Friday 26 February 2016

சித்தி ராதிகாவின் அடுத்த பாய்ச்சல்! ஷார்ட் பிலிம் டைரக்டர்களுக்கு யோகம்!!

‘ராதிகா கைய வச்சா அது ராங்கா போனதில்லே’ என்பதற்கு பெரிய உதாரணம் அவரது ராடன் டி.வி நிறுவனம்தான். வீட்டுக்கு வீடு கேபிள் வழியாக நுழைந்து கொள்ளை கொள்ளையாக மனசுகளை சம்பாதித்து வைத்திருக்கும் வெள்ளந்தி சிரிப்பழகி ராதிகாவை, இப்போதும் ‘சித்தி’ என்று கொண்டாடுகின்றன கிராமங்கள்! சின்னத்திரை, வெள்ளித்திரை என்று ரவுண்டு கட்டி சாதித்து வரும் ராதிகாவின் அடுத்த ஸ்டெப்…. குறும்பட ஏரியா!

உலகம் முழுக்க இளைஞர்களுக்காக ஒரு ஷார்ட் பிலிம் போட்டியை வைத்திருந்தது அவரது ராடன் டி.வி நிறுவனம். நூற்றுக்கணக்கான இளைஞர்கள் கலந்து கொண்ட அந்த போட்டியிலிருந்து ஆறு பேர் மட்டும் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்கள். இவர்களுக்கு தனது நிறுவனத்தின் சார்பில் டெலி பிலிம் இயக்குகிற வாய்ப்பை வழங்கவிருக்கிறார் ராதிகா. அது மட்டுமல்ல, எதிர்காலத்தில் அவர்களுக்கு சினிமா எடுக்கிற வாய்ப்பும் வழங்கப்படுமாம்.

சரி… இந்த ஷார்ட் பிலிம்களை நாம் எங்கே பார்ப்பது? வேறெங்கே… ராதிகாவின் ஆட்டக்களமான சின்னத்திரையில்தான். இந்த குறும்படங்களை தொகுத்து தொலைக்காட்சியில் ஒளிபரப்பும் திட்டம் வைத்திருக்கிறாராம்.

‘கடை விரித்தேன், கொள்வாரில்லை’ என்கிற விரக்தி பேச்சுக்கெல்லாம் இனி வேலையில்லை. திறமையை கொண்டாட ராதிகாவின் ராடன் டி.வி இருக்கிறது. போங்க போங்க… அதே திசைக்கே போங்க!

முக்கிய குறிப்பு- இந்த சிறப்பான பணியில் அம்மாவோடு இணைந்து செயலாற்றப் போவது ராதிகாவின் செல்ல மகள் ரயானாவும்தான்!

நையப்புடை - திரைவிமர்சனம்

ல வெற்றி படங்கள் மட்டுமில்லாமல் தமிழ் சினிமாவிற்கு இளைய தளபதி எனும் வெற்றி நாயகனையும் கொடுத்த பிரபல இயக்குனர் எஸ்.ஏ.சந்திரசேகரரும், பிரபல பாடலாசிரியராக இருந்து கதாநாயகனாக அவதாரம் எடுத்த பா.விஜய் அவர்களும் இணைந்து நைய்யப்புடைக்க களமிறங்கியிருக்கிறார்கள்.
கதை

தனது 70 வயதினிலும் அநியாயத்தை தட்டிக்கேட்கும் துணிச்சல் மிகுந்த, ஒய்வு பெற்ற ராணுவ அதிகாரியான எஸ்.ஏ.சி அவர்கள் ஒரு நாள் பேருந்தில் பயணிக்கும் பொழுது கலாட்டா செய்யும் லோக்கல் ரவுடிகளை துவம்சம் செய்ய அதை ஒரு மாணவி வீடியோ எடுத்து சமூக வலைத்தளங்களில் பதிவேற்றம் செய்ய மிக பிரபலமாகிறார் எஸ்.ஏ.சி. அதனால் பத்திரிக்கையாளரான பா. விஜய்யுடன் அறிமுக ஏற்பட பின் இருவரும் சேர்ந்து பல சமூக பிரச்சனை எதிர்க்கொண்டு எதிரிகளை எவ்வாறு நைய்யப்புடைக்கிறார்கள் என்பதே படத்தின் மீதிக்கதை.
படத்தை பற்றிய அலசல்

