Wednesday 17 February 2016

500 ரூபாய் ஸ்மார்ட் போனின் அசத்தல் அம்சங்கள்!

இந்தியாவின் நொய்டாவை சேர்ந்த நிறுவனம் ஒன்று,  500 ரூபாய்க்கு புதிய ஸ்மார்ட் போனை வெளியிட்டுள்ளது.

இந்த ஸ்மார்ட் போன்கள், ‘ப்ரீடம் 251’ என்ற பெயரில் சந்தைக்கு வர உள்ளன. வரும் பிப்ரவரி 18-ம் தேதி,  ரிங்கிங் பெல்ஸ் நிறுவனத்தின் இணையதளத்தில்,  காலை 6 மணி முதல் 21-ம் தேதி இரவு 8 மணி வரை இந்த 500 ரூபாய் ஸ்மார்ட் போன் விற்பனை தொடங்கவுள்ளது.

* இந்த போன் சமீபத்திய நவீன லாலிபாப் ஆன்ட்ராய்டில் இயங்கவுள்ளது. அடுத்ததாக 3 ஜியிலும் மிக வேகமான இயங்க கூடியது.

* 5 ஆயிரம் ருபாய் மதிப்புள்ள போன்களுக்கு உள்ளது  போல 4 இன்ச் ஸ்கிரீன் உள்ளது.

* 1 ஜிபி ரேம் வசதி கொண்டது. ஃபேஸ்புக், வாட்சஸ், ட்விட்டர் போன்ற சமூக வலைதளங்களை மிக வேகமாக இயக்க முடியும்

* இந்த போனில் 8 ஜிபி இன்டர்னல் கார்டு உள்ளது. அதுபோல் மைக்ரோ எஸ்.டி. கார்டும் உள்ளது. இந்த மைக்ரோ எஸ்.டி. கார்டு இந்த போனின் விலையை காட்டிலும் அதிகம்.

* 3.2 மெகாபிக்சல் கேமரா இந்த செல்போனில் பொருத்தப்பட்டுள்ளது. செல்பி 0.3 மொகாபிக்சல் ஆகும்.

* இவ்வளவு குறைந்த விலையில் இந்த போன் கொடுக்கப்பட்டாலும் பேட்டரி ஒரு நாள் முழுமைக்கும் தாங்கும். 1450 எத்.ஏ. ஹெச் பேட்டரி பொருத்தப்பட்டுள்ளது.

* ஃப்ரீடம் 251 செல் போன் ராணுவ அமைச்சர் மனோகர் பாரிக்கர் தலைமையில் முரளி மனோகர் ஜோசி எம்.பி. முன்னிலையில் அதிகாரப்பூர்வமாக அறிமுகப்படுத்தப்பட்டது.

* நாடு முழுவதும் 650 சர்வீஸ் சென்டர்கள் உள்ளன. அத்துடன் ஒரு வருட வாரண்டியும் உள்ளது.

'மேக் இன் இந்தியா 'திட்டத்தின் கீழ் பி இந்த ஸ்மார்ட் போன்கள் தயாரிக்கப்பட்டிருப்பதாகவும், இவை முழுமையாக உள்நாட்டில் தயாரிக்கப்பட்டவை என்றும் இதனைத் தயாரிக்கும் ரிங்கிங் பெல்ஸ் நிறுவனம் தெரிவித்துள்ளது. மத்திய அரசின் முயற்சிக்கு கிடைத்த வெற்றியாகவும் இது பார்க்கப்படுகிறது. சந்தையில் ஸ்மார்ட் போன்களின் குறைந்தபட்ச விலை 1,500 ரூபாய் ஆகும். 

அய்யே… எல்லாமே புச்சாக்கீதுப்பா! இறுதிசுற்று டைரக்டர் ஏற்படுத்திய வியப்பு

தமிழ்சினிமாவில் இதற்கு முன் இப்படியெல்லாம் நடந்திருக்குமா என்று யாராவது கேட்டால், ம்ஹும் என்று ஒரேயடியாக மறுக்கலாம், தப்பில்லை! ஏனென்றால் அப்படி செய்த முதல் பெண்மணி இறுதிச்சுற்று இயக்குனர் சுதா கொங்கராதான்!

