Monday 8 February 2016

ரஜினி முருகன் சக்சஸ் மீட்! ரத்து செய்ய வைத்த சிவகார்த்திகேயன்?

ரஜினி முருகன் தியேட்டருக்குள் வருவதற்குள் மேட்டூருக்கே மூணு முறை தண்ணீர் வந்துவிட்டது. ஒரு பிரசவ வலியுடன் இப்படத்தை ரிலீஸ் செய்தாலும் தாயும் நலம். சேயும் நலம். சுற்றியுள்ள சொந்த பந்தங்களெல்லாம் நலம்! தமிழ்சினிமாவில் நிஜமான ஹிட் என்பது எப்போதாவதுதான் நடக்கும். இதை கொண்டாட வேண்டாமா? (அப்படின்னா பொய்யான ஹிட்டுன்னு ஒண்ணு இருக்கா என்றுதானே கேட்கிறீங்க… கேள்விப்பட்டதில்லையா நீங்க?) கொண்டாடத்தான் வேணும். ஆனால் வர வேண்டியவங்க வராமல் எப்படிய்யா கொண்டாடுவது?

முதல் ஷோவிலேயே தெரிந்துவிட்டதாம் படத்தின் தயாரிப்பாளர் லிங்குசாமிக்கு. இந்த படம் குலசாமி மாதிரி என்று. திருப்பதி பிரதர்ஸ் நிறுவனத்திற்கு கடைசி புகலிடமாக இதுவாகதான் இருந்தது. நல்லவேளை… படம் நினைத்ததை விட சூப்பர் ஹிட் ஆகிவிட்டது. இன்னமும் பல இடங்களில் “அது ஓடட்டும்யா… அதை எதுக்கு தூக்கணும்” என்று ஓட்டிக் கொண்டிருக்கிறார்கள் தியேட்டர்காரர்கள். இப்படியொரு சந்தோஷத்தை கொண்டாட வேண்டுமல்லவா? அதுவும் முதலில் பத்திரிகையாளர்களை அழைத்து தங்களது வெற்றியை பகிர்ந்து கொண்டால்தானே அவர்கள் நாட்டு மக்களுக்கு ஓர் நற் செய்தி… என்று பறையடித்து முழங்குவார்கள்?

நாள் நட்சத்திரமெல்லாம் குறித்துவிட்டாராம் லிங்குசாமி. நீங்க இந்த சக்சஸ் மீட்ல கலந்துக்கணும் என்று சிவகார்த்திகேயனுக்கும் அழைப்பு விடப்பட்டதாம். இந்த படத்தின் ரிலீசுக்காக நிறைய பொருளை இழந்த சிவா, காது கொள்ளாத வார்த்தைகளையும் கேட்டுவிட்டார். ஆங்காங்கே சிலர் மிரட்டவும் செய்திருந்தார்கள். எல்லாம் ஒரு கணம் அவர் மனக்கண்ணுக்குள் வந்து போனதாம். “ம்ஹும்… மறுபடியும் நான் லிங்குசாமி சார் கூட மேடையேற மாட்டேன். ஸாரி…” என்று கூறிவிட்டாராம்.

ஹீரோவே வராமல் ஒரு சக்சஸ் மீட் வைத்தால், வாய் முழுக்க ஆயுதங்களை சுமந்து கொண்டு கேள்வி கேட்பார்களே? அதனால் இந்த சக்சஸ் மீட்டே வேணாம்ப்பா… என்று கூறிவிட்டாராம் லிங்கு. யானையே பொறந்தாலும் தும்பிக்கையில முத்தம் வைக்க அம்மாவால முடியல… அந்த குறையை எங்கு போய் சொல்லுவது?

0 comments:

Post a Comment