Sunday 21 February 2016

அதிமுக கூட்டணியில் இருந்து சரத்குமார் திடீர் விலகல்!

அதிமுக கூட்டணியில் இருந்து விலகுவதாக சமத்துவ மக்கள் கட்சி தலைவர் சரத்குமார் திடீரென அறிவித்துள்ளார். இன்னும் 2 மாதத்தில் சட்டமன்றத் தேர்தல் நடைபெறவுள்ள நிலையில் சரத்குமார் இந்த முடிவை எடுத்துள்ள பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

2011 சட்டப்பேரவை தேர்தலில் அதிமுக கூட்டணியில் சரத்குமாரின் சமத்துவ மக்கள் கட்சி போட்டியிட்டு 2 தொகுதிகளில் வெற்றி பெற்றது. தென்காசி தேர்தலில் சரத்குமாரும், நான்குநேரி தொகுதியில் எர்ணாவூர் ராஜேந்திரனும் வெற்றி பெற்றனர்.

இதனிடையே, சரத்குமாருக்கும், எர்ணாவூர் நாராயணனுக்கும் இடையே மோதல் ஏற்பட்டது. இதைத் தொடர்ந்து எர்ணாவூர் நாராயணனை கட்சியில் இருந்து சரத்குமார் நீக்கினார். இதையடுத்து, நாங்கள் சமத்துவ மக்கள் கட்சி, அதிமுகவுடன் தொடர்ந்து கூட்டணியில் நீடிக்கிறோம் என்று எர்ணாவூர் நாராயணன் அறிவித்தது கட்சிக்குள் பரபரப்பு ஏற்படுத்தியது.

இந்த நிலையில், அதிமுக கூட்டணியில் இருந்து விலகுவதாக சமத்துவ மக்கள் கட்சி தலைவர் சரத்குமார் திடீரென அறிவித்துள்ளார்.

கூட்டணி தர்மத்தை கடைபிடித்து இதுவரை அதிமுக கூட்டணியில் நீடித்தோம் என்று சரத்குமார் கூறினார்.

தேர்தல் கூட்டணி குறித்து முடிவெடுக்க கட்சியின் பொதுக்குழு தனக்கு அதிகாரம் அளித்துள்ளது என்றும், அடுத்த கட்ட நடவடிக்கை குறித்து விரைவில் அறிவிக்கப்படும் என்றும் சரத்குமார் அறிவித்துள்ளார்.

விலக காரணம் என்ன?

சில மாதங்களுக்கு முன்பு நடந்த நடிகர் சங்கத் தேர்தலில் சரத்குமாரை எதிர்த்து விஷால் அணியினர் போட்டியிட்டு வெற்றி பெற்றனர். இந்த தேர்தலில் விஷால் அணியினருக்கு ஜெயலலிதா மறைமுகமாக ஆதரவு தெரிவித்ததாக கூறப்பட்டது. மேலும், நடிகை மனோரமா இறந்தபோது அவருக்கு அஞ்சலி செலுத்த வந்த முதல்வர் ஜெயலலிதா, அப்போது அங்கிருந்த சரத்குமாரை பார்க்க மறுத்துவிட்டதாகவும் தகவல் வெளியானது. இது சரத்குமாருக்கு வேதனையை ஏற்படுத்தியதாக கூறப்பட்டது.

இந்தநிலையில் கட்சிக்கு எதிராக செயல்பட்ட எர்ணாவூர் நாராயணனுக்கு ஆதரவாக அதிமுக செயல்பட்டு வருவதாகவும், இதனால் அதிமுக தலைமை மீது சரத்குமார் அதிருப்தியில் இருந்ததாகவும், இதனாலேயே அதிமுக கூட்டணியில் இருந்து விலக சரத்குமார் முடிவு செய்ததாக அந்த கட்சி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன

0 comments:

Post a Comment