Saturday 16 January 2016

ஒபாமாவின் சட்டைப் பையில் எப்போதும் இருக்கும் இந்துக் கடவுள் அனுமன் சிலை!

வெள்ளை மாளிகையில் அமெரிக்க அதிபர் ஒபாமா பிரபல யூடியூப் வலைத்தள நட்சத்திரமான இன்கிரிட் நீல்செனுக்கு நேற்று பேட்டியளித்தார். அப்போது, அவரிடம் பல கேள்விகள் கேட்கப்பட்டன. குறிப்பாக, அவரது சட்டை பாக்கெட்டில் என்னென்ன வைத்திருக்கிறார்? என்ற சுவாரஸ்யமான கேள்வியும் எழுந்தது. அப்போது அதிபர் ஒபாமா தனது கோட் பாக்கெட்டில் இருந்து பல சிறிய பொருட்களை எடுத்து காண்பித்தார். அதில், இந்துக் கடவுளான அனுமனின் சிறிய சிலையும் இருந்தது. அதை பற்றி ஒபாமா கூறியவை பின்வருமாறு:-

இது இந்துக் கடவுளான அனுமனின் சிறிய சிலை. இதை ஒரு பெண் எனக்கு கொடுத்தார். இதை எப்போதும் நான் எடுத்துச் செல்வேன். நான் எப்போதெல்லாம் சோர்வாக உணர்கிறேனோ, தன்னம்பிக்கை குறைந்ததாக நினைக்கிறேனோ அப்போதெல்லாம் எனது பாக்கெட்டை பார்த்து என்னால் இந்த பிரச்சனையை சமாளித்து மீண்டு வர முடியும் என சொல்லிக் கொள்வேன். எல்லா நேரங்களிலும் இந்த பொருட்களை எடுத்துச் செல்வதால் நான் மூட நம்பிக்கை கொண்டதாக கூறிவிட முடியாது.

இவ்வாறு ஒபாமா தெரிவித்தார்.

ஒபாமா காண்பித்த பொருட்களுள் சிறிய புத்தர் சிலை, வெள்ளி பதக்கம் உள்ளிட்டவைகளும் இருந்தன. இந்த பேட்டி வெள்ளை மாளிகையின் இணையதளத்தில் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளன. பிபிசி செய்தி நிறுவனமும் “What does Obama keep in his pocket?” என்ற தலைப்பில் செய்தி வெளியிட்டுள்ளது.

அமெரிக்காவில் 30 லட்சத்திற்கும் அதிகமான இந்துக்கள் வாழ்ந்து வருவது குறிப்பிடத்தக்கது.

இணையத்தில் எப்எம், டிவி சேனல் தொடங்கிய இளையராஜா..!

‘அன்னக்கிளி’ படத்தில் தன் இசைப் பயணத்தை தொடங்கி மணிரத்னம் இயக்கிய ‘அஞ்சலி’ தன் 500வது படத்தை நிறைவு செய்தார் இளையராஜா. பொங்கல் தினத்தில் வெளியான ‘தாரை தப்பட்டை’ படம் இவருக்கு 1000மாவது படம் என்பது தாங்கள் அறிந்ததே.

இவர் 1000 படங்களுக்கு மேல் இசையமைத்திருந்தாலும் இவரின் பாடலுக்காக எந்தவொரு அதிகாரப்பூர்வ ரேடியோவோ அல்லது வீடியோ சேனல்களோ இதுவரை இருந்ததில்லை.

தற்போது இவரின் பெயரில் இணையத்தில் இரண்டையும் தொடங்கியுள்ளார். ராஜா எப்எம் ரேடியோ (http://www.raajafm.com/index.html), மற்றும் ராஜா டிவி (www.ilaiyaraaja.tv) என்ற இரண்டையும் தொடங்கி அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார்.

இதுகுறித்த வீடியோ பதிவில் அவர் கூறியதாவது… “இணையதள ரேடியோ மற்றும் டிவியில் எந்நேரமும் என் பாடல்களை நீங்கள் கேட்கலாம். மேலும் இந்த ONLINE STORE-ல் என் பாடல்களை வாங்கிக் கொள்ளலாம். பாடல்களை டவுன்லோடு செய்தோ அல்லது சி.டி.யாகவும் பெற்றுக் கொள்ளலாம். மேலும் இணையத்தில் உங்கள் கேள்விகளுக்கு பதிலளிப்பேன்” என்று தெரிவித்துள்ளார். 

