Sunday 17 January 2016

போயஸ் தோட்டத்தின் புதிய இளவரசன்

போயஸ் தோட்டத்தில் ஒவ்வொரு காலத்திலும் ஒருவர் கோலோச்சுவார். இப்போது கார்டனின் இளவரசன், விவேக் ஜெயராமன். சசிகலாவின் அண்ணியான இளவரசியின் மகன். 25 வயதாகும் விவேக் ஜெயராமன், போயஸ் தோட்டத்தின் செல்லப்பிள்ளையாக வலம் வருகிறார். அமைச்சர்கள் உள்ளிட்ட அதிகார மட்டத்தில் `விவேக் ஜெயராமன்' என்ற பெயர் பயபக்தியுடன் உச்சரிக்கப்படுகிறது. `லக்ஸ்' திரையரங்கை நடத்திவரும் `ஜாஸ் சினிமாஸ்' நிறுவனத்தின் முதன்மை செயல் அதிகாரி விவேக். `அங்கே மட்டும் அல்ல, கார்டனிலும் இவர்தான் முதன்மை செயல் அதிகாரி’ என்கிறார்கள்.

காதில் சிறிய கம்மல், ஃபேஸ்புக்கில் அரட்டை, விலை உயர்ந்த டுகாட்டி பைக், ஏராளமான நண்பர்கள்... என விவேக்கின் உலகம் இந்தத் தலைமுறைக்கானது. இவை எல்லாம் 2014-ம் ஆண்டு செப்டம்பர் மாதம் வரைதான்.

ஜெயலலிதாவின் பார்வைபட்ட தினத்தோடு விவேக்கின் ஜாலி உலகம் முடிவுக்கு வந்துவிட்டது. இப்போது முழுக்க முழுக்க ஜாஸ் சினிமாஸில் விவேக் செம பிஸி. ஜாஸ் சினிமாஸ்  திரையரங் குகளின் எண்ணிக்கையை அதிகரிக்கச் செய்வது இவரது வேலை. ஜாஸ் சினிமாஸ் விவேக்கின் கைக்கு வந்ததும் நீண்ட நாள் மூடிக்கிடந்த `ஐமேக்ஸ்’ திரையரங்கும் திறக்கப்பட்டு விட்டது. தமிழ்நாட்டுத் திரையரங்குகளில் அதிகபட்சக் கட்டணமாக 120 ரூபாய் வசூலிக்கப்படும் நிலையில், ஜாஸ் சினிமாஸின் அங்கமான ஐமேக்ஸில் டிக்கெட் விலை 360 ரூபாய்.

கார்டனுக்குள் எப்படி வந்தார் விவேக்?

ஜெயலலிதாவின் ஹைதராபாத் திராட்சைத் தோட்டத்தைக் கவனித்துக்கொண்டிருந்த சசிகலாவின் அண்ணன் ஜெயராமன், ஒருநாள் தோட்டத்தில் மின்சாரம் பாய்ந்து இறந்துவிட்டார். ஜெயராமனின் மனைவி இளவரசி... கிருஷ்ணபிரியா, ஷகிலா, விவேக் என மூன்று குழந்தைகளோடு தனித்து விடப்பட்டார். இதில் ஜெயலலிதா செம அப்செட். `கணவர் இல்லாம ஏன் கஷ்டப்படறே? கார்டனுக்கு வந்துடு' என இளவரசிக்கு கிரீன் சிக்னல் கொடுத்தார் ஜெயலலிதா. கைக்குழந்தையாக இருந்தபோதே அப்பாவை இழந்ததால், விவேக் மீது மிகுந்த பிரியத்தோடு இருந்தார் ஜெயலலிதா.   அவர் என்ன கேட்டாலும் வாங்கிக்கொடுக்கும் அளவுக்கு செல்லப்பிள்ளையாகவே வளர்த்தார். ஆனால், தான் அதிகார மையத்தில் இருக்கிறோம் என எந்த இடத்திலும் விவேக் காட்டிக்கொண்டது இல்லை. பள்ளிக்காலத்திலும் சரி... கல்லூரிப் படிப்பிலும் சரி... `நன்றாகப் படிக்க வேண்டும்' என்பதுதான் அவரது கனவாக இருந்திருக்கிறது.

கோவையில் உள்ள சின்மயா மிஷன் சர்வதேசப் பள்ளியில் ப்ளஸ் டூ வரை படித்தார். கல்லூரிப் படிப்புக்கு விவேக் தேர்ந்தெடுத்தது ஆஸ்திரேலியா. 2011-ம் ஆண்டு Macquarie Graduate School of Management என்னும் கல்லூரியில் இளங்கலை பிசினஸ் அட்மினிஸ்ட்ரேஷன் படித்து முடித்தார். பிறகு புனேவில் உள்ள சிம்பயாஸிஸ் கல்லூரியில் 2013-ம் ஆண்டு எம்.பி.ஏ மார்க் கெட்டிங் முடித்தார். அப்போதே ஐ.டி.சி நிறுவனத்தில் இன்டன்ஷிப் செய்தவர், படிப்பை முடித்ததும் பெங்களூருவில் உள்ள சாம்சங் நிறுவனத்தில் ரீஜினல் மார்க்கெட்டிங் கோ-ஆர்டினேட்டராக வேலைக்குச் சேர்ந்தார்.  இவரது பள்ளி, கல்லூரி காலம் முழுவதும் 'வளர்ப்பு மகன்' போல வளர்த்தது மன்னார்குடி திவாகரன். இவர், சசிகலாவின் தம்பி.

ஜெயலலிதாவின் செல்லப் பிள்ளை

இந்த நேரத்தில்தான், சொத்துக்குவிப்பு வழக்கில் முதலமைச்சர் ஜெயலலிதாவுக்கு சிறைத் தண்டனை கிடைத்தது. பெங்களூருவில் சிறைக்குள் இருந்த ஜெயலலிதாவுக்குத் தேவையான உணவு, மருந்து, ஆடைகள் போன்றவற்றைக் கொடுக்க, நம்பிக்கையான ஆள் ஒருவர் வேண்டும். `வெளியில் இருந்து ஒருவரை நம்பி இந்தப் பொறுப்புகளை ஒப்படைக்க முடியாது’ என யோசனையில் ஆழ்ந்த ஜெயலலிதாவுக்கு, விவேக் ஞாபகம் வந்தது. ஜெயலலிதா சிறைக்குள் இருந்த 21 நாட்களும் மருந்துப் பொருட்கள், உணவு... என எல்லா தேவைகளையும் நிறைவேற்றியவர் விவேக்.

அதுவரை தான் உண்டு, தன் வேலை உண்டு என இருந்தவருக்குத் தேடிவந்தது கார்டன் வேலை. ஜெயலலிதாவிடம் அவருக்குச் சமமாக ஆங்கிலத்தில் பேசும் மன்னார்குடி வாரிசு இவர் மட்டும்தான் என்பதால், அம்மாவின் செல்லப் பிள்ளையாக மாறினார் விவேக்.

ஜாமீன் பெற்று ஜெயலலிதா மீண்டும் கார்டன் வந்ததும், விவேக்கிடம் பல பொறுப்புகள் ஒப்படைக்கப் பட்டன. அதில் முக்கியப் பதவி, ஜாஸ் சினிமாஸ்  சி.இ.ஓ. கிண்டி தொழிற்பேட்டையில் இருக்கும் ஜாஸ் சினிமாஸ் அலுவலகம் இப்போது படு பிஸி. தினம் தினம் சினிமா பிரமுகர்களைச் சந்திப்பது, புதிய படங்களை விலைக்கு வாங்குவது, ஜெயா டி.வி-க்கு சேட்டிலைட் உரிமம் வாங்கிக் கொடுப்பது... என ஆல் இன் ஆல் விவேக்தான். சுமார் 400 பேர் வரை வேலைபார்க்கும் ஜாஸ் சினிமாஸ் நிறுவனம்,  தமிழ்நாட்டில் உள்ள பிரதான தியேட்டர்களை தங்கள் வசம் கொண்டு வரும் அளவு வியாபாரத்தில் மும்முரமாகிறது.

தியேட்டர்கள் எதையும் மொத்தமாக விலைக்கு வாங்காமல், குத்தகைக்கு எடுக்கலாம் என்பது 'ஐடியா'. எந்த தியேட்டராக இருந்தாலும் 5 ஆண்டுகள், 12 ஆண்டுகள் என குத்தகை அடிப் படையிலேயே பேசப்படுகின்றன. `நேரிடையாக  சொத்து வாங்கினால்தானே  வில்லங்கம் தேடி வரும். ஒப்பந்தம் போட்டுவிட்டு, தியேட்டர் ஃபர்னிச்சர்களைக் கணக்குக் காட்டி பேங்க் லோன் வாங்கலாம். லோனுக்கு மாதா மாதம் வட்டி கட்டினால் போதும். எந்த சட்டச் சிக்கலும் இல்லை' என பலரும் ஆலோசனை சொல்ல, விவேக் தரப்பு ஆர்வம் ஆகியிருக்கிறது. இதுவரையில் வங்கிக் கடனுக்கு சுமார் 1.25 கோடி ரூபாய் வரை வட்டி கட்டியிருக்கிறார்கள்.

``தமிழ்நாட்டில் 670 தியேட்டர்களில் 250 தியேட்டர்கள் தரம் வாய்ந்தவை. சினிமாவின் வெற்றி, தோல்வியைத் தீர்மானிப்பது இந்த தியேட்டர்கள்தான். இவற்றை ஒட்டுமொத்தமாகக் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவந்துவிட்டால்  தமிழ் சினிமாவின் எதிர்காலத்தைத் தீர்மானிப் பவையாக அவை மாறிவிடும். இந்தச் செயல் திட்டத்துக்கு வடிவம் கொடுப்பவர் விவேக்்'' என பின்னணியை விவரிக்கிறார் மன்னார்குடி வட்டாரங்களுக்கு நெருக்கமான ஒருவர்.


அரசியல் பஞ்சாயத்துகள் எதிலும் சிக்காமல் ஜாஸ் சினிமாஸை வளர்த்து எடுக்கும் முயற்சியில் இருக்கிறார் விவேக். ஆனால், `இன்னும் ஐந்து மாதங்களில் நடக்கவிருக்கும் சட்டமன்றத் தேர்தலுக்கான வெள்ளோட்டத்தில் அதிகம் அடிபடப்போவது விவேக் பெயராகத்தான் இருக்கும்’ என்கிறார்கள். இதுவரையிலான `ஸோ கால்டு' மன்னார்குடி குழுவினர்போல் அல்ல விவேக். இவர் தெளிவான பிசினஸ் மேன். இவர் மன்னார்குடி வெர்ஷன் 2.0.

”இன்னாது.. சுபாஷ் சந்திரபோஸ் செத்துட்டாரா? நான் நம்பலை!” – மம்தா தகவல்!

”நேதாஜி மரணம் பற்றிய சர்ச்சையில் உண்மையை வெளிகொண்டு வராமல் இருப்பது நாட்டிற்கே அவமானம்” என மேற்குவங்க முதலவர் மம்தா பானர்ஜி தெரிவித்துள்ளார். கொல்கத்தாவில் இடம் பெற்ற விழா ஒன்றில் மேற்கு வங்க முதலவர் மம்தா பானர்ஜி கலந்து கொண்டார். இந்நிகழ்வில் கலந்து கொண்ட அவர், ‘நாட்டின் தந்தை மகாத்மா காந்தி என்றால், நம் நாட்டின் தலைவர் நேதாஜி சுபாஷ் சந்திர போஸ் தான். நேதாஜி சுபாஷ் சந்திர போஸ் விமான விபத்தில் இறந்ததாக கூறப்படும் தகவல்களை, நான் நம்பவில்லை. அத்தோடு நேதாஜியின் சர்ச்சை பற்றி ரஷ்யா கூறிய கருத்துக்கள் பற்றி விசாரிக்க வேண்டும்.மேலும் நேதாஜியின் இறுதிக் காலம் குறித்து தெரிந்து கொள்ள மக்கள் ஆர்வத்துடன் உள்ளார்கள்’ என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

இதனிடையே தைவான் நாட்டில் கடந்த 1945ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் நேரிட்ட விமான விபத்தின்போது ஏற்பட்ட காயங்களால் நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ் உயிரிழந்து விட்டார் என்று பிரிட்டனில் இயங்கும் இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ள தகவல்களில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதுதொடர்பாக நேதாஜியுடன் அவரது கடைசிக் காலத்தில் இருந்ததாகக் கூறப்படும் கர்னல் ஹபிபுர் ரஹ்மான் கான், நேதாஜிக்கு சிகிச்சை அளித்ததாக கூறப்படும் ஜப்பானிய மருத்துவர்கள் டோயோஷி சுருடா, யோஷிமி, தைவான் செவிலியர் ஸான் பி ஷா, ஒருங்கிணைப்பாளர் நகமுரா ஆகிய 5 பேரின் வாக்குமூலங்கள் அடங்கிய அறிக்கைகள், பிரிட்டனைச் சேர்ந்த ஜ்ஜ்ஜ்.க்ஷர்ள்ங்ச்ண்ப்ங்ள்.ண்ய்ச்ர் என்ற இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளன. அவற்றை மேற்கோள்காட்டி அந்த இணையதளத்தில் மேலும்

“கர்னல் ஹபீபூர் ரஹ்மான்கான், இந்திய தேசிய ராணுவம், தைஹோகூவில் நடந்த விமான விபத்து தொடர்பாக எழுதிக் கொள்வது, ” கடந்த 16-8-1945ஆம் ஆண்டு காலை 10.30 மணியளவில் ஜப்பானை நோக்கி எங்கள் பயணம் தொடங்கியது.சுபாஷ் சந்திர போஸ், சில அரசாங்கள் உத்தியோகஸ்தர்கள், இவர்களுடன் நானும் அந்த குழுவில் இருந்தேன். முதல் கட்டமாக சிங்கப்பூரில் இருந்து பாங்காங் நோக்கி ஜப்பானிய பாம்பர் விமானத்தில் பயணித்தோம்.மதியம் 3.30 மணியளவில் பாங்காங் சென்றடைந்தோம். பின்னர் 17ஆம் தேதி காலை 7.30 மணியளவில் பாங்காங்கில் எங்களுக்காக இரு ஜப்பான் விமானங்கள் காத்திருந்தன.

