Friday 22 January 2016

இந்த மூன்றாம் உலகப் போர், ‘போர்‘ அடிக்கல! விமர்சனம்

மூன்றாம் உலகப் போர் – விமர்சனம்

லவ்வு… லவ்வை விட்டா ஆவி பில்லி சூனியம்! ஆவியை விட்டா அடிதடி ஆக்ஷன்! என்று குண்டு சட்டிக்குள் நண்டு மேய்த்துக் கொண்டிருந்த தமிழ்சினிமா கொஞ்சம் ரோசப்பட்டு இந்தியா சீனா எல்லையில் போய் நின்றிருக்கிறது. நாட்டுப்பற்று கதைகள் நமக்கொன்றும் புதுசு இல்லைதான். ஆனால் இந்த படத்தின் நேக்கு போக்கு கொஞ்சம் அதிர்ச்சியாகக் கூட இருக்கிறது. டெல்லி செங்கோட்டையை காட்டாத, பிரதமரை காட்டாத, மந்திரிகளின் பிரஸ்மீட்டுகளை காட்டாத, ஒரு தேசப்பற்று படம்! இதை துணிச்சல் என்பதா? அசட்டுத் துணிச்சல் என்பதா? அறிமுக இயக்குனர் சுகன் கார்த்திக்கு விரல் நடுங்க ஒரு ஷேக் ஹேன்ட்.

போர் முனையில் சிக்கிக் கொள்ளும் இந்திய ராணுவ மேஜர் ஒருவனை ‘மே…’ தனியாகவும் ‘ஜர்…’ தனியாகவும் கிழித்து மேய்கிறான் சீனாக்காரன். அந்நாட்டு ராணுவத்திடம் சிக்கிக் கொண்ட இவனிடம், “எங்க நாட்டு வீரர்கள் 100 பேரை எங்க வச்சுருக்கீங்க? உண்மையை சொல்லிடு. இல்லேன்னா கொன்னுடுவேன்” இதுதான் அந்த சீனாக்காரனின் தொண தொணப்பு. ஆச்சர்யம், தமிழ் மொழி பேசுகிற தளபதியாக அவன் இருக்கிறான் என்பதல்ல. தமிழின் பெருமையை பற்றியும் அவன் பேசுவதுதான். (நல்லவேளை… அவனை “இசைத்தமிழ் நீ செய்த அரியாசனம்…” என்று பாட வைக்காமல் விட்டார்களே?)

அவன் கொடுக்கும் ஒவ்வொரு உச்சக்கட்ட டார்ச்சருக்கும் மனம் தளராத அந்த மேஜர், உயிர் போகும் தருவாயில் தானும் இறந்து சீனாவின் மிகப்பெரிய நீர் மூழ்கி கப்பலையும் அழித்துவிட்டு சாவதுதான் க்ளைமாக்ஸ். நடுவில் அந்த மேஜரின் குடும்பம், புத்தம் புது மனைவி. அவளின் பிளாஷ்பேக் சிரிப்பு என்று ஆங்காங்கே நிரவப்பட்ட, கண்ணுக்கு நிறைவான காட்சிகள். இதுதான் மூன்றாம் உலகப் போர்.

இந்திய ராணுவ வீரராக நடித்திருக்கிறார் சுனில் குமார். ஆரம்ப கால அருண் பாண்டியனை போலிருக்கிறார். ஒரு ராணுவ வீரனின் ஸ்கெட்ச் அப்படியே பொருந்துகிறது அவருக்கு. இந்த தடவை தப்பிச்சுடுவார்… என்று நம்மை ஒவ்வொரு முறையும் நினைக்க வைக்கிறது அவரது நம்பிக்கை கலந்த கண்கள். ஆனால்? அவர் படும் சித்திரவதைகள் அப்படியே தியேட்டருக்குள் கடத்தப்படும்போது சுனிலின் நடிப்பும், பின்னணி இசையும், ஒளிப்பதிவும் கலந்து கட்டி பதற வைக்கின்றன. இறுதிக் காட்சியில் சுனில் மீது ஏதோவொரு கெமிக்கல் பாம் செலுத்தப்படுகிறது. அதன் தாக்கம் உடம்பில் ஏற ஏற அவர் நடந்து கொள்ளும் விதத்தை நடிப்பில் காட்டி பிரமிக்க வைத்திருக்கிறார். அகிலா கிஷோருடனான லவ் சீன்களில் மட்டும், ‘அண்ணாத்த‘ சற்றே வெட்கப்பட்டு விலகியே நிற்கிறார்.

அகிலா கிஷோருக்கு அதிகம் வேலையில்லை. கெட்டாலும் மருமகள்கள் மருமகள்களே என்பதற்கு அந்த ஒரு காட்சி அழகு. சுனில் இறந்துவிட்டார் என்றதும், “எங்க பொண்ணை நாங்க அழைச்சுட்டு போயிடுறோம்” என்று நிற்கும் பெற்றோர்களை வெளியே போகச் சொல்லும் அந்த காட்சி.

தமிழ் பேசும் அந்த சீன ராணுவ மேஜர் வில்சன், நடை உடை பாவனையால் சிரிக்க வைத்தாலும், சித்ரவதையில் மிரள விடுகிறார். ஆளை எங்கே பிடித்தார்களோ? நடிக்கவும் செய்திருக்கிறார். 2025 ன் தொழில் நுட்பத்தை காட்டுவதற்காக அவர் பயன்படுத்தும் கம்ப்யூட்டரெல்லாம், ஜீபூம்பா கம்ப்யூட்டர்ஜியாகவே தெரிகிறது நம் கண்களுக்கு.

முதல் பாதி நான்கு சுவர்களுக்குள்ளேயே முடிந்துவிட்டாலும், இரண்டாம் பாதியில் அண்டர் வாட்டர், நீர்மூழ்கி கப்பல், பறக்கும் போர் விமானங்கள் என்று வித்தை காட்டுகிறார் ஒளிப்பதிவாளர் தேவா.

பாடல்களில் கவனம் ஈர்த்திருக்கிறார் இசையமைப்பாளர் வேத் சங்கர். அந்த டூயட் பாடலில் ஒரு கவித்துவமான ஸ்டைலை கையாண்டு “நானும் இருக்கேன்ல” என்று மிரட்டுகிறார் எடிட்டர் ரிச்சர்டு.

2025ல் கதை நடப்பதாக காட்டுகிறார்கள். அதற்கான பொருளாதார மெனக்கெடல்கள் இருந்திருந்தால் படம் இன்னும் ருசித்திருக்குமோ?

கடைசியில் படம் சொல்ல வரும் மெசெஜ், பர்மா பஜார், ரிச் ஸ்டீரிட் கடை வியாபாரிகளின் வயிற்றை கலக்குகிற சமாச்சாரம். “சைனா போன்களும், அங்கிருந்து வரும் இன்னபிற ஐட்டங்களும் இந்தியாவை உளவு பார்க்கலாம்டா தம்பிகளா. உஷாரா இருங்கடா” என்பதுதான் அது.

ஒருவேளை மூன்றாம் உலகப்போரின் முக்கியமான ஆயுதங்களே அவைதானோ என்னவோ?

எனிவே… இந்த மூன்றாம் உலகப் போர், ‘போர்‘ அடிக்கல!

மணல் கயிறு பாகம் 2 – அப்படின்னா ‘அந்த’ எட்டு கண்டீசன் என்னான்னு தெரியணுமா?

‘குடும்பம் ஒரு கதம்பம்’ என்ற படத்தில் இயக்குனராக அறிமுகமான விசு, இயக்கிய இரண்டாவது படம் ‘மணல் கயிறு’. கடந்த 1982ஆம் ஆண்டு வெளிவந்த இந்த திரைப்படம் தமிழகத்தில் சூப்பர் ஹிட் ஆகியது. எஸ்.வி.சேகர், விசு, கிஷ்மு, மனோரமா, சாந்தி கிருஷ்ணா, கமலா காமேஷ் மற்றும் பலர் நடித்த இந்த படத்தின் இரண்டாம் பாகத்தை தயாரிக்க இருப்பதாக நடிகர் எஸ்.வி.சேகர் கூறியிருந்ததபடி ஷூட்டிங்கை தொடங்கி விட்டார்

‘மணல் கயிறு’ படத்தில் எஸ்.வி.சேகர் திருமணத்திற்கு முன் போடும் எட்டு கண்டிஷன் கள்தான் படத்தின் கதை.இரண்டாம் பாகத்தில் ஒரு பெண் தனக்கு எப்படிப் பட்ட மாப்பிள்ளை வேண்டும் என்று போடும் எட்டு கண்டிஷன்கள்தான் படத்தின் கதை என்று கூறப்படுகிறது. தற்போதைய கால கட்டத்தில் ஆண்கள் கண்டிஷன்கள் போடும் நிலையில் இல்லை என்பதால் இந்த படத்தின் கதையை இவ்வாறு மாற்றியதாக எஸ்.வி.சேகர் கூறியுள்ளார்.

சாப்ட்வேர்ல வேலை பார்க்கற பொண் போட்ட கண்டிஷன்ல அவுங்க அப்பா கிட்டுமணி ,அம்மா உமா கதி கலங்கி நம்ம நாரதர் நாயுடு கிட்ட கூப்பிட்டு வராங்க. அந்த பொண்ணுக்கு ஏதாவது பேரு வைக்கணுமே.வித்யான்னு வெச்சிடுவோம்.

நாரதர் நாயுடு: வாம்மா வித்யா. நீ போட்ட கண்டிஷன்ல உங்க அப்பா, அம்மாக்கு ஒரு மாசமா சாப்பாடே இறங்கலயாமே.எங்க அந்த கண்டிஷனெல்லாம் எங்கிட்ட சொல்லும்மா. நான் நல்ல பையனா பாக்கறேன்.

வித்யா: நான் MCA படிச்சிருக்கேன்.

நா.நா: அதுக்கென்னம்மா. ஒரு நல்ல இஞ்சினியர் படிச்ச பையனா பார்த்துடலாம்.

வித்யா: BE படிச்ச பையனா? அது UG தானே. நான் PG படிச்சிருக்கேனே.

நா.நா: சரிம்மா. ME படிச்ச மாப்பிள்ளையா பார்த்துடுவோம்.

வித்யா: ME MCAவைவிட பெரிய படிப்புனு என்னை மட்டம் தட்டுவாரே.

நா.நா: சரிம்மா. அப்ப MCA படிச்சவரே பார்த்துடலாம்.

வித்யா:எனக்கு சமமா மாப்பிள்ளை பார்த்தா,என் மதிப்பு குறைஞ்சிடுமே.

நா.நா: என்னம்மா, BE படிச்ச மாப்பிள்ளைனா வேண்டாங்கற, ME, MCAவும் வேண்டாங்கிற.அப்ப என்ன தான் படிச்சிருக்கனும்.

வித்யா: PG பண்ணிருக்கனும். ஆனா அது 6 வருஷ கோர்ஸா இருக்க கூடாது. MSc Software,Engineering இந்த மாதிரி ஏதாவது 5 வருஷம் படிச்சிருக்கனும்.

நா.நா: முதல் கண்டிஷனே சூப்பரா இருக்குமா. அடுத்து..?

வித்யா: எனக்கு என் கேரியர் தான் முக்கியம்!

நா.நா: டிபன் கேரியரா? நல்லதா பார்த்து வாங்கி தர சொல்றேன்.

வித்யா: அங்கிள். நான் சொல்றது என்னோட ப்ரஃபஷன். எந்த காரணத்துக்காகவும் என்னை வேலையை விட சொல்லக்கூடாது.

நா.நா: சரிம்மா. அதுக்கென்ன, வேலைக்கு போற பொண்ணு வேண்டும்னு சொல்ற மாப்பிள்ளையை பார்த்துட்டா போகுது.

வித்யா: அப்படி கண்டிஷன் போடற மாப்பிள்ளை எல்லாம் வேண்டாம். இப்படி சொல்ற மாப்பிள்ளை நாளைக்கே மாற வாய்ப்பிருக்கு. அவர் இஷ்டப்படறார்னு எல்லாம் நான் வேலைக்கு போக முடியாது. என் இஷ்டப்படி தான் நான் வேலைக்கு போவேன்.

நா.நா: சரிம்மா. உன் இஷ்டப்படி விடற மாப்பிள்ளையே பார்த்துட்டா போச்சு.

வித்யா: கண்டிஷன் நம்பர் 3. பையன் என் கண்ணுக்கு பாக்கறதுக்கு சல்மான் கான் மாதிரி தெரியனும், பேசறதுல ஷாருக்கான் மாதிரி இருக்கனும், டேலண்ட்ல அமிர்கான் மாதிரி இருக்கனும். ஆனா மத்தவங்க கண்ணுக்கு பார்க்கறதுக்கு விஜய் மாதிரி தெரியனும், பேசறதுல அஜித் மாதிரி தெரியனும், டேலண்ட்ல ரவி கிருஷ்ணா மாதிரி இருக்கனும்.

நா.நா : மொத்ததுல உன் கண்ணுக்கு ரெமோவா தெரியனும். மத்தவங்க கண்ணுக்கு மண்ணு லாரில ஆக்ஸிடெண்ட் ஆன சுமோவா தெரியனும். அப்படித்தானே?

வித்யா : ஆமாம். மாப்பிள்ளைக்கு குறைஞ்சது ஒரு 7-8 பேருக்காவது Non-Veg சமைக்க தெரியனும். ஏன்னா என் ஃபிரெண்ட்ஸ் எல்லாரும் வீக் எண்ட் வீட்டுக்கு வருவாங்க. அவுங்களுக்கு எல்லாம் டேஸ்டா சமைக்க தெரியனும். நானும் பக்கத்துல
நின்னுட்டு ரெசிப்பி எல்லாம் படிச்சி கைடன்ஸ் பண்ணுவேன். அதனால பயப்பட வேண்டாம்.

நா.நா: ஹிம்ம்ம்… கேஷ்மீரீ பிரியாணில இருந்து செட்டிநாடு சிக்கன் வரைக்கும் செய்ய தெரிஞ்ச பையனா பிடிச்சிடுவோம்.

வித்யா: கண்டிஷன் நம்பர் 5. பையனுக்கு அமெரிக்கன் அக்செண்ட்ல பேச தெரிஞ்சிருக்கனும்.

நா.நா: ஏம்மா. நீ என்ன கால் சென்டருக்கா ஆள் எடுக்கற? விட்டா மதர் டங் இண்ஃப்ளூவன்ஸ் எல்லாம் இருக்க கூடாதுனு சொல்லுவ போல.

வித்யா: அதெல்லாம் இல்லை அங்கிள். இந்த தடவை எப்படியும் எனக்கு விசா கிடைச்சிடும். அங்க போனா கம்பெனில நான் எப்படியும் சமாளிச்சிக்குவேன். ஆனா பார்ட்டிக்கெல்லாம் கூப்பிட்டு போனா அக்சண்ட்ல பேசனா தான் பெருமையா இருக்கும்னு சொல்லி கேள்விப்பட்டிருக்கேன்.