தாரை தப்பட்டை - இளையராஜா இந்தப் படத்தின் நிஜ நாயகன்

மீண்டும் விளிம்பு நிலை மனிதர்களின் வாழ்க்கையை தன் பாணியில் காட்சிப்படுத்தியிருக்கிறார் இயக்குநர் பாலா.

இந்த முறை, கிராம மக்களின் முக்கிய பொழுதுபோக்கான கரகாட்டம், தப்படித்தலையும் அந்த கலைஞர்களின் வாழ்க்கையையும் படமாக்கியிருக்கிறார்.

தஞ்சையில் தீப்பாஞ்சி அம்மன் காலனியில் வசிக்கும் சன்னாசிக்கு (சசிகுமார்) தொழில் கரகாட்டம். அதை முடிந்த வரை கவுரமாகவே செய்து வருகிறான். அவரது குழுவில் இருக்கும் சூறாவளிக்கு (வரலட்சுமி) சன்னாசி மீது அப்படியொரு காதல். மாமா மாமா என சதா சன்னாசியைச் சுற்றி வரும் சூறாவளிக்கு, தன் மாமனை யாராவது தவறாகப் பேசிவிட்டால் வரும் கோபமிருக்கிறதே... அது நிஜ சூறாவளி.

ஆனால் சன்னாசி, உள்ளூர சூறாவளி மீதிருக்கும் அன்பை வெளியில் காட்டிக் கொள்ளாமல் தன் கரகாட்டக் குழுவினரைக் காப்பதையே கடமையாக நினைக்கிறான்.

ஒரு கட்டத்தில் கருப்பையா என்பவன் மூலம் அந்த காதலுக்கு பங்கம் நேர்கிறது. அவனை நம்பி, தன் மனதை கல்லாக்கிக் கொண்டு சூறாவளியை திருமணம் செய்து கொடுக்கிறான் சன்னாசி. ஆனால் அதன் பிறகு சூறாவளி என்ன ஆனால் என்றே தெரியாமல் போகிறது. சூறாவளி போனதால் சன்னாசியின் கரகாட்டக் குழுவும் தடுமாற ஆரம்பிக்கிறது. அவதாரம் பாணியில், குழுவிலிருக்கும் கலைஞர்கள் சிலரே வெளியேற ஆரம்பிக்கிறார்கள்.

சூறாவளி என்ன ஆனாள்? மீண்டும் கரகாட்டக் குழு வசந்த காலத்துக்குத் திரும்பியதா என்பதெல்லாம் திரையில் பார்க்க வேண்டியவை.

மிகவும் ஒடுக்கப்பட்ட மக்களின் பின்புலத்தை இன்றைய வணிக சினிமாவின் களமாக எடுத்துக் கொண்டு அதை வெகுஜன வெளிச்சத்துக்கு கொண்டுவரும் தன் நல்ல பிடிவாதத்தை இந்தப் படத்திலும் பாலா தளர்த்திக் கொள்ளவே இல்லை. அதுதான் பாலா.

சலசலத்து ஓடும் ஆறு... கரையில் அரசமரம், சில குட்டிச் சுவர்கள்... தாண்டிப் போனால் அந்த காலனி.... ஒவ்வொரு முறையும் நல்லது கெட்டதுகளைத் தாண்டி நிகழ்ச்சி முடித்து, அந்தக் கரகாட்டக் குழு அந்த அரசமரத்தையொட்டி நடந்து போகும் காட்சி சொல்லும் வலி, வேதனை... வார்தைக்களுக்கு அப்பாற்பட்டவை.

கரகாட்டக் கலைஞர்களின் இரட்டை அர்த்தப் பேச்சு, பாட்டு போன்றவற்றைச் சொன்னதில் முடிந்த வரை கண்ணியம் காத்திருக்கிறார் பாலா.

இசைஞானி இளையராஜா இந்தப் படத்தின் நிஜ நாயகன். சில காட்சிகளுக்கு முன்கூட்டியே இசையமைத்துக் கொடுத்து அதற்கேற்ப படமாக்க வைத்திருக்கிறார். இதெல்லாம் இந்த நூற்றாண்டின் அதிசயம். பாடல்கள் அத்தனையும் பொருத்தம். குறிப்பாக ஜிஎம் குமார் அந்த ஆஸ்திரேலியத் தூதருக்கு முன் பாடும் 'இடரினும்... ' செம கம்பீரம்... நெகிழ்வு. கரகாட்டப் பாடல்களில் இரண்டு ரீமிக்ஸ் போட்டிருக்கிறார் ராஜா. இரண்டுமே பாலாவின் ஆசை போலிருக்கிறது.