ஒன்று இந்தியர்களுக்கு. நேதாஜி ,ஸ்ரீ ஐயர், கர்னல் கேலோனல் குல்ஷார் சிங், கர்னல் தீப்நாத் தாஸ், லெப்டினன்ட் கர்னல் பிரீதம் சிங், மேஜர் ஏ.ஹசன் மற்றும் நான் உள்ளடக்கிய 7 பேருக்கும் ஒரு விமானம். இந்திய சுதேசிய அரசுடன் ராணுவ நிர்வாகங்களை கவனிக்கும் ஜப்பானிய லெப்டினன்ட் ஜெனரல் இசோடா, சுதேசிய அரசுடன் அரசியல் விவகாரங்களுக்கான ஜப்பான் அமைச்சர் ஹெச். ஈ. ஹாட்சியா, ஆகியோர் மற்றொரு விமானத்தில் பயணித்தனர்.

அதே தினத்தில் காலை 10.45 மணிக்கு வியட்நாமில் உள்ள சைகூன் (தற்போது ஹோசிமின் ) போய் சேர்ந்தோம். அன்று மாலை லெப்டினன்ட் ஜெனரல் இசோடா, ஹாட்சியா, கர்னல் தாடா, நேதாஜிக்கு ஒரு தகவல் அளித்தனர். அதாவது ஜப்பான் புறப்படும் விமானத்தில் இரு இருக்கைகள் எஞ்சியிருக்கின்றன. ஜப்பானுக்கு புறப்படத் தயாராகுங்கள் என்று கூறப்பட்டது. விமானத்தில் இருக்கைகள் இல்லாத நிலையில் எங்களுடன் வந்த சுதேசிய ராணுவ அதிகாரிகள் அங்கேயே தங்கி விட்டனர்.

நேதாஜி என்னை மட்டும் உடன் அழைத்துக் கொண்டார். சைகூனில் இருந்து மாலை5.15 மணியளவில் அந்த இரட்டை என்ஜீன் கொண்ட மிட்சுபிசி கே.ஐ- 21 ரக ஜப்பானிய பாம்பர் விமானம் புறப்பட்டது. இரவு 7.45 மணிக்கு பிரெஞ்சு படைகளின் கட்டுப்பாட்டில் இருந்த தரோன் நகரில் ( வியட்நாமில் உள்ள டா நாங் என்ற கடற்கரை நகரம் ) விமானம் தரை இறங்கியது.

அன்றைய இரவு அங்கேயே கழித்தோம். அடுத்த நாள் காலை அதாவது 1945ஆம் ஆண்டு ஆகஸ்ட் 18ஆம் தேதி காலை எங்கள் விமானம், தைவானில் உள்ள தைஹோகூ (தற்போது தைபே) நோக்கி பயணத்தை தொடங்கியது. மதியம் 2 மணிக்கு அங்கு சென்றடைந்தோம். சுமார் 35 நிமிடங்கள் ஓய்வெடுத்தோம். தொடர்ந்து 2.35 மணிக்கு ஜப்பானை நோக்கி விமானம் புறப்படத் தொடங்கியது. தைஹோகூ ஏரோ டிராமை விட்டு விமானம் மேலெழும்பத் தொடங்கிய சில நிமிடங்களிலேயே விமானத்தின் முன் பகுதியில் இருந்து குண்டு வெடித்தது போல பெரும் சத்தம் கேட்டது.

விமான என்ஜீனில் உள்ள இறக்கை ஒன்று உடைந்து தொங்கியதால் ஏற்பட்ட சத்தம் அது. அடுத்த நிமிடமே தரையை நோக்கி விமானம் பாய்ந்தது. விமானம் தரையில் மோதியவுடன் முன்பக்கம் பின்புறமும் தீ பற்றத் தொடங்கியது. விமானத்தில் நேதாஜி பெட்ரோல் டேங் அருகில் இருந்தார். நான் அவருக்கு அருகில் இருந்தேன். விமானத்தில் பற்றி எரிந்த தீக்கிடையே நாங்கள் வெளியேறினோம். முதலில் நான் வெளியே வந்தேன். எனக்கு பின்னால் நேதாஜி வந்தார். விமானத்தை விட்டு வெளியே வந்த நான் திரும்பி பார்த்த போது, நேதாஜியின் உடல் முழுவதும் தீ பற்றி எரிந்ததை பார்த்தேன். நான் அவரது உதவிக்கு ஓடினேன். அவரது உடைகளை கழற்றினேன்.

ஆனால் அவருக்கு உடல் முழுவதும் பலத்த தீக்காயங்கள் ஏற்பட்டிருந்தது. விமானம் கீழே விழுந்ததில் நேதாஜிக்கு தலையிலும் பலத்த காயம் ஏற்பட்டிருந்தது. விமானம் தரையில் விழுந்த நேரத்தில் பெட்ரோல் டேங் வெடித்து அதில் இருந்த பெட்ரோல் நேதாஜி மீது சிதறியிருக்கலாம் என்பது என் கணிப்பு. இதனால்தான் அவர் மீது தீ இலகுவாக பரவியிருக்கலாம் என்று கருதுகிறேன். எனினும் அருகில் இருந்த ஜப்பானிய மருத்துவமனைக்கு 15 நிமிடத்துக்குள் நேதாஜியை கொண்டு போய் விட்டோம்.

எனக்கும் உடல் எங்கும் தீக்காயங்கள், தலையில் பலத்த அடி பட்டிருந்தது. நேதாஜியை காப்பாற்ற எவ்வளவோ முயற்சித்தோம். மருத்துவர்கள் தீவிரமாக போராடி பார்த்தனர். ஆனால் அன்று இரவு 9 மணியளவில் நேதாஜி மரணம் அடைந்து விட்டார். நேதாஜி இறப்பதற்கு முன்னால் மிகுந்த அமைதியுடன் இருந்தார். என்னிடம் பேசினால் கூட இந்திய சுதந்திரம் பற்றிதான் அவரது பேச்சு இருந்தது. தான் இறக்கும் தருவாயில் இந்தியாவின் சுதந்திரத்தை பற்றிதான் பேசிக்கொண்டுதான் இறந்ததாக தனது சகத் தோழர்களிடமும் அறிவிக்கச் சொன்னார்.

” நான் கடைசி வரை இந்தியாவின் சுதந்திரத்துக்காகவே போராடினேன். எனது இறப்பும் அதே முயற்சிக்காகவே நிகழ்ந்துள்ளது. தோழர்களே கடைசி வரை போராட்டத்தை கைவிட்டு விடாதீர்கள் ”என்பதே நேதாஜி இந்திய சுதந்திர போராட்ட வீரர்களுக்கு அளித்த இறப்பு செய்தி. இந்த விபத்தில் லெப்டினன்ட் ஷிடாய், மற்றும் இரு ஜப்பானிய காமெண்டர்களும் இறந்து போனார்கள்.

மற்றவர்கள் எல்லாருக்கும் பலத்த காயம் ஏற்பட்டிருந்தது. நேதாஜி இறந்ததும் அவரது உடலை டோக்கியோவுக்கு அல்லது சிங்கப்பூருக்கோ கொண்டு செல்ல வேண்டுமென்று நான் வலியுறுத் தினேன். சிங்கப்பூர் கொண்டு செல்ல வேண்டுமென்பதே எனது நோக்கமாக இருந்தது. தேவையான உதவிகள் செய்யப்படுவதாக வாக்களிக்கப்பட்டது. விரைவில் சவப் பெட்டிக்கு ஏற்பாடு செய்யப்படுவதாகவும் விபத்து குறித்து சைகூன் மற்றும் டோக்கியோவுக்கு தகவல் அளிக்கப்பட்டுள்ளதாக என்னிடம் கூறப்பட்டது.

நேதாஜி இறந்த 3 நாட்களுக்கு பிறகு, அதாவது 21ஆம் தேதி அவரது உடலை எடுத்து செல்வது சாத்தியமில்லை. எனவே அவரது உடலை தைஹோகூவிலேயே எரித்து விடுமாறு என்னிடம் தகவல் தரப்பட்டது. எனக்கும் வேறு வழி தெரியவில்லை. நானும் அதனை ஏற்றுக்கொண்டேன். தொடர்ந்து 22ஆம் தேதி நேதாஜியின் உடலை ஜப்பானிய ராணுவ அதிகாரிகள் உதவியுடன் எரித்தேன். பின்னர் 23ஆம் தேதி நேதாஜியின் சாம்பலை சேகரித்தேன்.

நேதாஜியின் அஸ்தியை டோக்கியோவில் ஒரு இடத்தில் பத்திரப்படுத்தி வைத்துக் கொண்டு, தக்க சமயத்தில் இந்தியா கொண்டு வரலாம் என்று எனக்கு அறிவுரை கூறப்பட்டது. எதிர்பாராமல் நடந்த விபத்தின் உண்மை நிலவரம் இதுதான். நான் ஜப்பானிய அதிகாரிகளிடம் நேதாஜியின் அஸ்தியை பத்திரப்படுத்தி வைக்குமாறு கேட்டுக் கொண்டேன். அப்போதுதான் என் தேசத்தின் தன்னிகரற்ற தலைவனை ஒரு உண்மையான ஹீரேவை வருங்கால சந்ததியினர் அறிந்து கொள்ள முடியும்.”

இப்படிக்கு,
கர்னல் .ஹபீபூர் ரஹ்மான்கான்
தைஹோகூ, தைவான்
24-8- 1945” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது

“கரும்பு தின்ன கூலி வேணுமா ?”-ன்னு ஏன் கேக்கறாங்க தெரியுமா?

கரும்பு என்றாலே தைப்பொங்கல்தான் நம் நினைவுக்கு வரும். சிறுவர்கள் முதல் பெரிய வர்கள் வரை அனைவரும் இதை விரும்பி சாப்பிடுவர். “கரும்பு தின்ன கூலி வேண்டுமா?”  என்பது பழமொழி. இத்தகைய சிறப்பு வாய்ந்த கரும்பு பற்றிய சுவையான சில தகவல்களைப் பார்ப்போம்.

தோற்றம்

சுமார் 8 ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்னாள் தென் பசிபிக் தீவுகளில் கரும்பு முதல் முறையாக பயிரிடப்பட்டது. கி.மு.500-ம் ஆண்டு இந்தியாவில் சீனி தயாரிக்க ஆரம்பித்தனர். இது கி.மு.100ல் சீனாவுக்கும் பரவியது. பிரேசில், இந்தியா, சீனா, கியூபா ஆகிய நாடுகள் 50 சதவீதத்திற்கும் மேற்பட்ட கரும்பை உற்பத்தி செய்கின்றன. கரும்பு தற்போது 200-க்கும் மேற்பட்ட நாடுகளில் பயிர் செய்யப்படுகிறது. உலகில் 70 சதவீதத்திற்கும் அதிகமான சீனி கரும்பிலிருந்துதான் தயாரிக்கப்படுகிறது.

தமிழர் பண்பாட்டில் கரும்பு

கரும்பென்றால் இனிப்பு, இன்பம் என்று சொல்வார்கள். அதனால்தான், தைப் பொங்கல் அன்று கரும்பை முக்கிய உணவாக வைத்து கொண்டாடுகின்றனர். கரும்பு, அதியமானின் முன்னோரால் கொண்டு வரப்பட்டது என்றார் அவ்வையார். அத்தகைய சிறப்பு வாய்ந்தது கரும்பு.

கரும்பில் இருந்து தயாரிக்கப்படும் பொருட்கள்

வெல்லம், பழுப்புச் சர்க்கரை, சீனி, கற்கண்டு போன்றவை கரும்பில் இருந்து தயாரிக்கப்படுகின்றன.

இப்போது கரும்பை சாப்பிட்டால், என்ன நன்மைகளைப் பெறலாம் என்பதைப் பார்ப்போமா!!!

மஞ்சள் காமாலை

கரும்பு சாற்றில் மஞ்சள் காமாலையை குணப்படுத்தும் மருத்துவப் பொருள் நிறைந்துள்ளது. பொதுவாக மஞ்சள் காமாலை வந்தால், சருமம் மஞ்சள் நிறத்தில் காணப்படும் இதற்கு காரணம், பிலிரூபின் இரத்தத்தில் கலந்திருப்பதே ஆகும். அதுமட்டுமின்றி மோசமான கல்லீரல் செயல்பாடுகள் மற்றும் பித்த நாளங்களில் அடைப்பு போன்றவைகளும் மஞ்சள் காமாலையை உண்டாக்கும். எனவே மஞ்சள் காமாலையிலிருந்து உடனே குணமாவதற்கு, இரண்டு டம்ளர் கரும்பு சாற்றுடன் எலுமிச்சை மற்றும் உப்பு சேர்த்து குடிக்க வேண்டும்.

தொற்றுநோய்கள்

உடலில் உள்ள சிறுநீரக குழாய், பிறப்புறுப்பு, செரிமான மண்டலக் குழாய் போன்ற பல இடங்களில் தொற்றுநோய்களினால் எரிச்சல், அரிப்பு போன்றவை ஏற்படும். இத்தகை யவற்றை சரிசெய்ய ஒரு டம்ளர் கரும்பு சாறு குடித்தால், அவை சரியாகிவிடும்.

சிறுநீரக கற்கள்

கரும்பின் நன்மைகளிலேயே முக்கியமான ஒன்று என்றால் அது சிறுநீரக கற்களை குணமாக்குவது தான். பொதுவாக இந்த கற்கள் உடலில் ஏற்படும் வறட்சியினால் ஏற்படும். அதற்காகத் தான் அடிக்கடி தண்ணீர் குடிக்க வேண்டும் என்று மருத்துவர்கள் அறிவுறுத்துகின்றனர். ஏனெனில் அவை அந்த கற்களை உடைத்து வெளியேற்றிவிடும். எனவே தண்ணீர் மட்டுமின்றி, கரும்பு சாற்றையும் குடித்தால், அந்த கற்கள் எளிதில் உடைந்து கரைந்துவிடும்.

