Wednesday 27 January 2016

பாரதிராஜா என்ற குலசாமி!

அவரை ஒரு மலேரியா இன்ஸ்பெக்டராக்கி வைத்திருந்தது அல்லிநகரம்! சென்னைக்கு வராமல் கொசு மருந்தும், குடிசைகளுமாக அவர் ஊரை சுற்றி சுற்றி வந்திருந்தாரென்றால் இந்நேரம் அந்த ஊர் கொசுக்கள் கூட மயில்களாகவோ, மைனாக்களாகவோ மாறியிருந்திருக்கும். ஏனென்றால், அந்த மலேரியா இன்ஸ்பெக்டரின் மனசு முழுக்க நிரம்பியிருந்தது ‘புதுமை செய்’ என்ற ஒரே கட்டளைதான்!


அந்த காலத்து சென்னையில் அடைக்கலமாகிய யாருக்கும் கைகொடுக்கிற முதல் தொழில் ஓட்டல் சர்வராக இருக்கும். அங்கும் கூட தன் அந்தஸ்தை உயர்த்திக் கொண்டார் அவர். பெட்ரோல் பங்க்-கில் எண்ணை நிரப்புகிற வேலை! அன்று அவர் கார்களுக்கு பெட்ரோல் போட்டார். அதற்கப்புறம் அவரிடம் டேங்கை திறந்து கொண்டு நின்றது கலையுலகம்! இப்போதும் அவர் நிரப்பிய பெட்ரோலில்தான் ஓடுகிறது அநேக இயக்குனர்களின் பயணம்! ஒரு சரித்திரம் தன் பெயரை நியூமராலஜிபடி மாற்றிக் கொள்ள ஆசைப்பட்டது. அதன் புதுப்பெயர்தான் ‘பாரதிராஜா’!

80 களில் இளசுகளாக இருந்தவர்களெல்லாம் இறைவனால் ஆசிர்வதிக்கப்பட்டவர்கள். 16 வயதினிலே, கிழக்கே போகும் ரயில், சிகப்பு ரோஜாக்கள், புதிய வார்ப்புகள், நிறம் மாறாத பூக்கள், என்று தொடர் ஹிட் கொடுத்தவர் பாரதிராஜா. ஒவ்வொரு படமும் குறைந்தது 200 நாட்கள். அதிக பட்சம் ஒரு வருஷம் என்று ஓடியவை. இப்போதும் அல்லி நகரத்தில் ஒரு அழகான அரச மரம் இருக்கிறது. அதன் அடிமரத்தை ஐம்பது பேர் சுற்றி வளைத்தாலும் கைகளுக்குள் அடங்காது. அதன் கிளைகளும் இலைகளும் இன்னும் இன்னும் என்று அந்த ஊரையே வளைத்து கூரையாக படர்ந்திருக்கிறது. ஒருவேளை அதற்கும் ஒரு பெயர் ஆசை வந்திருந்தால் ‘பாரதிராஜா’ என்று வைத்துக் கொண்டிருக்குமோ என்னவோ?

கிட்டதட்ட அப்படியொரு அரச மரமாகதான் கிளைவிட்டு வளர்ந்திருக்கிறது பாரதிராஜாவின் மாணவர் கூட்டம். பாலகுரு, நிவாஸ், கே.பாக்யராஜ், மணிவண்ணன், மனோபாலா, மனோஜ்குமார், கலைமணி, ஆர்.செல்வராஜ், ரத்னகுமார், சித்ரா லட்சுமணன், ‘சின்னத்திரை’ கவிதாபாரதி என்று நீள்கிறது அவரது நேரடி சிஷ்யர்களின் பட்டியல். அதற்கப்புறம் அது அவரது சிஷ்யர்களின் சிஷ்யர்கள் என்று வளர்ந்து பாண்டியராஜன், பார்த்திபன், விக்ரமன், கே.எஸ்.ரவிகுமார், சேரன், கரு.பழனியப்பன், பசங்க பாண்டிராஜ் வரைக்கும் வந்து நின்றிருக்கிறது. அது இன்னும் வளரும்.

