Sunday 31 January 2016

தூத்துக்குடி ஆசாமி சாத்துக்குடியை நறுக்குவது மாதிரி-அரண்மனை 2- விமர்சனம்

தூத்துக்குடி ஆசாமி சாத்துக்குடியை நறுக்குவது மாதிரி சுலபமாக கையாள்கிற விஷயங்களில் ஒன்று ஆவிப்படம் எடுப்பது! மெல்லிசாக ஒரு கதையிருந்தால் போதும். மேலே கொட்டி நிரப்பிக் கொள்ளதான் ஏராளமான பில்லி சூனிய பிட்டிங்குகள் இருக்கிறதே? இந்த முறை தான் கட்டிய அதே பழைய அரண்மனைக்கு ஆயில் பெயின்ட் அடித்திருக்கிறார் சுந்தர்சி. ஆங்காங்கே த்ரிஷா, பூனம் பாஜ்வா என்று ‘கலர்’ பல்புகளையும் கண்டபடி எரிய விடுகிறாரா, ஏ.சியே ஆஃப் ஆனாலும், அதன் எபெக்ட் தெரியாமல் ஜில்லாகிறான் ரசிகன்!

ஊரிலிருக்கிற அம்மனுக்கு ஒரு வாரத்திற்கு ரெஸ்ட். காரணம்… ஏதோ பூஜை, புனஸ்காரம்! அத்தனை காலமும் சுடுகாட்டில் வாலை சுருட்டிக் கொண்டு கிடந்த ஆவிகள் எல்லாம், “இப்ப என்ன பண்ணுவே?” என்று கிளம்புகின்றன. அந்த ஆவிகளில் ஒன்று மட்டும் முழு வேகத்தோடு அந்த ஊரிலிருக்கும் அரண்மனைக்குள் நுழைந்துவிடுகிறது. அதற்கப்புறம் அந்த அங்கு நிகழும் ‘ஐயோ குய்யோ’ சமாச்சாரங்கள்தான் முழு படமும். சுந்தர்சி படங்களை பொறுத்தவரை சிரிப்பு பாதி, சீரியஸ் மீதி என்ற பார்முலா இருக்குமல்லவா? இதிலும் இருக்கிறது. அடிக்கடி சிரித்து, அடிக்கடி பயந்து… நடுநடுவே ‘எங்கேயோ பார்த்த மாதிரியிருக்குல்ல?’ என்று மண்டையை பிராண்டி… கடைசியில் தியேட்டரை விட்டு வெளியேறுகையில், அந்த பொம்மை வந்து குளோஸ் அப்பில் சிரிக்கிறது. ‘‘இருக்குடா இன்னும் ஒரு பார்ட்டு….” (அதுல பேய் இருக்கோ, இல்லையோ. நல்ல நல்ல பிகர்கள் இருக்கும். நீங்க வாங்க சுந்தர்சி! )

த்ரிஷாவை இப்படி பார்த்து பல வருஷங்களாச்சு. குளத்து தண்ணீரே சூடாகிற அளவுக்கு குளிக்கிறார். ‘உங்க கேமிராவுல ஒளிச்சு வைக்கதான் எடுத்துட்டு வந்தேன்’ என்பதை போல, லாங் ஷாட், மிட் ஷாட், குளோஸ் அப் என்று எல்லா கோணங்களிலும் ஒரே நினைப்பாக திரிகிறார். செகன்ட் ஹாஃபில் மட்டும் ஆவி இவர் உடம்பில் ஏறிக் கொள்ள, வாரி விட்ட வருண்மணியனை நேருக்கு நேர் பார்த்தது போல குமைகிறார். கொதிக்கிறார். அதே நேரத்தில் தொழிலில் நேரடி போட்டியிலிருக்கும் ஹன்சிகாவை விட தனக்கு கொஞ்சம் வெயிட் கம்மிதான் என்று தெரிந்தும் நடிக்க ஒப்புக் கொண்டதற்காக நாடறிய ஒரு வணக்கம்.

ஹீரோயினை விட அதிகமான… அண்ணி அக்கா கேரக்டர்களை விட குறைவான… ‘மத்திய பிரதேசமாக’ வருக்கிறார் பூனம் பாஜ்வா. அந்த ஆவி இவரா இருக்குமோ என்று குழப்பினாலும், ‘அட… சேச்சிக்கு பிரச்சனை வேறயாக்கும்’ என்று ரூட்டை திருப்பி விடுகிறார்கள். இவரை மடக்க சூரி அலைய, சுந்தர்சியை மடக்க பூனம் அலைவதெல்லாம் தியேட்டரை ரகளையாக்குகிறது.

அமெரிக்க மாப்பிள்ளையை அஞ்சு ரீல் எக்ஸ்ட்ராவாக நடிக்க வைத்ததை போல, அரண்மனையில் சித்தார்த்துக்கு ‘பிராப்தம்’ அமைந்திருக்கிறது. இருந்தாலும் த்ரிஷாவுடன் உருண்டு புரளும் அந்த ஒரு டூயட் போதும், நீங்களும் இந்தப் படத்தில் வாழ்ந்திருக்கீங்க ப்ரோ!

சூரிக்கு கோவை சரளாதான் ஜோடி! (நெஞ்சை பிடிச்சுக்கணும் போல இருக்குல்ல?) உங்களுக்கு ஏன் சிரமம்? சீனுக்கு சீன் சூரியே பிடித்துக் கொள்கிறார். கோவை சரளா குறித்து அவர் விடும் டயலாக்குகள் ஒவ்வொன்றுக்கும் குலுங்குகிறது தியேட்டர்.

ஆவியை அடக்கி படத்தை முடித்து வைப்பதே சுந்தர்சிதான். அவ்வளவு பெரிய ரோலுக்கு ஏற்ற உடல்வாகுதான் அவருக்கும்! பெரிசாக எதற்கும் அலட்டிக் கொள்ளாத அந்த பாடி லாங்குவேஜூம், டயலாக் பிரசன்ட்டேஷனும் ஒரு விதத்தில் ஓ.கேதான். இவரை ஜூவாலஜிக்கல் கேமிராமேன் என்று முன்னாலேயே கூறிவிடுகிறார்களா, ஆங்காங்கே அவர் லென்ஸ் வைத்து பேய் நடமாட்டம் அறிவது லாஜிக் லப் டப்!

மிரட்டல் ஆவி ஹன்சிகாதான். அந்த கொடூரமான பிளாஷ்பேக், சமகாலத்தில் நிகழும் கருணை கொலைகளுக்கு சற்றும் சளைத்ததாக தெரியவில்லை. ஆவியாக இருந்தாலும் மெல்ல மனசுக்குள் வந்து அமர்ந்து கொள்கிறது ஹன்சிகாவின் கேரக்டர்.

ராதாரவி, ராஜ்கபூர், சுப்பு பஞ்சு, வினோதினி என்று டஜன் ஆர்ட்டிஸ்ட்டுகள். அவரவர் வேலையை கச்சிதமாக பார்த்திருக்கிறார்கள்.

‘மாயா மாயா’ என்ற ஒரு பாடலில் மட்டும் கவர்கிறார் ஹிப் ஹாப் தமிழா. (உங்களை நடிக்க கூப்பிடுறாங்களாமே, இசையை விட்டுட்டு போயிடுங்களேன் தம்பி)

ஏதோ சத்யம் தியேட்டரையும் ஐநாக்ஸ் தியேட்டரையும் வளைத்துப் போட்ட மாதிரி பிரமாண்டமாக இருக்கிறது அந்த அரண்மனை. அவ்வளவு பெரிய மனைக்கு, லைட்டிங் செட் பண்ணி முடிப்பதற்கே வாரத்திற்கு நாலு கால்ஷீட்டு கிழிஞ்சுருக்குமேங்க? செட்டோ? நிஜமோ? அரண்மனைக்கு சொந்தக்காரர் இந்த படம் பார்க்காமலிருப்பது நல்லது! பார்த்தால், மெயின் சுவிட்சை ஆஃப் பண்ணிட்டு, கேட்டை பூட்டிட்டு கிளம்பியே போயிருப்பார். யுகே.செந்தில் குமாரின் ஒளிப்பதிவில் அப்படியொரு தத்ரூபம்.

ஆங்… முக்கியமான விஷயம். இந்த படத்தில் ஒரு பாடல் காட்சிக்கு திடீர் என்ட்ரி கொடுத்து திகைக்க வைத்திருக்கிறார் குஷ்பு.

திகைக்க வைத்தது குஷ்பு மட்டும்தானா?

"அடடா இந்த ரூமுக்கு ஏன் வந்தோம்?... மூளையை சுறுசுறுப்பாக்க 4 வழிகள்

"அடடா இந்த ரூமுக்கு ஏன் வந்தோம்?"

"என்னாச்சு! அம்மா கடைக்குப் போகச் சொன்னாங்க, கடைக்கு வந்துட்டோம், என்ன வாங்கணும்னு மறந்திடுச்சே..."

"இன்னிக்குத்தானே படிச்சோம் அதுக்குள்ளே மறந்துபோச்சே!"
"வண்டி சாவிய எங்க வச்சேன்னு ஞாபகம் இல்லியே!"

அன்றாடம் இதுபோன்ற எண்ணங்கள் நமக்குத் தோன்றியோ அல்லது மற்றவர்கள் சொல்லியோ நாம் கேட்டுகொண்டிருக்கிறோம். பயப்பட வேண்டாம். இது நோய் இல்லை. எல்லோருக்கும் ஏற்படக்கூடியதுதான். அதற்காக இதை அப்படியே விட்டுவிட வேண்டும் என்று இல்லை. ஞாபகமறதியைக் கட்டுப்படுத்த, மூளை சுறுசுறுப்பாக இயங்க நான்கு வழிகளைக் கடைப்பிடிக்கச் சொல்கிறார்கள்.

1. மெமரி டயட்

அட! இது என்னடா புது டயட்டா! எனத் தலைப்பைப் படித்துவிட்டுச் சோர்ந்துவிடாதீர்கள். ஆன்டிஆக்ஸிடன்ட் நிறைந்த உணவுகள் சாப்பிட்டால், ஞாபகமறதியைத் தவிர்க்கமுடியும் என்கிறார்கள் ஆராய்ச்சியாளர்கள். பச்சை நிறக் காய்கறிகள், பூண்டு, கேரட் போன்றவற்றை உணவில் சேர்த்துவந்தால் ஞாபகமறதி நீங்கும். ஒமேகா-3 நிறைந்திருக்கும் மீன், முட்டையில் இருக்கும் பேஃட்டி அமிலங்கள் மூளை சிறப்பாக செயல்பட உதவும்.

2. மூளைக்கான வொர்க்அவுட்ஸ்

மூளைக்குச் சிறந்த வொர்க்அவுட் புதிர்களை விடுவிப்பதுதான். சுடோகோ, குறுக்கெழுத்து போன்றவை உங்களது நினைவில் தேங்கியிருக்கும் பழைய விஷயங்களை மீட்டெடுக்க உதவும். செஸ் விளையாடுவது, புதிய மொழிகளைக் கற்பது போன்றவையும் சிறந்த வொர்க் அவுட்கள்.

3. நன்றாகத் தூங்குங்கள்

தூக்கம் மிகவும் அவசியமான ஒன்று. நான்கு நாட்கள் மாடு போல உழைத்துவிட்டு, தூங்கும் நேரத்தில் படம் பார்ப்பது, வெட்டிப் பேச்சு பேசுவது, வாட்ஸ்அப் சாட்டிங் செய்வது என இருந்துவிட்டு, இரண்டு நாட்கள் முழுவதும் தூங்கியே கிடப்பது தவறு. தினமும் தூங்க வேண்டும், அளவாக அதே சமயம் நல்ல ஆழ்நிலை தூக்கம் பெற வேண்டும். எந்தக் காரணத்துக்காவும் இரவு 10 மணிக்கு மேல் விழிக்காதீர்கள்.

இரவு 10 முதல் காலை 5 என்பதுதான், உறங்குவதற்குச் சரியான நேரம் என்கின்றனர் ஆராய்ச்சியாளர்கள். குறைந்தது ஏழு முதல் எட்டு மணி நேரம் நன்றாகத் தூங்கினாலே, மூளை புத்துணர்ச்சி அடைந்துவிடும்.

4. இன்று... நேற்று...நாளை

கடந்த காலத்தில் என்ன நடந்தது, தற்போது என்ன நடந்துகொண்டிருக்கிறது, வருங்காலத்தில் என்ன நடக்க வேண்டும், என்ன நடக்கப்போகிறது என்பதைப் பற்றிய புரிதல் வேண்டும்.

சரித்திரம் முதல் இன்ஸ்டாகிராம் வரை அத்தனையும் நினைவில் வைத்திருக்க, எந்தவொரு விஷயத்தையும் முதலில் நினைவில் நிறுத்தி, பின்னர் முறையானப் பயிற்சிகள் மூலம் நினைவை மீட்டெடுக்க வேண்டும். க்விஸ் போட்டி சிறந்த பயிற்சி. குடும்பம், நண்பர்கள் என எல்லோரும் குழுகுழுவாக இணைந்து க்விஸ் பழகினால், மூளை புத்துணர்ச்சியாக இருக்கும்.

சரி பாஸ்! இந்தக் கட்டுரையோட தலைப்பை ஸ்க்ரோல் பண்ணாம, டக்குனு சொல்லுங்க பார்ப்போம்.

ஹேஹேய்... நம்ம கவுண்டமணி ஆன்லைன் தேர்தல் நடத்துறாருங்க!

இன்னும் தம் பிரியாணியைத்தான் இ-மெயிலில் அட்டாச் செய்து அனுப்ப முடியவில்லை, மற்றபடி அனைத்தும் டிஜிட்டல்மயமாகிக் கொண்டிருக்கிறது. இந்நிலையில் வரும் நாட்களில் தேர்தலும் கூட  ணையத்திலேயே நடைபெறும் என தேர்தல் ஆணையம் அறிவித்தாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை. அப்படி ஒருவேளை இணையதளத்தில் தேர்தல் நடத்துவதாக தேர்தல் ஆணையம் அறிவித்தால் எப்படி இருக்கும்? அதுவும் அந்த தேர்தலை நடத்தும் ஆணையர் நம் கவுண்டமணியாக இருந்தால் எப்படி இருக்கும்..? ஒவ்வொரு கட்சியும் கவுண்டமணியிடம் ஆன்லை டிரெண்டுக்கேற்ப தங்கள் கட்சியின் சின்னத்தைக் கேட்கும் நடைமுறை எப்படி இருக்கும்?

அட, கேள்வியா கேட்டுட்டு இருக்காம... சப்ஜெட்டுக்குள்ள குதிச்சுருவோம் பாஸூ!


விஜயகாந்த்: அலோ ஆணையர்.... நாங்க எந்த லோகோவை கேட்கிறமோ, அந்த லோகோவுக்கு சொந்தமான கம்பெனியும் எங்களுக்கே சொந்தமாயிடுமா?

கவுண்டமணி: உஷ்... நீயா..., by the by நான் ரொம்ப பிஸி. சந்தேகம் இருந்தா வேற யாரும் கேட்கலாம்.

விஜயகாந்த்: தம்பி இன்னும் டீ வரல. இத தட்டிக்கேட்க எந்த பத்திரிக்கை காரங்களுக்கும் தைரியம் இல்லையா? அட தூ...

கவுண்டமணி: அவர யாராவது பிடிச்சு உட்கார வையுங்கயா. நாராயணா, இந்த கொசு தொல்ல தாங்க முடியல.


அதிமுக: நீங்க தேர்தல் நடத்துங்க நடத்தாம போங்க. மத்தவங்களுக்கு லோகோ கொடுங்க கொடுக்காம போங்க, எங்களுக்கு அம்மா ஸ்டிக்கர் லோகோ கட்டாயம் வேணும். ஆங்..!

கவுண்டமணி: உங்களுக்கு எந்த லோகோ கொடுத்தாலும், அதுல எப்படியும் அம்மா ஸ்டிக்கர் ஒட்டத்தான் போறிங்க, அதனால வேற எதாச்சும் கேளுங்க.


அதிமுக: அப்படினா, Google லோட 'G' லோகோ கொடுங்க. பியூன்ல இருந்து பெருக்குர ஆயா வரைக்கும் இப்ப எல்லோரும், தன் வண்டியில G-னுபோட்டுக்கிறாங்க. அப்படினா அது கவர்மென்ட் அதிகாரினு அர்த்தம். அது மட்டுமில்ல, G for helth.. எங்க தலைவிக்கு சீக்கிரமே எல்லாம் சரியாகனும். இந்த லோகோவ கொடுத்திங்கனா, சென்டிமெண்ட்டா இருக்கும்.

கவுண்டமணி: அட கொக்காமக்க, இதுல எப்படி டா அம்மா ஸ்டிக்கர் ஒட்டுவிங்க?


அதிமுக: G -க்குள்ள அம்மா படம் போட்டு, நாங்க அதையே ஸ்டிக்கரா மாத்திக்குவோம். அது எங்களுக்கு இன்னும் ஈசியா இருக்கும்.

கவுண்டமணி: நீங்க திருந்தவே மாட்டீங்க. இல்லைனா விடவா போறிங்க.. பரவாயில்லை, அதையே எடுத்துக்கங்க.


திமுக: 2G-ல நாங்க சாதனை பண்ணினவங்க, அதனால அந்த லோகோ எங்களுக்குத்தான் வேணும்.

பி.ஜே.பி: நாங்க எல்லாம் மோடிய, மோடிஜி மோடிஜி னுதான் சொல்றோம். அதுனால, அந்த லோகோ எங்களுக்குதான்.

கவுண்டமணி: யாரு... ஓ.... பிஜேபியா, பூவ.. பூன்னு சொல்லலாம். புஷ்பமுனு சொல்லலாம்.  நீங்க சொல்ற மாதிரியும் சொல்லலாம். முதல் ஏலம் முடிஞ்சி போச்சு. அடுத்தவங்க கேட்கலாம்!


தேமுதிக: அதிமுகவுக்கு G கொடுத்துட்டாங்கலாம்!

விஜயகாந்த்: கொடுக்கட்டும்.

திமுக: எங்க தளபதி மாட்டு வண்டியில கம்பீரமா நிக்கிற மாதிரி, பேக்கிரவுண்டுல சூரியன் தெரியுர மாதிரி எதாவது லோகோ இருந்தா தாங்க. இல்லைனா 'நமக்கு நாமே' லோகோ உருவாக்கிடுவோம்.

கவுண்டமணி: சூரியனை யாரும் சுட முடியாது. சூரியன்தான் நம்மல சுடும்.


திமுக: சரி சரி, தளபதியிலிருந்து அடிமட்ட கட்சி தொண்டன் வரைக்கும் நாங்க எல்லாம் ஃபேஸ்புக்குல வந்துட்டோம். அதுனால எங்களுக்கு ஃபேஸ்புக் லோகோவே கொடுங்க.

பாமக: பார்டா, நாங்க மட்டும் என்ன சாலிக்கிராமத்துலயா இருக்கோம். நாங்களும் ஃபேஸ்புக்லதான் இருக்கோம். ஒழுங்கா எங்களுக்கு கொடுங்க.

தேமுதிக: திமுகவுக்கு Fb கொடுத்துட்டாங்களாம்.

விஜயகாந்த்: கொடுக்கட்டும்.

தேமுதிக: தலைவரே, இத நம்ம தூக்கிடலாமா?

விஜயகாந்த்: பொறுமையா இரு.

பாஜக: எங்களுக்கு பூ மாதிரி எதாவது கொடுங்க.

கவுண்டமணி: பூ மாதிரியா..? ஏன் இதுவரைக்கும் எங்க காதுல பூ வச்சது பத்தாதா?



பாஜக: அப்ப வாட்ஸ்அப் தாங்க. அப்பதான் உலகம் பூரா சுத்துர எங்க மோடிஜி, செல்ஃபி எடுத்து உடனுக்குடன் அப்டேட் செய்வார். அதுமட்டுமில்ல, வாட்ஸ்அப் வச்சிருக்கிற ஓட்டையெல்லாம் நாங்க ஈசியா அள்ளிருவோம்.

தேமுதிக: தலைவரே... ம்னு சொல்லுங்க. இப்ப தூக்கிடலாமா?

விஜயகாந்த்: பொறுமையா இரு.

காங்கிரஸ்: ஃபேஸ்புக், வாட்ஸ்அப் எல்லாம் பழசு. ட்விட்டர்தான் டிரெண்டு. அதுல பதிவு செய்யுற எந்த செய்தியும் வைரலா போயிடுது. அதனலா, அதையே தந்திருங்க!

கவுண்டமணி: இப்ப தேமுதிக கேட்கலாம்.


