Sunday 17 January 2016

ஏமாற்றி விட்டாரா பாலா ? இதையாவது கேட்பாரா?

இளையராஜாவின் 1000மாவது படம் என்ற தனிப் பெரும் அடையாளத்துடன் பொங்கலுக்கு வெளிவந்த படம் 'தாரை தப்பட்டை'. இதுவரை பாலா இயக்கத்தில் வெளிவந்த படங்களிலேயே மிகவும் மோசமான படம் என்ற விமர்சனத்தை இந்தப் படம் இரண்டு நாட்களிலேயே பெற்றது திரையுலகத்தினரிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பாலா இயக்கத்தில் இதுவரை வெளிவந்த படங்கள் எதுவுமே அந்தப் படங்களின் தயாரிப்பாளர்களுக்கு லாபத்தைத் தந்தது இல்லை என்பது அனைவருக்குமே தெரிந்த ஒன்றுதான். இருந்தாலும் அவருடைய படங்களில் நடித்தன் மூலம் விக்ரம், சூர்யா, ஆர்யா, அதர்வா என நான்கு நடிகர்களுக்கு திரையுலகத்தில் ஒரு இடம் கிடைத்தது. அது மட்டும்தான் அவருடைய படங்களால் கிடைத்த லாபம்.

விமர்சகர்களாலும், ரசிகர்களாலும் அதிகம் எதிர்பார்க்கப்பட்ட படமாக வந்த 'தாரை தப்பட்டை' படத்தில் பாலா எந்த ஒரு புதிய விஷயத்தையும் கையாளாமல் அரைத்த மாவையே அரைத்திருக்கிறார் என்ற குற்றச்சாட்டு பரவலாக எழுந்துள்ளது. அதே பரதேசி கோலத்தில் ஒரு நாயகன், துணிச்சலான கதாநாயகி, வெறித்தனமான வில்லன் என இந்தப் படத்திலும் வழக்கமான பாத்திரப் படைப்புகள்.

படத்தைப் பணம் போட்டுத் தயாரித்து நாயகனாகவும் நடித்த சசிகுமாருடைய கதாபாத்திரம் பற்றி விமர்சகர்கள் கூட பாராட்டவில்லை. மாறாக நாயகியாக வரலட்சுமி கதாபாத்திரத்தின் முக்கியத்துவம் பற்றியும், அவருடைய நடிப்பைப் பற்றியும்தான் பேசுகிறார்கள். நடிகராகவும், தயாரிப்பாளராகவும், பெயர், பொருள் இரண்டையும் இந்தப் படத்தில் சசிகுமார் இழந்துவிட்டார் என்று கோலிவுட்டிலேயே கவலைப்படுகிறார்கள்.

இந்தப் படத்தின் ரிசல்ட் பற்றி முன்கூட்டியே தெரிந்து கொண்டதால்தான் படத்தின் இயக்குனரான பாலா கூட பத்திரிகையாளர்களைச் சந்திப்பதைத் தவிர்த்தார் என மீடியா வட்டாரங்களிலும் தெரிவிக்கிறார்கள்.

காலமும், ரசனையும் மாறி வரும் நிலையில் பாலா தன்னை மாற்றிக் கொள்வதுதான் சரி என சமூக வலைத்தளங்களிலும் பரவலான கருத்து எழுந்துள்ளது. யார் சொன்னாலும் கேட்காத பாலா இதையாவது கேட்பாரா என்பது சந்தேகம்தான்...

0 comments:

Post a Comment