நா.நா: சரிம்மா. நம்ம சப்போர்ட்ல இருக்கற பையனா பார்த்து பிடிச்சிடுவோம் அடுத்த கண்டிஷன சொல்லு.

வித்யா: கண்டிஷன் நம்பர் 6. எந்த காரணத்தை கொண்டும் என்னை டிபண்டண்ட் வீசால கூப்பிட்டு போக முயற்சி பண்ணக் கூடாது.எனக்கு வீசா கிடைச்சா அவர் விருப்பப்பட்டா என் கூட டிபண்டண்ட் வீசால வரலாம். அதுல எனக்கு எதுவும் பிரச்சனையில்லை.

நா.நா: சரிம்மா. உனக்கு தான் விசா கிடைச்சிடுமே. அப்பறம் என்ன?

வித்யா: இப்பவெல்லாம் விசா, லாட்ல பிக் அப் பண்றாங்க. எனக்கு கிடைக்காம போகவும் வாய்ப்பிருக்கு. அதான்.

நா.நா: சரிம்மா. உன் கூடவே வர மாப்பிள்ளையையா பார்த்துடுவோம்.

வித்யா: இது தான் ரொம்ப முக்கியமான கண்டிஷன். நான் கொஞ்ச ஜாலி டைப். அதனால என் டீம்ல இருக்கற ஃப்ரெண்ட்ஸ் எல்லாம் எனக்கு அடிக்கடி கால் பண்ணுவாங்க. அதை தப்பா நினைக்கக்கூடாது.

நா.நா: உன் பிரெண்ட்ஸ் கூட நீ பேசறதால என்னமா பிரச்சனை. உன் பிரெண்ட்ஸ் கூட அவர் அதிகமா பேசினா தானே பிரச்சனை.

வித்யா: அங்கிள். நான் சொல்ற பிரெண்ட்ஸ் எல்லாம் பசங்க. என்னைக்கு பொண்ணுங்க, மத்த பொண்ணுங்களுக்கு செலவு பண்ணி ஃபோன்ல பேசுவாங்க. எப்பவும் பசங்க தான் செலவு பண்ணி ஃபோன் பேசி, ஜாலியா மொக்கை போடுவாங்க.

நா.நா: சரிம்மா. நீ உன் பசங்க பிரெண்ட்ஸ் கிட்ட பேசும் போது பிரச்சனை பண்ணாம, அந்த பையனை அவனோட பிரெண்ட்ஸ் கிட்ட பேச சொல்லிடுவோம்.

வித்யா : நாங்க இந்தியால இருக்கற வரைக்கும் அவுங்க அப்பா, அம்மா எங்க வீட்டுக்கு சனிக்கிழமை ஃபுல் டே வந்து தங்கிட்டு போகலாம். ஆனா என்னை சமைக்க சொல்லக் கூடாது.

நா.நா : இது ஒரு கண்டிஷனாம்மா. முதல் வாரம் நீ சமைச்சு போட்டா அவுங்க உன் வீட்டு பக்கமே தலை வைக்க மாட்டாங்க. இன்னும் ஏதாவது இருக்கா?

வித்யா: இது தான் கடைசி கண்டிஷன். எங்க ரெண்டு பேருக்கும் ஏதாவது பிரச்சனை வந்து டைவர்ஸ் ஆகிடுச்சினா

நா.நா: ஏம்மா இப்படி அபசகுனமா பேசற. வாய கழுவும்மா.

வித்யா: இருங்க அங்கிள் சொல்லி முடிச்சிடறேன். ஏதாவது பிரச்சனை வந்து டைவர்ஸ் ஆகிடுச்சுனா அவர் கண்டிப்பா வேற கல்யாணம் பண்ணிக்கனும்.

நா.நா: இங்க தாம்மா. இங்க தாம்மா. நீ தமிழ் பொண்ணுனு நிருபிக்கற.

வித்யா: அதெல்லாம் இல்லை அங்கிள். அதுக்கப்பறம் அந்த பையன் எப்படி சந்தோஷமா இருக்கலாம். அதான்

நா.நா மயக்கம் போட்டு விழுகிறார்..

முதல் பாகத்தில் நடித்த அனைத்து நடிகர்களையும் இரண்டாவது பாகத்தில் நடிக்க வைக்க தான் முடிவு செய்துள்ளதாகவும், அந்த படத்தில் நடித்த கிஷ்மு தற்போது உயிரோடு இல்லை என்பதால் அவருடைய கேரக்டரில் நடிக்க ஒரு பெரிய நடிகரிடம் பேச்சுவார்த்தை நடந்து வருவதாகவும் எஸ்.வி.சேகர் கூறியுள்ளார்.

தன்னம்பிக்கையைத் தூண்டும் 3 உலகத் திரைப்படங்கள்..!!

எல்லோருக்கும் வாழ்க்கையில் எதையாவது சாதிக்க வேண்டும். வரலாற்றில் நம் பெயரும் பதிவு செய்யப்பட வேண்டும் என்ற ஆசை இருக்கிறது. ஆனால் சிறு தோல்வி ஏற்பட்டாலே நாம் முடங்கி போய் விடுகிறோம். ஆனால் விடாமுயற்சியுடன் நம் இலக்கை நோக்கி பயணித்தால் எந்த ஒன்றாலும் நம்மை தோற்கடிக்க முடியாது. நம்மால் சாதிக்க முடியும் என்பதை நம் மனதுக்குள் விதைக்கிற உணமைக் கதையை அடிப்படையாக வைத்த படங்கள் இதோ உங்களுக்காக.

1. தி பர்ஸ்யூட் ஆஃப் ஹேப்பினஸ்

ஒரு காலத்தில் சாப்பிட உணவில்லாமல், தங்குவதற்கு வீடு இல்லாமல் ரயிலிலும், லிப்ட்டிலும், என கிடைக்கும் இடத்தில் எல்லாம் தங்கி, விடா முயற்சியுடன் வாழ்க்கையோடு போராடி இன்றைக்கு பல மில்லியன் டாலர் நிகர மதிப்புக் கொண்ட முதலீட்டு நிறுவனமான கார்டினர் ரிச் அண்ட் கோ-வை உருவாக்கிய கிறிஸ் கார்டினரின் வாழ்க்கைக் கதையை அடிப்படையாக வைத்து உருவானது தான் 'தி பர்ஸ்யூட் ஆஃப் ஹேப்பினஸ்' திரைப்படம்.

கிறிஸ் கார்டினர் ஒரு நிறுவனத்தில் ஸ்கேனர் மார்க்கெட்டிங் பணியில் இருக்கிறார். அதில் அவருக்குப் போதிய வருமானம் இல்லை. வாடகை கொடுக்க முடியாததால் வீட்டிலிருந்து வெளியேற்றப்படுகிறார். இதனால் மனைவியும் அவரை விட்டுப் போய்விடுகிறார். அவர் தன் மகனுடன் வீடு இல்லாமல் இரவு நேரத்தில் எங்கேயாவது தங்க இடம் கிடைக்காதா என்று அலைகிறார். இப்படி பல விதத்திலும் மன உளைச்சலுக்கு ஆளாகும் அவர் பணம் சம்பாதித்தே ஆக வேண்டும் என்று கட்டாயத்தில் பங்குத் தரகர் பணிக்கு இரவு பகலாகப் படிக்கிறார். அவரது விடாமுயற்சியில் இறுதியில் பங்குத் தரகர் தேர்வில் வெற்றி பெறுகிறார். ஒரு நிறுவனத்தில் பங்குத் தரகர் வேலை கிடைக்கிறது. சிரித்த முகத்துடன் தன் இருக்கையில் சென்று நிமிர்ந்து உட்கார்ந்து பெருமூச்சு விடுகிறார்.

அவர் பங்குத் தரகராக பணி செய்வதோடு நின்று விடவில்லை. குறிப்பிட்ட பணத்தை சரியான இடத்தில் முதலீடு செய்து அந்தப் பணத்தைப் பல மடங்காக்குகிறார். இறுதியில் அவர் தானே ஒரு தரகு நிறுவனத்தையே உருவாக்கும் அளவுக்கு வளர்கிறார்.

பணம் வாழ்க்கைக்கு எவ்வளவு முக்கியம் என்பதையும், பணம் சம்பாதிக்க கடுமையாக உழைக்க வேண்டும் என்பதோடு, அறிவு பூர்வமாக விடாமுயற்சியுடன் இலக்கை அடைய அர்ப்பணிப்புடன் செயல்பட வேண்டும் என்றும் என்பதை ஆழமாகப் பதிவு செய்கிறது தி பர்ஸ்யூட் ஆஃப் ஹேப்பினஸ். இந்தப் படத்தை இயக்கியவர் கேப்ரியல் முசீனோ. புகழ்பெற்ற நடிகரான வில் ஸ்மித் இந்தப் படத்தில் கிறிஸ் கார்டினராக வாழ்ந்திருந்தார்.

2. தி டைவிங் பெல் அண்ட் தி பட்டர்ஃபிளை

ழான் டொமினிக் பாபி என்ற எழுத்தாளனின் நிஜ வாழ்க்கை தான் இந்தப் படம்.பாபியும் ஆரம்பத்தில் நம்மை போலத்தான் நல்ல ஆரோக்கியத்துடன் ,மனைவி,குழந்தைகளுடன் மகிழ்ச்சியாக வாழ்ந்து வந்தார். புகழ்பெற்ற ஒரு பத்திரிகையில் வேலை செய்தும் வந்தார் . நாற்பத்திரண்டு வயதில் அவரின் மூளைக்குள் பாய்ந்த அதிர்வுகள் மூளையை கடுமையாக தாக்கி நினைவிழக்க செய்கிறது, நாளடைவில் அவரின் இடது கண்ணை தவிர்த்து மற்ற உறுப்புக்கள் வேலை செய்யாமல் போய்விடுகிறது .

அவர் ஒருமுறை கண் இமையை அசைத்தால் அது "ஆம்" என்று அர்த்தம் ,இரண்டு முறை தொடர்ந்து அசைத்தால் " இல்லை " என்று அர்த்தம் .. அவர் ஏதாவது சொல்ல நினைத்தால் அங்கிருக்கும் பேச பயிற்சிகொடுக்கும் பெண் பிரஞ்ச் மொழியில் இருக்கும் எழுத்துக்களை ஆரம்பத்தில் இருந்து நிறுத்தி ஒவ்வொன்றாக சொல்லுவாள் .பாபி தான் சொல்ல வந்த வார்த்தைக்கு ஏற்ற எழுத்து வந்தவுடன் ஒரு முறை கண் இமையை அசைப்பார், இதேமாதிரி அடுத்த பிற எழுத்துகளை சேர்த்து தான் சொல்ல வந்த வார்த்தையை .கண்களின் இமை அசைவுகளின் வழியாக பாபி சொல்வார்

பாபியின் கண் இமை அசைவுகளின் மொழியை எழுத்தாக மாற்ற புதிதாக ஒரு பெண் வருகிறாள் அவளின் வேலை ஆரம்பத்தில் பேச பயிற்சி கொடுத்த பெண்ணின் அதே வேலை தான் ..பிரஞ்ச் மொழியில் இருக்கும் எழுத்துக்களை ஆரம்பத்தில் இருந்து நிறுத்தி ஒவ்வொன்றாக சொல்லுவாள் .பாபி தான் சொல்ல வந்த வார்த்தைக்கு ஏற்ற எழுத்து வந்தவுடன் ஒரு முறை கண் இமையை சிமிட்டி ஆமாம் என்று சொல்லி, இதை போல அடுத்த பிற எழுத்துக்களை சேர்த்து தான் சொல்ல வந்த வார்த்தையை சொல்வார் அதை அவள் எழுத வேண்டும் .இப்படி ஒவ்வொரு வார்த்தையாக எழுதி உருவானது தான் the diving bell and the butterfly என்ற புத்தகம் ,இந்தப் புத்தகத்தை ரொனால்ட் கார்வுட் அருமையான திரைக்கதையாக மாற்ற ,,பாபி தனனுடைய இடது கண்ணால் இந்த உலகத்தை எப்படி பார்த்தாரோ அதே கோணத்தில் காமிராவின் கண்கள் காட்சிகளை பதிவு செய்ய இந்தப் படத்தை இயக்கினார் ஜூலியன் சினபால் . இந்தப் படம் எந்த மனதுக்குள் வாழ்க்கையில் எப்படியாவது சாதிக்க வேண்டும் என்ற நம்பிக்கையத் தருகிறது.

3. மை லெஃப்ட் ஃபூட்

கிறிஸ்டி பிரவுன் என்ற ஓவியனின்,கவிஞனின் ,எழுத்தாளனின் வாழ்க்கை தான் இந்தப் படம்.. பிரவுன் நம்மை போல ஆரோக்யமான உடல்நிலையோ,இயல்பான பேச்சாற்றலோ கொண்டவன் இல்லை..பிறக்கும் போதே மூளையில் ஏற்பட்ட பாதிப்பு அவனின் உடல் இயக்கங்களை கைதுசெய்து இடதுகாலை மட்டும் விடுதலையாக விட்டுவிட்டது .இடது காலே எல்லாமும் ஆனது . அந்த இடது காலால் தான் ஓவியங்கள் வரைவான், எழுதுவான். அப்படி அவனின் இடது காலால் எழுதப்பட்ட புத்தகத்தின் அடிப்படையில் உருவானது தான் இந்த திரைப்படம். இந்தப் படத்தைப் பார்க்கும் போது நாம் எவ்வளவு ஆரோக்யமான வாழ்க்கை வாழ்ந்து வருகிறோம் என்பதோடு பிரவுன் நமக்குள் சாதிக்க வேண்டும் என்ற வெறியை விதைக்கிறார். பிரவுனாக நடித்தவர் டேனியல் டே லீவிஸ் . இந்தப் படத்தில் சிறப்பாக நடித்ததற்காக ஆஸ்கர் விருது அவருக்கு கிடைத்தது என்பது குறிப்பிடத்தக்கது

தமிழக முதல்வர் எம்.ஜி.ஆர் கல்லூரி கட்டத் தயங்கியது ஏன்?

முன்னாள் முதல்வர் எம்.ஜி.ஆர் 1972ம் ஆண்டு பொம்மை என்ற சினிமா இதழுக்காக அவரது ரசிகர் ஒருவருக்கு பேட்டியளித்தார். அதில் தான் வெள்ளைத் தொப்பி அணிவது ஏன், மதுவிலக்கு தடை, சினிமாவில் அறிமுகமாகும் பெண்களுக்கு அறிவுரை, குடும்பக் கட்டுப்பாடு, சிவாஜியுடனான தனது நட்பு, திமுக குறித்து ஆழமான கருத்துக்களை தெரிவித்துள்ளார்.