சினிமாவை விட சுவாரஸ்யமானவை அந்த சினிமா உருவான பின்னணி. 16 வயதினிலே திரைக்கு வந்து கிட்டதட்ட 38 வருஷங்கள் ஆகிவிட்டது. இப்போதும் கூட, 16 வயதினிலே உருவான கதை பற்றி கேள்விப்படும்போது ஒரு வித பரவச மனநிலைக்கு போகிறது மனசு. இந்த கதையை முதலில் என்.எப்.டி.சிக்குதான் படமாக்குவதாக இருந்தார் பாரதிராஜா. அதில் டாக்டராக நடிக்க இருந்தவர் யார் தெரியுமா? நம்ம பின்னணி பாடகர் எஸ்.பி.பாலசுப்ரமணியம்தான். என்ன காரணத்தாலோ அந்த முயற்சி தள்ளி தள்ளிப் போனது. ஒரு கட்டத்தில் மனம் வெறுத்து போயிருந்தபோதுதான் எஸ்.ஏ.ராஜ்கண்ணு அப்படத்தை தயாரிக்க முன் வந்தார். ஆனால் டாக்டர் எஸ்.பி.பி இல்லை.

இந்த படத்தில் நடிக்காமல் போனதால் எஸ்.பி.பிக்கு பெரிய வருத்தம். அவரை எப்படி தன் படத்தில் பாட அழைப்பது என்பதில் பாரதிராஜாவுக்கும் தயக்கம். ஒருவழியாக பாரதிராஜாவின் ஐந்தாவது படத்தில்தான் பாட வந்தார் அவர். அதுவும் பாடல் வரிகள் எப்படி…? ‘முதன் முதலாக காதல் டூயட் பாட வந்தேனே’ என்று!

எஸ்.பி.பி நடிக்க வேண்டிய அந்த டாக்டர் வேடத்தில் சத்ய ஜித் எப்படி வந்தார் ? அவர் லேபில் பிராசசர் வேலை பார்த்துக் கொண்டிருந்தவர். இந்த படத்தை ஆர்.ஓ பிலிமில் எடுத்த பாரதிராஜா, நம்ம படத்தை இன்னும் நல்லா குவாலிடியா கொடுப்பாரே என்றுதான் சத்யஜித்தை உள்ளே இழுத்தாராம்.

அப்போது கமல்ஹாசன் பெரிய ஹீரோ. சில படங்களில் நடித்துவிட்டார். அதனால் அவருக்கு ஒரு சம்பளம் பேசினார்கள். ரஜினிக்கு பெரிய சம்பளம் இல்லை. மிகமிக சொற்பம். ஷுட்டிங் எடுக்கப்பட்ட கிராமத்தில் ரஜினிக்கு ஒரு அறை கூட ஒதுக்கிக் கொடுக்கவில்லை படக்குழு. அவர் எங்கு தங்கினார், யார் வீட்டில் சாப்பிட்டார் என்பது பாரதிராஜாவுக்கும் தெரியாது. எப்படியோ அவர் படப்பிடிப்புக்கு வருவார். கடந்த சில மாதங்களுக்கு முன்பு ஒரு விழாவில் இந்த விஷயத்தை சொன்ன பாரதிராஜா, “இப்பவும் நான் ரஜினிக்கு சம்பள பாக்கி தர வேண்டியிருக்கிறது” என்றார் தமாஷாக.

தமிழ்சினிமாவின் முதல் ‘மாற்று சினிமா’ என்று கூட 16 வயதினிலே படத்தை கொண்டாடலாம். படத்தில் நடித்த நடிகர் நடிகைகளின் பெயர்கள் எதுவும் டைட்டிலில் வராது. சப்பாணி, மயிலு, பரட்டை, குருவம்மா என்றுதான் பெயர்கள் போடப்பட்டது.