நீரிழிவு கரும்பு

இனிப்பாக இருப்பதால், நீரிழிவு நோயாளிகள் சாப்பிட பயப்படுவார்கள். ஆனால் உண்மையில் இதில் இருக்கும் இனிப்பானது இரத்தத்தில் உள்ள குளுக்கோஸின் அளவை சீராக வைக்கும். எனவே உடல் எடையை குறைக்க விரும்புவோர் அல்லது சர்க்கரை நோயால் பாதிக்கப்பட்டவர்கள், இதனை எந்த ஒரு அச்சமுமின்றி சாப்பிடலாம்.

ஊட்டச்சத்துக்கள்

கரும்பில் வைட்டமின் மற்றும் கனிமச்சத்துக்கள் அதிகம் உள்ளது. அதிலும் பாஸ்பரஸ், இரும்புச்சத்து, பொட்டாசியம், கால்சியம் மற்றும் மக்னீசியம் போன்றவை அதிக அளவில் இருப்பதால், உடலில் எந்த ஒரு ஊட்டச்சத்து குறைபாடுமின்றி, உடலை ஆரோக்கியமாக வைத்துக் கொள்ளலாம்

சளி, இருமல் மற்றும் தொண்டை வலி

நிறைய பேர் இருமல், சளி அல்லது தொண்டை வலி இருந்தால், கரும்பை நிச்சயம் சாப்பிடக் கூடாது என்று சொல்வார்கள். ஆனால் உண்மையில் அந்த மாதிரியான எண்ணம் தவறானது. இந்த மாதிரியான பிரச்சனைக்கு சிறந்தது என்று சொன்னால், அது கரும்பு தான்.

புற்றுநோய்

கரும்பில் இயற்கையாக உள்ள அல்கலைன் என்னும் பொருள், புற்றுநோயை குணப்படுத்தும் தன்மையுடையது. குறிப்பாக பெருங்குடல், நுரையீரல் அல்லது மார்பக புற்றுநோய் போன்றவற்றிற்கு சிறந்தது.

நீர் வறட்சி

நிறைய மக்கள் அதிக அளவு தண்ணீர் குடிப்பதை விரும்பமாட்டார்கள். எனவே அத்தகையவர்களுக்கு உடலில் ஏற்படும் வறட்சியை நீக்க கரும்பு சாற்றை குடிக்கலாம். மேலும் கோடைகாலத்தில் உடலானது அதிக சூடாக இருக்கும். எனவே உடல் வெப்பத்தை தணிப்பதற்கு தினமும் ஒரு டம்ளர் கரும்பு சாறு குடிப்பது நல்லது.ஆக கரும்பு தின்றால் நமக்கு இத்தனை நன்மைகள் கிடைக்கும் போது இதைச் சாப்பிட கூலி வேணுமா என்ன?

தாரை தப்பட்டை– குடும்பத்தோடு பார்ப்பதற்கு ஏதுவான படம் கிடையாது..உண்மையா பாலா..?

சென்னை – ஊர்த்திருவிழாவிற்கு ஆட வரும் கரகாட்டக் கலைஞர்களுக்கு அந்த ஊரே சேர்ந்து சகல மரியாதையுடன் வரவேற்பு அளித்து, அவர்களின் அற்புதமான நடனக் கலையை பய பக்தியுடன் பார்த்து ரசித்த காலம் போய், இன்று காலப்போக்கில் அந்தக் கரகாட்டக் கலை வெறும் ஆபாச அசைவுகள் கொண்ட நடனங்களாகவும், இரட்டை அர்த்த பாடல்களாகவும் மாறிவிட்டது.

அப்படி காலத்திற்கு ஏற்ப தங்களை மாற்றிக் கொண்டு விட்ட கலைஞர் போக, சிலர் இன்றும் தனது தாத்தன், அப்பன் கற்றுக் கொடுத்த அற்புதமான கரகாட்டக் கலையை குலசாமியாகப் பார்த்துக் கொண்டும், கலைஞர் என்ற சுயமரியாதையையும் இழக்க முடியாமலும் ஏழ்மை நிலையில் வாடி தவிப்பதை நாளிதழ்களில் படித்திருப்போம்.

அப்படிப்பட்ட ஒரு கலைக்குழுவின் வாழ்க்கையைச் சொல்லும் படம் தான் ‘தாரை தப்பட்டை’

கரகாட்டக்கலைக்கு ஏன் இந்த நிலை? அதற்குப் பின்புலமான கலாச்சார மாற்றங்கள் என்ன? போன்றவைக்கெல்லாம் ஆழமாகச் செல்லாமல், பொருளாதார சிக்கலில் தவிக்கும் ஒரு கரகாட்டக்குழு எதிர்க்கொள்ளும் பிரச்சனைகளை முன்வைத்து தனது வழக்கமான இரத்தம் சொட்டும் பாணியில் கதை சொல்லியிருக்கிறார் இயக்குநர் பாலா.

கதைச்சுருக்கம்

சன்னாசியின் (சசிக்குமார்) கரகாட்டக்குழுவை நம்பி சில கலைஞர்கள் தங்களின் குடும்பத்தோடு வாழ்ந்து வருகின்றனர். அவர்களுள் சூராவளிக்கு (வரலட்சுமி) சசிக்குமார் மீது காதல். சன்னாசிக்கு மனதில் காதல் இருந்தாலும் அதை வெளிக்காட்டாமல் தன்னை நம்பியிருக்கும் கலைஞர்களின் நலனுக்காகவே பாடுபடுகின்றார்.

சூராவளியின் வாழ்க்கையில் ஏற்படும் திடீர் மாற்றத்தால், சன்னாசியின் கரகாட்டக்குழு மொத்தமும் பொருளாதார நெருக்கடியைச் சந்திக்கிறது. அந்தச் சூழ்நிலையில், சூராவளி ஒரு ஆபத்தில் சிக்கியிருப்பதை அறியும் சசிக்குமார் அவரைக் காப்பாற்றினாரா? இல்லையா? என்பதே மீதிக் கதை.

நடிப்பு

கதாநாயகன் சசிக்குமார் தான் என்றாலும் கூட, படத்தில் கதாநாயகனையும் மீறி நம்மைக் கவர்ந்து இழுப்பது வரலட்சுமி சரத்குமார் தான்.

சூராவளி என்ற கதாப்பாத்திரத்தில் அச்சு அசலாக ஒரு கரகாட்டக் கலைஞராகவே வாழ்ந்திருக்கிறார்.

படம் தொடங்குவதற்கு முன்னர் ‘குடி குடியைக் கெடுக்கும்’ என்ற வாசகத்தை சசிக்குமார் வாசிக்கிறார். அதற்குப் பதிலாக வரலட்சுமியை வாசிக்க வைத்திருக்கலாம். காரணம், படத்தில் பெரும்பாலான காட்சிகளில் அவர் தான் குடிக்கிறார். (அதற்கு எப்படிப்பட்ட எதிர்ப்புகள் வரப் போகின்றன என்பது இனிமேல் தான் தெரியும்).

சசிக்குமாரை விடாப்பிடியாக விரட்டி விரட்டி காதலிப்பதாகட்டும், தன்னைப் பற்றி தவறாகப் பேசியவர்களை கோபப்பட்டு  தூக்கிப் போட்டு அடிப்பதாகட்டும் வரலட்சுமி ‘சூராவளி’க்கு மிகச் சரியாகப் பொருந்துகின்றார்.

“மொத எம் மாமன் பசியாத்துங்க… என் மாமன் பசின்னு சொன்னா நான் அம்மணமா கூட ஆடுவேன்” இந்த வசனமும், அந்தக் காட்சியின் வலிமையும் படம் பார்க்கும் போது தெரியும். வரலட்சுமி கிரேட்…

சன்னாசி கதாப்பாத்திரத்தில் சசிக்குமார் மிக இயல்பாக நடித்திருக்கிறார். என்றாலும் அவரின் முந்தைய படங்களுக்கும், இந்தப் படத்திற்கும் நடிப்பில் பெரிய வித்தியாசங்கள் தெரியவில்லை.

தொட்டதற்கெல்லாம் வரலட்சுமியை தலையிலேயே அடிப்பதும், இல்லையென்றால், ஆட்டக்கார சிரிக்கி, அவளே, இவளே என்று கெட்டவார்த்தைகளை பிரயோகிப்பதுமாக இருக்கிறது சசிக்குமார் கதாப்பாத்திரம்.

ஆனால் தனது தந்தை மீது கோபம் கொள்வது, வரலட்சுமியின் துயரம் கண்டு கண்ணீர் சிந்துவதுவது, தனது குழுவினரின் நலனில் அக்கறை கொள்வது போன்ற காட்சிகளில் மட்டும் சசிக்குமாரை ரசிக்க முடிகின்றது.

அடுத்ததாக படத்தில் நம்மை ஈர்ப்பது சசிக்குமாரின் அப்பாவாக நடித்திருக்கும் ஜி.எம்.குமார் தான்.

அனுபவம் வாய்ந்த கரகாட்டக் கலைஞர் என்ற முறையில் திமிருடனும், யாருக்கும் பணிந்து கொடுக்காத கம்பீரத்துடன் வலம் வருவதும், இன்றைய காலத்துக் கலைஞர்களை கண்டபடி திட்டித் தீர்ப்பதுமாக நடிப்பில் கலக்கியிருக்கிறார். கதையோட்டத்திற்கு அவர் இருப்பு பக்கபலம் சேர்த்திருக்கிறது.

இவர்கள் தவிர புதுமுக வில்லன் ஒருவரை அறிமுகப்படுத்தியிருக்கிறார் பாலா. ‘நான் கடவுள்’ ராஜேந்திரனைப் பார்த்த போது ஏற்பட்ட ஒரு மிரட்டல் இவரிடம் இல்லையென்றாலும் கூட அந்தக் கதாப்பாத்திரத்திற்குப் பொருந்துகின்றார்.

ஒளிப்பதிவு

செழியன் ஒளிப்பதிவில் காட்சிகள் அனைத்தும் அத்தனை உயிர்ப்பு. அந்தமான் நாட்டில் நடக்கும் காட்சிகளில் ஒரு இடத்தில் கூட கதைக்குச் சம்பந்தமில்லாத இடங்களை படம்பிடிக்காமல், எதார்த்தமாக காட்சிகளை அமைத்திருப்பது சிறப்பு. அதன் காரணமாக, உண்மையில் அக்காட்சிகள் அந்தமானில் தான் படம்பிடிக்கப்பட்டனவா என்ற சந்தேகம் கூட எழலாம்.

இசை

இசைஞானியின் 1000-மாவது படம். இசை பற்றி சொல்லவா வேண்டும். இரண்டு வாரங்களுக்கு முன்பு பாடல்கள் யூடியூப்பில் வெளியான போதே ரசிகர்கள் மத்தியில் அதற்கு அத்தனை வரவேற்பு.

பின்னணி இசையும், பாடல்களும் தாரை தப்பட்டையோடு பட்டையைக் கிளப்பியிருக்கிறது.

யாருக்கான படம்?

பாலாவின் வழக்கமான பாணியில் படம் இயக்கப்பட்டிருந்தாலும் கூட, வழக்கமாக அவர் படங்களில் இடைவேளைக்கு முன்பு வரை இருக்கும் ஜனரஞ்சகமான நகைச்சுவைக் காட்சிகள் இப்படத்தில் மிகக் குறைவு. அவற்றை இன்னும் அதிகப்படுத்தியிருந்தால் சிறப்பாக இருந்திருக்கும்.

மேலும், பாலாவிடமிருந்து தொடர்ந்து ஒரே மாதிரியான பாணியைப் பார்த்துவிட்டதால், முடிவு இது தான் என்று ரசிகர்களால் கணித்து விட முடிவது படத்திற்கு மிகப் பெரிய பலவீனம்.

அதோடு கடைசி கிளைமாக்ஸ் சண்டை கொடூரமாக இருக்கும் என்பதை அறிந்து பலர் முடிவிற்கு முன்னரே எழுந்து வெளியே செல்வதைக் காண முடிந்தது.

மொத்தத்தில், ‘தாரை தப்பட்டை’  இளையராஜாவின் இசையாலும், முன்பாதியில் இருக்கும் கரகாட்ட காட்சிகளாலும், வரலட்சுமியின் நடிப்பாலும் மட்டுமே ஈர்க்கிறது.

பாலா பட ரசிகர்களைத் தவிர குடும்பத்தோடு பார்ப்பதற்கு ஏதுவான படம் கிடையாது.

“ரஜினிமுருகன்” – தாமதித்து வந்தாலும் பொங்கல் கலகலப்பு; தித்திப்பு குறையாதவன்!

தாமதித்து வந்தாலும், அனைத்து குடும்பத்தினரும் பார்க்கும் வண்ணம், கதை, வசனங்கள், நடிப்பு, பாடல்கள், என எல்லா அம்சங்களிலும் பொங்கல் வெளியீடுக்கேற்ற கலகலப்பு கலந்து, இரசிகர்களை ஏமாற்றாத வண்ணம் வெளிவந்து, சிவகார்த்திகேயனின் நட்சத்திர அந்தஸ்தை மேலும் உயர்த்தியுள்ளது ரஜினிமுருகன்.

தயாரிப்பாளர் என்ற முறையில், ‘அஞ்சான்’,  ‘உத்தமவில்லன்’ படங்களால் நொந்துபோன லிங்குசாமி சந்தோஷமாக இன்றைக்கு பொங்கல் வைக்கலாம். வெளியிடப்படும் தமிழகத்தின் 800 தியேட்டர்களிலும் வசூல் மழையாம்.

கதை, திரைக்கதை

‘வருத்தப்படாத வாலிபர் சங்கம்’ படத்தை எழுதி இயக்கிய பொன்ராம் ஏறத்தாழ அதே குழுவுடன், அதே பாணியில் மீண்டும் களமிறங்கி வெற்றியடைந்திருக்கின்றார்.

நாம் இதுவரை பார்க்காத கதை, கதாபாத்திரங்கள் என்று கூற முடியாது. ஆனால், சம்பவங்கள் புதிதாக இருக்கின்றன. படத்தின் இறுதிவரை, கவர்ச்சி கலக்காமல், வெளிநாட்டுப் பாடல்கள் என வெறுப்பேற்றாமல், கதாநாயகன் என்பதற்காக தேவையில்லாத சண்டைக்காட்சிகள் வைக்காமல், வசனங்கள், சம்பவங்கள், திரைக்கதையை மட்டும் நம்பி படத்தை நகர்த்துகின்றார் இயக்குநர்.