விஜயகாந்த்: நான் தொண்டர்கள கூட்டிதான் முடிவு பண்ணுவேன். என்ன மக்களே சரிதானே!?

பாமக: எங்களுக்கு எதாவது நல்ல பழமா தாங்கய்யா..

கவுண்டமணி: அடடா... நான் என்ன திருவிளையாடலா நடத்துறேன். தேர்தல்யா..!


பாமக: எங்களுக்கு லைக் போடுர லோகோ கொடுங்க. அப்பதான் யாரு என்ன ஸ்டேட்டஸ் போட்டாலும், அங்க லைக் போடும்போது எங்க ஞாபகம் வரும். அதுமட்டுமில்லாம, நெட்டுல ஒவ்வொருத்தரும் போடும் ஒவ்வொரு லைக்கும், எங்களுக்கு ஒவ்வொரு ஓட்டுடா...

வைகோ: நீங்களா என்னைய கூப்பிடுவிங்கனு பார்த்தா, யாருமே என்னை கூப்பிடல. அதான் வான்டடா நானே வந்துட்டேன். எனக்கு எதாவது தருவிங்களா? தரமாட்டிங்களா?  நான் எப்பவுமே மூச்சு முட்ட பேசிகிட்டே இருப்பேன். அதனால என் எனர்ஜிக்கு ஏத்தமாதிரி, பேட்டரிஒ சார்ஜ் புல்லா காமிக்கிர லோகோ தாங்க.

கவுண்டமணி:  ஆளே இல்லாத இடத்துல பேசுனிங்கனா, சார்ஜ் போயிடும் பராவாயில்லையா?


மதிமுக: மறுபடியும் நான் சார்ஜ் ஏத்திக்கிவேன். இதல எதவாது குத்தம் சொல்லி நீங்க மறுத்தா நான் சுப்ரீம் கோர்ட்ல போயி வாதாடுவேன்.

கவுண்டமணி: பெட்ரோமாக்ஸ் லைட்டேதான் வேணுமா? சரி... வைச்சுக்கங்க!


சீமான்: நீங்க கொடுக்குற ஆப்பிள், பி.எம்.டபுல்யூ லோகோலாம் வேண்டாம். தமிழனுக்குனு ஒரு நாடு இல்ல. அதனால, எங்களுக்கு புலிகொடிதான் வேணும்.  இல்லைனா கையை முறுக்கி தூக்கி பிடிச்ச மாதிரி லோகோ தாங்க. இல்லைனா Hip pop தமிழா லோகோ தாங்க. இல்ல நான் வீதி வீதியா மைக்கு பிடிச்சு பேசுவேன். ஏன்னா, தமிழ்நாட்டு மானத்த காப்பத்த நான் ஒருத்தன் தான் இருக்கேன்.

கவுண்டமணி: தமிழ்நாடு மேப் எடுத்துக்கிறிங்களா?


சீமான்: இது நல்லா இருக்கே! சரி சரி முறைக்காதிங்க, எல்லார் கையுலயும் செல்போன் இருக்கு, அதுனால செல்போன் லோகோவையே தாங்க.

திருமாவளவன்: ஜாதியை எதிர்க்கிற மாதிரி எதாவது இருந்தா தாங்க!

கவுண்டமணி: அப்படியெல்லாம் லோகோ இல்லிங்க. நீங்க கேட்கிறது இங்க எப்படியும் கிடைக்கப்போறது இல்ல. அதனால நான் செல்போன் சார்ஜ் இறங்கிபோகும்போது காமிக்கிர லோகோ தரேன். அதான் உங்களுக்குப் பொருத்தமா இருக்கும்.


தேமுதிக: தலைவரே... ’ம்’னு சொல்லுங்க.இப்ப தூக்கிடலாமா?

விஜயகாந்த்: பொறுமையா இரு!

லட்சிய திமுக: எங்களுக்கு புலி தான் வேணும்.

கவுண்டமணி: புளியங்கொட்டை கூட கிடையாது. நீங்க எப்படியும் தேர்தல்ல நிக்கப்போறது இல்ல. அப்பறம் எதுக்கு சின்னம்? யு ஆர் ரிஜெட்டட்.


தேமுதிக: தலைவரே...  ’ம்’னு சொல்லுங்க. இப்ப தூக்கிடலாமா?

விஜயகாந்த்: பொறுமையா இரு!

கவுண்டமணி:அட... இதுக்கு அப்பறம் ஆளே இல்லை... நீதான் கேட்கனும்!

தேமுதிக: எங்களுக்கு மூன்று சிங்க முகம் கொண்ட முத்திரை வேணும்.

கவுண்டமணி: யோவ், அது அரசாங்க முத்திரை. அதெல்லாம் தர முடியாது.


தேமுதிக: அப்ப, அந்த சிங்க முகத்துக்கு கீழ இரண்டு பக்கமும் கத்தி சொருவுன மாதிரி இருக்கிற லோகோ தாங்க.

கவுண்டமணி:: யோவ், அது இந்தியன் ஆர்மி லோகோ. அதெயெல்லாம் தர முடியாது. பொறுமையா இரு, பொறுமையா இருனு சொல்லும்போதே நான் நினைச்சேன்யா, இப்படி எதாவது ஏடாகூடமா கேட்பேனு.


விஜயகாந்த்: மக்களே.. இப்ப என்ன செய்யலாம்?

தேமுதிக: தலைவரே, இப்பயாவது தூக்கிடலாமா? டீ ரொம்ப நேரமா ஆறுது.

விஜயகாந்த்: என்னது டீயா? அப்ப இவ்வளவு நேரமா அதைத்தான் தூக்கிரலாமானு கேட்டுட்டு இருந்தியா? டேய்... என்னடா பண்ணிட்டு இருந்தீங்க இவ்ளோ நேரம்!

தேமுதிக: இல்லை தலைவரே... எல்லா கேசும் நம்ம மேல வருதுல, அதான் உங்களுக்கும் சேர்த்து ஜாமீன் வாங்கிட்டு வர கோயம்பேடு மார்க்கெட் வரைக்கும் போயிருந்தேன்.

விஜயகாந்த்: அடேய்...!

கவுண்டமணி: ஏய்... என்னப்பா ஏதாவது சின்னம் வேணுமா வேண்டாமா?


விஜயகாந்த்: இனிமே என்ன இருக்கு.. நான் கேட்க. நீங்களா எதையாவது ஒன்ன தருவிங்க... அத நா வாங்கிக்கனுமா? பத்திரிகைகாரங்க இத தட்டி கேட்க மாட்டாங்களே? அட.. தூ..!


கவுண்டமணி:  யோவ் எப்ப பாத்தாலும் துப்பிகிட்டே இருக்க. என்ன வெத்தல போட்டுருக்கியா?


விஜயகாந்த்: என்னை எதிர்க்கிரவங்க வாயிதான் வெத்தல போடும். நான் நினைச்ச பேக் சாட்டுல வந்து, தூக்கி அடிச்சிருவேன். அதுக்கு மட்டும் யாராவது டூப் போட்டா போதும். ஆங்..!


கவுண்டமணி:  லோகோ வேணுமா வேண்டாமா?


விஜயகாந்த்: வேணும், ஆனா... வேண்டாம்.

கவுண்டமணி: உஸ்ஸ்.. அப்பா...


விஜயகாந்த்: யுவர் ஆனர்.. கண்ணு சிவக்குர மாதிரி, நாக்கு துறுத்துர மாதிரி, கையை முறுக்கிர மாதிரி, வேட்டிய மடிச்சு கட்டுர மாதிரி, துண்ட எடுத்து தோள்ல போடுர மாதிரி சின்னம் கொடுங்க..!

கவுண்டமணி: அதுக்கு உங்க பாஸ்போர்ட் சைஸ் போட்டோதான் கொடுக்கணும்.

மக்களே... என்னை விட்ருங்க... இவங்க கேக்குற சின்னமெல்லாம் தஞ்சாவூர் கல்வெட்டுல பொறிச்சு வைச்சுட்டு நான் பக்கத்துலேயே உக்காந்துக்குறேன். ஆளை விடுங்கடா சாமி..!

அட...! ஜெயலலிதா, ஒபாமா, மார்க், கருணாநிதியிடம் இந்த ஒற்றுமையை கவனித்தீர்களா..?!

நம்மில் சிலர் ஒரே நிற, அல்லது மிகவும் பிடித்த ஆடையை தொடர்ந்து அணிபவராக இருப்பர். அவரை அந்த சட்டையை வைத்தே கூட அடையாளம் கூறும் அளவுக்கு அவரை அனைவருக்கும் தெரிந்திருக்கும்.உலகின் பிரபலங்கள் துவங்கி,  உங்கள் அலுவலகத்தில் உள்ள உங்களது சக பணியாளர் வரை அனைவரையுமே நீங்கள் இதேபோன்ற ஆட்டிட்யூடில் ( attitude) பார்க்கலாம்.

நாம் இங்கு பார்க்கும் சில பிரபலங்கள் கூட இதே போன்றுதான் தனக்கென தனி உடை அடையாளங்களை கொண்டு காணப்படுகின்றனர்.

மார்க் சக்கர்பெர்க்:


ஃபேஸ்புக் நிறுவனர் மார்க் சக்கர்பெர்க் பெயரை கூகுளில் புகைப்படமாக தேடினால்,  அதில் 85 சதவிகிதத்துக்கும் அதிகமான புகைப்படங்களில் சாம்பல் கலர் டி-ஷர்ட்டுடன் மட்டுமே காணப்படுவார். எந்த ஊரில் பேசினாலும் சரி, எந்த நாடாக இருந்தாலும் சரி இவரது உடை இது மட்டும்தான். அதில் ஃபேஸ்புக்கின் நோட்டிஃபிகேஷன், மெஸேஜ், ரிக்வெஸ்ட் லோகோக்கள் இடம் பெற்றிருக்கும். இதனை மேலாண்மை தத்துவங்கள் இவரிடம் கொள்கையில் இருந்து மாறாத தலைவர் என்பதையே காட்டுவதாகவும் கூறுகின்றன.

ஜெயலலிதா:




தமிழக முதலமைச்சர் ஜெயலலிதா தேர்தல் பிரச்சாரங்கள் துவங்கி, பொதுக்கூட்டம், சட்டசபை என அனைத்து நிகழ்ச்சிகளுக்கும் ஜெயலலிதா பச்சை நிற புடவை அணிந்துதான் வந்திருப்பார். அவரை அடையாளப்படுத்தும் புகைப்படங்களுமே,  அவரை அதே நிற உடையில்தான் காட்டும். சரியோ தவறோ,   தன் முடிவுகளில் ஒரே மாதிரியான நிலைப்பாட்டை தொடர்பவர். தனது நிர்வாகத்திற்கு ஒத்துவராத அமைச்சரை சட்டென்று நீக்கும் குணம் கொண்டவராக இருப்பார்.

ஒபாமா:


தன் பேச்சால் அமெரிக்க அதிபராக உருவாகிய பாரக் ஒபாமாவை,  உங்களால் சாதாரண தோற்றத்தில் பார்த்திருக்க முடியாது.  அனைவரது மனதிலும் கோட் சூட்டுடன் உள்ள ஒபாமாதான் நமக்கு நினைவில் வருவார். இன்றைக்கு பலர்,  அதிபர் தேர்தலுக்கான போட்டியில் வரிசையில் நின்றாலும் ஒபாமாவுக்கு என ஒரு தனி இடம் அமெரிக்க அதிபர்கள் பட்டியலில் உண்டு.

கிறிஸ்டோபர் நோலன்:



வித்தியாசமான அறிவியல் தொடர்பான படங்களை எடுக்கும் இவர்,  உலக சினிமாவிற்கென ஒரு இலக்கணம் வகுத்தவர். இவரது படங்களை போலவே அடர்நிறம் கொண்ட உடையுடன் காணப்படுவார். இது தான் இவரது படங்களின் வெற்றி ரகசியமும் கூட.

கருணாநிதி:



திமுக தலைவர் கருணாநிதியை பொறுத்தவரை சமீப வருடங்களாகவே அவரை எப்போதும் மஞ்சள் துண்டு, கருப்பு கண்ணாடியுடன் மட்டுமே பார்த்திருப்போம். அண்மைகாலமாக இதுதான் அவரது மாறாத அடையாளமாக இருந்து வருகிறது. அவர் நீண்ட காலமாக ஒரு கட்சிக்கு தலைவராகவும், 90 வயதுக்கு மேலும்  சீரிய தலைமை பண்புடன் செயல்படுவதையும் அனைவரும் பார்த்திருப்போம்.

ஸ்டீவ் ஜாப்ஸ்:

இவர் புதுமைகளுக்கு பெயர் பெற்ற தலைவர். நிறங்களுக்கு முக்கியத்துவம் அளிப்பவர்.  ஆப்பிள் நிறுவன லோகோவில் இவரது திறமை நன்கு வெளிப்பட்டிருக்கும். ஆப்பிள் நிறுவன நிகழ்வுகளிலும் சரி, பொது சந்திப்புகளிலும் சரி, ஜாப்ஸை ப்ளாக் டி-ஷர்ட்டில் பார்க்க முடியும். அதுதான் ஜாப்ஸின் தனித்துவம். ஜாப்ஸ் ஒரு சிறந்த தலைவர் மட்டுமல்,  சிறந்த ஆசிரியர். இவரைதான் தனது குருவாக கொண்டு செயல்படுகிறார் ஃபேஸ்புக் நிறுவனர் மார்க் சக்கர்பெர்க்.


இவர்கள் எப்படி பட்டவர்கள்?

இவர்கள் ஒரே சீரான, வெற்றியை நோக்கிய பயணத்தை தொடர வேண்டும் என்ற ஆர்வம் கொண்டவர்களாக இருப்பார்கள்.

இது போன்ற குணம் கொண்டவர்கள் நிச்சயம் தலைமை பதவி வகிப்பவர்களாக இருப்பார்கள் அல்லது தலைமை பண்போடு காணப்படுவார்கள்.

இவர்கள் தங்கள் முடிவுகளில் தெளிவாகவும், முடிவுக்கு முன் நீண்ட திட்டமிடலையும், முடிவுக்கு பின் ஏதேனும் சறுக்கல் ஏற்பட்டால் அதற்கான ப்ளான் B-யும் கையில் வைத்திருப்பார்கள்.

இவர்கள் வெற்றி, தோல்வி இரண்டையும் ஒரே மாதிரியாக அணுகுவார்கள்.


கலர் ரகசியம் இது தான்!

ஏன் இவர்கள் இப்படி ஒரே கலரை தேர்ந்தெடுக்கிறார்கள் என்றால்,  அதுதான் அவர்களை பிரதிபலிக்கும் சுய பிராண்டிங் கருவியாகிறது. இவர்களின் பிராண்டிங்க்கிற்கு இது மிகவும் உதவியாக இருக்கிறது.

ஒரே மாதிரியாக செயல்படுபவர், மிஸ்டர் கன்ஸிஸ்டன்ஸி என்ற விஷயத்தை எல்லாம் இது எளிமையாக விளக்கி விடும்.



எப்படி ஒரு பிராண்டை ஒரே கலரில் மனதில் பதிய வைப்பார்களோ,  அதே உத்திதான் இந்த தனிமனித பிராண்டிங்கிற்கும். மக்கள் இதே நிற உடையில் இவர்களை பார்த்து பழகிவிட்டால் யாரை இந்த உடையில் பார்த்தாலும் இவர்களை நினைவில் கொள்வார்கள்.

கொஞ்சம் யோசிச்சு இப்ப சொல்லுங்க பாஸ்... நீங்க இதே மாதிரி ஒரே நிற உடையை விரும்பி அணிகிறீர்கள் என்றால்,  அந்த உடை அணிந்து செல்லும் நாட்களில் உங்களுக்கே தெரியாமல் உங்கள் செயல்திறன் அதிகரித்து காணப்படும்.

அப்படி இருந்தால் நீங்களும் ஒரு தலைவனுக்கு உரிய தகுதியுடையவரே...!

அக்குவாஃபீனாவும் அலற வைக்கும் ரகசியங்களும்; ஒப்புக் கொண்டது பெப்ஸி!

வீட்டிலுள்ள சமையலறைக் குழாய்களில் வரும் குடிநீரை, ஒரு லிட்டர் 20 ரூபாய் என்று எவரேனும் விற்றால் வாங்குவோமா? அவ்வாறு யாரேனும் வாங்கினால் கேலி செய்து சிரிப்போம்தானே? உலகப் பன்னாட்டு நிறுவனங்கள் விற்கும் இந்த பாட்டில் தண்ணீரை வாங்கி குடிப்பவர்கள் அனைவருமே அத்தகைய கேலிக்குரியவர்கள்தான் என்பதே உண்மை.

பெப்ஸி நிறுவனத்தின் தயாரிப்பான, ’அக்குவாஃபீனா’, வெறும் சாதாரண பைப் தண்ணீரையே  சுத்திகரித்து மினரல் வாட்டர் எனற விற்பனை செய்து வருவதாக ஒப்புக் கொண்டுள்ளது. இதேப் போல நெஸ்ட்லே நிறுவனத்தின் , ‘ப்யூர் லைஃப்’ மற்றும்  கோக் நிறுவனத்தின்  நிறுவனத்தின், ’தஸானி’ யும் இதே போல்தான்.

கடந்த 2007 ஆம் ஆண்டு, அமெரிக்க அரசின் ஒரு அங்கமான, பெருநிறுவன சோதனை வாரியம் (Corporate Accountability International),  அக்குவாஃபீனா வின் நீர் ஆதாரம்  குறித்து ஆய்வு மேற்கொண்டபோது, சாதாரண குழாய் நீரையே, சுத்திகரித்து விற்பனை செய்வதாக ஒப்புக்கொண்டது பெப்ஸி நிறுவனம். அதைத் தொடர்ந்து எழுந்த சர்ச்சைகளினால், தனது புதிய தயாரிப்புகளிலெல்லாம், ‘பொதுத்தண்ணீரிலிருந்து சுத்திகரிக்கப்பட்டவை (Public water source)’ என்று அச்சிடத் தொடங்கியது.

இந்நிறுவனம். ஆனால் பெப்ஸி பாட்டில்களில் எல்லாம் மலைகளுக்கிடையே தண்ணீர் ஓடி வருவது போல லேபிள்கள் ஒட்டப்பட்டிருக்கும். தங்கள் தயாரிப்பு இயற்கையானவை என்பதை காட்டவே இத்தகைய லேபிள்கள் அதில் ஒட்டப்பட்டு வந்தன. இந்த விவகாரத்தையடுத்து, அது போன்ற லேபிள்களையும் பயன்படுத்தக் கூடாது என்றும் உத்தரவிடப்பட்டது.

இதைத்தொடர்ந்து பல்வேறு சர்வதேச ஊடகங்கள் குடிநீர் தயாரிப்பின் பின்னணியிலுள்ள வணிக யுக்திகளைக் குறித்து ஆய்வு  மேற்கொண்டதில், வெளிவந்தத் தகவல்கள் அதிர்ச்சி அளிக்கின்றன.

சுமார் 9.7 பில்லியன் கலன் நீரிலிருந்து 11.8 பில்லியன் அமெரிக்க டாலர்கள் ஈட்டுவதே பெப்ஸி போன்ற பன்னாட்டு நிறுவனங்களின் நோக்கம். இதில் ஒரு கலன் சுத்திகரிக்கப்பட்டக் குடிநீர், 1.22 அமெரிக்க டாலர்கள். இதில் மூன்றில் இரண்டு மடங்கு தண்ணீர், 500 மிலி பாட்டில்களாக சந்தைப்படுத்தப்படுகிறது. அரை லிட்டர் குடிநீரின் விலை, 16.9 செண்ட்கள்.

மொத்தத்தில், சாதாரணக் குழாய் நீர், சுத்திகரிக்கப்பட்டக் குடிநீர் என்ற பெயரில் சுமார் 2000 மடங்கு விலையேற்றம் செய்யப்பட்டு மக்களிடம் சந்தைப்படுத்தப்படுகிறது.

மேலும் இந்த பாட்டில்களைத் தயாரிக்கப் பயன்படுத்தபடும் பிளாஸ்டிக்குகளும் , அவற்றைப் பதப்படுத்தப் பயன்படும் பல்வேறு இரசாயனங்களும், மனித உடலிலுள்ள நரம்புகளையும், சுரப்பிகளையும் பாதிக்கும் தன்மை வாய்ந்தவை என்று கண்டறியப்பட்டுள்ளது  (Endocrine disrupting chemicals).

