Wednesday 27 January 2016

மாடி வீட்டுத் தோட்டம்... மர்மத்தை விளக்குமா அரசு?

'நீங்களே செய்து பாருங்கள்' என மாடிவீட்டுத் தோட்டம் திட்டத்தைக் கொண்டு வந்தது தமிழக அரசு. இத்திட்டத்தின் பின்னணியில் நடக்கும் விஷயங்களைக் கண்டு கதிகலங்கிப் போயிருக்கிறார்கள் விவசாயிகள்.

தமிழ்நாடு தோட்டக் கலைத்துறை சார்பில் 2013-ம் ஆண்டு, சென்னை மற்றும் கோவையில் மாடி வீட்டுத் தோட்டம் திட்டத்தை வேளாண்துறை அமைச்சர் தாமோதரன் தொடங்கி வைத்தார். ' 50 சதவீத மானியத்தில்,  வீட்டு மாடியில் தோட்டம் அமைக்கத் தேவையான காய்கறி விதைகள், உரங்கள், பாலிதீன் பைகள் உள்ளிட்டவை வழங்கப்படும்' என அமைச்சர் அறிவித்தார்.

இத்திட்டத்திற்கு முதல்கட்டமாக 5 கோடி ரூபாய் நிதியும் ஒதுக்கப்பட்டது. ' கத்தரி, வெண்டை, தக்காளி, மிளகாய், அவரை, கொத்தவரை, முள்ளங்கி, கீரை, கொத்தமல்லி ஆகியவற்றை மாடியில் வளர்க்கலாம். உங்கள் வீட்டுக்குத் தேவையான காய்கறிகளை நீங்களே உருவாக்கிக் கொள்ளலாம்' என கவர்ச்சிகரமான விளம்பரங்களால் மக்கள் கவரப்பட்டனர். ரூ.2,414 மதிப்புள்ள பொருட்களை,  50 சதவீத மானியத்தில் ரூ.1,207 ரூபாய்க்கு அரசு வழங்கியது.

மக்கள் கொடுத்த தொகைக்கு,  2 கிலோ தேங்காய் நார் கழிவுடன் கூடிய 20 பாலிதீன் பைகள், 9 வகையான காய்கறிகளின் விதைகள், 6 வகையான உரங்கள், மண் கரண்டி, மண் அள்ளும் கருவி, நீர்த் தெளிப்பான், பிளாஸ்டிக் பூவாளி, குழித்தட்டுகள் மற்றும் பாலிதீன் விரிப்புகள் உள்ளட்டவை வழங்கப்படும் எனவும் அரசு அறிவித்தது.

" அரசின் அறிவிப்பு எல்லாம் சரி. இவர்கள் வழங்கும் விதைகள் அத்தனையும் கலப்பின விதைகள். இந்த விதைகளை வளர்க்க பூச்சிக் கொல்லி மருந்துகள் வழங்கப்படுகிறது. இதனால் வரும் பாதிப்புகளைப் பற்றி அரசு கவலைப்படவில்லை. நாட்டுக் காய்கறி விதைகளைக் கொடுக்காமல், இந்தோ-அமெரிக்கன் விதைகளை அரசு கொடுக்கிறது. இதன் பின்னால் நடந்துள்ள பேரங்கள் பற்றி தெளிவுபடுத்தப்பட வேண்டும்" என சமூக வலைத்தளங்களில் சிலர் கொந்தளித்து வருகின்றனர்.

தொடர்ந்து அவர்கள், " மொட்டை மாடியில் கத்திரியும் வெண்டையும் விளைவது மகிழ்ச்சிதான். அரசு வழங்கிய விதைகள் அத்தனையும் கலப்பின வீரிய விதைகள். இதில் இருந்து உருவாகும் வெண்டையில் நாம் விதைகளை எடுக்க முடியாது. இயற்கை விவசாயம், பாரம்பரிய விதைகள் என பேசிவரும் வேளையில், அமெரிக்க கம்பெனியிடம் இருந்து விதைகளை வாங்குவது சரியா? அத்தனையும் சாயமூட்டப்பட்ட விதைகள். விதைகளுக்குப் பின்னால் இருக்கும் ரகசியங்களை வெளிக்கொண்டு வர வேண்டும்" எனவும் கொந்தளிக்கிறார்கள்.

' அரசு கொடுக்கும் மாடி வீட்டுத் தோட்ட விதைகள் அவ்வளவு ஆபத்தானதா?' என்ற கேள்வியை தமிழ்நாடு இயற்கை விவசாயிகள் கூட்டமைப்பின் மாநில ஒருங்கிணைப்பாளர் அரச்சலூர் செல்வத்திடம் கேட்டோம்.