ஒவ்வொரு காட்சிக்கும் ராஜாவின் பின்னணி இசை புதிய அர்த்தத்தைத் தருகிறது. அந்தமானில் அவதிக்குள்ளாகும் கரகாட்டக் குழுவுக்கு, சுமை தூக்கும் வேலை கிடைக்கும்போது ஒரு பிஜிஎம் போட்டிருப்பார் பாருங்கள். க்ளைமாக்ஸ் ஸ்கோர்... அடேங்கப்பா!

சசிகுமார் மிகச் சரியாகவே செய்திருக்கிறார் என்றாலும், கடைசி வரை உம்மென்று, எப்போதும் வலியோடே திரிவது போன்ற பாவனையில் வருகிறார். அதை அவ்வளவாக ரசிக்க முடியவில்லை.

வரலட்சுமி பிரமிக்க வைக்கிறார். குடித்துவிட்டு அவர் உளறுவதும், அந்த அபார கரகாட்டமும் பிரமாதம். ஆனால் இடைவேளைக்குப் பிறகு ரொம்ப நேரத்துக்கு அவர் காணாமல் போகிறார். படத்தின் சுவாரஸ்யமும் அங்குதான் காணாமல் போகிறது.

கோபக்கார, ஆனால் நிகரற்ற இசைக் கலைஞராக வரும் ஜிஎம் குமார், அந்த கரகாட்டக் கோஷ்டியில் உள்ள கலைஞர்கள், வில்லன் சுரேஷ் களஞ்சியம் என அனைவருமே உணர்ந்து நடித்துள்ளனர்.

நம்முடைய கேள்வி... இதே ஒடுக்கப்பட்ட மக்கள் கலைஞர்களின் வாழ்க்கை இன்னும் அழுத்தமாக, இதுவரை திரையில் பார்த்திராத வகையில் பதிவு செய்யாமல், படம் முழுவதையும் தனக்கென உருவாக்கிக் கொண்ட டெம்ப்ளேட்டை விட்டு விலகாமல் செய்திருப்பது ஏன்?

இந்தக் கதைக்கு கரகாட்டமே தேவையில்லை. கரகாட்டம்தான் பின்னணி என்றால் இன்னும் சுவாரஸ்யமாகத் தந்திருக்கலாமே பாலா... எதற்காக இத்தனை வன்முறை, அகோர காட்சிகள்? பார்ப்பவர்களுக்கு மனச்சோர்வைத் தரும் இந்த பாணியிலிருந்து பாலா எப்போது வெளியே வரப் போகிறார்?

ரஜினிமுருகன் விமர்சனம்- எங்க அப்பத்தாவை அவர் வச்சிருந்தார்..

கொஞ்சம் ஆக்ஷன், ஏகத்துக்கும் நகைச்சுவை, முக்கிய வில்லனே காமெடியனாக மாறுவது, துருப்புச் சீட்டு மாதிரி ஒரு சீனியர் நடிகர்... இதுதான் வருத்தப்படாத வாலிபர் சங்கத்தைத் தந்த இயக்குநர் பொன்ராமுக்கு பிடிபட்டுவிட்ட வெற்றி ஃபார்முலா!

இந்த ஃபார்முலாவை வைத்து மீண்டும் ஒரு வெற்றிப் படத்தைத் தந்திருக்கிறார்.

படத்தின் தலைப்பே இது எந்த மாதிரி படம் என்பதைச் சொல்லிவிடுகிறது. எதிர்ப்பார்ப்போடு போகும் யாரையும் ஏமாற்றாத கலகல திரைக்கதை, படம் கொஞ்சம் நீளமாக இருந்தாலும் உட்கார வைத்து விடுகிறது.

வழக்கம் போல மதுரைதான் கதைக் களம். ஆனாலும்... மதுரையில்தான் எத்தனை விதமான சுவாரஸ்யங்கள்!

அப்படி ஒரு சுவாரஸ்ய கேரக்டர் ரஜினி முருகன். வேலை இல்லை. நினைத்தால் எந்த வேலையும் செய்யக் கூடிய ரஜினி முருகனுக்கு, கீர்த்தி சுரேஷ் மீது இன்று நேற்றல்ல... சின்ன வயசிலிருந்தே காதல். காரணம் இருவரின் அப்பாக்களும் அத்தனை நெருங்கிய சிநேகிதர்கள். அந்த சிநேகம் தந்த உரிமையில் 'உம் மகனுக்குத்தான்டா எம் பொண்ணு' என்று வாக்கு தந்து விடுகிறார் கீர்த்தியின் அப்பா.