பொதுவாக ஒரு படத்திற்கு லொக்கேஷன் தேடும்போது காட்டுகிற ஆர்வத்தையும் அக்கறையையும் அப்படம் முடிந்தபின் யாரும் காட்டுவது இல்லை. படப்பிடிப்புக்கு கிளம்புவதற்கு முன் தனது ஒளிப்பதிவாளர், மற்றும் தயாரிப்பு நிர்வாகியுடன் தங்கள் மனதில் நினைத்து வைத்திருந்த லொக்கேஷனை தேடக் கிளம்புவார்கள் டைரக்டர்கள். இடத்தை பார்த்து அவர்கள் முடிவு செய்த பின், அதற்கப்புறம் அந்த இடத்தில் படப்பிடிப்பு நடத்த தேவையான எல்லா வேலைகளையும் தயாரிப்பு நிர்வாகி பார்த்துக் கொள்வார். கொடுக்க வேண்டியவர்களுக்கு கொடுத்து, கெஞ்ச வேண்டியவர்களிடம் கெஞ்சி இடத்தை ஷூட்டிங்குக்கு தயார் செய்து கொடுப்பது அவர் வேலை மட்டுமே.

மறுபடி வேறு ஒரு படத்திற்கு அந்த லொகேஷனுக்கு வரும்போதுதான் பழசெல்லாம் ஞாபகத்திற்கு வரும் சம்பந்தப்பட்ட டைரக்டருக்கு. ஆனால் இறுதிச்சுற்று படத்தின் இயக்குனர் சுதா கொங்கராவின் அப்ரோச்சே தனி. நொச்சிக் குப்பம் என்ற மீனவர் பகுதியில் ஷுட்டிங் நடத்தியிருந்தவர், இறுதிசுற்று வெற்றி அடைந்த பின்பு, மீண்டும் அதே நொச்சிக் குப்பத்துக்கு வந்தார். படப்பிடிப்புக்கு உதவிய அத்தனை பேரையும் தனித்தனியாக சந்தித்து நன்றி தெரிவித்தார்.

இதே குப்பத்துல இதுக்கு முன்னாடி எத்தனையோ ஷுட்டிங் நடந்திருக்கு. போகும்போது கடனுக்கு மீன் வாங்கிட்டு போன டைரக்டருங்க கூட இருக்காங்க. ஆனால் அதுக்கு பிறகு ஒரு முறை கூட இங்க எட்டிப் பார்த்ததில்ல. ஆனால், எங்களை தனித்தனியா சந்திச்சு இந்தம்மா நன்றி சொல்றது புதுசா இருக்கு… என்கிறார்கள் அங்கிருப்பவர்கள்.

சுதா எடுத்த படம் உட்பட, எல்லாமே புதுசாதான் இருக்கு!

'இப்படி ஆறுதல் சொல்ல 'கொரியர் சர்வீஸ்' போதுமே..!'- ராணுவ வீரர் அஞ்சலியில் ஓய்வெடுத்த மந்திரிகள்!

காஷ்மீரின் சியாச்சின்  பகுதி பனிச்சரிவில் 10 இந்திய ராணுவ வீரர்கள் கடந்த 3-ம் தேதி சிக்கிக் கொண்டனர். ஒன்பது பேர் சடலமாக மீட்கப்பட்ட நிலையில், கர்நாடகாவின் ஹனுமந்தப்பா மட்டும் உயிருடன் மீட்கப்பட்டு பின்னர் தீவிர சிகிச்சை நிலையிலேயே இறந்து போனார். உயிரிழந்த வீரர்களின் உடல்கள்  ராணுவ ஹெலிகாப்டர்கள் மூலம்  கொண்டு செல்லப்பட்டு அவர்களின் உறவினர்களின் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டது.

