Wednesday 27 January 2016

ஆமாம்... நாங்கள் அடையாற்றில்தான் குப்பை கொட்டுகிறோம்!' - ஊராட்சியின் 'தில்' வாக்குமூலம்!

பெருமழையோ, வெள்ளமோ... எதுவும் அரசின் மெத்தனப் போக்கை மாற்ற முடியாது என்பது மீண்டும் ஒரு முறை நிரூபணம் ஆகி உள்ளது.

தகவல் அறியும் உரிமை சட்டத்தின் கீழ்,  பொழிச்சலூரை சேர்ந்த மு. கவியரசன் கேட்ட கேள்விகளுக்கு பதில் அளித்துள்ள புனிததோமையார்மலை ஊராட்சி ஒன்றிய தகவல் அலுவலர், "பொழிச்சலூர்  பகுதியில் சேகரிக்கப்படும் குப்பைகள் அனைத்தையும் நாங்கள் அடையாறு ஆற்றங்கரை ஓரமாகதான் கொட்டுகிறோம்"  என ஒப்புதல் வாக்குமூலம் அளித்துள்ளார்.

சமீபத்திய வெள்ளத்தில் சென்னையில் மிகவும் மோசமாக பாதிக்கப்பட்ட பகுதிகளில் ஒன்று பொழிச்சலூர். சமூக கட்டமைப்பில், கீழ் தட்டில் இருக்கும் மக்கள் பெரும் அளவில் வசிக்கும் பகுதி இது.  தமிழக இளைஞர் முன்னணி அமைப்பின் பொழிச்சலூர் பகுதி செயலாளர் கவியரசன்,  அண்மையில் புனிததோமையார்மலை ஊராட்சி ஒன்றிய தகவல் அலுவலருக்கு சில கேள்விகளை அனுப்பி உள்ளார்.

அதற்கான பதிலில்,  புனிததோமையார்மலை ஊராட்சி ஒன்றியத்திற்கென தனி குப்பை கிடங்கு எதுவும் இல்லை என்றும்,  பொழிச்சலூர் ஊராட்சி பகுதியில் சேகரிக்கப்படும் குப்பைகள் அனைத்தும் அடையாறு ஆற்றங்கரை ஓரமாக விநாயகர் நகர் பகுதியில் கொட்டப்படுகிறது என்றும் தெரிவித்துள்ளார் ஊராட்சி ஒன்றிய தகவல் அலுவலர்.

இது குறித்து தமிழக இளைஞர் முன்னணியின் பொதுச் செயலாளர் க அருணபாரதி கூறுகையில், “ இது போல் நீர் நிலைகளில், ஆற்றங்கரைகளில் குப்பைகளை கொட்டியதால்தான்  சென்னையில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு பேராபத்து ஏற்பட்டு என்பதால், கடந்த 16.12.2015  அன்று, வழக்கு ஒன்றில் தீர்ப்பளித்த சென்னை உயர் நீதிமன்றத் தலைமை நீதிபதி எஸ்.கே. கவுல், நீதிபதி புஷ்பா சத்தியநாராயணா ஆகியோர் கொண்ட முதல் அமர்வு, "ஏரிகள், ஆறுகளில் குப்பைகள் மற்றும் திடக்கழிவுகள் கொட்டுவதை உடனடியாகத் தடுக்க வேண்டும். இனிமேல் குப்பைகள் கொட்டுவைதயும் தடுக்க ஏரிகள், ஆறுகளில் தடுப்பு வேலி அமைக்க வேண்டும்"  என உத்தரவிட்டிருந்தனர்.

ஆனால், இந்த உத்தரவுகள் எதையும் மதிக்காமல், குப்பைகள் கொட்டுவதால் பொது மக்களுக்கு ஏற்படும் சுகாதார பாதிப்புகளையும் கணக்கில் கொள்ளாமல் ஊராட்சி நிர்வாகம்,  அடையாறு ஆற்றங்கைரையில் தொடர்ந்து குப்பைகளை கொட்டிவருகிறது”

இந்த பெருமழை சேதாரத்திலிருந்தும்  அரசு பாடம் படிக்கவில்லை என்பதுதான் வெட்கக் கேடு. இனியும் ஆற்றங்கரை ஓராமாக குப்பைகள் கொட்டுவதை உடனடியாக நிறுத்தாவிட்டால் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்வோம்" என்றார்.

0 comments:

Post a Comment