ஆனால் கால மாற்றத்தில் நட்பில் விரிசல் விழ, மகளுக்கு ரஜினி முருகனைப் பிடித்தாலும், அப்பாவுக்குப் பிடிக்காமல் போகிறது. இந்த சூழலில் ரஜினி முருகன் வீட்டு விவகாரத்தில் மூக்கை நுழைக்கிறார் ஏழரை மூக்கனாக வரும் சமுத்திரக் கனி.

'ரஜினி முருகனின் தாத்தா ராஜ்கிரணுக்கு தானும் ஒரு பேரன்தான்... எங்க அப்பத்தாவை அவர் வச்சிருந்தார்.. எனவே சொத்தில் பங்கு வேண்டும்' என்று குண்டைத் தூக்கிப் போடுகிறார்.

இந்த குண்டு வீச்சிலிருந்து ரஜினி முருகன் தன் குடும்பத்தைக் காத்தானா... மனசுக்குப் பிடித்த கீர்த்தியை மணம் முடித்தாரா என்பது கொஞ்சம் எதிர்ப்பார்த்த, கொஞ்சம் எதிர்ப்பார்க்காத திருப்பங்களுடன் கூடிய க்ளைமாக்ஸ்.

பொங்கல் எத்தனை கலகலப்பான பண்டிகை. அந்த கலகலப்பை இன்னும் கொஞ்சம் அதிகப்படுத்துவது மாதிரியான குதூகலமான திரைக்கதை அமைத்திருக்கிறார் இயக்குநர் பொன்ராம்.

சிவகார்த்திகேயனுக்கு நடிப்புக்கு சவால் விடுவது மாதிரியான வேடமெல்லாம் இல்லை. அதே வவச -வின் நீட்சிதான் இந்த ரஜினி முருகன். பிடித்த, பழகிய வேலை என்பதால் புகுந்து விளையாடியிருக்கிறார் சிவா.

அவருக்கு துணையாக வரும் சூரிக்கு வழக்கமான நண்பன் பாத்திரம்தான். சில இடங்களில் ஹீரோவையே டாமினேட் செய்கிறார்.

கீர்த்தியின் அழகும் இயல்பான நடிப்பும் பையன்கள் தூக்கத்தை இன்னும் பல நாட்களுக்கு பதம் பார்க்கும்.

சமுத்திக்கனி... காமெடி வில்லன். ராஜ்கிரண் வழக்கம்போல கம்பீர தாத்தா. அந்த சாவு வீட்டு காட்சியில் சுவாரஸ்யம்.

கீர்த்தியின் அப்பாவாக வரும் ரஜினி ரசிகர் அசத்துகிறார். அதுவும் அண்ணாமலை பட காட்சியை டிவியில் ஓடவிட்டு, மகளுக்கு அட்வைஸ் பண்ணும் காட்சி.. அருமை.

திரை முழுக்க ஏகப்பட்ட நட்சத்திரங்கள். ஆனால் அந்த இரண்டு பஞ்சாயத்து காட்சிகளும் வெகு யதார்த்தம். குறிப்பாக செல்லம்பட்டி பஞ்சாயத்து காட்சி.

இமானின் இசையில் பாடல்கள் ஏற்கெனவே பிரபலம் என்றாலும், இரண்டாம் பாதியில் இரு பாடல்களை தயவு தாட்சண்யம் பார்க்காமல் தூக்கியிருந்தால் இன்னும் விறுவிறுப்பாக இருந்திருக்கும்.

சில பழகிய காட்சிகள், பழகிய திரைக்கதைதான் என்றாலும்... கொண்டாட்ட மனநிலையுடன் கொட்டகைக்கு வரும் ரசிகர்களை ஏமாற்றவில்லை ரஜினி முருகன்!

ஜல்லிக்கட்டு தடையால் 'விருமாண்டி' படத்தின் காளைக்கு நேர்ந்த கதி!

நடிகர் கமலஹாசன் நடித்த 'விருமாண்டி' திரைப்படத்தில் காட்டப்படும் காளை, தற்போது கோவை மாவட்டம் வெள்ளிங்கிரி கோசாலையில் பராமரிக்கப்பட்டு வருவதாகச் செய்திகள் வெளியாகியுள்ளன. தமிழகத்தில் கடந்த ஆண்டு ஜல்லிக்கட்டுக்குத் தடை விதிக்கப்பட்டதை அடுத்து, நூற்றுக்கணக்கான ஜல்லிக்கட்டுக் காளைகள் அடிமாட்டு விலைக்கு விற்கப்பட்டு, இறைச்சிக்காக கேரளாவுக்கு கொண்டு செல்லப்பட்டன.

