Sunday 21 February 2016

இளையராஜாவுக்காக வரும் ரஜினிகாந்த்!

ரஜினி, கமல் நடித்த பெரும்பாலான படங்களுக்கு இசையமைத்தவர் இளையராஜாதான். ஆனால் ஒருகட்டத்தில் அவர்கள் ஏ.ஆர்.ரகுமான் உள்ளிட்ட மற்ற இளவட்ட இசையமைப்பாளர்கள் பக்கம் திரும்பி விட்டனர்.

என்றாலும், ஆயிரம் படங்கள் வரை இசையமைத்து இப்போதுவரை பிசியாகவே இசையமைத்துக் கொண்டிருக்கிறார் இளையராஜா. இந்நிலையில், சமீபத்தில் இளையராஜா இசையமைத்துள்ள முத்துராமலிங்கம் படத்தில் ஒரு பாடலை பாடினார் கமல்.

அதோடு, ராஜீவ்குமார் இயக்கத்தில் கமல் நடிக்கும் அம்மா அப்பா விளையாட்டு படத்துக்கு இளைய ராஜாதான் இசையமைப்பதாக கூறப்படுகிறது.அதேசமயம், தற்போது ரஜினி நடித்து வரும் 2.ஓ படத்துக்கு ஏ.ஆர்.ரகுமான் இசையமைக்க, கபாலிக்கு சந்தோஷ்நாராயணன் இசையமைத்து வருகிறார்.

அதனால் ரஜினி படங்களுக்கு மீண்டும் இளையராஜா இசையமைப்பாரா? மாட்டாரா? என்பது தெரியவில்லை.

என்றாலும், பிப்ரவரி 27-ந்தேதி விஜய் டிவி சார்பில் இளையராஜாவுக்கு நடைபெறவிருக்கும் பாராட்டு விழாவில் ரஜினி கலந்து கொண்டு அவரை வாழ்த்துகிறாராம்.அதோடு இளையராஜா பற்றிய ஒரு ஆடியோவையும் அன்றைய தினத்தில் வெளியிடுகிறாராம் ரஜினி.

ஒரு பூனையை அடிப்படையாகக் கொண்டு வரும் முதல் தமிழ் சினிமா – ‘மியாவ்’

தமிழ் சினிமாவில் அவ்வபோது வித்தியாசமான முயற்சிகளின் மூல பல புதுமுக இயக்குநர்கள் அறிமுகமாகிறார்க ள். அந்த வரிசையில் பூனை ஒன்றை முக்கிய கதாபாத்திரமாக வைத்து திரைக்கதை அமைத்துள்ள இயக்குநர் சின்னாஸ் பழனிச்சாமி.சினிமாவுக்கு புதியவர் என்றாலும், விளம்பரத் துறையில் பல சாதனைகளை நிகழ்த்தி யிருக்கும் இயக்குநர் சின்னாஸ் பழனிச்சாமி, தனது படத்திற்கு ‘மியாவ்’ என்று தலைப்பு வைத்துள்ளார்.

குளோபல் வுட்ஸ் மூவிஸ் சார்பில் வின்செண்ட் அடைக்கலராஜ் தயாரிக்கும் இப்படத்தில் ராஜா என்ற புதுமுகம் ஹீரோவாக நடிக்க, காயத்ரி, ஷனி ஆகியோர் நாயகிகளாக நடிக்கின்றனர். ஸ்ரீஜித் எண்டவனோ என்ற புதியவர் இசையமைக்கிறார்.

படம் குறித்து இயக்குநர் சின்னாஸ் கூறுகையில், “பூனையின் மியாவ் சத்தத்தில் குழந்தையின் குரல் போன்ற மென்மையில் இருந்து கொடிய அலறல் போன்ற திகில் வரை பல்வேறு சூழலுக்கு ஏற்ப பல்வேறு அர்த்தங்கள் நிறைந்த பல வகைகள் உண்டு, அவற்றின் அடிப்படையில் என் படம் பயணிக்கிறது. ஒரு பூனையை அடிப் படையாகக் கொண்டு வரும் முதல் தமிழ் சினிமா இதுதான் என்று, எங்களால் பெருமையோடு சொல்லிக் கொள்ள முடியும். இதுவரை யாரும் எடுக்காத இந்த பாணிப் படம் , புதுமையான படங்களைப் பார்க்கத் துடிக்கும் ரசிகர்களுக்கு பெரும் விருந்தாக அமையும்.