தமிழ்சினிமாவில் சாதித்த ஒவ்வொரு படத்திற்கு பின்னாலும் ஒரு ரத்த சரித்திரம் இருக்கும். சேதுவில் பாலாவுக்கு இருந்த மாதிரி! இன்றளவும் அந்த அவஸ்தை தொடர்கிறது. ‘தனி ஒருவன்’ படத்தின் ரிலீசுக்கு முன்பு, அப்படத்தின் இயக்குனர் ராஜா பட்ஜெட்டை அதிகப்படுத்திவிட்டதாக கோபப்பட்ட தயாரிப்பு நிறுவனம், செக்யூரிடி டெபாசிட்டாக அவரது வீட்டை எழுதிக் கேட்டதாக கூட ஒரு செய்தி உலவுகிறது கோடம்பாக்கத்தில். நல்லவேளை… இந்தளவுக்கு இல்லை அப்போதைய நிலைமை. தயாரிப்பு தரப்புக்கும் பாரதிராஜாவுக்கும் ஏதோ சிக்கல். சென்னையிலிருந்து வர வேண்டிய பிலிம் ரோல் வந்து சேரவில்லை.

படப்பிடிப்பை ஒரு நாள் நிறுத்தினால் கூட, நடிகர் நடிகைகள் நம்பிக்கை இழந்துவிடுவார்களே, என்ன செய்வது? யாரிடமும் எதுவும் சொல்லவில்லை பாரதிராஜா. அவருக்கும் கேமிராமேனுக்கும் மட்டுமே தெரிந்த ரகசியம் அது. வழக்கம்போல படப்பிடிப்பு நடந்தது. பிலிம் ரோல் இல்லாமலே! கமலும் ஸ்ரீதேவியும் நடித்துக் கொண்டிருந்தார்கள். மாலை படப்பிடிப்பு முடிந்தது. பாரதிராஜாவை அழைத்தார் கமல். “கேமிராவுல பிலிம் ரோல் இல்லேன்னு எனக்கும் தெரியும். இனிமே இப்படி நடக்காம பார்த்துக்கங்க” என்று கூறினார். நல்லவேளை… மறுநாளே பிரச்சனை சரி செய்யப்பட்டு படப்பிடிப்பு நடந்திருக்கிறது.

இந்த படத்தின் ஆச்சர்யங்களில் இதுவும் ஒன்று. பல வருஷங்களாக மனசுக்குள் சுமந்த அந்த கதைக்கு வசனம் எழுதியவர் கலைமணி. அவருக்கு உதவியவர் கே.பாக்யராஜ். எல்லாக் கஷ்டங்களையும் கடந்து ஷுட்டிங்குக்கு தயாராகிவிட்டார்கள். பார்த்தால், ஸ்கிரிப்ட் எழுதி வைத்திருந்த அந்த நோட்டுப்புத்தகம் தொலைந்து போய்விட்டது. ஆபிசையே புரட்டி போட்டு தேடியாகிவிட்டது. பல மாதங்களாக உழைத்து எழுதிய வசனங்கள்… என்ன செய்வது? வசன உதவியாளராக இருந்த கே.பாக்யராஜ், “சார்… எனக்கு ஞாபகம் இருக்கு. அப்படியே நான் எழுதுறேன்” என்று உட்கார்ந்து எழுத ஆரம்பித்துவிட்டார். பாதி ஷுட்டிங் போய் கொண்டிருக்கும் போது புத்தகம் திரும்பக் கிடைக்க, பக்கங்களை புரட்டினால் ஆச்சர்யம். அதில் எழுதியிருந்ததை வரி மாறாமல் எழுதியிருந்தாராம் பாக்யராஜ்.

