Friday 22 January 2016

இந்த மூன்றாம் உலகப் போர், ‘போர்‘ அடிக்கல! விமர்சனம்

மூன்றாம் உலகப் போர் – விமர்சனம்

லவ்வு… லவ்வை விட்டா ஆவி பில்லி சூனியம்! ஆவியை விட்டா அடிதடி ஆக்ஷன்! என்று குண்டு சட்டிக்குள் நண்டு மேய்த்துக் கொண்டிருந்த தமிழ்சினிமா கொஞ்சம் ரோசப்பட்டு இந்தியா சீனா எல்லையில் போய் நின்றிருக்கிறது. நாட்டுப்பற்று கதைகள் நமக்கொன்றும் புதுசு இல்லைதான். ஆனால் இந்த படத்தின் நேக்கு போக்கு கொஞ்சம் அதிர்ச்சியாகக் கூட இருக்கிறது. டெல்லி செங்கோட்டையை காட்டாத, பிரதமரை காட்டாத, மந்திரிகளின் பிரஸ்மீட்டுகளை காட்டாத, ஒரு தேசப்பற்று படம்! இதை துணிச்சல் என்பதா? அசட்டுத் துணிச்சல் என்பதா? அறிமுக இயக்குனர் சுகன் கார்த்திக்கு விரல் நடுங்க ஒரு ஷேக் ஹேன்ட்.

போர் முனையில் சிக்கிக் கொள்ளும் இந்திய ராணுவ மேஜர் ஒருவனை ‘மே…’ தனியாகவும் ‘ஜர்…’ தனியாகவும் கிழித்து மேய்கிறான் சீனாக்காரன். அந்நாட்டு ராணுவத்திடம் சிக்கிக் கொண்ட இவனிடம், “எங்க நாட்டு வீரர்கள் 100 பேரை எங்க வச்சுருக்கீங்க? உண்மையை சொல்லிடு. இல்லேன்னா கொன்னுடுவேன்” இதுதான் அந்த சீனாக்காரனின் தொண தொணப்பு. ஆச்சர்யம், தமிழ் மொழி பேசுகிற தளபதியாக அவன் இருக்கிறான் என்பதல்ல. தமிழின் பெருமையை பற்றியும் அவன் பேசுவதுதான். (நல்லவேளை… அவனை “இசைத்தமிழ் நீ செய்த அரியாசனம்…” என்று பாட வைக்காமல் விட்டார்களே?)

அவன் கொடுக்கும் ஒவ்வொரு உச்சக்கட்ட டார்ச்சருக்கும் மனம் தளராத அந்த மேஜர், உயிர் போகும் தருவாயில் தானும் இறந்து சீனாவின் மிகப்பெரிய நீர் மூழ்கி கப்பலையும் அழித்துவிட்டு சாவதுதான் க்ளைமாக்ஸ். நடுவில் அந்த மேஜரின் குடும்பம், புத்தம் புது மனைவி. அவளின் பிளாஷ்பேக் சிரிப்பு என்று ஆங்காங்கே நிரவப்பட்ட, கண்ணுக்கு நிறைவான காட்சிகள். இதுதான் மூன்றாம் உலகப் போர்.

இந்திய ராணுவ வீரராக நடித்திருக்கிறார் சுனில் குமார். ஆரம்ப கால அருண் பாண்டியனை போலிருக்கிறார். ஒரு ராணுவ வீரனின் ஸ்கெட்ச் அப்படியே பொருந்துகிறது அவருக்கு. இந்த தடவை தப்பிச்சுடுவார்… என்று நம்மை ஒவ்வொரு முறையும் நினைக்க வைக்கிறது அவரது நம்பிக்கை கலந்த கண்கள். ஆனால்? அவர் படும் சித்திரவதைகள் அப்படியே தியேட்டருக்குள் கடத்தப்படும்போது சுனிலின் நடிப்பும், பின்னணி இசையும், ஒளிப்பதிவும் கலந்து கட்டி பதற வைக்கின்றன. இறுதிக் காட்சியில் சுனில் மீது ஏதோவொரு கெமிக்கல் பாம் செலுத்தப்படுகிறது. அதன் தாக்கம் உடம்பில் ஏற ஏற அவர் நடந்து கொள்ளும் விதத்தை நடிப்பில் காட்டி பிரமிக்க வைத்திருக்கிறார். அகிலா கிஷோருடனான லவ் சீன்களில் மட்டும், ‘அண்ணாத்த‘ சற்றே வெட்கப்பட்டு விலகியே நிற்கிறார்.

அகிலா கிஷோருக்கு அதிகம் வேலையில்லை. கெட்டாலும் மருமகள்கள் மருமகள்களே என்பதற்கு அந்த ஒரு காட்சி அழகு. சுனில் இறந்துவிட்டார் என்றதும், “எங்க பொண்ணை நாங்க அழைச்சுட்டு போயிடுறோம்” என்று நிற்கும் பெற்றோர்களை வெளியே போகச் சொல்லும் அந்த காட்சி.

தமிழ் பேசும் அந்த சீன ராணுவ மேஜர் வில்சன், நடை உடை பாவனையால் சிரிக்க வைத்தாலும், சித்ரவதையில் மிரள விடுகிறார். ஆளை எங்கே பிடித்தார்களோ? நடிக்கவும் செய்திருக்கிறார். 2025 ன் தொழில் நுட்பத்தை காட்டுவதற்காக அவர் பயன்படுத்தும் கம்ப்யூட்டரெல்லாம், ஜீபூம்பா கம்ப்யூட்டர்ஜியாகவே தெரிகிறது நம் கண்களுக்கு.

முதல் பாதி நான்கு சுவர்களுக்குள்ளேயே முடிந்துவிட்டாலும், இரண்டாம் பாதியில் அண்டர் வாட்டர், நீர்மூழ்கி கப்பல், பறக்கும் போர் விமானங்கள் என்று வித்தை காட்டுகிறார் ஒளிப்பதிவாளர் தேவா.

பாடல்களில் கவனம் ஈர்த்திருக்கிறார் இசையமைப்பாளர் வேத் சங்கர். அந்த டூயட் பாடலில் ஒரு கவித்துவமான ஸ்டைலை கையாண்டு “நானும் இருக்கேன்ல” என்று மிரட்டுகிறார் எடிட்டர் ரிச்சர்டு.

2025ல் கதை நடப்பதாக காட்டுகிறார்கள். அதற்கான பொருளாதார மெனக்கெடல்கள் இருந்திருந்தால் படம் இன்னும் ருசித்திருக்குமோ?

கடைசியில் படம் சொல்ல வரும் மெசெஜ், பர்மா பஜார், ரிச் ஸ்டீரிட் கடை வியாபாரிகளின் வயிற்றை கலக்குகிற சமாச்சாரம். “சைனா போன்களும், அங்கிருந்து வரும் இன்னபிற ஐட்டங்களும் இந்தியாவை உளவு பார்க்கலாம்டா தம்பிகளா. உஷாரா இருங்கடா” என்பதுதான் அது.

ஒருவேளை மூன்றாம் உலகப்போரின் முக்கியமான ஆயுதங்களே அவைதானோ என்னவோ?

எனிவே… இந்த மூன்றாம் உலகப் போர், ‘போர்‘ அடிக்கல!

0 comments:

Post a Comment