அதே நேரம் இது போன்ற படங்களுக்கு பொருத்தமான தயாரிப்பாளர் கிடைப்பதும் மிக முக்கியம் . அந்த வகையில் நான் அதிர்ஷ்டசாலி, எனது தயாரிபாளருக்கு சினிமா எடுப்பதன் அழகியலும் புரிந்து இருக்கிறது . படத்தை தயாரிப்பதிலும் மதிப்புக் கூட்டுவதிலும் இன்றைய நிலையில் ஒரு தயாரிப்பாளரின் பங்கு என்ன என்பதும் அவருக்கு தெரிந்து இருக்கிறது”என்றார்.இப்படத்தின் முதல் போஸ்டரை, பிரபல ஒளிப்பதிவாளர் பி.சி.ஸ்ரீராம், வெளியிட்டார்.

அதிமுக கூட்டணியில் இருந்து சரத்குமார் திடீர் விலகல்!

அதிமுக கூட்டணியில் இருந்து விலகுவதாக சமத்துவ மக்கள் கட்சி தலைவர் சரத்குமார் திடீரென அறிவித்துள்ளார். இன்னும் 2 மாதத்தில் சட்டமன்றத் தேர்தல் நடைபெறவுள்ள நிலையில் சரத்குமார் இந்த முடிவை எடுத்துள்ள பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

2011 சட்டப்பேரவை தேர்தலில் அதிமுக கூட்டணியில் சரத்குமாரின் சமத்துவ மக்கள் கட்சி போட்டியிட்டு 2 தொகுதிகளில் வெற்றி பெற்றது. தென்காசி தேர்தலில் சரத்குமாரும், நான்குநேரி தொகுதியில் எர்ணாவூர் ராஜேந்திரனும் வெற்றி பெற்றனர்.

இதனிடையே, சரத்குமாருக்கும், எர்ணாவூர் நாராயணனுக்கும் இடையே மோதல் ஏற்பட்டது. இதைத் தொடர்ந்து எர்ணாவூர் நாராயணனை கட்சியில் இருந்து சரத்குமார் நீக்கினார். இதையடுத்து, நாங்கள் சமத்துவ மக்கள் கட்சி, அதிமுகவுடன் தொடர்ந்து கூட்டணியில் நீடிக்கிறோம் என்று எர்ணாவூர் நாராயணன் அறிவித்தது கட்சிக்குள் பரபரப்பு ஏற்படுத்தியது.

இந்த நிலையில், அதிமுக கூட்டணியில் இருந்து விலகுவதாக சமத்துவ மக்கள் கட்சி தலைவர் சரத்குமார் திடீரென அறிவித்துள்ளார்.

கூட்டணி தர்மத்தை கடைபிடித்து இதுவரை அதிமுக கூட்டணியில் நீடித்தோம் என்று சரத்குமார் கூறினார்.

தேர்தல் கூட்டணி குறித்து முடிவெடுக்க கட்சியின் பொதுக்குழு தனக்கு அதிகாரம் அளித்துள்ளது என்றும், அடுத்த கட்ட நடவடிக்கை குறித்து விரைவில் அறிவிக்கப்படும் என்றும் சரத்குமார் அறிவித்துள்ளார்.

விலக காரணம் என்ன?

சில மாதங்களுக்கு முன்பு நடந்த நடிகர் சங்கத் தேர்தலில் சரத்குமாரை எதிர்த்து விஷால் அணியினர் போட்டியிட்டு வெற்றி பெற்றனர். இந்த தேர்தலில் விஷால் அணியினருக்கு ஜெயலலிதா மறைமுகமாக ஆதரவு தெரிவித்ததாக கூறப்பட்டது. மேலும், நடிகை மனோரமா இறந்தபோது அவருக்கு அஞ்சலி செலுத்த வந்த முதல்வர் ஜெயலலிதா, அப்போது அங்கிருந்த சரத்குமாரை பார்க்க மறுத்துவிட்டதாகவும் தகவல் வெளியானது. இது சரத்குமாருக்கு வேதனையை ஏற்படுத்தியதாக கூறப்பட்டது.

