Sunday 17 January 2016

ஆட்டம் நல்லா இல்ல… ஆட்டக்காரி ஓகே…! – “கதகளி” விமர்சனம்

பொங்கல் ரேசில் தனியாக நின்று ஆட முடியும் என்ற நம்பிக்கையோடு களமிறங்கி யிருக்கிற படம் கதகளி. கேரளத்தின் மிக முக்கிய நடனங்களில் ஒன்றான கதகளி ஆடுபவர்கள் தனி உடையலங்காரம், முக அலங்காரம், சிகை அலங்காரம் எல்லாம் வைத்திருப்பார்கள். அதுபோல இந்த படத்திலும் பலவித அவதாரங்கள் இருக்கும் என்ற எதிர்பார்ப்பில் படத்துக்குள் நுழைந்தால்…

கதை: கடலூர் மீனவர் சங்கதலைவராக இருப்பவரிடம் வேலை செய்கிறார் ஹீரோவின் அண்ணன். பல ஆண்டுகள் வேலை செய்த பிறகு தனியாக தொழில தொடங்க முயற்சிக்கிறார். இதில் மீனவர் சங்க தலைவருக்கும் ஹீரோவின் அண்ணனுக்கும் பகை முற்றுகிறது. ஒரு கட்டத்தில் ஹீரோவின் அண்ணன் நடத்தும் சங்கு தொழிற்சாலையை அடித்து துவசம் செய்துவிட்டு தன் தொழிற்சாலை யையும் அவர்களே அடித்துக் கொண்டு பவர் இருக்கும் தைரியத்தில் பொய் வழக்கு கொடுத்து ஹீரோவை போலீசில் மாட்டி விடுகிறார்.

அந்த மோதலில் ஹீரோவின் அப்பாவுக்கு கால் போய்விடுகிறது. பணம், செல்வாக்கு, பதவி இருப்ப தால் மீனவர் சங்கத்தலைவரை ஹீரோ குடும்பம் எதிர்க்க முடியாமல் போகிறது. ‘நாமும் நாலு வருஷம் ஆறப்போட்டுட்டு பணம் சம்பாதித்து விட்டு வந்து போடணும்னு’ ஆத்திரத்தில் ஹீரோ பேசுகிறார்.

இந்த சம்பவத்திற்கு பிறகு ஹீரோ வெளிநாடு சென்று விடுகிறார். ஹீரோ ஊரில் இல்லாத நேரம் பலரிடமும் பகையை வளர்த்துக் கொள்கிறார் மீனவர் சங்கத்தலைவர். அவரை வெட்டிச் சாய்க்க பலர் காத்திருக்கிறார்கள்.இந்த சூழலில், ஏற்கனவே, செல்போன் மூலம் ஹீரோவுக்கு காதல் ஏற்படுகிறது. வெளிநாட்டில் இருந்து காதலித்தவளை கல்யாணம் செய்து கொள்வதற்காக ஊர் திரும்புகிறார் ஹீரோ.

திருமண ஏற்பாடுகள் நடக்கிற நேரம் திடீரென மீனவர் சங்கத்தலைவர் கொல்லப்படுகிறார். இந்த கொலைப்பழி ஹீரோமீதும், அவர் அண்ணன் மீதும் விழுகிறது.திருமண ஏற்பாடுகளில் இருந்த ஹீரோ குடும்பத்தை கொல்லப்பட்ட மீனவர் சங்கத்தலைவரின் ஆட்கள் கொல்வதற்காக அலைகிறார்கள்.

போலீசும் ஹீரோவை பிடித்து ஜெயிலில் அடைத்து பிரச்னையை முடிக்க முயற்சிக்கிறது.

ஹீரோ போலீசில் சிக்கினாரா…

வில்லன் கோஷ்டியிடம் சிக்கினாரா…

திருமணம் நடந்ததா…

ஹீரோ என்ன ஆனார்…

என்பதுதான் கதகளி படம்.

ஹீரோவுக்கான பில்டப் எதுவும் இல்லாமல் ரொம்ப சாதாரணமாக விஷால் வரும்போதே கதையும் சுமாராகத்தான் இருக்கும் என்பது புரிந்து விடுகிறது.படத்தின் பெயரை ஏன் கதகளி என்று வைத்தார் என்பது இயக்குனருக்கே வெளிச்சம். உண்மையில் அந்த ஆட்டத்தின் வீரியம், வேகம், பரபரப்பு, பதட்டம் எதுவும் கதையிலும் இல்லை, திரைக்கதையிலும் இல்லை.