ராணுவ அதிகாரிகள்,  மாவட்ட ஆட்சியர்கள், போலீஸ் சூப்பிரண்டுகள், அரசியல் பிரமுகர்கள், மந்திரிகள்  வீரர்களின் உடல்களுக்கு வீரவணக்கம் செலுத்தினர்.  தமிழகத்தைச் சேர்ந்த ஏழுமலை, குமார், கணேசன், ராமமூர்த்தி ஆகிய ராணுவ வீரர்களின் குடும்பத்திற்கு தலா 10 லட்ச ரூபாய் உதவிப் பணத்தை மந்திரிகள் வாயிலாக முதல்வர் ஜெயலலிதா வழங்கினார்.

ஓசூருக்கும் கிருஷ்ணகிரிக்கும் இடையில் உள்ள 'குடிசாதனப் பள்ளி' கிராமத்தைச் சேர்ந்த வீரர் ராமமூர்த்தியின் உடல் அதே போன்று அவரது உறவினர்களிடம் ஒப்படைக்கப் பட்டது.

உயிரிழந்த ராமமூர்த்தியின்  உடலுக்கு மலர் வளையம் வைத்த பின் தமிழக மந்திரிகள் இருவர்  'அம்மா' கொடுக்கச் சொன்னதாக தெரிவித்து அவர் குடும்பத்தாரிடம் ரூ.10 லட்சத்துக்கான காசோலையை  திங்கட்கிழமை இரவு வழங்கினர். அப்போது நேரம் 11.45.

சின்னதாய் ஒரு ஃப்ளாஷ் பேக்...

நெடுஞ்சாலை, சிறு மற்றும் குறு துறைமுகங்கள் துறை மந்திரி எடப்பாடி பழனிச்சாமி, உயர்கல்வித்துறை மந்திரி பழனியப்பன் ஆகியோர் உயிரிழந்த தமிழகத்தின்  ராணுவ வீரர் ராமமூர்த்தியின் உடலுக்கு அஞ்சலி செலுத்த,  'கான்வாய்' சகிதமாக  திங்கட் கிழமை இரவு 8 மணியளவில்  கார்களில் வந்து கொண்டிருந்தனர்.

அவர்களுக்குப் பின்னால், மாவட்டம், ஒன்றியம், வார்டு , உள்ளாட்சி மன்றம், அரசு அதிகாரிகள் என்று பத்து கார்கள்  குடிசாதனப் பள்ளியை நோக்கி விரைந்து கொண்டிருந்தது.

"ராணுவ வீரர் ராமமூர்த்தியின் உடல் வந்து சேரவில்லை. இன்னும் சிலமணித்துளிகள் ஆகலாம்" என்ற தகவல் காரில் வந்து கொண்டிருந்த மந்திரிகளுக்குப் போய்ச் சேர...  அடுத்த நிமிடமே அந்த கார்கள் அப்படியே சாலை ஓரமாக 'பார்க்கிங்' செய்யப்பட்டது.

அந்த இடம் 'நெரிகம்' என்ற கிராமம். அடுத்த சில நிமிடங்களில் அந்த கிராமத்தில் இருந்த முக்கிய  அதிமுக நிர்வாகியின் வீட்டு முன்பாக கட்டில் போடப்பட்டுள்ளது. காரிலிருந்து இறங்கிய மந்திரிகள் , கட்டிலில் அமர்ந்து மணிக்கணக்கில் இளைப்பாறல் முடித்து விட்டு  'ராணுவவீரர் ராமமூர்த்தியின்  உடலை கொண்டு வந்ததும் சொல்லுங்க' என்று அலெர்ட் போட்டுவிட்டு அங்கேயே காத்திருக்கத் தொடங்கி விட்டனர்.

சரியாக, இரவு  மணி 11.20 ... ராமமூர்த்தியின் உடல் குடிசாதனப் பள்ளி கிராமத்துக்குள்  ராணுவ மரியாதையுடன் நுழைந்தது. இந்த தகவல் வந்ததும் மந்திரிகள்  'நெரிகம்' கிராமத்திலிருந்து புறப்பட்டு   சரியாக 11.35-மணிக்கு ராமமூர்த்தியின் உடல் வைக்கப்பட்டிருந்த கிராமத்தை அடைந்தனர். அதாவது  'நெரிகம்' கிராமத்திலிருந்து வெறும் மூன்று கிலோ மீட்டர் தூரமே இருந்தது அந்த கிராமம்.