தனது பாரம்பரிய வீட்டை விற்று அந்தப் பணத்தை மகன்களுக்கும், பேரன்களுக்கும் பிரித்துக்கொடுக்க ஏற்பாடு செய்கின்றார் தாத்தா ராஜ்கிரண். ஆனால், சில மகன்களும், பேரன்களும் வெளிநாடுகளில் தங்கியிருக்கின்றனர். அவர்கள் அனைவரும் வந்தால்தான் வீட்டை விற்கமுடியும் என்ற நிலைமை.

அதற்காக, அவருக்கு தினமும் சாப்பாடு கொடுத்து அவரை கவனித்துக் கொள்ளும் வேலையில்லாத, ஊர்சுற்றி பேரன் சிவகார்த்திகேயனோடு சேர்ந்து என்ன சுவாரசியமான திட்டம் போடுகிறார் ராஜ்கிரண் என்பது படத்தின் ஒரு கிளைக் கதை.

இன்னொரு கிளைக் கதையிலோ, கீர்த்தி சுரேஷை சிறு வயதிலிருந்தே காதலிக்கின்றார் சிவகார்த்திகேயன். ரஜினியின் இரசிகர்களாக இளமையில் உலா வரும் சிவகார்த்திகேயனின் தந்தை சம்பந்தனும், கீர்த்தி சுரேஷின் தந்தையும் ஒரு வாய்த் தகராறில் நிரந்தரமாகப் பிரிந்து விடுகின்றனர்.

சிவகார்த்திகேயனுக்கு கீர்த்தியை கட்டிக் கொடுக்க மாட்டேன் என்று கூறி கீர்த்திக்கு கட்டுப்பாடுகள் விதிக்கின்றார் அவரது தந்தை.

எல்லாவற்றையும் மீறி சிவகார்த்திகேயன் கீர்த்தியை விரட்டி விரட்டி காதலிக்க, இறுதியில் அவரது காதல் வலையில் விழுகின்றார் கீர்த்தி. அவர்கள் காதல் நிறைவேறியதா என்பது படத்தின் இன்னொரு பகுதி

படத்தின் வில்லன் ஏழரை மூக்கன் என்ற சமுத்திரகனி. ஊர் முழுக்க பணக்காரர்களை வளைத்து அவர்களிடமிருந்து பணம் பிடுங்கும் குரூர மனம் கொண்ட தாதா.

ஒரு கட்டத்தில் ராஜ்கிரணின் வீட்டில் தனக்கும் சொந்தம் இருக்கின்றது என்று பொய் சொல்லி, கதைக்குள் நுழைகின்றார் சமுத்திரகனி. அவரை சிவகார்த்திகேயனும், ராஜ்கிரண் குடும்பத்தினரும் எப்படி சமாளிக்கின்றார்கள் என்பது மற்றொரு பகுதி. இந்த மூன்றையும் குழப்பமில்லாமல் தெளிவாக ஒன்றிணைத்து, இறுதி வரை கலகலப்பான திரைக்கதையை அமைத்திருக்கின்றார் இயக்குநர்.

படத்தின் ஊடே, ரஜினிமுருகன் பெயருக்கேற்ப ரஜினியை நன்றாக பயன்படுத்தியிருக்கின்றார்கள். படத்தின் ஆரம்பத் தலைப்புகளிலேயே ரஜினிக்கு மறக்காமல் நன்றியும் போட்டிருக்கின்றார்கள்.

படத்தின் பலம் – சுவாரசியங்கள் # 1 சிவகார்த்திகேயன் – சூரி கூட்டணி

படத்தின் முதுகெலும்பே சிவகார்த்திகேயன்தான். அவருடன் சேர்ந்து கலக்குகின்றார் சூரி. இறுதிவரை இந்தக் கூட்டணி படம் பார்க்க வந்தவர்களை போரடிக்க வைக்காமல், சிரிப்பலையில் மிதக்க வைத்திருக்கின்றது.

ரஜினிக்கு அடுத்து யார் என திரையுலகமே விவாதித்துக் கொண்டிருக்கும் சூழ்நிலையில் அந்த இடத்தை அலுங்காமல், குலுங்காமல், சிவகார்த்திகேயன் சத்தமில்லாமல் உள்ளே நுழைந்து பிடித்து அழுத்தமாகக் கால் பதித்து விடுவார் போல் தெரிகின்றது.

இயல்பான நகைச்சுவை வசனங்களைத் தெறிக்க விடுவதாகட்டும், சண்டைக் காட்சிகளில் காட்டும் ஆக்ரோஷம், காதல் செய்யும் இலாவகம், நடனத்தில் பின்னி எடுப்பது என ஒரு சினிமா சூப்பர் ஹீரோவுக்கான அத்தனை அம்சங்களிலும் – அந்தக் கால ரஜினி பாணியில் கலக்குகின்றார்.

அடுத்த ரஜினியா அவர்? காலம்தான் விடை கூறவேண்டும்!

படத்தின் பலம் – சுவாரசியங்கள் #  2 காலத்துக்கேற்ற கருத்துகள்

படத்தின் ஊடே, அப்பாக்களையும், தாத்தாக்களையும் மகன்கள் கவனிக்காதது, வெளிநாடு போனவர்களால் ஏற்படும் பிரச்சனைகள், வெளிநாட்டுக் குழந்தைகள் தமிழ் படிக்காதது, ஒரு முதியவரின் இறுதிக் காலத்தில் அவர் எதிர்நோக்கும் சொத்துப் பிரச்சனைகள், பாரம்பரிய வீட்டை தற்காப்பது, என்பது போன்ற பல கருத்தான அம்சங்களையும் வாழைப்பழத்தில் ஊசி ஏற்றுவது போல் மனதில் தைக்கும் வண்ணம் செருகியிருக்கின்றார் இயக்குநர்.

மதுரை மண்ணின் மணத்தை ஊர்ப் பஞ்சாயத்து மூலம் காட்டியிருப்பது வழக்கமானது என்றாலும், இதில் வரும் இறுதிக் ‘கட்ட’ பஞ்சாயத்துகள் வித்தியாசமாகவும், விறுவிறுப்பாகவும் இருக்கின்றன.

வாழைத்தாரிலிருந்து ஒரு வாழைப் பழத்தை உரித்தெடுக்க ஒருவர் மதுரை மண்ணிற்கே உரிய கெத்துடன் வசனம் பேசி இழுப்பது திரையரங்கையே குலுங்க வைக்கின்றது.

ஒளிப்பதிவு-படத் தொகுப்பு-இசை

வண்ணமயமான ஒளிப்பதிவு தந்திருப்பவர் பாலசுப்ரமணியெம். படத் தொகுப்பும் விறுவிறுப்பு குறையாமல் செல்கின்றது.

கவரும் மற்றொரு அம்சம் பாடல்களும் அவை படமாக்கப்பட்டிருக்கும் விதமும். வழக்கமான காதல் பாடல்கள் போல் இல்லாமல், பாடல் காட்சிகளோடு காதலையும், கதையையும் நகர்த்தியிருக்கின்றார்கள். அவர்களுக்குப் பக்கத்துணை இசையமைப்பாளர் டி.இமான்.

‘என்னம்மா இப்படி பண்றீங்களேம்மா”-வில் ஆரம்பித்து, ‘உன்மேலே ஒரு கண்ணு’ என்ற மெல்லிசைப் பாடல், திருவிழாப் பாடல்கள் என இரசிகர்களைத் துள்ளி ஆட வைத்திருக்கின்றார் இமான்.

தேநீர்க்கடை நடத்தும் சிவாவும், சூரியும் இடையிடையே பொருத்தமான பழைய சினிமாப் பாடல்களைப் போடுவது கவரும் இன்னொரு அம்சம்.

நடிப்பு

சிவகார்த்திகேயன், சூரியைப் பற்றி ஏற்கனவே சொல்லியாகிவிட்டது.

படத்தைத் தூக்கி நிறுத்தும் மற்றொருவர் கீர்த்தி சுரேஷ். கவர்ச்சியோ, கதாநாயகனுடன் நெருக்கமோ காட்டாமல், கண்களாலும், உதட்டுச் சுழிப்புகளினாலும், சிரிப்பினாலும் அசத்துகின்றார். முன்னாள் நடிகை மேனகாவின் மகள். அம்மாவின் மலையாள அழகு பாரம்பரியமாக தொடர்ந்து கீர்த்தியிடம் ஒட்டிக் கொண்டிருக்கின்றது. தொழிலில் கவனம் செலுத்தினால், தமிழ்த் திரையுலகின் அடுத்த சூப்பர் ஹீரோயின் இவர்தான்.

ராஜ்கிரண், சம்பந்தன், என படத்தில் வரும் பல கதாபாத்திரங்களும் சிறப்பாகவே நடித்திருந்தாலும், படத்தின் எதிர்பாராத இணைப்பாக வந்து அனைவரையும் கவர்பவர் கீர்த்தியின் அப்பாவாக வரும் நடிகர். எங்கு தேடியும் பெயர் அகப்படவில்லை.

அப்பாவாக மிடுக்கு, கண்டிப்பு, சம்பந்தனிடம் நட்பு பாராட்டுவது, ரஜினி ஸ்டைலில் முடியை வைத்துக் கொண்டு அதே போல அடிக்கடி கோதிவிடுவது, அவ்வப்போது தனது நிலைமையைச் சொல்ல ரஜினியின் வசனங்களைப் போட்டுக் காட்டுவது எனப் பின்னுகின்றார். தமிழ்ப்படங்களுக்கு இன்னொரு புது அப்பா!

சமுத்திரகனியைப் பற்றிச் சொல்லவே வேண்டியதில்லை. மதுரைக்கார கெத்தையும், வில்லத்தனத்தையும் கண்முன்னே நிறுத்துகின்றார். அவரது மதுரைக்கார கெத்தையும், திமிரையும் அதே மதுரை மண்ணின் பாரம்பரியம் கொண்டு அடக்குவது, படத்தில் பார்த்துத் தெரிந்து கொள்ள வேண்டிய அம்சம். இறுதியில் கூட தனது சுபாவத்தை விட்டுக் கொடுக்காமல் அடிவாங்கிய பின்னரும் அதே கெத்துடன் வெளியேறுவதில் சமுத்திரகனியின் நடிப்பு முத்திரை தெரிகின்றது.

இப்படி எல்லா முனைகளிலும் பொங்கல் குதூகலத்துக்கு ஏற்ற விருந்தாக, கலகலப்பும், தித்திப்பும் கலந்து உருவாகியிருக்கும் ‘ரஜினிமுருகன்’ அனைவரும் தவறாமல் பார்த்து மகிழவேண்டிய படம்!

கற்பூரம் கொடிய விஷம்!

‘கற்பூரம் கொடிய விஷம்! வீட்டில் வைப்பதை தவிருங்கள்!!’
எனது நண்பரின் நண்பர் மகனுக்கு நடந்தது. இதனால், அவரது வாழ்க்கை கடந்த முப்பது நாட்களாக ‘ரோலர்கோஸ்டர்’ போல மாறிவிட்டிருந்தது. என்ன நடந்தது என்று அவரே சொல்கிறார் இதோ கேளுங்கள்:

“வீட்டில் சாமி போட்டோவிற்கு முன் கற்பூரம் வைத்திருந்தோம். அதை ‘கல்கண்டு’ என்று நினைத்து மூடிவைத்திருந்ததை எப்படியோ திறந்து ஒரே ஒரு துண்டு கற்பூரத்தை கடித்து தின்றுவிட்டான். அதை உடனடியாக பார்த்த நான் கடித்திருந்த பாதியை வாயில் இருந்து எடுத்துவிட்டேன்.

‘கற்பூரம் சாப்பிட்டால் என்ன ஆகும்?’- என்று மனைவி கூகுளில் பார்த்து தெரிவித்த அடுத்த நிமிடமே, என் மகனுக்கு இழுப்பு வந்துவிட்டது. அது நான்கு நிமிடம் நீடித்தது. உடனே ஆம்புலன்ஸ் 911 உதவிக் கேட்டேன். அவர்கள் வந்தபோது, இழுப்பு சரியாகிவிட்டது. முதலுதவிக்கு வந்தவர்கள் குழந்தை தூங்கினால் எல்லாம் சரியாகிவிடும் என்று சொன்னார்கள்.
ஆனால், மீண்டும் கண்கள் செருக ஆரம்பித்துவிட்டன. உடனே ‘எமர்ஜென்ஸி’ பிரிவுக்கு குழந்தையை எடுத்துச் சென்றோம்.

கற்பூரத்திலிருக்கும் ‘கேம்பர்’ (Camphor) என்ற கொடிய நச்சுப் பொருள் கடுமையான பாதிப்புகளை உருவாக்கக் கூடியது – என்று ‘நச்சுத் தடுப்பு’ துறையினர் (பாய்ஸன் கண்ட்ரோல்) மூலம் அறிந்த எமர்ஜென்ஸி மருத்துவர்கள், உடனே அதற்கு தகுந்த சிகிச்சையில் இறங்கினார்கள்.
அதற்காக ‘சலைன்’ (டிரிப்) ஏற்ற ஊசி குத்தும் போது குழந்தை எந்த விதமான எதிர்ப்பையும் காட்டாதது எங்களுக்கு அடிவயிற்றைக் கலக்கியது. அதாவது அவன் சுயநினைவு இழந்த ‘டிப்ரெஷன் மோடு’க்கு சென்றுவிட்டிருந்தான்.

உடனடியாக ஆம்புலன்ஸ் மூலம் மீண்டும் ‘டாலஸ் மெடிக்கல் சென்டரின்’ குழந்தை நல அவசர சிகிச்சைப் பிரிவுக்கு (சில்ரண்ஸ் ஐசியூக்கு) மாற்றப்பட்டான்.

ஆம்புலன்ஸில் இருந்து இறங்கும்போது “அப்பா!” – என்று ஈனஸ்வரத்தில் அவன் அழைத்தாலும் அது எனக்குத் தெம்பூட்ட தைரியமானேன்.

