " நான் வழக்கம்போல் எனது வேலையைச் செய்து கொண்டிருந்தேன்.இத்தகவல் எனக்குக் கிடைத்ததும் அடைந்த மகிழ்ச்சியை என்னால் அடக்க முடியவில்லை.இதற்காக என் மேல் அக்கறை கொண்ட எனது நண்பர்கள் மற்றும் குடும்பத்தார்கள் அனைவருக்கும் எனது மனமார்ந்த நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். நான் வெளிச்சம் விரும்பவில்லை.இருப்பினும் எனது மகிழ்ச்சியை தெரிவிக்கவே இந்த பதிவு".

என தனது மகிழ்ச்சி மற்றும்  நன்றியை பகிர்ந்து உள்ளார்.அடுத்த மாதம் 13 ஆம் தேதி இந்த தொழில்நுட்ப விருதுகள் வழங்கப்பட உள்ளன.மற்றும் பல முக்கிய விருதுகள் அடுத்த 28 ஆம் நாள் வழங்கப்படும் என செய்தி வெளியாகி உள்ளது.

கோபிநாத்.. கூச்சமில்லாத பொம்மை! : உடைபடும் உண்மைகள்!


விஜய் டிவி “நீயா நானா” பார்த்து ரசித்து கலங்கி அழும் ரசிகரா நீங்கள்? அவசியம் இந்த கட்டுரையை படியுங்கள்.

சமீபத்தில் இந்த நிகழ்ச்சியில் கலந்துகொண்ட கவிஞரும் எழுத்தாளருமான கார்த்திக் புகழேந்தி இந்த நிகழ்ச்சி குறித்து தனது முகநூல் பக்கத்தில் கடுமையாக விமர்சித்திருக்கிறார்.

“இந்த நிகழ்ச்சியில் தங்கள் நிறுவன ஊழியருக்கே வயதானவர் வேடமிட்டு பேச வைக்கிறார்கள், ஜூனியர் ஆர்ட்டிஸ்டுகளை கூட்டத்தில் கலந்துவிட்டு அவர்களைப் பிழியப் பிழிய அழவைக்கிறார்கள்” என்று அதிர்ச்சி கருத்துக்களையும் வெளிப்படுத்தி இருக்கிறார்.

இதோ அவரது கருத்து:

“நீயா? நானா? நிகழ்ச்சி பற்றிய அதிருப்தியை எழுதலாமா வேண்டாமா என்ற கேள்வி நான்கைந்து நாட்களுக்கு மேலாக மனதைக் குடைந்துகொண்டேதான் இருக்கிறது.

ஒண்ணு அழவைப்பாங்க; இல்ல சண்டைபோட வைப்பாங்க என்பதெல்லாம் கடந்து ஆக்கப்பூர்வமாக சில கருத்துகள் தான் அந்நிகழ்ச்சியின் மீதான விமர்சனங்களைத் தாங்கிப் பிடித்துக் கொண்டிருக்கின்றன.

கடந்தவாரம் “உட்கார்ந்து வேடிக்கைபார்த்ததில்” நீயா நானாவின் பல குட்டுகளை அனுபவப்பூர்வமாக உணர முடிந்தது.  கலந்துகொண்ட மற்ற நண்பர்களும் தங்கள் கசப்பனுபவங்களைக் கொட்டியும் இருந்தாலும் இந்த நிகழ்ச்சியில் கலந்துகொள்ள பரிந்துரைத்தவரின் மீதிருந்த மரியாதையும், தன்னார்வலர்களைச் சந்திக்க வாய்ப்பமையும் என்ற எண்ணத்திலும் சென்றிருந்தேன்.

காலவரையில்லாமல் நிகழ்ச்சிகளில் கலந்துகொள்பவர்களின் நேரத்தை தின்று தீர்ப்பதில் இவர்களுக்கு நிகர் யாருமில்லை. மாலை 5.30க்கு தொடங்கவேண்டிய ஒளிப்பதிவு 8.00மணிக்குத் தொடங்கியது. 11மணிக்கு முடியும் என அறிவுறுத்தப்பட்ட நிகழ்ச்சி நள்ளிரவு 2.30மணி வரைக்கும் நீண்டுகொண்டே போனது.

ஊடக தர்மத்தில் நேரம் ஒரு பொருட்டில்லை என்றாலும் வெளியூர்களிலிருந்து அழைக்கும் நபர்களைக் கருத்தில் கொண்டு கொஞ்சம் அதுபற்றிய வருத்தங்களோ, உணர்வோ இல்லாமல் நடந்துகொள்வது நாங்கள் அடைய வேண்டிய உயரங்களை எல்லாம் அடைந்து விட்டோம் நீங்களென்ன சுண்டைக்காய் என்பது போலத்தான்.

ஜூனியர் ஆர்ட்டிஸ்டுகளை கூட்டத்தில் கலந்துவிட்டு அவர்களைப் பிழியப் பிழிய அழவைப்பது. அவர்கள் மூலம் ஒரு கனமான சூழலை உருவாக்கிவிட்டு மற்ற பெண்களை நோக்கி கவனத்தைத் திருப்பி அவர்களையும் அழச்செய்வது. தப்பித் தவறி அழுதுவிட்டால் போதும் “மைக்கை அவர்கிட்டே கொடுங்கள்” என்று விடாமல் சொல்லுங்க எப்படி இருக்கு உங்கள் மனநிலை சொல்லுங்க என்று துன்புறுத்துவது.

நாற்பது சொச்சம் இருக்கைகளை நிரப்பி இருப்பவர்கள் நிலை ஜென் நிலைதான். யார் யாரை எங்கே உட்கார வைப்பது என்ற தேர்ந்தெடுத்த பட்டியலை வைத்து இயக்குனருக்கு முன்கூட்டியே தகவல்கள் போய்விடும். “லகான் படத்தில் இவன் நம்மாளு இவன் பக்கம் பவுண்டரி அடி புடிக்க மாட்டான்” என்பது போல அவரை வைத்து தங்கள் ஸ்க்ரிப்ட்டைப் பேச வைத்துவிடுவது.

கௌரவ அழைப்பாளர்களிடம் பட்டுக்கோட்டைக்கு வழிகேட்க, அவர் கொட்டைப்பாக்கு விலை இவ்வளவு என்பார். உடனே அங்கிருந்து இயக்குனர் சூப்பர் சொல்லி கை குடுங்க என்று நெறியாளர் கோபியை உசுப்பிவிட, நம்மவர் உட்கார்ந்த இடத்திலிருந்து உணர்ச்சிபொங்க எழுந்துவந்து, “அருமை இதான் எதார்த்தம் கையக்குடுங்க உங்க பேரு என்ன” என்று இயக்குனர் செய்யச் சொன்னதை அப்படியே அப்பட்டமாக நடிக்கும்போது வாய்மூடி மௌனிகளாக மற்றவர்கள் இந்த நாடகத்தை வேடிக்கைபார்த்து விட்டு ”அட நாசாமா போனவனுங்களா” என்று தலையில் அடித்துக்கொள்ள வேண்டியதுதான்.

வெள்ள நிவாரணப் பணியில் ஈடுபட்ட தன்னார்வலர்கள் வரிசையில் “இவர்” எங்கப்பா வந்தாரு என்று நண்பர் ஒருவர் கேட்டார். அங்கே அமர்ந்திருந்தது நம்ம கிஷோர் கே சுவாமி. நண்பரை எப்படி கலாய்க்க முடியும் அதனால் தான் புதிய தலைமுறையில் தமிழிசை சவுந்தர்ராஜன் சொன்ன “அதே கதையை” எடுத்துச் சொன்னதும் என்னை முறைத்துக்கொண்டே நகர்ந்தார். எவ்வளவு டிராபிக் ஜாம்கள்.