ராமமூர்த்தியின் உடலுக்கு ராணுவ அதிகாரிகள், அரசு அதிகாரிகள்,  போலீசார்  ஆகியோருடன் இணைந்து மாண்புமிகு மந்திரிகளும் அஞ்சலி செலுத்தி முடித்த போது இரவு மணி 11.45. அதற்கடுத்த சில நிமிடங்களில் ராமமூர்த்தியின் குடும்பத்தாரிடம், "அம்மா இந்த உதவியை (ரூ.10 லட்சம் காசோலை) செய்யச் சொன்னாங்க..." என்றபடி அந்த நிதியை அவர்களிடம் கொடுத்தனர்.

குடிதானப்பள்ளியில் மந்திரிகள் இப்படி அஞ்சலி செலுத்தியதுதான் கிருஷ்ணகிரியில் தொடங்கி, தர்மபுரி வரை பேசப்படுகிறது.

"மூன்றுகிலோ மீட்டர் தூரத்திலேயே காரை நிறுத்தி விட்டு  ராணுவ வீரர் ராமமூர்த்தியின் உடல் வந்து விட்டதா? என்று கேட்டுத் தெரிந்து கொண்டு, உடல் வந்தபின்னரே அங்கு வந்து 'மரியாதை'க்காக ஒரு அஞ்சலியை செலுத்தியுள்ளனர் தமிழக மந்திரிகள்.

முன்னதாகவே  கிராமத்துக்கு வந்து,  அந்த வீரரின் குடும்பத்துக்கு அருகிருந்து ஒரு ஆறுதலை சொல்லி இருக்கலாமே.... தமிழக அரசு கொடுத்த பணத்தை கொண்டு போய் 'மட்டும்' சேர்க்க 'கொரியர்' சர்வீஸ் போதாதா... மந்திரிகள் எதற்கு ? இதுதானா ஆறுதலும், அஞ்சலியும்...?!"  எனக் குமுறுகிறார்கள்  அப்பகுதி மக்கள்!


'இந்திய அரசுதான் பிரபாகரனை உயிருடன் வைத்திருக்க விரும்புகிறது!' - ஈழத்திலிருந்து ஒரு குரல்...

“அவன் தணிந்த குரலில் கதைத்தான். வார்த்தைக்கு வார்த்தை இடைவெளி விட்டுவிட்டுக் கதைத்தான். அந்த இடைவெளிக்குள் அகப்பட்டு,  அவஸ்தைப்பட்டு அவஸ்தைப்பட்டு வெளியே வந்தான். இரண்டு வார்த்தைகளுக்கிடையிலான மெளனத்தில் என் மனம் நசிந்தது. இது ஒரு வலி. பட்டால் மட்டும் புரியும் வலி.”
- இது ஈழத்தமிழர் குணா கவியழகன் எழுதிய ‘நஞ்சுண்டகாடு’ நாவலில் வரும் வரிகள்.

அவருடனான உரையாடலும் இப்படியானதாகத்தான் இருந்தது. ‘குணா கவியழகனின் படைப்புலக ஆய்வரங்கு’ நிகழ்வுக்காக நெதர்லாந்திலிருந்து, சென்னை வந்தவரை தொடர்பு கொண்டேன். 'இலக்கியம் பேசுவதாக இருந்தால் நாம் எப்போது வேண்டுமானாலும் சந்திக்கலாம். ஆம், எனக்கு இலக்கியம் தவிர பேச வேறொன்றுமில்லை. சம்மதமா...?' என்றார்.

உடனே சம்மதித்தேன். குணா அவருடைய நாவல்களிலேயே அரசியல் பேசுபவர். ஆகவே, நிச்சயம் அது வெறும் இலக்கிய உரையாடலாக மட்டும் இருக்காது என்று நம்பியதால் சம்மதித்தேன்.