தமிழ்ப் பண்பாடு என்றால் என்ன? மனிதனுக்குரிய லட்சணங்கள் என்ன?

அவன் மற்றவர்கள் தன்னைப் பின் பற்றி நடக்கும் வகையில் ஒரு முன்மாதிரியாக, மனிதத்தன்மையோடு பழகணும், நடக்கணும். தமிழுக்கு ஏன் இவ்வளவு முக்கியத்துவம் இருக்கு? அதன் உயர்ந்த இலக்கியங்கள் தான். தமிழ் இலக்கியத்தில் என்ன சொல்லப்பட்டிருக்கு? மனிதன் மனிதனாக வாழ வழி சொல்லப்பட்டிருக்கு. இவை அத்தனையும் ஒண்ணா சேர்த்து சொன்னால்தான் பண்பாடு பற்றி பூரணமாக அறிய முடியும். அன்புங்கிறது பலதரப்பட்டது. அந்த அன்பை காட்டுவதிலும் பல விதிமுறை, வரம்பு, அளவு எல்லாம் இருக்கு. குழந்தையா இருக்கும் போது பிள்ளையைத் தூக்கி மடியில வெச்சிக்கிட்டு தாய் கொஞ்சுவா. அதே பிள்ளை வளர்ந்து வாலிபனாயிட்டா, இப்படிக் கொஞ்சுவாளா? அதனால அவ அன்பு குறைஞ்சிடுத்துன்னு அர்த்த மாயிடுமா?

நீங்க எவ்வளவோ உதவிகளை செஞ்சிட்டு வர்றீங்க. நீங்க தெய்வமா வணங்கிட்டு வரும் உங்க தாயார் பேர்ல, ஏன் ஒரு பெண்கள் கல்லூரியை கட்டக் கூடாது? சேலத்தில் பெண்கள் படிக்க போதுமான கல்லூரி இல்லை. அதனால தான்?

கல்லூரி கட்ட நிதி கொடுத்தா அதுக்கும் வருமான வரி நான் கட்டணும். ஐம்பதாயிரம் ரூபாய் வரை ஒரு வரி. ஐம்பதாயிரத்து ஒண்ணுலேயிருந்து லட்ச ரூபாய் வரைக்கும் ஒரு வரி. இப்படி ஸ்லாப் சிஸ்டம் இருக்கு. ஐம்பதாயிரம் ரூபாய் சம்பாதிக்கிறவன், தவறிப் போய் ஐம்பதாயிரத்து ஒண்ணு சம்பாதிச்சிட்டா, லட்ச ரூபாய்க்கான வரிதான் கட்டணும். ஒரு கல்லூரி கட்டணும்னா எவ்வளவோ பணம் நிதியா தர வேண்டியதிருக்கும். அதற்கெல்லாம் இந்த வருமான வரிச் சட்டம் இடம் தராது. ஆனா, வருஷா வருஷம் பல பேருக்கு நான் படிப்புக்காக உதவிக்கிட்டு வர்றேன்.

தி.மு.க. அரசு மதுவிலக்கை ரத்து செய்துவிட்டதே, இதனாலே மக்களுக்கு கெடுதல்தானே?

அது மத்திய சர்க்காருக்கும் தெரியணும். மது விலக்கினாலே ஏற்படுகிற நஷ்டத்தை ஈடுகட்ட அவங்க முன்வரலே. தவிர, மது விலக்கு அகில இந்தியாவுக்கும் ஒரே மாதிரியா அமல்படுத்தப்படணும். நம்ம பக்கத்து மாகாணத்துல அது இல்லே? இங்கே மட்டும் இருந்து என்ன லாபம்? அங்கே போய் குடிக்கிறாங்க. இல்லேன்னா கண்டதையும் குடிச்சிட்டு உடம்பைக் கெடுத்துக்கிறாங்க. முன்னாலே இருந்த அரசு குடிக்க பெர்மிட் குடுத்தது.

பணக்காரங்க, வசதி படைச்சவங்க இந்த பெர்மிட்டை வாங்கி சட்டத்தின் துணையோடு குடிக்க ஆரம்பிச்சாங்க. ஏழைங்க? மது விலக்கை அரசு ஒத்திவச்சிருக்கறதால குடிக்க பொதுவா மக்களுக்கு அனுமதி வழங்கப்பட்டிருக்குன்னுதானே அர்த்தம். ஆனா, அரசு தான் ஒத்தி வெச்சிருக்கு. தி.மு.க.வின் கொள்கை, 'குடிக்க அனுமதிக்கக் கூடாது. மதுவிலக்கு இருக்கணும்' என்பதுதான். அதனாலே தான் கட்சியின் இந்த கொள்கையை வலியுறுத்த, 'குடிக்கிறது தப்பு. ஆபத்து, கெடுதல், விபத்து வரும்' என்றெல்லாம் மக்களுக்கு தெளிவா பிரசாரம் செய்ய ஒரு குழுவும் அமைத்திருக்கிறோம். நான் அந்த குழுவின் தலைவர் என்கிற முறையில் நான் நடிக்கிற படங்கள்லே மதுவிலக்கு பற்றி பிரசாரம் செய்யப் போறேன்.

'நான் ஏன் பிறந்தேன்' படத்துலே குடிக்கிறது தப்புன்னு ஒரு பாட்டுல சொல்ல இருக்கேன். 'ஒரு தாய் மக்கள்' படத்துல குடியின் கெடுதலை விளக்கும் வகையிலே ஒரு ஸீனே இருக்கு. இது மட்டுமில்ல, இந்த குழுவின் சார்பில் மது குடிப்பது தவறுன்னு எல்லா வகையிலும் காட்ட முயற்சிப்போம். குடியினால் வரும் ஆபத்துகளை விளக்கி, மக்களிடம் அதை தெளிவாக்க மேடையிலே பேசுவோம். நாடகங்கள் நடத்துவோம். ரேடியோவில் பேசுவோம். வில்லுப் பாட்டுக்கச்சேரி செய்வோம். ஆங்காங்கே குழுக்கள் அமைத்து தொடர்ந்து சொல்லி வருவோம். மதுவிலக்கு பற்றி பேச என்னை யார் அழைத்தாலும் எந்தக் கட்சி அழைத்தாலும் நான் போய் பேச தயாராக இருக்கிறேன். கட்சிக்கு அப்பாற்பட்டது மது விலக்கு பிரசாரம்.

சமீப காலமாக நீங்கள் தலையில் தொப்பி வைச்சிக்க ஆரம்பிச்சிருக்கீங்க... அதுக்கு என்ன காரணம்?

'அடிமைப்பெண்' படத்தின் வெளிப்புறக் காட்சிக்காக ஜெய்ப்பூருக்குப் போனேன். அங்கே பாலைவனத்திலே படப்பிடிப்பு. ரொம்பவும் வெயிலாக இருந்தது. ஒரு அன்பர் தொப்பியைக் கொடுத்து, தலையிலே வெச்சிக்குங்க என்றார். அவ்வளவுதான். அடுத்தபடியா எலெக் ஷன் வந்தது. இப்படி வெயில், மழை, எல்லாத்துக்கும் சௌகரியமா இருக்கவே தொப்பியை அப்படியே வெச்சிக்கிட்டேன்.

சிலர் இதை வேறு மாதிரியா விமரிசிக்கிறாங்க. அந்த நாள்லே நான் ஜிப்பா போட்டுக்கிட்டிருந்தேன். அப்புறம் காலர் வெச்ச முழுக்கை சட்டை போட ஆரம்பிச்சேன். ஒரு நாள் சட்டை கிழிஞ்சு போய்விட்டது. அதை சுருட்டி விட்டுக்கிட்டேன். உடனே அதைப் பார்த்த சிலர் எம்.ஜி.ஆர். ரவுடி போல சட்டையை சுருட்டி வெச்சிருக்கார்னு சொன்னாங்க. இதுக்கு என்ன சொல்றது. இன்னொருத்தருடைய வற்புறுத்தலுக்காக மற்றவங்க என்ன சொல்வாங்களோ, என்ன நினைப்பாங்களோ என்பதற்காக நமது பண்பைக் கெடுத்துக்கக்கூடாது. அத்தியாவசியமான தேவைகளைக் குறைச்சிக்கக்கூடாது.

உடலமைப்புக்கு, பாதுகாப்புக்கு எது தேவையோ அதைத் தேர்ந்தெடுப்பதில் தவறில்லை. நானே கேட்கிறேன். இப்ப என் தலையில முடியே இல்லைன்னு வெச்சிப்போம். நீங்க அப்போ என்னை எம்.ஜி.ஆர்னு ஏத்துக்க மாட்டீங்களா? வட நாட்டில் வயதில் குறைந்த நடிகர்கள் பலர் இருக்காங்க. அவங்க எல்லாம் தலையில 'விக்' (செயற்கை முடி) வெச்சிக்கிட்டுதான் வெளியிலே வர்றாங்க. இதுக்கெல்லாம் என்ன சொல்றது?

சினிமாவில் நடிக்க வர்ற புதுமுகங்களுக்கு, என்னைப் போன்ற பெண்களுக்கு என்ன தேவைப்படுது?

நடனப் பயிற்சி இருந்து, தமிழ் சுத்தமா பேசத் தெரிஞ்சு, முக வெட்டும் இருந்தாப் போதும். இப்ப என் படத்திலே, என்கூட சில புதுமுகங்கள் நடிக்கிறாங்க. அவங்களுக்கு நடனப்பயிற்சி கொடுத்து வருகிறேன். அதுமட்டுமல்ல, நடனப் பயிற்சி இருந்தாலே நடிப்பும் சுலபமா வந்திடும். ஆனா, இவ்வளவு மட்டும் இருந்தா மட்டும் போதாது. ஆக்ட் பண்ண துணிவும் வேண்டும். கல்லூரியில படிக்கிறவங்க, நல்ல குடும்பத்திலே இருக்கிறவங்க எல்லாரும் சினிமாவிலே நடிக்க வரணும். ஆனா பயப்படறாங்க. சினிமாவிலே தவறு நடக்கிறதில்லேன்னு சொல்ல மாட்டேன். ஆனா, யாரோ எப்பவோ செய்த தவறை நினைச்சு, எல்லாரையும் தவறா எடைப் போட்டுடக் கூடாது. படிச்ச பெண்கள் நிறையப் பேர் வந்தால் இந்தத் தொழிலுக்கும் தனிக் கௌரவம் கிடைக்கும். நல்ல வருவாயும், புகழும் பெண்களுக்கு கிடைக்கும்.

நீங்க கேரளத்தை சேர்ந்தவராயிருந்தாலும், தமிழ் மொழி மீதும், தமிழ்நாட்டின் மீதும் இவ்வளவு பற்றும் பாசமும் வைத்திருக்கிறீர்களே... ஏன்?

என்னைக் காப்பாத்தறதே தமிழ்தானே? எனக்கு முதல்லே எழுதத் தெரிஞ்சது, பேசத் தெரிஞ்சது எல்லாமே தமிழ்லேதான். என் தந்தையார் காலமானபோது எனக்கு இரண்டரை வயது. அப்புறம் இங்கேயே வந்து படிச்சேன். கேரளத்தில் எங்க அம்மா பேர்ல ஏதோ ஒரு சின்ன நிலம்தான் இருக்கு. அதுகூட எனக்கு சரியா நினைவில் இல்லே.

மலையாளம் உங்களுக்குத் தெரியாதா?

தெரியும்! கொஞ்சம் கொஞ்சமா பழகிக்கிட்டேன்.

மலையாளப் படத்திலே நீங்கள் நடிப்பீங்களா?

நானே எடுப்பேன். நடிப்பேன்.

இந்திப் படத்திலே?

அதே பதில்தான்.

இந்தி ஆட்சி மொழியா வரக் கூடாதுன்னு உங்க கட்சி சொல்கிறது. ஆனா, நீங்க நடிப்பேன்னு சொல்றீங்களே?

இந்தி ஆட்சி மொழியா வர்றது வேறு. இந்தி கத்துக்கிறதோ, படம் எடுக்கிறதோ வேறு. இரண்டையும் போட்டுக் குழப்பிக்கக் கூடாது.

உங்களை நாடகம் வளர்த்ததா? சினிமா வளர்த்ததா?

பெரிய பதில்தான் தரணும். நாடகம்தான் தாய். சினிமா சேய். சினிமாவிலே நடிக்க வர்றவங்களுக்கு நாடக அனுபவம் இருப்பது நல்லது. அது ரொம்பவும் உதவும். படத்திலே நீங்க பார்க்கிற மாதிரி காட்சிகளை வரிசைக்கிரமமா எடுக்கிறதில்லே. முன்னே, பின்னே, வசதிக்கும் சூழ்நிலைக்கும், நடிகர் நடிகைகளின் நேரத்திற்கேற்ப காட்சிகளை மாற்றி துண்டு துண்டாக எடுப்பாங்க. இப்படி நடிக்க வரும்போது காட்சிகளின் தன்மைக்கேற்ப அழுகிறோம் சிரிக்கிறோம். அழணும்னா உடனே கிளிசரின் தடவிக்குவோம். ஆனா நாடகத்திலே மேடையிலே ஸீன்லே நடிக்கும்போது இப்படி திடீர்னு அழணும்னா கிளிசரின் கேட்கவோ தடவிக்கவோ முடியாது. சிரிச்சிக்கிட்டே இருக்கணும். உடனே அந்த இடத்திலேயே அப்படியே அழணும். அவ்வளவு விரைவாக உணர்ச்சிகளை மாத்தி நடிக்கணும்.

இங்கே சினிமாவிலே அப்படி கிளிசரின் இல்லாமல் உணர்ச்சியைப் பிரதிபலிக்க இம்மாதிரியான அந்த நாடக மேடை அனுபவம் உதவும். நாடகத்தில் ஒரு நடிகன் தன் சொந்தத் திறமையை மட்டும்தான் அதிகம் நம்பிக்கிட்டு இருக்கணும். சினிமாவிலே மத்தவங்க உதவியிலேதான் அதிக நம்பிக்கை வெச்சிருக்கணும். அதனாலே ரெண்டுமே ஒரு நடிகனை வளர்க்க உதவுவது.

நீங்கள் ஆங்கிலப் படத்தில் நடித்தால் என்ன?

இங்கிலீஷே சரியா தெரியாதுங்க. ஜெய்ப்பூரில், 'அடிமைப் பெண்' படத்துக்காக நான் சென்றிருந்தபோது ராஜஶ்ரீ பிக்சர்ஸ், திரு.தாராசந்த் ஒரு விருந்து கொடுத்தார். அதிலே பேசும்போது நான் இந்திப் படத்திலே நடிக்கணும்னு அவர் குறிப்பிட்டார். அவருக்கு உடனே நான் பதில் சொன்னேன். ''நான் பேசுற இந்தியை தாங்கிக்கிற சக்தி இருக்குமானால் நான் நடிக்கத் தயார்" என்றேன். அதையேதான் இங்கிலீஷ் படத்துக்கும் சொல்லணும்.

