Wednesday 17 February 2016

அய்யே… எல்லாமே புச்சாக்கீதுப்பா! இறுதிசுற்று டைரக்டர் ஏற்படுத்திய வியப்பு

தமிழ்சினிமாவில் இதற்கு முன் இப்படியெல்லாம் நடந்திருக்குமா என்று யாராவது கேட்டால், ம்ஹும் என்று ஒரேயடியாக மறுக்கலாம், தப்பில்லை! ஏனென்றால் அப்படி செய்த முதல் பெண்மணி இறுதிச்சுற்று இயக்குனர் சுதா கொங்கராதான்!

பொதுவாக ஒரு படத்திற்கு லொக்கேஷன் தேடும்போது காட்டுகிற ஆர்வத்தையும் அக்கறையையும் அப்படம் முடிந்தபின் யாரும் காட்டுவது இல்லை. படப்பிடிப்புக்கு கிளம்புவதற்கு முன் தனது ஒளிப்பதிவாளர், மற்றும் தயாரிப்பு நிர்வாகியுடன் தங்கள் மனதில் நினைத்து வைத்திருந்த லொக்கேஷனை தேடக் கிளம்புவார்கள் டைரக்டர்கள். இடத்தை பார்த்து அவர்கள் முடிவு செய்த பின், அதற்கப்புறம் அந்த இடத்தில் படப்பிடிப்பு நடத்த தேவையான எல்லா வேலைகளையும் தயாரிப்பு நிர்வாகி பார்த்துக் கொள்வார். கொடுக்க வேண்டியவர்களுக்கு கொடுத்து, கெஞ்ச வேண்டியவர்களிடம் கெஞ்சி இடத்தை ஷூட்டிங்குக்கு தயார் செய்து கொடுப்பது அவர் வேலை மட்டுமே.

மறுபடி வேறு ஒரு படத்திற்கு அந்த லொகேஷனுக்கு வரும்போதுதான் பழசெல்லாம் ஞாபகத்திற்கு வரும் சம்பந்தப்பட்ட டைரக்டருக்கு. ஆனால் இறுதிச்சுற்று படத்தின் இயக்குனர் சுதா கொங்கராவின் அப்ரோச்சே தனி. நொச்சிக் குப்பம் என்ற மீனவர் பகுதியில் ஷுட்டிங் நடத்தியிருந்தவர், இறுதிசுற்று வெற்றி அடைந்த பின்பு, மீண்டும் அதே நொச்சிக் குப்பத்துக்கு வந்தார். படப்பிடிப்புக்கு உதவிய அத்தனை பேரையும் தனித்தனியாக சந்தித்து நன்றி தெரிவித்தார்.

இதே குப்பத்துல இதுக்கு முன்னாடி எத்தனையோ ஷுட்டிங் நடந்திருக்கு. போகும்போது கடனுக்கு மீன் வாங்கிட்டு போன டைரக்டருங்க கூட இருக்காங்க. ஆனால் அதுக்கு பிறகு ஒரு முறை கூட இங்க எட்டிப் பார்த்ததில்ல. ஆனால், எங்களை தனித்தனியா சந்திச்சு இந்தம்மா நன்றி சொல்றது புதுசா இருக்கு… என்கிறார்கள் அங்கிருப்பவர்கள்.

சுதா எடுத்த படம் உட்பட, எல்லாமே புதுசாதான் இருக்கு!

0 comments:

Post a Comment