உங்களுக்கு குணா யாரென்று நான் முன்கூட்டியே கூறிவிட்டால், இந்த பேட்டியை படிக்க வசதியாக இருக்கும். ‘குணா கவியழகன்’ ஈழத்தமிழர். இந்த இன அடையாளம் மட்டும் அவருடையதல்ல. நஞ்சுண்டகாடு, விடமேறிய கனவு, அப்பால் ஒரு நிலம் என மூன்று நாவல்களை எழுதியவர். ஊடகவியலாளர். தன் நாவல்கள் மூலம் விடுதலைப் புலிகளையும் நேர்மையாக விமர்சனம் செய்தவர். இப்போது புலம்பெயர்ந்த தமிழர் என்ற அடையாளத்துடன் நெதர்லாந்தில் வசித்து வருபவர்.


வெயில் கக்கும் ஒரு முன்பகலில், சென்னை பெருமழையில் மோசமாக பாதிக்கப்பட்ட இடம் ஒன்றில் அவரைச் சந்தித்தேன். ஆனால், இப்போது அதற்கான எந்தவொரு வடுவையும் அந்தப் பகுதி சுமந்திருக்கவில்லை. ஆனால் குணா கவிழயகன்,  போர் ஏற்படுத்திய அனைத்து வடுகளையும் சுமந்திருக்கிறார். இனி அவருடனான உரையாடல்...

எளிய செய்திகளுடன் இந்தப் பேட்டி அமைய வேண்டும். அதனால் ஒரு தட்டையான கேள்விவுடனே இந்தப் பேட்டியைத் தொடங்குகிறேன். எது உங்களை நாவல் எழுத தூண்டியது...?

மென்மையாகச் சிரிக்கிறார். ’’எனக்கு இலக்கியம் அவ்வளவு பரிச்சயம் இல்லை. நான் வன்னி யுத்தத்திற்கு பின்பு அமெரிக்காவின், ’ஆசிய மறுசீராக்கல் கொள்கை’ குறித்து ஒரு ஆய்வுக் கட்டுரை எழுதினேன். அதன் நீட்சியாக வேண்டுமானால் என் முதல் இலக்கிய நூலான ‘நஞ்சுண்டகாடு’ நாவலைச் சொல்லலாம். யோசித்தால், அதற்கு இன்னொரு முக்கிய காரணமும் இருக்கிறது. என் நாவல்கள் என் வலிகளுக்கான வடிகால். அதை எனக்கான உளச்சிகிச்சையாக நினைக்கிறேன். போர் தந்த வலிகளிலிருந்து மீள எனக்கு எழுத்து நல்ல சிகிச்சையாக இருக்கிறது. அந்த சுய சிகிச்சை நாவலாக உருமாறி உள்ளது. இன்னும் சொல்லப்போனால், நான் எழுதப் போகும் ஒரு முக்கியமான நாவலுக்கான பயிற்சியாகத்தான் இந்த மூன்று நாவல்களையும் பார்க்கிறேன்.
 
புரிந்து கொள்ள முடிகிறது. ஆனால், உங்கள் முதல் நாவலான நஞ்சுண்டகாடுவில் விடுதலைப் புலிகள் மீதும் விமர்சனம் செய்து இருந்தீர்கள் அல்லவா...?

"ஆம். நான் எழுதுவதென்று முடிவெடுத்தவுடனே ஒரு விஷயத்தில் திடமாக இருந்தேன்... அது சமரசமற்றதாக இருக்க வேண்டுமென்று. அதனால் அவர்கள் செய்த பிழைகளையும் நான் விமர்சனம் செய்திருந்தேன். இந்தக் காரணத்தால் நான் எதிர்கொண்ட விமர்சனங்கள் கொஞ்சம் நஞ்சமல்ல. ஆனால், நான் என் எழுத்தில் இன்னும் உறுதியாக இருக்கிறேன்!’’