கேமிராக்களுக்குப் பின்னே உட்கார்ந்து இயக்குனர் நம் கருத்துகள் மீது கோலோச்சுவதாகட்டும், நீ என்னய்யா/ம்மா புதுசா கருத்து சொல்றது, எங்களுக்கு உங்கள் வாயிலிருந்து என்ன வேண்டுமோ அதைச் சொல்லுங்கள் அதற்காகத்தானே உங்களை அழைத்துவந்தோம் என அதிகாரத் தொனியில் போட்டுவாங்குவது என்று அத்தனை நாடகத்தனமும் நம் கண்முன்னே பல்லைக்காட்டும் நிகழ்ச்சி தான் நீயா நானா? கார்த்திக் புகழேந்தி.



ரியாலிட்டி ஷோ. டாக் ஷோக்களில் கலந்துகொள்பவர்களை மகா மட்டமான மனநிலையோடு நடத்தும் நடைமுறை நீயா நானாவுடையது என்பது என் சொந்தக் கருத்தாகவே இருந்துவிட்டுப் போகட்டும்.

முன்னர் கலந்துகொண்டவர்கள் கூட இந்தப் பதிவை ஒரு குறுஞ்சிரிப்போடுகூட கடந்துபோகலாம். யார் கண்டது. நிமிட நேரங்களில் தொலைக்காட்சியில் வருகிறோம் என்ற ஒரே தேவைக்காக ஊடக அழிச்சாட்டியங்களை வாய்திறந்து பேசாமல் இருப்பது நியாயமானதாகப் படவில்லை.

நான் கலந்துகொண்ட நிகழ்ச்சியில் மழைவெள்ளத்தில் இயங்கிய தன்னார்வலர்கள், என்.ஜி.ஓக்கள், மற்றும் பொதுமக்கள் ஆகிய தரப்புகளிலிருந்து சிலரை அழைத்துவந்து “மழை கற்றுக்கொடுத்த பாடம் என்ன?” என்பதுபோன்ற தலைப்பைச் சூட்டி அதன் மூலம் இந்த அரசாங்கம் வெள்ள நிவாரணப் பணிகளில் விரைந்து செயல்பட்டு நோய் பரவாமல் தடுத்திருக்கிறது என்று ஒரு மருத்துவர் வாயாலே சொல்லவைத்து உஷ்ஷ்ஷ்ஷ்… ஒரு பக்கா நாடகம்.

ஆதங்கத்தோடு வடசென்னை பற்றிய கருத்துகளையோ, இருளர்கள் போன்ற ஒடுக்கப்பட்ட மக்களைப் பற்றிய பேச்சையோ, கடலூரில் நடந்த அடாவடிகளைப் பற்றிய கருத்தையோ நீங்கள் முன்வைக்கவே முடியாத கூடத்தில் அரசியல் ஜால்ராகளை மட்டும் அடி பின்னி எடுக்கலாம். கொஞ்சம் அங்கங்கே, மானே தேனே அழுகை. எக்ஸ்ட்ரா பிட்டிங்காக “வாலண்டியர்ஸ் உங்களை நீயா நானா மனதாரப்பாராட்டுகிறது” என்று பசப்பு வார்த்தைகள் இதெல்லாம் தான் அன்றைய நிகழ்ச்சியில் வேகவைக்கப்பட்டது.

மாற்றுக்கருத்துகள் எங்கள் டி.ஆர்.பியை ஏற்றுமெனில் அதுபோதும் என்ற மனநிலையோடு ரட்சகர் வேடம்போட்டுக்கொண்டு கேள்விகளை முன்வைத்து, தங்களுக்குச் சாதகமான பதிலை நம் மனதில் பதிய வைப்பதன் மூலம் நம் ஆழமான கருத்துகளுக்கும், ரோசத்திற்கும் ஆண்மைநீக்கம் செய்துவிடும் இந்நிகழ்ச்சியைத் தான் சமூகமாற்றத்திற்கான நிகழ்ச்சிகளில் முதன்மையானதாக நம்பிக்கொண்டிருக்கிறது ஒருபாதித் தலைமுறை.

இன்னும் சொல்லாத நிறைய ஏமாற்றுவேலைகள் இருக்கிறது. தங்கள் நிறுவன ஊழியருக்கே வயதானவர் வேடமிட்டு முன் வரிசையில் உட்கார வைத்து விசமக் கருத்துகளை கலந்துவிடுவது தொடங்கி, ஏகப்பட்ட சித்துவேலைகளைக் கைக்கொண்ட இவ்விளம்பரதாரர்களின் நிகழ்ச்சி ஆனமட்டும் ஒரு ஆள்பிடிக்கும் கும்பலாக மாறிக் கொழுத்து, தங்களுக்கு எதிரான கருத்துகளை ஒழித்துக்கட்டி, இன்றைக்கு மக்களின் சுய அறிவைச் சிதைக்கும் வேலையைக் கச்சிதமாகச் செய்துகொண்டிருக்கிறது என்பதே என்னளவில் உணர்ந்தது.

இங்கே கோபிநாத் ஒரு பொம்மை. அவரை இயக்கும் எல்லாம்வல்ல வலிமையைக் கைக்கொண்ட இயக்குனர் மற்றும் நிர்வாகம் அனைத்திற்கும் கூச்சமே இல்லாமல் தலையாட்டும் பொம்மை. அவரைத்தான் கல்லூரிகளிலும், பல்கலைக்கழகங்களிலும் நீயா நானா புகழ் கோபிநாத் என்று பேனர் கட்டி அழைக்கிறார்கள் என்றபோது சிரிக்காமல் இருக்கமுடியவில்லை.”

அரண்மனை 2 படத்தையாவது தடை செய்யுங்க யுவர் ஆனர்! -ஆயிரம் ஜென்மங்கள் புரொடியூசர் மனு

ரஜினி நடித்த ‘ஆயிரம் ஜென்மங்கள்’ உள்ளிட்ட பல்வேறு படங்களை எடுத்தவர் சினிமா தயாரிப்பாளர் முத்துராமன். இவர், சென்னை மாநகர சிவில் நீதிமன்றத்தில் சில மாதங்களுக்கு முன்பு தாக்கல் செய்த மனுவில், ‘‘நான் தயாரித்த ‘ஆயிரம் ஜென்மங்கள்’ படத்தின் கதையை அப்படியே அச்சு பிசகாமல் காப்பியடித்து ‘அரண்மனை’ என்ற பெயரில் இயக்குநர் சுந்தர்.சி படம் எடுத்தார். என்னுடைய படத்தின் கதை என்பதால் அதை வெளியிட தடை விதிக்க வேண்டும்’’ என கோரியிருந்தார். இந்த வழக்கு பல மாதங்களாக நிலுவையில் இருந்து வருகிறது. இதற்கிடையே, ‘அரண்மனை’ படம் வெளியிடப்பட்டது.

இந்நிலையில் தயாரிப்பாளர் முத்துராமன், சிட்டி சிவில் நீதிமன்றத்தில் மீண்டும் ஒரு மனு தாக்கல் செய்துள்ளார். அதில் “‘அரண்மனை-2’ என்ற பெயரில் ஒரு படத்தை சுந்தர்.சி இயக்கியுள்ளார். விரைவில் அப்படம் திரையிடப்பட உள்ளது. இந்தப் படத்தில் நடிகர் சித்தார்த், நடிகைகள் ஹன்சிகா, த்ரிஷா உள்ளிட்டோர் நடித்துள்ளனர். என்னுடைய ‘ஆயிரம் ஜென்மங்கள்’ படத்தின் கதை அடிப்படையில்தான் இந்தப் படமும் உருவாகியுள்ளது. என் அனுமதி யின்றி இந்தப் படத்தையும் சுந்தர்.சி இயக்கியுள்ளார். எனவே. ‘அரண்மனை-2’ படத்தை திரையிட தடை விதிக்க வேண்டும்” இவ்வாறு மனுவில் கோரியிருந்தார்.