இது மட்டுமன்றி பாலியல் உறவுக்கு அடிப்படைத் தேவையான முக்கியச் சுரப்பிகளான  ஈஸ்ட்ரோஜென் மற்றும் ஆண்ட்ரோஜென் ஆகியவற்றையும் இது பாதிக்கிறது என்கிறது ஆய்வுத் தகவல்.மேலும் அதிரடிச் சோதனைகளுக்கோ, நேரடி ஆய்வுக்கோ இந்நிறுவனங்களை ஆட்படுத்த முடியாத சட்டப் பாதுகாப்பு இருப்பதால், இவர்களின் செயல்முறை விளக்கங்களும் மர்மமாகவே உள்ளன.

இத்தகைய நிறுவனங்கள்தான் நம் தாமிரபரணிக்குக் குறி வைக்கின்றன என்பதை தமிழக அரசு புரிந்து கொள்ள வேண்டும்.

மாத்தி யோசித்த கலெக்டர்!

நாட்டில் எது இருக்கிறதோ இல்லையோ ஜாதி இருக்கிறது, தற்கொலை இருக்கிறது, கொலை இருக்கிறது. அவற்றுக்கு ஈடாக சுத்தமில்லாத குளங்களும் உள்ளன.

நம் ஒவ்வொருவரின் தெரு ஓரத்திலும் தூர்வாரப்படாத ஒரு குளம் கண்டிப்பாக இருக்கும். அதைப் பற்றி நம் அன்றாட வாழ்வில் நினைப்பதுகூட இல்லை. என்றாவது ஒரு நாள் திடீரென குளம் சுத்தமாக்கப்படும்! அதுவும் ஏதோ மந்திரி வந்தால் மட்டுமே. ஆனால் எவ்வித சுயநல நோக்கமுமின்றி,  பணத்தை வீண் விரயம் செய்யாமல், புதுமையாக யோசித்து ஒரு குளத்தை சுத்தம் செய்திருக்கிறார் கோழிக்கோடு கலெக்டர் பிரஷாந்த் நாயர்.

இவரது புதுமை என்னவென்றால்,  குளத்தைச் சுத்தம் செய்பவர்களுக்கு 1 பிளேட் பிரியாணி, அதுவும் சுவையான மலபார் பிரியாணி இலவசமாக வழங்கப்படும் என்பதுதான். கொயிலாண்டியில் உள்ள பிஷாரிக்காவு குளம் 14 ஏக்கர் நிலப்பரப்பு உடையது. முழுவதும் குப்பை, ஆகாயத் தாமரையால் நிறைந்து இருக்கும் ஒரு குளத்தைச் சுத்தம் செய்வது என்பது அவ்வளவு எளிதான ஒரு விஷயம் இல்லை.

இந்த குளத்தைச் சுத்தம் செய்ய வேலையாட்களுக்கு பணம் கொடுத்து இருக்கலாம். ஆனால், அந்த பணம் நேரடியாக எந்த ஊழலும் இல்லாமல் மக்களிடம் சென்றடைகிறதா என்பது முதல் கேள்வி. மேலும், அந்த காசு மக்களின் வயிற்றை நிறைக்கிறதா, வீண் விரயம் ஆக்கப்படுகிறதா என்பது இரண்டாம் கேள்வி. இது எதற்கும் வழி வகுக்காமல் சுத்தம் செய்ய முன்வருபவர்களுக்கு சுவையான பிரியாணியை அளித்திருக்கிறார் பிரஷாந்த். இந்த பிரியாணிக்கான காசை மாவட்ட நிர்வாகத்தின் வறட்சி தடுப்பு நிதியில் இருந்து பெற்றுக் கொண்டார்.

 "மக்கள் ஒருவருக்கு ஒருவர் உதவியாக இருக்க வேண்டும். ஒரு கருணைமிகு சமுதாயமாக இது மாற வேண்டும் என்பதே என் ஆசை. நமது பார்வை வெறும் கட்டடம், கல், மண், பணம் இவற்றில் இருந்து மனிதர்களை நோக்கி மாற வேண்டும்" என்கிறார் பிரஷாந்த்.

இவர் மீது மக்கள் வைத்திருக்கும் அன்பு,  இவரது முகநூல் பக்கத்தில் 1,60,000 லைக்குகளில் பிரதிபலிக்கிறது.

இவர் இதற்கு முன்னர்,  உள்துறை அமைச்சருக்கான செகரெட்ரியாகப் பணியாற்றி வந்துள்ளார். இவர் இதற்கு முன்பு கொண்டுவந்த "ஆப்ரேஷன் சுலைமானி" ஏகப்பிரபலம் அடைந்தது குறிப்பிடத்தக்கது. இதன்படி, கலெக்டர் அலுவலகத்தில் இருந்து கூப்பனை பெற்று,  கோழிக்கோடு முழுவதும் குறிப்பிட்ட சில கடைகளில் கொடுத்து வயிறார உணவு உண்ணலாம். அந்த உணவிற்கான காசு sponsorship மூலம் வழங்கப்படும்.

ஒவ்வொரு ஊரிலும் இதுபோல அழிந்துவரும் குளங்கள், ஆறுகள் ஏராளம். இதே நிலைமை நீடித்தால் குளம் என்றால் என்ன? என கேட்கும் தலைமுறை உருவாகும்.

நாம் இழந்த செழிப்பை மீட்க இதுபோல "மாத்தி யோசிக்கும்" தளபதிகள், தலைவர்கள் நம் நாட்டிற்கு தேவை!

மணிரத்னத்தையே பாதித்த இளம் இயக்குனரின் படம்

தமிழ் சினிமாவிற்கு தளபதி, நாயகன், ஆய்த எழுத்து என தரமான படங்களை கொடுத்தவர் மணிரத்னம். எந்தவொரு இளம் இயக்குனர்களுக்கும் மணிரத்னம் தான் ரோல் மாடல்.

இவரையே ஒரு படம் சமீபத்தில் மிகவும் பாதித்து விட்டதாம், வெற்றிமாறன் இயக்கத்தில் இந்த வாரம் திரைக்கு வரவிருக்கும் படம் விசாரணை.

இப்படத்தை ஏற்கனவே கமல்ஹாசன் மனம் திறந்த பாராட்டினார், தற்போது இயக்குனர் மணிரத்னமும் இந்த படம் தன்னை மிகவும் பாதித்ததாக கூறியுள்ளார்.

'விசாரணை' கண்டு வியந்தேன்: வெற்றிமாறனுக்கு கமல்ஹாசன் பாராட்டு

 'விசாரணை' படம் பார்த்து தான் வியந்துவிட்டதாக இயக்குநர் வெற்றிமாறனுக்கு கமல்ஹாசன் பாராட்டு தெரிவித்திருக்கிறார்.

தினேஷ், சமுத்திரக்கனி, ஆனந்தி உள்ளிட்ட பலர் நடிக்க, வெற்றிமாறன் இயக்கத்தில் தயாராகி இருக்கும் படம் 'விசாரணை'. தனுஷ் மற்றும் வெற்றிமாறன் இணைந்து தயாரித்திருக்கிறார்கள். இப்படத்தின் அனைத்து உரிமைகளையும் லைக்கா நிறுவனம் வாங்கியிருக்கிறது.

படத்தின் பணிகள் அனைத்துமே முடிந்து, உலகத் திரைப்பட விழாக்களுக்கு அனுப்பினார்கள். முதலில் வெனிஸ் திரைப்பட விழாவில் திரையிட 'விசாரணை' தேர்வானது. இவ்விழாவில் திரையிட தேர்வான முதல் தமிழ் படம் 'விசாரணை' என்பது குறிப்பிடத்தக்கது. அதனைத் தொடர்ந்து பல்வேறு திரைப்பட விழாக்களில் இப்படம் திரையிடப்பட்டு வரவேற்பு கிடைத்தது.

சென்சார் அதிகாரிகள் இப்படத்துக்கு 'யு/ஏ' சான்றிதழ் அளித்துள்ளனர். இப்படத்தின் உரிமையைக் கைப்பற்றி இருக்கும் லைக்கா நிறுவனத்தினர் 'விசாரணை' பிப்ரவரி 5ம் தேதி வெளிவரும் என்று அறிவித்திருக்கிறார்கள்.

இந்நிலையில், இப்படத்தைப் பார்த்த கமல்ஹாசன் இயக்குநர் வெற்றிமாறனை வெகுவாக பாராட்டியிருக்கிறார். 'விசாரணை' படம் குறித்து கமல்ஹாசன் தனது ட்விட்டர் பக்கத்தில் "நல்ல சினிமாவின் தாக்கத்தை வெற்றிமாறன் மனதில் பதித்துச் சென்ற என் பாலு மகேந்திராவிற்கு நன்றி. நேற்று 'விசாரணை' என்ற சினிமா கண்டு வியந்தேன்" என்று தெரிவித்திருக்கிறார். 

கோடம்பாக்கத்தின் இன்றைய சூதாட்டம்!

 தமிழ் சினிமா கோடிகள் புழங்கும் துறையாகிப் பல ஆண்டுகள் ஆகின்றன. இந்தத் தொகையை முதலீடு செய்வது தயாரிப்பாளர்கள்தான் என்பது எல்லோருக்கும் தெரியும். அப்படிப்பட்ட தயாரிப்பாளர்கள் எவ்வளவு பணக்காரர்களாக இருக்க வேண்டும். எவ்வளவு வசதியாக இருக்கு வேண்டும்.

ஆனால் உண்மை நிலவரம் வேறு. இன்று பெரும்பாலான தயாரிப்பாளர்கள் வாடகை காரில் செல்ல, நடிகர்கள்தான் விதம்விதமான சொகுசு காரில் வலம் வருகிறார்கள். செல்வம் கொழிக்கும் எந்தத் துறையிலும் முதலாளிகள் அல்லது தயாரிப்பாளர்களின் நிலை இப்படி இல்லை. ஆனால் இதுதான் இன்றைய தமிழ் சினிமாவின் யதார்த்தம்.

ஏன் இந்த நிலை?

தமிழ் சினிமாவின் வியாபாரத்தில் தற்போது ஏற்பட்டுள்ள மாற்றம்தான் இதற்குக் காரணம் என்கிறார்கள் திரைத் துறையைச் சேர்ந்தவர்கள். “ஒரு நடிகருக்கு ஒரே ஒரு படம் பிரம்மாண்ட வெற்றியடைந்துவிட்டால், அந்த நடிகர் அடுத்த படத்துக்கான தனது சம்பளத்தில் 3 கோடி வரை உயர்த்திவிடுகிறார். சம்பளம் உயரும்போது படத்தின் தயாரிப்புச் செலவு உயருகிறது.

அதே நடிகரின் படம் தோல்வியடையும் பட்சத்தில் சம்பளத்தைக் குறைக்கிறாரா என்றால் கண்டிப்பாக இல்லை. சம்பளத்தைக் குறைப்பது என்பது தங்கள் தன்மானத்துக்கு இழுக்கு என நடிகர்கள் கருதுகிறார்கள்” என்று பெயரை வெளியிட விரும்பாத ஒரு தயாரிப்பாளர் கூறுகிறார்.

இந்த உதாரணத்தைப் பார்த்தால் அவர் சொல்வது எவ்வளவு உண்மை என்பது புரியும். 2015-ம் ஆண்டு ஒரு நடிகரின் படம் பிரம்மாண்ட வெற்றி பெற்றது. அதைத் தொடர்ந்து ஒரு தயாரிப்பாளர் அவரை வைத்துப் படம் பண்ண அணுகியிருக்கிறார். அந்த நடிகர் கேட்ட சம்பளத்தால், அப்படியே திரும்பிவிட்டார்.

படத்தின் விநியோக வியாபாரத்திலும் பெரும் மாற்றம் நிகழ்ந்திருக்கிறது. ‘கரகாட்டக்காரன்' படத்தின் தயாரிப்புச் செலவு 22 லட்சம். படத்தின் மொத்த வசூல் சுமார் 6.5 கோடி என்கிறார்கள். அந்தத் தயாரிப்பாளருக்கு, அதே நடிகர் அடுத்த படம் பண்ணுகிறார். முதல் படம் 6.5 கோடி வசூலானது, இப்படமும் அந்த அளவுக்கு வசூலாகும் என்று கணக்குப் போட்டு 6.5 கோடிக்கு மேல் விற்பனை செய்ய முனையவில்லை. ரூ. 28 லட்சம் ரூபாய் பொருட்செலவில் படத்தைத் தயாரித்து அதில் சில லட்சங்களை மட்டும் லாபம் வைத்து விற்றார்கள்.

இது இப்போது எப்படி இருக்கிறது என்று பாருங்கள். சில ஆண்டுகளுக்கு முன்பு ஒரு முன்னணி நடிகரின் படம் ரூ.14 கோடி செலவில் தயாரானது. அது சுமார் ரூ.18 கோடிக்கு வியாபாரம் ஆனது. சுமார் ரூ.35 கோடி வசூலை அள்ளியது. அந்த நடிகர் உடனே தனது சம்பளத்தைக் கணிசமாக உயர்த்தினார். அதே நடிகரின் அடுத்த படத்தினை ரூ.34 கோடிக்கு ஒரு முன்னணி நிறுவனம் வாங்கி விநியோகம் செய்தது.

அதில் பெருத்த நஷ்டமே கிடைத்தது. ஆனால் இந்த நஷ்டம் வாங்கியவருக்குத்தான். நடிகருக்கு அல்ல. அவர் ஏற்றிய சம்பளம் ஏற்றியதுதான். அதன் பிறகு அவருக்கு வெற்றிகளும் தோல்விகளும் மாறிமாறி வந்துகொண்டுதான் இருக்கின்றன. ஆனாலும் இன்றுவரை அவரது சம்பளம் ஏறுமுகத்தில்தான் உள்ளது.

தயாரிப்பாளர்களாக மாறும் நடிகர்கள்

முன்னணி நடிகர்கள் பலரும் தயாரிப்பாளர்களாக மாறிவருகிறார்கள். அதற்குக் காரணம், தயாரிப்பாளர்கள் குறைந்துகொண்டேவருவதுதான். தமிழ் சினிமாவில் கொடி கட்டிப் பறந்த ஏ.வி.எம்., சூப்பர் குட் பிலிம்ஸ் போன்ற நிறுவனங்கள் தங்களது படத் தயாரிப்புகளை வெகுவாகக் குறைத்துக்கொண்டன. காரணம், தற்போதைய மாற்றம்தான். பட வியாபாரத்தின் இன்றைய நிலவரத்தின் சூட்சுமம் தெரியாமல் வரும் தயாரிப்பாளர்கள் பலரும் ஒரே படத்தோடு ஓட்டமெடுக்கிறார்கள்.

தொலைக்காட்சி உரிமத்தில் பிரச்சினை, இசை உரிமை விலைகுறைவது, தொழிலாளர்களின் சம்பள உயர்வு, நடிகர்கள், இயக்குநரின் சம்பளவு உயர்வு, தொழில்நுட்பக் கலைஞர்களின் சம்பள உயர்வு... இதையெல்லாம் பார்க்கும் போது ஒரு படத் தயாரிப்பாளரின் நிலைமை என்பது பெரும் சோகக் கதைதான். இவ்வாறு பல்வேறு தயாரிப்பாளர்கள் தங்களது தயாரிப்பை நிறுத்திக்கொண்டதால் நடிகர்களே தங்களது படத்தைத் தயாரிக்கிறார்கள்.

தமிழ்நாடே கொண்டாடும் ஒரு முன்னணி நடிகரின் அடுத்த படத்துக்குத் தயாரிப்பாளர் கிடைக்கவில்லை. 3 படங்களுக்குப் பிறகு ஒரு தயாரிப்பாளருக்குப் படம் பண்ணித் தருகிறேன் என்று வாக்குறுதி அளித்திருக்கிறார். அந்த தயாரிப்பாளரைத் தற்போது அழைத்து எனது அடுத்த படத்தின் தயாரிப்பாளர் நீங்கள்தான் என்று தெரிவித்திருக்கிறார்.

விளம்பரங்களில் மட்டுமே வெற்றி

ராமராஜன், மோகன் உள்ளிட்ட பழைய நடிகர்கள் எல்லாம் நடித்துக்கொண்டிருந்த போது தயாரிப்பாளர்கள் லாபமடைந்து தொடர்ச்சியாகப் படம் பண்ணினார்கள். ஆனால், இன்றைய தயாரிப்பாளர்கள் நிலைமை அப்படி அல்ல. தமிழ்த் திரையுலகில் தற்போதைய தயாரிப்பாளர்கள் லாபம் அடைகிறார்களா என்று கேள்வியை முன்வைத்தால் கண்டிப்பாக இல்லை என்று சொல்லலாம். ஏனென்றால், ஒரு படம் ஓடுவது அதிகபட்சம் 25 நாட்கள்தான். பல படங்கள் ஒரு வாரம்கூடத் தாக்குப்பிடிப்பதில்லை.

ஒரு தயாரிப்பாளரிடம் போய், உங்கள் தயாரிப்பு செலவு எவ்வளவு, வசூல் எவ்வளவு என்று கேட்டால் அவர்களால் சரியான தகவல்களைச் சொல்ல முடியாது. ஒவ்வொரு படத்தின் வசூல் கணக்கின் உண்மையான நிலவரம் வருமான வரி சமர்ப்பிக்கும் பேப்பரில்தான் இருக்கும். 100 கோடி வசூல், பிரம்மாண்டமான வசூல், எதிர்பாராத, திகைக்க வைக்கும் ஹிட் எல்லாம் விளம்பரங்களோடு சரி. மிகச் சில படங்களே இதற்கு விதிவிலக்கு.

பெரிய நடிகர்கள் சம்பளத்தைக் குறைக்க வேண்டும் என்ற குரல் அவ்வப்போது தமிழ் திரையுலகில் எழுந்துகொண்டே இருக்கிறது. இது குறித்து தயாரிப்பாளர் சங்கம் ஒரு நல்ல முடிவுக்கு வர வேண்டும் என்று பல்வேறு தயாரிப்பாளர்கள் தெரிவித்துவருகிறார்கள். ஒரு படம் ஓடினால் சம்பளத்தை உயர்த்தும் நீங்கள் தொடர்ந்து உங்கள் படங்கள் நஷ்டமடைந்தால் சம்பளத்தைக் குறைத்துக்கொள்ளுங்கள் என்று நடிகர்களைப் பார்த்துத் தயாரிப்பாளர்களால் கேட்க முடியவில்லை.

அந்தச் சம்பளத்தைக் கொடுக்க மாட்டேன் என்று சொல்ல முடியவில்லை. காரணம், அதே நடிகரின் அடுத்த படம் நன்றாக ஓடிவிட்டால் தனக்குப் பெரிய லாபம் கிடைக்குமே என்ற எதிர்பார்ப்புதான். இப்போதெல்லாம் ஒரு படம் நன்றாக ஓடினால் தெலுங்கு, இந்தி மொழிகளில் மறுஆக்க உரிமை உள்படப் பல விதங்களில் பெரும் லாபம் கிடைப்பதால் முன்னணி நடிகர் யாரையும் பகைத்துக்கொள்ள முடியாத நிலை. எனவே தொடர்ந்து இந்தச் சூதாட்டம் நடக்கிறது. 

மைக்கேல் ஜாக்சன் கேரக்டரில் இவரா?

சல்மான் கானை அடுத்து ஷாருக்கானுடன் இணைகிறார் பஜ்ரங்கி பைஜான் புகழ் நவாசுதின் சித்திக். பாலிவுட்டில் உள்ள நடிகர்களில் தனக்கென ஒரு இடத்தை பிடித்தவர் நடிகர் நவாசுதின் சித்திக். பல வருடங்களாக இவர் பாலிவுட்டில் நடித்துவந்தாலும் இவருக்கு என தனி அடையாளத்தை கொடுத்த படம் அமீர் கான் நடிப்பில் 2010ல் வெளிவந்த பீப்ளி லைவ். அதன் பின்னர் சல்மான் கான்னுடன் கிக், பஜ்ரங்கி பைஜான் போன்ற படங்களில் நடித்ததன் மூலம் புகழ் பெற்றார்.

முன்னதாக இரண்டு கான்களுடன் நடித்த சித்திக் தற்போது ஷாருக்கானுடனும் இணைந்துள்ளார். அதுவும் மைக்கேல் ஜாக்சன் வேடத்தில். ராகுல் தோலக்கியா இயக்கத்தில் ஷாருக் தற்போது நடித்து வரும் படம் "ராயீஸ்". ஷாருக் இப்படத்தில் தனது இயல்பான, காதல் நாயகன் தோற்றத்தை விடுத்து, குஜராத்தியாக மாறியுள்ளார். இப்படத்தில் சித்திக், ஒரு காட்சியில் மைக்கேல் ஜாக்சன் வேடத்தில் உள்ள போலீஸாக நடித்திருப்பதோடு, அவரைப் போல் ஆடவும் செய்துள்ளாராம்.