குடும்பக் கட்டுப்பாடு திட்டம் பற்றி என்ன நினைக்கறீங்க?

நாட்டுக்குத் தேவையான ஒரு நல்ல திட்டம். அவசியமான திட்டமும்கூட, ஜனத்தொகை பெருகுவதால் ஏற்படும் இட நெருக்கடி, வசதிக்குறைவு, மாறும் இதரத் தொல்லைகள் இதையெல்லாம் மனதில் கொண்டு பார்க்கும்போது நாட்டின் வளர்ச்சிக்காகவும் சொல்லப்போனா உலக நன்மைக்காகவும் எல்லாரும் சேர்ந்து கட்டுப்படுத்த வேண்டிய, கட்டுப்பட வேண்டிய திட்டம் இது. ஆனா, குறிப்பிட்ட ஒரு வகுப்பினருக்கு மட்டும்தான் இது என்பதை என்னால் ஏத்துக்க முடியல. இந்தத் திட்டம் உலகம் பூராவுக்குமே, எல்லா வகுப்பினருக்கும் பொதுவான திட்டமா இருக்கணும். மேலும் இத்திட்டம் மனக்கட்டுப்பாட்டின் அடிப்படையில் செயல்பட்டால்தான் பூரணமாக வெற்றியைப் பெற முடியும்.

கருச்சிதைவிற்கு சட்டப்பூர்வ அதிகாரம் கொடுத்தா அதைப் பற்றி என்ன நினைக்கறீங்க?

குழந்தை அதிகம் பெறுவதால் பெண்களில் பலர், பல ஆண்டுகள் திடகாத்திரமாக வாழக்கூடியவர்கள்கூட விரைவில் வயோதிகத் தன்மை அடைந்துவிடுவதாகச் சொல்கின்றனர். ஆகவே குழந்தைகளை அளவோடு பெறுவது அவசியமாகிறது. அதற்காக கருச்சிதைவு முறையை அனுமதிப்பதால் வேறு பல பெரிய ஆபத்துகள் எதிர் நோக்கி இருப்பதை யாரும் மறுப்பதற்கில்லை. நான்கு குழந்தைகள் பெறுவதும், ஒரு முறை கருச்சிதைவு செய்து கொள்வதும் ஒன்று தான் என எனக்குத் தெரிந்த டாக்டர் ஒருவர் கூறியிருக்கிறார். அப்படியானால் கருச் சிதைவினால் விரைவில் பெண்களின் உடல்நலம் கெட்டு, அவர்கள் பெரிதும் பலவீனப்பட்டு விடுகிறார்கள் என்பதும் உறுதியாகிறது.

அப்படிப் பலவீனப்பட்டுவிடும் பெண் சமுதாயத்தினர் குடும்பப் பணிகளையும் நாட்டுப் பணிகளையும் பூரணமாக ஏற்று செயலாற்ற வேண்டிய தகுதியை இழந்துவிடக் கூடும். இத்தகைய அவலமான ஒரு சூழ்நிலைக்கு கொண்டு வந்துவிடும். கருச்சிதைவு முழு மனத்துடன் ஏற்கக் கூடியதுதானா? மனக்கட்டுப்பாடு, குடும்பக் கட்டுப்பாடு முறைகள் இத்தனையையும் மீறி கருச்சிதைவை மருத்துவர்கள் உடல்நல ஆரோக்கியத்தின் அடிப்படையில் முழு மனதுடன் சிபாரிசு செய்து கணவன் மனைவியரும், தாயின் எதிர் கால உடல்நலத்தையும் குடும்பத்தின் பொருளாதார நிலையையும் கண்டு இருவருக்கும் உள்ள உடன்பாட்டுடன் விரும்பு முன்வந்தால், தவிர்க்க முடியாத அந்நிலையில் வேண்டுமானால் கருச்சிதைவை அனுமதிக்கலாம்.

எனவே, மேலே சொல்லப்பட்டவை போன்ற நன்மை தீமைகளை சீர்தூக்கிப் பார்த்து, பகுத்தறிந்து முறையான விதிகளுடன் எந்த வற்புறுத்தலுக்கும் இடம் ஏற்படாத வகையில் இதற்கான சட்டம் அமைக்கப்பட்டால் ஓரளவுக்கு இயற்றப்பட்டதன் நோக்கம் திருப்தியைத் தரலாம்.

உங்களுக்குன்னு சொத்துக்களைச் சேர்த்து வச்சிருக்கணும்னு எண்ணம் இல்லாமல் இப்படி வாரி வாரி வழங்கிக்கிட்டே இருக்கீங்களே, அதற்கு என்ன காரணம்?


சொத்துக்கள் கடைசிவரை நம்மிடையே இருக்கும்னு நினைக்கிறது தப்புங்கிறது என் கருத்து! என்னை முதன் முதலா கதாநாயகனா போட்டவர் ஜூபிடர் சோமு அவர்கள். ஒரு காலத்தில் இந்த ஸ்டுடியோ அவருக்கு சொந்தமாக இருந்தது. அவர் எதிரிலே வந்து நிக்கவே பயப்படுவோம். இப்போ அதே ஸ்டூடியோவுக்கு நான் பங்குதாரரா இருக்கேன். என்னைவிட அனுபவத்திலும் ஆற்றலிலும் பன்மடங்கு உயர்ந்தவரான அவருக்கே அப்படி ஒரு நிலைமை வந்ததுன்னா நான் மட்டும் எத்தனை நாள் இந்த ஸ்டூடியோவுக்கு முதலாளியா இருந்திட முடியும்? எனக்கு இது புரியுது. ஆனா, சில பேரு சட்டத்தின் பாதுகாப்பு நமக்கு இருக்குன்னு சொத்தையும் பணத்தையும் சேர்த்து வெச்சிக்கிறாங்க. நம்ம பாதுகாப்பிலே இல்லாதது, சட்டத்தின் பாதுகாப்பில் எத்தனை நாள் வாழ்ந்திட முடியும்?

அது மாத்திரமல்ல. இந்த செல்வமெல்லாம் யார் தந்தது? அதாவது மக்கள் தந்ததுதானே? அவர்கள் தந்ததிலிருந்துதான் நான் தருகிறேன். தேவைக்கு மேல் பணத்தை சேர்த்து வைப்பதில் ஏற்படக்கூடிய மகிழ்ச்சியைவிட பயனுள்ள வகையில் மற்றவர்களுக்கு உதவும் போது அடையும் மகிழ்ச்சியையே நான் பெரிதாக நினைக்கிறேன்.

நூறு படங்களுக்கு மேல் நடிச்சிருக்கீங்க. நீங்க நடிச்ச படங்களிலேயே உங்களுக்கு பிடித்தமான படம் எது?

என் எண்ணப்படி அமைந்த படங்கள் 'பெற்றால்தான் பிள்ளையா", 'என் தந்தை'. குறிப்பாக 'பெற்றால்தான் பிள்ளையா'வில் நான் போட்ட வேஷம் ரொம்பவும் கவர்ந்தது. நான் பெற்ற பிள்ளைகளுக்கு மட்டும்தான் நான் பாதுகாப்பா இருப்பேன்னு அந்த வேஷம் சொல்லலே. நான் யாரோ பெத்த பிள்ளை. ஆனால், அந்த எல்லாப் பிள்ளைகளையுமே வளர்க்கக் கடமைப்பட்டவன் என்ற நல்ல கருத்தை சொன்ன பாத்திரம் அது.

அண்ணாவைப் பற்றி மறக்க முடியாத ஒரு நிகழ்ச்சியை நீங்கள் சொல்ல முடியுமா?

தெரிந்தோ தெரியாமலோ நீங்க அண்ணா இருக்காரே என்று சொன்னீர்கள். ஆம். அவர் இறந்தும் இன்றும் நம்மிடையே இருப்பதைப் போன்ற உணர்வை நம்மிடம் உண்டாக்கி இருக்கிறார். அதுதான் அவரது தனிச் சிறப்பு. அண்ணாவை விட்டு யாரும் பிரிய முடியாது. அவரது நினைவை யாரிடமிருந்தும் பிரிக்கவும் முடியாது. அவர் எழுதியது, பேசியது, அவர் செய்தது இப்படி ஒவ்வொன்றும் மறக்கமுடியாத நிகழ்ச்சிகள்தாம். எல்லாருக்கும் நல்லது செய்யணும்கிற எண்ணமே அவரிடம் மேலோங்கி நின்றது.

ஒரு சம்பவம் நினைவுக்கு வருகிறது. இப்போது சிவாஜி ரசிகர் மன்ற தலைவராக இருக்கும் சின்ன அண்ணாமலை அவர்கள் சில வருடங்களுக்கு முன்னால் என்னிடம் வந்தார். சிவாஜி வரலாற்றை நான் படமாக்கப் போகிறேன். நீங்கள்தான் இதில் சிவாஜியா நடிக்கணும் என்று அழைத்தார். நான் மறுத்துவிட்டேன். பின்னர் டைரக்டர் திரு.ரமண்ணா அவர்கள் அவர் தயாரிக்கும் சிவாஜி வரலாற்றுப் படத்தில் நான் நடிக்க வேண்டும் என்று அழைத்தார்.

''சிவாஜிங்கிற பட்டம் ஏற்கெனவே தம்பி கணேசனுக்கு இருக்கு. ஆகையினால் சிவாஜியின் வரலாற்றிலே, நான் அந்த பாத்திரத்திலே நடிக்கிறதுக்கு என் மனசாட்சி இடம் தரவில்லை" என்று சொல்லிவிட்டேன். இது விஷயமா ராமண்ணா, அண்ணாவைப் பார்க்கப் போகிறார் எனக் கேள்விப்பட்டு அவரை நானே முந்திக்கொண்டு அண்ணா அவர்களிடம் போனேன். அப்போது அண்ணா அவர்கள் சொன்னார், 'ஏற்கெனவே சிவாஜிங்கிர பட்டத்தை தம்பி கணேசனுக்கு கொடுத்தது நம்ம கட்சி. அந்த பட்டம் அவருக்கு நிலைச்சி இருந்தால்தான், நாம் கொடுத்த பட்டத்துக்கு ஒரு கௌரவம் இருக்கும்' என்று சொல்லிவிட்டு, 'நீங்க செய்த முடிவு சரியான முடிவு' என்று சொன்னார். இதுதான் அண்ணா அவர்களின் குண இயல்பு.

நான் உங்களின் ரசிகை. ஆனாலும் திரு.சிவாஜி கணேசன் அவர்களுடைய படங்களையும் விடாமல் பார்ப்பேன். என்ன சொல்கிறீர்கள்?

என்னுடைய ரசிகர்கள் எல்லாருமே இப்படித்தான் இருப்பார்கள். இன்னொருத்தரிடம் இருக்கும் கலையையும், திறமையையும் நாம் ஆதரிக்க வேண்டும். என்னை இழிவுப்படுத்தும் வார்த்தைகளோ, எனது கொள்கைகளை இழிவுபடுத்துவதாகவோ இருந்தால் அந்த மாதிரிப் படங்களுக்குப் போக மாட்டார்கள்!

உங்களுக்கும் சிவாஜி கணேசனுக்கும் உள்ள தொடர்பு எப்படி?

உள்ளத்தால் இருவரும் அண்ணன், தம்பி என்ற தொடர்பு. ஆனால், நாங்கள் சார்ந்துள்ள கட்சி கொள்கைகள் வேறு. அவ்வளவுதான்.

உங்களது ரசிகர்களும் அவரது ரசிகர்களும் சில சமயங்களில் சண்டையிட்டுக் கொள்கிறார்களே, இது பற்றி என்ன சொல்லுகிறீர்கள்?


அப்படிப்பட்டவர்கள் யாராக இருந்தாலும் அவர்கள் இன்னும் பக்குவம் அடைய வேண்டும்.

உங்களுக்கும் செல்வி ஜெயலலிதாவுக்கும் மனஸ்தாபமாமே?

மனஸ்தாபம்? ஒரு நடிகருக்கும் நடிகைக்கும் நடுவில் மனத்தாங்கல் ஏற்படுவதற்கு அவசியமே இருப்பதில்லையே. காரணம், என்னைப் போன்றவர்களின் தொழில் படங்களில் நடிப்பது. எனவே அந்த நடிப்பில் ஏதாவது உண்மை இருந்தால் அல்லவா பிரச்னை ஏற்படும். சரியான பதில் கிடைக்காதபோது வெறுப்பு தோன்றுவதற்கு வாய்ப்பு ஏற்படும்.

கழகம் வளர்ந்தது எப்படி?

பலரும் ஆதரித்ததால் வளர்ந்தது. கொள்கை வழி நின்று மக்களுக்கு சேவை செய்யலேன்னா ஒரு கட்சி எப்படி வளர முடியும்? மக்கள் ஆதரவு இல்லேன்னா கொள்கைகளை எப்படி அமல்படுத்த முடியும்? அதனாலே கழகத்திற்கு மக்கள் ஆதரவு இருக்கு. மக்கள் ஆதரிக்கும் வகையில் நல்ல கொள்கைகள் இருக்கு.

திருப்புகழை பாடி விளக்கம் சொன்ன நீதிபதி-'கெத்து' என்றால் ஆணவம், செருக்கு என்று பொருள்...

 உதயநிதி ஸ்டாலின் நடிப்பில் வெளியான ‘கெத்து' படத் தலைப்பு தமிழ் வார்த்தைதான் என்றும், அருணகிரிநாதர் அருளிய திருப்புகழில் கெத்து என முருகப் பெருமானை குறிப்பிட்டுள்ளார் என்று சென்னை உயர் நீதிமன்ற நீதிபதி கருத்து தெரிவித்துள்ளார்.

உதயநிதி ஸ்டாலின் நடித்த கெத்து படத்துக்கு கேளிக்கை வரிச்சலுகை வழங்க மறுத்ததை எதிர்த்து, ரெட் ஜெயின்ட் மூவிஸ் பட தயாரிப்பு நிறுவனத்தின் மேலாளர் சரவணமுத்து தாக்கல் செய்துள்ள மனுவில் நடிகர் உதயநிதி ஸ்டாலின் நடிப்பில் கெத்து' என்ற பெயரில் தயாரிக்கப்பட்ட திரைப்படம் கடந்த 14- ஆம் தேதி வெளியானது. இந்த படத்துக்கு கேளிக்கை வரி விலக்களிக்க படத்தலைப்பான ‘கெத்து' என்ற வார்த்தை தமிழ் வார்த்தை அல்ல என கூறி படத்துக்கு கேளிக்கை வரிச் சலுகை வழங்க முடியாது என்று தமிழக அரசு கடந்த 14 ஆம் தேதி அரசாணை வெளியிட்டது.