இந்த மனு, நீதிபதி டேனியல் அரிபாபு முன்பு விசாரணைக்கு வந்தது. மனுவை விசாரித்த நீதிபதி, ‘‘இதுதொடர்பாக மனுதாரரும், எதிர் மனுதாரரும் சமரச தீர்வு மையத்துக்கு சென்று பேச்சுவார்த்தை நடத்தி வரும் 28-ம் தேதிக்குள் முடிவு செய்ய வேண்டும்’’ என உத்தரவிட்டு, விசாரணையை 28-ம் தேதிக்கு ஒத்திவைத்தார்.

பரசிட்டமோல் பற்றித் தெரியுமா?

(paracetamol) எனப்படும் மாத்திரை எங்கும் எப்போதும் எவராலும் வாங்கிக் கொள்ளக் கூடிய மாத்திரை. மிகவும் குறைந்த பின்விளைவோடு காய்ச்சலைக் குறைக்கும் மற்றும் வலியினைக் குறைக்கும் வல்லமை இந்த மாத்திரைக்கு இருக்கிறது.

உண்மையில் இந்த மாத்திரை மனிதனுக்குக் கிடைத்த ஒரு வரப் பிரசாதம் கூட.இந்த மாத்திரையை தன் வாழ் நாளில் ஒருமுறையேனும் உட்கொள்ளாத நபர்கள் எவருமே இருக்க சந்தர்ப்பம் இல்லை. இதற்குக் காரணமே இந்த மாத்திரையால் ஏற்படுகிற பின்விளைவுகள் குறைவு என்பதே.இந்த பரசிட்டமோல் சில நாடுகளில் acetaminophen என்று அழைக்கப்படும். paracetamol அல்லது acetaminophen என்பது இந்த மாத்திரையின் விஞ்ஞானப் பெயராகும். வெவ்வேறு நிறுவனங்களால் இந்த மாத்திரை தயாரிக்கப் படும் போது அந்தத் தயாரிப்புக்கு அந்த கம்பனி ஒரு குறிப்பிட்ட பெயரை வைத்துக் கொள்ளும்.

குறிப்பாக இலங்கையை எடுத்துக் கொண்டால் பரசிடமோல் என்றால் விளங்கிக் கொள்பவர்கள் குறைவானவர்களே. ஆனால் பனடோல்(panadol) என்றால் என்னவென்று தெரியாத எவரும் இலங்கையில் இருக்க முடியாது. உண்மையில் பனடோல் என்பது அந்த இந்த பரசிட்டமோல் என்ற மாத்திரையே அதை தயாரிக்கும் ஒரு குறிப்பிட்ட கம்பனி அதன் அந்தத் தயாரிப்புக்கு வைத்துக் கொண்ட brand name பனடோல் என்பதாகும். அதேபோல இன்னுமொரு கம்பனி வைத்துக் கொண்ட பேர் பரசிட்டோல் என்பதாகும்.

அதாவது பரசிட்டோல் அல்லது பனடோல் என்பது வேறு வேறல்ல. ,இரண்டுமே கொண்டிருப்பது பரசிட்டமோல் என்ற பதார்த்தத்தை, ஆனால் வேறு வேறு கம்பனிகளால் தயாரிக்கப் படும் போது அவை வேறு பெயரை வைத்துக் கொள்கின்றன. அவற்றின் விலைகளும் வேறுபடுகின்றன .இதே பல்வேறு கம்பனிகளால் தயாரிக்கப்படும் போது இந்த பரசிட்டமோல் நாட்டுக்கு நாடு வேறுபட்ட பெயர்களோடு மக்களுக்கு அறிமுகமாக இருக்கலாம்.

எந்த ஒரு வைத்தியரின் குறிப்பும் பொது சிறுவர்களுக்கு என்பதால் , இந்த மாத்திரை அடிக்கடி தற்கொலை முயற்சிகளுக்கு இலகுவாக் பயன் படுத்தப் படுகிறது.பரிந்துரைக்கப் பட்ட அளவுகளிலே பாவிக்கப் பட்டால் இந்த மாத்திரையால் ஏற்படுகின்ற பக்க விளைவுகள் சொற்பமே.இருந்தாலும் அளவுக்கு அதிகமாக பாவிக்கப் படும் போது இதுவும் விஷமாகலாம்.குறிப்பாக தற்கொலை செய்ய எண்ணி இந்த மாத்திரைய அளவுக்கு அதிகமாக ஒருவர் எடுத்துக் கொண்டால் முதல் நாளில் அவருக்கு எதுவும் நடைபெறாது ஆனால் தொடர்ந்து வரும் நாட்களில் அவரின் ஈரல் பழுதடைந்து முற்று முழுதாக செயலிழக்கலாம் .எனவே ஒருவர் தற்கொலை முயற்சியாக இந்த மாத்திரையை அதிகம் எடுத்துக் கொண்டால் அவரை உடனடியாக வைத்திய சாலைக்கு எடுத்துச் சென்று ஈரல் பாதிப்படையாமல் தடுக்க மருந்துகள் கொடுக்கப் பட வேண்டும்.

அதே போல நோய்கள் ஏற்படும் போதும் இது அளவுக்கதிகமாக எடுக்கப் படுமானால் அதுவும் இந்தப் பாதிப்பை ஏற்படுத்தலாம். குறிப்பாக சிறு பிள்ளைகளுக்கு அவர்களின் நிறைகளுக்கு ஏற்பவே இந்த மாத்திரை கொடுக்கப் பட வேண்டும். பெரியவர்கள் உட் கொள்ளும் அளவில் சிறுவர்களுக்கு கொடுக்கப்பட்டால் அவர்களுக்கும் ஈரல் பாதிப்பு ஏற்படலாம்.

ஆகவே ஒவ்வொருவரும் தாங்கள் எத்தனை மாத்திரை பாவிக்க வேண்டும், தங்கள் பிள்ளைகள் எத்தனை பாவிக்க வேண்டும் என்பதை அறிந்திருப்பது முக்கியமாகும்.மாத்திரைகளின் அளவுகள் வயதை வைத்தல்ல உடலின் நிறையை வைத்தே தீர்மானிக்கப்படுகின்றது.எவ்வாறு பரசிட்டமோலின் அளவு தீர்மானிக்கப் படுகின்றது?ஒரு கிலோ உடல் நிறைக்கு தேவையான பரசிட்டமோலின் அளவு 15mgஅதாவது உங்கள் உடல் நிறை 65kg என்றால் உங்களுக்குத் தேவையான பரசிட்டமோலின் அளவு 975mg அதாவது உங்கள் நிறையை 15 யால் பெருக்கிக் கொள்ளுங்கள்.

பரசிட்டமோல் மாத்திரைகள் 500mg என்ற அளவிலேயே கிடைக்கும் ஆகவே நீங்கள் அண்ணளவாக இரண்டு மாத்திரைகளை எடுத்துக் கொள்ளலாம்.உங்கள் நிறை 45kg என்றால் உங்களுக்குத் தேவையான அளவு 675mg. நீங்கள் ஒன்றரை மாத்திரைகளை(750mg) .அல்லது ஒரு மாத்திரையை உட்கொண்டால் போதுமானது .(மிகவும் சரியான(accurate) அளவிலே எடுக்க வேண்டியதில்லை )உங்கள் நிறை 35kg என்றால் தேவையான அளவு 425mgஅதாவது அளவாக ஒரு மாத்திரை(500mg0 எடுத்துக் கொண்டால் போதுமானது.ஒரு நேரத்தில் எடுத்துக் கொள்ள வேண்டிய அளவாகும். இந்த அளவை ஒரு நாளைக்கு நான்கு முறை நீங்கள் எடுக்கலாம்.