கொலைப்பழி சுமத்தப்பட்ட ஒரு அப்பாவி குடும்பம் உயிருக்கு பயந்து காரில் ஊர் ஊராக சுற்றி வருவதை நம்பும்படி சொல்ல முயற்சித்திருக்கிறார் இயக்குனர்.

வழக்கமான விஷால் படங்களில் இருக்கும் நையாண்டி, நக்கல் இதில் மிஸ் ஆகிறது. விஷால் இன்னும் எத்தனை படங்களில் தனியாக நின்று அடித்து ஆடுவார் என்று தெரியவில்லை.கொலையாளி யார் என்று குழப்பி விடுவது தொடங்கும் போதே கொலையாளியை ரசிகர்கள் முடிவு செய்து விடுகிறார்கள். வில்லன் என்று கதையில் இருந்தால் ஹீரோதான் அதற்கு முடிவுகட்ட வேண்டும் என்ற சினிமா இலக்கணத்தை மீறாத இயக்குனர்.

ஹீரோயின் கேத்ரினா தெரேசா... பெருசாக நடிக்க வாய்ப்பு இல்லை. சில இடங்களில் ‘கிக்’ ஆகவும்… பல இடங்களில் ‘மக்’ஆகவும் இருக்கிறார்.

கருணாஸ் கதகளியில் இருக்கிறார். அவ்வளவே.

விஷால் இதற்காக பெரிய மெனக்கெடல் எதையும் செய்ததுபோல தெரியவில்லை. ரொம்ப சாதாரணமாக வந்து போகிறார். சண்டைக்காட்சிகளில் கூட பறந்து பறந்து அடிக்காமல் ரொம்ப யதார்த்தமாக முயற்சித்திருக்கிறார்.

பாடல்களிலும் பெரிய தாக்கம் ஏதும் இல்லை. பின்னணி இசை மட்டும் பல இடங்களில் நிஜத்தை சொல்கிறது.

வில்லன் என்று உருவாகும் ஆட்கள் வெளியில் ஆயிரம் விரோதிகளை சம்பாதித்தாலும் அவர்களைவிட தான் வளர்க்கும் ஆட்களாலும், தன்னிடம் கை நீட்டி காசு வாங்கும் காக்கிச் சட்டையாலும்தான் தானும் சரிந்து, தன் சாம்ராஜ்ஜியமும் சரியும் என்பதை கோடு போட்டு காட்டியிருக்கிற இயக்குனருக்கு சபாஷ்.

இது சினிமா என்றாலும் நாட்டில் நடந்த பல விடை காண முடியாத சம்பவங்களுக்கு ‘கதகளி’ விடை சொல்வது போல இருக்கிறது.

கதை : பரவாயில்லை ரகம்.
திரைக்கதை : பலமில்லை
பாடல்கள் : மனசில் நிற்கவில்லை
இசை : சில இடங்களில் மிரட்டல்… சில இடங்களில் துரத்தல்
இயக்கம்: மெனக்கெட்டு படம் எடுத்தாலும்… ரொம்ப சாதாரணமா படம் எடுத்தாலும் ரசிகர்கள் என்னவோ ஒரே மாதிரிதான் ரிசல்ட் தருவாங்கன்னு தனக்கு தானே பாண்டியராஜ் வட்டம் போட்டுகிட்டாரோன்னு நினைக்கத் தோணுது. வழக்கமான அவர் படங்களில் காணப்படும் பல விஷயங்கள் இதில் இல்லை. படம் தொடங்கி ரிலீஸ் வரைக்கும் பல பில்டப் இருந்தது… ஜல்லிக்கட்டு மாதிரி… எல்லாம் ரெடியாகி தடை போட்ட மாதிரி இருக்கு அவர் இயக்கம்.

பொதுவா சொல்லணும்னா கூட்டத்துக்கு மேடை போட்டு… ஆட்டத்துக்கு ஆள ஏத்தி விட்ட மாதிரி… ஆட்டம் நல்லா இல்லாம போனாலும் ஆட்டக்காரிய பாக்க ஒரு கூட்டம் வராமலா போயிடும்…

அப்படித்தான் இருக்கும் கதகளி கலெக்ஷன்..!

0 comments:

Post a Comment