Sunday 21 February 2016

விஜய்சேதுபதிக்கு, இந்த சேதுபதி - வெற்றி மகுடம் சூட்டும் சேனாதிபதி!

விஜய் சேதுபதி , நடித்து வெளிவந்திருக்கும் போலீஸ் ஸ்டோரி. விஜய்சேதுபதியை வைத்து 'பண்ணையாரும் பத்மினியும்' படத்தை இயக்கிய அருண் குமார், மீண்டும் விஜய் சேதுபதியை வைத்து 'சேதுபதி' படத்தை இயக்கியிருக்கிறார்.

சேதுபதி எனும் நேர்மையானபோலீஸ் இன்ஸ்பெக்டர்விஜய் சேதுபதி . அவர் கையில் எடுக்கும் ஒரு போலீஸ் சப் -இன்ஸ்..கொலை வழக்கில் வாத்தியார் எனும் போர்வையில் அந்த ஏரியாவில் மோசடிகள் பல செய்துபெரிய மனிதராக வலம் வரும் வேல ராமமூர்த்தி வசமாக சிக்க, அவருக்கும், இவருக்குமிடையில் நடக்கும் முட்டலும், மோதலும் கூடவே, விஜய் சேதுபதியின் ஆசை மனைவி மற்றும் குழந்தைகள் மீதான அவரது காதலும் தான் சேதுபதி படத்தின் கரு, கதை, களம், காட்சிப்படுத்தல் எல்லாம்.

சேதுபதி கதைப்படி, மதுரை பகுதியில் இளந்துடிப்புமிக்க போலீஸ் இன்ஸ்பெக்டராக பதவியில்இருக்கும் விஜய்சேதுபதி, மனைவி ரம்யா நம்பீசன் மற்றும் இரண்டு குழந்தைகளுடன் மகிழ்ச்சியாக வாழ்ந்து வருகிறார். இந்நிலையில், அந்த ஏரியாவின் அருகில் உள்ள மற்றொரு ஸ்டேஷன் சப்-இன்ஸ்பெக்டர் கொடூரமாக கொலை செய்யப்படுகிறார். இந்த வழக்கை விஜய் சேதுபதி விசாரிக்கிறார். விசாரணையில் அந்த ஏரியாவின் மிகப்பெரும் புள்ளி வேலா ராமமூர்த்தி என்பவர் தான் இந்த கொலைக்கு காரணம் என தெரிகின்றது. மேலும், தன் மருமகனான வேறொரு சப்-இன்ஸை .. கொலை செய்வதற்கு பதிலாக, தவறுதலாக மற்றொரு எஸ்.ஐ.யை கொலை செய்திருக்கிறார்கள் என்பதையும் துப்பறிகிறார். ஏரியாவே, வாத்தியார் வேலா ராமமூர்த்தியையும் அவரது ஆட்களையும் பார்த்து பயந்து ஒடும் நேரத்தில் இன்ஸ்பெக்டர் சேதுபதி, துணிச்சலாக அவரை அடித்து இழுத்துச் சென்று கைது செய்கிறார். இதனால், அவமானமடையும் வேலா ராமமூர்த்தி, அதற்காக விஜய் சேதுபதியை பழி தீர்க்க காத்திருக்கிறார் வேலாராமமூர்த்தி.வேல ராமமூர்த்தியின் எண்ணம் ஈ.டேறியதா? அல்லது, அவரால் செய்யாத குற்றத்திற்காக சஸ்பென்ஸ் உள்ளிட்ட சட்ட சிக்கல்களை சந்திக்கும் விஜய்சேதுபதிவென்றாரா..? என்பது தான் சேதுபதி படத்தின் வித்தியாசமும், விறுவிறுப்புமான மீதிக்கதை.

விஜய் சேதுபதி மிடுக்கான, அதே நேரம், பிறர் கண்ணுக்கு சற்றே கிறுக்கான துணிச்சல் போலீஸ் அதிகாரியாக பட்டையை கிளப்பி இருக்கிறார். இதுவரை, யதார்த்தமான நகைச்சுவை நடிப்பில் ரசிகர்களை கவர்ந்த விஜய் சேதுபதி, முதல் முறையாக மிடுக்கான போலீஸ் அதிகாரி வேடம் ஏற்று ரசிகர்களை கவர்ந்திருக்கிறார். கமர்ஷியல் ஹீரோவுக்கு உண்டான அனைத்து அம்சங்களையும், அவர் பெற்றிருப்பது சிறப்பு.

உயர் அதிகாரியிடம் சத்தம் போட்டு பேசுதல், தவறானவர் என்று தெரிந்ததும், அசால்ட்டாக சக இன்ஸையே அடிப்பது, வாத்தியார் உதவியாளரின் போனை கட் செய்வது, அவர்களை காத்திருக்க வைத்து, அவர்கள் கண் எதிரிலேயே பெரிய மனிதர் போர்வை வாத்தியாரை அடித்து இழுத்து வருவது... அதைப்பார்த்து அவர்கள் முறைப்பது கண்டு, அவனுங்க முறைக்கிறாங்கன்னு நினைக்கிறேன் - சிரிப்பு சிரிப்பா வருது... அவனுங்களை போ கொல்லு மூர்த்தி... என சப்-இன்ஸிடம் சொல்லி, வில்லன் ஆட்களை கிண்டலாய் சீண்டுவது, காதல் மனைவி ரம்யா நம்பீசனின் பெற்றோர் கல்யாண நாளை, இவர் ஞாபகம் வைத்திருந்து மனைவியை வாழ்த்து சொல்ல சொல்வது... நான் பேசினா கண்ணைப் பார்த்து பேசுடி என பொண்டாட்டியப் பார்த்து பிள்ளைகளுக்கு தெரியாமல் கண் அடிப்பது, என அன்பான கணவனாகவும், பொறுப்பான அப்பாவாகவும், கூடவே மிரட்டல் போலீஸாகவும், மனதில் பதிகிறார். அவரது, முறுக்குமீசை, கிருதா, நடை, உடை, பாவனை உள்ளிட்ட சகலத்திலும் கூட போலீஸாகவே வாழ்ந்திருக்கிறார் சேதுபதி! ஹேட்ஸ் ஆப் டூ யூ சேதுபதி!

