Sunday 31 January 2016

கோடம்பாக்கத்தின் இன்றைய சூதாட்டம்!

 தமிழ் சினிமா கோடிகள் புழங்கும் துறையாகிப் பல ஆண்டுகள் ஆகின்றன. இந்தத் தொகையை முதலீடு செய்வது தயாரிப்பாளர்கள்தான் என்பது எல்லோருக்கும் தெரியும். அப்படிப்பட்ட தயாரிப்பாளர்கள் எவ்வளவு பணக்காரர்களாக இருக்க வேண்டும். எவ்வளவு வசதியாக இருக்கு வேண்டும்.

ஆனால் உண்மை நிலவரம் வேறு. இன்று பெரும்பாலான தயாரிப்பாளர்கள் வாடகை காரில் செல்ல, நடிகர்கள்தான் விதம்விதமான சொகுசு காரில் வலம் வருகிறார்கள். செல்வம் கொழிக்கும் எந்தத் துறையிலும் முதலாளிகள் அல்லது தயாரிப்பாளர்களின் நிலை இப்படி இல்லை. ஆனால் இதுதான் இன்றைய தமிழ் சினிமாவின் யதார்த்தம்.

ஏன் இந்த நிலை?

தமிழ் சினிமாவின் வியாபாரத்தில் தற்போது ஏற்பட்டுள்ள மாற்றம்தான் இதற்குக் காரணம் என்கிறார்கள் திரைத் துறையைச் சேர்ந்தவர்கள். “ஒரு நடிகருக்கு ஒரே ஒரு படம் பிரம்மாண்ட வெற்றியடைந்துவிட்டால், அந்த நடிகர் அடுத்த படத்துக்கான தனது சம்பளத்தில் 3 கோடி வரை உயர்த்திவிடுகிறார். சம்பளம் உயரும்போது படத்தின் தயாரிப்புச் செலவு உயருகிறது.

அதே நடிகரின் படம் தோல்வியடையும் பட்சத்தில் சம்பளத்தைக் குறைக்கிறாரா என்றால் கண்டிப்பாக இல்லை. சம்பளத்தைக் குறைப்பது என்பது தங்கள் தன்மானத்துக்கு இழுக்கு என நடிகர்கள் கருதுகிறார்கள்” என்று பெயரை வெளியிட விரும்பாத ஒரு தயாரிப்பாளர் கூறுகிறார்.

இந்த உதாரணத்தைப் பார்த்தால் அவர் சொல்வது எவ்வளவு உண்மை என்பது புரியும். 2015-ம் ஆண்டு ஒரு நடிகரின் படம் பிரம்மாண்ட வெற்றி பெற்றது. அதைத் தொடர்ந்து ஒரு தயாரிப்பாளர் அவரை வைத்துப் படம் பண்ண அணுகியிருக்கிறார். அந்த நடிகர் கேட்ட சம்பளத்தால், அப்படியே திரும்பிவிட்டார்.

படத்தின் விநியோக வியாபாரத்திலும் பெரும் மாற்றம் நிகழ்ந்திருக்கிறது. ‘கரகாட்டக்காரன்' படத்தின் தயாரிப்புச் செலவு 22 லட்சம். படத்தின் மொத்த வசூல் சுமார் 6.5 கோடி என்கிறார்கள். அந்தத் தயாரிப்பாளருக்கு, அதே நடிகர் அடுத்த படம் பண்ணுகிறார். முதல் படம் 6.5 கோடி வசூலானது, இப்படமும் அந்த அளவுக்கு வசூலாகும் என்று கணக்குப் போட்டு 6.5 கோடிக்கு மேல் விற்பனை செய்ய முனையவில்லை. ரூ. 28 லட்சம் ரூபாய் பொருட்செலவில் படத்தைத் தயாரித்து அதில் சில லட்சங்களை மட்டும் லாபம் வைத்து விற்றார்கள்.

இது இப்போது எப்படி இருக்கிறது என்று பாருங்கள். சில ஆண்டுகளுக்கு முன்பு ஒரு முன்னணி நடிகரின் படம் ரூ.14 கோடி செலவில் தயாரானது. அது சுமார் ரூ.18 கோடிக்கு வியாபாரம் ஆனது. சுமார் ரூ.35 கோடி வசூலை அள்ளியது. அந்த நடிகர் உடனே தனது சம்பளத்தைக் கணிசமாக உயர்த்தினார். அதே நடிகரின் அடுத்த படத்தினை ரூ.34 கோடிக்கு ஒரு முன்னணி நிறுவனம் வாங்கி விநியோகம் செய்தது.

அதில் பெருத்த நஷ்டமே கிடைத்தது. ஆனால் இந்த நஷ்டம் வாங்கியவருக்குத்தான். நடிகருக்கு அல்ல. அவர் ஏற்றிய சம்பளம் ஏற்றியதுதான். அதன் பிறகு அவருக்கு வெற்றிகளும் தோல்விகளும் மாறிமாறி வந்துகொண்டுதான் இருக்கின்றன. ஆனாலும் இன்றுவரை அவரது சம்பளம் ஏறுமுகத்தில்தான் உள்ளது.

