Thursday 25 February 2016

பூச்சி மருந்து தெளிப்பானிலும் ஜெ. ஸ்டிக்கர்... ஆவேசமடைந்த விவசாயிகள்!

கோவையில் விவசாயிகளுக்கு வழங்கப்பட்ட இலவச மருந்து தெளிப்பானில் பெரிய அளவிலான ஜெயலலிதாவின் ஸ்டிக்கர் ஒட்டப்பட்டிருந்ததால் ஆவேசமடைந்த விவசாயிகள்,  "ஸ்டிக்கர் ஒட்டாம எதையும் கொடுக்க மாட்டீங்களா..?" என கோபமாக கேட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

தானிய சேமிப்பு குறித்து விவசாயிகளுடனான ஆலோசனைக் கூட்டம்,  கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இன்று நடந்தது. இந்த ஆலோசனைக்கூட்டத்தில் கோவை, திருப்பூர் மாவட்டங்களை சேர்ந்த 100க்கும் மேற்பட்ட விவசாயிகள் கலந்து கொண்டனர். கூட்டத்தின் முடிவில் விவசாயிகள் அனைவருக்கும் இலவசமாக மருந்து தெளிப்பான் வழங்கப்பட்டது.

தனியார் நிறுவனத்திடம் கொள்முதல் செய்யப்பட்ட அந்த மருந்து தெளிப்பான்களில்,  பெரிய அளவிலான முதல்வர் படம் ஒட்டப்பட்டிருந்தது. அதிகாரிகள் அதை விவசாயிகளுக்கு தர முற்பட்டபோது ஜெயலலிதா படம் ஒட்டியிருந்ததை கண்ட விவசாயிகள், "இதில் எதற்கு இவ்வளவு பெரிய ஜெயலலிதா பட ஸ்டிக்கர் ஒட்டியிருக்கிறீர்கள்?" என அதிகாரிகளிடம் சண்டையிட்டனர்.

மேலும், ஆவேசமடைந்த சில விவசாயிகள், முதல்வர் ஜெயலலிதா பட ஸ்டிக்கரை கிழித்தெறிந்தனர். மேலும் செய்தியாளர்களிடமும் தங்கள் ஆதங்கத்தை கொட்டித் தீர்த்தனர்.

"விவசாயிகளுக்கு வழங்கும் மருந்து தெளிப்பானில் அம்மா ஸ்டிக்கர் ஒட்டி கொடுப்பது எங்களுக்கு கேவலமாக இருக்கிறது. இதை எப்படி நாங்கள் எடுத்துச் செல்ல முடியும்? அரசு வழங்கும் ஒரு பொருளில் ஜெயலலிதா படம் இடம்பெறுவது நாங்கள் ஏதோ கட்சிக்காரர்கள் போன்ற தோற்றத்தை ஏற்படுத்துகிறது. முதல்வர் படமாக இருந்தாலும் அதை இவ்வளவு விளம்பரப்படுத்த வேண்டிய அவசியமில்லை. அரசாங்க முத்திரையை போட்டு கொடுக்கலாம். அதற்காக இப்படியா?" என கொந்தளித்தனர் விவசாயிகள்.

ஒருவழியாக அதிகாரிகள் அவர்களை சமாதானப்படுத்தி அனுப்பி வைத்தனர்.

0 comments:

Post a Comment