நான் மேலே சொன்னதெல்லாம் மாத்திரைகளை பற்றி ஆனால் சிறுவர்களுக்கோ பரசிட்டமோல் பாணி மருந்தாகவே கொடுக்கப் படுகிறது.முந்திய இடுகைகளில் குறிப்பிட்டதுபோல பரசிட்டமொளின் அளவு உடல் நிறையை வைத்தே தீர்மானிக்கப் படுகின்றது. அதாவது உங்கள் குழந்தையின் நிறை 10kg என்றால் உங்கள் குழந்தைக்குத் தேவையான அளவு 150mg என்பதாகும்.(உடல் நிறையை 15 யால் பெருக்கிக் கொள்ளுங்கள்)இந்த நிறையை கொண்ட பாணி மருந்தை எப்படிக் கணிப்பது?5ml பாணி மருந்தில் இருக்கும் பரசிட்டமோளின் அளவு125mg ஆகும். அதாவது 10kg உள்ள குழந்தைக்கு 5ml பாணி மருந்து ஒரு வேளைக்கு கொடுக்கப்பட்டால் போதுமாகும்.

இந்த அளவு ஒரு நாளைக்கு நான்கு முறை கொடுக்கப்படலாம்.அதேபோல் உங்கள் குழந்தையின் நிறை 17kg என்றால் தேவையான பரசிட்டமோளின் அளவு 255mg ஆகும்( நிறையை 15 யால் பெருக்கிக் கொள்ளுங்கள்)இந்த 255mg என்ற அளவை கொடுப்பதற்கு தேவையான பாணியின் அளவு 10ml( அதாவது 10ml பாணியில் 250mg பரசிட்டமோல் இருக்கும்.மிகவும் சரியாக 255mg தான் கொடுக்க வேண்டுமில்லை ).

இவ்வாறு கணிப்பது கடினம் என்று நினைக்கும் பெற்றோர்கள், இலகுவாக உங்கள் வைத்தியரிடம் சென்று உங்கள் குழந்தைக்கு தேவையான பாணி மருந்தின் அளவை அறிந்து வைத்துக் கொள்வது முக்கியமாகும். ஏனென்றால் அளவுக்கு அதிகமாக கொடுக்கப் படும் பரசிட்டமோலே உங்கள் பிள்ளையின் உயிரைப் பறித்து விடும்.

பனி தேசத்தில் ஓர் உணர்ச்சி போராட்டம்- The Revenant ஒரு பார்வை

ஹாலிவுட் ரசிகர்களையும் தாண்டி ஒவ்வொரு இந்திய சினிமா ரசிகனையும் கவர்ந்து வருகின்றது இந்த The Revenant படம். இத்தனைக்கும் ஒரே காரணம் இந்த முறையாவது Leonardo DiCaprio ஆஸ்கர் கிடைக்க வேண்டும் என்ற ஏக்கம் தான்.

ஆனால், ஆஸ்கர் குழு இதை ஒரு விளையாட்டாகவே இவரை ஆஸ்கருக்கு வர வைத்து கண்ணீருடன் தான் திருப்பி அனுப்புகின்றது. இந்த முறை கண்டிப்பாக ஆஸ்கர் பெற்று விட வேண்டும் என்ற வைராக்கியத்துடன் இதற்கு மேல் என்னால் நடிக்கவே முடியாது என்ற அளவிற்கு அசத்தியுள்ளார் Leonardo DiCaprio.

இப்படத்தை Birdman படத்திற்காக ஆஸ்கர் விருது பெற்ற Alejandro González Iñárritu தான் இயக்கியுள்ளார். இவர் இந்த முறையும் சிறந்த இயக்குனருக்கான ஆஸ்கர் பிரிவில் இவர் நாமினேட் ஆகியிருப்பது குறிப்பிடத்தக்கது.

பனி தேசம், மலை வாழ் மக்கள், தன் மகனை கொன்றவனை கொல்ல உயிரை கையில் பிடித்துக்கொண்டு பழி உணர்ச்சியோடு போராடும் ஹீரோ என டெம்ப்ளேட் கதை தான் என்றாலும், ஒவ்வொரு காட்சி மேக்கிங்கிளும் இயக்குனர் மிரட்டியிருக்கிறார்.

வன்முறை விரும்பாதவர்கள் கண்டிப்பாக இப்படத்தை தவிர்க்கலாம், அதிலும் ஹீரோ கரடியுடன் மோதும் காட்சி, படம் பார்ப்பவர் அனைவரையும் பதற வைக்கின்றது, அத்தனை யதார்த்தமாக அந்த காட்சி அமைந்துள்ளது. அத்தனை ஆபத்துக்களை கடந்த ஹீரோ படத்தின் பாதி நேரம் ஊர்ந்து ஊர்ந்து தான் செல்கிறார்.

அவரது குரலும் படம் முழுவதும் விஸ்வரூபம் உமர் பாய் போன்று உள்ளது, Leonardo DiCaprio தன் திரைப்பயணத்தில் நடிப்பின் உச்சத்தை எட்டியுள்ளார், தன் உடல் முழுவதும் காயங்களை வைத்துக்கொண்டு, தன் மகனை கொன்றவனை பழி வாங்க வேண்டும் என்ற கோபத்தை முகத்தில் காட்டும் போது நீ நடிகண்டா என்று கூற வைக்கின்றது.

குளிருக்காக இறந்த குதிரையில் உடலில் படுத்து உறங்குவது, கிளைமேக்ஸில் வில்லனை பழி வாங்க சாமர்த்தியமாக யோசிப்பது, என பல இடங்களில் கைத்தட்டவும், கண் கலங்கவும் வைக்கின்றார். இதுக்கும் ஆஸ்கர் கிடைக்கவில்லை என்றால், நீ பேசாம இந்தியா வந்துடு Leonardo DiCaprio என்று தான் கூற வேண்டும்.

படத்தில் மிக முக்கியமாக கவர்ந்தது அத்தனை வன்முறை காட்சிகளிலும் அழகாக நம் கண்களுக்கு அந்த பனி பிரதேசத்தை விருந்து வைத்த Emmanuel Lubezkiயின் ஒளிப்பதிவு தான். இவர் இதுவரை 2 ஆஸ்கர் விருதுகளை வென்றுள்ளார், அதேபோல் கண்டிப்பாக இந்த படத்திற்கும் கிடைக்கும் என எதிர்ப்பார்க்கப்படுகின்றது.

இந்த பனிதேசத்தில் நடக்கும் உணர்ச்சிப்போராட்டத்தை உலக சினிமாவை விரும்பும் ஒவ்வொரு ரசிகனும் கண்டிப்பாக பார்க்க வேண்டும்.

பாரதிராஜா என்ற குலசாமி!

அவரை ஒரு மலேரியா இன்ஸ்பெக்டராக்கி வைத்திருந்தது அல்லிநகரம்! சென்னைக்கு வராமல் கொசு மருந்தும், குடிசைகளுமாக அவர் ஊரை சுற்றி சுற்றி வந்திருந்தாரென்றால் இந்நேரம் அந்த ஊர் கொசுக்கள் கூட மயில்களாகவோ, மைனாக்களாகவோ மாறியிருந்திருக்கும். ஏனென்றால், அந்த மலேரியா இன்ஸ்பெக்டரின் மனசு முழுக்க நிரம்பியிருந்தது ‘புதுமை செய்’ என்ற ஒரே கட்டளைதான்!


அந்த காலத்து சென்னையில் அடைக்கலமாகிய யாருக்கும் கைகொடுக்கிற முதல் தொழில் ஓட்டல் சர்வராக இருக்கும். அங்கும் கூட தன் அந்தஸ்தை உயர்த்திக் கொண்டார் அவர். பெட்ரோல் பங்க்-கில் எண்ணை நிரப்புகிற வேலை! அன்று அவர் கார்களுக்கு பெட்ரோல் போட்டார். அதற்கப்புறம் அவரிடம் டேங்கை திறந்து கொண்டு நின்றது கலையுலகம்! இப்போதும் அவர் நிரப்பிய பெட்ரோலில்தான் ஓடுகிறது அநேக இயக்குனர்களின் பயணம்! ஒரு சரித்திரம் தன் பெயரை நியூமராலஜிபடி மாற்றிக் கொள்ள ஆசைப்பட்டது. அதன் புதுப்பெயர்தான் ‘பாரதிராஜா’!