 ராயீஸ் படத்தின் ஃபர்ஸ்ட் லுக் அனைவரையும் வெகுவாகக் கவர்ந்துள்ள நிலையில், ஷாருக்கின் வித்தியாசமான நடிப்பையும் எதிர்பார்த்து அவரது ரசிகர்கள் காத்திருக்கின்றனர். இப்படம் இவ்வருட தீபாவளிக்கு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. சல்மான் கானின் சுல்தானும், ராயீஸும் ஒன்றாக திரைக்கு வரும் என கூறப்படுகிறது. இதற்கிடையில் ஷாருக் இரட்டை வேடத்தில் நடித்துள்ள ஃபென் படம் ஏப்ரல் 16 வெளியாக உள்ளது குறிப்பிடத்தக்கது.

பழ.கருப்பையா... நீங்க நல்லவரா... கெட்டவரா?

‘‘கட்சியின் கொள்கை, குறிக்கோள்களுக்கும் கோட்பாடுகளுக் கும் முரணான வகையில் செயல்பட்டதாலும், கட்சியின் கண்ணியத்துக்கு மாசு ஏற்படும் வகையில் நடந்து கொண்டதாலும், கட்சியின் கட்டுப்பாட்டை மீறி கட்சிக்குக் களங்கமும், அவப்பெயரும் உண்டாகும் விதத்தில் செயல்பட்ட காரணத்தினாலும், வடசென்னை தெற்கு மாவட்டத்தைச் சேர்ந்த பழ.கருப்பையா எம்.எல்.ஏ (துறைமுகம் சட்டமன்றத் தொகுதி), கட்சியின் அடிப்படை உறுப்பினர் பொறுப்பு, உள்பட அனைத்துப் பொறுப்புகளில் இருந்தும் நீக்கி வைக்கப்படுகிறார்"
-இப்படி ஆற அமர ஒரு நடவடிக்கையை எடுத்து அறிவித்திருக்கிறார் அ.தி.மு.க-வின் பொதுச்செயலாளர் ஜெ.ஜெயலலிதா.

பொதுவாக புரட்சித் தலைவி ஜெயலலிதாவின் கோட்டையில், அடுத்த நிமிடமே தண்டனை அறிவிக்கப்பட்டுவிடும். ஆனால், பத்துப் பதினைந்து நாட்களுக்குப் பிறகுதான் விரட்டியடிக்கப்பட்டுள்ளார் கருப்பையா.

ஜனவரி 14, அதுவும் பொங்கலையொட்டிய நாளாகப் பார்த்து, எதிர்க்கட்சியினரும் பொதுமக்களும் கூடியிருந்த 'துக்ளக்' ஆண்டுவிழா மேடையில் நின்றபடி சொந்தக் கட்சி மீது காரித் துப்பியிருக்கிறார் கருப்பையா. இதற்காக அன்றைக்கே 'உதிர்ந்த' என்று ஓர் 'உயர்ந்த' டயலாக்கை எடுத்துவிட்டு, தூக்கி வீசியிருக்க வேண்டும். ஆனால், கிட்டத்தட்ட பத்து நாட்களுக்கும் மேலாக கருணை காட்டியதற்காகவே, புரட்சித் தலைவியை புகழ்ந்துரைத்தே ஆக வேண்டும்.

பழ.கருப்பையா எனும் கதர் சட்டைக்காரர், கடந்த ஐந்தாண்டுகளுக்கு முன் கருணாநிதியை கடுமையாக விமர்சித்தார் என்கிற ஒரே காரணத்துக்காக, அ.தி.மு.க-வில் சேர்த்து அரவணைத்து, அவருக்கு எம்.எல்.ஏ பதவியையும் கொடுத்து அழகு பார்த்தவர், ஜெயலலிதா.

ஆனால், கடந்த 5 ஆண்டு காலமும் கட்சியின் அனைத்து சலுகைகளையும் அனுபவித்துவிட்டு, எம்.எல்.ஏ என்கிற பதவிக்கு உள்ள சம்பளம் சலுகைகளையும் அனுபவித்துவிட்டு, ஆட்சி முடியும் கடைசி நேரத்தில், கட்சி மீதே காறி உமிழ்ந்திருக்கிறார். இப்படிப்பட்டவர்களை எப்படி ஒரு கட்சித் தலைமையால் ஜீரணித்துக் கொள்ள முடியும்? சரத்குமாராலேயே சகித்துக் கொள்ள முடியவில்லையே?!

அரசாங்கத்தை எதிர்த்து வழக்கு போட்டதற்காகவே ஆட்டோவில் ஆட்களை அனுப்பி அடித்து உதைக்கப்பட்ட வக்கீல் கே.எம் விஜயன், தாஜ்கோரமண்டல் ஓட்டலில் ஓடஓட விரட்டப்பட்ட தேர்தல் கமிஷனர் டி.என். சேஷன், உயர் நீதிமன்றத்தில் அ.தி.மு.க மகளிரணியால் 'அற்புதமான' வரவேற்பு கொடுக்கப்பட்ட சுப்பிரமணிய சுவாமி, அடியாட்களால் அரிவாளால் வெட்டப்பட்ட தி.மு.க வழக்கறிஞர் சண்முகசுந்தரம், ஆசிட் வீசி முகம் கருக்கப்பட்ட சந்திரலேகா ஐ.ஏ.எஸ் இவர்களை யெல்லாம் நினைத்துப் பார்த்திருந்தால், பழ.கருப்பையாவுக்கு இந்த தைரியம் வந்திருக்குமா என்ன?

ஒரு கட்சி என்றால்... அதற்கு கொள்கை, கண்ணியம், கட்டுப்பாடு எல்லாம் இருப்பது வாடிக்கை. அதையெல்லாம் குலைப்பதற்கு என்ன தைரியம், நெஞ்சழுத்தம் இருக்க வேண்டும் இந்த கருப்பையா போன்றவர்களுக்கு? இந்தக் கொள்கை, கோட்பாடு, கண்ணியம், கண்றாவியெல்லாம் ஆளுங்கட்சிக்கு மட்டுமல்ல, அத்தனை கட்சிகளுக்குமேதான் உண்டு.

தம்பி ஸ்டாலினுக்கு போட்டியாக லொள்ளு பண்ணிக் கொண்டிருந்தால், அது கட்சியின் கண்ணியத்தைக் குலைக்கும் செயல் அல்லாமல் வேறு என்னவாக இருக்க முடியும். அதனால்தானே அண்ணன் அழகிரியையே, அதாவது தன் மூத்த மகனையே, அதாவது தான் வீரத்துடன் இருந்த காலத்தில் பிறந்த பிள்ளையாகிய அழகிரியையே கட்சியை விட்டு நீக்கி வைத்திருக்கிறார், தமிழனத் தலைவர்.

இவ்வளவு ஏன்? லென்ஸ் வைத்து தேடவேண்டிய நிலையிலிருக்கும் சரத்குமார் கட்சிக்கும்கூட கண்ணியம், கத்திரிக்காய் கூட்டெல்லாம் உண்டு என்று சமீபத்தில் தெரியப்படுத்தியிருக்கிறாரே... தன்னுடன் இருந்த ஒரே ஒரு எம்.எல்.ஏ-வான எர்ணாவூர் நாராயணனை தூக்கி அடித்துள்ளார்.

சரி, கட்சியின் கொள்கை, குறிக்கோள்களுக்கும்... கோட்பாடுகளுக்கும் முரணாக; கட்சியின் கண்ணியத்துக்கு மாசு ஏற்படும் வகையில், கட்சியின் கட்டுப்பாட்டை மீறி கட்சிக்கு களங்கமும், அவப்பெயரும் ஏற்படுத்தும் வகையில் எதையெல்லாம் செய்திருக்கிறார் பழ.கருப்பையா என்று பார்ப்போமா?!

கொள்கை மீறல்!

எதிர்க்கட்சி பிரமுகர்கள் அமர்ந்திருக்கும் மேடையில் உட்கார்ந்து கொண்டு, ‘தமிழகத்தில் இன்று மந்திரியும் தலைமைச் செயலாளரும் கூட்டுச்சேர்ந்து கொள்ளை அடிக்கும் நிலை வந்துவிட்டது. அமைச்சர்கள் என்றால், அடாவடித்தனம் வந்துவிடுகிறது; ஐந்தாறு பி.ஏ-க்கள் வைத்துக்கொள்கிறார்கள். சால்வை எடுக்கக்கூட ஒரு பி.ஏ தேவைப்படுகிறது’ என்று பேசியிருக்கிறார்.

எதிர்க்கட்சிக்காரனை பார்த்தால்... அடித்து உதைக்க வேண்டும். அல்லது குறைந்தபட்சம் அவனுடைய வேட்டியையாவது உருவ வேண்டும். இதுதான் முக்கியமான கொள்கையே. ஆனால், எதிர்க்கட்சிக்காரர்களுடனேயே சேர்ந்து கொண்டு, கொள்கையை குழிதோண்டி புதைக்க முற்பட்டால் கோபம் வராதா என்ன?

குறிக்கோளுக்கு குழிதோண்டல்!

"கொள்ளையடிப்பது ஒன்றே அரசியலின் இலக்கு. ஒவ்வொரு கவுன்சிலருக்கும் நான்கு வீடுகள்; மூன்று 'கீப்’கள்; இரண்டு கார்கள். கவுன்சிலரே இப்படி என்றால், எம்.எல்.ஏ-க்கள் எப்படி, மந்திரிகள் எப்படி என நீங்களே கணக்குப் போட்டுக்கொள்ளுங்கள். அதிகாரிகள் ஒன்றும் விதிவிலக்கு அல்ல. அவர்களும் கிடைத்தவரை ஆதாயம் எனக் கொள்ளையடிக்கிறார்கள். பி.ஆர்.பி-யின் பையிலும், வைகுண்டராஜன் பையிலும் இல்லாத அரசியல்வாதி யார், அதிகாரி யார் என்பதைத் தேடவேண்டிய நிலையில் இன்று இருக்கிறோம்’’

கட்சிகளின் குறிக்கோளே... இப்படி கொள்ளையடிப்பதுதான். இதைப் பற்றியே கட்சிக்குள் இருந்துகொண்டு நாக்குமேல் பல்லைப் போட்டு பேசிய பழ. கருப்பையாவின் பல்லைத் தட்டாமல் எப்படி விடமுடியும்?

குண்டக்க மண்டக்க கோட்பாடு!

"எம்.எல்.ஏ-வாக இருந்துகொண்டு, மேசையைத் தட்டலாம்; கமிஷன் வாங்கலாம்; ஊரை அடித்து உலையில் போடலாம். இதுதான் இன்று எம்.எல்.ஏ-க்களின் தலையாயப் பணி.’’ இதுதான் கட்சிகளின் கோட்பாடு. அடிமடியிலேயே பழ. கருப்பையா கை வைக்கப்பார்த்தால், விறுவிறுக்கும் கைகளை வைத்துக் கொண்டு பூப்பறிக்கவா முடியும்?

ஐயோ கண்ணியம்!

"காசு இல்லாமல் எதுவும் செய்ய முடியாது எனப் பழக்கப்பட்ட ஓர் அரசாங்கத்தில் ஒரு எம்.எல்.ஏ பரிந்துரைப்பதற்கு எதுவுமே இல்லை. பணம் பரிந்துரைக்கும் ஓர் அமைப்பில் எம்.எல்.ஏ-வாக நான் செய்வதற்கு ஒன்றுமே இல்லை. தொகுதி மக்களுக்குச் செய்ய நினைத்த எதையும் என்னால் செய்ய முடியவில்லை. சட்டவிரோத நபர்களுக்கு மாவட்டச் செயலாளர்கள், எம்.பி-க்கள், அமைச்சர்கள், அதிகாரிகள் என எல்லோரும் துணை நிற்கிறார்கள். மனப்பூர்வமாகப் பணியாற்ற நினைத்தேன். அதற்கு இடம் இல்லை. என் எம்.எல்.ஏ வாழ்க்கை தோல்வி அடைந்துவிட்டது. நான் துறைமுகம் தொகுதி மக்களிடம் மனப்பூர்வமாக மன்னிப்பு கேட்டுக்கொள்கிறேன். என்னை மன்னித்துவிடுங்கள்’’

நன்றாக படித்துப் பாருங்கள்... தேர்ந்தெடுக்கப்படும் மற்றும் தேர்வு செய்யப்படும் மக்கள் பிரநிதிகளின் கண்ணியமே இப்படியெல்லாம் 'ஊருக்கு உழைக்கத்தான்'. மேலிடங்களுக்கு சம்பாதித்துக் கொடுத்தால்தானே அவர்களால் கண்ணியமாக கட்சியை நடத்த முடியும். இதுகூட தெரியாத சிறுபிள்ளையாக இருக்கிறாரே இந்தப் பழ.கருப்பையா. ஏன், கடந்த முறை இவர் தேர்தலில் நின்று வெற்றிபெறுவதற்காக செலவிடப்பட்ட கோடிகளில், இப்படி கண்ணியமாக சேர்க்கப்பட்ட பணமும் உண்டு என்பது இவருக்கு எப்படி தெரியாமல் போனது? இப்படிப்பட்ட கருப்பையாவை, வெளுக்காமல் விட முடியுமா?

கப்சிப் கட்டுப்பாடு!

"நான் எம்.எல்.ஏ. பதவிக்கு வர அம்மாதான் காரணம். அவரும், அ.தி.மு.க. தொண்டர்களும் சேர்ந்துதான் என்னை எம்.எல்.ஏ ஆக்கினார்கள். ஆனால் எம்.எல்.ஏ-வாக எதையும் சாதிக்க முடியவில்லை"

அடஅட என்ன ஒரு கட்டுப்பாடு மீறல். ஒரு கட்சியில் தலைவர் நினைத்தால்தான் எம்.எல்.ஏ, எம்.பி, அமைச்சர் என்று யாருமே வாய் திறக்க முடியும், குறிப்பாக அ.தி.மு.க-வில்.

இத்தகைய கட்டுப்பாடுதான் காலகாலமாக அத்தனை அரசியல் கட்சிகளிலும் கடைபிடிக்கப்பட்டு வருகிறது. இதை மீறுவதற்கு எத்தனை தைரியம் தேவை. அதை சர்வசாதாரணமாக... அதுவும் சிரிப்பு நடிகர் துக்ளக் சோ கூட்டிய ஒரு நிகழ்ச்சியின் மேடையில் நின்று கொண்டு மீறுவது...? இந்தக் குற்றத்துக்கு தூக்கு தண்டனையே கூட கொடுக்கலாம். ஆனால், இப்போதும்கூட தான் அம்மாவின் அடிப்பொடியாக, வாய்ப்புக் கிடைத்தால், தடலாடியாக காலில் விழுந்து மறுபடியும் துறைமுகமோ அல்லது அதற்கு பக்கத்தில் இருக்கும் வங்காள விரிகுடாவில் ஏதாவது ஓரிடமோ கிடைத்து, அதில் படகில் பயணித்தபடியே கூட அடுத்த சட்ட மன்றத்துக்கு பயணிக்க தயாராகத்தான் இருக்கிறார் பழ.கருப்பையா.

ஆனால், இந்த உண்மையைப் புரிந்து கொள்ளாமல் நீக்கிவிட்டார்களோ... என்றுதான் கடைசி கடைசியாக ஒரு சந்தேகம் எட்டிப்பார்க்கிறது.

பழ.கருப்பையா... நீங்க நல்லவரா... கெட்டவரா?

பழ.கருப்பையாவுக்கு கடைசியாக ஒரு சில கேள்விகள்.

ஐயா, காங்கிரஸில் பலகாலம் வண்டியோட்டிக் கொண்டிருந்து, ஒரு கட்டத்தில் அம்மாவின் கடைக்கண் பார்வையால் கழகத்துக்குள் தங்கத் தேர் ஓட்டி வந்த பழுத்த கருப்பையாவே... உங்களுக்கு மனசாட்சி என்று ஒன்று இருந்தால்... காலகாலமாக நீங்கள் கட்டிக் கொண்டிருப்பது வெள்ளை வேட்டிதான் என்பது உண்மையாக இருந்தால், இந்தக் கேள்விகளுக்கு பதில் சொல்லுங்கள்.

உண்மையிலேயே இன்றைய அரசியல் பற்றி எதுவுமே உங்களுக்கு தெரியாதா?

91-ம் ஆண்டு முதல் பல்வேறு ஊழல் வழக்குகளில் சிக்கி, சொத்துக் குவிப்பு வழக்கில் தண்டனை பெற்று, பிறகு வெளியில் வந்து என்று நீதிமன்றத்துக்கும் வீட்டுக்குமாக அலைந்து கொண்டிருக்கும் ஜெயலலிதா மற்றும் அவருடைய கட்சியின் முன்னாள் அமைச்சர்கள் பற்றியெல்லாம் உங்களுக்கு 2011-ம் ஆண்டில் இந்தக் கட்சியில் சேரும்போது தெரியவே தெரியாதா?!

இப்படி முழுப்பூசணிக்காயை ஒரு கைப்பிடி சோற்றில் மறைக்கப் பார்க்கிறீர்களே! நீங்கள் பேசுவதையும் பேட்டிகள் கொடுப்பதையும் படித்தால், கேட்டால்... 'என்னது சிவாஜி செத்துட்டாரா?' என்றுதான் கேட்கத்தோன்றுகிறது.

உங்களுக்கு உண்மையிலேயே திராணி இருந்திருந்தால் எம்.எல்.ஏ-வான முதல் ஆண்டிலேயே அத்தனை உண்மைகளையும் ஊருக்குச் சொல்லிவிட்டு இந்த வெட்கங்கெட்ட அரசியலை விட்டே விலகி ஓடியிருக்க வேண்டும். ஆனால், ஐந்து ஆண்டுகளாக அத்தனையும் அனுபவித்துவிட்டு, இப்போது என்னவோ சுத்தம் சுயம்பிரகாசம் போல மேடை கிடைத்ததும் பொங்கித் தீர்க்க ஆரம்பித்துவிட்டீர்களே!

இப்போது கூட உங்கள் பேச்சில் உண்மையில்லை என்பதற்கு இரண்டே இரண்டு உதாரணங்கள்...

"இந்த ஆட்சியில் மதுவினால் பெரும் கேடு ஏற்படுகிறது. மதுவிலக்கை அமல்படுத்த இயலாது என்று அமைச்சர் நத்தம் விசுவநாதன் கூறும் கருத்தை ஏற்க இயலாது. மதுவைத் திறந்த கருணாநிதியே அதை மூடுவதாக அறிவித்துள்ளார்" என்று கருணாநிதிக்கு வக்காலத்து வாங்கியிருக்கிறீர்கள். எந்தக் கருணாநிதியை நார்நாராக கிழித்தீர்களோ... அவருக்கே இப்போது வக்காலத்து வாங்க வேண்டிய காரணம் என்ன?

வரும் தேர்தலில் தி.மு.க. கூட்டணியில் ஐக்கியமாகி அடுத்த ஐந்து ஆண்டு காலத்தை ஓட்டும் திட்டம் ஏதும் உள்ளுக்குள் ஓடுகிறதோ!

அடுத்து, துக்ளக் மேடையில் 'மானமுள்ள ஒரே மந்திரி பொன்.ராதாகிருஷ்ணன்' என்று போகிற போக்கில் பி.ஜே.பி-யின் மத்திய இணை மந்திரியை புகழ்ந்து தள்ளி, துக்ளக் கூட்டத்தின் கைதட்டல்களை அள்ளியிருக்கிறீர்கள்.

இது எதற்காக? அடுத்ததாக தாமரைத் தடாகத்தில் மூழ்கி முத்தெடுக்கத்தானோ?!

புத்திசாலிகள் மறுபடியும் செய்யத் துணியாத 10 தவறுகள்...!

“தவறுகள் எப்போதும் மன்னிக்கப்படுபவையே…

-ஒப்புக்கொள்ளபட்டால்…” – புரூஸ் லீ

நாம் எல்லாரும் தப்பு செய்வோம். ஆன எங்க அந்த தவறை ஒத்துக்கொண்டால் சுய மரியாதை போய்விடுமோ என்ற வறட்டு பிடிவாதத்தோட இருப்போம். இதான் நம்ம பிரச்னையே. ஆனா அதே தவற என்னைக்கு ஒத்துக்கிட்டு அதிலிருந்து பாடம் கத்துக்கிறோமோ அன்னைக்குதான் அந்த தவற நாம மறுபடியும் செய்யமாட்டோம். இதுதான் இன்றைக்கு ஒவ்வொருத்தரோட முன்னேற்றத்தின் போராட்டக் களம்.