இந்தநிலையில் கட்சிக்கு எதிராக செயல்பட்ட எர்ணாவூர் நாராயணனுக்கு ஆதரவாக அதிமுக செயல்பட்டு வருவதாகவும், இதனால் அதிமுக தலைமை மீது சரத்குமார் அதிருப்தியில் இருந்ததாகவும், இதனாலேயே அதிமுக கூட்டணியில் இருந்து விலக சரத்குமார் முடிவு செய்ததாக அந்த கட்சி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன

விஜய்சேதுபதிக்கு, இந்த சேதுபதி - வெற்றி மகுடம் சூட்டும் சேனாதிபதி!

விஜய் சேதுபதி , நடித்து வெளிவந்திருக்கும் போலீஸ் ஸ்டோரி. விஜய்சேதுபதியை வைத்து 'பண்ணையாரும் பத்மினியும்' படத்தை இயக்கிய அருண் குமார், மீண்டும் விஜய் சேதுபதியை வைத்து 'சேதுபதி' படத்தை இயக்கியிருக்கிறார்.

சேதுபதி எனும் நேர்மையானபோலீஸ் இன்ஸ்பெக்டர்விஜய் சேதுபதி . அவர் கையில் எடுக்கும் ஒரு போலீஸ் சப் -இன்ஸ்..கொலை வழக்கில் வாத்தியார் எனும் போர்வையில் அந்த ஏரியாவில் மோசடிகள் பல செய்துபெரிய மனிதராக வலம் வரும் வேல ராமமூர்த்தி வசமாக சிக்க, அவருக்கும், இவருக்குமிடையில் நடக்கும் முட்டலும், மோதலும் கூடவே, விஜய் சேதுபதியின் ஆசை மனைவி மற்றும் குழந்தைகள் மீதான அவரது காதலும் தான் சேதுபதி படத்தின் கரு, கதை, களம், காட்சிப்படுத்தல் எல்லாம்.

சேதுபதி கதைப்படி, மதுரை பகுதியில் இளந்துடிப்புமிக்க போலீஸ் இன்ஸ்பெக்டராக பதவியில்இருக்கும் விஜய்சேதுபதி, மனைவி ரம்யா நம்பீசன் மற்றும் இரண்டு குழந்தைகளுடன் மகிழ்ச்சியாக வாழ்ந்து வருகிறார். இந்நிலையில், அந்த ஏரியாவின் அருகில் உள்ள மற்றொரு ஸ்டேஷன் சப்-இன்ஸ்பெக்டர் கொடூரமாக கொலை செய்யப்படுகிறார். இந்த வழக்கை விஜய் சேதுபதி விசாரிக்கிறார். விசாரணையில் அந்த ஏரியாவின் மிகப்பெரும் புள்ளி வேலா ராமமூர்த்தி என்பவர் தான் இந்த கொலைக்கு காரணம் என தெரிகின்றது. மேலும், தன் மருமகனான வேறொரு சப்-இன்ஸை .. கொலை செய்வதற்கு பதிலாக, தவறுதலாக மற்றொரு எஸ்.ஐ.யை கொலை செய்திருக்கிறார்கள் என்பதையும் துப்பறிகிறார். ஏரியாவே, வாத்தியார் வேலா ராமமூர்த்தியையும் அவரது ஆட்களையும் பார்த்து பயந்து ஒடும் நேரத்தில் இன்ஸ்பெக்டர் சேதுபதி, துணிச்சலாக அவரை அடித்து இழுத்துச் சென்று கைது செய்கிறார். இதனால், அவமானமடையும் வேலா ராமமூர்த்தி, அதற்காக விஜய் சேதுபதியை பழி தீர்க்க காத்திருக்கிறார் வேலாராமமூர்த்தி.வேல ராமமூர்த்தியின் எண்ணம் ஈ.டேறியதா? அல்லது, அவரால் செய்யாத குற்றத்திற்காக சஸ்பென்ஸ் உள்ளிட்ட சட்ட சிக்கல்களை சந்திக்கும் விஜய்சேதுபதிவென்றாரா..? என்பது தான் சேதுபதி படத்தின் வித்தியாசமும், விறுவிறுப்புமான மீதிக்கதை.