70 வயதை தாண்டினாலும் இப்போது நடிக்க வந்த நடிகனைப்போல் ஆர்வம் காட்டி, சண்டை காட்சிகளில் கூட நடித்துள்ளார் எஸ்.ஏ.சந்திரசேகர் அதற்காகவே அவரை பாராட்டிதான் ஆகவேண்டும், Captain, இளைய தளபதியை எல்லாம் நடிக்க வைத்தவருக்கு நடிப்பு வராமலாயிருக்கும். ஆனால் அடுத்தவர்களுக்கு பிரச்சனை எனும் போது ஆவேசம் காட்டும் இவர் தனக்கு வரும் சில பிரச்சனைகளில் பேக் அடிப்பது என்ன லாஜிக் என இயக்குனர் தான் சொல்ல வேண்டும். பா.விஜய் அவருக்கு என இருக்கும் களத்தை அவர் இன்னும் சரியாக பயன்படுத்தியிருக்களாம். சாந்தினி காதல் காட்சிகளில் மட்டும் தலையை காட்டி செல்கிறார். படத்தின் வில்லன்களாக வரும் எம். எஸ். பாஸ்கரும் நான் கடவுள் ராஜேந்திரனும் வில்லத்தனம் காமெடியென பட்டைய கிளப்புகிறார்கள் குறிப்பாக எம் எஸ் பாஸ்கர் தனது கைத்தேர்ந்த நடிப்பை வெளிக்காட்டியுள்ளார். விஜி சந்திரசேகர் தன் மகன் உயிர் இழக்கும் வேளையில் மிக எதார்த்தமான நடிப்பை வெளிப்படுத்தியுள்ளார், அவரின் மகன் முத்துபாண்டியாக வரும் மாஸ்டர் ஜாக்சன் கவனம் ஈர்க்கிறார்.

படத்தின் இசை தாஜ் நூர், க்ளைமேக்ஸில் வரும் குத்துப்பாடல் ரசிக்கவைக்கிறது, பின்னணியில் புதிதாக எதுவும் இல்லையென்றாலும் பெரிதாக குறை சொல்லி விட முடியாது. படத்தின் கதைக்கான நோக்கம் சரியாக இருக்கலாம். ஆனால் அதை ரசிகர்களிடம் சரியாக கொண்டு சேர்ப்பதில்தான் தான் அப்படத்தின் வெற்றி இருக்கிறது. திரைக்கதையின் சுவாரஸ்யம் இன்னும் கொஞ்சம் இருந்திருக்கலாமே என்று முணுமுணுக்க வைக்கிறது. படத்தில் சில இடங்களில் எதிர்பார்ப்பை ஏற்படுத்தினாலும் அதற்கு பிறகு வரும் காட்சிகள் சற்று தொய்வை ஏற்படுத்துகிறது. படம் சோஸியல் த்ரில்லராக இருந்தாலும் நகைச்சுவை நன்றாக வந்துள்ளது.

கதையை கையாண்ட விதத்தில் புதியதாக எதும் இல்லாமல் போனது ஒரு குறையே. லாஜிக் மீறல்களும், ஏதார்த்தமின்மையும், நாடகத்தனமும் சற்று அதிகமாக உள்ளது. தற்போது வரும் படங்களில் ‘தல’ பற்றிய புகழாரங்கள் அதிகமாக வருவதால் அதை ‘ஹெவி தளபதி’ ரெஃபெரன்ஸ் வைத்து ஒரேடியாக ஈடுகட்ட முயற்சித்துள்ளார் எஸ்.ஏ.சி. இதையெல்லாம் தாண்டி எஸ்.ஏ.சி.யின் முயற்சிக்காக, எம்.எஸ்.பாஸ்கரின் நடிப்பிற்காக, படத்தில் ரசிக்க வைக்கும் இடங்களுக்காக, 19 வயதில் படத்தை இயக்கிய விஜய் கிரணுக்காக இக்குழுவை பாராட்டலாம்.
க்ளாப்ஸ்