இறுதியாக நடந்த இன அழிப்பு போரை நீங்கள் தவிர்த்து இருக்கலாம் என்று எண்ணியதுண்டா...? போருக்கு காரணம் புலிகளின் ராஜதந்திர தோல்வி என்று கூறலாமா...?

’’ஒன்றைப் புரிந்து கொள்ளுங்கள். ஈழ மக்கள் என்றுமே போரை விரும்பியதில்லை. உலக நாடுகளின் ராஜ தந்திர விளையாட்டில் ஈழம் சிக்கி, சின்னாபின்னமானது. இந்த போரை விரும்பியது சீனா, அது சிங்கள அரசிற்கு துணை நின்றது. நியாயமாக சீனாவின் அரசியல் எதிரிகளான இந்தியாவும் அமெரிக்காவும் புலிகளின் பக்கமல்லவா இருந்திருக்க வேண்டும். ஆனால், அப்படி நடக்கவில்லை. சீனாவின் பிடி இலங்கையில் இறுகக் கூடாது என்று இந்தியா நினைத்தது. அதுவும் இலங்கை அரசின் பக்கம் நிற்கிறது. ஆசிய கண்டத்தில் இந்தியாவை பகைத்துக் கொள்ள அமெரிக்கா விரும்பவில்லை. அதுவும் இந்தியாவின் நிலைப்பாட்டையே ஆதரிக்கிறது. ஆனால், புலிகள் தோற்கடிக்கப் படவேண்டும் என்று மட்டும்தான் அமெரிக்கா விரும்பியது. அவர்கள் அழித்தொழிக்கப்பட வேண்டுமென்பது இந்தியாவின் விருப்பமாக இருந்தது.

இந்தியாவின் இனப்பகைதான் இந்த இனப்படுகொலைக்கு துணை நின்றதற்கு காரணம் என்கிறார்களே இங்குள்ள தமிழ் தேசியர்கள்...?


’’இல்லை. இந்தியா துணை நின்றதற்கு காரணம் புவிசார் அரசியல் மட்டுமே!’’

அப்படியானால், இது புலிகளின் ராஜதந்திர தோல்விதானே...?

’’இது அவர்களின் ராஜதந்திர தோல்வி மட்டுமல்ல. முள்ளிவாய்க்கால், அனைத்து நாகரீக சமூகத்தின் தோல்வி. போரில், போர் குற்றம் நடந்ததாக சொல்கிறார்கள். ஆனால் இந்தப் போரே குற்றம்தான். அமைதி உடன்பாட்டில் இருக்கும் ஒரு சமூகத்தின் மீது போரை திணித்தது யார்...? இது மோசமான முன்னுதாரணம் அல்லவா...? இனி எந்தப் போராட்ட இயக்கமாவது, இவர்கள் கொண்டு வரும் அமைதி ஒப்பந்தத்தை நம்புமா...?’’

காங்கிரஸ் இல்லாமல் வேறு கட்சி மத்தியில் இருந்திருந்தால், இவ்வளவு அழிவுகள் ஏற்பட்டு இருக்காது என்று சொல்லலாமா...?

"இல்லை. நிச்சயம் இல்லை. இது இந்தியாவின் நிலைப்பாடு!’’

புலிகள் பல முறை இந்தியாவுடன் நேசக்கரம் நீட்டியும், இந்தியா அவர்களை நம்ப மறுக்க காரணமாக நீங்கள் எதை நினைக்கிறீர்கள்...?

’’ஆரம்பத்தில் சில தவறுகள் நடந்தது. அப்போது புலிகள் அரசியல் முதிர்ச்சி அடைந்திருக்கவில்லை. ஆனால், பின்பு அவர்கள் புரிந்து கொண்டார்கள், இந்தியா இல்லாமல் ஒரு தீர்வு கிடைக்காது என்பதை... ஆனால், இந்தியாவோ, புலிகளின் தனி ஈழக்கோரிக்கையை, தமிழ் அகண்ட தமிழ்த் தேச பேரரசிற்கான கோரிக்கையாக பார்த்தது. அதனால், அவர்கள் அதை ஆதரிக்கவில்லை; அதை முன்னெடுத்த புலிகளையும் ஆதரிக்கவில்லை. இப்போதும் நாங்கள் இந்தியாவையே நம்புகிறோம், இந்தியா இல்லாமல் ஒரு தீர்வு  இல்லை!’’