விஜய் சேதுபதி மிடுக்கான, அதே நேரம், பிறர் கண்ணுக்கு சற்றே கிறுக்கான துணிச்சல் போலீஸ் அதிகாரியாக பட்டையை கிளப்பி இருக்கிறார். இதுவரை, யதார்த்தமான நகைச்சுவை நடிப்பில் ரசிகர்களை கவர்ந்த விஜய் சேதுபதி, முதல் முறையாக மிடுக்கான போலீஸ் அதிகாரி வேடம் ஏற்று ரசிகர்களை கவர்ந்திருக்கிறார். கமர்ஷியல் ஹீரோவுக்கு உண்டான அனைத்து அம்சங்களையும், அவர் பெற்றிருப்பது சிறப்பு.

உயர் அதிகாரியிடம் சத்தம் போட்டு பேசுதல், தவறானவர் என்று தெரிந்ததும், அசால்ட்டாக சக இன்ஸையே அடிப்பது, வாத்தியார் உதவியாளரின் போனை கட் செய்வது, அவர்களை காத்திருக்க வைத்து, அவர்கள் கண் எதிரிலேயே பெரிய மனிதர் போர்வை வாத்தியாரை அடித்து இழுத்து வருவது... அதைப்பார்த்து அவர்கள் முறைப்பது கண்டு, அவனுங்க முறைக்கிறாங்கன்னு நினைக்கிறேன் - சிரிப்பு சிரிப்பா வருது... அவனுங்களை போ கொல்லு மூர்த்தி... என சப்-இன்ஸிடம் சொல்லி, வில்லன் ஆட்களை கிண்டலாய் சீண்டுவது, காதல் மனைவி ரம்யா நம்பீசனின் பெற்றோர் கல்யாண நாளை, இவர் ஞாபகம் வைத்திருந்து மனைவியை வாழ்த்து சொல்ல சொல்வது... நான் பேசினா கண்ணைப் பார்த்து பேசுடி என பொண்டாட்டியப் பார்த்து பிள்ளைகளுக்கு தெரியாமல் கண் அடிப்பது, என அன்பான கணவனாகவும், பொறுப்பான அப்பாவாகவும், கூடவே மிரட்டல் போலீஸாகவும், மனதில் பதிகிறார். அவரது, முறுக்குமீசை, கிருதா, நடை, உடை, பாவனை உள்ளிட்ட சகலத்திலும் கூட போலீஸாகவே வாழ்ந்திருக்கிறார் சேதுபதி! ஹேட்ஸ் ஆப் டூ யூ சேதுபதி!

ரம்யா நம்பீசன், புருஷனுக்கு தட்டில் இட்லி மிளகாய்பொடி வைத்துவிட்டு அதற்கு எண்ணெய் குழப்பிய விரலை உணவு பரிமாறியபடியே புருஷன் வாயில் சூப்ப கொடுப்பது... இங்கப் பாரு அந்தாளு என்னை அடிச்சான்னா திருப்பி வந்து என்னை கொஞ்சுவான்.... அதுக்கு நான் இங்க இருக்கணும்.. என தன் அம்மாவை அதட்டுவது, சமாதானத்திற்கு வரும் புருஷனை செல்லமாக, காலில் விழ வைப்பது... என இப்படக் கதைப்படி, இரண்டு குழந்தைகளுக்கு அம்மாவானாலும் இளமை ஊஞ்சலாட நடித்திருக்கிறார் நாயகி ரம்யா நம்பீசன். 'பீட்சா'படத்தில் விஜய்சேதுபதியுடன் ஏற்கனவே நெருக்கமாக நடித்ததாலோ என்னவோ ரம்யா நம்பீசன் இப்படத்தில் சேதுபதியுடன் மேலும் கிறக்கம், நெருக்கம் காட்டியிருக்கிறார்.வாவ்!