போராட்ட குணத்தை முதுமை அழித்துவிட முடியாது, நல்லது செய்ய வயது ஒரு தடை இல்லை எனும் எஸ்.ஏ.சி முயற்சி, எம் எஸ் பாஸ்கர் ராஜேந்திரனின் நகைச்சுவை கலந்த வில்லத்தனமான நடிப்பு.
பல்ப்ஸ்

படத்தை கையாண்ட விதம், திரைக்கதையில் சுவாரஸ்யம் இல்லாமல் போனது. லாஜிக் மீறல்களும், எதார்த்தமின்மையும், நாடகத்தனமும் சற்று அதிகமாக உள்ளது. இதனாலேயே படத்துடன் ரசிகர்களால் ஒன்றமுடியாமல் போகிறது. 

ஆறாது சினம் - திரைவிமர்சனம்

ஒரு சில நடிகர்கள், இயக்குனர்கள் படங்கள் என்றால் எந்த ஒரு கேள்வியும் கேட்காமல் திரையரங்கிற்கு சென்றுவிடுவோம். அப்படி ஒரு நடிகர் தான் அருள்நிதி, இயக்குனர் அறிவழகன்.

தொடர்ந்து மௌனகுரு, டிமாண்டி காலனி என தரமான படங்களில் நடித்து வரும் அருள்நிதி, ஈரம், வல்லினம் என தரமான படங்களை இயக்கிய அறிவழகன் இருவரின் கூட்டணியில் உருவாகியுள்ள படம் தான் ஆறாது சினம்.
கதைக்களம்

மலையாளத்தில் க்ரைம் கதைகளுக்கு பேர் போனவர் ஜீத்து ஜோசப், இன்னும் நம் மக்களுக்கு தெரியும் படி சொல்லவேண்டும் என்றால் கமல்ஹாசன் நடித்த பாபநாசம் படத்தை இயக்கியவர். இவர் இயக்கத்தில் பிரித்விராஜ் நடிப்பில் வெளிவந்த மெமரீஸ் படத்தின் ரீமேக் தான் இந்த ஆறாது சினம்.

படத்தின் ஆரம்பத்திலேயே அருள்நிதி மிரட்டல் என்கவுண்டருடன் அறிமுகமாகிறார். ஆனால், ஒரு சில காரணங்களால் அந்த என்கவுண்டர் ட்ராப் ஆக, வில்லனால் அவர் குடும்பத்தை இழக்கின்றார். இதன் பிறகு வாழ்க்கையே ஏதோ கடமைக்கு வாழ்வது போல், வெறும் குடியுடன் மட்டும் தான் அருள்நிதி வாழ்கின்றார்.

இத்தருணத்தில் இவர் வாழ்க்கையில் மீண்டும் ஒரு கடமை வர, அரை மனதுடன் அந்த வழக்கை விசாரிக்க சம்மதிக்கின்றார். தொடர்ந்து தேனி, சிவகங்கை பகுதிகளில் ஒரு சிலர் இறக்க, யார் இந்த கொலை செய்கிறார்கள் என அருள்நிதி தேடுகிறார்.

ஒரு கட்டத்தில் இந்த கொலைகள் தொடர்ந்து நடக்க, அவர் ஒரு சீரியல் கில்லர் என தெரிய வருகின்றது. அரை மனதுடன் உள்ளே வரும் அருள்நிதிக்கு விஷயம் அறிந்து சீரியஸ் ஆகின்றார். சின்ன சின்ன தடயங்களாக தேடி கிளைமேக்ஸில் வில்லனை நெருங்கும் தருணத்தில் அருள்நிதிக்கு ஒரு செக் வர, யார் அந்த கொலைகளை செய்பவர்? எதற்காக இப்படியெல்லாம் செய்கிறார்? என்பதை கடைசி வரை ரசிகர்களை நகம் கடிக்க வைத்துள்ளார் இயக்குனர் அறிவழகன்.
படத்தை பற்றிய அலசல்