திருநெல்வேலி தென்னிந்திய சைவ சித்தாந்த நூற்பதிப்புக் கழகம் வெளியிட்டுள்ள அகராதியில், ‘கெத்து' என்ற வார்த்தைக்கு ‘தந்திரம்' என்று பொருள் கூறப்பட்டுள்ளது. அதேபோல, மற்றொரு க்ரியாவின் தற்கால தமிழ் அகராதியில், கெத்து என்ற வார்த்தைக்கு ‘தன்னுடைய உயர்வையும், பெருமையையும் காட்டிக் கொள்ளும் போக்கு' என்று அர்த்தம் கூறியுள்ளது. எனவே, படத்துக்கு வரிச்சலுகை தர மறுத்த உத்தரவை ரத்து செய்ய வேண்டும். கேளிக்கை வரிச்சலுகை வழங்க தமிழக அரசுக்கு உத்தரவிட வேண்டும் என மனுவில் கூறப்பட்டுள்ளது.

இந்த மனு நீதிபதி மகாதேவன் முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது நீதிபதி மகாதேவன், கெத்து என்ற வார்த்தை தமிழ் வார்த்தைதான். அருணகிரிநாதர் பாடிய திருப்புகழில் கெத்து மனம் படைத்த முருகா! என்று பாடியுள்ளார். அந்த வார்த்தைக்கு செருக்கு, ஆணவம் எனப் பொருள்படும் என்று தெரிவித்தார். மேலும் மனுதாரரின் மனுவுக்கு நாளைக்குள் தமிழக அரசு விளக்கம் அளிக்க வேண்டும் என்று நீதிபதிகள் உத்தரவிட்டு வழக்கை ஒத்தி வைத்தனர்.

பெர்முடா முக்கோணம் சாத்தானின் கடலா? ரிக்-அதர்வண வேதங்கள் சொல்லும் உண்மை என்ன?

அதிநவீன தொழில் நுட்ப வளர்ச்சியில் தனி மனிதன் தொடங்கி, உலக நாடுகள் வரை எவ்வளவு வளர்ச்சி பெற்று முன்னேறியிருந்தாலும், சில குறிப்பிட்ட விஷயங்களில், அதன் உண்மை தன்மையை அறிய முடியாமல் இன்னும் வெற்றிடமாகத்தான் நாம் உள்ளோம். அப்படி ஏராளமான மர்மங்களும், திகில் கிளப்பும் அமானுஷ்யங்கள் நிறைந்த இடமுமாகத்தான் 'பெர்முடா முக்கோணம்' இன்று வரை திகழ்கிறது.

வட அட்லாண்டிக்கடலின் மேல்பகுதியில், ஒரு முக்கோணப் பகுதியாக காட்சி அளிக்கும் இந்த பகுதி, சாத்தானின் முக்கோணம் என்றும் பெரும்பாலானவர்களால் அழைக்கப்படுகிறது. இந்த பகுதியை கடந்துச் சென்ற ஏராளமான விமானங்களும், கப்பல்களும் மர்மான முறையில் காணாமல் போயிருக்கின்றன. அவை அனைத்தும் என்ன ஆனது என்ற மர்ம முடிச்சுக்களை அவிழ்க்க எந்த வான தூதனும் இதுவரை இறங்கி வரவில்லை.

காணாமல்போன பட்டியலில் அமெரிக்காவிற்கு சொந்தமான விமானங்களும், கப்பல்களும் ஏராளம். அதி நவீனத்தையே பெரிதும் நம்பியிருக்கும் அமெரிக்கா, இந்த கடல் பகுதியில் பல மர்மங்கள் மறைந்திருப்பதை இன்று வரை மறுத்துதான் வருகிறது. ஆனாலும், காணாமல்போகும் கப்பல்கள் மற்றும் விமானங்கள் குறித்த செய்திகள் இன்னும் தொடரத்தான் செய்கிறது. இதனிடையே வேற்று கிரக உயிரினங்கள் மற்றும் கண்களுக்கு புலப்படாத ஜீவராசிகள் இப்பகுதியில் வசிப்பதாக வெகு ஜன மக்கள் நம்புகிறார்கள். ஆனால், இங்கு நிகழக்கூடிய எந்த மாயங்களையும் இன்னும் கண்டுப்பிடிக்க முடியவில்லை.

மேலும், இப்பகுதியில் மிகப்பெரிய பிரமிடு மறைந்திருப்பதாகவும்  எல்லோரும் நம்புகிறார்கள். அதனால், இப்பகுதியில் மேலே பறக்கக்கூடிய எல்லாவற்றையும் கீழே இழுத்துக்கொள்வதாகவும் சொல்லப்படுகிறது.

கடல் வழியாக உலகை சுற்றி வலம் வருகையில், பெர்முடா முக்கோணத்தின் அருகே கடந்துச் செல்லும்போது திசைக் காட்டும் கருவிகள் தாறுமாறாக சுழன்றதாகவும், பயமுறுத்தும் வகையில் விநோதமான வெளிச்சங்கள் தோன்றியதாகவும் அதனால், வேறு வழியாக கப்பலை திரும்பி விட்டதாகவும் அமெரிக்காவை கண்டுபிடித்த கொலம்பஸ் தெரிவித்திருக்கிறார். மேலும்,  'நாட்டியமாடும் பயமுறுத்தும் வெளிச்சங்கள்' உள்ள பகுதி என்றும், 'தீப்பிளம்பு கொண்ட வானம், பித்துபிடிக்கும் காம்பஸ்கள்' எனவும் இப்பகுதியை அவர் 1492-ம் ஆண்டு வர்ணித்துள்ளார்.


இந்த கடல் பகுதியில் கடந்த 500 வருடங்களாக ஏராளமான கப்பல் மற்றும் விமானங்கள் மாயமானாலும், அதற்கு போதுமான ஆதாரங்கள் இல்லை என்று ஒரு பக்கம் கூறப்பட்டு வருகிறது, மறுபக்கம் அதற்கான பட்டியல் வெளியிடப்பட்டும் வருகிறது.

1909-ம் ஆண்டு சொகுசு படகு மாயமாகி உள்ளது.

1945-ம் ஆண்டு டிசம்பரில் ஃப்ளோரிடாவில் இருந்து கிளம்பிய அமெரிக்கா விமானம், 120 கி.மீ தூரம் வரை சென்று, பிறகு மாயமானது.

1948- ம் ஆண்டு 27 பயணிகளுடன் ஒரு கப்பல் மாயமாகி உள்ளது.
1951-ம் ஆண்டு 53 பயணிகளை அழைத்துச் சென்ற கப்பல் மாயமானது.

இப்படி தொடர்ச்சியாக ஒன்றன் பின் ஒன்றாக மாயமானதால், எல்லோருடைய பாதுகாப்பையும் கருதி, இப்பகுதியில் கப்பல் மற்றும் விமானம் செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது.

இதனிடையே ஆதி காலம் தொட்டு பாதுகாத்து போற்றப்பட்டு வந்த இந்து மதங்களின் தர்ம சாஸ்திரமாக கருதப்படும் நான்கு வேதங்களில் ஒன்றான ரிக் வேதம் மற்றும் அதர்வண வேதம் ஆகிய இரண்டு வேதங்களில்  'பெர்முடா முக்கோணம்' பகுதியில் நடைபெறும் நிகழ்வை போன்றே, பல அரிய தகவல்கள் சொல்லப்பட்டுள்ளன.

ராமாயணம்:

* 'பெர்முடா முக்கோணம்' இடத்தை பற்றிய செய்திகள் போன்றே, ராமாயணத்திலும் சொல்லப்பட்டுள்ளன. இந்தியாவில் இருந்து இலங்கைக்கு செல்லும் கடல் பகுதியில், 'சிம்ஹிகா' என்ற அசுர பலம் பொருந்தியவள் கடலில் இருந்ததாகவும், அவளின் மேல் பகுதியில் பறக்ககூடிய எந்த பொருளையும் தன் வசம் ஈர்க்ககூடிய சக்தி படைத்தவளாகவும் திகழ்ந்ததாக ராமாயணத்தில் வர்ணிக்கப்பட்டுள்ளது.

ரிக் வேதம்:

* 23 ஆயிரம் வருடங்களுக்கு முன்பே ரிக் வேதத்தில் மிக தெளிவாக 'பெர்முடா முக்கோணம்' போன்ற ஒரு பகுதியைப் பற்றி விரிவாக சொல்லப்பட்டுள்ளது.

* 5 ஆயிரம் வருடங்களுக்கு முன்பே 'பிரமாண்ட புராணத்தில்' இதுபோன்ற பகுதியை பற்றிய குறிப்புகள் இடம் பெற்றுள்ளன.

* பூமியில் இருந்து உருவான கிரகம்தான் செவ்வாய். அதனால்தான், பூமியின் மகன் ( son of bhumi) என்று சொல்கிறோம். அல்லது குஜா (kuja) என்றும் சொல்லப்படுகிறது. 'கு'  என்றால் பூமி, 'ஜா' என்றால் பிறந்தவன் என்பது அதன் பொருள். இது சமஸ்கிருதத்தில் சொல்லப்படும்  வார்த்தை.

* ரிக் வேதத்தில் இடம் பெற்றுள்ள 'அஸ்ய வாம்ஸய  என்னும் சூக்தத்தில் பூமியில் இருந்துதான் செவ்வாய் கிரகம் பிறந்ததாக சொல்லப்பட்டிருக்கிறது. அப்படி பிறந்த செவ்வாய் கிரகம், பூமியை விட்டு தனியாக பிரிந்து சென்றபோது, முக்கோண வடிவத்தில் பூமி மீது காயம் ஏற்பட்டுள்ளது. காயம்பட்ட பூமியில், தேவர்களின் மருத்துவர்களாகிய அஸ்வினி குமாரர்கள் இரும்பை காய்த்து ஊற்றி, அவ்விடத்தை சரி செய்ததாகவும் சொல்லப்பட்டுள்ளது. அதனால், பூமி சற்று சாய்ந்து சுமார் 23 1/2  டிகிரி அளவுக்கு சாய்வான நிலையை அடைந்துள்ளது.

* பூமி சாய்வாக உள்ள பகுதியில்தான், இயற்கையாக இரும்பினால் உருவாக்கப்பட்ட காந்த ஈர்ப்பு சக்தியானது, எந்த பொருளையும் தன் வசம் ஈர்த்துக்கொள்கிறது. அத்துடன் அதிகளவு பனிமூட்டமும், உச்சக்கட்ட குளிர்ச்சியும் இப்பகுதியில் நிலவுகிறது.

* அதேபோல்தான் பூமியிலிருந்து, நிலவும் உருவாகி பிரிந்து சென்றுள்ளது.

அதர்வண வேதம்:

* அதர்வண வேதத்தில் பல அறிய கற்கள் மற்றும் பவளங்கள் குறித்து சொல்லப்பட்டுள்ளன. அதில் குறிப்பாக 'தர்பை கல்' என்னும் பகுதி, பெர்முடா முக்கோணத்தில் நிகழும் மாயையை ஒட்டியே அமைந்துள்ளன.

*  'தர்பை கல்' என்பது, உயர் அடர்த்தி கொண்ட நியூட்ரான் நட்சத்திரமாகும். இது மிக குறுகிய வடிவம் கொண்டது. இது ஒரு சக்தி வாய்ந்த மற்றும் ஆபத்தான கல்லாகும்.

* இந்த கல் உள்ள பகுதி, உயர்ந்த ஈர்ப்பு விசைகொண்ட ஒரு நிலமாக பார்க்கப்படுகிறது.  இதற்கு ஈர்ப்பு விசை சக்தி அதிக அளவில் இருப்பதால்,  தர்பை கல்லின் மேல் பகுதியில் செல்லும் எந்த பொருளையும்  கீழ் நோக்கி ஈர்க்ககூடிய அதிக சக்தியை பெற்றுள்ளது.

* இந்த 'தர்பை கல்'லிருந்து  வெளிப்படும் எந்திர காந்த ஈர்ப்பு அலைக்கற்றையானது, ஒரு கம்பியில்லாத கருவியிலிருந்து, இன்னொரு கருவிக்கு செல்லும்போது, எதிர்படும் அந்த அமைப்பு முழுவதுமாய் தோற்றுப்போய் பழுதடைந்து விடும்.

* 19-வது காண்டம், 4-வது மந்திரமான 28 -வது சூக்தத்தில் என்ன சொல்லப்படுகிறது என்றால், 'ஏ தர்பை கல்லே! எழக்கூடிய எதிரிகளை தாங்கள் ஈர்த்து, எங்களை காப்பாற்றுங்கள்' என கூறப்பட்டுள்ளது. அதனால், இந்த கல்லில் இருந்து வெளிப்படும் சக்தியானது,  புதிதாக உருவாகக்கூடிய அனைத்து விதமான தீய சக்திகளையும்,  அடிப்படையிலேயே அழித்து விடும் ஆற்றல் படைத்து விடுகிறது.


* இந்த தர்பை கல்லிற்கு, தண்ணீரில் இருக்கும்போது, அதிக ஈர்ப்பு விசை கிடைக்கிறது.

* 7-ம் மந்திரத்தில், சொல்லப்படுவது என்ன என்றால், தயிர் எப்படி உறைகிறதோ அதுபோல், தர்பை கல்லானது, எதிர்படும் அனைத்தையும் உறைய செய்து, அதன் உண்மை தன்மையை அழித்து எரித்து விடும் ஆற்றல் உடையதாக சொல்லப்படுகிறது.

* நவீன அறிவியல்படி, அந்த கல், சிவப்பு வண்ணத்தில் இருப்பதாகவும், செவ்வாய் கிரகத்திற்கு இணையாக திகழ்வதாகவும் தற்போது கண்டறியப்பட்டுள்ளது.  இப்பகுதியில் மீத்தேன் அதிகமாக இருப்பதாலும், மீத்தேன் குமுழ்கள் அதிகமாக சுரப்பதாலும்தான் கப்பல் மற்றும் விமானத்தை தன் பக்கம் ஈர்த்துகொள்கிறது.

இவை எல்லாம் அதர்வண வேதத்தில் சொல்லப்பட்டுள்ள 'தர்பை கல்' செயல்பாடுகளாக இருப்பது போலவே, பெர்முடா முக்கோணத்திலும் இருக்கிறது.

நவீன அறிவியல்படி செவ்வாய் கிரகம் முக்கோண வடிவத்தில் இருப்பதாகவும், அங்கு மீத்தேன் மற்றும் மீத்தேன் குமிழிகள் அதிகமாக சுரப்பதாகவும் தற்போது கண்டறியப்பட்டுள்ளன. அத்துடன், அங்கு பல நதிகள் இருந்து வற்றியதற்கான சுவடுகள் காணப்படுவதாகவும் நாசா கண்டறிந்துள்ளது.