யோவ், சேதுபதி மண்டே வரும் போது ஷேவ் செய்துட்டு யூனிபார்ம் போட்டுட்டு வா... உன் வேலை கன்பார்ம்... எனும் மிரட்டல் விசாரணை அதிகாரி, விஜய்யின் மிடுக்கு மேல் அதிகாரி, சப் இன்ஸ் - மூர்த்தி, வில்லன் வேல ராமமூர்த்தியின் வில்லத்தனங்கள், மேலும், விஜய் - ரம்யா ஜோடியின் பிஞ்சுகளாக வரும் மாஸ்டர் ராகவன், பேபி தனுஷ்ரா உள்ளிட்ட குழந்தைகளாக நடித்திருப்பவர்கள் கூட மிரட்டலான, மிகுதியில்லா நடிப்பை வெளிப்படுத்தியிருக்கிறார்கள். என்பது இப்படத்திற்கு பலம் சேர்க்கிறது.

ஹவ்வா ஹவ்வவ்வா ...", கொஞ்சி பேசிட வேணாம் .... , நான் யாரு ? நான் ராஜா ... நீ ,ராஜா .... ஹேய் மாமா..." எனத் தொடங்கித் தொடரும் பாடல்கள் இசையாளர் நிவாஸ் கே.பிரசன்னாவின் இசையில் இதம், பி.தினேஷ் குமாரின் ஒளிப்பதிவு பிரகாசம், ஸ்ரீகர் பிரசாத்தின் படத்தொகுப்பு பக்கா, ராஜ சேகரின் சண்டை பயிற்சி மிரட்டல்.

வில்லன் ஆட்களுக்கு முன்னதாக அவர்கள் யோசிப்பதை யோசிக்கும் விஜய் சேதுபதியின் ஹீரோயிசம், போலீஸ் ஸ்டோரியில் ஆக் ஷன் சீன்களைக் காட்டிலும் அதிகம் கணவன் விஜய் - மனைவி ரம்யா இருவரது ஊடல் - கூடல் ரொமான்ஸ் சீன்களை சேர்த்திருக்கும் இயக்குனரின் லாவகம், கூடவே, விறுவிறுப்பான திரைக்கதை படத்திற்கு பெரும் பலம். அடுத்து என்ன நடக்கும்? என்று யூகிக்க முடியாத அளவிற்கு அதை காட்சிப்படுத்தியிருப்பது இப்பட இயக்குனரின் பெருஞ்சிறப்பு.

குறிப்பாக, விஜய் சேதுபதி வீட்டில் இல்லாத நேரத்தில் தன்வீட்டை முற்றுகையிடும் வில்லனின் அடியாட்களை மிரட்டும் விதமாக தன் தைரியசாலி பிஞ்சுமகனிடம் போனில் சொல்லி வீட்டில் புகுந்த வில்லன் ஆட்களை பயமுறுத்த வானை நோக்கி சுட விட்டு, மனைவியையும் குழந்தைகளையும் காப்பாற்றுவது, வாத்தியார் ஆட்கள் தூக்கியது போன்று தன்ஸ்டேஷன், கான்ஸ்டபிளின் மகளை சேதுபதியே கடத்தி வைத்து சஸ்பென்சனில் இருந்து தப்பிக்கும் சாதுர்யம்... என ஏகத்துக்கும்... புதிதாய் அதேநேரம் சுவாரஸ்யமாய் ஒரு போலீல் ஸ்டோரியை தேர்ந்தெடுத்து படமாக்கியிருப்பதில், இந்தமுறை, ஜெயித்திருக்கிறார் பண்ணையாரும் பத்மினியும் இயக்குனர் எஸ்.யூ.அருண்குமார். கூடவே விஜய் சேதுபதியும் ஜொலித்திருக்கிறார்!

மொத்தத்தில், விஜய்சேதுபதிக்கு, இந்த சேதுபதி - வெற்றி மகுடம் சூட்டும் சேனாதிபதி!

சி.எம் என்றால் எதற்கு பயப்பட வேண்டும்- விஜய்யின் தந்தையின் சர்ச்சை பேச்சு

பா.விஜய், எஸ்.ஏ.சி நடிப்பில் விரைவில் வெளிவரும் படம் நையப்புடை. இப்படத்தின் சந்திப்பு ஒன்றில் பா.விஜய் அவர்கள் நடிகை ராதிகாவை சின்னத்திரை சி.எம் என்று கூறினார்.