கேம்பர் என்னும் அந்த கொடிய நச்சுப் பொருளின் மூன்றாம் நிலை கோமாவுக்கு கொண்டு சென்றுவிடும். அதை என் மகன் குறைந்த அளவு சாப்பிட்டதால் கோமா நிலைக்கு செல்லாமல் தப்பித்துவிட்டான்.

இது ஒருவிதமான அதிஷ்டமேயானாலும் அது எல்லோருக்கும் வாய்ப்பதில்லை. தகுந்த நேரத்தில் கண்டதாலும், உடனே சிகிச்சைக்கு கொண்டு சென்றதாலும் இறையருளால் எங்கள் கண்மணியை எங்களால் காக்க முடிந்தது. அதுவும் கிட்டத்தட்ட 16 மணி நேர மருத்துவப் போராட்டத்துக்குப் பின்தான் அதுவும் சாத்தியமாயிற்று!”

கேட்டீர்களா… விபரீதத்தை?
அதனால், கற்பூரம் என்னும் கொடிய விஷப் பொருளை வீட்டில் வைப்பதை தவிருங்கள். குழந்தைகளுக்கு எட்டாமல் பாதுகாப்பாக வையுங்கள். அப்படி குழந்தைகள் ஏதாவது சாப்பிட்டதாக சந்தேகம் வந்தால்.. உடனே தாமதிக்காமல் தகுந்த மருத்துவ சிகிச்சைக்கு ஏற்பாடு செய்யுங்கள். 

பாலா மீது பாயும் கடும் விமர்சனம்

தமிழ் சினிமாவிற்கு தொடர்ந்து தரமான படங்களை கொடுத்து வருபவர் பாலா. இவர் இயக்கத்தில் சமீபத்தில் வந்த படம் தாரை தப்பட்டை.

இப்படத்தை பார்த்த பலரும் பாலாவை மிகவும் கடுமையாக விமர்சனம் செய்து வருகின்றனர். அவர் ஒரே மாதிரியான படங்களை தான் தருகிறார்.

அவரது குறிக்கோள் படத்திற்கு வரும் மக்கள் அழ வைக்க வேண்டுமே, தவிர வேறு ஏதும் அவரது படங்களில் இல்லை, குறிப்பாக தாரை தப்பட்டையில் மிகவும் வன்முறையான காட்சிகளை காட்டியுள்ளார்.

இப்படத்தை குடும்பத்துடன் பார்க்க முடியவில்லை என்ற ரேஞ்சில் பாலா மீது சமூக வலைத்தளங்களில் குற்றச்சாட்டுகள் வருகின்றது.

பொங்கல் படங்கள் - வசூல் நிலவரம் என்ன ?

ஒவ்வொவரு புது வருடத்தின் ஆரம்பமும் திரையுலகத்தைப் பொறுத்தவரை பொங்கல் முதல்தான் தங்களது வசூல் கணக்கைத் துவக்குகிறது. இந்த வருடம் பொங்கலுக்கு ஒரு நாள் முன்னதாகவே போகிப் பண்டிகை அன்றே அனைத்துத் திரைப்படங்களும் வெளிவந்துவிட்டன. அதுவே அவற்றிற்கு ஒரு மைனஸ் பாயின்டாகவும் அமைந்துவிட்டது. பொங்கல் அன்றுதான் ரசிகர்களிடமும் ஒரு உற்சாகம் இருக்கும். அன்றுதான் அவர்களும் படம் பார்க்கும் ஆவலில் இருப்பார்கள். அதனால், ஒரு நாள் முன்னதாக இந்த வருடம் வெளிவந்த நான்கு படங்களும் முதல் தினத்தன்று பெரிய ஓபனிங்கைக் கொடுக்கவில்லை. 'ரஜினி முருகன்' படம் மட்டுமே ஓரளவிற்கு தியேட்டர்கள் நிறைந்தது. மற்ற படங்களுக்கு காலை காட்சிகளில் பாதி தியேட்டர் கூட நிரம்பவில்லை என்றுதான் தகவல்கள் வெளிவந்தன.

பொங்கல் தினத்தன்றும், நேற்று மாட்டுப் பொங்கல் தினத்தன்றும் 'ரஜினி முருகன்' படம் பெரும்பாலான தியேட்டர்களில் அரங்கு நிறைந்திருக்கிறது. அதற்கடுத்த இடங்களில் 'கதகளி, தாரை தப்பட்டை, கெத்து' ஆகிய படங்கள் இருந்ததாகத் தெரிவிக்கிறார்கள். நாம் முன்னரே சொன்னபடி 'ரஜினி முருகன்' படம் ஒரு முழுமையான பொழுதுபோக்குப் படமாக இருந்ததால் அந்தப் படத்திற்கு நல்ல வரவேற்பு கிடைத்து வருகிறது. இந்த மூன்று நாட்களில் சுமார் 10 கோடி ரூபாய் வரை படம் வசூலித்திருக்கும் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன. 'கதகளி' படம் இன்னும் விறுவிறுப்பாக எடுக்கப்பட்டிருந்தால் சிறப்பான வசூலைக் கொடுத்திருக்கும் என்றும் சொல்கிறார்கள். 'கெத்து' படத்திற்கு இவ்வளவு செலவு செய்து எடுத்தவர்கள், நல்ல கதையைத் தேர்வு செய்யவில்லை என்றும், 'தாரை தப்பட்டை' படம் பாலாவின் முந்தைய படங்களிலிருந்தே திரும்பவும் ஒரு படத்தை எடுத்திருக்கிறார் என்றும்தான் பேச்சுக்கள் வெளிவருகின்றன.

மொத்தத்தில் 'ரஜினி முருகன்' படம் மற்ற படங்களைக் காட்டிலும் வினியோகஸ்தர்களுக்கும், தியேட்டர்காரர்களுக்கும் அதிக லாபத்தைத் தரும் என்ற எதிர்பார்ப்பு இன்னும் அதிகமாகியுள்ளது.

ஏமாற்றி விட்டாரா பாலா ? இதையாவது கேட்பாரா?

இளையராஜாவின் 1000மாவது படம் என்ற தனிப் பெரும் அடையாளத்துடன் பொங்கலுக்கு வெளிவந்த படம் 'தாரை தப்பட்டை'. இதுவரை பாலா இயக்கத்தில் வெளிவந்த படங்களிலேயே மிகவும் மோசமான படம் என்ற விமர்சனத்தை இந்தப் படம் இரண்டு நாட்களிலேயே பெற்றது திரையுலகத்தினரிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பாலா இயக்கத்தில் இதுவரை வெளிவந்த படங்கள் எதுவுமே அந்தப் படங்களின் தயாரிப்பாளர்களுக்கு லாபத்தைத் தந்தது இல்லை என்பது அனைவருக்குமே தெரிந்த ஒன்றுதான். இருந்தாலும் அவருடைய படங்களில் நடித்தன் மூலம் விக்ரம், சூர்யா, ஆர்யா, அதர்வா என நான்கு நடிகர்களுக்கு திரையுலகத்தில் ஒரு இடம் கிடைத்தது. அது மட்டும்தான் அவருடைய படங்களால் கிடைத்த லாபம்.

விமர்சகர்களாலும், ரசிகர்களாலும் அதிகம் எதிர்பார்க்கப்பட்ட படமாக வந்த 'தாரை தப்பட்டை' படத்தில் பாலா எந்த ஒரு புதிய விஷயத்தையும் கையாளாமல் அரைத்த மாவையே அரைத்திருக்கிறார் என்ற குற்றச்சாட்டு பரவலாக எழுந்துள்ளது. அதே பரதேசி கோலத்தில் ஒரு நாயகன், துணிச்சலான கதாநாயகி, வெறித்தனமான வில்லன் என இந்தப் படத்திலும் வழக்கமான பாத்திரப் படைப்புகள்.

படத்தைப் பணம் போட்டுத் தயாரித்து நாயகனாகவும் நடித்த சசிகுமாருடைய கதாபாத்திரம் பற்றி விமர்சகர்கள் கூட பாராட்டவில்லை. மாறாக நாயகியாக வரலட்சுமி கதாபாத்திரத்தின் முக்கியத்துவம் பற்றியும், அவருடைய நடிப்பைப் பற்றியும்தான் பேசுகிறார்கள். நடிகராகவும், தயாரிப்பாளராகவும், பெயர், பொருள் இரண்டையும் இந்தப் படத்தில் சசிகுமார் இழந்துவிட்டார் என்று கோலிவுட்டிலேயே கவலைப்படுகிறார்கள்.

இந்தப் படத்தின் ரிசல்ட் பற்றி முன்கூட்டியே தெரிந்து கொண்டதால்தான் படத்தின் இயக்குனரான பாலா கூட பத்திரிகையாளர்களைச் சந்திப்பதைத் தவிர்த்தார் என மீடியா வட்டாரங்களிலும் தெரிவிக்கிறார்கள்.

காலமும், ரசனையும் மாறி வரும் நிலையில் பாலா தன்னை மாற்றிக் கொள்வதுதான் சரி என சமூக வலைத்தளங்களிலும் பரவலான கருத்து எழுந்துள்ளது. யார் சொன்னாலும் கேட்காத பாலா இதையாவது கேட்பாரா என்பது சந்தேகம்தான்...

கெத்து, கதகளிக்கு வரி விலக்கு இல்லை- காரணம் இதுதான்

பொங்கல் பண்டிகையை முன்னிட்டு கெத்து, கதகளி படங்கள் திரைக்கு வந்தது. தற்போது இந்த இரண்டு படத்திற்கும் வரி விலக்கு இல்லை என கூறப்பட்டுள்ளது.

ஏனெனில் கெத்து என்பது தமிழ் சொல் அல்ல, அதனால் வரி விலக்கு இல்லை, அதேபோல் கதகளி என்பது பெயர் சொல்; அதற்கு, மாற்று சொல் கிடையாது. மேலும், அது மலையாள சொல்லாகவும், நாட்டிய பெயர் சொல்லாகவும் உள்ளது, அதனால் வரி விலக்கு இல்லை என காரணம் கூறியுள்ளனர்.

உதயநிதி நடிக்கும் படங்களுக்கு தொடர்ந்து வரி விலக்கு கொடுக்காமல் இருப்பது குறிப்பிடத்தக்கது.

‘கெத்து’ இந்த ஒரு படத்தோடு போகட்டும்! ஆமா… சந்தானத்துக்கு எப்ப அட்வான்ஸ் கொடுக்கப் போறீங்க?

சிரிச்சா தக்காளி, சீறுனா பங்காளின்னு ஒரேயடியா மாறுவதற்கு ஒரு கெத்து வேணும்! அது கழகத்தின் ‘வருங்கால வைப்பு நிதி’, உதயநிதிக்கு ஓவராகவே இருக்கிறது. கடந்த சில படங்களாக சந்தானத்தையும் அவரது காமெடியையும் மட்டுமே நம்பி நடந்து வந்தவர், இந்த படத்தில் உர்…ர் முகம் காட்டி, உதிரம் சிந்தவும் உழைத்திருக்கிறார். அதற்காக பாராட்டுவதா, பரிதாபப்படுவதா என்ற குழப்பம் இந்த நிமிடம் வரை தொடர்வதுதான் இந்த கெத்து தந்த பேராபத்து!

ஆரியக் கூத்தாடினாலும் காரியத்துல கண்ணாயிருப்பது மாதிரியான கதை! “இந்து கோவில்கள், கிறிஸ்துவ ஆலயங்கள், முஸ்லீம் மசூதிகள் என அங்கிங்கெனாதபடி எங்கெங்கும் மதுக்கடைகள்! குடித்துவிட்டு ஆடுவோரின் ஆபாச நடனங்கள்” (இந்த வசனத்தை எங்கேயோ கேட்ட மாதிரியிருக்கா? உதயநிதி தாத்தாவின் முழக்கம்தான்) இந்தப்படத்தில் பள்ளிக்கு எதிரிலேயே ஒரு மதுக்கடை பார். அதை அகற்ற வேண்டுமென உதயநிதியின் அப்பாவும் பி.டி.வாத்தியாருமான சத்யராஜ் போலீசில் புகார் கொடுக்க, “யாருகிட்ட வந்து?” என்று எகிறி அடிக்க ஆரம்பிக்கிறது வில்லன் கோஷ்டி. இதில் அப்பாவை காப்பாற்ற களத்தில் இறங்கும் உதயநிதி, அதே வில்லன்களை புரட்டியெடுக்க, கலகம் ஸ்டார்ட்! (குந்துனாப்ல தேர்தல் வாக்குறுதியை படத்துல நுழைச்சிட்டாரே!)

அடுத்த நாளே வில்லனின் தம்பி இறந்துவிட, அவன் கையில் சத்யராஜின் மோதிரம். பிறகென்ன? சத்யராஜை கைது செய்கிறது போலீஸ். சிறைக்குள் வைத்தும் அவரை போட்டுத்தள்ள முயல்கிறது வில்லன் கோஷ்டி. அப்பாவை காப்பாற்ற வேண்டும் என்றால், உண்மையான கொலையாளியை கண்டுபிடிக்க வேண்டும். களமிறங்குகிறார் உதயநிதி. கொலையாளி யார்? இவர் கையில் சிக்கினானா? க்ளைமாக்ஸ்!

இதில் ஜனாதிபதி அப்துல் கமாலை கொல்ல வருகிற ஒரு உளவாளியின் கிளைக்கதையும் கூடவே நகர்ந்து வருகிறது. இந்தக்கதையும் அந்தக்கதையும் ஒன்றாக சேரும் இடம் எப்படா வரும் என்ற ஆவல் பிறக்க வேண்டும் அல்லவா? மாறாக, ‘எப்படா முடியும்’ என்கிற ஆவல்தான் பிறக்கிறது. திரைக்கதையின் லட்சணம் அப்படி.

