Saturday 6 February 2016

சாகசம் - விமர்சனம்-நாகூர் பிரியாணி நாகூரை விட்டே கிளம்பல..!

நாகூர் பிரியாணி நாகூரை விட்டே கிளம்பல..! அது எப்போ உளுந்தூர் பேட்டைக்கு வருவது? புறப்பட்ட இடத்திலேயே இருக்கிறார் பிரசாந்த் என்பதற்கு மிக சிறந்த உதாரணம் ஆகியிருக்கிறது சாகசம் என்கிற வீரக்கலை! (வீரக்கலையோ, வெங்காயக் கலையோ? எங்க ஈரக்கொலையெல்லாம் நடுங்குது எசமான்!) ஆறு கலர் ஆப்செட் மிஷினில் அறுபது வருஷத்துக்கு முன்னால் வந்த பஞ்சாங்கத்தை பிரிண்ட் பண்ணிய மாதிரியிருக்கிறது காட்சிகளுக்கான ரிச்நெஸ்சும், அதற்குள் விழுந்துகிடக்கும் அரதப்பழசான சரக்கும்! இப்படத்தின் டைரக்டர் என்று டைட்டிலில் காண்பிக்கப்படுகிறார் அருண் விஜய் வர்மா. அந்த வாயில்லா ஜீவனுக்கு நிகழ்கால ட்ரென்ட் புரியவேயில்லை போலிருக்கிறது. பிரதர்… தமிழ்சினிமாவும் அதன் வேகமும் நீங்க நினைக்கிற லெவலில் இல்லைங்க, மாறி பல வருஷமாச்சு!

“என்னை நம்பி பத்தாயிரம் கொடுங்க, சாயங்காலத்துக்குள்ள அதை ஒரு லட்சம் ஆக்கிக் காட்டுகிறேன்” என்று அப்பாவிடம் சவால் விட்டுவிட்டு பணத்தோடு கிளம்புகிறார் பிரசாந்த். அதற்கப்புறம் அவர் அனுபவிக்கும் பிரச்சனைகளும், அவரால் அப்பாவி ரசிகர்களாகிய நாம் அனுபவிக்கும் பிரச்சனைகளும்தான் சாகசம்! டயலாக்கும் ஸ்கிரின் ப்ளேவும் பிரசாந்தின் அப்பா தியாகராஜனேதான். (ஸ்கிரீன் இருக்கு, ப்ளே எங்கேங்க?) நல்லவேளை… டயலாக்குகள் மட்டும் சில இடங்களில் ஆஹா…!

பிரசாந்த் இன்னும் இளமையாக இருக்கிறார். ஆனால் படத்திலும் பிரசாந்த் என்ற நினைப்பிலேயே இருப்பதுதான் அண் சகிக்கபுள்! ‘சடங்கு வீட்டுக்கு போனாலும், சந்தனம் என் புள்ளைக்குதான்’ என்று அளவுக்கு மீறிய பாசத்தால் படம் முழுக்க இவரையே காட்ட வைக்கிறார் தியாகராஜன். இவர் இல்லாத காட்சிகள் ஒன்றிரண்டு இருக்கும் என்று ஞாபகம். ஐயகோ… சிட்டி போலீஸ் கமிஷனருக்கு கூட அந்தளவுக்கு அதிகாரம் இருக்குமா தெரியாது. இவரே போலீஸ் ஸ்டேஷனாக உருமாறி ஓங்கி தாங்கி நிற்கிறாரா? ஸ்…. முடியல. வில்லன்களை விரட்டுவதும், விண்ணில் பறப்பதுமாக ‘அசத்தப்போவது யாருங்க’ சேனல் ட்டூ! காதல் காட்சிகளில் இன்னும் சுத்தம்.

இவரே போலீஸ் அதிகாரிபோல அதிகாரத்தை கையில் வைத்திருக்கிறார். இவரை கேட்டுதான் சுடவே செய்கிறார் ஏ.சி. ஆனால் ஒரு காட்சியில், “என் நேரம்… நான் இப்போ போலீஸ் கஸ்டடியில் இருக்க வேண்டியதாப் போச்சி” என்று பிரசாந்த் கவலைப்படும் போது, தியேட்டரே விழுந்து விழுந்து சிரிக்கிறது. இப்படி லாஜிக் ஒரு பக்கமும் லட்சணம் மறு பக்கமுமாக சுற்றி சுற்றி அடிக்கிறார்கள்.