இப்பவும் பாரதிராஜாவிடமிருந்து போன் வந்தால், எழுந்து நின்று பேசுகிற வழக்கம் இருக்கிறது பாக்யராஜுக்கு! அந்தளவுக்கு குரு மரியாதை.

“16 வயதினிலே படத்திற்கு முன்பு வரை எங்கள் ஊர் தியேட்டர்களில் சினிமா வந்தது. 16 வயதினிலே ரிலீசுக்கு பிறகுதான் எங்கள் ஊர் சினிமாவில் வந்தது!” கவிப்பேரசு வைரமுத்துவின் பாராட்டு வரிகள்தான் இவை. 16 வயதினிலே படத்திற்கு முன்பே அன்னக்கிளி மாதிரியான கிராமத்து படங்கள் வந்துவிட்டன. “விவசாயி… விவசாயீய்ய்” என்று புரட்சித்தலைவர் எம்ஜிஆர் பாடினாரே, வயலில் டிராக்டர் ஓட்டாமல் செட்டுக்குள்ளா ஓட்டினார்? ஆக இவருக்கு முன்பே சினிமாவில் கிராமம் வந்துவிட்டது. ஆனால் பாரதிராஜா மட்டும் எப்படி கிராமத்து ராஜாவானார்? அவர் உருவாக்கிய பாத்திரங்களின் மூலமாகதான்! அவர் படங்களில் ஒப்பனையில்லாத கிராமத்து முகங்கள் வந்தன. கிராமத்து அப்பத்தாவையெல்லாம் அப்படியே காட்டியது அவர்தான்!

பாரதிராஜாவின் இரண்டாவது படம் ‘கிழக்கே போகும் ரயில்’. தண்டவாளம் ஒருபோதும் இணைவதில்லை. ஆனால் அதன் மேல் ஓடும் ரயில் எப்படி ஒரு காதல் ஜோடியை சேர்த்து வைத்தது என்பதுதான் கதை. படப்பிடிப்புக்கு கிளம்பிப் போன பின்பு, யோசித்து சேர்க்கப்பட்ட காட்சிகள்தான் தமிழ்நாட்டையே ஒரு புரட்டு புரட்டிப் போட்டது. முக்கியமாக மழையை நிறுத்த ராதிகா நிர்வாணமாக ஊருக்குள் நடந்து வரும் அந்த காட்சி. 16 வயதினிலேவின் ஓட்டத்தை விடவும், பலமான ஓட்டம் கிழக்கே போகும் ரயிலுக்கு. அந்த படத்தில் அறிமுகமானவர்தான் ராதிகா.

பாரதிராஜா தனது பட ஹீரோயின்களின் கன்னத்தில் அறைவார் என்பதெல்லாம் ராதிகாவின் என்ட்ரிக்கு பின்தான். ஒரு காட்சியில் ராதிகாவை அழச்சொன்னாராம் இவர். “அழறதா? எப்படின்னு தெரியாதே” என்று அவர் சிரிக்க, விழுந்தது ஒன்று கன்னத்தில். அவர் ஓவென்று அழ, அதையே படம் பிடித்திருக்கிறார் பாரதிராஜா.

16 வயதினிலே படத்தையே பிரபல தயாரிப்பாளர் கே.ஆர்.ஜிதான் தயாரிப்பதாக இருந்ததாம். எப்போதும் அவரை முதலாளி என்றுதான் அழைப்பார் பாரதிராஜாவும். அதற்கப்புறம் எப்படியோ ராஜ்கண்ணு வந்தார். ராஜாவின் தொடர் ஹிட்டுக்கு பின் ‘சிகப்பு ரோஜாக்கள்’ படத்தை கே.ஆர்.ஜி தயாரித்தார். சொன்னால் ஆச்சர்யப்படுவீர்கள். அந்த படத்தில் நடிக்க முதலில் அழைக்கப்பட்டவர்கள் முத்துராமனும், இன்றைய முதல்வர் ஜெயலலிதாவும்! இதற்காக ஜெயலலிதாவிடம் கதை கூட சொல்விட்டு வந்தாராம் பாரதிராஜா.