ஒரு காலத்தில் எம்.ஜி. ஆரின் முயற்சியால், இந்தியா ஒரு தீர்வை முன் வைத்தது. இலங்கையின் வடகிழக்கை ஒன்றிணைத்து தனி மாகாணமாக்கி, அதற்கு பிரபாகரனை முதல்வர் ஆக்குவது. அதை அவர்கள் ஏற்றுக் கொண்டிருந்தால், இந்த அழிவை தவிர்த்து இருக்கலாம் அல்லவா...?

’’நிச்சயம். நான் ராஜதந்திர தோல்வி என குறிப்பிட்டது இதைத்தான். அப்போது அதை  ஏற்றுக் கொண்டிருந்தால், நாங்கள் அரசியல் செய்வதற்கு, எங்கள் கோரிக்கைகளை அனைத்து சமூக மக்களிடம் எடுத்துச் செல்வதற்கு ஒரு வாய்ப்பாக இருந்திருக்கும். அதை மறுத்ததன் மூலம், அந்த வாய்ப்பு முற்றாக அழிக்கப்பட்டுவிட்டது. புலிகள் போர் வெற்றியில்தான் அதிகம் கவனம் செலுத்தினார்கள். அரசியல் தளத்தில் கவனம் செலுத்த தவறிவிட்டார்கள். இவர்கள் இரண்டிலும் கவனம் செலுத்தி இருந்தால், பல தோல்விகளை தவிர்த்து இருக்கலாம்!’’

சரி. இப்போது ஈழமக்களுக்கு எது தீர்வாக இருக்கும் என்று நினைக்கிறீர்கள்...?


’’வடகிழக்கை இணைப்பது. போலீஸ், வருவாய் போன்ற அதிகாரங்களை மையப்படுத்தாமல். அதைப் பகிர்ந்தளிப்பது!’’

அதாவது, இந்தியாவில் உள்ள மாநில அமைப்பு போல்...?


’’ஆம். அதுதான் தீர்வென்று நம்புகிறேன்!’’

தனி ஈழக்கோரிக்கையை முன்னிறுத்தி மீண்டும் அங்கொரு போர் மூள வாய்ப்புள்ளதா...?

’’நிச்சயமாக இல்லை. எக்காலத்திலும் போர் மூள வாய்ப்பில்லை. ஆனால், போர் மட்டுமே முடிந்துவிட்டது; போராட்டங்கள் முடியவில்லை. தன்னாட்சி உரிமைக்கான அரசியல் போராட்டங்கள் தொடரும். அங்குள்ள தமிழ் மக்களும் அரசியல் விழிப்புணர்வுடன் இருக்கிறார்கள். தங்களது கூட்டு உரிமைக்காக இன்னும் போராடி வருகிறார்கள். அதனால்தான் தமிழ் தேசியக் கட்சிகள் தேர்தலில் வெற்றி பெறுகின்றன!’’

உங்கள் கோரிக்கையை ஏற்க ராஜபக்‌ஷே முன் வந்தால் அவரை ஆதிரிப்பீர்களா...?


 ’’நிச்சயமாக!’’

என்ன...?!


’’ஆம். போர் எதிரி. அரசியல் எதிரியாக இருக்கவேண்டியது இல்லை. இதற்கு நம் கண் முன்னால் இருக்கும் உதாரணம் ஜப்பான். இரண்டாம் உலகப்போர் முடிந்ததும், அவர்கள் கூட்டு சேர்ந்தது, அவர்கள் மீது அணுகுண்டு வீசிய அமெரிக்காவுடன்!’’