80 களில் இளசுகளாக இருந்தவர்களெல்லாம் இறைவனால் ஆசிர்வதிக்கப்பட்டவர்கள். 16 வயதினிலே, கிழக்கே போகும் ரயில், சிகப்பு ரோஜாக்கள், புதிய வார்ப்புகள், நிறம் மாறாத பூக்கள், என்று தொடர் ஹிட் கொடுத்தவர் பாரதிராஜா. ஒவ்வொரு படமும் குறைந்தது 200 நாட்கள். அதிக பட்சம் ஒரு வருஷம் என்று ஓடியவை. இப்போதும் அல்லி நகரத்தில் ஒரு அழகான அரச மரம் இருக்கிறது. அதன் அடிமரத்தை ஐம்பது பேர் சுற்றி வளைத்தாலும் கைகளுக்குள் அடங்காது. அதன் கிளைகளும் இலைகளும் இன்னும் இன்னும் என்று அந்த ஊரையே வளைத்து கூரையாக படர்ந்திருக்கிறது. ஒருவேளை அதற்கும் ஒரு பெயர் ஆசை வந்திருந்தால் ‘பாரதிராஜா’ என்று வைத்துக் கொண்டிருக்குமோ என்னவோ?

கிட்டதட்ட அப்படியொரு அரச மரமாகதான் கிளைவிட்டு வளர்ந்திருக்கிறது பாரதிராஜாவின் மாணவர் கூட்டம். பாலகுரு, நிவாஸ், கே.பாக்யராஜ், மணிவண்ணன், மனோபாலா, மனோஜ்குமார், கலைமணி, ஆர்.செல்வராஜ், ரத்னகுமார், சித்ரா லட்சுமணன், ‘சின்னத்திரை’ கவிதாபாரதி என்று நீள்கிறது அவரது நேரடி சிஷ்யர்களின் பட்டியல். அதற்கப்புறம் அது அவரது சிஷ்யர்களின் சிஷ்யர்கள் என்று வளர்ந்து பாண்டியராஜன், பார்த்திபன், விக்ரமன், கே.எஸ்.ரவிகுமார், சேரன், கரு.பழனியப்பன், பசங்க பாண்டிராஜ் வரைக்கும் வந்து நின்றிருக்கிறது. அது இன்னும் வளரும்.

சினிமாவை விட சுவாரஸ்யமானவை அந்த சினிமா உருவான பின்னணி. 16 வயதினிலே திரைக்கு வந்து கிட்டதட்ட 38 வருஷங்கள் ஆகிவிட்டது. இப்போதும் கூட, 16 வயதினிலே உருவான கதை பற்றி கேள்விப்படும்போது ஒரு வித பரவச மனநிலைக்கு போகிறது மனசு. இந்த கதையை முதலில் என்.எப்.டி.சிக்குதான் படமாக்குவதாக இருந்தார் பாரதிராஜா. அதில் டாக்டராக நடிக்க இருந்தவர் யார் தெரியுமா? நம்ம பின்னணி பாடகர் எஸ்.பி.பாலசுப்ரமணியம்தான். என்ன காரணத்தாலோ அந்த முயற்சி தள்ளி தள்ளிப் போனது. ஒரு கட்டத்தில் மனம் வெறுத்து போயிருந்தபோதுதான் எஸ்.ஏ.ராஜ்கண்ணு அப்படத்தை தயாரிக்க முன் வந்தார். ஆனால் டாக்டர் எஸ்.பி.பி இல்லை.

இந்த படத்தில் நடிக்காமல் போனதால் எஸ்.பி.பிக்கு பெரிய வருத்தம். அவரை எப்படி தன் படத்தில் பாட அழைப்பது என்பதில் பாரதிராஜாவுக்கும் தயக்கம். ஒருவழியாக பாரதிராஜாவின் ஐந்தாவது படத்தில்தான் பாட வந்தார் அவர். அதுவும் பாடல் வரிகள் எப்படி…? ‘முதன் முதலாக காதல் டூயட் பாட வந்தேனே’ என்று!

எஸ்.பி.பி நடிக்க வேண்டிய அந்த டாக்டர் வேடத்தில் சத்ய ஜித் எப்படி வந்தார் ? அவர் லேபில் பிராசசர் வேலை பார்த்துக் கொண்டிருந்தவர். இந்த படத்தை ஆர்.ஓ பிலிமில் எடுத்த பாரதிராஜா, நம்ம படத்தை இன்னும் நல்லா குவாலிடியா கொடுப்பாரே என்றுதான் சத்யஜித்தை உள்ளே இழுத்தாராம்.

அப்போது கமல்ஹாசன் பெரிய ஹீரோ. சில படங்களில் நடித்துவிட்டார். அதனால் அவருக்கு ஒரு சம்பளம் பேசினார்கள். ரஜினிக்கு பெரிய சம்பளம் இல்லை. மிகமிக சொற்பம். ஷுட்டிங் எடுக்கப்பட்ட கிராமத்தில் ரஜினிக்கு ஒரு அறை கூட ஒதுக்கிக் கொடுக்கவில்லை படக்குழு. அவர் எங்கு தங்கினார், யார் வீட்டில் சாப்பிட்டார் என்பது பாரதிராஜாவுக்கும் தெரியாது. எப்படியோ அவர் படப்பிடிப்புக்கு வருவார். கடந்த சில மாதங்களுக்கு முன்பு ஒரு விழாவில் இந்த விஷயத்தை சொன்ன பாரதிராஜா, “இப்பவும் நான் ரஜினிக்கு சம்பள பாக்கி தர வேண்டியிருக்கிறது” என்றார் தமாஷாக.

தமிழ்சினிமாவின் முதல் ‘மாற்று சினிமா’ என்று கூட 16 வயதினிலே படத்தை கொண்டாடலாம். படத்தில் நடித்த நடிகர் நடிகைகளின் பெயர்கள் எதுவும் டைட்டிலில் வராது. சப்பாணி, மயிலு, பரட்டை, குருவம்மா என்றுதான் பெயர்கள் போடப்பட்டது.

தமிழ்சினிமாவில் சாதித்த ஒவ்வொரு படத்திற்கு பின்னாலும் ஒரு ரத்த சரித்திரம் இருக்கும். சேதுவில் பாலாவுக்கு இருந்த மாதிரி! இன்றளவும் அந்த அவஸ்தை தொடர்கிறது. ‘தனி ஒருவன்’ படத்தின் ரிலீசுக்கு முன்பு, அப்படத்தின் இயக்குனர் ராஜா பட்ஜெட்டை அதிகப்படுத்திவிட்டதாக கோபப்பட்ட தயாரிப்பு நிறுவனம், செக்யூரிடி டெபாசிட்டாக அவரது வீட்டை எழுதிக் கேட்டதாக கூட ஒரு செய்தி உலவுகிறது கோடம்பாக்கத்தில். நல்லவேளை… இந்தளவுக்கு இல்லை அப்போதைய நிலைமை. தயாரிப்பு தரப்புக்கும் பாரதிராஜாவுக்கும் ஏதோ சிக்கல். சென்னையிலிருந்து வர வேண்டிய பிலிம் ரோல் வந்து சேரவில்லை.

படப்பிடிப்பை ஒரு நாள் நிறுத்தினால் கூட, நடிகர் நடிகைகள் நம்பிக்கை இழந்துவிடுவார்களே, என்ன செய்வது? யாரிடமும் எதுவும் சொல்லவில்லை பாரதிராஜா. அவருக்கும் கேமிராமேனுக்கும் மட்டுமே தெரிந்த ரகசியம் அது. வழக்கம்போல படப்பிடிப்பு நடந்தது. பிலிம் ரோல் இல்லாமலே! கமலும் ஸ்ரீதேவியும் நடித்துக் கொண்டிருந்தார்கள். மாலை படப்பிடிப்பு முடிந்தது. பாரதிராஜாவை அழைத்தார் கமல். “கேமிராவுல பிலிம் ரோல் இல்லேன்னு எனக்கும் தெரியும். இனிமே இப்படி நடக்காம பார்த்துக்கங்க” என்று கூறினார். நல்லவேளை… மறுநாளே பிரச்சனை சரி செய்யப்பட்டு படப்பிடிப்பு நடந்திருக்கிறது.

