Sunday 24 January 2016

''ஏர்லிப்ட்-ஒவ்வொரு இந்தியனும் கண்டிப்பாக பார்க்க வேண்டிய படம் ''திரைவிமர்சனம்

குவைத் மீது ஈராக் நடத்திய தாக்குதலின் போது ஏராளமான இந்தியர்கள் பாதிக்கப்பட்டனர். இந்த உண்மை சம்பவத்தை மையமாக வைத்து ஒரு அற்புதமான படத்தை கொடுத்து இருக்கிறார் அறிமுக இயக்குநர் ராஜா கிருஷ்ண மேனன். அதற்கு அக்ஷ்ய் குமாரின் நடிப்பு பெரிய பலமாக அமைந்துள்ளது. இப்படம் ரசிகர்களை எப்படி கவர்ந்துள்ளது என்று இனி பார்ப்போம்.

கதைப்படி, ரஞ்சித் கத்யால் எனும் அக்ஷ்ய் குமார், குவைத்தில் வாழும் இந்திய தொழிலதிபர். இவரது மனைவி அம்ரிதா எனும் நிர்மத் கவுர். அன்பான மனைவி, அழகான குழந்தை, நல்ல முறையில் தொழில் என சிறப்பாக சென்று கொண்டிருக்கிறது அக்ஷ்ய் குமாரின் வாழ்க்கை. இப்படிப்பட்ட சூழலில் ஒருநாள் ஈராக் அரசு, குவைத் மீது திடீரென போர் தொடுக்கிறது. இதில் அந்நாட்டு மக்களுடன் லட்சக்கணக்கான இந்தியர்களும் பாதிக்கப்படுகின்றனர். பெரிய தொழிலதிபர்களாக இருந்தவர்கள் கூட ஏழ்மையான நிலைக்கு தள்ளப்படுகின்றனர். உண்ண உணவு கூட இன்றி கஷ்டப்படும் இந்தியர்களை, அக்ஷ்ய்குமார் போராடி காப்பாற்ற களம் இறங்குகிறார். இதற்காக அவர் படும் துயரங்கள் தான் 'ஏர்லிப்ட்' படத்தின் பரபரப்பான மீதி திரைக்கதை.

ஹீரோ அக்ஷ்ய் குமார் நடிப்பில் பிரமாதப்படுத்தியிருக்கிறார். அவருடைய சினிமா கேரியரில் சிறந்த படமாக இந்த ஏர்லிப்ட் படம் இருக்கும், அந்தளவுக்கு அவரது நடிப்பு அட்டகாசம்.

ஹீரோயின் நிர்மத் கவுருக்கு நடிப்பில் பெரிய ஸ்கோப் இல்லையென்றாலும் கணவருடன் அவர்படும் துயரங்களில் கலக்கியிருக்கிறார். அக்ஷ்ய், நிர்மத் போன்றே பிரகாஷின் நடிப்பும் பிரமாதம்.

'ஏர்லிப்ட்' படத்தை அறிமுக இயக்குநர் ராஜா கிருஷ்ணா மேனன் இயக்கியுள்ளார். அறிமுகம் இயக்குநர் என்று யாரும் சொல்ல முடியாது. அந்தளவுக்கு படத்தை அற்புதமாக இயக்கியுள்ளார். படத்தின் மிகப்பெரிய பலம் திரைக்கதை தான். ஒரு சீன் கூட போர் அடிக்காமல் பரபரப்பாக கொண்டு போய் உள்ளார் இயக்குநர். மேலும் படத்திற்கு பக்கபலமாக அனல் தெறிக்கும் வசனங்கள், ஒளிப்பதிவு, இசை எல்லாமும் சிறப்பாக அமைந்துள்ளது. ஒவ்வொரு இந்தியனும் கண்டிப்பாக பார்க்க வேண்டிய படம் இந்த ''ஏர்லிப்ட்''.

மொத்தத்தில், ''ஏர்லிப்ட் - ஏறுமுகம்... வசூலும் ஏறும்...!''

0 comments:

Post a Comment