Sunday 24 January 2016

“நான்தான் டாப்பு ! மத்ததெல்லாம் டூப்பு!” – சட்டசபையில் ஜெயலலிதா

தமிழக சட்டசபையின், இந்த ஆண்டுக் கான முதல் கூட்டத் தொடர் கடந்த புதன்கிழமை தொடங் கியது.அன்று சபையில் கவர்னர் கே.ரோசய்யா உரை நிகழ்த்தினார்.அதன்பிறகு கவர்னர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீது உறுப்பினர்களின் விவாதம் நடைபெற்றது. விவாதத்தின் போது அவ்வப்போது அமைச்சர்கள் பதில் அளித்து பேசினார்கள். இறுதியாக முதல்-அமைச்சர் ஜெயலலிதா நேற்று பதில் அளித்து பேசினார். அப்போது அ.தி.மு.க. அரசின் சாதனைகளை அவர் பட்டியலிட்டார்.

அவர் பேசுகையில்,”கடந்த 2011-ம் ஆண்டு தமிழக மக்கள் ஒரு மாற்றம் வேண்டும் என உறுதியுடன் இருந்தார்கள். சட்டம்-ஒழுங்கு சீர் செய்யப்பட வேண்டும்; இல்லாதோரின் நிலை உயர வேண்டும்; இருண்ட தமிழகம் ஒளி பெறவேண்டும்; விவசாயிகள், நெசவாளர்கள், மீனவர்கள், ஒடுக்கப்பட்டோர், ஒதுக்கப்பட்டோர், ஏழை, எளியோர் ஆகிய அனைவர் வாழ்விலும் வசந்தம் வீசிட வேண்டும் என்று, இந்த மாற்றத்தை ஏற்படுத்தினார்கள்.அவ்வாறு மாற்றம் ஏற்படுத்திய மக்களின் எதிர்பார்ப்புகளை நாங்கள் நிறைவேற்றி உள்ளோம். தமிழக மக்களின் வாழ்வை ஏற்றம் பெறச் செய்துள்ளோம். இதைத்தான் எனது பதிலுரையில் நான் தெளிவாக எடுத்துக்கூறியுள்ளேன். எனவே தான் ‘தொடரட்டும் இந்த அரசு’ என்று மக்கள் தற்போது நினைக்கிறார்கள்.

ஒவ்வொரு துறையை எடுத்துக்கொண்டாலும் 36 துறைகள் இருக்கின்றன. அரசாங்கத்தில் ஒவ்வொரு துறையை எடுத்துக்கொண்டாலும் நாங்கள் செய்திருக்கின்ற சாதனைகளைச் சொல்லவேண்டுமானால் ஒரு துறைக்கு ஒரு நாள் தேவை. ஒரு நாள் முழுவதும் தேவை. அப்படியானால், இந்த 5 ஆண்டு காலத்தில் நாங்கள் செய்துள்ள சாதனைகள் முழுவதையும் சொல்லி முடிக்கவேண்டுமென்றால் 36 நாட்கள் நான் பதிலுரை இங்கே வழங்கவேண்டும். 36 நாட்கள் இந்த அவை கூடவேண்டும். 36 நாட்களும் சொல்லக்கூடிய அளவுக்கு அத்தனை சாதனைகளைப் புரிந்துள்ளோம்.

நான் குறிப்பிட விரும்புவது என்னவென்றால், எங்களுடைய செயல்பாடு, எங்களுடைய திட்டங்கள் எல்லாமே மக்களுக்காகத்தான். எங்களைப் பொறுத்தவரை எந்தச் சுயநலமும் இல்லை. பொதுநலம் தான், மக்கள் நலம்தான். அ.தி.மு.க. தான் உண்மையான மக்கள் இயக்கம். மக்களுக்காகவே தன்னை அர்ப்பணித்துக் கொண்ட இயக்கம். மக்களுக்காகவே தன்னை அர்ப்பணித்த தலைவியைக் கொண்ட ஒரு இயக்கம்.இந்த இயக்கம் இருக்கின்ற வரை, நான் இருக்கின்ற வரை, இந்த இயக்கம் மென்மேலும், மென்மேலும் தமிழர்கள் வாழ்வு வளம் பெறச் செயல்படும். எனக்குப் பின்னாலும், இன்னும் எத்தனை நூற்றாண்டுகள் வந்தாலும், அ.தி.மு.க. மக்களுக்காகவே இயங்கும்”இவ்வாறு முதல்-அமைச்சர் ஜெயலலிதா கூறினார்.

0 comments:

Post a Comment