தற்போதையை நவீன உலகில், 'பெர்முடா முக்கோணம்' பற்றிய தகவல்களை நாசா இப்போது ஒவ்வொன்றாக கண்டறிந்து வந்தாலும், பல ஆயிரம் வருடங்களுக்கு முன்பே இந்துக்களின் முந்தைய வேத காலம் என்று சொல்லப்படும் ரிக் வேதத்திலும், இறுதியான வேதமான அதர்வண வேதத்திலும் மற்றும் புராணங்களிலும் மிக தெளிவாக நமது முன்னோர்கள் சொல்லியிருக்கிறார்கள் என்பது பிரமிப்பாகதான் இருக்கிறது.

மூத்தோர் சொல் அமிர்தம் என்று அவ்வையார் சொன்னதுபோல், நமது முன்னோர்கள் சொன்னது அனைத்தும் உண்மையே என்று இதுபோன்ற விஞ்ஞான முடிவுகள் இந்து மதத்தின் சிறப்புகளை மேலும் தெளிவுப்படுத்துகிறது.  

அப்படிப்போடு 500 கோயில் கும்பாபிஷேகம் அம்பலமாகும் ரகசியம்

தமிழகத்தில் 20ம் தேதி மட்டும் சிறியதும், பெரியதுமாக 500 கோயில்களுக்கு கும்பாபிஷேகம் நடந்திருக்கிறது. இதற்காக உத்தரவே போட்டிருக்கிறது  அறநிலையத்துறை. இரண்டு மாதம் கழித்து நடத்த ஏற்பாடு செய்யப்பட்ட கோயில்களில் எல்லாம் 20ம் தேதியே நடத்துவதற்கும் உத்தரவு போனது.  ஒவ்வொரு மாவட்டத்திலும் உள்ளூர் அமைச்சர்கள் கோயில் அதிகாரிகளை வரவழைத்து எந்த ேநரத்தில் கும்பாபிஷேகம் நடத்தவேண்டும் என்று  நேரம் குறித்து கொடுத்து அனுப்பி வைத்துள்ளார்கள். உள்ளூர் அமைச்சர்கள் குறித்து கொடுத்த ேநரத்தில் தான் கும்பாபிஷேகம் நடத்தவேண்டும்.  இதுல எந்த மாற்றமும் செய்யக்கூடாது என்பதும் உத்தரவு.  இதற்கான ரகசியமும் அம்பலமாகியுளளது.

கும்பாபிஷேகத்திற்கு குறிக்கப்பட்ட 20ம் தேதியன்று ஏகாதசி திதியும், அன்று மிருகசீரிஷ நட்சத்திரமும் வந்தது. இந்த நட்சத்திரம் முதல்வர்  ஜெயலலிதாவின் ஜென்ம நட்சத்திரம். இந்த நாளில் கோயில் திருப்பணிகள் நடந்தால் மீண்டும் ஆட்சிக்கு வரலாம்னு நெருக்கமான ஜோசியர்  சொல்லியிருக்காராம். தற்போது இந்த ரகசியம் தெரிந்த இந்து அமைப்புகள் கொந்தளிக்க ஆரம்பிச்சுட்டாங்க.

எப்பவுமே ஆளும்கட்சிக்கு விசுவாசியான இந்து மக்கள் கட்சி தலைவர் அர்ஜூன் சம்பத், ‘‘ஆன்மிக தலைவர்களை ஆலோசிக்காமல் மந்திரிகள்  குறித்து கொடுத்த ேநரத்தை வைத்து கும்பாபிஷேகம் நடத்துகின்றனர். திருவாரூர் கோயிலில் ஆகம விதிப்படி கும்பாபிஷேகம் நடத்தாததால் தான்  மழை, ெ்வள்ளம் வந்து சென்னையே சீரழிஞ்சு போச்சு. ஒரு கோயில் கும்பாபிஷேகத்திற்கே இவ்வளவு பாதிப்புன்னா, ஆளும்கட்சிக்காரங்க அவங்க  இஷ்டத்துக்கு 500 கோயிலுக்கு கும்பாபிஷேகம் நடத்தறது நல்லதுக்கில்லை,’’ என பொங்கி தீர்த்தார்.

“சைனா போன்களும், பிற ஐட்டங்களும் இந்தியாவை உளவு பார்க்கலாம்டா தம்பிகளா. உஷாரா இருங்கடா”

மூன்றாம் உலகப் போர் – விமர்சனம்

லவ்வு… லவ்வை விட்டா ஆவி பில்லி சூனியம்! ஆவியை விட்டா அடிதடி ஆக்ஷன்! என்று குண்டு சட்டிக்குள் நண்டு மேய்த்துக் கொண்டிருந்த தமிழ்சினிமா கொஞ்சம் ரோசப்பட்டு இந்தியா சீனா எல்லையில் போய் நின்றிருக்கிறது. நாட்டுப்பற்று கதைகள் நமக்கொன்றும் புதுசு இல்லைதான். ஆனால் இந்த படத்தின் நேக்கு போக்கு கொஞ்சம் அதிர்ச்சியாகக் கூட இருக்கிறது. டெல்லி செங்கோட்டையை காட்டாத, பிரதமரை காட்டாத, மந்திரிகளின் பிரஸ்மீட்டுகளை காட்டாத, ஒரு தேசப்பற்று படம்! இதை துணிச்சல் என்பதா? அசட்டுத் துணிச்சல் என்பதா? அறிமுக இயக்குனர் சுகன் கார்த்திக்கு விரல் நடுங்க ஒரு ஷேக் ஹேன்ட்.

போர் முனையில் சிக்கிக் கொள்ளும் இந்திய ராணுவ மேஜர் ஒருவனை ‘மே…’ தனியாகவும் ‘ஜர்…’ தனியாகவும் கிழித்து மேய்கிறான் சீனாக்காரன். அந்நாட்டு ராணுவத்திடம் சிக்கிக் கொண்ட இவனிடம், “எங்க நாட்டு வீரர்கள் 100 பேரை எங்க வச்சுருக்கீங்க? உண்மையை சொல்லிடு. இல்லேன்னா கொன்னுடுவேன்” இதுதான் அந்த சீனாக்காரனின் தொண தொணப்பு. ஆச்சர்யம், தமிழ் மொழி பேசுகிற தளபதியாக அவன் இருக்கிறான் என்பதல்ல. தமிழின் பெருமையை பற்றியும் அவன் பேசுவதுதான். (நல்லவேளை… அவனை “இசைத்தமிழ் நீ செய்த அரியாசனம்…” என்று பாட வைக்காமல் விட்டார்களே?)

அவன் கொடுக்கும் ஒவ்வொரு உச்சக்கட்ட டார்ச்சருக்கும் மனம் தளராத அந்த மேஜர், உயிர் போகும் தருவாயில் தானும் இறந்து சீனாவின் மிகப்பெரிய நீர் மூழ்கி கப்பலையும் அழித்துவிட்டு சாவதுதான் க்ளைமாக்ஸ். நடுவில் அந்த மேஜரின் குடும்பம், புத்தம் புது மனைவி. அவளின் பிளாஷ்பேக் சிரிப்பு என்று ஆங்காங்கே நிரவப்பட்ட, கண்ணுக்கு நிறைவான காட்சிகள். இதுதான் மூன்றாம் உலகப் போர்.

இந்திய ராணுவ வீரராக நடித்திருக்கிறார் சுனில் குமார். ஆரம்ப கால அருண் பாண்டியனை போலிருக்கிறார். ஒரு ராணுவ வீரனின் ஸ்கெட்ச் அப்படியே பொருந்துகிறது அவருக்கு. இந்த தடவை தப்பிச்சுடுவார்… என்று நம்மை ஒவ்வொரு முறையும் நினைக்க வைக்கிறது அவரது நம்பிக்கை கலந்த கண்கள். ஆனால்? அவர் படும் சித்திரவதைகள் அப்படியே தியேட்டருக்குள் கடத்தப்படும்போது சுனிலின் நடிப்பும், பின்னணி இசையும், ஒளிப்பதிவும் கலந்து கட்டி பதற வைக்கின்றன. இறுதிக் காட்சியில் சுனில் மீது ஏதோவொரு கெமிக்கல் பாம் செலுத்தப்படுகிறது. அதன் தாக்கம் உடம்பில் ஏற ஏற அவர் நடந்து கொள்ளும் விதத்தை நடிப்பில் காட்டி பிரமிக்க வைத்திருக்கிறார். அகிலா கிஷோருடனான லவ் சீன்களில் மட்டும், ‘அண்ணாத்த‘ சற்றே வெட்கப்பட்டு விலகியே நிற்கிறார்.

அகிலா கிஷோருக்கு அதிகம் வேலையில்லை. கெட்டாலும் மருமகள்கள் மருமகள்களே என்பதற்கு அந்த ஒரு காட்சி அழகு. சுனில் இறந்துவிட்டார் என்றதும், “எங்க பொண்ணை நாங்க அழைச்சுட்டு போயிடுறோம்” என்று நிற்கும் பெற்றோர்களை வெளியே போகச் சொல்லும் அந்த காட்சி.

தமிழ் பேசும் அந்த சீன ராணுவ மேஜர் வில்சன், நடை உடை பாவனையால் சிரிக்க வைத்தாலும், சித்ரவதையில் மிரள விடுகிறார். ஆளை எங்கே பிடித்தார்களோ? நடிக்கவும் செய்திருக்கிறார். 2025 ன் தொழில் நுட்பத்தை காட்டுவதற்காக அவர் பயன்படுத்தும் கம்ப்யூட்டரெல்லாம், ஜீபூம்பா கம்ப்யூட்டர்ஜியாகவே தெரிகிறது நம் கண்களுக்கு.

முதல் பாதி நான்கு சுவர்களுக்குள்ளேயே முடிந்துவிட்டாலும், இரண்டாம் பாதியில் அண்டர் வாட்டர், நீர்மூழ்கி கப்பல், பறக்கும் போர் விமானங்கள் என்று வித்தை காட்டுகிறார் ஒளிப்பதிவாளர் தேவா.

பாடல்களில் கவனம் ஈர்த்திருக்கிறார் இசையமைப்பாளர் வேத் சங்கர். அந்த டூயட் பாடலில் ஒரு கவித்துவமான ஸ்டைலை கையாண்டு “நானும் இருக்கேன்ல” என்று மிரட்டுகிறார் எடிட்டர் ரிச்சர்டு.

2025ல் கதை நடப்பதாக காட்டுகிறார்கள். அதற்கான பொருளாதார மெனக்கெடல்கள் இருந்திருந்தால் படம் இன்னும் ருசித்திருக்குமோ?

கடைசியில் படம் சொல்ல வரும் மெசெஜ், பர்மா பஜார், ரிச் ஸ்டீரிட் கடை வியாபாரிகளின் வயிற்றை கலக்குகிற சமாச்சாரம். “சைனா போன்களும், அங்கிருந்து வரும் இன்னபிற ஐட்டங்களும் இந்தியாவை உளவு பார்க்கலாம்டா தம்பிகளா. உஷாரா இருங்கடா” என்பதுதான் அது.

ஒருவேளை மூன்றாம் உலகப்போரின் முக்கியமான ஆயுதங்களே அவைதானோ என்னவோ?

எனிவே… இந்த மூன்றாம் உலகப் போர், ‘போர்‘ அடிக்கல!

யாரு இறக்கிவிட்டா என்ன? நானிருக்கேன் தூக்குவதற்கு! அனிருத்துக்கு ஆதரவளிக்கும் அஜீத்

அஜீத்தின் இமை அசைகிற இடத்தை பார்த்து அதற்கேற்ப அசைகிறவர் டைரக்டர் சிவா! “சினிமாங்கறது ஏதோ பஸ்ல ஏறி அடுத்த ஸ்டாப்பிங்ல இறங்குகிற பயணம் அல்ல. குறைந்தது ஆறு மாதங்களாவது ஒரே திசையில் பயணம் செல்கிற வேலை. அதுக்கு டைரக்டர், புரட்யூசர், ஹீரோ மூணு பேருக்கும் வேவ் லெங்க்த் ஒண்ணாயிருக்கணும். அப்பதான் லாங் டிராவல் போக முடியும்” என்பதுதான் அஜீத்தின் பாலிஸி. தன் மனசுக்குள் இறங்கி மகுடி வாசிக்காத எவரையும் கிட்டே சேர்க்க மட்டுமல்ல, பார்க்கக் கூட மாட்டார் அவர். அந்த வகையில் சிவா, அஜீத்தின் மனசாட்சியாகி சில வருடங்கள் ஆகிறது.

அனிருத்துடன் வேதாளம் படத்தில் இணைந்து பணியாற்றியிருக்கிற அஜீத்திற்கு, இந்த முறையும் அவரே ஓ.கே என்றாகிவிட்டதாம். விளைவு? வேதாளம் சிவா இயக்கத்தில் அஜீத் நடிக்கப் போகும் அடுத்த படத்தின் இசை அனிருத்தேதான்.

வொய் திஸ் கொலவெறியில் ஒரேயடியாக உசரம் பார்த்து, பீப் பாடலில் ஒரேயடியாக தகரம் ஆகிவிட்ட அனிருத்தை அவரது நெருங்கிய உறவினரான தனுஷே துரத்தியடித்துவிட்டார். கிட்டதட்ட மூன்று படங்களிலிருந்து நீக்கவும் செய்யப்பட்டிருக்கிறார் அனிருத். இந்த நிலையில் “குழந்தை… தெரியாம பண்ணிருச்சு. மன்னிப்போம்… மறப்போம்…” என்ற மனநிலைக்கு வந்த அஜீத், “எது வந்தாலும் பேஸ் பண்ணலாம். அனிருத்தையே வரச்சொல்லுங்க” என்று கூறிவிட்டாராம் சிவாவிடம்.

ஆலுமா, டோலுமா கொடுத்த ஆனந்த ஹிட்டுதான் இதற்கெல்லாம் காரணமாக இருக்குமோ?

பாலா என் துணியை கூட கிழித்துவிடுவார்- வரலட்சுமி ஓபன் டாக்

தாரை தப்பட்டை படத்தை பற்றி யார் என்ன சொன்னாலும், வரலட்சுமி நடிப்பை பற்றி யாராலும் பேச முடியாமல் இருக்க முடியாது. அந்த அளவிற்கு இப்படத்தில் தன் அர்ப்பணிப்பை கொடுத்துள்ளார் இவர்.

இந்நிலையில் சமீபத்தில் தமிழகத்தில் முன்னணி நாளிதழ் ஒன்றி பேட்டியளித்த இவரிடம், படப்பிடிப்பில் பாலா எப்படி என்று கேட்டுள்ளனர்.

அதற்கு அவர் ‘நான் அவரிடம் இந்த கதாபாத்திரத்திற்காக ஏதும் பயிற்சி எடுக்க வேண்டுமா? என்று கேட்டேன், அவர் “அதெல்லாம் ஒன்றும் வேண்டாம், படப்பிடிப்பிற்கு வா, நான் சொல்வதை செய்” என்பார்.

