Thursday 25 February 2016

நாக்கை துருத்தி... கையை ஓங்கி... தஞ்சை கோர்ட்டில் டென்ஷனான விஜயகாந்த்!

தமிழக முதல்வர் ஜெயலலிதாவின் பேனரை  சேதப்படுத்தியதாக தொடரப்பட்ட  வழக்கில்,  தேமுதிக தலைவர் விஜயகாந்த் ஜாமீன் பெற தஞ்சாவூர் வந்திருந்தார். அப்போது நீதிமன்ற வளாகத்தில் ஏற்பட்ட தள்ளு முள்ளுவில் தேமுதிக நிர்வாகி ஒருவரை விஜயகாந்த் அடிக்க பாய்ந்ததால் சிறுதி நேரம் பரபரப்பு நிலவியது.

கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் 28-ம் தேதி,  மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு நிவாரண உதவிகள்  வழங்க கோரி, தேமுதிக தலைவர் விஜயகாந்த தலைமையில் தஞ்சாவூர் தபால் நிலையம் அருகே ஆர்ப்பாட்டம் நடந்தது.

அப்போது,  ஆர்ப்பாட்ட மேடை அருகே இருந்த பேருந்து நிறுத்தத்தில் வைக்கப்பட்டிருந்த ஜெயலலிதா பேனரை தேமுதிக தொண்டர்கள் கிழித்தெறிந்தனர். அதனைத் தொடர்ந்து அங்கு வந்த அதிமுகவினர் விஜயகாந்த் பிளக்ஸ் பேனரை  கிழித்து, அங்கிருந்த தேமுதிக தொண்டர்கள் சிலரையும் கடுமையாகத் தாக்கினர். இனிமேல் தஞ்சாவூருக்குள் விஜயகாந்த்தை நுழைய விடமாட்டோம் என்று அதிமுகவினர் சபதமும் போட்டனர்.

பின்னர் விஜயகாந்த் மீது வன்முறையை தூண்டுதல், பொதுசொத்தை சேதப்படுத்துதல் போன்ற பிரிவுகளில் அதிமுகவினர் கொடுத்த புகாரின் அடிப்படையில் வழக்கும் போடப்பட்டது. அதில் முதல் குற்றவாளியாக விஜயகாந்த் சேர்க்கப்பட்டார்.

இந்நிலையில் இவ்வழக்கில் ஜாமீன் பெற இன்று (வியாழன்) காலை 12 மணியளவில்,  விஜயாகாந்த் தஞ்சை கோர்ட்டில் ஆஜரானார். அப்போது அங்கு தேமுதிகவினர், ஏராளமானோர் கூடியிருந்தனர். ஒருகட்டத்தில் விஜயகாந்தை பார்க்க தொண்டர்கள் ஆர்வ மிகுதியால் ஒருவரையொருவர் முண்டியடித்தனர். அதனால் ஏற்பட்ட தள்ளு முள்ளுவில் விஜயகாந்த் சிக்கிக் கொண்டார்.இதனையடுத்து எரிச்சலடைந்த விஜயகாந்த்,  நிர்வாகி ஒருவரை அடிக்க, நாக்கை துருத்திக்கொண்டு கையை ஓங்கினார். இதனால் அந்த இடத்தில் சலசலப்பும் பரபரப்பும் நிலவியது.

பின்னர் நீதிபதி முன்பு ஆஜரான விஜயகாந்திற்கு ஜாமீன் வழங்கப்பட்டது.  இதேபோன்ற பேனர் பிரச்னையில் அதிமுகவினர் மீது, தேமுதிகவினர் கொடுத்த புகார் கிடப்பில் போடப்பட்டுள்ளது குறிப்பிடத்ததக்கது. 

0 comments:

Post a Comment