கேரளாவிலும் ஆந்திராவிலும் லட்டு லட்டாக திரியும்போது எங்கிருந்து பிடித்தார்களோ இப்படத்தின் ஹீரோயின் அமெண்டாவை? ஒரு குளோஸ் அப் வைக்க முடியுதாம்மா உனக்கு? நல்லவேளை… புரிந்து கொண்ட ஒளிப்பதிவாளர் பல சீன்களில் மிட் ஷாட்டிலேயே அமெண்டாவை காட்டி ஜீரணிக்க வைக்கிறார். கோங்குரா சட்னியில் கொடுக்காப்புளியை கரைச்ச மாதிரி, ஆறு நிமிஷத்துக்கு ஒரு பாட்டு, ஏழு நிமிஷத்துக்கு ஒரு பைட்டு என்று நேரம் நகர்வதால், விட்டுவிட்டு தப்பிக்கிறோம். சும்மா சொல்லக் கூடாது… ‘அந்த ஆக்கு பாக்கு, வெத்தல பாக்கு’ பாட்டு அமர்க்களம். கோரியோ கிராபருக்கு ஒரு ஸ்பெஷல் பாராட்டு. இந்தப் படத்தின் ஆகப்பெரிய நிம்மதியே இந்த ஒரு பாட்டுதான். மற்றபடி எஸ்.எஸ்.தமன் இசையில் உருவான மற்ற பாடல்கள் அனைத்தும் காசுக்கு பிடித்த கேடு.

ஹீரோயின் வரும்போதெல்லாம் மழை வருகிறது. மழை வரும்போதெல்லாம் ஹீரோ வருகிறார் என்பதெல்லாம் எப்படியொரு பொயட்டிக்கான காட்சி. எல்லாம் பேப்பரில் வெறும் எழுத்தாக இருந்திருந்தாலே சுகமாக இருந்திருக்கும் போல தெரிகிறது
.
மிகப்பெரிய வில்லன் சோனு சோட் இருக்கிறார். அவருக்கு மட்டுமல்ல, படத்தில் வரும் எல்லா கம்பீர கேரக்டர்களுமே உதட்டில் லிப்ஸ்டிக் பூசி வைத்திருக்கிறார்கள். இந்த ஒரு விஷயமே அவர்களின் மிரட்டலுக்கு நம்மை சிரிக்க வைக்கிறது. நாசர், தம்பி ராமய்யா, எம்.எஸ்.பாஸ்கர், கோட்டா சீனிவாசராவ், தேவதர்ஷினி என்று பெரும் நட்சத்திரக் கூட்டம் இருக்கிறது. ‘இருக்கட்டுமே…’ என்று நாமும், நாம் இப்படிதான் நினைப்போம் என்று இயக்குனரும் விட்டுவிட்டதால், எல்லாருமே தேமே என்று வருகிறார்கள் போகிறார்கள்.

படத்தில் மிரள வைத்திருப்பவர் ஸ்டன்ட் இயக்குனர்தான். அந்த சேசிங்கும், கார் விண்ணில் பறப்பதும், காமிக்ஸ் ரசிகர்களை கூட கண்ணாரக் கவரும்!

‘டி.ராஜேந்தர் படம் வந்து பல வருஷம் ஆச்சே?’ என்ற ரசிகர்களின் ஏக்கத்தை ஏன் சம்பந்தமேயில்லாமல் சாகசம் படத்தின் டைரக்டர் தன் மண்டையில் ஏற்றிக் கொண்டாரோ தெரியவில்லை!

சினிமா என்பது எக்சிக்யூஷன்! நாட் எக்சிபிஷன். சாகசம் இரண்டும் அல்ல, எக்ஸ்யூஸ்மீஷன்! காலில் கயிறை கட்டிக் கொண்டு பல வருஷமாகவே ஓடிக் கொண்டிருக்கிறார் பிரசாந்த் என்ற சேம்பியன். கிரவுண்டும், கைதட்டல்களும் அவருக்காகவே காத்திருக்கின்றன. அவையெல்லாம் வாய்க்கப் பெற வேண்டும் என்றால், முதலில் தன் கட்டுகளை அவிழ்த்துக் கொள்ள வேண்டும்.

பிரசாந்த்… செய்வீங்களா, செய்வீங்களா…?