மிச்சிகன் மாகாண பல்கலைக்கழகம் நடத்திய ஆய்வில்,  தவறு செய்பவர்களை இரண்டு பிரிவாகப் பிரிக்கின்றனர். முதல் பிரிவினர், தீர்க்கமான மனநிலை கொண்டோர், அதாவது, ஒரு தவறு ஏற்பட்டதும் உடனடியா இந்த வேலை நமக்கு வராது. நா அவ்ளோதான் இனிமேல்... என ஒரு தீர்க்கமான முடிவுக்கு வந்துவிடுவர். இரண்டாம் பிரிவினர், வளரும் மனநிலை கொண்டோர், ‘ஆஹா, இந்த முறை தவறிவிட்டதே, பரவாயில்லை இந்த தவறு நமக்கு சிறந்த பாடம்’ என தங்களையே வளர்த்துக்கொள்வோர்.


“நமது தவறுகளை கவனிக்கவும் நேரம் ஒதுக்க வேண்டும். ஏனென்றால் அத்தவறுகள்தான் நம்மை முன்னேற்றப்பாதைக்கு அழைத்துச் செல்பவை” என இந்த ஆய்வினை மேற்கொண்டு வரும் ஜேசன் மோசர் கூறுகிறார்.

மேற்சொன்னபடி வளரும் மனநிலை கொண்டோரே வாழ்கையில் உயர்ந்த நிலைக்கு செல்கின்றனர். ஆனால் தவறை ஒப்புக்கொள்ள மனமில்லாதோர் தங்கள் நிலையிலேயே எவ்வித வளர்ச்சியும் இன்றி தீர்க்கமாக இருந்துவிடுகின்றனர்.

“தவறுகள் தொடர்ந்தால், அது உன் தவறு அல்ல, உன் முடிவு”-

-    பாலோ கொயேலோ

ஸ்மார்ட் ஆக இருப்போர், தவறு செய்தால் முடங்கிவிட மாட்டார்கள். காரணம், அந்த தவறை அவர்கள் மறுமுறை செய்யத் துணிய மாட்டார்கள். நம்மில் பலரும் கீழ்வரும் தவறுகளை பலமுறை செய்திருப்போம். ஆனால் ஸ்மார்ட் ஆக இருப்போர் இத்தவறுகளை ஒரு முறைக்கு மேல் செய்திருக்கமாட்டார்கள்.

மின்னுவதெல்லாம் பொன்னல்ல:

எல்லாரையும் நல்லவர் என நம்பி, வெளுத்ததெல்லம் பாலாக நினைத்து இருக்கமாட்டார்கள் புத்திசாலிகள். வார்த்தை ஜாலங்களுக்கு மயங்கி எந்த ஒரு முடிவையும் எடுக்கமாட்டார்கள். யாரு எது சொன்னாலும் ஒரு முறை செய்வதற்கு முன்னாடி இரண்டு முறை யோசிப்பாங்க. எந்த ஒரு வாய்ப்பும் சும்மா வருவதில்லை என்பதை உணர்ந்து செயல்படுவார்கள்.

இந்த முறை சரியாவரும்

'இந்த முறை சரியா செய்திடுவோம என ஒரு வேலையில் செய்த தவறையே,  மறுபடி மறுபடி செய்துவிட்டு வெற்றி பெறுவோம் என்ற கற்பனைக் குதிரையில் பறக்கமாட்டார்கள்.

“ஒரே விதமான அணுகுமுறையில் மாற்றம் நிகழும் என எதிர்பார்ப்பவன் அறிவிலி”   - ஆல்பெர்ட் ஐன்ஸ்டீன்

எடுத்த காரியத்தில் தவறு ஏதேனும் நிகழ்ந்துவிட்டால், மறுபடியும் முயலும் போது புது விதமான அணுகுமுறையுடன் களமிறங்குவார்கள், புத்திசாலிகள்.



வெற்றிகள் சுலபமல்ல:

ஸ்மார்ட்டா இருப்பவங்களுக்கு தெரியும் வெற்றிகளும் மனத்திருப்தியும் அவ்வளவு எளிது அல்ல என்பது. அதைவிடுத்து, இன்றைய உலகத்துல உலகையே விரல் நுனியில வச்சிருக்கலாம் என்ற மிதப்பில், நினைத்தது எல்லாம் உடனே கையில் கிடைச்சிடும், இன்னைக்கு விதைத்து நாளைக்கு அறுவடை செய்திடலாம் என்ற முட்டாள்தனம் அறவே கூடாது. வெற்றி சுலபமல்ல, தாமதமானாலும் அதை எப்படி தக்கவைக்க வேண்டும் என்பதை  விடா முயற்சி உடைய புத்திசாலிகள் தெரிந்துவைத்திருப்பர். ஏனெனில் அவர்கள் தவறில் பாடம் கற்றவர்களாகவே இருப்பர்.

எதைப் பண்ணாலும் ப்ளான் பண்ணி பண்ணனும்:

ப்ளான் பண்ணி, பட்ஜெட் போட்டு செலவு செய்யப் பழகணும். அப்போதுதான் பொருளாதார ரீதியா நாம ஸ்டடி ஆக முடியும். இப்படி வரும் காசு அப்படி எப்படி போகுது என்பதே தெரியாம இருந்தா முன்னேற்றம் கேள்விக்குறி ஆகிடும். அநாவசிய செலவுகளைக் குறைக்க பட்ஜெட் போட்டுதான் வாழணும். ஸ்மார்ட் ஆக இருக்கணும்னு நினைத்தா, இத ஃபாலோ பண்ணுங்க.

பெரிய லட்சியங்களை மறந்திடக்கூடாது:

நம்ம முன்னாடி இருக்குற சின்ன சின்ன வேலைகளில் மூழ்கி,  பெரிய லட்சியங்களை ஒரு போதும் மறந்திட கூடாது. வாழ்க்கை நமக்காக பெரிய சிம்மாசனம் போட்டு வைத்து காத்திட்டு இருக்கும் போது,  இரும்பு நாற்காலிக்கா புத்தியை செலவழித்து சண்டை போட்டுக்கொண்டு இருக்கக்கூடாது. சின்ன வெற்றிகளுக்கு சந்தோசம் அடைந்து அதுலயே மயங்கி,  பெரிய லட்சிய வெற்றிக்கான பணிகளை ஒருபோதும், விவேகம் உள்ளவன் மறக்கமாட்டான்.

நம்ம வேலைய நாமதான் செய்யணும்:

ஸ்கூல் படிக்கும் காலத்துல இருந்தே வீட்ல செய்யசொல்லி கொடுத்த ஹோம் வொர்க் எல்லாம் க்ளாஸ் வொர்க்காகதான் செய்திருப்போம். எப்போவாவது லக் அடிச்சு வின் பண்ணிருப்போம். ஆனா பெரிய உலக சாதனையை பதிவு செய்த மாதிரி அத கொண்டாடி,  அடுத்து செய்ய வேண்டியதை மறந்திடுவோம். இப்படி எல்லம் இல்லாம கொடுத்த வேலையை எங்க எப்போ செய்யணும் என்ற அடிப்படையில் தெளிவா இருக்கணும். நாம செய்த வேலைக்கு கிடைக்கும் வெற்றிதான் நிலையானது என நம்புபவன் அறிவாளி.

வான்கோழி மயிலாக முடியாது:

இந்த மாதிரி வாழணும் அந்த மாதிரி வாழணும் என்கிற எதிர்பார்ப்பில்,  எந்த மாதிரியும் வாழாம போறதுக்கு நம்ம வாழ்ற வாழ்க்கையில் உண்மையோடு இருந்தாலே போதும். இன்னொருத்தர் மாதிரி வாழணும் என்று ஆசைப்படுபவன் தன்னையே இழக்கிறான்.



ஜால்ரா தட்டுவதை நிறுத்தவும்:

ஆளுக்கு தகுந்த மாதிரி ஜால்ரா தட்டி ரொம்ப காலம் வாழ முடியாது. உங்களுக்கு எது சரி எது தவறு என தெரியுதோ அதன்படி நடக்கணும். அடுத்தவங்களுக்காக மறைத்து, மறைந்து, வளைந்து நெளிந்து வாழமாட்டான் புத்திமான்.

அப்பாவியாக நடிக்க வேண்டாம்:

ஒரு வேலை நடக்கணும் என்பதற்காக அப்பாவி வேஷம் தரித்தால் முன்னேற்றம் நிலையானதாகக் கிடைக்காது. அது ஒரு வகை அடிமைத்தனம். பாவப்பட்டவர் போல் காட்டிக்கொள்வதில் ஒரு போதும் பெருமைப்படமாட்டார்கள் புத்திசாலிகள்.

அடுத்தவரை மாற்ற முயற்சிப்பது:

மாற்றம் நம்மில் இருந்துதான் தொடங்கவேண்டும். நான் ரொம்ப பெரிய திறமைசாலி. இப்படி இந்த  நபரை மாற்றிக் காண்பிக்கிறேன் என வீண் சவால்கள் உடம்புக்கு ஆகாது. இப்படி டம்பம் பேசும் ஜாம்பவான்கள் அடுத்தவர்கள் பிரச்னையை தீர்க்கிறேன் பேர்வழி எனப் பெரிதாக்குவர். ஒரு விஷயம் ஒத்துவரவில்லை என்றால் உங்களை மாற்றுங்கள் எதிராளியை மாற்ற எண்ணி உங்களையே இழக்காதீர்கள்.

இறுதிச்சுற்று… அதிரடியான பாக்ஸிங் பன்ச்..திரைவிமர்சனம்

அலைபாயுதே படத்தில் பணியாற்றிய மணிரத்னம், பிசி ஸ்ரீராம் மற்றும் ஏஆர் ரஹ்மான் ஆகியோரின் உதவியாளர்களுடன் 16 வருடங்களுக்கு பிறகு அதே நாயகன் மாதவன் இணைந்துள்ளார். இவரின் மூன்று வருட கடின உழைப்பில் உருவாகியுள்ள இப்படம் எப்படி என்பதை பார்ப்போமா?

நடிகர்கள் : மாதவன், ரித்திகா சிங், நாசர், ராதாரவி, காளி வெங்கட், சஞ்சனா மோகன் மற்றும் பலர்.
இசையமைப்பாளர் : சந்தோஷ் நாராயணன்
ஒளிப்பதிவு : சிவகுமார் விஜயன்,
படத்தொகுப்பு : சதீஷ் சூர்யா
இயக்கம் : சுதா கொங்கரா பிரசாத்
தயாரிப்பாளர் : மாதவன், சி.வி. குமார் மற்றும் ராஜ்குமார் ஹிரானி

கதைக்களம்…

பாக்ஸிங் பயிற்சியாளர் மாதவன் அரசியல் தலையீடுகளால் டெல்லியில் இருந்து சென்னைக்கு டிரான்ஸ்பர் ஆகிறார். அங்கு சேரியில் இருக்கும் ரித்திகாவை தேர்ந்தெடுத்து பயிற்சியும் பணமும் கொடுத்தும் உருவாக்குகிறார்.

பல தடைகளுக்கு பிறகு உலக போட்டியில் ரித்திகா கலந்து கொள்ள போகும் நிலையில் அவரை பெயர் பட்டியலில் இருந்து நீக்குகிறார் வில்லன் ஜாகீர் உசேன். அவரை பெயர் பட்டியலில் சேர்க்க வேண்டுமென்றால் டிரெய்னர் பதவியை மாதவன் ராஜினாமா செய்ய வேண்டும் என்று நிபந்தனையும் விதிக்கிறார்.

அதன் பின்னர் மாதவன் என்ன செய்தார்? ரித்திகா உலக சாம்பியன் ஆனாரா? என்ற கேள்விகளுக்கான விடையே இந்த இறுதிச்சுற்று.

கதாபாத்திரங்கள்…

மாதவன்… எந்தவொரு ஹீரோவாக இருந்தாலும் தான் ஒரு வீரராக இருக்கவே விரும்புவார். ஆனால் பயிற்சியாளராக இருந்து ஹீரோயினுக்கு முக்கியத்துவம் கொடுத்து இருக்கிறார்.

டிரெயினராக இருந்தாலும் கடுமையான பயிற்சி கொண்ட உடற்கட்டு, அதற்கேற்ற பயிற்சி முறைகள், கோபம், வெறி என அனைத்தையும் அழகாக வெளிப்படுத்தியுள்ளார்.

பெண் பித்தர், சரக்கடித்தல், போர்ட் மீட்டிங் காட்சிகள், தன் மாணவிகளுக்காக பணத்தை செலவழிப்பது என மிரட்டல் பார்வையில் மிரள வைத்திருக்கிறார். இனி மாதவன் சாக்லேட் பாய் அல்ல பாக்ஸர் பாய் என்றே சொல்லலாம். க்ளைமாக்ஸ் காட்சியில் முகத்தை சுழித்து சிரிப்பது கைத்தட்டலை அள்ளும்.

நாயகி ரித்திகா சிங்… அவர்களே சொன்னால் ஒழிய இவர் புதுமுகம் என்று எவரும் நினைக்க போவதில்லை. மீன் விற்பது, புடவை கட்டி மாதவனுக்காக வழிவது, அக்காவுக்காக விட்டுக் கொடுப்பது, நாக் அவுட் செய்வது, அடாவடி செய்வது, குடும்பத்திற்காக ஏங்குவது, கோபம், வீரம் என ரித்திகாவை பற்றி சொல்லிக் கொண்டே போகலாம். அறிமுக படத்திலேயே அசத்திவிட்டார் அம்மணி.

இதுவரை தமிழ் சினிமா பாக்ஸிங் வீரர்களையே கொடுத்துள்ளது. முதன்முறையாக பாக்ஸிங் வீராங்கனை கிடைத்துள்ளார். க்ளைமாக்ஸ் காட்சியில் வில்லனை அடித்து விட்டு மாதவனை தேடி ஓடிச் செல்லும் காட்சியில் கண்களை குளமாக்குகிறார். வெல்டன் ரித்திகா.

இவர்களுடன் நாசர், ராதாரவி, காளி வெங்கட்.. மூவரும் தங்கள் பாத்திரங்களில் ஜொலிக்கிறார்கள். நாசரும், காளி வெங்கட்டும் சீரியஸான பாக்ஸிங் படத்தை போராடிக்காமல் கொண்டு செல்ல உதவி இருக்கிறார்கள்.

ரித்திகாவின் அக்காவாக மும்தாஸ் சர்கார், பாக்ஸிங் தலைவர் ஜாகீர் உசேன் உள்ளிட்டோர் அருமையான தேர்வு.

தொழில்நுட்ப கலைஞர்கள்…

சிவக்குமார் விஜயன் ஒளிப்பதிவில் மீன் மார்கெட், சேரி வாழ்க்கை, பயிற்சி பெறும் இடங்கள், தண்ணியடிக்கும் காட்சிகள் என அனைத்தையும் கண்களுக்கு விருந்தளித்துள்ளார்.

எடிட்டர் சதீஷ் சூர்யா படத்திற்கு பலம் சேர்த்துள்ளார். படத்திற்கு எது தேவை, எது தேவையில்லை என்பதை உணர்ந்து படத்தை விறுவிறுப்பாக கொண்டு செல்கிறார்.

சந்தோஷ் நாராயணன் பின்னணி இசையில் சபாஷ் பெறுகிறார். கதையுடன் ஒட்டிச் செல்லும் பாடல்கள். எந்தவொரு வெளிநாட்டு தேசங்களுக்கும் கொண்டு செல்லாத பாடல் காட்சிகள். தீ பாடிய ஏய் சண்டக்கார, உசுரு நரம்பிலே பாடல்கள் கேட்கும் ரகம்.

படத்தின் ப்ளஸ்…

    ரித்திகா சிங் + மாதவன் ஆக்டிங்
    பாக்ஸிங் உலகின் யதார்த்த வாழ்க்கை
    பாக்ஸிங் பாலிடிக்ஸ்
    படத்தை ஷார்ப்பாக முடித்தது

இயக்குனர் சுதாவுக்கு ஒரு பெரிய பூங்கொத்து கொடுத்து வரவேற்கலாம். எந்தவொரு இடத்திலும் சொதப்பாத திரைக்கதை. மாதவனின் படுக்கை அறிமுக காட்சியில் தொடங்கி படத்தை கொண்டு செல்லும் முறையில் ஜெயித்திருக்கிறார்.

க்ளைமாக்ஸ் நீண்ட நேரம் என்றாலும் அதையும் ரசிக்கும்படி சீட்டின் நுனியில் உட்காரவைத்திருக்கிறார்.

விளையாட்டை பொருத்தவரை திறமையானவர்கள் நாட்டின் எந்தவொரு மூலையிலும் இருப்பார்கள். அவர்களை ஊக்குவித்து வழிகாட்ட தேவை ஒரு பயிற்சியாளர் மட்டுமே. அப்படி செய்தால் இந்தியா எப்போதும் தங்கப்பதக்கம் வெல்லும் என்ற ஆணித்தரமான கருத்தை சொன்னதற்கு ஹேட்ஸ் ஆப் சுதா.

மொத்தத்தில் இறுதிச்சுற்று… அதிரடியான பாக்ஸிங் பன்ச்..

அரண்மனை 2 – கவர்ச்சி, காமடி, பயம் கலந்த கலகலப்பான படம்.

கோலாலம்பூர் – கவர்ச்சி, காமெடி, கூட்டுக்குடும்பம், பழிவாங்கும் ஆவி, ஆவிக்கு ஒரு பிளாஷ்பேக் என்ற அதே அரண்மனை 1 பாணியில் அரண்மனை 2 திரைப்படத்தை உருவாக்கி வெளியிட்டிருக்கிறார் இயக்குநர் சுந்தர் சி.

இந்த முறை தன்னையும், ஹன்சிகாவையும் தவிர கதையின் முக்கியக் கதாப்பாத்திரங்கள் அனைத்திலும் முன்னணி நடிகர்களை நடிக்க வைத்து அரண்மனை 2 -க்கு வண்ணம் கூட்டி பொலிவு சேர்த்திருக்கிறார்.

முக்கியக் கதாப்பாத்திரத்தில் சித்தார்த், திரிஷா, பூனம் பாஜ்வா கூட்டணியைத் தேர்ந்தெடுத்திருப்பது படத்திற்கு பக்கபலம் சேர்த்துள்ளதோடு, ரசிகர்களுக்கு கிளுகிளுப்பையும் ஏற்படுத்தி மகிழ்ச்சி படுத்தியுள்ளது.

கதைச்சுருக்கம்

அந்த ஊருக்கே பெரிய தலக்கட்டான ராதாரவிக்கு இரண்டு மகன்கள். பெரியவர் சுப்பு பஞ்சு, இளையவர் சித்தார்த். எல்லோரும் கூட்டுக் குடும்பமாக அந்த அரண்மனையில் தங்கி வசித்து வருகின்றனர். சித்தாத்திற்கு அவரது மாமன் மகளான திரிஷாவையே நிச்சயமும் செய்கின்றனர்.

அந்த ஊரில் சக்தி வாய்ந்த அம்மன் கோயில் ஒன்று உள்ளது. அதற்கு கும்பாபிஷேகம் செய்வதற்காக மராமத்து பணிகள் நடைபெறுகின்றது. அதனால் அம்மன் சிலையை சில நாட்கள் தானியப் பெட்டிகள் வைத்து மூடிவிடுகின்றனர். அந்த நேரத்தில், சில தீய சக்திகள் அரண்மனைக்குள் புகுந்து விடுகின்றன.

அதனால், அரண்மனையில் பல அசம்பாவிதங்கள் ஏற்படுகின்றன. அதைக் கண்டுபிடிப்பதற்காக வருகின்றார் திரிஷாவின் அண்ணனான சுந்தர் சி. அதன் பிறகு நடப்பது கதையின் திருப்புமுனையும், பல சுவாரஸ்யங்களும்.

நடிப்பு

சித்தார்த், திரிஷா ஜோடியின் அறிமுகமே படு கவர்ச்சியாக கடற்கரையில் பிகினி பாடலோடு தொடங்குகிறது. ஆயுத எழுத்து படத்தில் இடம்பெற்ற ‘ஹேய் குட் பாய் நண்பா’ பாடலை நினைவு படுத்துகின்றது.

சித்தார்த் வழக்கம் போல் தனது கதாப்பாத்திரத்தை மிக சிறப்பாக செய்திருக்கிறார். அரண்மனை 1-ல் படத்தில் நடிகர் வினயை பெயருக்குப் பயன்படுத்திவிட்டு ஒட்டுமொத்த கதாநாயகன் இடத்தையும் சுந்தர் சி கையாண்டிருப்பார்.