போர் நடந்த போது, தமிழக மக்கள் மீதும், ஈழ ஆதரவு தலைவர்கள் மீதும், போராளிகளின் பார்வை எப்படி இருந்தது...?

’’நாங்கள் தமிழக மக்களை மட்டுமே முழுமையாக நம்பினோம். என்றுமே தலைவர்களை இல்லை. எங்களுக்கு அவர்களின் நிலையையும் புரிந்து கொள்ள முடிந்தது. அவர்களுக்கு தமிழக அரசியலை தாண்டித்தான், ஈழம் எல்லாம்... அதற்காக எங்களையும் அவர்கள் பயன்படுத்திக் கொண்டார்காள். அதையும் நாங்கள் உணர்ந்தே இருந்தோம்.

அரசியல் தலைவர்களுக்கு ஈழமக்கள் மீது உண்மையான கரிசனம் இருந்திருந்தால், இங்கு அகதி முகாமில் இருக்கும் ஈழ மக்களுக்கும் அவர்கள் ஆதரவு கரம் நீண்டு இருக்க வேண்டும் அல்லவா... ஆனால், உண்மை நிலவரம் அப்படி இல்லையே..!’’

வேறு எப்படி உங்கள் லட்சியங்களை அடைவது சாத்தியம் என நினைக்கிறீர்கள்...?

’’எங்கள் படகுக்கு நாங்கள்தான் துடுப்பு போட வேண்டும். எங்கள் பிள்ளையை நாங்கள்தான் பெற்றெடுக்க வேண்டும்!’’

சரி. இந்த கேள்வி இல்லாமல் பேட்டி முற்றுபெறாது... எனக்கு தனிப்பட்ட முறையில் இந்த கேள்வியை கேட்பதில் உடன்பாடில்லை... பிரபாகரன் இன்னும் உயிரோடு இருகிறாரா...?

’’நான் இந்த சந்தேகத்தை கிளப்புவதே இந்திய அரசு என்றுதான் நினைக்கிறேன். அவரின் தியாகம் முக்கியமானது. அவர் இறந்துவிட்டார் என போரை நடத்திய இலங்கை அரசே சொல்லிவிட்டது. இவர்கள் இப்படி ஒரு சந்தேகத்தை கிளப்ப காரணம், ’பிரபாகரன் இறந்துவிட்டார்’ என்று அவர்கள் அறிவித்தால், விடுதலைப் புலிகள் மீதான தடையை நீக்க வேண்டும். ராஜீவ் கொலை வழக்கை முடிக்க வேண்டும். அப்படி அந்த வழக்கு முடியும்பட்சத்தில், அந்த வழக்கில் தண்டனை பெற்ற பேரறிவாளன் உள்ளிட்டவர்களின் விடுதலை சாத்தியம் ஆகும். அதை இந்தியா விரும்பவில்லை.

இதை தவிர்க்கவே இந்திய அரசு ஒரு குழப்ப நிலையை உண்டாக்கி, பிரபாகரனை உயிர்ப்புடன் வைத்திருக்க முனைகிறது என நினைக்கிறேன். இந்த இந்திய அரசின் ராஜதந்திரத்திற்கு, இங்குள்ள தமிழ் ஈழத் தலைவர்கள், தெரிந்தோ, தெரியாமலோ பலிகடா ஆகிக் கொண்டிருக்கிறார்கள்!’’ என்றவர் பெருமூச்சோடு சாய்ந்து அமர்ந்து கொள்கிறார்.

சின்ன இடைவேளைக்குப் பின் சன்னமான குரலில் சொல்கிறார்...

’’நான் அரசியலே பேசக் கூடாது என்றுதா நினைத்தேன். ஆனால், நீங்கள் அது போன்ற கேள்விகளையே கேட்டதால், பேச வேண்டியதாகிவிட்டது. நான் இப்போது தீவிர அரசியலில் இல்லை, இலக்கியம் மட்டுமே என் பணி. அதிலேயே இயங்க விரும்புகிறேன்!’’

-ஒரு அழுத்தமான கைக்குலுக்கலுடன் விடைபெற்றேன்.