“அப்போது மட்டுமில்ல…இப்பவும் எனக்கு சம்பளம் கேட்க தெரியாது. அதுல பாக்யராஜ் ரொம்ப விவரம். முதல் படம் பெரிய ஹிட். ரெண்டாவது படம் சூப்பர் ஹிட். கோடம்பாக்கமே நம்ம வீட்டு வாசல்லதான் நிற்கப் போவுன்னு நினைச்சுகிட்டு இருக்கேன். ஆனால் ஒரு தயாரிப்பாளர் வரல. ஒருவேளை நமக்கு படம் கிடைக்காதோ? வர்ற தயாரிப்பாளரை விட்றக் கூடாதுன்னு இருந்தேன். அப்பதான் முதலாளி கே.ஆர்.ஜிகிட்டேயிருந்து அழைப்பு. போனேன். சிகப்பு ரோஜாக்கள் கதையை சொன்னேன். அவர் ஒரு சம்பளம் சொன்னார். சரின்னு சொல்லிட்டேன். ஒரு அட்வான்சை வாங்கிட்டு அப்போ நாங்க தங்கி டிஸ்கஷன் பண்ணிட்டு இருந்த ஓட்டலுக்கு வந்துட்டோம். பாக்யராஜ் கத்துறான்”.

“ஏன் இந்த சம்பளத்துக்கு ஒத்துகிட்டீங்க?ன்னு கேட்கிறான். சரி விட்றான்னா விட மாட்டேங்குறான். நான் போய் பேசுறேன். நீங்க சும்மாயிருங்கன்னு கிளம்பி போயிட்டான். போய் என்ன சொன்னான்னு தெரியல. எங்க டைரக்டர் வீட்டு வாசல்ல அவர் நிற்கிறார் இவர் நிற்கிறார். எல்லாத்தையும் விட்டுட்டுதான் உங்களுக்கு படம் பண்றார்னு எதையாவது சொல்லியிருப்பான் போலிருக்கு. நான் பேசினதை விட நாலு மடங்கு சம்பளம் அதிகமா பேசி, கூடவே அட்வான்ஸ் பணம் இன்னும் கொஞ்சம் சேர்த்து வாங்கிட்டு வந்துட்டான்!” இது பாரதிராஜாவே ஒரு விழாவில் பேசிய விஷயம்.

சிகப்பு ரோஜாக்கள் படத்தை கே.ஆர்.ஜிதான் தயாரித்தார். அது எந்தளவுக்கு ஹிட் என்றால், இதே படத்தை இந்தியில் ரீமேக் செய்தார்கள். சிகப்பு ரோஜாக்கள் படமாக்கப்பட்ட பங்களாதான் வேணும் என்று (சென்ட்டிமென்ட்?) சென்னைக்கு வந்து அதே ரெட் ரோஸ் பங்களாவில்தான் படமாக்கப்பட்டதாம் இந்தி வெர்ஷன்.

தன்னை நம்புகிற அளவுக்கு, தன் உதவியாளர்களையும் நம்பியவர் பாரதிராஜா. இவருக்கும் மணிவண்ணனுக்கும் இடையே மனக்கசப்பு என்றெல்லாம் செய்திகள் கசிந்தபோது ஒரு பண்பலையில் பேட்டியளித்தார் மணிவண்ணன். அப்போது அவர் சொன்னதை கேட்டால், “எவ்வளவு பெரிய மனுஷன்!” என்று பாரதிராஜாவை கொண்டாடும் மனசு. தொடர்ச்சியாக ஐந்து ஹிட்டுகளை கொடுத்த ராஜா, ஆறாவதாக நிழல்கள் படத்தை இயக்குகிறார். கதை மணிவண்ணன். அதுவரை ஆர்.செல்வராஜ், கலைமணி என்று போய் கொண்டிருந்தவர், ஏன் மணிவண்ணனை தேர்ந்தெடுக்க வேண்டும்?