இந்த படத்தின் ஆச்சர்யங்களில் இதுவும் ஒன்று. பல வருஷங்களாக மனசுக்குள் சுமந்த அந்த கதைக்கு வசனம் எழுதியவர் கலைமணி. அவருக்கு உதவியவர் கே.பாக்யராஜ். எல்லாக் கஷ்டங்களையும் கடந்து ஷுட்டிங்குக்கு தயாராகிவிட்டார்கள். பார்த்தால், ஸ்கிரிப்ட் எழுதி வைத்திருந்த அந்த நோட்டுப்புத்தகம் தொலைந்து போய்விட்டது. ஆபிசையே புரட்டி போட்டு தேடியாகிவிட்டது. பல மாதங்களாக உழைத்து எழுதிய வசனங்கள்… என்ன செய்வது? வசன உதவியாளராக இருந்த கே.பாக்யராஜ், “சார்… எனக்கு ஞாபகம் இருக்கு. அப்படியே நான் எழுதுறேன்” என்று உட்கார்ந்து எழுத ஆரம்பித்துவிட்டார். பாதி ஷுட்டிங் போய் கொண்டிருக்கும் போது புத்தகம் திரும்பக் கிடைக்க, பக்கங்களை புரட்டினால் ஆச்சர்யம். அதில் எழுதியிருந்ததை வரி மாறாமல் எழுதியிருந்தாராம் பாக்யராஜ்.

இப்பவும் பாரதிராஜாவிடமிருந்து போன் வந்தால், எழுந்து நின்று பேசுகிற வழக்கம் இருக்கிறது பாக்யராஜுக்கு! அந்தளவுக்கு குரு மரியாதை.

“16 வயதினிலே படத்திற்கு முன்பு வரை எங்கள் ஊர் தியேட்டர்களில் சினிமா வந்தது. 16 வயதினிலே ரிலீசுக்கு பிறகுதான் எங்கள் ஊர் சினிமாவில் வந்தது!” கவிப்பேரசு வைரமுத்துவின் பாராட்டு வரிகள்தான் இவை. 16 வயதினிலே படத்திற்கு முன்பே அன்னக்கிளி மாதிரியான கிராமத்து படங்கள் வந்துவிட்டன. “விவசாயி… விவசாயீய்ய்” என்று புரட்சித்தலைவர் எம்ஜிஆர் பாடினாரே, வயலில் டிராக்டர் ஓட்டாமல் செட்டுக்குள்ளா ஓட்டினார்? ஆக இவருக்கு முன்பே சினிமாவில் கிராமம் வந்துவிட்டது. ஆனால் பாரதிராஜா மட்டும் எப்படி கிராமத்து ராஜாவானார்? அவர் உருவாக்கிய பாத்திரங்களின் மூலமாகதான்! அவர் படங்களில் ஒப்பனையில்லாத கிராமத்து முகங்கள் வந்தன. கிராமத்து அப்பத்தாவையெல்லாம் அப்படியே காட்டியது அவர்தான்!

பாரதிராஜாவின் இரண்டாவது படம் ‘கிழக்கே போகும் ரயில்’. தண்டவாளம் ஒருபோதும் இணைவதில்லை. ஆனால் அதன் மேல் ஓடும் ரயில் எப்படி ஒரு காதல் ஜோடியை சேர்த்து வைத்தது என்பதுதான் கதை. படப்பிடிப்புக்கு கிளம்பிப் போன பின்பு, யோசித்து சேர்க்கப்பட்ட காட்சிகள்தான் தமிழ்நாட்டையே ஒரு புரட்டு புரட்டிப் போட்டது. முக்கியமாக மழையை நிறுத்த ராதிகா நிர்வாணமாக ஊருக்குள் நடந்து வரும் அந்த காட்சி. 16 வயதினிலேவின் ஓட்டத்தை விடவும், பலமான ஓட்டம் கிழக்கே போகும் ரயிலுக்கு. அந்த படத்தில் அறிமுகமானவர்தான் ராதிகா.

பாரதிராஜா தனது பட ஹீரோயின்களின் கன்னத்தில் அறைவார் என்பதெல்லாம் ராதிகாவின் என்ட்ரிக்கு பின்தான். ஒரு காட்சியில் ராதிகாவை அழச்சொன்னாராம் இவர். “அழறதா? எப்படின்னு தெரியாதே” என்று அவர் சிரிக்க, விழுந்தது ஒன்று கன்னத்தில். அவர் ஓவென்று அழ, அதையே படம் பிடித்திருக்கிறார் பாரதிராஜா.

16 வயதினிலே படத்தையே பிரபல தயாரிப்பாளர் கே.ஆர்.ஜிதான் தயாரிப்பதாக இருந்ததாம். எப்போதும் அவரை முதலாளி என்றுதான் அழைப்பார் பாரதிராஜாவும். அதற்கப்புறம் எப்படியோ ராஜ்கண்ணு வந்தார். ராஜாவின் தொடர் ஹிட்டுக்கு பின் ‘சிகப்பு ரோஜாக்கள்’ படத்தை கே.ஆர்.ஜி தயாரித்தார். சொன்னால் ஆச்சர்யப்படுவீர்கள். அந்த படத்தில் நடிக்க முதலில் அழைக்கப்பட்டவர்கள் முத்துராமனும், இன்றைய முதல்வர் ஜெயலலிதாவும்! இதற்காக ஜெயலலிதாவிடம் கதை கூட சொல்விட்டு வந்தாராம் பாரதிராஜா.

“அப்போது மட்டுமில்ல…இப்பவும் எனக்கு சம்பளம் கேட்க தெரியாது. அதுல பாக்யராஜ் ரொம்ப விவரம். முதல் படம் பெரிய ஹிட். ரெண்டாவது படம் சூப்பர் ஹிட். கோடம்பாக்கமே நம்ம வீட்டு வாசல்லதான் நிற்கப் போவுன்னு நினைச்சுகிட்டு இருக்கேன். ஆனால் ஒரு தயாரிப்பாளர் வரல. ஒருவேளை நமக்கு படம் கிடைக்காதோ? வர்ற தயாரிப்பாளரை விட்றக் கூடாதுன்னு இருந்தேன். அப்பதான் முதலாளி கே.ஆர்.ஜிகிட்டேயிருந்து அழைப்பு. போனேன். சிகப்பு ரோஜாக்கள் கதையை சொன்னேன். அவர் ஒரு சம்பளம் சொன்னார். சரின்னு சொல்லிட்டேன். ஒரு அட்வான்சை வாங்கிட்டு அப்போ நாங்க தங்கி டிஸ்கஷன் பண்ணிட்டு இருந்த ஓட்டலுக்கு வந்துட்டோம். பாக்யராஜ் கத்துறான்”.

“ஏன் இந்த சம்பளத்துக்கு ஒத்துகிட்டீங்க?ன்னு கேட்கிறான். சரி விட்றான்னா விட மாட்டேங்குறான். நான் போய் பேசுறேன். நீங்க சும்மாயிருங்கன்னு கிளம்பி போயிட்டான். போய் என்ன சொன்னான்னு தெரியல. எங்க டைரக்டர் வீட்டு வாசல்ல அவர் நிற்கிறார் இவர் நிற்கிறார். எல்லாத்தையும் விட்டுட்டுதான் உங்களுக்கு படம் பண்றார்னு எதையாவது சொல்லியிருப்பான் போலிருக்கு. நான் பேசினதை விட நாலு மடங்கு சம்பளம் அதிகமா பேசி, கூடவே அட்வான்ஸ் பணம் இன்னும் கொஞ்சம் சேர்த்து வாங்கிட்டு வந்துட்டான்!” இது பாரதிராஜாவே ஒரு விழாவில் பேசிய விஷயம்.