" இந்தோ- அமெரிக்கன் விதை கம்பெனி பதினைந்து ஆண்டுகளாக செயல்பட்டு வருகிறது. அமெரிக்காவைச் சேர்ந்த நிறுவனம் இது. இவர்களிடம் விதைகள் வாங்குவதற்கான மர்மம் என்ன என்பதை அரசுதான் தெளிவுபடுத்த வேண்டும். இந்தக் கம்பெனி தங்களுடைய விதைகளை, மரபணு மாற்றப் பயிர் மூலம் கள்ளத்தனமாக கொண்டு வருகிறார்கள் என்பதை நான் நம்பவில்லை.

இவர்கள் கொடுப்பது வீரிய வித்துக்கள் என சொல்லப்படும் கலப்பின விதைகளைத்தான். இந்தக் காய்கறிகளின் விதைகள் அதிகப்படியான விதைகளை உருவாக்காது. முதல் முறையில் அதிகப்படியான மகசூலைக் கொடுக்கும். இரண்டாவது முறை இதன் விதைகளைப் பயிரிடும்போது முளைக்கும். ஆனால், காய்க்காது. விவசாயிகள் அதிக மகசூலுக்காக கலப்பின விதைகளைப் பயன்படுத்துவார்கள்.

பொதுமக்களுக்கு நாளொன்றுக்கு எட்டு தக்காளிகள் வீட்டு சமையலுக்குப் போதும். அவர்களுக்கு கலப்பின விதைகளைக் கொடுக்க வேண்டிய அவசியம் இல்லை. ரசாயன பூச்சிக் கொல்லி கொடுப்பதாகவும் சொல்கிறார்கள். குடியிருப்புப் பகுதிகளில் பூச்சிக் கொல்லி மருந்துகளை அனுமதிக்கவே முடியாது.

கலப்பின விதைகள் பூச்சிக் கொல்லி இல்லாமல் வளரவே முடியாது. பெயர்தான் வீரியவித்து. ஆனால், அதிக ஈரம், பூச்சிகளின் தாக்கம் ஆகியவற்றைத் தாங்கும் சக்தி இதற்கு இல்லவே இல்லை. ஆரோக்கியமான சூழலைக் கொடுக்கும் வாய்ப்பு இந்த விதைகளுக்கு இல்லை.

நெல், கோதுமை உள்ளிட்ட பயிர்களைத் தவிர்த்து, இதுபோன்ற கம்பெனிகள் காய்கறிகளில் கவனத்தைச் செலுத்த முக்கியக் காரணம் ஒன்றும் உள்ளது. நெல், கோதுமையைவிட அதிக லாபம் காய்கறி விதைகளில்தான் உள்ளது. ஏற்கெனவே, பாரம்பரிய விதைகளில் பெரும்பாலானவற்றை நாம் இழந்துவிட்டோம். கத்திரிக்காயில் 35 வகைகள்தான் தற்போது உள்ளன.

முன்பு நூற்றுக்கணக்கான பாரம்பரிய கத்திரி விதைகள் நம்மிடம் இருந்தன. எண்ணெய் கத்திரிக்கு என தனியாக ஒரு ரகம் இருந்தது. இப்போது மாடிவீட்டுத் தோட்டம் என்ற பெயரில் இருக்கும் சிலவற்றை அழிக்க நினைக்கிறார்கள். தனியார் கம்பெனியிடம் இருந்து வாங்குவதற்குப் பதிலாக, விவசாய பல்கலைக்கழகம் வழங்கும் பாரம்பரிய காய்கறி விதைகள், நமது ஊரில் இருக்கும் விதை கம்பெனிகள் ஆகியவற்றிடம் இருந்து விதைகளை வாங்கிப் பயன்படுத்தலாம்.

ரசாயன உரங்களுக்குப் பதிலாக, வீட்டில் இருந்து எறியப்படும் காய்கறிக் கழிவுகளின் மீது புளித்த தயிரை ஊற்றி மண் போட்டு மூடி வைத்தால், பத்து நாளில் நல்ல உரம் தயாராகிவிடும். அவற்றை காய்கறிகளுக்குப் பயன்படுத்தினாலே போதும்.

பாரம்பரிய காய்கறி விதைகளில் நுண் சத்துக்குள் 250-க்கும் மேல் இருக்கிறது. கலப்பின விதை காய்கறிகளில் இந்த நுண் சத்துக்களை கொஞ்சம்கூட எதிர்பார்க்க முடியாது. இவற்றால் உடலுக்கு தீங்கு ஏற்படாது என அவ்வளவு எளிதில் நாம் புறந்தள்ளிவிட முடியாது.

வேளாண் பல்கலைக்கழகத்திடமே போதிய பாரம்பரிய காய்கறி விதைகள் இருக்கும்போது, தனியாரை நோக்கி அரசாங்கம் ஓட வேண்டிய அவசியம் ஏன் வந்தது? வீட்டுத் தோட்டம் அமைக்கும் பொதுமக்கள்தான் எச்சரிக்கையாக இருக்க வேண்டும்" என எச்சரிக்கை மணி அடிக்கிறார் அறச்சலூர் செல்வம்.

மாடி வீட்டுத் தோட்ட மர்மத்திற்கான புதிர்களை அரசு விளக்குமா?

0 comments:

Post a Comment