சுற்றியுள்ள எல்லாருக்கும் கடும் எரிச்சல். வேண்டாம் என்றால் கேட்கவா போகிறார் டைரக்டர்? விட்டுவிட்டார்கள். எல்லாரும் ஆசைப்பட்ட மாதிரி படம் படு பிளாப். அது கூட பிரச்சனையில்லை. வெற்றி வேந்தனான பாரதிராஜாவுக்கு அதுதான் முதல் தோல்வி. கதவை சாத்திக் கொண்டு கதறியழ ஆரம்பித்துவிட்டார் மணிவண்ணன். இரண்டு மூன்று நாட்கள் அப்படியே போனது. இனி ஒழிந்தார் மணிவண்ணன் என்று சிலருக்கு சந்தோஷம். ஆனால் படம் வெளியாகி சில நாட்கள் கழித்து மணிவண்ணனை அழைத்தாராம் பாரதிராஜா. “டேய்… நான் உன்னை நம்புறேன். உன்னால் ஒரு சிறப்பான கதையை எழுத முடியும். என் அடுத்த படமும் உன்னோடுதான்.. உடனே ஒரு கதை எழுதிக் கொடு.”

யாருக்கு வரும் இந்த துணிச்சல்? அதற்கப்புறம் மணிவண்ணன் கதை வசனத்தில் உருவான படம்தான் ‘அலைகள் ஓய்வதில்லை’. அந்தப்படத்தின் வெற்றி தமிழ்சினிமாவின் கலெக்ஷன் வரலாற்றில் ஒரு புதையலின் குவியல்தான்! இந்த படத்திலும் கூட பல வியப்புகள் உண்டு.

முதலில் எழுதப்பட்ட கதையில் ராதா முஸ்லீம் பெண். கார்த்திக் ஐயர் வீட்டுப் பையன். இருவரும் காதலிப்பது போல கதை. ட்யூன் போட்ட இளையராஜாவும், பாடல் வரிகள் எழுதிய வைரமுத்துவும் கூட ராதா முஸ்லீம் என்பதாகவே கற்பனை செய்து தங்கள் வேலையை முடித்துவிட்டார்கள். ஆயிரம் தாமரை மொட்டுகளே பாடல் வரிகளில் இப்பவும் ஒரு வரி மாறாமல் இருக்கிறது. ‘கோவிலில் காதல் தொழுகை…’ என்றிருக்கும் அது. படப்பிடிப்புக்கு போகும்போதுதான் முஸ்லீம் வேண்டாம். அது கிறிஸ்தவராக இருக்கட்டும் என்று மாற்றினாராம் பாரதிராஜா. ஏன்? சிலுவையும் பூணூலையும் அறுப்பதுதான் க்ளைமாக்ஸ். கிறிஸ்துவ பெண்ணாக இருந்தால், அறுக்கும்போது எளிதாக புரியும். முஸ்லீம் என்றால் அது முடியாதே? என்பதால்தான்!

தமிழ்சினிமாவில் டெக்னிகல் புரட்சியை செய்தவரும் பாரதிராஜாதான். கேமிரா கோணம் மெல்ல மெல்ல குளோஸ் அப்பை நோக்கிப் போகும்போது, அந்த ஜும் ஷாட்டை எந்த எடிட்டரும் நடுவில் கட் பண்ணவே மாட்டார்களாம். இது காலகாலமாக பின்பற்றப்பட்டு வரும் வழக்கம். முதல் முறையாக ‘அலைகள் ஓய்வதில்லை’ படத்தில் அப்படி கேமிரா குளோஸ் அப்பில் போகும்போதே கட் பண்ணி நடுவில் பறவைகள் பறப்பது போல காட்ட வைத்தவர் பாரதிராஜாதான். எடிட்டர் ராஜகோபால், “சார்…. அது வழக்கமில்ல”. என்று கூறிய போதும், “நான் சொல்றேன். கட் பண்ணுங்க” என்று புதுமை படைத்தவர் அவர்.