படப்பிடிப்பில் இருந்த ஒரு வருடமும் ஸ்பாட்டில் நான் கண்ணாடியே பார்க்கல. ரெடியாகி பாலா சார் முன்னால போய் நிற்போம் அவர்தான் முடியைக் கலைச்சுவிடுவார், மேக் அப் சரி பண்ணுவார், தேவைப்பட்டா துணியை கூட கிழித்துவிடுவார்’ என கூறினார்.

தாரை தப்பட்டை வசூல் - படம் என்ன நிலையில் உள்ளது (முழு விவரம்)

பாலா இயக்கத்தில் இந்த பொங்கலுக்கு வெளிவந்த படம் தாரை தப்பட்டை. இப்படம் ரசிகர்களிடையே கலவையான விமர்சனங்களை சந்தித்து வருகின்றது.

இந்நிலையில் இப்படத்தின் வசூல் நிலவரங்கள் வெளிவந்துள்ளது. தாரை தப்பட்டை படத்தின் பட்ஜெட் ரூ 15 கோடி என கூறப்படுகின்றது.

சமீபத்தில் வந்த தகவலின்படி இப்படம் தற்போது வரை ரூ 10 கோடி வரை வசூல் செய்துவிட்டதாகவும், மேலும், வரும் நாட்களில் இதே வசூல் நீடித்தால் போட்ட பணத்தை எடுத்து விடலாம் என பாக்ஸ் ஆபிஸ் வட்டாரங்கள் தெரிவிக்கின்றது.

பொங்கலுக்கு வெளியான திரைப்படத்தில் உங்களை கவர்ந்தது?

மூன்றாம் உலக போர் - திரைவிமர்சனம்

இனி ஓர் உலக போர் வருகிறது என்றால் அது கண்டிப்பாக தண்ணீருக்காக தான் என சில வல்லுனர்கள் தெரிவித்துள்ளனர். ஆனால், மூன்றாம் உலக போரே இந்தியா-சீனா ஆகிய நாட்களால் தான் வருகிறது என ஒரு கற்பனை கலந்து எதிர்கால உண்மை கதையை காட்டியுள்ளது இந்த மூன்றாம் உலக போர்.

சுகன் கார்த்தி இயக்கத்தில், சுனில் குமார், அகிலா கிஷோர், சீனாவை சார்ந்த வில்சன் ஆகியோர் நடித்துள்ளனர்.

கதைக்களம்

2022ல் இந்தியா-சீனா ஒரு போரில் நேருக்கு நேர் மோதுகிறது. இதனால், மூன்றாம் உலக போர் வந்து விடுமோ என்ற அச்சத்தில் உலக நாடுகள் ஒன்று சேர்ந்து இந்த போரை நிறுத்துகின்றது.

ஆனால், சீனாவிலிருந்து இந்தியாவிற்கு நாச வேலைகள் செய்ய 100 சோல்ஜர்கள் வருகின்றனர். அவர்கள் அனைவரும் எங்கு சென்றார்கள் என்றே தெரியவில்லை. இதற்காக இந்திய அரசை சார்ந்த ராணுவ வீரர் சுனில் குமாரை சீனா அரசு கடத்துகிறது.

பின் அந்த சோல்ஜர்கள் எங்கு இருக்கிறார்கள் என கேட்டு, சீனா அரசு ராணுவ தலைவர் வில்சன் டார்ச்சர் செய்கிறார். இறந்தாலும் கூற மாட்டேன், என்று வைராக்கியத்துடன் இருக்கும் சுனிலிடம், ‘இந்தியாவில் பொருளாதார வீழ்ச்சி ஏற்படுத்த போகின்றோம்.

இதை வைத்தே இந்தியாவை எங்கள் அடிமையாக்குவோம் என ஒரு ஆப்ரேஷன் பற்றி கூற, இதை அவர் தடுத்தாரா, சீனாவில் 100 சோல்ஜர்கள் என்ன ஆனார்கள் என்பது தான் மீதிக்கதை.

படத்தை பற்றிய அலசல்

பாலை படத்திற்கு பிறகு சுனில் நடித்திருக்கும் படம், விஜயகாந்த் காலத்து கதை, அதில் அவர் பாகிஸ்தானுக்கு எதிராக பஞ்ச் டயலாக் பேசுவார், இதில் சீனாவிற்கு எதிராக இவர் பேசுகிறார் அவ்வளவு தான் வித்தியாசம்.

அந்த சீனா வில்லன், பிறகு கூடவே இருக்கும் சீனா ஆர்மி மேன்கள், ஏதோ சென்னை ஹோட்டலில் வேலை பார்க்கும் சிக்கிம் ஊர்க்காரகள் போல் உள்ளனர், அதிலும் வில்லன் தமிழ் பேசுவது, அதற்கு கூறும் காரணம் ஒரு தமிழனாக பெருமை என்றாலும், லாஜிக் அத்து மீறல்கள்.

படம் 2020க்கு மேல் நடப்பது போல் உள்ளது, அதில் அப்துல் கலாம் சொன்னது போல் இந்தியா வல்லரசு ஆகிவிட்டதாக கூறுகின்றனர். அதற்காக, ஏதோ LCD டிவில் அங்கும் இங்கும் ஏதாவது ஓடவிட்டால் 2020 வந்துவிடுமா? சுகன் சார்.

பல இடங்களில் ஏதோ வெளிநாட்டு வீடியோ கேமை அப்படியே ஓட்டிவிட்டுள்ளது அப்பட்டமாக தெரிகின்றது. அதிலும் ஸ்டண்ட் காட்சிகள் எல்லாம் சார், இதெல்லாம் 1980லேயே முடிந்துவிட்டது, அதையெல்லாம் 2020லும் காட்டியிருப்பது உச்சக்கட்ட சோதனை.

க்ளாப்ஸ்

வேதா ஷங்கரின் இசை, அதிலும் அந்த இந்தியா பாடல் ரசிகர்களின் நரம்பு புடைக்க வைக்கின்றது, பின்னணி இசையும் படத்திற்கான பலம்.

இந்தியாவிற்கு எதிரி என்றாலே பாகிஸ்தான் என்று தான் பலரும் கூறுவார்கள், ஆனால், தற்போது மட்டுமில்லை வருங்காலத்திலும் நமக்கு பெரிய தலைவலியாக இருக்க போவது சீனா தான் என்பதை அழுத்தமாக கூறப்பட்டுள்ளது.

பல்ப்ஸ்

நல்ல கதை மிக மிக சொதப்பலான மேக்கிங் காட்சிகள், ஏதோ இரண்டாம் கட்ட குறும்படம் போல் பல காட்சிகள்.

குறைந்த பட்ஜெட் படம் என்றாலும், அதற்காக ஏதோ வீடியோ கேம் போல கிராபிக்ஸ் காட்சிகள் எல்லாம் முகம் சுழிக்க வைக்கின்றது.

ராணுவ வீரர்களுக்கு சமர்ப்பணம் என்று கூறும் படத்தில் அதற்கான அழுத்தம் எந்த இடத்திலும் ரசிகர்கள் மனதில் பதியவில்லை.

மொத்தத்தில் மூன்றாம் உலக போர் படத்திற்கும் பார்வையாளர்களுக்கும் ஏற்படும் போராக அமைந்து விட்டது.

பாக்கெட் மணி கேட்ட மகன்... வங்கிக்கடன் பாணியில் தந்தை அனுப்பிய மறுப்பு கடிதம்!

தந்தையிடம் பாக்கெட் மணி கேட்ட மிசூரியை சேர்ந்த ஆறு வயது சிறுவனுக்கு,  வங்கி நோட்டீஸ் போல தந்தை அனுப்பிய மறுப்பு கடிதம் சமூக வலைதளங்களில் வைரலாகி பலராலும் ஷேர் செய்யப்பட்டுள்ளது.

அந்த கடிதத்தில் சிறுவனின் தந்தை,  “உங்கள் கணக்கை ஆராய்ந்து பார்த்ததில் உங்கள் சேமிப்பு கணக்கில் பணம் ஏதும் இல்லை. கிறிஸ்துமஸில் இருந்து ஏற்கனவே 80 டாலர்கள் கேளிக்கையில் செலவழித்து விட்டாயிற்று.

இந்நிலையில் மேலும் செலவு செய்ய கேட்கப்பட்டிருக்கும் 20 டாலர்களை  தர தற்போது
இயலாது. மேலும் உங்கள் வேலைகளை நீங்கள் சரிவர செய்யாததனாலும் நீங்கள் கடனாக கேட்டுள்ள 20 டாலர்களை கொடுக்க இயலாது. இந்த முடிவை ஏற்றுக் கொள்ள முடியவில்லை என்றால் புகார் பிரிவில் (சிறுவனின் தாயார்) தெரிவித்துகொள்ளலாம்” எனவும் கிண்டலாக குறிப்பிட்டுள்ளார்.

“தந்தையின் சேமிப்பு மற்றும் கடன்” வங்கியின் பெயரில் இந்த கடிதத்தை அனுப்பியுள்ளார் இந்த தந்தை.

குழந்தைகளுக்கு சிறு வயதிலிருந்தே சேமிப்பு பழக்கம் மற்றும் பணத்தை சிக்கனமாக செலவு செய்யும் பழக்கத்தை கற்றுக் கொடுக்கவும், இந்த மாதிரியான ஐடியாக்களை பின்பற்றலாமே என பலரும் இந்த கடித புகைப்படத்திற்கு கமென்ட் கொடுத்துள்ளனர்.

நானும் சில பெண்களும்..பார்த்திபன்

 சில வருடங்களாக எந்த பெரிய பட்ஜெட் படங்களில் வாய்ப்பு கிடைக்காமல் இருந்த பார்த்திபன் சென்ற வருடம் வெளியான மாஸ், நானும் ரௌடிதான் ஆகிய படங்களின் மூலம் மீண்டும் தனது பெயரை கோலிவுட்டில் நிலைநாட்டியுள்ளார்.

தற்போது ஒரு புதிய படத்தை தொடங்கவுள்ள அவர், அதற்கு நானும் சில பெண்களும் போன்ற கதையம்சத்தில் அமையவுள்ளது. பெயருக்கு தகுந்தார் போல் இந்த படத்தில் ஆறு ஏழு நடிகைகள் நடிப்பார்கள். படத்தின் பெயர் இன்னும் வைக்கப்படவில்லை.

அழகி படத்தை போல இந்த படத்திலும் ஹீரோயின்களுக்கு அழுத்தமான கதாபாத்திரம் இருக்கும் என்கிறார் அவர்.

வழக்கொழிந்து வருகிறது கல்செக்கு எண்ணெய் உற்பத்தி: பாரம்பரிய தொழிலை பாதுகாக்க கோரிக்கை

 திருநெல்வேலி பேட்டை மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளில் பல ஆண்டுகளாக பிரசித்தி பெற்றிருந்த கல்செக்கு எண்ணெய் உற்பத்தி தொழில் வழக்கொழிந்து வருவது குறித்து இத்தொழிலில் பல தலைமுறைகளாக ஈடுபட்டுள்ளவர்கள் கவலை தெரிவிக்கிறார்கள். இத்தொழிலில் நவீன தொழில்நுட்பத்தை பயன்படுத்தவும், உரிய அங்கீகாரம் அளிக்கவும் அரசுத்துறைகள் முன்வர வேண்டும் என்பதே அவர்களின் எதிர்பார்ப்பாக உள்ளது.

திருநெல்வேலி பேட்டையில் செக்கடித்தெரு பகுதியில் கடந்த 15 ஆண்டுகளுக்கு முன்புவரை மாடுகளை பயன்படுத்தி கல்செக்குகளை இயக்கி எள்ளிலிருந்து எண்ணெய் எடுக்கும் தொழில் பிரதானமாக நடைபெற்று வந்தது. இப்போது இயந்திரங்கள் மூலம் செக்குகளை இயக்கி எண்ணெய் உற்பத்தி நடைபெறுகிறது. இத்தொழிலில் தற்போது மிகவும் குறைந்த எண்ணிக்கையிலானோரே ஈடுபட்டு வருகின்றனர். இயந்திரமயமான இக்காலத்தில் பாக்கெட்டுகளில் அடைக்கப்பட்ட பல வகை எண்ணெய்கள் சந்தையில் விற்பனைக்கு வந்துள்ளன. ஆனாலும் செக்கு எண்ணெய்க்கான மகிமை குறையவில்லை. அதற்கான தேவை இன்றும் உள்ளது. ஆனால், இயற்கை முறையில் எண்ணெயை உற்பத்தி செய்யும் ஆட்கள் குறைந்துவிட்டனர்.


செக்கடித் தெரு

தற்போது பேட்டையில் செக்கடி தெரு பகுதியில் ஓரிருவர் மட்டுமே செக்கு எண்ணெய் தயாரித்து விற்பனை செய்யும் தொழிலில் ஈடுபட்டிருக்கிறார்கள். அவர்களில் முக்கியமானவர் மாடசாமி என்ற அன்பழகன் (62). ஏழாவது தலைமுறையாக இத்தொழிலில் இவர் ஈடுபட்டிருக்கிறார். தற்போது இவர் மின்மோட்டார் மூலம் கல்செக்கை இயக்கி எண்ணெய் உற்பத்தி செய்கிறார்.

கல்செக்கு எண்ணெய் உற்பத்தி குறித்து மாடசாமி கூறியதாவது: கல்செக்கை மாடுகள் மூலம் சிறிது சிறிதாக இயக்குவதால் எள் சூடாவதில்லை. நல்ல பக்குவத்தில் அதில் உள்ள சத்துகள் சிதையாமல் பாதுகாக்கப்படுகிறது. கல் செக்கில் நல்லெண்ணெயை எடுப்பது லேசான காரியமில்லை. சித்த மருந்து தயாரிப்பதுபோல் சிரத்தையான வேலை.

நூதனமான படைப்பு

கல் செக்கு ஒரு நூதனமான படைப்பு. ஒரே கல்லில் குடைக்கா ளான் வடிவில் குடைந்து அடியில் வட்ட வடிவிலான ஆரக்கற்களை அமைத்திருப்பார்கள். அந்த செக்கின் நடுவில் சுற்றிச்சுழல வாகை மரத்தில் இருந்து செய்யப்பட்ட உலக்கை பொருத்தப்படும். கொக்கி எனப்படும் பெயரில் மரத்தாலான ஒரு ஸ்டே அதை தாங்கி நிற்கும். அதன் கீழ்பகுதி நீண்ட கம்பாலான பலகையால் செக்கின் அடிவாரத்தில் இணைக்கப் பட்டிருக்கும். இந்த பலகையில் அமர்ந்துதான் மாடுகளை பொருத்தி செக்கை ஓட்டுவர்.

எட்டு எள்ளுக்கு ஒரு சொட்டு என்பார்கள். இதை எள்ளிலிருந்து கிடைக்க வேண்டிய எண்ணெயின் அளவாக கொள்ளலாம். இப்போது கல்செக்குகளை இயந்திரங்கள் மூலம் இயக்கும் தொழில்நுட்பத்தை கையாண்டு இத்தொழிலை தொடர்ந்து வருகிறோம்.