சிகப்பு ரோஜாக்கள் படத்தை கே.ஆர்.ஜிதான் தயாரித்தார். அது எந்தளவுக்கு ஹிட் என்றால், இதே படத்தை இந்தியில் ரீமேக் செய்தார்கள். சிகப்பு ரோஜாக்கள் படமாக்கப்பட்ட பங்களாதான் வேணும் என்று (சென்ட்டிமென்ட்?) சென்னைக்கு வந்து அதே ரெட் ரோஸ் பங்களாவில்தான் படமாக்கப்பட்டதாம் இந்தி வெர்ஷன்.

தன்னை நம்புகிற அளவுக்கு, தன் உதவியாளர்களையும் நம்பியவர் பாரதிராஜா. இவருக்கும் மணிவண்ணனுக்கும் இடையே மனக்கசப்பு என்றெல்லாம் செய்திகள் கசிந்தபோது ஒரு பண்பலையில் பேட்டியளித்தார் மணிவண்ணன். அப்போது அவர் சொன்னதை கேட்டால், “எவ்வளவு பெரிய மனுஷன்!” என்று பாரதிராஜாவை கொண்டாடும் மனசு. தொடர்ச்சியாக ஐந்து ஹிட்டுகளை கொடுத்த ராஜா, ஆறாவதாக நிழல்கள் படத்தை இயக்குகிறார். கதை மணிவண்ணன். அதுவரை ஆர்.செல்வராஜ், கலைமணி என்று போய் கொண்டிருந்தவர், ஏன் மணிவண்ணனை தேர்ந்தெடுக்க வேண்டும்?

சுற்றியுள்ள எல்லாருக்கும் கடும் எரிச்சல். வேண்டாம் என்றால் கேட்கவா போகிறார் டைரக்டர்? விட்டுவிட்டார்கள். எல்லாரும் ஆசைப்பட்ட மாதிரி படம் படு பிளாப். அது கூட பிரச்சனையில்லை. வெற்றி வேந்தனான பாரதிராஜாவுக்கு அதுதான் முதல் தோல்வி. கதவை சாத்திக் கொண்டு கதறியழ ஆரம்பித்துவிட்டார் மணிவண்ணன். இரண்டு மூன்று நாட்கள் அப்படியே போனது. இனி ஒழிந்தார் மணிவண்ணன் என்று சிலருக்கு சந்தோஷம். ஆனால் படம் வெளியாகி சில நாட்கள் கழித்து மணிவண்ணனை அழைத்தாராம் பாரதிராஜா. “டேய்… நான் உன்னை நம்புறேன். உன்னால் ஒரு சிறப்பான கதையை எழுத முடியும். என் அடுத்த படமும் உன்னோடுதான்.. உடனே ஒரு கதை எழுதிக் கொடு.”

யாருக்கு வரும் இந்த துணிச்சல்? அதற்கப்புறம் மணிவண்ணன் கதை வசனத்தில் உருவான படம்தான் ‘அலைகள் ஓய்வதில்லை’. அந்தப்படத்தின் வெற்றி தமிழ்சினிமாவின் கலெக்ஷன் வரலாற்றில் ஒரு புதையலின் குவியல்தான்! இந்த படத்திலும் கூட பல வியப்புகள் உண்டு.

முதலில் எழுதப்பட்ட கதையில் ராதா முஸ்லீம் பெண். கார்த்திக் ஐயர் வீட்டுப் பையன். இருவரும் காதலிப்பது போல கதை. ட்யூன் போட்ட இளையராஜாவும், பாடல் வரிகள் எழுதிய வைரமுத்துவும் கூட ராதா முஸ்லீம் என்பதாகவே கற்பனை செய்து தங்கள் வேலையை முடித்துவிட்டார்கள். ஆயிரம் தாமரை மொட்டுகளே பாடல் வரிகளில் இப்பவும் ஒரு வரி மாறாமல் இருக்கிறது. ‘கோவிலில் காதல் தொழுகை…’ என்றிருக்கும் அது. படப்பிடிப்புக்கு போகும்போதுதான் முஸ்லீம் வேண்டாம். அது கிறிஸ்தவராக இருக்கட்டும் என்று மாற்றினாராம் பாரதிராஜா. ஏன்? சிலுவையும் பூணூலையும் அறுப்பதுதான் க்ளைமாக்ஸ். கிறிஸ்துவ பெண்ணாக இருந்தால், அறுக்கும்போது எளிதாக புரியும். முஸ்லீம் என்றால் அது முடியாதே? என்பதால்தான்!

தமிழ்சினிமாவில் டெக்னிகல் புரட்சியை செய்தவரும் பாரதிராஜாதான். கேமிரா கோணம் மெல்ல மெல்ல குளோஸ் அப்பை நோக்கிப் போகும்போது, அந்த ஜும் ஷாட்டை எந்த எடிட்டரும் நடுவில் கட் பண்ணவே மாட்டார்களாம். இது காலகாலமாக பின்பற்றப்பட்டு வரும் வழக்கம். முதல் முறையாக ‘அலைகள் ஓய்வதில்லை’ படத்தில் அப்படி கேமிரா குளோஸ் அப்பில் போகும்போதே கட் பண்ணி நடுவில் பறவைகள் பறப்பது போல காட்ட வைத்தவர் பாரதிராஜாதான். எடிட்டர் ராஜகோபால், “சார்…. அது வழக்கமில்ல”. என்று கூறிய போதும், “நான் சொல்றேன். கட் பண்ணுங்க” என்று புதுமை படைத்தவர் அவர்.

இதே படத்தில் இன்னொரு ஷாட்! ஒரு மரத்திற்கு அருகில் ராதாவும் கார்த்தியும் நிற்க, கேமிரா அவர்களை சுற்றி வரும். அப்போதெல்லாம் ரவுண்ட் டிராலி இல்லவே இல்லை. ஆனால் இப்படியொரு கோணத்தில் படம் எடுத்தால் எப்படியிருக்கும் என்று முடிவு செய்துவிட்டார் டைரக்டர். ஒரு கருப்பு போர்வையில் கேமிராவை வைத்து அப்படியே அந்த போர்வையை ஆடாமல் அசையாமல் பிடித்தபடி இவர்கள் சுற்றி வந்துதான் அந்த காட்சியை படம் எடுத்தார்களாம். இப்படியொரு ஷாட் எப்படி என்று எல்லாரும் மண்டையை பிய்த்துக் கொண்டது தனிக்கதை. இந்த யுக்தியை தெரிந்து கொள்ள வேண்டும் என்பதற்காகவே பிரபல தெலுங்கு இயக்குனர் கே.ராகவேந்திரராவ், தன் படத்தில் ராதாவை நடிக்க வைத்து கேட்டுத் தெரிந்து கொண்டதாக கூறுகிறது சினிமாவுலகம்.

பாரதிராஜாவின் படைப்புகளில் பல படங்கள் தமிழ்சினிமாவின் பொக்கிஷம். அதிலும் முதல் மரியாதை…, சந்தேகமேயில்லை. முதல் மரியாதையேதான்! அந்த கதையை நடிகர் திலகம் சிவாஜியிடம் கூறிவிட்டு வந்துவிட்டார் டைரக்டர். பொதுவாக சிவாஜியிடம் கதையை சொல்லிவிட்டால் போதும். மற்றதை அவர் பார்த்துக் கொள்வார். இதுதான்… இப்படிதான் என்று சொல்வதற்கு பாரதிராஜாவுக்கும் தயக்கம். முதல்நாள் ஷுட்டிங். அவரை பார்த்த பாரதிராஜாவுக்கு பேரதிர்ச்சி. ஏராளமான மேக்கப். பிரமாதமான விக். பட்டு வேட்டி. காலில் ராஜபார்ட் காலத்து ஷு என்று பிரமாதமாக வந்திறங்கிவிட்டார் அவர்.