இதே படத்தில் இன்னொரு ஷாட்! ஒரு மரத்திற்கு அருகில் ராதாவும் கார்த்தியும் நிற்க, கேமிரா அவர்களை சுற்றி வரும். அப்போதெல்லாம் ரவுண்ட் டிராலி இல்லவே இல்லை. ஆனால் இப்படியொரு கோணத்தில் படம் எடுத்தால் எப்படியிருக்கும் என்று முடிவு செய்துவிட்டார் டைரக்டர். ஒரு கருப்பு போர்வையில் கேமிராவை வைத்து அப்படியே அந்த போர்வையை ஆடாமல் அசையாமல் பிடித்தபடி இவர்கள் சுற்றி வந்துதான் அந்த காட்சியை படம் எடுத்தார்களாம். இப்படியொரு ஷாட் எப்படி என்று எல்லாரும் மண்டையை பிய்த்துக் கொண்டது தனிக்கதை. இந்த யுக்தியை தெரிந்து கொள்ள வேண்டும் என்பதற்காகவே பிரபல தெலுங்கு இயக்குனர் கே.ராகவேந்திரராவ், தன் படத்தில் ராதாவை நடிக்க வைத்து கேட்டுத் தெரிந்து கொண்டதாக கூறுகிறது சினிமாவுலகம்.

பாரதிராஜாவின் படைப்புகளில் பல படங்கள் தமிழ்சினிமாவின் பொக்கிஷம். அதிலும் முதல் மரியாதை…, சந்தேகமேயில்லை. முதல் மரியாதையேதான்! அந்த கதையை நடிகர் திலகம் சிவாஜியிடம் கூறிவிட்டு வந்துவிட்டார் டைரக்டர். பொதுவாக சிவாஜியிடம் கதையை சொல்லிவிட்டால் போதும். மற்றதை அவர் பார்த்துக் கொள்வார். இதுதான்… இப்படிதான் என்று சொல்வதற்கு பாரதிராஜாவுக்கும் தயக்கம். முதல்நாள் ஷுட்டிங். அவரை பார்த்த பாரதிராஜாவுக்கு பேரதிர்ச்சி. ஏராளமான மேக்கப். பிரமாதமான விக். பட்டு வேட்டி. காலில் ராஜபார்ட் காலத்து ஷு என்று பிரமாதமாக வந்திறங்கிவிட்டார் அவர்.

எதையும் காட்டிக் கொள்ளவில்லை பாரதிராஜா. நடந்து வாங்க. அப்படியே அந்த பக்கம் போங்க. நில்லுங்க. சிரிங்க. ஷாக் கொடுங்க என்று சொல்லி எடுத்துக் கொண்டேயிருந்தார். ஒரு ஷாட்டுக்கும் ரீ டேக் இல்லை. ஆனால் சிவாஜி சாதாரண நடிகரா? கண்டுபிடித்துவிட்டார். மறுநாள் வீட்டுக்கு வரச்சொன்னவர், “என்ன பிரச்சனை உனக்கு? எங்கிட்ட தயங்காம சொல்லு. சாண்டோ காலத்துலேர்ந்து நான் டைரக்டர் சொல்றதைதான் கேட்டு நடிக்கிறேன். ஒரு கட்டத்துல அவங்களா சொல்றதை நிறுத்திட்டாங்க. நான் எனக்கு தெரிஞ்சதை பண்ண ஆரம்பிச்சுட்டேன். உனக்கு எந்த மாதிரி வேணும் சொல்லு” என்று கேட்க, படக்கென்று உடைத்தாராம் பாரதிராஜா.

