Wednesday 27 January 2016

பனி தேசத்தில் ஓர் உணர்ச்சி போராட்டம்- The Revenant ஒரு பார்வை

ஹாலிவுட் ரசிகர்களையும் தாண்டி ஒவ்வொரு இந்திய சினிமா ரசிகனையும் கவர்ந்து வருகின்றது இந்த The Revenant படம். இத்தனைக்கும் ஒரே காரணம் இந்த முறையாவது Leonardo DiCaprio ஆஸ்கர் கிடைக்க வேண்டும் என்ற ஏக்கம் தான்.

ஆனால், ஆஸ்கர் குழு இதை ஒரு விளையாட்டாகவே இவரை ஆஸ்கருக்கு வர வைத்து கண்ணீருடன் தான் திருப்பி அனுப்புகின்றது. இந்த முறை கண்டிப்பாக ஆஸ்கர் பெற்று விட வேண்டும் என்ற வைராக்கியத்துடன் இதற்கு மேல் என்னால் நடிக்கவே முடியாது என்ற அளவிற்கு அசத்தியுள்ளார் Leonardo DiCaprio.

இப்படத்தை Birdman படத்திற்காக ஆஸ்கர் விருது பெற்ற Alejandro González Iñárritu தான் இயக்கியுள்ளார். இவர் இந்த முறையும் சிறந்த இயக்குனருக்கான ஆஸ்கர் பிரிவில் இவர் நாமினேட் ஆகியிருப்பது குறிப்பிடத்தக்கது.

பனி தேசம், மலை வாழ் மக்கள், தன் மகனை கொன்றவனை கொல்ல உயிரை கையில் பிடித்துக்கொண்டு பழி உணர்ச்சியோடு போராடும் ஹீரோ என டெம்ப்ளேட் கதை தான் என்றாலும், ஒவ்வொரு காட்சி மேக்கிங்கிளும் இயக்குனர் மிரட்டியிருக்கிறார்.

வன்முறை விரும்பாதவர்கள் கண்டிப்பாக இப்படத்தை தவிர்க்கலாம், அதிலும் ஹீரோ கரடியுடன் மோதும் காட்சி, படம் பார்ப்பவர் அனைவரையும் பதற வைக்கின்றது, அத்தனை யதார்த்தமாக அந்த காட்சி அமைந்துள்ளது. அத்தனை ஆபத்துக்களை கடந்த ஹீரோ படத்தின் பாதி நேரம் ஊர்ந்து ஊர்ந்து தான் செல்கிறார்.

அவரது குரலும் படம் முழுவதும் விஸ்வரூபம் உமர் பாய் போன்று உள்ளது, Leonardo DiCaprio தன் திரைப்பயணத்தில் நடிப்பின் உச்சத்தை எட்டியுள்ளார், தன் உடல் முழுவதும் காயங்களை வைத்துக்கொண்டு, தன் மகனை கொன்றவனை பழி வாங்க வேண்டும் என்ற கோபத்தை முகத்தில் காட்டும் போது நீ நடிகண்டா என்று கூற வைக்கின்றது.

குளிருக்காக இறந்த குதிரையில் உடலில் படுத்து உறங்குவது, கிளைமேக்ஸில் வில்லனை பழி வாங்க சாமர்த்தியமாக யோசிப்பது, என பல இடங்களில் கைத்தட்டவும், கண் கலங்கவும் வைக்கின்றார். இதுக்கும் ஆஸ்கர் கிடைக்கவில்லை என்றால், நீ பேசாம இந்தியா வந்துடு Leonardo DiCaprio என்று தான் கூற வேண்டும்.

படத்தில் மிக முக்கியமாக கவர்ந்தது அத்தனை வன்முறை காட்சிகளிலும் அழகாக நம் கண்களுக்கு அந்த பனி பிரதேசத்தை விருந்து வைத்த Emmanuel Lubezkiயின் ஒளிப்பதிவு தான். இவர் இதுவரை 2 ஆஸ்கர் விருதுகளை வென்றுள்ளார், அதேபோல் கண்டிப்பாக இந்த படத்திற்கும் கிடைக்கும் என எதிர்ப்பார்க்கப்படுகின்றது.

இந்த பனிதேசத்தில் நடக்கும் உணர்ச்சிப்போராட்டத்தை உலக சினிமாவை விரும்பும் ஒவ்வொரு ரசிகனும் கண்டிப்பாக பார்க்க வேண்டும்.

0 comments:

Post a Comment