தயாரிப்பாளர்களாக மாறும் நடிகர்கள்

முன்னணி நடிகர்கள் பலரும் தயாரிப்பாளர்களாக மாறிவருகிறார்கள். அதற்குக் காரணம், தயாரிப்பாளர்கள் குறைந்துகொண்டேவருவதுதான். தமிழ் சினிமாவில் கொடி கட்டிப் பறந்த ஏ.வி.எம்., சூப்பர் குட் பிலிம்ஸ் போன்ற நிறுவனங்கள் தங்களது படத் தயாரிப்புகளை வெகுவாகக் குறைத்துக்கொண்டன. காரணம், தற்போதைய மாற்றம்தான். பட வியாபாரத்தின் இன்றைய நிலவரத்தின் சூட்சுமம் தெரியாமல் வரும் தயாரிப்பாளர்கள் பலரும் ஒரே படத்தோடு ஓட்டமெடுக்கிறார்கள்.

தொலைக்காட்சி உரிமத்தில் பிரச்சினை, இசை உரிமை விலைகுறைவது, தொழிலாளர்களின் சம்பள உயர்வு, நடிகர்கள், இயக்குநரின் சம்பளவு உயர்வு, தொழில்நுட்பக் கலைஞர்களின் சம்பள உயர்வு... இதையெல்லாம் பார்க்கும் போது ஒரு படத் தயாரிப்பாளரின் நிலைமை என்பது பெரும் சோகக் கதைதான். இவ்வாறு பல்வேறு தயாரிப்பாளர்கள் தங்களது தயாரிப்பை நிறுத்திக்கொண்டதால் நடிகர்களே தங்களது படத்தைத் தயாரிக்கிறார்கள்.

தமிழ்நாடே கொண்டாடும் ஒரு முன்னணி நடிகரின் அடுத்த படத்துக்குத் தயாரிப்பாளர் கிடைக்கவில்லை. 3 படங்களுக்குப் பிறகு ஒரு தயாரிப்பாளருக்குப் படம் பண்ணித் தருகிறேன் என்று வாக்குறுதி அளித்திருக்கிறார். அந்த தயாரிப்பாளரைத் தற்போது அழைத்து எனது அடுத்த படத்தின் தயாரிப்பாளர் நீங்கள்தான் என்று தெரிவித்திருக்கிறார்.

விளம்பரங்களில் மட்டுமே வெற்றி

ராமராஜன், மோகன் உள்ளிட்ட பழைய நடிகர்கள் எல்லாம் நடித்துக்கொண்டிருந்த போது தயாரிப்பாளர்கள் லாபமடைந்து தொடர்ச்சியாகப் படம் பண்ணினார்கள். ஆனால், இன்றைய தயாரிப்பாளர்கள் நிலைமை அப்படி அல்ல. தமிழ்த் திரையுலகில் தற்போதைய தயாரிப்பாளர்கள் லாபம் அடைகிறார்களா என்று கேள்வியை முன்வைத்தால் கண்டிப்பாக இல்லை என்று சொல்லலாம். ஏனென்றால், ஒரு படம் ஓடுவது அதிகபட்சம் 25 நாட்கள்தான். பல படங்கள் ஒரு வாரம்கூடத் தாக்குப்பிடிப்பதில்லை.

ஒரு தயாரிப்பாளரிடம் போய், உங்கள் தயாரிப்பு செலவு எவ்வளவு, வசூல் எவ்வளவு என்று கேட்டால் அவர்களால் சரியான தகவல்களைச் சொல்ல முடியாது. ஒவ்வொரு படத்தின் வசூல் கணக்கின் உண்மையான நிலவரம் வருமான வரி சமர்ப்பிக்கும் பேப்பரில்தான் இருக்கும். 100 கோடி வசூல், பிரம்மாண்டமான வசூல், எதிர்பாராத, திகைக்க வைக்கும் ஹிட் எல்லாம் விளம்பரங்களோடு சரி. மிகச் சில படங்களே இதற்கு விதிவிலக்கு.

பெரிய நடிகர்கள் சம்பளத்தைக் குறைக்க வேண்டும் என்ற குரல் அவ்வப்போது தமிழ் திரையுலகில் எழுந்துகொண்டே இருக்கிறது. இது குறித்து தயாரிப்பாளர் சங்கம் ஒரு நல்ல முடிவுக்கு வர வேண்டும் என்று பல்வேறு தயாரிப்பாளர்கள் தெரிவித்துவருகிறார்கள். ஒரு படம் ஓடினால் சம்பளத்தை உயர்த்தும் நீங்கள் தொடர்ந்து உங்கள் படங்கள் நஷ்டமடைந்தால் சம்பளத்தைக் குறைத்துக்கொள்ளுங்கள் என்று நடிகர்களைப் பார்த்துத் தயாரிப்பாளர்களால் கேட்க முடியவில்லை.

அந்தச் சம்பளத்தைக் கொடுக்க மாட்டேன் என்று சொல்ல முடியவில்லை. காரணம், அதே நடிகரின் அடுத்த படம் நன்றாக ஓடிவிட்டால் தனக்குப் பெரிய லாபம் கிடைக்குமே என்ற எதிர்பார்ப்புதான். இப்போதெல்லாம் ஒரு படம் நன்றாக ஓடினால் தெலுங்கு, இந்தி மொழிகளில் மறுஆக்க உரிமை உள்படப் பல விதங்களில் பெரும் லாபம் கிடைப்பதால் முன்னணி நடிகர் யாரையும் பகைத்துக்கொள்ள முடியாத நிலை. எனவே தொடர்ந்து இந்தச் சூதாட்டம் நடக்கிறது. 

0 comments:

Post a Comment