“இந்த படத்தில் உங்களுக்கு மேக்கப் இல்ல. உங்க ஒரிஜனல் ஹேர்தான். விக் இல்ல. முக்கியமா நீங்க எல்லா படத்திலேயும் புருவத்தை உயர்த்துவீங்க இல்லையா? அதை இந்த படத்தில் செய்யவே வேணாம். அவ்வளவுதான்”. அதற்கப்புறம் ஷுட்டிங்கில், “பாரதி… சரியா நடிச்சேனா? புருவத்தை தூக்கிடலையே” என்று குழந்தை போல அவர் கேட்க, ஒரு யானையை தன் கைக்குள் வைத்துக் கொண்ட பாகன் போலானார் பாரதிராஜா. அந்த படம்தான் பிற்பாடு தேசிய விருதுகளை அள்ளிக் கொண்டு வந்தது.

குடும்பத்தின் மீது தீராத அன்பு கொண்டவர் பாரதிராஜா. பெரிய உதாரணம் தேவையில்லை. அவரது பெயரில் வரும் பாரதி தங்கையின் பெயர். ராஜா அவரது தம்பி ஜெயராஜில் வரும் பாதி! எவ்வளவுதான் குடும்பத்தின் மீது அன்பு இருந்தாலும், பிணக்கும் குடும்ப சண்டை சச்சரவுகளும் எல்லா குடும்பத்திலும் இருப்பதுதானே? இந்த மகா கலைஞனுக்கும் அப்படியொரு சோதனை வந்தது. நல்லவேளை நீடிக்கவில்லை அது.

‘நிறம்மாறாத பூக்கள்’ ஷுட்டிங்! ‘ஆயிரம் மலர்களே… மலருங்கள்…’ என்று முதல் வரியை எடுத்துக் கொண்டிருக்கிறார் டைரக்டர். திடீரென சலசலப்பு. பாரதிராஜாவின் மனைவி சந்திரலீலா அங்கு வருகிறார். தன் கையிலிருக்கும் குழந்தை மனோஜை அப்படியே இவர் கையில் திணித்துவிட்டு, “இனிமே நீயே பார்த்துக்கோ.. ” என்று கூறிவிட்டு கிளம்ப, யூனிட்டே திகைத்தபடி நிற்கிறது. கண நேரம் கூட தாமதிக்கவில்லை டைரக்டர். தன் கையிலிருந்த குழந்தையை அப்படியே டான்ஸ் மாஸ்டர் புலியூர் சரோஜாவின் கையில் கொடுத்துவிட்டு, “நெக்ஸ்ட்…?” என்றபடி அடுத்த வரிக்கு ஆயத்தமாகிவிடுகிறார்.

பிற்பாடு தான் இயக்கிய ‘அந்தி மந்தாரை’ படத்திற்காக கிடைத்த தேசிய விருதை, தன் மனைவி சந்திரலீலா கையினாலேயே வாங்கிக் கொள்ள வைக்கிறார். கோபமும், சலசலப்பும் இல்லாதவரால் குடும்பக்கதைகளை எப்படித் தரமுடியும்? அப்படிதான் அவர்.

தான் வாழும் காலத்திலேயே தன் பெற்றோர்கள் பார்க்க வாழ்வாங்கு வாழ்ந்தவரும் பாரதிராஜாதான்! தன் அம்மாவின் பெயரிலேயே கருத்தம்மா படத்தை எடுத்து அதற்கு தேசிய விருது கிடைத்ததும், அதே அம்மா கருத்தம்மாவின் கைகளால் அந்த விருதை பெற வைக்கிற பாக்கியம் எத்தனை பேருக்கு கிடைக்கும்?

பாரதிராஜா, தமிழ்சினிமாவுலகத்தின் எல்லைக்கல்!

அந்த எல்லைக்கல்லையே குல சாமியாக கும்பிடுகிற பக்தர்கள் எப்போதும் இருப்பார்கள், இனியும் பிறப்பார்கள்!

0 comments:

Post a Comment