ஆனால் அரண்மனை 2- ல் தனது கதாப்பாத்திரத்தின் பங்கையும் பாதுகாத்துக் கொண்டு, சித்தார்த்திற்கும் முக்கியத்துவம் அளிக்கும் வகையில் காட்சிகளை அமைத்திருக்கிறார்.

அதே போல் திரிஷாவிற்கும் படத்தின் இறுதி வரை நடிப்பதற்கு ஆங்காங்கே பல இடங்களைக் கொடுத்திருக்கிறார் சுந்தர் சி. என்றாலும் அரண்மனை 1-ல் ஆண்ட்ரியா தனது முக பாவணைகளில் காட்டிய உருட்டல் மிரட்டலை, இந்தப் படத்தில் திரிஷா அந்த அளவிற்கு வெளிபடுத்தவில்லை என்றே தோன்றுகிறது. ஆனால் கவர்ச்சியிலோ ஆண்ட்ரியாவை மிஞ்சிவிட்டார் திரிஷா.

இடைவேளைக்குப் பின் தான் ஹன்சிகா வருகின்றார். என்றாலும் அவரது கதாப்பாத்திரம் நம்மை நெகிழ வைத்துவைத்து, பின் கரைய வைத்துவிடுகின்றது.

படத்தில் இன்னொரு முக்கியக் கதாப்பாத்திரத்தில் பூனம் பாஜ்வா நடித்திருக்கிறார். அவர் பங்கிற்கு கொஞ்சம் கவர்ச்சியை அள்ளி வீச சுந்தர் சி படம் முழுமையடைகின்றது.
இவர்களைத் தவிர காமெடிக்கு சூரி, கோவை சரளா, மனோபாலா ஆகியோர் நடித்திருக்கின்றனர். சூரி, கோவை சரளாவின் காமெடியை சில இடங்களில் பல்லைக் கடித்துக் கொண்டு பொறுத்துக் கொள்ள வேண்டியுள்ளது. சில இடங்களில் மட்டுமே சிரிக்க முடிகின்றது.

ஒளிப்பதிவு, படத்தொகுப்பு, இசை

யுகே செந்தில் குமார் ஒளிப்பதிவில் காட்சிகள் அனைத்தும் பளீச் இரகம். அம்மன் சிலை, அரண்மனை ஆகியவற்றின் பிரம்மாண்டத் தோற்றத்தினை மிக அழகாகப் பதிவு செய்துள்ளார். பாடல் காட்சிகளிலும் மிக அழகாக வந்துள்ளன.

படத்தொகுப்பில் சேர்க்கப்பட்டுள்ள வரைகலையும் வண்ணமயமாக மிகச் சிறப்பாக வந்துள்ளது.

ஹிப்ஹாப் தமிழா பின்னணி இசையும், பாடல்களும் சுமார் இரகம் தான்.

மொத்தத்தில், அரண்மனை 2 – கவர்ச்சி, காமடி, பயம் கலந்த கலகலப்பான படம்.

‘அரண்மனை 2’… அரட்டை அதிகம்.. அலறல் சொஞ்சம்..திரைவிமர்சனம்

சித்தார்த் உடன் த்ரிஷா, ஹன்சிகா, பூனம் பஜ்வா உள்ளிட்ட மூன்று அழகிகள் இணைந்துள்ளனர். இது திகில் படம் என்றாலும் நிச்சயமாக சிரிப்புக்கு பஞ்சம் வைத்திருக்க மாட்டார் சுந்தர் சி. படம் எப்படி என்பதை பார்ப்போமா?

நடிகர்கள் : சித்தார்த், சுந்தர் சி, த்ரிஷா, ஹன்சிகா, பூனம் பஜ்வா, சூரி, கோவை சரளா, மனோபாலா, ராதாரவி, ராஜ்கபூர், சுப்பு பஞ்சு மற்றும் பலர்.
இசையமைப்பாளர் : ஹிப் ஹாப் தமிழா
ஒளிப்பதிவு : யு கே செந்தில்குமார்
படத்தொகுப்பு : என் பி ஸ்ரீகாந்த்
இயக்கம் : சுந்தர் சி
தயாரிப்பாளர் : அவ்னி சினி மேக்ஸ் (குஷ்பூ)



கதைக்களம்…

ராதாரவி ஊர் ஜமீன்தார். இவரது அரண்மனையில் உள்ள பேய் இவரை தாக்க கோமா ஸ்டேஜ்க்கு செல்கிறார். அவரை மீட்க நாட்டு வைத்தியர் சூரி மற்றும் நர்ஸ் பூனம் பஜ்வா வருகின்றனர்.

தன் தந்தை ராதாரவியை தாக்கிய பேய் யார்? என்று தெரிந்து கொள்ள சித்தார்த் தன் காதலி த்ரிஷாவின் அண்ணன் சுந்தர் சியின் உதவியை நாடுகிறார். இதனிடையில் அரண்மனையில் இருக்கும் ஒவ்வொருவராக கொல்லப்பட சுந்தர் சி அதை தடுக்க கேரள மாந்தீரிகத்தை நாடுகிறார்.

இறுதியில் வென்றது யார்? என்பது உங்களுக்கே தெரியும்தானே…

கதாபாத்திரங்கள்..

சித்தார்த்.. தான் இதுவரை நடிக்காத பேய் படம் என்பதால் கால்ஷீட் கொடுத்திருப்பார் போல. ஆனாலும் அவருக்கு பேய் ஓட்டும் வேலை கூட இல்லை. ஆனால் ஸ்மார்ட்டாக வந்து த்ரிஷாவுடன் டூயட் பாடி, ஹன்சிகாவுக்கு அண்ணனாக வந்து செல்கிறார். (ஐய்யோ… பாவம்)

படத்தில் ஆக்ஷன், ஆக்ரோஷம் என இரு மாறுபட்ட நடிப்பை கொடுத்திருக்கிறார் சுந்தர் சி. ஆனால் இந்த லெமன் சென்டிமெண்டை விட மாட்டார் போலிருக்கிறது.

என்னதான் ஹோம்லியான ஹீரோயினாக இருந்தாலும் சுந்தர் சி தன் படங்களில் அவர்களை க்ளாமராக காட்டத் தவறுவதில்லை. இதிலும் த்ரிஷா மற்றும் பூனம் பஜ்வாவை நன்றாகவே பயன்படுத்தியிருக்கிறார். த்ரிஷா நீச்சல் உடையில் கவர்ச்சியாக வந்தால், பூனம் பஜ்வா சேலையில் நம்மை ரொம்பவே ஈர்க்கிறார்.

சென்டிமென்ட் மற்றும் பேய் என இரண்டிலும் நன்றாக உணர்ந்து நடித்திருக்கிறார் ஹன்சிகா. ஆனால் இவர் வாழும்போது கொஞ்சம் முடிதானே இருக்கிறது. பின்னர் பேயான பின்னர் கூந்தலுக்கு ஏதேனும் ஆயில் பயன்படுத்தியிருப்பாரோ? அவ்வளவு நீளமாக பறக்கிறதே…???

இந்த பேய் மிரட்டலிலும் நம்மை கிச்சுகிச்சு மூட்டி செல்கின்றனர் சூரி, கோவை சரளா, மனோபாலா கூட்டணி. எச்சரிக்கை கொடுத்தா எச்சைகல போல பண்றாளே… தேன் தானா வந்து விழந்தா நக்கிடணும் என்னும் சூரியின் வசனங்களால் இடை இடையே ரசிக்க வைக்கிறார்.

இவர்களுடன் ராதாரவி, ராஜ்கபூர், சுப்பு பஞ்சு.. நீண்ட நாட்களுக்கு பிறகு வில்லனத்தனத்தை கையில் எடுத்துள்ளனர். சில காட்சிகளில் வைபவ், குஷ்பு.

தொழில்நுட்ப கலைஞர்கள்…

ஹிப் ஹாப் தமிழா ஆதி.. இதில் பாதியே. இந்தாண்டு என்னாச்சு? நிறைய எதிர்பார்த்தோம் பாஸ்…

யுகே செந்தில்குமாரின் ஒளிப்பதிவில் நிறைய காட்சிகளை ரசிக்க முடிகிறது. முக்கியமாக 3 ஹீரோயின்ஸ். அம்மன் பாடல் காட்சியில் பிரம்மாண்டத்தை காட்டியுள்ளனர். கிராபிக்ஸ் காட்சிகளும் இவருக்கு கைகொடுத்துள்ளது.

எடிட்டர் ஸ்ரீகாந்த் பொறுமையை சோதிக்காமல் கத்திரி போட்டிருக்கலாம்.

படத்தின் ப்ளஸ்…

    அழகான ஹீரோயின்ஸ்..
    சூரி, கோவைசரளா காமெடி
    பேய் சீன்ஸ் + அம்மன் பாடல் காட்சிகள்

படத்தின் மைனஸ்…

    பயம்வராத பேய் காட்சிகள்
    அதிகம் ரசிக்கமுடியாத பாடல்கள்
    வழக்கமான பேய் படக்கதை

வழக்கமான கதை என்றாலும் அதை வித்தியாசமாக கொடுப்பர் சுந்தர் சி. இதில் கொஞ்சமே முயற்சித்திருக்கிறார். கவுண்டமணி, வடிவேலு, சந்தானம் என ஒவ்வொருவருக்கும் பெரிய ஹிட் கொடுத்தவர் சுந்தர் சி. இதில் சூரியையும் இன்னும் கொஞ்சம் கவனித்திருக்கலாம்.

மொத்தத்தில் ‘அரண்மனை 2’… அரட்டை அதிகம்.. அலறல் சொஞ்சம்..

“இறுதிச் சுற்று” – தமிழுக்குப் புதுசு! இந்திக்குப் பழசு! பெண்களுக்குப் பெருமை சேர்க்கும்!

கோலாலம்பூர் – ஏறத்தாழ நான்கு ஆண்டுகளாக தமிழ்த் திரையுலகில் இருந்து ஒதுங்கி இருந்த மேடி  என்ற மாதவன் விசுவரூபம் எடுத்து, முடி-தாடி வளர்த்து திரும்பியிருப்பது “இறுதிச் சுற்று” படத்தின் மூலம்! ஒரே நேரத்தில் இந்தியிலும், தமிழிலும் வெளியாகின்றது இந்தப் படம்!

மாதவனுக்கு இன்னொரு மகுடம் என்று சொல்லும் அளவுக்கு அவர் கடுமையாக உழைத்திருக்கின்றார் – உடலைச் செதுக்குவதிலும் – குத்துச் சண்டை பயிற்சிகளில் ஈடுபடுவதிலும் – நடிப்பிலும்!

தமிழில் மட்டுமே படம் பார்ப்பவர்களுக்கு, தடம் மாறாத திரைக்கதையும், பெண்களுக்கான குத்துச்சண்டை விளையாட்டு என்ற இதுவரை யாரும் கையாளாத கதைக்களம் என்பதும் மிகவும் பிடித்துப் போகும்.

ஆனால், இந்தி, ஆங்கிலப் படங்கள் பார்ப்பவர்களுக்கோ ஏற்கனவே பல படங்களில் பார்த்த காட்சிகள், எதிர்பார்த்தபடியான கதைப் போக்கு என புதுமையாக ஏதுமில்லை.

Iruthi Chuttru-Mathavan training“இறுதிச் சுற்று” படத்திற்காக நிஜ வாழ்க்கைப் பயிற்சியில் மாதவன்…

அதிலும், இந்தியில் பிரியங்கா சோப்ரா நடித்து வெற்றி பெற்ற மேரி கோம் என்ற இந்திய குத்துச்சண்டை வீராங்கனையின் கதையைக் கொண்ட இந்திப் படத்தையும், ஷாருக்கான் நடித்த “சக்டே இந்தியா” படத்தையும் பார்த்தவர்களுக்கு “இறுதிச் சுற்று” அதன் பாதிப்பு என்பதை சுலபமாகப் புரிந்துகொள்ள முடியும்.

அதைவிட, சில்வர்ஸ்டர்ன் ஸ்டால்லோன் நடித்த ரோக்கி (Rocky) ஆங்கிலப் படவரிசைகளின் பாதிப்புகளும் ஆங்காங்கே பளிச்செனத் தெரிகின்றது. குறிப்பாக, ரஷிய வீராங்கனையோடு, இறுதிப் போட்டியில் மோதுகின்ற காட்சிகளில்!

இப்போது, தமிழிலும் சில படங்கள் விளையாட்டுப் போட்டிகளை மையமாக வைத்து வந்து விட்டதால், பெண் இயக்குநர் சுதா கொங்கரா (படம்) திரைக்கதையில் இன்னும் கொஞ்சம் கூடுதல் கவனம் செலுத்தியிருக்கலாம்.

Sudha Kongara Prasad @ Irudhi Suttru Movie Audio Launch Stillsஇருப்பினும், ஒரு பெண் என்பதாலோ என்னவோ, பெண்மன உணர்வுகளை பல காட்சிகளில் அழகாக வெளிப்படுத்தியிருக்கின்றார் இயக்குநர்.

படத்தை மொத்தமாக கொள்ளை கொண்டு போகின்றவர் – நமது மனங்களை அள்ளிக் கொண்டு போகிறவர் – கதாநாயகியாக நடித்திருக்கும் ரித்திகா சிங். நிஜ வாழ்க்கையிலும் தற்காப்புக் கலை போட்டிகளில் இவர் வீராங்கனையாம்!

கதை-திரைக்கதை

முன்னாள் குத்துச் சண்டை வீரரான மாதவன், பயிற்சியாளராக மாறி புதுடில்லியில் பணிபுரிந்து கொண்டிருக்க, ஒரு பிரச்சனையில் தலைமைப் பயிற்சியாளரிடம் ஏற்படும் மோதலால், சென்னைக்கு மாற்றப்படுகின்றார். சென்னையில் குத்துச்சண்டை போட்டிகளுக்கான வாய்ப்புகள் குறைவு என்பதால் ஒரு தண்டனையாக மாதவனை சென்னைக்கு அனுப்புகின்றார்கள்.

வட சென்னையில், ஒரு மீன் குப்பத்தில், குத்துச்சண்டையில் ஆர்வத்தோடு ஈடுபடும் ஒரு குடும்பத்தின் இரண்டு சகோதரிகளை மாதவன் கண்டெடுத்து, அவர்களுக்குப் பயற்சியளித்து, அந்த இருவரில் மதி என்ற பெயர் கொண்ட தங்கையை எப்படி ஒரு குத்துச் சண்டை வீராங்கனையாக உருமாற்றுகின்றார் என்பதும் அதில் அவர் சந்திக்கும் சவால்களும், சம்பவங்களும்தான் படம்.

Iruthi Chuttru-poster 2ஆரம்பம் முதல் இறுதிக் காட்சி வரை பெண்களுக்கான குத்துச் சண்டை என்பதை மட்டுமே மையமாக வைத்து நகரும் திரைக்கதை தமிழுக்குப் புதுசு. வழக்கமான காதலர் பாடல்கள் இல்லை, நகைச்சுவைக்கென தனிக் கதை இல்லை. இருந்தாலும், வலுவான சம்பவங்களின் மூலம் நம்மை இறுதிக்காட்சி வரை கட்டிப்போட்டு விடுகின்றார் இயக்குநர்.

இருந்தாலும், பல இடங்களில் திரைக்கதை எதிர்பார்ப்பதைப் போலவே இருப்பதும், கதையில் வரக் கூடிய திருப்பங்களில் சுவாரசியங்கள் இல்லாதிருப்பதும் இன்னொரு கோணத்தில் பார்த்தால் திரைக்கதையில் விழுந்திருக்கும் சில ஓட்டைகளாகச் சொல்லலாம்.

அதே போல, விளையாட்டுப் போட்டிகளில் இருப்பதாகக் காட்டப்படும் அரசியலும் பல படங்களில் ஏற்கனவே பார்த்ததுதான்.

நடிப்பு

iruthi suttru-mathavan-saala khadoosபயிற்சியில் ஈடுபடும் மாதவன், ரித்திகா – இந்தியில் சாலா காடூஸ் என்ற பெயரில் வெளியாகியுள்ளது ‘இறுதிச் சுற்று…

படத்தின் பலம் மாதவனும், கதாநாயகி ரித்திகா சிங்கும்தான்!

அதற்கேற்ப, இருவரும் கடுமையாக உழைத்திருக்கின்றார்கள். அந்தக் காலப் படங்களில் பார்த்ததைப் போல் ‘சாக்லேட் பாய்’ காதலனாகவே, மீண்டும் மீண்டும் தன்னைக் காட்டிக் கொள்ள முயற்சி செய்யாமல், வயதுக்கு ஏற்ற பாத்திரத்தைத் தேர்ந்தெடுத்ததில் மாதவன் முத்திரை பதித்திருக்கின்றார்.

குத்துச் சண்டைப் பயிற்சியில் அவர் காட்டும், ஆர்வம், ஆக்ரோஷம், வெறி என அனைத்தையும் தனது முக பாவனைகளில் வெகு சிறப்பாக கொண்டு வந்து, மீண்டும் ஒரு சுற்று வருவேன் என இன்றைய கதாநாயகர்களை பயமுறுத்தியிருக்கின்றார்.

ரித்திகா சிங் மனது வைத்தால் இந்தி, தமிழ் என ஒரு புதிய கதாநாயகியாக வலம் வருவார். அவ்வளவு திறமைகளும், அழகும், கொட்டிக் கிடக்கின்றன. நடிப்பிலும் குறை வைக்கவில்லை.

Ritika-Singh-Irudhi-Suttru-படத்தின் கதாநாயகி ரித்திகா சிங்…ஒரு பத்திரிக்கையாளர் சந்திப்பில்….

மீன் குப்பத்தில் மீன் விற்பவளாக அலட்டல், தன்னை நெருங்க நினைப்பவர்களிடம் நெருப்பாக சீறுவது, குத்துச் சண்டை என இறங்கி விட்டால் வெறியோடு போராட்டம் நடத்துவது, பயிற்சியாளரை மட்டம் தட்டுவது, பின்னர் அதே பயிற்சியாளர் மாதவனோடு காதலில் விழும்போது காட்டும் நெகிழ்வு, நளினம், கடைசிக் காட்சிகளில் பயிற்சியாளர் பக்கத்தில் இல்லாததால் ஏற்படும் ஏக்கம் என அனைத்து முனைகளிலும் தேர்ச்சி பெறுகின்றார் ரித்திகா.

வசனங்களைக் கூட சொந்தக் குரலில் பேசியிருக்கின்றார் – அதுவும் அதே வடசென்னை மொழியில்!

சாதாரண தமிழ் இரசிகனுக்கு ஆர்வமில்லாத பல அம்சங்களைக் கொண்டிருக்கும் திரைக்கதை கொண்ட படத்தைக் காப்பாற்றுவது மாதவன், ரித்திகா இருவரும்தான்.

அதே சமயம் மற்றவர்களின் நடிப்பும் குறை சொல்லும் அளவிற்கு இல்லை. குறிப்பாக நாசரும், ராதாரவியும் கவர்கின்றார்கள்.

Iruthi Suttru poster-3கதாநாயகியின் குடும்பக் காட்சிகளும், அவர்களுக்குள் நடக்கும் சில்லறைச் சண்டைகளும் அசல் மீன் குப்பத்து குடும்பத்தை நம் கண் முன்னே கொண்டு வந்து காட்டுகின்றன.

போட்டி விளையாட்டு என்று வரும்போது அக்காள்-தங்கைக்கு இடையிலும் விரிசல் வரும் என்பதை உறைக்கும்படி உணர்த்தியிருக்கின்றார்கள்.

பலவீனங்கள்

படத்தில் பச்சையாக என் மனைவி வேறொருவனுடன் ஓடிப் போய்விட்டாள் என அடிக்கடி கூறுகிறார் மாதவன். அந்தக் கிளைக் கதையையும் சுருக்கமாக கூறியிருந்தால், மாதவன் கதாபாத்திரத்தின் மீது அனுதாபமோ அல்லது ஒரு தாக்கமோ இருந்திருக்கும்.

பயிற்சியாளர் என்று கூறிக் கொண்டு, அதுவும் பெண்களுக்கான குத்துச் சண்டை பயிற்சியாளர் என வரும் ஒரு பாத்திரம், மது அருந்திக் கிடப்பதும், மற்றவர்களின் மனைவியரோடு உடலுறுவு வைத்துக் கொள்வது போன்ற காட்சிகளும் அந்தக் கதாபாத்திரத்தின் தன்மையை, சிதைத்து விடுகின்றது. நமக்கும் அந்தக் கதாபாத்திரத்தின் மீது அனுதாபம் பிறக்கவில்லை.