எந்நேரமும் இறுக்கமான முகத்துடன் நடமாடும் உதயநிதி கொட்டுகிற எக்ஸ்பிரஷன்களிலும் அதே இறுக்கத்தை காட்டுவதை தவிர்த்திருக்கலாம். ஆனாலும் ஆக்ஷன் ஹீரோவாக மாறி அவர் விடுகிற குத்தும், உதையும் டாப்பில் இருக்கும் எந்த ஹீரோவுக்கும் சளைத்ததல்ல! இவருக்கும் எமிக்குமான அந்த காதல் எபிசோட், நல்லாதான் இருக்கு. ஆனால்… என்னய்யா ஆனால்? பிறகென்னவாம்… அந்த எமியை ஒரு டயலாக்கில் “நான் வெள்ளைக்காரி மாதிரி இருக்கேன்ல” என்று பேச வைத்துவிட்டால் ஆகிவிட்டதா? மனசுக்குள் வந்து மருதாணியாக கலக்க வேண்டாமா? இதுபோல நம் கலாச்சாரத்திற்கு ஒட்டாத முகங்களுக்கு ஏன்தான் கோடி கோடியா கொட்டி அழறாங்களோ?

ஒரு பி.டி. வாத்தியாரின் சுய ஒழுக்க ரத்தத்தை அடிக்கடி வழிய விடுகிறார் சத்யராஜ். நல்ல கேரக்டர். பெரிய அலட்டல் இல்லாமல் பிரசன்ட் பண்ணுகிறார் அவரும். அந்த வயசிலும் பெண்டாட்டியுடன் ரொமான்ஸ் டயலாக் என்பதுதான் அரத பழசான ஐயே…

இந்த படத்தின் வில்லன் விக்ராந்த். இருக்கிற ரெண்டே ரெண்டு முழியை தவிர மீதி இடங்களில் கர்சீப்பை கட்டிக் கொள்கிறார். எக்ஸ்பிரஷனே வராத முகத்திற்கு சரியான சேஃப்ட்டி அதுதானே! இவரை பிடிக்க வேண்டும் என்று காரிலேயே மணிக்கணக்காக காத்திருக்கும் சத்யராஜும், உதயநிதியும், அவர் கடையை திறந்து உள்ளே போகும் வரைக்கும் கூட காத்திருக்க மாட்டார்களாம். அதை விடுங்கள்… ஒரு கொலை நடந்த வீட்டை அப்படியே போட்டுவிட்டு நடையை கட்டிவிடுமா போலீஸ். அந்த வீட்டுக்குள் எவர் வேண்டுமானாலும் நுழைந்து அங்கிருந்து துப்பாக்கி கோணம் பார்க்கலாம் போலிருக்கிறது. ஒரு பள்ளிக்கூடம் காண்பிக்கிறார்கள். சும்மா கூட நாலு மாணவர்களை காண்பிக்கவில்லை. ஒரு ஊரை காண்பிக்கிறார்கள். சும்மா கூட தெருவில் ஆள் நடமாட்டமில்லை. இப்படி காமா சோமா என்று நகர்கிறது படம்.

கான்ஸ்டபிள் கருணாகரனுக்கு பெரிசாக சிரிப்பு மூட்டும் வேலையில்லை. தப்பித்தார். நாமும் தப்பித்தோம்!

படத்தின் மிகப்பெரிய ஆறுதலே சுகுமாரின் ஒளிப்பதிவுதான். பளிச்சென்று இருக்கிறது. பல நேரங்களில் காரண காரியம் இல்லாமல் அவரும் ‘டாப் ஆங்கிள்’ வைப்பதுதான் புரியாத புதிர்.

கம்போஸ் பண்ணியாச்சே என்பதற்காக படத்தில் நடுநடுவே திணிக்கப்பட்டாலும், ஹாரிசின் இசையில் எல்லா பாடல்களும் இனிமை. குறிப்பாக தேன்காற்று வந்தது… பாடலும் அதில் வழியும் மெலடியும்! பின்னணி இசையில்தான் படுத்தி எடுத்துவிட்டார்.

வெள்ளந்தி முகத்தோடு வீடெங்கும் நுழைந்த அந்த பழைய உதயநிதிதான் பாந்தம்! இபிகோவுக்கு தேவைப்படும் இடைஞ்சல் ஹீரோக்கள்தான் ஊர் கொள்ளாமல் திரிகிறார்களே… உதயநிதியின் திடீர் ‘கெத்து’ இந்த ஒரு படத்

“ம்..ம். கெட் ரெடி இப்பவும் கெலிச்சே ஆகணும்..!” – தொண்டர்களுக்கு ஜெ. கடிதாசு !

எம்.ஜி.ஆர் பிறந்த நாள் நாளை கொண்டாடப்படுவதையொட்டி அ.தி.மு.க. பொதுச்செயலாளரும், முதல்-அமைச்சருமான ஜெயலலிதா அ.தி.மு.க. தொண்டர்களுக்கு மடல் எழுதியுள்ளார். அதில் அவர், “அ.தி.மு.க. நிறுவனத் தலைவர், பொன்மனச் செம்மல், புரட்சித் தலைவர் டாக்டர் எம்.ஜி.ஆர். அவர்களின் 99-ஆவது பிறந்த நாளை முன்னிட்டு, இந்த மடல் வழியாக என் உயிரினும் மேலான எனதருமைக் கழக உடன்பிறப்புகளைச் சந்திப்பதில் நான் மிகுந்த மகிழ்ச்சி அடைகிறேன்.

தமிழக அரசியல் மற்றும் கலை உலகின் கடந்த ஒரு நூற்றாண்டு வரலாற்றில் பெரும்பாலான ஆண்டுகள் புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆர்.அவர்களின் புகழ் பாடும் ஆண்டுகளாகவே கடந்திருக்கின்றன. அதற்கு காரணம் அரசியலிலும், கலைத் துறையிலும், தனது கடின உழைப்பாலும், தன்னலம் மறந்த பொதுநலம் நோக்கிய செயல் திட்டங் களாலும் புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆர். அவர்கள் செய்து முடித்த சாதனைகளே யாகும்.

புரட்சித் தலைவருடைய வாழ்வும், அவர் வகுத்துத் தந்த கொள்கைகளும் தமிழகத்தில் இன்னும் பல தலைமுறைகளுக்கு வழிகாட்டும் கலங்கரை விளக்குகளாகத் திகழும். கலைத் துறையிலும், அரசியலிலும், மக்களுக்கு பணியாற்றும் பொதுத் தொண்டுகளிலும் உங்கள் அன்புச் சகோதரியாகிய என்னை, புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆர். அவர்கள் ஈடுபடுத்தினார். அதற்குத் தேவையான பயிற்சி களையும், பாடங் களையும் எனக்கு அளித்தார். எனவே தான் மாதா, பிதா, குரு, தெய்வம் என்று புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆர். அவர்களை நான் மனதாரப் போற்றி வருகிறேன். அவருடைய பொன்னடித் தடங்களை என் வாழ்க்கைக்கு வழிகாட்டும் பாதையாகக் கொண்டு பின்பற்றி தமிழக மக்களுக்காக என்னையே அர்ப்பணித்து வாழ்ந்து வருகிறேன்.

இரட்டை இலக்கில் புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆர். அவர்களின் பிறந்த நாளை நாம் கொண்டாடும் இறுதி ஆண்டு இந்த ஆண்டு. இனி வரும் பன்னெடுங் காலங்களுக்கு அவருடைய பிறந்த நாள் மூன்று இலக்க ஆண்டுகளாகக் கொண்டாடப்படும். அடுத்து வரும் ஆண்டு புரட்சித் தலைவருடைய பிறந்த நாள் நூற்றாண்டாக அமையப் போகிறது. புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆர். அவர்களின் நூற்றாண்டு விழா கொண்டா டப்படும் ஆண்டிலும், அவர் கண்ட மக்கள் பேரியக்கமான Ôஅனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம்‘ உங்கள் அன்புச் சகோதரியாகிய என்னுடைய தலைமையில் ஆட்சி நடத்தும் இயக்கமாகத் திகழப் போகிறது என்பது நம் இதயமெல்லாம் இனிக்கும் செய்தி.

இந்த ஆண்டு நடைபெறப் போகும் சட்டமன்றப் பொதுத் தேர்தலில், இதற்கு முன்னர் அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் பெற்றிருந்த வெற்றிகள் எல்லாவற்றையும் விட சிறப்பான வெற்றியைப் பெற்றிட வேண்டும். இந்திய வரலாற்றில் இப்படி ஒரு வெற்றியை வேறு எந்த அரசியல் இயக்கமும் பெற்றதில்லை என்று பார் போற்றும் வகையில், அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் வெற்றி பெறுவது புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆர். அவர்களின் புகழுக்கு பொன்மகுடம் சேர்க்கும்.

இப்பொழுது உங்கள் அன்புச் சகோதரியாகிய என்னுடைய தலைமையில் நடைபெற்று வரும் அரசு, தமிழக மக்களுக்கு ஆற்றி இருக்கும் தொண்டு அத்தகைய வெற்றியை உறுதி செய்யும் என்பதில் ஐயமில்லை. ஒவ்வொரு குடும்பத்திற்கும், அந்தக் குடும்பத்தின் ஒவ்வொரு உறுப்பினருக்கும் அரசாங் கத்தின் உதவியும், சலுகையும் பல வகைகளில் கிடைத்திடும் வகையில் திட்டங்கள் தீட்டப் பட்டு, ‘வீடு உயர்ந்தால் நாடு உயரும், நாடு உயர்ந்தால் உலகம் உயரும்‘ என்ற தீர்க்கமான பாதையில் உங்கள் அன்புச் சகோதரியின் அரசு தமிழக மக்களுக்கு எண்ணற்ற நன்மைகளைச் செய்து, வளர்ச்சிப் பாதையில் தமிழகத்தை இட்டுச் செல்கிறது.

இருள் மண்டிய தீய சக்தியின் ஆட்சிக் காலத்தை தமிழக மக்கள் ஒரு போதும் மன்னிக்கவும் மாட்டார் கள்; மறக்கவும் மாட்டார்கள். ஜனநாயகத்தின் அடிப்படை களையே வேரறுக்கும் வகையில் ”என் குடும்பம் மட்டும் எல்லாமும் பெற வேண்டும்; என் மக்களே எந்நாளும் ஆள வேண்டும்‘’ என்ற கயமையும், கீழ்மைத்தனமும் கொண்ட சிந்தனையுடைய தீய சக்தியும், அதன் நச்சு விழுதுகளும் இயங்குவதைத் தமிழகம் ஒரு போதும் ஏற்காது.

புரட்சித் தலைவரின் இயக்கமான அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்திற்கு வெற்றிக் கனியை, இந்த ஆண்டு நடைபெற இருக்கும் தேர்தலிலும் பரிசளிக்கத் தமிழக மக்கள் தயாராக இருக்கிறார்கள். அப்பரிசினைப் பெற்றுக்கொள்வதற்கு ஏற்ற வகையில் கழக உடன்பிறப்புகளாகிய உங்கள் ஒவ்வொருவருடைய தேர்தல் பணியும் அமைய வேண்டிய நேரமிது என்பதை மறவாதீர்கள்.

இந்திய மாநிலங்கள் அனைத்திற்கும் எடுத்துக் காட்டாக, அனைத்துத் தரப்பு மக்களையும் உள்ளடக்கிய வளர்ச்சியை தொடர்ந்து வழங்கி வரும் உங்கள் அன்புச் சகோதரியாகிய எனது தலைமையிலான அரசு, மக்களுக்கு ஆற்றி இருக்கும் பணிகளை வீடு வீடாக எடுத்துச் சொல்லி, மக்கள் ஒவ்வொருவரையும் சந்தித்து, உங்கள் அன்புச் சகோதரியின் அர்ப்பணிப்பு வாழ்வை அவர்களுக்கு விளக்கிக் கூறி தேர்தல் பணி ஆற்றுங்கள்.

பொன் குடத்திற்கு பொட்டிட்டவாறு மக்களின் பேராதரவு பெற்ற உங்கள் அன்புச் சகோதரியின் அரசுக்கு உங்கள் களப்பணி சிறப்பினை சேர்க்கட்டும். அது, புரட்சித் தலைவர் டாக்டர் எம்.ஜி.ஆர். அவர்களின் பிறந்த நாள் நூற்றாண்டு விழாவினை நோக்கிய நமது பயணத்தை இந்திய தேசத்தின் திருவிழாவாக மாற்ற வேண்டும் என்பது எனது ஆவல். எனவே, என்னுடைய அன்புக் கட்டளையை ஏற்று, கழக உடன்பிறப்புகள் ஒவ்வொருவரும் ஒற்றுமையுடன், ஒருங்கிணைந்து, தேர்தல் தொடர்புடைய அனைத்துப் பணிகளையும் இப்பொழுதே தொடங்கிட வேண்டும் என்று வலியுறுத்திக் கேட்டுக் கொள்கிறேன்”. இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

ஆட்டம் நல்லா இல்ல… ஆட்டக்காரி ஓகே…! – “கதகளி” விமர்சனம்

பொங்கல் ரேசில் தனியாக நின்று ஆட முடியும் என்ற நம்பிக்கையோடு களமிறங்கி யிருக்கிற படம் கதகளி. கேரளத்தின் மிக முக்கிய நடனங்களில் ஒன்றான கதகளி ஆடுபவர்கள் தனி உடையலங்காரம், முக அலங்காரம், சிகை அலங்காரம் எல்லாம் வைத்திருப்பார்கள். அதுபோல இந்த படத்திலும் பலவித அவதாரங்கள் இருக்கும் என்ற எதிர்பார்ப்பில் படத்துக்குள் நுழைந்தால்…

கதை: கடலூர் மீனவர் சங்கதலைவராக இருப்பவரிடம் வேலை செய்கிறார் ஹீரோவின் அண்ணன். பல ஆண்டுகள் வேலை செய்த பிறகு தனியாக தொழில தொடங்க முயற்சிக்கிறார். இதில் மீனவர் சங்க தலைவருக்கும் ஹீரோவின் அண்ணனுக்கும் பகை முற்றுகிறது. ஒரு கட்டத்தில் ஹீரோவின் அண்ணன் நடத்தும் சங்கு தொழிற்சாலையை அடித்து துவசம் செய்துவிட்டு தன் தொழிற்சாலை யையும் அவர்களே அடித்துக் கொண்டு பவர் இருக்கும் தைரியத்தில் பொய் வழக்கு கொடுத்து ஹீரோவை போலீசில் மாட்டி விடுகிறார்.