ஜல்லிக்கட்டு காளைகளை வளர்த்து வந்த உரிமையாளர்கள் ஏராளமானோர், ஜல்லிக்கட்டுக்குத் தடை விதிக்கப்பட்டதையடுத்து, காளைகளை இறைச்சிக்காக விற்பதை தவிர வேறு வழியில்லை என்று கூறுவதாக அதிர்ச்சித் தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்நிலையில் கடந்த ஆண்டு, நடிகர் கமலஹாசன் நடித்த விருமாண்டி திரைப்படத்தில் தோன்றிய முரட்டுக் காளை, கேரளாவுக்கு அதன் உரிமையாளரால் விற்கப்பட்டது.

இதனை அறிந்த வெள்ளிங்கிரி கோசாலை நிர்வாகம், விருமாண்டி காளை உள்ளிட்ட நூற்றுக்கும் மேற்பட்ட ஜல்லிக்கட்டுக் காளைகளை மீட்டு பராமரித்து வருகிறது. இந்தக் காளைகள் அனைத்தையும் வரும் பொங்கலையொட்டி பொதுமக்கள் பார்வையிடலாம் என்று கோசாலை நிர்வாகம் தெரிவித்துள்ளது. இந்த கோசாலையில் 1400 மாடுகள் பராமரிக்கப்பட்டு வருகின்றன. இவற்றில் 206 மாடுகள் ஜல்லிக்கட்டில் இடம்பெற்ற மாடுகள் ஆகும் என்பது கவனிக்கதக்கது.

சிவகார்த்திகேயன் மீது லட்சுமி ராமகிருஷ்ணன் காட்டம்

'என்னம்மா இப்படி பண்றீங்களேம்மா' பாடலை வணிக ரீதிக்காக உபயோகப்படுத்தி விட்டு அதற்கு காரணம் என என்னைக் கலாய்த்தவர்களுக்கு கிரெடிட் தருது என்பது எந்த விதத்தில் நியாயம்? என்று நடிகர் சிவகார்த்திகேயனுக்கு இயக்குநர் லட்சுமி ராமகிருஷ்ணன் காட்டமாக கேள்வி எழுப்பியுள்ளார்.

பொன்ராம் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடிப்பில் வெளியாகி ஓடிக்கொண்டிருக்கும் 'ரஜினி முருகன்' படத்தில் 'என்னம்மா இப்படி பண்றீங்களேம்மா' பாடல் மிகவும் பிரபலம் அடைந்துள்ளது. இதனிடையே, படத்தை விளம்பரப்படுத்தும் விதமாக தனியார் தொலைக்காட்சி நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்ட சிவகார்த்திகேயனிடம், 'என்னம்மா' பாடல் குறித்து கேள்வி எழுப்பப்பட்டப் போது "அப்பாடல் 'என்னம்மா இப்படி பண்றீங்களேம்மா’ என்று கலாய்க்கப்பட்ட நிகழ்ச்சியில் இருந்து எடுக்கப்பட்டது" என்று பதிலளித்துள்ளார்.

இந்நிலையில், சிவகார்த்திகேயனின் இந்த பதிலுக்கு லட்சுமி ராமகிருஷ்ணன் தனது ட்விட்டர் பக்கத்தில், 'என்னம்மா பாடல்' கலாய்ப்பு நிகழ்ச்சியில் இருந்து எடுக்கப்பட்டது என்றும், உண்மையான வசனத்துக்கு சம்பந்தமில்லை என்றும் சிவகார்த்திகேயன் விளக்கம் அளித்துள்ளார். அப்படி என்றால் கலாய்ப்பு நிகழ்ச்சி ஒரு சிறந்த நிகழ்ச்சியா? சிவகார்த்திகேயனின் கலாய்ப்பு எல்லை மீறி போய்விட்டது. இதனால் நான் மிகவும் பாதிக்கப்பட்டு இருக்கிறேன்.

வணிக ரீதிக்காக உபயோகப்படுத்தி விட்டு அதற்கு காரணம் என என்னைக் கலாய்த்தவர்களுக்கு கிரெடிட் தருவது என்பது எந்த விதத்தில் நியாயம்? 'என்னம்மா' பாடலுக்கு நான் தான் காரணம் என்று சொன்னால் நான் பணம் கேட்டு விடுவேனா?. கவலை வேண்டாம் சிவகார்த்திகேயன், இதை விட எனக்கு உருப்படியான நிறைய வேலைகள் இருக்கிறது" என்று காட்டமாக கூறியுள்ளார்.