சாதாரண பயிற்சியாளராக, மிகவும் பின்தங்கிய இடத்தில் தங்கி பயிற்சி கொடுக்கும் மாதவன் – டில்லியிலிருந்து மோட்டார் சைக்கிளிலேயே வரும் மாதவன் – பணம் போதவில்லை என தனது மோட்டார் சைக்கிளையே ஒரு கட்டத்தில் விற்று விடுகின்றார். ஆனால், பல இடங்களில் கத்தை கத்தையாக பணத்தை அள்ளி வீசுகின்றார். சர்வ சாதாரணமாக ஒரு இலட்சம் ரூபாய் கொடுத்து கதாநாயகியை போலீஸ் சிக்கலில் இருந்து காப்பாற்றுகின்றார்.

இவையெல்லாம் முரண்பாடுகள் இல்லையா?

இப்படி ஆங்காங்கே சில ஓட்டைகள் கதையில் ஆங்காங்கே காணப்படுகின்றன.

மற்ற தொழில் நுட்பங்கள்

இசை சந்தோஷ் நாராயணன் சிறப்பாக செய்திருந்தாலும், ஏறத்தாழ எல்லாப் பாடல்களும் ஒரே சாயலில் ஒலிக்கின்றன. அதிலும் 36 வயதினிலே படத்தின் பாடல்களைத் திரும்பக் கேட்பது போல் ஒரு பிரமை. பாடல் பாடுபவர்களும் அதே சாயலில் பாடுகின்றார்கள். தடத்தை மாற்றிக் கொள்ளுங்கள் இசையமைப்பாளரே!

ஒளிப்பதிவு சிவகுமார் விஜயன். மீன் குப்பத்தையும், அதன் வாழ்வியலையும் அப்படியே படம் பிடித்துக் காட்டியிருக்கின்றார். பயிற்சிக் காட்சிகளும், குத்துச் சண்டை போட்டிக் காட்சிகளின் ஒளிப்பதிவும் கவரவே செய்கின்றன.

சாதாரண பெண்ணும் தகுந்த பயிற்சியும், கவனிப்பும், வழிகாட்டுதலும் இருந்தாலும் சாதனை புரியலாம் என்பதைக் காட்டிய வரையில் – பெண்களையும், போட்டி விளையாட்டுகளில் ஈடுபடுத்த குடும்பத்தினர் இயக்குநர் சுதாவுக்கு ஒரு பாராட்டு!

ஆனால், ‘அரண்மனை’யைப் பார்க்கப் போகலாம் வாருங்கள் – ஒன்றுக்கு இரண்டு மூன்றாக அழகுக் கதாநாயகிகள் – போதாக் குறைக்கு பேயும் இருக்கின்றது – என வரிசை கட்டிக் கொண்டு நிற்கும் தமிழ் இரசிகனை இறுதிச் சுற்று ஈர்க்குமா? சந்தேகம்தான்!

இது பாக்ஸிங் பேய்- ஸ்பெஷல்

தமிழ் சினிமா தற்போது வட இந்திய படங்களுக்கு போட்டியாக வளர்ந்து வருகின்றது. இன்னும் சொல்ல வேண்டுமென்றால் அவர்களை விட சிறந்த கலைஞர்கள் இங்கு தான் உள்ளனர், பாலிவுட்டிலேயே தென்னிந்திய கலைஞர்களை பெரிதும் விரும்புகின்றனர்.

இது ஒருபுறம் இருக்க, அவ்வபோது தமிழ் சினிமா கையில் ஒரு சில கதைக்களங்கள் சிக்கிக்கொள்ளும், அந்த மாதிரியான கதைகளின் தொடர் வெற்றி, அதே கதைகளில் பல படங்கள் வரும். அந்த வகையில் தற்போது தமிழ் சினிமாவை பிடித்துள்ளது பாக்ஸிங் பேய்.

ஆமாம், முனி என்ற பெயரில் ராகவா லாரன்ஸ் ஆரம்பித்து வைத்த பேய் ட்ரண்ட், பிறகு தமிழ் சினிமாவையே ஒரு உலுக்கு உலுக்கியது, தொடர்ந்து காஞ்சனா, அரண்மனை, காஞ்சனா-2, மாயா, மாஸ், டிமாண்டி காலனி, யாமிருக்க பயமே என பல படங்கள் வரிசை கட்டியது.

இதில் காஞ்சனா-2 ரூ 100 கோடி, அரண்மனை ரூ 40 கோடி வரை வசூல் செய்தது குறிப்பிடத்தக்கது. பேய் படங்களுக்கு என சில டெம்ப்ளேட் கதைகள் இருக்கும், பழி வாங்குதல் குடும்பம், நண்பர் என கொலை செய்தவர்களை பழி வாங்கும் சாதாரண கதை தான் என்றாலும், அதில் காமெடி, ஆக்‌ஷன் என லேசாக தூவி எளிதில் ஹிட் அடித்து விடலாம்.

இதுவரை வந்த பேய் படங்களில் மிகவும் வித்தியாசமாக எடுக்கப்பட்ட படம் என்றால், மாயா, டிமாண்டி காலனி தான், இதில் மாயாவும் பழி வாங்கும் கதை தான் என்றாலும், புதுவிதமான திரைக்கதையில் இதுவரை தமிழ் சினிமா பயணிக்காத ஒரு ஜேனரில்(Genre) கலக்கியது.

அதேபோல் டிமாண்டி காலனியும் எந்த ஒரு காரணமும் இல்லாமல் மாட்டிக்கொள்ளும் 4 இளைஞர்கள், பேயிடம் இருந்து தப்பித்துக்கொள்ளாமல் மரணம் அடைவது என புதுவிதமான ட்ரண்டை உருவாக்கியது. நேற்று வெளியான அரண்மனை-2 கூட ஒரே மாதிரி தான் உள்ளது என்றாலும், பொழுதுபோக்கை மட்டும் விரும்பும் ரசிகர்களுக்கு இது செம்ம விருந்து தான்.

அதேபோல் ஸ்போர்ட்ஸ் படம் என்றாலே விறுவிறுப்பிற்கு பஞ்சம் இருக்காது, அதிலும் பாக்ஸிங் என்றால், நம் இந்தியர்களுக்கும் பெரிதும் தெரியாத விளையாட்டு, இயக்குனர்கள் வைப்பது தான் ரூல்ஸ். ஹீரோ அந்தரத்தில் பறந்து பறந்து கூட பாக்ஸிங் விளையாடுவார்.

இதில் பத்ரி, எம்.கும்ரன், வலியவன், பூலோகத்தை தொடர்ந்து தற்போது நேற்று ரிலிஸான இறுதிச்சுற்று வரை பாக்ஸிங் கதைகள் தான். இதில் பத்ரி, எம்.குமரன் எல்லாம் மக்களை பொழுதுபோக்கு செய்ய வேண்டும் என்ற ஒரே நோக்கத்தில் எடுக்கப்பட்ட படங்கள். பூலோகமும் இந்த வகை என்றாலும், இதில் பாக்ஸிங் நுணுக்கங்கள் குறித்து ஆழமாக காண்பித்திருப்பார்கள்.

ஆனால், இதுவரை தமிழ் ரசிகர்கள் கண்டிராத வித்தியாசமான பாக்ஸிங் படம் தான் இந்த இறுதிச்சுற்று. மிகவும் ரியலாக அதிலும் ஒரு பெண் பாக்ஸிங் குறித்து தைரியமாக ஒரு படத்தை இயக்கி அதை ரசிகர்களை திருப்திப்படுத்தவும் செய்துள்ளார் சுதா. ஹீரோ வெற்றிப்பெற்றே தான் இருப்பார் என்று மட்டுமில்லாமல், ரியல் பாக்ஸிங் இப்படித்தான் இருக்கும், இதற்குள் இத்தனை அரசியல் உள்ளது என்பதை கூறியுள்ளது இறுதிச்சுற்று.

ஆனால், கிளைமேக்ஸ் சண்டையில் மட்டும் ஹீரோ 10 அடி வாங்குவார், அவருக்கு பிடித்தவர் வந்த பிறகு தான் அடிக்க ஆரம்பிப்பார் என்ற சேம் லாஜிக் தான் இந்த இறுதிச்சுற்று கிளைமேக்ஸ் என்றாலும், அதை ஒரு பெண் வழியாக கூறி புது மேஜிக் படைத்துள்ளது.

தற்போது ஒரேநாளின் அரண்மனை-2, இறுதிச்சுற்று என பாக்ஸிங் பேய் வந்துள்ளது. இதில் எந்த படம் ரசிகர்களை வெகுவாக கவரும் என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.

சிங்கம் சூர்யா, சிறுத்தை கார்த்தியை இணைக்கும் ஹரி..!

அரசியலில் யார் யாரோ கூட்டணி அமைக்கிறார்கள். ஏன் சினிமாவில் கூட அப்படி அபூர்வ நிகழ்ச்சிகள் நடப்பது உண்டு. ஆனால் அண்ணன் தம்பியாக இருக்கும் சூர்யாவும், கார்த்தியும் ஏன் இணைந்து நடிக்கவில்லை? என்ற ஆயிரம் கேள்விகள் இவர்கள் முன் எப்போதும் வைக்கப்படுகிறது.

இந்த கேள்விகளுக்கு இப்போது விடையுடன் கூடிய ஒரு முற்றுப்புள்ளி கிடைத்துள்ளது. ஹரி இயக்கும் சிங்கம் 3 (எஸ் 3) படத்தில் நடித்து வருகிறார் சூர்யா.

ஹாரிஸ் ஜெயராஜ் இசையமைக்கும் இப்படத்தில் அனுஷ்கா, ஸ்ருதிஹாசன், ராதிகா சரத்குமார், ரோபா சங்கர், சூரி, கிரிஷ், சாம்ஸ் உள்ளிட்டோர் நடிக்கின்றனர்.

இப்படத்தில் ஒரு பாடல் மற்றும் சில காட்சிகளில் சூர்யாவுடன் இணைகிறாராம் கார்த்தி. இது இவர்கள் இணைந்து தயாரித்து நடிக்க கூடிய படத்திற்கு ஒரு வெள்ளோட்டமாக கூறப்படுகிறது.

அட ஏதாச்சும் காரணமாக இருக்கட்டும். சிங்கமும் சிறுத்தையும் ஒண்ணா வந்தா அதுவே மாஸ்தானே…

Saturday 30 January 2016

குஷ்புவிற்கு முத்தம் கொடுத்த சர்ச்சைக்கு சாமர்த்தியமாக பதில் கூறிய மாதவன்

மாதவன் நடிப்பில் தற்போது திரையரங்கில் வெற்றி நடைப்போடும் படம் இறுதிச்சுற்று. இப்படத்தின் ப்ரோமோஷன் நிகழ்ச்சிக்காக குஷ்பு தொகுத்து வழங்கும் ஒரு ஷோவில் மாதவன் கலந்துக்கொண்டார்.

இதில் குஷ்புவிற்கு மாதவன் முத்தம் கொடுத்தார். இவை சமூக வலைத்தளங்களில் வைரலாக பரவ பலரும் பலவிதமாக கருத்துக்களை கூறினர்.

இதற்கு ஒரு வார இதழில் மாதவன் பதில் அளிக்கையில், ‘குஷ்பு எனக்கு ஒரு அக்கா மாதிரி தான், தற்போது சொல்லுங்கள் அந்த முத்தத்தில் என்ன தவறு என்று’ என அசத்தலாக கூறினார்.

முதல் நாள் இத்தனை கோடி வசூல் செய்து விட்டதா அரண்மனை-2- பிரமாண்ட வரவேற்பு

அரண்மனை-2 படம் நேற்று தமிழகம் முழுவதும் 355 திரையரங்குகளில் வெளிவந்தது. படத்திற்கு முதல் காட்சியிலிருந்தே நல்ல வரவேற்பு இருந்து வந்தது.

சமீபத்தில் வந்த தகவலின்படி இப்படத்தின் வசூல் தமிழகத்தில் மட்டும் ரூ 5.22 கோடி வசூல் செய்துள்ளதாம். இவை சாதரண விஷமில்லை.

இப்படத்துடன் இறுதிச்சுற்று வந்ததுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது, இவை ஒரு இரண்டாம் கட்ட முன்னணி நடிகரின் படத்திற்கு இணையான வசூல் என்று கூறப்படுகின்றது.

இப்பதான் பழ.கருப்பையா வீட்ல கல் விழுந்திச்சு, இதுல இவரு வேற?

“ஆட்டுக்கு தாடி மாதிரி இது எதுக்குங்க அநாவசியமாக?” இப்படியொரு கேள்வியை எழுப்பி எழுப்பி தொண்டை வறண்டு போய் கிடக்கிறது கோடம்பாக்கம். எது குறித்து இப்படியொரு பதற்றம்? வேறொன்றுமில்லை, படங்களுக்கு தரப்படும் வரிவிலக்கு தொடர்பான அலுப்பும் அனத்தலும்தான் இது. தொடர்ந்து தன் படங்களுக்கு வரிவிலக்கு மறுக்கப்படுவதாக உதயநிதி நீதிமன்றத்தில் வழக்கு போட்டு வருகிறார். அது தொடர்பான விவாதங்களும் ஆங்காங்கே நடந்து வருகின்றன. அவராவது முன்னாள் முதல்வரின் குடும்பம். காரசாரமான எதிர்கட்சியின் வாரிசு. ஐயோ பாவம்… இந்த கதிர் என்ன பண்ணினார்?

முதலில் யார் இந்த கதிர்? ‘காந்தர்வன்’ என்ற படத்தில் அறிமுகமான ஹீரோ. அதற்கப்புறம் நீண்ட இடைவெளிக்குப் பின் அவர் ஹீரோவாக நடிக்கும் படம் ‘ஒன்பதிலிருந்து பத்து வரை’. சென்னையிலிருந்து காஞ்சிபுரம் நோக்கி செல்லும் ஒரு காரின் டிரைவர் கதிர். கூடவே பயணம் செய்யும் ரேடியோ ஜாக்கி ஸ்வப்னா மேனன். இவர்கள் இருவருக்கும் நடுவில் வரும் மோதல் என்று கதை பயணிக்கிறது. திடீரென இவர்கள் ஒரு பிரச்சனையில் மாட்டிக் கொள்ள பின்னாலேயே விரட்டி வரும் போலீசிடம் இவர்கள் சிக்கினார்களா? ஏன் போலீஸ் துரத்தியது? என்பது மிச்சசொச்சம். விஜய் சண்முகவேல் ஐயனார் இயக்கியிருக்கிறார்.

இந்த படத்திற்குதான் வரிவிலக்கு தராமல் சுமார் ஆறு மாதங்களாக இழுத்தடித்தார்களாம். “என்னை கேட்டால், இந்த முறையே தேவையில்லே சார். பேசாம எல்லா படத்துக்கும் கூட வரி போடலாம். இவங்க வரிவிலக்கு கொடுப்பாங்கன்னு கொடுப்பாங்கன்னு அலையுறதிலேயே எங்களுக்கு தோதான ரிலீஸ் டைம் போயிடுது” என்று புலம்புகிறார் கதிர். வரிவிலக்குன்னு போனாலே இது வேணும் அது வேணும்னு கேட்கிறாங்க. நான் அப்படியெல்லாம் கொடுக்கிற ஆள் இல்ல. இப்பவும் எங்க ஊர்ல உள்ள ஸ்கூலுக்கு ஐந்து சென்ட் நிலம் வாங்கிக் கொடுத்திருக்கேன். எங்க ஊர் கோவிலை 45 லட்சம் செலவு பண்ணி புதுப்பிச்சிருக்கேன். செலவு அதுக்கு பண்ணலாம். இந்த வரிவிலக்குக்காக ஏன் பண்ணணும்?” என்று மேலும் மேலும் சூடாகிக் கொண்டே போனார்.

பழ.கருப்பையா வீட்ல கல்லெறிஞ்சுட்டாங்கன்னு இப்பதான் நியூஸ் வந்திச்சு. இந்த கதிர் வேற… கன்னா பின்னான்னு பேசிகிட்டு இருக்காரே? சினிமா ஹீரோ… சமாளிப்பார்னு நம்புவோம்!

அம்மனுக்கு லீவு... பேய்க்கு ஓவர் டைம்! - ‘அரண்மனை-2’ விமர்சனம்

ஆக்‌ஷனோ... ரொமான்ஸோ... பேய் படமோ.. எது எடுத்தாலும் எனக்கு அது காமெடி படம்தான் என்கிற சுந்தர்.சியின் செல்லுலாய்டு அரண்மனை. பயப்பட போனால் ஏமாற்றமும், சிரிக்க போனால் நிம்மதியும் கிடைக்கலாம்.

முதல் பாகம் ஹிட் என்பதால் கூடுதல் தைரியமும், குறைவான வேலையும் தேவைப்பட்டிருக்கிறது. ”ஆண்ட்ரியா நகரு நகரு... த்ரிஷா உட்காரும்மா.. ஹன்சிகா, நீ அப்படியே இரும்மா. வினய் ஸாரி... சித்தார்த் ஜி ஆவோ ஆவோ. சந்தானம் இல்லையா? அப்ப சூரி ஓகே!” - இவ்வளவுதான் மாற்றங்கள்.

அம்மன் சிலையை மறுபிரதிஷ்டை செய்ய கருவறையை விட்டு வெளியே எடுக்கிறார்கள். அந்த விடுமுறை நாளில் அம்மனுக்கு சக்தி இருக்காதாம். அதனால் பூமியில் மறைந்திருக்கும் பேய்களைக் கிளப்பி விட்டு தொழிலை விருத்தி பண்ண நினைக்கிறார்கள் பேயோட்டிகள். அப்படிக் கிளம்பியதில் எக்ஸ்ட்ரா பவர் பேயொன்று அந்த ஊர் அரண்மனையில் ஓடி ஒளிந்து கொள்கிறது. அந்த அரண்மனையில் இருக்கும் ஒவ்வொருவராய் கொலை செய்ய, அந்த பேய் யார்? ஏன் அது பழி வாங்குகிறது என்பது இடைவேளைக்கு பின்னான ஃப்ளாஷ்பேக். அந்த வீட்டின் நல்லவர்கள் காப்பாற்றப்படுகிறார்களா என்பது க்ளைமேக்ஸ் (ம்க்கும்... சஸ்பென்ஸாமாம்!).

கவர்ச்சி த்ரிஷா, வீட்டோட நர்ஸ் ஆக பூனம் பாஜ்வா, பேயாக ஹன்சிகா என.. சுந்தர்.சி ஏரியா வழக்கம் போல நச். முதல் பாடலில் சட்டையைக் கழட்டிப் போட்டுவிட்டெல்லாம் வருகிறார் த்ரிஷா. ஆனால், பூனம் பாஜ்வாவுக்குத்தான் அள்ளுது அப்ளாஸ்.
பிரசாந்துக்கு தம்பி போல ஆகிவிட்டார் சித்தார்த். ஹிட் என்பதற்காக இந்த லிஸ்ட் படங்களை நம்புவதா பாஸ்? ப்ச்..!


 ”சந்தானம் எவ்வளவு நல்லா காமெடி பண்ணுவாரு” என யோசிக்க வைத்தாலும் சூரிக்கு பிராக்சி தந்து காப்பாற்றுகிறது சுந்தர்.சி அண்ட் கோ வின் வசனங்கள். “கோணி ஊசிக்கு கொண்டை மீசை” என ஒன்லைனர்களும், பேயுடனான டெம்போ ட்ராவலர் பயணமும் அதிரிபுதிரி சிரிப்பு மத்தாப்பூ!

ஆளாளுக்கு பேயை பார்க்கிறார்கள். பின் அடுத்த நாள் அந்தவீட்டிலே பாட்டு பாடுகிறார்கள். பேய் படத்தில் மேஜிக் பாக்கலாம். லாஜிக் பாக்கலாமா என்ற பன்ச் பேசி நம்மை நாமே சமாதானம் படுத்திக் கொள்ள வேண்டியதுதான்.

வழக்கமான கலகல சீன்களாலும், கிளாமராலும் தனது வேலையை செவ்வனே செய்திருக்கிறார் இயக்குனர். ஒரே குரல்.. ஒரே மாதிரியான வரிகள்.. கொஞ்சம் உஷாராயிடுங்க ஹிப்ஹாப் தமிழா. தமிழனுக்கு வெரைட்டிதான் முக்கியம்.

ஆக, பன்ச் லைன்: அரண்மனை-3 வருவதை யாராலும் தடுக்க முடியாது!