6 அடி உயரம் போலிஸிற்கு உண்டான அத்தனை கம்பீரமும் இருக்க, படம் முழுவதும் போதை, அழுக்கு சட்டை என்றே அருள்நிதி உலா வருகின்றார். இவர் படம் என்றாலே இனி நம்பி போகலாம் என சொல்லும் அளவிற்கு மீண்டும் நிரூபித்து விட்டார். எப்போதும் போதையில் இருந்தாலும், தன் விசாரணையில் எந்த ஒரு இடத்திலும் கோட்டை விடாமல் கவனமாகவிருக்கின்றார். அதிலும், வில்லன் தொடர் கொலைகளை வைத்தே, இவர் இதன் தாக்கத்தால் தான் இந்த மாதிரி கொலை செய்கிறான் என்று கண்டுப்பிடிக்கும் இடமெல்லாம் சபாஷ்.

அருள்நிதியை தவிர வேறு யாருக்கும் பெரிதாக நடிக்கும் ஸ்கோப் இல்லை என்று தான் சொல்ல வேண்டும். ஏனெனில் படத்தின் மொத்த பலமும் திரைக்கதை தான், அதில் பலரும் வந்து போகிறார்கள், ஆனால், அருள்நிதியே தாங்கி செல்கின்றார். உயர் அதிகாரியாக வரும் ராதாரவி, உதவியாளராக வரும் சார்லி என இருவரும் அனுபவ நடிப்பை அள்ளி வீசுகின்றனர்.

ரோபோ ஷங்கர் காமெடி வேண்டும் என்பதற்காக திணித்தது போல் உள்ளது. 10 வசனம் பேசினால் 2 வசனம் மட்டுமே சிரிப்பு வருகின்றது. சேஸிங் சீனில் சிலர் குத்துப்பாட்டு வைப்பது போல், அறிவழகன் இதில் காமெடி காட்சிகளை வைத்துவிட்டார்.

படத்தின் மற்றொரு ஹீரோ கண்டிப்பாக தமனின் பின்னணி இசை தான், ஈரம் சாயல் தெரிந்தாலும், பல காட்சிகளில் தன் இசையால் ரசிகர்களை நிமிர்ந்து உட்கார வைக்கின்றார். அதிலும், கிளைமேக்ஸில் வில்லன் பற்றிய தொகுப்புகளை அருள்நிதி விவரிக்கும் இடத்தில் பின்னணி இசை நம்மையும் படத்திற்குள் அழைத்து செல்கின்றது.

இந்த மாதிரியான க்ரைம் திரில்லர் கதைகளுக்கே மிக முக்கியத்துவம், வில்லனின் முகத்தை காட்டாமல், ஹீரோ வீட்டில் வேலைப்பார்க்கும் வேலைக்காரன் வரை சந்தேக கண்ணோடு நம்மை பார்க்க வைப்பது தான். ஆனால், கடைசியில் அட இவர் தான் இந்த கொலையை செய்தாரா? என நமக்கே தோன்றி விடும். இதில் யார் மீதும் சந்தேகம் எழவில்லை, இருந்தாலும் படத்தின் சுவாரசியம் எங்கும் குறையவில்லை.
க்ளாப்ஸ்

அருள்நிதியின் யதார்த்தமான நடிப்பு, தனக்கு என்ன வரும் என்பதை மிக தெளிவாக தெரிந்து வைத்துள்ளார்.

அருள்நிதிக்கும் வில்லனுக்கும் எந்த ஒரு தொடர்பும் இல்லையென்றாலும், அதை கிளைமேக்ஸில் தொடர்புபடுத்தி அவரின் வேகத்தை அதிகப்படுத்திய காட்சிகள்.

தமனின் பின்னணி இசை, அரவிந்த் சிங்கின் ஒளிப்பதிவு, ஒரு க்ரைம் த்ரில்லருக்கு என்ன தேவையோ அதை அழுத்தமாக செய்திருக்கிறார்.