கேரளாவில் வரவேற்பு

தற்போது கல்செக்கு மூலம் தயாரிக்கப்படும் நல்லெண்ணெயை ஆயுர்வேத மருத்துவத்துக்காக கேரளத்திலிருந்து வருபவர்கள் அதிக அளவில் வாங்கிச் செல்கின் றனர்.

கல்செக்குகளில் எண்ணெய் தயாரிக்க நவீன தொழில்நுட்பத்தை பயன்படுத்தும் யோசனையை காதி கிராம தொழில்கள் துறை அதிகாரிகளிடம் கடந்த சில ஆண்டுகளுக்கு முன் தெரிவித் தோம். அது நடைமுறைக்கு சாத்தியமில்லை என்று கூறி சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் நிராகரித்துவிட்டனர். ஆனால், கர்நாடகம் உள்ளிட்ட பிற மாநிலங்களில் இத்தகைய தொழில்நுட்பத்தை பயன்படுத்தி இன்னமும் கல்செக்கு எண்ணெய் தயாரிக்கப்படுகிறது என்றார் அவர். 

ஆண்கள் செய்யக்கூடாத செயல்கள்

ஆண்கள் செய்யக்கூடாத செயல்கள்

ஆண்மகன் தன் மனைவி கர்ப்பமாய் இருக்கும்,போது,பிரேதத்தின் பின் போகுதல்,முடிவெட்டுதல்,மலை ஏறுதல்,சமுத்திரத்தில் குளித்தல், வீடுகட்டுதல் தூரதேசயாத்திரை செல்லுதல்,வீட்டில் விவாகம் செய்தல், சிரார்த்த வீட்டில் புசித்தல் ஆகிய இந்த எட்டுக் காரியங்களையும் செய்யக்கூடாது, மேலும்,கணவன்,கர்ப்பிணியாய் இருக்கும் மனைவியை எந்த விதத்திலும் துன்புறுத்தவோ, அசிங்கமான வார்த்தை கூறவோ கூடாது. அப்பொழுதுதான் ஆரோக்கியமாய் சுகப்பிரசவமாகும்.

 நமது நடைமுறை வாழ்க்கையில் செய்யக்கூடாத சில விஷயங்களைப் பற்றி நமது சாஸ்திரங்கள் கூறுகின்றன அவை

1,கன்றுக்குட்டி,மாடு ஆகிய இவற்றைக் கட்டியிருக்கும் கயிற்றைத் தாண்டக் கூடாது

2,தண்ணீரில் தன் உருவத்தைப் பார்க்கக்கூடாது

3,நிலையில் அமரக்கூடாது

4,மழை பெய்யும் பொழுது ஓடக்கூடாது

5,தரையில் கை ஊன்றிச் சாப்பிடக்கூடாது

6,துணி இல்லாமல் குளிக்கக் கூடாது

7,சூரியனுக்கு எதிரில் மலஜலம் கழிக்கக்கூடாது

8,நெருப்பை வாயினால் ஊதக்கூடாது

9,அசுத்தமான பொருள்களை நெருப்பில் போடக்கூடாது

10,துடிதுடிக்கப் புழுபூச்சிகளை நெருப்பில் போடுவது பிரம்மகத்திதோஷம் ஆகும்

11,ஆலயத்தில் இரவுநேரத்தில் குளிக்கக்கூடாது,கங்கையில் மட்டும் எந்த நேரமும் குளிக்கலாம்,

12,ஈரத்துணியைத் தண்ணீரில் பிழியக்கூடாது,உதறக்கூடாது

13,பெண்கள் மாதவிடாய் ஆன நான்கு நாள்கள்வரை,கோவிலுக்குப் போக்ககூடாது

 கூடாத சில விஷயங்கள்!

பசு தன் கன்றுக்குப் பால் கொடுக்கும் சமயத்திலும்,தண்ணீர் குடிக்கும் சமயத்திலும் அதற்கு எவ்விதத் தடையும் ஏற்படுத்துதல் கூடாது!அது பாவங்களுளெல்லாம் பெரியபாவம் ஆகும் மற்றும் அக்கினி,சூரியன், சந்திரன்,வில்வமரம்,பசு,தண்ணீர் ஆகியவற்றைப் பார்த்துக்கொண்டு மல ஜலம் கழிக்கக்கூடாது!மற்றும் பாம்புப்புற்றின் அருகிலும்,எறும்புகள் கூட்டத்தின் மீதும் சிறுநீர் கழித்தல் கூடாது, முக்கிய எச்ச்ரிக்கை! மாட்டை மேய்க்கும் கயிற்றைக் கட்டும் முளைக்குச்சியை எக்காரணம் கொண்டும் அடுப்பு எரிக்கக்கூடாது,அது மிகப்பெரிய தோஷமாகும்!

ஒரு தலைவன் இப்படிதான் பேச வேண்டும்! - மோடி முதல்... தோனி வரை நமக்கு கற்று தரும் பாடம்

ஒருவரது குணத்தை பெரிதும் வெளிப்படுத்துவது அவரது பேச்சாகதான் இருக்கும். ஒருவேளை நீங்கள் அதிகம் பேசுபவராக இருக்கலாம் அல்லது குறைவாக பேசுபவராக இருக்கலாம். ஆனால் நீங்கள் பேசும் இடம் எது என்பது மிகவும் முக்கியம்.

ஒரு கட்சியின் பொதுக்கூட்டம் துவங்கி உலகக் கோப்பை இறுதி ஆட்டத்தின் பரிசளிப்பு விழா வரை பல்வேறு நிகழ்ச்சிகளில் பேசுபவரை பார்த்திருப்போம். வழக்கமான டெம்ளேட் வார்த்தைகளை பயன்படுத்துபவர்கள் துவங்கி,  சர்ச்சையை ஏற்படுத்தும் செய்தி வரை வெவ்வேறு விதமாக பேசுபவர்களை பார்த்திருப்போம். அதிலும் ஒரு தலைவன் என்பவர் எப்படி பேச வேண்டும் என்பது முகவும் முக்கியம். என்ன பேச வேண்டும் என்பதை காட்டிலும், எப்படி பேச வேண்டும் என்பதும் முக்கியமான விஷயமாக உள்ளது. உலகின் சிறந்த தலைவர்களின் பேச்சில் என்ன இல்லை, என்ன இருந்துள்ளது என்பது குறித்த சிறந்த உதாரணங்கள் இதோ ....

எக்ஸாம்பிள் மோடி!


மோடி பேச்சில் எப்போதுமே மேற்கோள்களுக்கு பஞ்சமிருக்காது. உலகில் எந்த ஊருக்கு சென்றாலும் அதோடு இந்தியர்களை தொடர்புபடுத்தி பேசுவது, விநாயகர்தான் பிளாஸ்டிக் சர்ஜரிக்கு முன்னோடி என தொழில்நுட்பத்துக்கு உதாரணம் கூறுவது என துவங்கி பார்ப்பவர்களை வசீகரப்படுத்திவிடும் திறமை கொண்ட தலைவராக விளங்குபவர். இவரது பேச்சுக்கள் கேட்பவரை போரடிக்காமல் உள்ளது எனக் கூற வைக்கிறது. உலகின் பல பிரதமர்/ அதிபர்கள் இதே பார்முலாவைதான் ஃபாலோ செய்கிறார்கள்.


எமோஷனல் மார்க்!


ஒரு தலைவனின் பேச்சு எமோஷனலாக இருக்கக்கூடாதுதான். ஆனால் பாசிட்டிவான விஷயத்தில் எமோஷனலாக பேசி சூழ்நிலையை மாற்றுபவர்தான்  சிறந்த தலைவர் என்பதை யாராலும் மறுக்க முடியாது. ஃபேஸ்புக் நிறுவனர் மார்க் சக்கர்பெர்க் தனது பேச்சுகளில், ஏதாவது ஒரு எமோஷனலான விஷயத்தை நுழைத்து விடுகிறார். அமெரிக்காவில் மோடியுடனான உரையாடலின் போது 'இந்திய கோயில்கள்தான் மக்களின் இணைப்பை உணர்த்தியது. ஸ்டீவ் ஜாப்ஸின் அறிவுரைதான் என்னை இந்தியாவுக்கு அனுப்பியது எனப் பேசியது அனைத்து இந்தியர்களையும் கவர்ந்தது. எமோஷனலை எப்படி கையாள வேண்டும் என்பதற்கு மார்க் மிகப்பெரிய உதாரணம்.

இன்ட்ரஸ்டிங்க் சுந்தர் பிச்சை!


கூகுள் சிஇஓ சுந்தர் பிச்சை, தமிழகத்தை சேர்ந்தவர் . இவரது தலைமை பண்பு கூகுளின் பல திட்டங்களுக்கு உதவியாக இருந்துள்ளது. கூகுள் சிஇஓவாக பதவியேற்ற பின்,  முதல் முறையாக இந்தியா வந்த போது ஆன்ட்ராய்டின் அடுத்த வெர்ஷன் பெயர் என்ன என்ற கேள்விக்கு பால்பாயாசம், பால்கோவா என இந்திய உணவுகளின் பெயராக கூட இருக்கலாம் என்ற அசால்ட்டான பதில் மூலம்,  இந்தியர்களை தன் வசப்படுத்தியவர் சுந்தர் பிச்சை. ஒரு தலைவனின் பேச்சு எவ்வளவு பயனுள்ளதாக இருக்க வேண்டுமோ அதே அளவு இன்ட்ரஸ்டிங்க்காகவும் இருக்க வேண்டும். இல்லையெனில் தலைவர்கள் போரடிக்கும் டேப் ரெக்கார்டர்கள் போல் மாறிவிடுவார்கள்.

ஃப்ளுயன்ட் கருணாநிதி!

பேசும் போது தடங்கல் இல்லாமல் பேசுவது ஒரு கலை. சிலருக்கு என்ன பேச வந்தோம் என்பதே மறந்துவிடும். ஆனால்  சரியான வார்த்தைகளுடன், தெளிவாகவும், சாதுர்யமாகவும் பேசும் தலைவர்களுக்கு எப்போதுமே மரியாதை உண்டு. அவரைப் பற்றிய விமர்சனங்கள் எப்படி இருந்தாலும் அவரது பேச்சை கேட்கவே ஒரு கூட்டம் கூடும். இந்த ரகத்தை சேர்ந்தவர்தான் கருணாநிதி. அவரது பேச்சுகளில் பெரும்பாலானவை வார்த்தை ஜாலங்கள் நிறைந்ததாகவும், நுட்பமான வார்த்தை பிரயோகம் நிறைந்ததாகவும் இருக்கும். இதுபோன்ற சாதுர்யமான பேச்சுக்கள் மூலமாக ஒரு தலைவனால் நீண்ட நாட்கள் தலைவன் என்ற இடத்தில் நீடிக்க முடியும் என்பதற்கு இவர் ஒரு சிறந்த உதாரணம்.

கான்ஃபிடென்ட் ஒபாமா!


ஒரு தலைவரின் பேச்சில் கட்டாயம் இருக்க வேண்டிய விஷயம் தன்னம்பிக்கை. ஒரு நாட்டை, ஒரு கால்பந்து அணியை, அலுவலகத்தில் ஒரு குழுவை நிர்வகிக்கும் ஒரு தலைவர் என்பவர்,  தன்னம்பிக்கை நிறைந்தவராக மட்டுமே இருக்க வேண்டும். ஒரு அணி துவண்டு இருக்கும் நேரத்தில் அந்த அணியை தன்னம்பிக்கையாக பேசி,  வெற்றி பாதைக்கு மாற்றுவது துவங்கி, ஒரு நாட்டின் பிரச்னையை முன்னின்று சமாளிக்கும்போது மக்களுக்கு பிரச்னை தீர்ந்துவிடும் என்ற தன்னம்பிக்கையை கொண்டு வருவது வரை ஒரு தலைவனின் முக்கிய பண்பாகும். ஒபாமாவின் பெரும்பாலான பேச்சுக்கள் இதனையே பிரதிபலிக்கின்றன. அவரது முதல் பிரச்சாரமான 'ஹோப்' துவங்கி அவரது அனைத்து பேச்சுக்களிலுமே. தன்னம்பிக்கைக்கு பஞ்சமிருக்காது.

ரெஸ்பான்சிபிள் தோனி!


ஒரு தலைவனுக்கு முக்கியமாக இருக்க வேண்டிய பண்பு பொறுப்பேற்பது. வெற்றி பெறும் போது அதற்கு காரணமாக நபரை கைகாட்டி பாராட்டுவதும், தோல்விகளுக்கு மற்றவர்களை கைகாட்டாமல் தானே பொறுப்பேற்பதும் தலைவனின் தலைமை பண்பை மேலும் ஒரு படி உயர்த்தும் கருவிகள். இதற்கு சரியான உதாரணம் இந்திய கேப்டன் தோனி மட்டுமே. இந்தியா அபாரமாக வென்ற போட்டிகளில் அவரது பேச்சில் 'நான்' என்ற வார்த்தையை பயன்படுத்தியிருக்கமாட்டார். அப்போது அளிக்கும் பேட்டிகளிலும் ஒட்டு மொத்த அணியை குறிக்கும் 'பாய்ஸ்' என்ற வார்த்தை அதிகமாக பயன்படுத்தப்பட்டிருக்கும். அதேசமயம் தோல்விகளுக்கு மீடியாக்கள் முன்பாக தனி நபரை குறை கூறியதே  இல்லை. கடைசியாக தற்போது ஆஸ்திரேலியாவில் தோற்ற 4வது போட்டியிலும் எனது இன்னிங்க்ஸ்தான் தோல்விக்கு காரணம் என தோனி கூறியது அவரது தலைமை பண்பை உணர்த்துகிறது. எப்படி வெற்றிகளில் நான் என்ற வார்த்தையை பயன்படுத்த மாட்டாரோ அதேபோல் தோல்விகளில் நான் என்ற வார்த்தையை அதிகமாக பயன்படுத்தியுள்ளார்.

ஒரு தலைவன்தான் இதுபோன்று பேச வேண்டும் என்பதில்லை. ஆளுமை திறன் கொண்ட,  தன்னை தலைவனாக உயர்த்திக்கொள்ள விரும்பும் அனைவருமே இது போன்ற பேச்சுத்திறனை வளர்த்துக் கொண்டால் ஒரு சாதாரண அணி அமர்விலோ அல்லது குழு சந்திப்பிலோ உங்கள் ஆளுமை நிறைந்த பேச்சு உங்களை அடுத்த கட்டத்துக்கு எடுத்து செல்லும் கருவியாக அமையும். உங்களுக்குள் இருக்கும் தலைவனை உங்கள் பேச்சின் மூலம் வெளிக்கொண்டு வந்தால் நீங்கள்தான் நாளைய தலைமுறைக்கு உதாரணமாக இருப்பீர்கள்.