திண்டுக்கல் தலப்பாக்கட்டு சிக்கன் பிரியாணி

தமிழ்நாட்டில் எங்கு பார்த்தாலும் தலப்பாக்கட்டு பிரியாணி கடைகளைப் பார்க்கலாம். அந்த அளவில் அது மிகவும் பிரபலமானது. ஆனால் அந்த தலப்பாக்கட்டு பிரியாணியை எப்படி செய்வதென்று தெரியுமா? அதுவும் திண்டுக்கல் தலப்பாக்கட்டு சிக்கன் பிரியாணியை எப்படி செய்வதென்று தெரிந்து கொள்ள ஆசையா? அப்படியெனில் தொடர்ந்து படியுங்கள்.

ஏனெனில் இங்கு திண்டுக்கல் தலப்பாக்கட்டு சிக்கன் பிரியாணியின் எளிய செய்முறை கொடுக்கப்பட்டுள்ளது. அதைப் படித்து இந்த வார இறுதியில் செய்து சுவைத்து எப்படி இருந்து என்று எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

தேவையான பொருட்கள்:



நெய் - 2 டேபிள் ஸ்பூன்
எண்ணெய் - 3 டேபிள் ஸ்பூன்
பாசுமதி அரிசி - 2 கப்
வெங்காயம் - 1 (நறுக்கியது)
பச்சை மிளகாய் - 3
இஞ்சி பூண்டு பேஸ்ட் - 3 டேபிள் ஸ்பூன்
மிளகாய் தூள் - 2 டீஸ்பூன்
மஞ்சள் தூள் - 1 டீஸ்பூன்
கொத்தமல்லி - 1/2 கப்
புதினா - 1/2 கப்
கெட்டியான தேங்காய் பால் - 1 கப்
தண்ணீர் - 2 கப்
உப்பு - தேவையான அளவு

ஊற வைப்பதற்கு...

சிக்கன் - 1/2 கிலோ
கெட்டியான புளிக்காத தயிர் - 1 கப்
மிளகாய் தூள் - 1 டீஸ்பூன்
உப்பு - தேவையான அளவு

பிரியாணி மசாலா பொடிக்கு...

சோம்பு - 1 1/2 டேபிள் ஸ்பூன்
பட்டை - 2 துண்டு
ஏலக்காய் - 4
அன்னாசிப்பூ - 1
கிராம்பு - 4

செய்முறை:

முதலில் சிக்கனை நன்கு நீரில் கழுவி, பின் ஒரு பாத்திரத்தில் போட்டு, அதில் ஊற வைப்பதற்கு கொடுத்துள்ள பொருட்களை சேர்த்து பிரட்டி 10 நிமிடம் ஊற வைத்துக் கொள்ள வேண்டும்.

பின்னர் பிரியாணி மசாலா பொடிக்கு கொடுத்துள்ள பொருட்களை மிக்ஸியில் போட்டு பொடி செய்து கொள்ள வேண்டும்.

பின்பு பாசுமதி அரிசியை கழுவி, நீரில் 30 நிமிடம் ஊற வைத்துக் கொள்ள வேண்டும்.

பிறகு ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் எண்ணெய் மற்றும் நெய் ஊற்றி காய்ந்ததும், வெங்காயம், பச்சை மிளகாய் சேர்த்து பொன்னிறமாக வதக்கி, பின் இஞ்சி பூண்டு பேஸ்ட் சேர்த்து வதக்க வேண்டும்.

அடுத்து அதில் மஞ்சள் தூள், மிளகாய் தூள் மற்றும் அரைத்து வைத்துள்ள பொடியை சேர்த்து கிளறி விட வேண்டும்.

பின் ஊற வைத்துள்ள சிக்கனை அதில் போட்டு 5 நிமிடம் நன்கு கிளறி, சிக்கனில் மசாலா சேரும் வர பிரட்டி விட்டு, தட்டி கொண்டு மூடி 15 நிமிடம் குறைவான தீயில் வேக வைக்க வேண்டும்.

பின்னர் குக்கரில் வாணலியில் உள்ள சிக்கனுடன் கூடிய மசாலாவை போட்டுக் கொள்ள வேண்டும். பின் அந்த வாணலியை மீண்டும் அடுப்பில் வைத்து, அதில் 1 டீஸ்பூன் நெய் ஊற்றி, ஊற வைத்துள்ள பாசுமதி அரிசியை போட்டு 5 நிமிடம் கிளறி, அதையும் குக்கரில் போட்டுக் கொள்ள வேண்டும்.

அடுத்து அந்த குக்கரை அடுப்பில் வைத்து, அதில் கொத்தமல்லி, புதினா, தேங்காய் பால் மற்றும் தண்ணீர் ஊற்றி, தேவையான அளவு உப்பு சேர்த்து கொதிக்க விட வேண்டும்.

நன்கு கொதிக்க ஆரம்பித்ததும், குக்கரை மூடி, தீயை அதிகரித்து 1 விசில் விட்டு, பின் தீயை குறைத்து 15 நிமிடம் கழித்து அடுப்பை அணைக்க வேண்டும்.

விசில் போனதும் குக்கரைத் திறந்தால், சுவையான திண்டுக்கல் தலப்பாக்கட்டு சிக்கன் பிரியாணி ரெடி!!!

அரண்மனை 2 (2016) - திகிலுடன் காமெடி கலந்து குடும்பப்பாங்கான...வேறென்ன..?

பெரிய ஜமீன்தாரான ராதாரவி தனது மகன்கள் சித்தார்த் மற்றும் சுப்பு பஞ்சுவுடன் ஒரு மிகப்பெரிய அரண்மனையில் வாழ்ந்து வருகிறார். இந்த அரண்மனையிலேயே அண்ணன் தங்கைகளான மனோபாலாவும், கோவை சரளாவும் வேலைக்காரர்களாக பணிபுரிந்து வருகிறார்கள்.

சுப்பு பஞ்சுவுக்கு திருமணமாகி ஒரு குழந்தை இருக்கிறது. சித்தார்த்துக்கு அவரது முறைப்பெண்ணான திரிஷாவுடன் நிச்சயதார்த்தம் நடந்திருக்கிறது. திருமணத்துக்கு கொஞ்ச நாட்கள் இருக்கும்போது இரண்டுபேரும் வெளியூர் சென்றுவிடுகிறார்கள். அந்த நேரத்தில் ராதாரவி திடீரென கோமா நிலைக்கு சென்றுவிடுகிறார்.

இதனால் இருவரும் அவசரமாக அரண்மனைக்கு திரும்பி, ராதாரவியை கூடவே இருந்து பார்த்துக் கொள்கிறார்கள். ராதாரவிக்கு சிகிச்சை அளிப்பதற்காக அந்த அரண்மனையிலேயே நர்சாக தங்கி பணிபுரிந்து வருகிறார் பூனம் பஜ்வா. மேலும், ராதாரவியை குணப்படுத்துவதற்காக சூரியும், நாடி ஜோசியராக அந்த அரண்மனைக்கு வருகிறார்.

இந்நிலையில், அந்த அரண்மனையில் ஒரு கருப்பு உருவம் நடுமாடுவது, கோமா நிலையில் இருக்கும் ராதாரவி திடீரென அந்தரத்தில் தொங்குவதுபோல திரிஷாவுக்கு தெரிகிறது. இதனால், பயந்துபோய் அரண்மனையில் உள்ளவர்களிடம் சொல்கிறார். ஆனால் அவர்கள் நம்ப மறுக்கிறார்கள்.

இந்த சூழ்நிலையில், அந்த வீட்டிலேயே தோட்டக்காரனாக பணிபுரிந்து வரும் ராஜ்கபூர், திரிஷாவை தவறான கண்ணோட்டத்தோடு பார்க்க, சித்தார்த் அவரை அடித்து, அரண்மனையை விட்டு துரத்துகிறார். சித்தார்த்தை பழிவாங்க குடித்துவிட்டு அரண்மனைக்கு வரும் ராஜ்கபூர் மர்மமான முறையில் இறக்கிறார். அவரை சித்தார்த் தான் கொலை செய்துவிட்டார் என்று போலீசார் சித்தார்த்தை கைது செய்கிறது.

இதையடுத்து, அரண்மனையில் நடந்த சம்பவங்களுக்கு தீர்வுகாண திரிஷா தனது அண்ணன் சுந்தர்.சிக்கு போன் செய்து அரண்மனைக்கு வரவழைக்கிறார். அரண்மனைக்கு வரும் சுந்தர்.சி., அரண்மனையில் நடக்கும் சம்பவங்களுக்கு யார் காரணம் என்பதை கண்டறிய முடிவு செய்கிறார். இறுதியில், அவற்றையெல்லாம் சுந்தர்.சி., கண்டுபிடித்தாரா? இல்லையா? என்பதே மீதிக்கதை.

சித்தார்த் வழக்கமான ஹீரோயிசம் இல்லாமல் பேயின் அடக்குமுறைக்கு பயந்தவாறு எதார்த்தமான நடிப்பை வெளிப்படுத்தியிருக்கிறார். முறைப்பெண்ணாக வரும் திரிஷா, முதல் பாதியில் பாடல் காட்சிகளில் கவர்ச்சியில் கலக்கியிருக்கிறார். பிற்பாதியில், ஆவி புகுந்த பெண்ணாக மிரட்டியிருக்கிறார்.

இரண்டாம் பாதியில் வரும் ஹன்சிகா அழகாகவும், அழுத்தமான நடிப்பையும் வெளிப்படுத்தியிருக்கிறார். பேயாகவும் வந்து மிரட்டியிருக்கிறார். சூரி-கோவைசரளா-மனோபாலா கூட்டணியின் காமெடி படத்திற்கு மிகப்பெரிய பலம். பூனம் பஜ்வா முதல் பாதிக்கும் இரண்டாம் பாதிக்கும் தன்னை வித்தியாசப்படுத்தி நடிப்பை வெளிப்படுத்தியிருக்கிறார்.

சுந்தர்.சிக்கு படத்தில் அழுத்தமான கதாபாத்திரம். சந்திரமுகி படத்தில் ரஜினியின் கதாபாத்திரம் போன்றது இவருடையது. அதை அழகாக வெளிப்படுத்தி கைதட்டல் பெறுகிறார். ராதாரவி தனக்கே உரித்தான வில்லத்தனம், பாசமுள்ள அப்பா என தனது அனுபவ நடிப்பால் கவர்கிறார்.

அரண்மனை படத்தைப் போன்றே இப்படத்தையும் திகிலுடன் காமெடி கலந்து குடும்பப்பாங்கான ஒரு படத்தை கொடுத்திருக்கிறார் இயக்குனர் சுந்தர்.சி., முதல்பாதி முழுக்க திகில் மற்றும் காமெடியுடன் இயக்கியிருக்கிறார். இரண்டாம் பாதியில் சென்டிமென்ட் கலந்து திகிலும் கொடுத்திருக்கிறார். முந்தைய பாகத்தை விட இந்த படத்தில் கிராபிக்ஸ் காட்சிகளுக்காக அதிகம் மெனக்கெட்டிருக்கிறார். அதை திரையில் பார்க்கும்போது நிறைவாக இருக்கிறது.

ஹிப் ஹாப் தமிழா ஆதி இசையில் பாடல்கள் ஹிட்டாகிவிட்டாலும், பெரிய திரையில் பார்க்கும்போது அழகாக இருக்கிறது. பின்னணி இசையிலும் மிரட்டியிருக்கிறார். யுகே செந்தில்குமாரின் ஒளிப்பதிவு படத்திற்கு மிகப்பெரிய பலம்.

மொத்தத்தில் ‘அரண்மனை 2’ மிரட்டல்.

விளம்பரங்களில் நடிக்க இத்தனை லட்சம் கேட்கிறாரா இவர்?

ரம்யா கிருஷ்ணன் படங்களில் கவனம் செலுத்துவதை விட தற்போது சீரியல்களில் அதிகம் கவனம் செலுத்தி வருகிறார். சின்னத்திரை மூலம் அவர் பெண்களை கவர்ந்திருப்பதால், ரம்யா கிருஷ்ணனுக்கு நகை, புடவை போன்ற விளம்பரங்களில் நடிக்க அதிகம் வாய்ப்பு கிடைக்கின்றனவாம்.

சமீபத்தில் ஒரு பெரிய ஜவுளி கடை நிறுவன புடவை விளம்பரத்தில் நடிக்க ரம்யா கிருஷ்ணனை அழைத்த போது, விளம்பரத்தை எத்தனை நாள் வேண்டுமானாலும் எடுத்துக் கொள்ளுங்கள், ஆனால் ஒரு நாளைக்கு ரூ. 20 லட்சம் சம்பளம் என்றாராம்.

திரை இசையில் திருப்பம் உண்டாக்கிய இளையராஜா: கிராமிய இசைக்கு புத்துயிர் அளித்தார்

தமிழ்த் திரையுலகில் `இசை'யாகவே வாழ்ந்து கொண்டிருப்பவர் `இசைஞானி' இளையராஜா. 1976-ம் ஆண்டு `அன்னக்கிளி' மூலம் சினிமாவுக்குள் இசையமைப்பாளராக அடியெடுத்து வைத்த இளையராஜாவுக்கு, இசைத்துறையில் இது 31-வது ஆண்டு.

"அன்னக்கிளி'' படத்தில் "அன்னக்கிளி உன்னைத்தேடுதே'', "மச்சானைப் பார்த்தீங்களா'' எனத் தொடங்கிய இந்த இசையருவி, நதியாக ஓடத்தொடங்கி இன்று கடல் அளவுக்கு தன் இசை எல்லையை விஸ்தரித்துக் கொண்டிருக்கிறது.

இளையராஜா பிறந்தது மதுரை மாவட்டத்தில் உள்ள பண்ணைபுரம் கிராமம். 1943-ம் ஆண்டு பெற்றோருக்கு ஐந்தாவது குழந்தையாகப் பிறந்தார். இவருக்கு அடுத்து ஆறாவதாக பிறந்தவர் அமர்சிங் என்ற கங்கை அமரன்.

தனது குடும்பம் பற்றி இளையராஜா கூறுகிறார்:

"நான் பிறந்தது மதுரை மாவட்டத்தைச் சேர்ந்த பண்ணைபுரம் என்னும் கிராமத்தில். இப்போது அது தேனி மாவட்டத்தில் உள்ளது.

அப்பா பெயர் ராமசாமி. அம்மா சின்னத்தாயம்மாள். ஊரில் அப்பாவை `கங்காணி' ராமசாமி என்றால்தான் தெரியும். அப்பாவுக்கு இரண்டு மனைவிகள். இரண்டாவது மனைவிக்குப் பிறந்த குழந்தைகளில் நான் ஐந்தாவது. ஆறாவது என் தம்பி அமரன் (கங்கை அமரன்).

எங்களுக்கு மூத்த அண்ணன் பாவலர் வரதராஜன். அடுத்து அக்காள் கமலம். அடுத்து பத்மாவதி. அடுத்தவர் அண்ணன் பாஸ்கர்.

1943-ம் ஆண்டு நான் பிறந்தேன். தமிழில் வைகாசி மாதம் 20-ந்தேதி. (3-6-1943)

அப்பாவுக்கு ஜோதிடம் தெரியும். என் பிறந்த நேரத்தை கணித்த அப்பா, அம்மாவிடம் "இவன் நம் வீட்டிலேயே முக்கியமானவன். இவனால் சீரும் சிறப்பும் வருவதையெல்லாம் பார்த்து சந்தோஷம் அனுபவித்த பிறகுதான் நீ போவாய்'' என்று கூறியிருக்கிறார்.

அப்பா சொன்னதில் உள்ள `உள் அர்த்தம்' அம்மாவை பாதிக்கச் செய்துவிட்டது. "நீங்க என்ன சொல்றீங்க?'' என்று பதட்டத்துடன் கேட்டிருக்கிறார்.

பதிலுக்கு அப்பா, "எல்லாம் இவன் ஜாதகத்தை கணித்த பிறகே சொல்கிறேன். இவனுக்கு 9 வயது வரும்போது நான் போய்விடுவேன்'' என்று சொல்லியிருக்கிறார்.

அப்பா அவர் சொன்னதுபோலவே என் 9-வது வயதில் (1952-ம் வருஷம் ஏப்ரல் 10-ந்தேதி) காலமாகிவிட்டார். அப்பா இறக்கும்போது நான் நாலாவது படித்துக் கொண்டிருந்தேன். உயிர் பிரியும் நேரத்தில் என் கையையும் அண்ணன் பாஸ்கரின் கையையும் பாவலர் அண்ணன் கையில் பிடித்துக் கொடுத்துவிட்டு, அண்ணன் தலையில் கை வைத்து ஆசீர்வதித்தார். அத்தோடு உலக வாழ்க்கையில் இருந்து விடைபெற்றுக்கொண்டார்.

எனக்கு அப்பா வைத்த பெயர் ஞானதேசிகன். ஆனால் பள்ளியில் சேர்க்கும்போது ராஜையா என்று மாற்றி விட்டார். ஆனால் `ராசையா' என்றே எல்லோராலும் அழைக்கப்பட்டேன். பட்டிக்காடு அல்லவா! `ராஜையா'வுக்கு பதில் ராசையாதான் அவர்களுக்கு சுலபம்.

நான் படிப்பிலும் பெரிய விசேஷம் கிடையாது. பண்ணைபுரத்தில் பெருமாள் வாத்தியார் என்பவர் ஒரு பள்ளிக்கூடம் நடத்தி வந்தார். அதில் ஐந்தாம் வகுப்பு வரைதான் இருந்தது.

பள்ளியில் மூன்றாம் வகுப்பு படித்துக் கொண்டிருந்தபோதுதான் சினிமா பார்க்கும் வழக்கம் ஏற்பட்டது. ஊரில் ஒரு டூரிங் டாக்கீஸ் இருந்தது. அதில் நானும் பாஸ்கர் அண்ணனும் அடிக்கடி சினிமா பார்க்கச் செல்வது வழக்கமாகி விட்டது.

இப்படி பார்த்த ஒரு படம் பானுமதி, நாகேஸ்வரராவ் நடித்த "லைலா மஜ்னு.'' இந்தப் படத்தை பாடல்களுக்காக மூன்று நான்கு முறை பார்த்தோம். பாடல்கள் எல்லாம் எங்களுக்கு மனப்பாடமாகி விட்டது. அண்ணன் பாவலர் எப்போதுமே அந்தப் பாடல்களை பாடிக்கொண்டிருப்பார்.

அந்தப் படத்தில் வரும் ஒரு காட்சி எனக்குள் ஆழமாக பதிந்து விட்டது. ஆசிரியர் பாடம் எழுதச் சொல்ல, கயஸ் மட்டும் `லைலா லைலா' என்று தன்னுடைய சிலேட்டில் எழுதிக்கொண்டிருப்பான். இதைப் பார்த்த ஆசிரியர் கயஸின் கையில் பிரம்பால் விளாசி விடுவார். கை புண்ணாகி விடும். எங்கள் வகுப்பிலும் ஆசிரியர் ஏதோ எழுதச் சொல்லியிருந்தார். முந்தின நாள் இரவு ஆட்டம் பார்த்த ஞாபகத்தில் சிலேட்டில் `லைலா லைலா' என்று எழுதியிருந்தேன்.

என்ன நடந்தது தெரியுமா? படத்தில் கயஸுக்கு விழுந்த அடியை விட எனக்கு பலமாக அடி விழுந்தது. கயஸுக்கு வருத்தப்பட என் மாதிரி ரசிகர்கள் இருந்தார்கள். எனக்காக வருத்தப்படத்தான் யாருமில்லை.

இந்தப் படத்தின் பாடல்களால் - நான் வளர வளர, கயஸை விடவும் லைலா மீது எனக்கு காதல் அதிகமாகி விட்டது. அந்தப் படத்துக்கு சி.ஆர்.சுப்பராமன் இசையமைத்திருந்தார். பின்னாளில் இவரே என் மானசீக குரு ஆனார்.

அண்ணனுக்கு (பாவலர் வரதராஜன்) பாட்டு, நாடகம், கச்சேரி என்பதில் ஆர்வம் அதிகம். திருச்சி வானொலி நிலையத்தில் நிலைய வித்வானாக இருந்த மரியானந்த பாகவதரிடம் கொஞ்சம் சங்கீதம் கற்றிருந்தார். இசை எனக்கு அறிமுகமானதும், ஆர்வமானதும் அண்ணனால்தான். நான் ஓரளவுக்கு ராகங்கள் பற்றி தெரிந்து கொண்டதற்குக் காரணமும் அவர்தான். இப்படித்தான் எனக்கு ராகங்கள் கல்யாணியும், சங்கராபரணமும், கரகரப்பிரியாவும், தோடியும் அடையாளம் கண்டு கொள்ளக்கூடிய அளவுக்கு தெரியவந்தது.