எதையும் காட்டிக் கொள்ளவில்லை பாரதிராஜா. நடந்து வாங்க. அப்படியே அந்த பக்கம் போங்க. நில்லுங்க. சிரிங்க. ஷாக் கொடுங்க என்று சொல்லி எடுத்துக் கொண்டேயிருந்தார். ஒரு ஷாட்டுக்கும் ரீ டேக் இல்லை. ஆனால் சிவாஜி சாதாரண நடிகரா? கண்டுபிடித்துவிட்டார். மறுநாள் வீட்டுக்கு வரச்சொன்னவர், “என்ன பிரச்சனை உனக்கு? எங்கிட்ட தயங்காம சொல்லு. சாண்டோ காலத்துலேர்ந்து நான் டைரக்டர் சொல்றதைதான் கேட்டு நடிக்கிறேன். ஒரு கட்டத்துல அவங்களா சொல்றதை நிறுத்திட்டாங்க. நான் எனக்கு தெரிஞ்சதை பண்ண ஆரம்பிச்சுட்டேன். உனக்கு எந்த மாதிரி வேணும் சொல்லு” என்று கேட்க, படக்கென்று உடைத்தாராம் பாரதிராஜா.

“இந்த படத்தில் உங்களுக்கு மேக்கப் இல்ல. உங்க ஒரிஜனல் ஹேர்தான். விக் இல்ல. முக்கியமா நீங்க எல்லா படத்திலேயும் புருவத்தை உயர்த்துவீங்க இல்லையா? அதை இந்த படத்தில் செய்யவே வேணாம். அவ்வளவுதான்”. அதற்கப்புறம் ஷுட்டிங்கில், “பாரதி… சரியா நடிச்சேனா? புருவத்தை தூக்கிடலையே” என்று குழந்தை போல அவர் கேட்க, ஒரு யானையை தன் கைக்குள் வைத்துக் கொண்ட பாகன் போலானார் பாரதிராஜா. அந்த படம்தான் பிற்பாடு தேசிய விருதுகளை அள்ளிக் கொண்டு வந்தது.

குடும்பத்தின் மீது தீராத அன்பு கொண்டவர் பாரதிராஜா. பெரிய உதாரணம் தேவையில்லை. அவரது பெயரில் வரும் பாரதி தங்கையின் பெயர். ராஜா அவரது தம்பி ஜெயராஜில் வரும் பாதி! எவ்வளவுதான் குடும்பத்தின் மீது அன்பு இருந்தாலும், பிணக்கும் குடும்ப சண்டை சச்சரவுகளும் எல்லா குடும்பத்திலும் இருப்பதுதானே? இந்த மகா கலைஞனுக்கும் அப்படியொரு சோதனை வந்தது. நல்லவேளை நீடிக்கவில்லை அது.

‘நிறம்மாறாத பூக்கள்’ ஷுட்டிங்! ‘ஆயிரம் மலர்களே… மலருங்கள்…’ என்று முதல் வரியை எடுத்துக் கொண்டிருக்கிறார் டைரக்டர். திடீரென சலசலப்பு. பாரதிராஜாவின் மனைவி சந்திரலீலா அங்கு வருகிறார். தன் கையிலிருக்கும் குழந்தை மனோஜை அப்படியே இவர் கையில் திணித்துவிட்டு, “இனிமே நீயே பார்த்துக்கோ.. ” என்று கூறிவிட்டு கிளம்ப, யூனிட்டே திகைத்தபடி நிற்கிறது. கண நேரம் கூட தாமதிக்கவில்லை டைரக்டர். தன் கையிலிருந்த குழந்தையை அப்படியே டான்ஸ் மாஸ்டர் புலியூர் சரோஜாவின் கையில் கொடுத்துவிட்டு, “நெக்ஸ்ட்…?” என்றபடி அடுத்த வரிக்கு ஆயத்தமாகிவிடுகிறார்.

பிற்பாடு தான் இயக்கிய ‘அந்தி மந்தாரை’ படத்திற்காக கிடைத்த தேசிய விருதை, தன் மனைவி சந்திரலீலா கையினாலேயே வாங்கிக் கொள்ள வைக்கிறார். கோபமும், சலசலப்பும் இல்லாதவரால் குடும்பக்கதைகளை எப்படித் தரமுடியும்? அப்படிதான் அவர்.

தான் வாழும் காலத்திலேயே தன் பெற்றோர்கள் பார்க்க வாழ்வாங்கு வாழ்ந்தவரும் பாரதிராஜாதான்! தன் அம்மாவின் பெயரிலேயே கருத்தம்மா படத்தை எடுத்து அதற்கு தேசிய விருது கிடைத்ததும், அதே அம்மா கருத்தம்மாவின் கைகளால் அந்த விருதை பெற வைக்கிற பாக்கியம் எத்தனை பேருக்கு கிடைக்கும்?

பாரதிராஜா, தமிழ்சினிமாவுலகத்தின் எல்லைக்கல்!

அந்த எல்லைக்கல்லையே குல சாமியாக கும்பிடுகிற பக்தர்கள் எப்போதும் இருப்பார்கள், இனியும் பிறப்பார்கள்!

நான் அந்த விஷயத்திற்கு வெட்கப்பட்டதே கிடையாது- சரத்குமார் அதிரடி

நடிகர் சங்க தோல்விக்கு பிறகு பல இடங்களில் மீடியாக்களை சந்திப்பதை தவிர்த்து வந்தார் சரத்குமார். தற்போது குடியரசு தினத்தை முன்னிட்டு பிரபல தொலைக்காட்சி ஒன்றிற்கு பேட்டியளித்துள்ளார்.

இதில் பேசிய சரத்குமார் இன்றைய இளைஞர்களின் கல்வி நிலை குறித்து மிகவும் ஆழமாக பேசினார். அவர் கூறுகையில் ‘நான் சாதரண குடும்பத்திலிருந்து வந்தவன் தான், சிறு வயதில் சைக்கிள் கடையில் எல்லாம் வேலை பார்த்துள்ளேன்.

மேலும், நான் மொழிகளை கற்றுக்கொள்வதில் வெட்கப்பட்டதே இல்லை, ஆங்கிலத்தில் தவறாக பேசினாலும் பேசுவேன், ஆனால், சில கிராமத்து மாணவர்கள் சென்னைக்கு வேலை தேடி வருகையில் ஆங்கிலத்தில் பேச வெட்கப்படுகிறார்கள்.

தயவு செய்து தவறாக இருந்தாலும் பேசுங்கள், எதற்கும் வெட்கப்பட்டு ஒதுங்காதீர்கள்’ என இளைஞர்களுக்கு ஊக்கமளிக்கும் விதத்தில் பேசியுள்ளார்.

உதயநிதி தயாரிப்பில் அஜித்- இயக்குனர் இவரா?

தமிழ் சினிமாவில் யாரும் எதிர்ப்பார்க்காமல் சில கூட்டணி அமையும். அந்த வகையில் உதயநிதி-அஜித் இதுவரை இருவரை இணைந்து கூட ஒரு செய்தி வந்ததே இல்லை.

ஆனால், அஜித், உதயநிதி தயாரிப்பில் ஒரு படத்தில் நடிக்கவிருப்பதாக கூறப்படுகின்றது. இப்படத்தை முருகதாஸ் இயக்கவிருக்கின்றாராம்.

இந்த செய்தி எந்த அளவிற்கு உண்மை என்று தெரியவில்லை, தற்போது சமூக வலைத்தளங்களில் இந்த செய்தி தான் வைரல். இதற்கு அஜித் தரப்பு விளக்கம் கிடைப்பது அரிது, ஆனால், உதயநிதி, முருகதாஸிடமிருந்து பதில் எதிர்ப்பார்க்கலாம். பொறுத்திருந்து பார்ப்போம்.