அருள்நிதி வில்லன் குறித்து சேகரிக்கும் ஆதாரம் அதை வைத்து கண்டுப்பிடிப்பது ரசிகர்களை சீட்டின் நுனிக்கு வரவைக்கும். மேலும், படம் முழுவதும் அருள்நிதி குடித்துக்கொண்டே இருந்தாலும், அந்த குடியால் அவர் வில்லனை தவறவிட்டு, அந்த குடியை விடும் காட்சிகள் கிளாஸ்.
பல்ப்ஸ்

என்ன தான் கதாபாத்திரம் குடும்பத்தை இழந்து நின்றாலும், அருள்நிதி சட்டைகூட மாற்றாமல் சுற்றுவது கொஞ்சம் ஓவர்.

ரோபோ ஷங்கர் காமெடி காட்சிகள் எங்கும் எடுபடவில்லை, தேவையில்லாத திணிப்பாகவே தெரிந்தது. முதல் பாதி கொஞ்சம் மெதுவாக நகரும் காட்சியமைப்புகள்.

மொத்தத்தில் ஆறாது சினம் அறிவழகன், அருள்நிதியை மட்டுமின்றி ரசிகர்களையும் பதட்டத்துடன் பயணிக்க வைத்து அதில் வெற்றியும் பெற்று விட்டார்.

கணிதன் -விமர்சனம்- லாஜிக்கை மறந்து மேஜிக்கை ரசிக்கும் ரசிகர்களுக்கான ஆக்‌ஷன் த்ரில்லர் விருந்து.

 முரளியின் மகன் என்பதை தாண்டி தனக்கென ஒரு இடம் பிடித்துவிட்டார் ஆதர்வா. பாலாவின் பட்டறையில் பதம்பார்க்கப்பட்டு ஈட்டியென தனக்கான இலக்கை நோக்கி பாயும் இவரின் 'கணித' அவதாரம் படம் வெளிவருவதற்உ முன்பே ரசிகர்களின் எதிர்பார்ப்பை தூண்டியது. ஒரு முழுநீள social thriller ஆக வந்திருக்கும் கணிதன் பற்றிய விமர்சனம் இதோ.
கதை:

நாம் இப்பொது என்னவாக இருக்கிறோம் என்பதை நாம் படித்த படிப்பே நிர்ணயிக்கிறது. ஆனால் அந்த படிப்பே இல்லையென்றால் நம் வாழ்க்கையே இல்லை என யோசிக்கும் போது எப்படியிருக்கும். அப்படி ஒரு அதிர்ச்சியுட்டும் கதைக்களம் தான் இந்த கணிதன்.

ஒரு சின்ன பிரபலமடையாத தொலைக்காட்சியில் ரிப்போர்ட்டராக பணிபுரியும் அதர்வாவிற்கு ஒரு மிக பெரிய பிரபலமான தொலைக்காட்சி ஒன்றில் எப்படியாவது ரிப்போர்ட்டர் ஆக வேண்டும் என்பதே லட்சசியம் இதனிடையில் இவர் பணிபுரியும் அந்த தொலைக்காட்சியின் CEOவின் மகள் கேத்ரின் மீது காதல்.

பின் தனது லட்சிய தொலைக்காட்சி பணியாற்ற வாய்ப்பு கிடைக்கிறது. ஆனால் அவரின் கனவை சுக்கு நூறாக உடைக்கிறது இவரின் மேல் போடப்படும் வங்கி மோசடி வழக்கு. கல்வி கடன் வாங்கி வங்கிகளை ஏமாற்றிய குற்றத்திற்காக ஆதர்வா மாட்டுமல்லாம் இவருடன்சேர்த்து 5 பேரை கைது செய்கிறது காவல்துறை.

ஆனால் இந்த குற்றத்திற்குகாரணம் போலி சான்றிதழ்கள் வழங்கிய ஒரு கும்பல்தான். தன் வாழ்க்கையே இல்லை என்றாக்கிய இந்த கும்பலை எப்படி கணித்து பலி வாங்குகிறான் கணிதன், என்பதே படத்தின் மீதிக்கதை.
படத்தை பற்றிய அலசல்:

அதர்வா, துடிப்பான ரிப்போர்ட்டர் கத்தாப்பத்திரத்தில் நச் என பொருந்தி , காதலில் குலைவதில் இருந்து எதிரிகளை கால்பந்தாடுவது வரை அனைத்திலும் வெரி குட் வாங்குகிறார். குறிப்பாக சண்டை காட்சிகளில்ரசிகர்களின் ஒட்டுமொத்த கைத்தட்டல்களியும் அள்ளிக்கொண்டு போகிறார்.