அந்த மோதலில் ஹீரோவின் அப்பாவுக்கு கால் போய்விடுகிறது. பணம், செல்வாக்கு, பதவி இருப்ப தால் மீனவர் சங்கத்தலைவரை ஹீரோ குடும்பம் எதிர்க்க முடியாமல் போகிறது. ‘நாமும் நாலு வருஷம் ஆறப்போட்டுட்டு பணம் சம்பாதித்து விட்டு வந்து போடணும்னு’ ஆத்திரத்தில் ஹீரோ பேசுகிறார்.

இந்த சம்பவத்திற்கு பிறகு ஹீரோ வெளிநாடு சென்று விடுகிறார். ஹீரோ ஊரில் இல்லாத நேரம் பலரிடமும் பகையை வளர்த்துக் கொள்கிறார் மீனவர் சங்கத்தலைவர். அவரை வெட்டிச் சாய்க்க பலர் காத்திருக்கிறார்கள்.இந்த சூழலில், ஏற்கனவே, செல்போன் மூலம் ஹீரோவுக்கு காதல் ஏற்படுகிறது. வெளிநாட்டில் இருந்து காதலித்தவளை கல்யாணம் செய்து கொள்வதற்காக ஊர் திரும்புகிறார் ஹீரோ.

திருமண ஏற்பாடுகள் நடக்கிற நேரம் திடீரென மீனவர் சங்கத்தலைவர் கொல்லப்படுகிறார். இந்த கொலைப்பழி ஹீரோமீதும், அவர் அண்ணன் மீதும் விழுகிறது.திருமண ஏற்பாடுகளில் இருந்த ஹீரோ குடும்பத்தை கொல்லப்பட்ட மீனவர் சங்கத்தலைவரின் ஆட்கள் கொல்வதற்காக அலைகிறார்கள்.

போலீசும் ஹீரோவை பிடித்து ஜெயிலில் அடைத்து பிரச்னையை முடிக்க முயற்சிக்கிறது.

ஹீரோ போலீசில் சிக்கினாரா…

வில்லன் கோஷ்டியிடம் சிக்கினாரா…

திருமணம் நடந்ததா…

ஹீரோ என்ன ஆனார்…

என்பதுதான் கதகளி படம்.

ஹீரோவுக்கான பில்டப் எதுவும் இல்லாமல் ரொம்ப சாதாரணமாக விஷால் வரும்போதே கதையும் சுமாராகத்தான் இருக்கும் என்பது புரிந்து விடுகிறது.படத்தின் பெயரை ஏன் கதகளி என்று வைத்தார் என்பது இயக்குனருக்கே வெளிச்சம். உண்மையில் அந்த ஆட்டத்தின் வீரியம், வேகம், பரபரப்பு, பதட்டம் எதுவும் கதையிலும் இல்லை, திரைக்கதையிலும் இல்லை.

கொலைப்பழி சுமத்தப்பட்ட ஒரு அப்பாவி குடும்பம் உயிருக்கு பயந்து காரில் ஊர் ஊராக சுற்றி வருவதை நம்பும்படி சொல்ல முயற்சித்திருக்கிறார் இயக்குனர்.

வழக்கமான விஷால் படங்களில் இருக்கும் நையாண்டி, நக்கல் இதில் மிஸ் ஆகிறது. விஷால் இன்னும் எத்தனை படங்களில் தனியாக நின்று அடித்து ஆடுவார் என்று தெரியவில்லை.கொலையாளி யார் என்று குழப்பி விடுவது தொடங்கும் போதே கொலையாளியை ரசிகர்கள் முடிவு செய்து விடுகிறார்கள். வில்லன் என்று கதையில் இருந்தால் ஹீரோதான் அதற்கு முடிவுகட்ட வேண்டும் என்ற சினிமா இலக்கணத்தை மீறாத இயக்குனர்.

ஹீரோயின் கேத்ரினா தெரேசா... பெருசாக நடிக்க வாய்ப்பு இல்லை. சில இடங்களில் ‘கிக்’ ஆகவும்… பல இடங்களில் ‘மக்’ஆகவும் இருக்கிறார்.

கருணாஸ் கதகளியில் இருக்கிறார். அவ்வளவே.

விஷால் இதற்காக பெரிய மெனக்கெடல் எதையும் செய்ததுபோல தெரியவில்லை. ரொம்ப சாதாரணமாக வந்து போகிறார். சண்டைக்காட்சிகளில் கூட பறந்து பறந்து அடிக்காமல் ரொம்ப யதார்த்தமாக முயற்சித்திருக்கிறார்.

பாடல்களிலும் பெரிய தாக்கம் ஏதும் இல்லை. பின்னணி இசை மட்டும் பல இடங்களில் நிஜத்தை சொல்கிறது.

வில்லன் என்று உருவாகும் ஆட்கள் வெளியில் ஆயிரம் விரோதிகளை சம்பாதித்தாலும் அவர்களைவிட தான் வளர்க்கும் ஆட்களாலும், தன்னிடம் கை நீட்டி காசு வாங்கும் காக்கிச் சட்டையாலும்தான் தானும் சரிந்து, தன் சாம்ராஜ்ஜியமும் சரியும் என்பதை கோடு போட்டு காட்டியிருக்கிற இயக்குனருக்கு சபாஷ்.

இது சினிமா என்றாலும் நாட்டில் நடந்த பல விடை காண முடியாத சம்பவங்களுக்கு ‘கதகளி’ விடை சொல்வது போல இருக்கிறது.

கதை : பரவாயில்லை ரகம்.
திரைக்கதை : பலமில்லை
பாடல்கள் : மனசில் நிற்கவில்லை
இசை : சில இடங்களில் மிரட்டல்… சில இடங்களில் துரத்தல்
இயக்கம்: மெனக்கெட்டு படம் எடுத்தாலும்… ரொம்ப சாதாரணமா படம் எடுத்தாலும் ரசிகர்கள் என்னவோ ஒரே மாதிரிதான் ரிசல்ட் தருவாங்கன்னு தனக்கு தானே பாண்டியராஜ் வட்டம் போட்டுகிட்டாரோன்னு நினைக்கத் தோணுது. வழக்கமான அவர் படங்களில் காணப்படும் பல விஷயங்கள் இதில் இல்லை. படம் தொடங்கி ரிலீஸ் வரைக்கும் பல பில்டப் இருந்தது… ஜல்லிக்கட்டு மாதிரி… எல்லாம் ரெடியாகி தடை போட்ட மாதிரி இருக்கு அவர் இயக்கம்.

பொதுவா சொல்லணும்னா கூட்டத்துக்கு மேடை போட்டு… ஆட்டத்துக்கு ஆள ஏத்தி விட்ட மாதிரி… ஆட்டம் நல்லா இல்லாம போனாலும் ஆட்டக்காரிய பாக்க ஒரு கூட்டம் வராமலா போயிடும்…

அப்படித்தான் இருக்கும் கதகளி கலெக்ஷன்..!

தமிழில் எழுதியதை வாசித்துக் காட்டும் மென்பொருள் ரெடி! – இது நம்ம மெட்றாஸ் தயாரிப்புங்கறோம் !!

இன்றைக்கு இருக்கும் தொழில்நுட்ப வசதியில் எதுவும் சாத்தியமே..! பார்வையற்றோர் முன்பெல்லாம் ‘பிரெய்லி’ முறையில் வாசித்து வந்த காலம்போக, கம்ப்யூட்டர் யுகமான பின்னர் பாடம், கதை, கட்டுரைகளை ஒலிவடிவில் படித்துக்காட்டும் நவீன மென்பொருட்கள் (சாப்ட்வேர்) நடைமுறைக்கு வந்தது. ஆனால், இந்த மென்பொருட்கள் உலகின் பிரசித்திபெற்ற ஆங்கிலம் உள்ளிட்ட மொழிகளில் தான் அதிகம் உருவாக்கப்பட்டுள்ளது. இந்தி போன்ற இந்திய மொழியில் உருவாக்கப் பட்டிருந்தாலும் மாநில மொழிகளில் தயாராகியுள்ள சில குளறுபடியான மென்பொருட்கள், அம்மொழிகளின் துல்லியமான உச்சரிப்பை வழங்க தவறிவிட்டன.

இந்தக் குறையை போக்கி அனைத்து தரப்பினரும் பயனடையும் வகையில் ஆய்வுகளை நடத்திவந்த மதறாஸ் ஐ.ஐ.டி. பொறியலாளர்கள் தற்போது அம்முயற்சியில் பெரும் வெற்றி கண்டுள்ளனர். தமிழ், தெலுங்கு உள்பட 13 இந்திய மொழிகளில் வடிவமைக்கப்பட்டுள்ள இந்த நவீன மென்பொருளானது கம்ப்யூட்டர்களில் மட்டுமின்றி, ஸ்மார்ட் போன்களிலும் செயல்படும் வகையில் உருவாக்கப்பட்டுள்ளது.

இந்த நவீன சாப்ட்வேரின்மூலம், பார்வையிழந்தோர் மட்டுமின்றி, வாசித்தல் குறைபாடு உடையவர் களும் எழுத்து வடிவில் உள்ள பாடம், கதை, கட்டுரைகளை ஒலி வடிவில் கேட்டு நினைவில் இருத்திக் கொள்ளலாம். வரும் 2018-ம் ஆண்டுக்குள் நாட்டிலுள்ள சுமார் பத்து கோடி மக்கள் இதன் மூலம் பயனடைவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

'தாரை தப்பட்டை'யை இன்னொரு பாலா படம் என்ற விதத்தில் வரவேற்கலாம்.

 பாலா இயக்கத்தில் வெளியாகும் ஏழாவது படம், குரு இயக்கத்தில் சிஷ்யர் சசிகுமார் நடிக்கும் முதல் படம், இளையராஜா இசையில் வெளியாகும் 1000-வது படம் என்ற இந்த காரணங்களே 'தாரை தப்பட்டை' படத்தின் மீதான எதிர்பார்ப்பை ஏற்படுத்தின.

பொதுவாக பாலா படமென்றால் வன்மம், குரோதம், கொடூரமாகப் பழிவாங்கும் படலம், குரல்வளையைக் கடித்து துப்புவது, ரத்தம் தெறிப்பது என்ற டெம்ப்ளேட் நிச்சயமாக இருக்கும்.

'தாரை தப்பட்டை' படத்துக்கு 'ஏ' சான்றிதழ் கொடுத்திருப்பதால், அதீத வன்முறை பீதியுடன் தயங்கியே தியேட்டருக்குள் நுழைந்தோம்.

'தாரை தப்பட்டை' படம் எப்படி?

சசிகுமார் சன்னாசி தாரை தப்பட்டை மற்றும் கரகாட்டக் குழுவை நடத்தி வருகிறார். அதில் முக்கிய அங்கம் வகிக்கும் கரகாட்டக்காரர் வரலட்சுமியை இன்னொருவருக்கு திருமணம் செய்து வைக்க முயற்சிக்கிறார். அந்த முயற்சி என்ன ஆனது? கரகாட்டக் கலைஞர்கள் என்ன ஆகிறார்கள்? என்பது மீதிக் கதை.

'போராளி' படத்தில் சசிகுமார் தோற்றத்தை பார்த்திருக்கிறோம். அதன் இன்னொரு முழுமையான தோற்றப் பரிமாணம்தான் சன்னாசி சசிகுமார். குழு தலைவனாக நடந்துகொள்வது, கோபத்தில் வார்த்தைகளை சிதற விடுவது, காதலில் கலங்குவது, நடந்ததை உணர்ந்து வெகுண்டெழுவது என தன் பங்களிப்பை சிறப்பாக வழங்கியிருக்கிறார்.

வரலட்சுமி சரத்குமார் நடிப்பிலும், கரகாட்டக்காரராக பேச்சு, உடல்மொழி, நடனத்திலும் பின்னி எடுக்கிறார். உன் பேரு என்ன? என்று கேட்கும்போது 'மிஸ்டர் சூறாவளி' என கெத்து காட்டுகிறார். நாயகனின் லாவகப் பேச்சு பிடிக்காமல் எட்டி உதைத்து தன் கோபத்தை வெளிப்படுத்தி நடிக்கத் தெரிந்த நடிகை என்பதை நிரூபித்திருக்கிறார். முதல் பாதி முழுக்க வரலட்சுமி தான் ப்ரொட்டாகனிஸ்ட் என்ற உணர்வை ஏற்படுத்துகிறார்.

ஜி.எம்.குமார் திறமையுள்ள கலைஞனாக, மிடுக்காகவும், அதே சமயத்தில் அழுத்தமாகவும் நடித்திருக்கிறார்.

கருப்பையா கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் தயாரிப்பாளர் சுரேஷ் (அறிமுகம்) இரு வேறு குணநலன் கொண்ட கதாபாத்திரங்களையும் சரியாக செய்திருக்கிறார். அமுதவாணன், காயத்ரி ரகுராம், அந்தோணி தாஸ், சதீஷ் கௌஷிக் ஆகியோர் பொருத்தமான தேர்வு.

இளையராஜாவின் இசையும், செழியனின் ஒளிப்பதிவும் படத்துக்குப் பெரும் பலம்.

வதன வதன வடிவேலனே என்ற மோகன் ராஜனின் பாடல் அறிமுகப் பாடலாய் கரகாட்டக் கலைஞர்களின் வாழ்வியலைப் பேசுகிறது. இளையராஜா எழுதி இசையமைத்த உள்ளம் என் கோயில் பாடலுக்கு தியேட்டரே மெய் சிலிர்த்தது. தேவையான இடங்களில் மட்டும் பின்னணி இசை அமைத்து ஆட்சி செலுத்திய விதத்தில் இளையராஜா ஈர்க்கிறார்.

கரகாட்டக் கலைஞர்கள் பின்புலத்தையும், அவல நிலையையும் செழியன் தன் கேமராவில் கடத்தி இருக்கிறார்.

கரகாட்டக் கலைஞர்களின் வாழ்வாதாரத்தைக் குறித்த நிலையை சொல்லும் திரைக்கதை வழக்கமான பாலா படமாக ஒரு கட்டத்தில் மாறும்போது தடுமாற்றமும், தடம் மாற்றமும் நிகழ்கிறது.