ரம்யா நம்பீசன், புருஷனுக்கு தட்டில் இட்லி மிளகாய்பொடி வைத்துவிட்டு அதற்கு எண்ணெய் குழப்பிய விரலை உணவு பரிமாறியபடியே புருஷன் வாயில் சூப்ப கொடுப்பது... இங்கப் பாரு அந்தாளு என்னை அடிச்சான்னா திருப்பி வந்து என்னை கொஞ்சுவான்.... அதுக்கு நான் இங்க இருக்கணும்.. என தன் அம்மாவை அதட்டுவது, சமாதானத்திற்கு வரும் புருஷனை செல்லமாக, காலில் விழ வைப்பது... என இப்படக் கதைப்படி, இரண்டு குழந்தைகளுக்கு அம்மாவானாலும் இளமை ஊஞ்சலாட நடித்திருக்கிறார் நாயகி ரம்யா நம்பீசன். 'பீட்சா'படத்தில் விஜய்சேதுபதியுடன் ஏற்கனவே நெருக்கமாக நடித்ததாலோ என்னவோ ரம்யா நம்பீசன் இப்படத்தில் சேதுபதியுடன் மேலும் கிறக்கம், நெருக்கம் காட்டியிருக்கிறார்.வாவ்!

யோவ், சேதுபதி மண்டே வரும் போது ஷேவ் செய்துட்டு யூனிபார்ம் போட்டுட்டு வா... உன் வேலை கன்பார்ம்... எனும் மிரட்டல் விசாரணை அதிகாரி, விஜய்யின் மிடுக்கு மேல் அதிகாரி, சப் இன்ஸ் - மூர்த்தி, வில்லன் வேல ராமமூர்த்தியின் வில்லத்தனங்கள், மேலும், விஜய் - ரம்யா ஜோடியின் பிஞ்சுகளாக வரும் மாஸ்டர் ராகவன், பேபி தனுஷ்ரா உள்ளிட்ட குழந்தைகளாக நடித்திருப்பவர்கள் கூட மிரட்டலான, மிகுதியில்லா நடிப்பை வெளிப்படுத்தியிருக்கிறார்கள். என்பது இப்படத்திற்கு பலம் சேர்க்கிறது.

ஹவ்வா ஹவ்வவ்வா ...", கொஞ்சி பேசிட வேணாம் .... , நான் யாரு ? நான் ராஜா ... நீ ,ராஜா .... ஹேய் மாமா..." எனத் தொடங்கித் தொடரும் பாடல்கள் இசையாளர் நிவாஸ் கே.பிரசன்னாவின் இசையில் இதம், பி.தினேஷ் குமாரின் ஒளிப்பதிவு பிரகாசம், ஸ்ரீகர் பிரசாத்தின் படத்தொகுப்பு பக்கா, ராஜ சேகரின் சண்டை பயிற்சி மிரட்டல்.

வில்லன் ஆட்களுக்கு முன்னதாக அவர்கள் யோசிப்பதை யோசிக்கும் விஜய் சேதுபதியின் ஹீரோயிசம், போலீஸ் ஸ்டோரியில் ஆக் ஷன் சீன்களைக் காட்டிலும் அதிகம் கணவன் விஜய் - மனைவி ரம்யா இருவரது ஊடல் - கூடல் ரொமான்ஸ் சீன்களை சேர்த்திருக்கும் இயக்குனரின் லாவகம், கூடவே, விறுவிறுப்பான திரைக்கதை படத்திற்கு பெரும் பலம். அடுத்து என்ன நடக்கும்? என்று யூகிக்க முடியாத அளவிற்கு அதை காட்சிப்படுத்தியிருப்பது இப்பட இயக்குனரின் பெருஞ்சிறப்பு.

குறிப்பாக, விஜய் சேதுபதி வீட்டில் இல்லாத நேரத்தில் தன்வீட்டை முற்றுகையிடும் வில்லனின் அடியாட்களை மிரட்டும் விதமாக தன் தைரியசாலி பிஞ்சுமகனிடம் போனில் சொல்லி வீட்டில் புகுந்த வில்லன் ஆட்களை பயமுறுத்த வானை நோக்கி சுட விட்டு, மனைவியையும் குழந்தைகளையும் காப்பாற்றுவது, வாத்தியார் ஆட்கள் தூக்கியது போன்று தன்ஸ்டேஷன், கான்ஸ்டபிளின் மகளை சேதுபதியே கடத்தி வைத்து சஸ்பென்சனில் இருந்து தப்பிக்கும் சாதுர்யம்... என ஏகத்துக்கும்... புதிதாய் அதேநேரம் சுவாரஸ்யமாய் ஒரு போலீல் ஸ்டோரியை தேர்ந்தெடுத்து படமாக்கியிருப்பதில், இந்தமுறை, ஜெயித்திருக்கிறார் பண்ணையாரும் பத்மினியும் இயக்குனர் எஸ்.யூ.அருண்குமார். கூடவே விஜய் சேதுபதியும் ஜொலித்திருக்கிறார்!

மொத்தத்தில், விஜய்சேதுபதிக்கு, இந்த சேதுபதி - வெற்றி மகுடம் சூட்டும் சேனாதிபதி!

0 comments:

Post a Comment