பின் என்ன நினைத்தார் என்று தெரியவில்லை அவரே முன் வந்து நான் சொல்ல வந்தது சினிமா மேக்னெட் என்பதை தான் என கூறினார்.

இதை தொடர்ந்து பேசிய எஸ்.ஏ.சி ‘பா.விஜய் பெரிய தைரியசாலி என்று நினைத்தேன், சி.எம் என்று சொன்னால் என்ன பயம், அவர் மனதில் ஏதோ வைத்துக்கொண்டு, இதை ஏன் சமாளிக்க வேண்டும்’ என பேச ஒரு நிமிடம் அந்த இடமே பதட்டமானது.

விஜயகாந்த் எல்லாரையும் அடிக்கறது ஏன்? -ராதிகா குபீர் சிரிப்பு

“இதென்னடா தமிழ்நாட்டுக்கு வந்த சோதனை?”என்பது போலவேதான் இருக்கிறது விஜயகாந்தின் பேச்சும், அவரது செயல்களும்! ஆனால் எல்லா பெரிய அரசியல் கட்சிகளும் அவர் திருவாய் மலர்ந்து ஒரு வார்த்தை உம் போட மாட்டாரா என்று காத்திருப்பது அதைவிட பெரிய சோதனை! நாற்காலிய புடிக்கணும்னா முக்காலியை முழுங்கிட்டு தண்ணி குடிக்கவும் தயார் என்பது போல பிற கட்சிகள் நடந்து கொள்ள, விஜயகாந்த் மட்டும் “பின்னாடியே அலைய வைக்கும்” கொள்கையிலிருந்து கிஞ்சிற்றும் மாறுவார் போல தெரியவில்லை. நடுநடுவே தன் கட்சி எம்.எல்.ஏக்களுக்கு அவர் விடும், உதை இன்னபிற சமாச்சாரங்கள் நாட்டையே கிச்சு கிச்சு மூட்டி வருகிறது.

இந்த நிலையில்தான் இன்று நையப்புடை படத்தின் ட்ரெய்லர் வெளியீட்டு விழாவுக்கு வந்த சின்னத்திரை சி.எம். ராதிகா, விஜயகாந்த் பற்றி பேசியது பெரும் சிரிப்பலையை ஏற்படுத்தியது. எஸ்.ஏ.சி சார் படத்தில் நடிக்கிற எல்லாருக்கும் அடி விழும். அவ்வளவு பஞ்சுவாலிடி பார்ப்பார் அவர். அடிவாங்காம தப்பியது நான் மட்டும்தான். ஆனால் விஜயகாந்த்தான் தினம் தினம் அடிவாங்குவார். அவர் இப்போ எல்லாரையும் அடிக்கறதை பார்த்துட்டு, இந்த பழக்கம் அவருக்கு எங்கேயிருந்து வந்திச்சுன்னு யோசிச்சு பார்த்தேன். அது எஸ்.ஏ.சி சார்ட்ட இருந்துதான் வந்திருக்கு என்று சொல்லிவிட்டு சிரிக்க, மேடைக்கு எதிரே இருந்த அத்தனை பேரும் கைதட்டி ஆரவாரம் செய்தார்கள்.

“இன்னைக்கு ஜகஜ்ஜோதியா மாநாட்டை நடத்திகிட்டு இருக்காரு. அவரையும் சேர்த்து தமிழ்நாட்டுக்கு ஆறு பேர் சி.எம் பதவிக்கு போட்டி போட்றாங்க. இந்த தமிழ்நாட்டு மக்கள் இருக்காங்களே… அவங்களுக்கு எவ்வளவு சூடு பட்டாலும் தெரியாது. திருந்த மாட்டாங்க” என்றார் சிரித்துக் கொண்டே.

உதடுகள் சிரிக்கிறது. உள்ளம் மட்டும் அழுகிறது. அது எங்களுக்கும் புரிகிறது சின்னத்திரை சி.எம் அவர்களே…