உணர்வுகளை உருக்கமும் நெருக்கமுமாகக் காட்டிய பாலா அதற்கடுத்த காட்சிகளில் வேறு திசையில் பயணிக்க வைக்கிறார். அது படத்துக்கு பெரிய பாதகத்தை ஏற்படுத்தவில்லை என்றாலும், இது டெம்ப்ளேட் தானே. இன்னும் ஏன் இதை பாலா விடாமல் வைத்துக்கொண்டு அடம்பிடிக்கிறார் என்ற கேள்வி எழாமல் இல்லை.

ஆனால், அந்த இடங்களில் இளையராஜா தன் இசையால் நிரப்பி சரி செய்ய முயற்சித்ததை சொல்லியே ஆக வேண்டும். சில இடங்களில் லாஜிக் மிஸ் ஆவதை மறுப்பதற்கில்லை.

அனுராக் காஷ்யப், ராஜ்குமார் ஹிரானி முதலான இந்திய சினிமாவின் முக்கிய இயக்குநர்கள் கண்டு வியக்கும் தமிழ் இயக்குநர் பாலா. ஒரு முக்கிய சினிமா படைப்பாளிக்கு காட்சிப்படுத்துதலில் தனக்குரிய பொறுப்பை உணர்ந்து செயல்பட வேண்டும் என்று மூத்தவர்கள் சொல்வது உண்டு. கொடூரமான வன்முறைக் காட்சிகளை பாலா படமாக்கும் விதம் மென்மேலும் கோரமாக உருவெடுத்து வருகிறது. அப்படிக் காட்சிப்படுத்துவதைவிட, ரத்தத்தைத் திரையில் தெளிக்காமல் - வன்முறையின் தாக்கத்தை ரசிகர்கள் துல்லியமாக உணரும் வகையிலான சினிமா மொழியைக் கையாள்வதே நல்ல உத்தியாக இருக்கும் எனத் தோன்றுகிறது.

நிஜ வாழ்வில் கலைஞர்கள் நிலையை திரையில் காட்டியதற்காகவும், மனிதத்தை கீழே விழாமல் பிடித்ததற்காகவும் இந்த 'தாரை தப்பட்டை'யை இன்னொரு பாலா படம் என்ற விதத்தில் வரவேற்கலாம். 

திருநங்கையாக மாறும் கணவன்...தவிக்கும் மனைவி - தி டேனிஷ் கேர்ள்

திருநங்கைகள் தங்களது வாழ்வை தைரியமாக எதிர்கொள்ள முன்னோடியாக விளங்கிய லில்லி எல்பியின் வாழ்க்கை வரலாற்றுப் படமே ’தி டேனிஷ் கேர்ள்’!

டேனிஷ் நாட்டின் புகழ்பெற்ற ஓவியக் கலைஞர்களும் தம்பதிகளுமாக எய்னர் விகினர்,மற்றும் ஜெர்டா விகினர். இருவருக்குள்ளும் கணவன் மனைவியாக அப்படி ஒரு நெருக்கம். ஒருவரை ஒருவர் உயிருக்கு உயிராக நேசிக்கிறார்கள். இந்த வேளையில் தான் இவர்களின் திருமண வாழ்வில் புயல் வீசத் துவங்குகிறது. தனது மாடல் ஒருவர் வாராமல் போகவே தனது கணவனையே பெண்ணாக போஸ் கொடுக்க வைக்கிறார் ஜெர்டா. அந்த உடை எய்னருக்கு பிடித்துப் போகிறது.

எய்னரின் நடை உடை பாவனை என அனைத்தும் மாற ஆரம்பிக்கிறது. தன் மனைவியின் உடைகள், வீட்டிற்கு வரும் மாடல் என பெண்களின் உடைகள் மீது அவரை அறியாமலேயே அப்படி ஒரு ஏக்கம்.  பிரச்னை இன்னும் தீவிரமாகி இரவு கணவனின் உடையைக் கழற்றும் ஜெர்டாவுக்கு அதிர்ச்சி. உள்ளே அவளின் இரவு உடை. மனைவிக்கு கொஞ்சம் கொஞ்சமாக புரிய அவளது வாழ்க்கை நரகம் ஆகிறது. ஒவ்வொரு நாளும் பெண்ணாக மாறும் கணவனை நினைத்து சோகமே உருவாக மாற கணவனோ நீ உன் வாழ்வை தேர்ந்தெடுக்க வேண்டும். தன்னால் இனி ஆணாக இருப்பது கடினம் எனக் கூறி விட்டு பெண்ணாக மாறுவதற்கான சிகிச்சைக்குத் தயாராக சிகிச்சையின் வீரியத்தை தாங்க முடியாது லில்லியாக மாறிய எய்னர் இறந்து விடுகிறாள்.

ஆண் பெண்ணாக மாறுவதற்காக சிகிச்சை செய்து கொண்டு, சிகிச்சையின் வீரியம் தாங்க முடியாது இறந்து போன முதல் திருநங்கையாக அறியப்படும் லில்லி எல்பேவின் பயோகிராபி கதையே  ‘தி டேனிஷ் கேர்ள்’.

ஆஸ்கர் விருது பெற்ற எட்டி ரெட்மெய்னி நடிப்பைப் பற்றி சொல்ல வேண்டுமா என்ன?.. எய்னர் ஜெர்டாவாக மனைவியிடம் அன்பு காட்டுவது, லில்லியாக மாறி பெண்ணுக்குரிய கை கால்கள் அசைவு, கண்களின் பார்வை, ஏன் மூச்சு விட்டு நிதானமாக மென் புன்னகை கொடுப்பது என நடிப்பில் அவ்வளவு தத்ரூபம். நடை, உடை, நளினம் என நடிப்பில் நம்மை கிறங்கடிக்கிறார்.

"நீ எனக்கு அமைதியை தந்து விட்டாய், நான் உனக்கு அளவு கடந்த சக்தியை கொடுத்துவிட்டேன் என மருத்துவமனையில் மனைவியிடம் பேசும்போதும், ”நான் முழுமையான லில்லியாக வெளியே போக வேண்டும் என்னை அழைத்துப் போ’ எனக் கூறிவிட்டு கடைசிக் காற்றை சுவாசித்து விட்டு மெல்ல அடங்குவதும் என எட்டிக்கு இந்த வருடமும் ஆஸ்கர் ஒதுக்கியாக வேண்டும் என்றே கூறலாம்.

மனைவி ஜெர்டா வெஜினராக அலிசியா விகாந்தர். கொஞ்சம் கொஞ்சமாக தன் கணவனை இழந்து துடிப்பதும்,தன் வாழ்க்கை என்னவாகப் போகிறது என்று தவிப்பதும் ‘இதை நிறுத்த வேண்டும், எனக்கு என் கணவன் வேண்டும்’ என அழும் காட்சிகளிலும் நம்மையறியாமல் கண்கள் குளமாகிறது. தன் கணவனின் செய்கை நினைத்து அழுவதா, கோபப்படுவதா, இல்லை பரிதாபப்படுவதா எனத் தெரியாமல் அமைதியாக சிகரெட் பிடிக்கும் காட்சிகள் அப்ளாஸ் ரகம்.

ஆக்‌ஷன் ஆர்ப்பாட்டம், பிரம்மாண்ட செட்டுகள் இல்லையென்றாலும் 1920களின் வாழ்க்கை, உடைகள், என பீரியட் கதைக்கான அம்சங்கள் பல இடங்களில் நம் கண்களை ஈர்க்கின்றன.

பயோகிராபிக் கதைகள் என்றாலே கொஞ்சம் சவாலான விஷயமே.அதிலும் நாவலாக வெளியான வாழ்க்கை வரலாற்றைப் படமாக எடுப்பது இன்னும் கொஞ்சம் சிரமமே. எனினும் இயக்குநர் காட்சிக்குக் காட்சி நம்மை சீட்டில் கட்டிப் போடுகிறார் டாம் ஹூப்பர். திருநங்கை என்பது அவமானம் அல்ல, அது ஒரு முழுமை, அவர்களுக்கும் உணர்வுகள், வாழ்வின் முக்கியத்துவங்கள் இருக்கின்றன என்பதையும் இயக்குநர் உணர்த்தத் தவறவில்லை.

நம் வாழ்வை நமக்கு பிடித்தாற் போல் வாழ எந்த கடின முயற்சியும் செய்யலாம் என மறைமுக பாடம் கற்பிக்கிறாள் ‘தி டேனிஷ் கேர்ள்’.

பல் துலக்கும் போது நாம் செய்யும் 5 தவறுகள் - 5 mistakes we make while brushing

பல் துலக்கும் போது நாம் செய்யும் தவறுகள் என்னவென்று பார்ப்போம்.

* நாம் கண்ணாடியை பார்த்து பல் துலக்குவது தான் சிறந்தது, ஆனால் பலரும் அதனை செய்வதில்லை.

* பல் துலக்குவதற்கு சரியான நேரம் எடுத்து கொள்ள வேண்டும் , ஆனால் நாம் வேகவேகமாக ஒரு நிமிடத்தில் முடித்து விடுகிறோம்.

* நாம் மிகவும் அழுத்தி பல் தேய்க்கிறோம் , இதனால் நமது பற்கள் பாதிப்படைகின்றன.

* நாம் சரியான பிரஷையும், டூத் பேஸ்டையும் உபயோகப்படுத்த தவறி விடுகிறோம்.

* பல் துலக்கிய பிறகு அதிகளவு வாய் கொப்பளக்க வேண்டும், ஆனால் நாம் அதனை செய்ய தவறி விடுகிறோம்.

மறக்க முடியுமா - முதல்வன் உருவான கதை

அறுபது வயது முதியவரிடம் நீங்கள் பேசிக் கொண்டிருக்கிறீர்கள் என்றால், அறுபது வருட அனுபவம் உள்ளவரிடம் பேசுகிறோம் என பொருள். வாழ்ந்து கிடைக்கிற அனுபவங்களைவிட, இப்படியான அனுபவசாலிகளிடம் பேசி, அவர்களின் அனுவங்களை பெறுவது என்பது ஒரு கலை. ஒருவரது அறுபது வருட அனுபவத்தை அரைமணி நேர பேச்சில் அள்ளிக் கொள்ளலாம்.

திரையுலகில் இப்படியான அனுபவங்கள் பெருமளவில் கை கொடுக்கும். திரைப்படம் சார்ந்த சில பழைய நினைவுகள் இன்று புதிதாக வரும் இளைஞர்களுக்கு தெரியாதவை, ஆனால், அவர்களுக்கு உத்வேகம் தரக்கூடியவை.

இயக்குனர்கள் இன்று கதைக்காக முட்டி மோதுகிறார்கள். கதைக்கா எங்கும் ஓட வேண்டியதில்லை. நம்மைச் சுற்றி கதைகள் கொட்டிக் கிடக்கின்றன. தேவைப்படுவதெல்லாம், அதனை அடையாளம் கண்டு கொள்கிற திறமை மட்டுமே. ஷங்கரின் முதல்வன் படம் இதற்குச் சிறந்த உதாரணம்.


ஷங்கர் படங்களில் இந்தியனும், முதல்வன் திரைப்படமும் தான் அதிக ரசிகர்களால் விரும்பப்படுபவை. இரண்டுமே திரைக்கதைக்கு முக்கியத்துவம் தந்து உருவானவை. அதில் முதல்வன் படத்தின் கதை கிடைத்தது ஒரு சுவாரஸியமான சம்பவம்.

ஜீன்ஸ் படம் சுமாராக போன பிறகு ஒரு சூப்பர்ஹிட் படத்தை இயக்கியாக வேண்டிய நிலை ஷங்கருக்கு. அவர் விரும்பும் சமூக சீர்கேட்டை சரி செய்யும் ஹீரோ கதை யாரிடமும் இல்லை. கதையைப் பிடிங்க, திரைக்கதை எழுதி தருகிறேன் என்று சுஜாதா சொல்லிவிட்டார். எப்படி புரண்டுப் பார்த்தும் கதை அமையவில்லை. கடைசியில் அசிஸ்டெண்டுகளுடன் வெளியூர் பயணமானார்.

 வெளியூர் வந்து சில தினங்கள் கழிந்தும் எதுவும் நகரவில்லை. யார் சொல்கிற ஐடியாவும் ஷங்கரை கவரவில்லை. இந்த நேரத்தில் பத்திரிகையில் ஒரு செய்தி வருகிறது. அமெரிக்காவின் ஒரு நகரத்தின் ஒருநாள் மேயராக இந்திய விஐபி ஒருவர் நியமிக்கப்பட்டது அந்த செய்தியில் உள்ளது. ஒருநாள் மேயராகிறவர், ஒரு பில்டிங்கையோ இல்லை வேறு எதையாவதையோ இடிக்கச் சொன்னால் என்னாகும்? ஒருநாள் மேயராகி என்னத்தான் செய்வார்கள்? இப்படி அரட்டை அடித்துக் கொண்டிருந்த வேளையில் திடீரென ஒரு பிளாஷ். இதேபோல் ஒருநாள் முதல்வர் தமிழகத்தில் சாத்தியமா?

உடனே சுஜாதாவுக்கு போன் பறக்கிறது. பெரும்பான்மையான எம்எல்ஏக்கள் ஒத்துக் கொண்டால், தேர்தலில் நிற்காமலேயே ஒருவரை ஒருநாள் முதல்வராக்கலாம் என்கிறார் சுஜாதா. சட்டத்தில் அதற்கு இடம் இருக்கிறது. சுஜாதா சொல்லி முடித்ததும் கதை தயார் என்கிறார் ஷங்கர்.

ஒருவனை ஏன் அனைத்து எம்எல்ஏ க்களும் சேர்ந்து முதல்வராக்க வேண்டும்? அப்படி முதல்வராகும் அவன் ஒருநாளில் என்னென்ன செய்ய முடியும்?

அடுத்தடுத்த கேள்விகள், அதற்கான பதில்கள் என கொஞ்சம் கொஞ்சமாக உருவானதுதான் முதல்வன் என்ற மாபெரும் வெற்றிப்படம்.

பஜ்ரங்கி பைஜான் படத்தின் கதையும் இதேபோல் ஒரு செய்தித்தாளிலிருந்து எடுத்துக் கொண்டதே.

நீதி - செய்தித்தாளின் சின்னச் செய்திகளிலிருந்தும் ஒரு திரைப்படத்துக்கான கதை கிடைக்கும்.