கேத்திரின்க்கு வழக்கமான அதே தமிழ் நாயகி பாத்திரம் தான் இருந்தாலும் இவரின் க்யூட் நடிப்பை ரசிக்காமல் இருக்க முடியாது. கருனாகரன் & சுந்தர் ராமுவின் காமெடிக்கு அவ்வளவு வேலை இல்லை என்றாலும் மனதில் நிற்கும் ஒரு கதாப்பத்திரம் இவர்களுக்கு. தருன் அரோரா வில்லன் கதாப்பாத்திரத்தில் பக்காவாக பொருந்தி பவுண்டரிகள் விலாசுகிறார். பாக்கியராஜ் கௌரவ வேடத்தில் தோன்றி கவனம் ஈர்கிறார்.

படத்தின் ஒட்டுமொத்த பலமே படத்தின் வேகம்தான் குறிப்பாக மசாலா படங்களுக்கு தேவையான இடைவேளை, ப்ரீ கிளைமேக்ஸ் மற்றும் கிளைமேக்ஸ் காட்சிகள் பாராட்டதக்கவை.. படத்தின் வில்லனுக்கும் ஹீரோவுக்குமான ஆடுபுலி ஆட்டம் போன்ற அப்லாஸ் அள்ளும் காட்சிகளுக்காக இயக்குனர் T N சந்தோஷ் அவர்களை பாராட்டலாம்.

ஆனால் படத்தின் மைய பிரச்சனையில் இருந்து விலகிய படத்தின் முடிவு அதிர்ச்சிதான் அளிக்கிறது. அதேபோல் யோசிக்காமலேயே கவனத்தில் படும் லாஜிக் மீறல்கள் கண்னை உருத்திறது.

அதேப்போல் பல பார்த்து பழகிய க்ளீஷே காட்சிகள் தேவைதான என படக்குழு யோசிக்க வேண்டும். ட்ரம்ஸ் சிவமணியின் பிண்ணனி பலம் என்றால் சில பாடல்கள் படத்தின் வேகத்தடையே. அர்விந்த் கிருஷ்னாவின் ஒளிப்பதிவை கண்னை மூடிக்கொண்டு கூட ரசிக்களாம்.
க்ளேப்ஸ்:

விறுவிறுப்பான திரைக்கதை, அனைத்து நடிகர்களின் பங்களிப்பு, சீட்டின் நுனிக்கு ரசிகர்களை அழைத்து செல்லும் பல காட்சிகள்.
பல்ப்ஸ்:

எளிதாக கண்டறியும் லாஜிக் மீறல்கள், பார்த்து பழகிய க்ளீஷே காட்சிகள், பாடல்கள் இடம் பெற்ற விதம்.

மொத்ததில் இந்தகணிதன் லாஜிக்கை மறந்து மேஜிக்கை ரசிக்கும் ரசிகர்களுக்கான ஆக்‌ஷன் த்ரில்லர் விருந்து. 

அரசியலுக்கு வருகிறாரா பிரபு?

நடிகர் திலகம் சிவாஜி கணேசனின் வாரிசான பிரபு, தன்னுடைய அரசியல் பிரவேசம் பற்றி தெரிவித்துள்ளார்.

தமிழக செய்தித்துறை விளம்பரங்களில் நடித்ததால், அதிமுகவில் சேருவார் என சிலர் கூறிவந்த நிலையில் "இப்போதைக்கு எந்த கட்சியிலும் சேரும் எண்ணம் இல்லை. எனது தந்தையின் அரசியல் வாழ்க்கையை பார்த்த பின் அரசியலில் ஆர்வம் இல்லாமல் போய்விட்டது" என கூறினார்.

அரசியலுக்கு வரும் பட்சத்தில் அதை வெளிப்படையாக அறிவிப்பேன் எனவும் தெரிவித்துள்ளார்.