Sunday 31 January 2016

மாத்தி யோசித்த கலெக்டர்!

நாட்டில் எது இருக்கிறதோ இல்லையோ ஜாதி இருக்கிறது, தற்கொலை இருக்கிறது, கொலை இருக்கிறது. அவற்றுக்கு ஈடாக சுத்தமில்லாத குளங்களும் உள்ளன.

நம் ஒவ்வொருவரின் தெரு ஓரத்திலும் தூர்வாரப்படாத ஒரு குளம் கண்டிப்பாக இருக்கும். அதைப் பற்றி நம் அன்றாட வாழ்வில் நினைப்பதுகூட இல்லை. என்றாவது ஒரு நாள் திடீரென குளம் சுத்தமாக்கப்படும்! அதுவும் ஏதோ மந்திரி வந்தால் மட்டுமே. ஆனால் எவ்வித சுயநல நோக்கமுமின்றி,  பணத்தை வீண் விரயம் செய்யாமல், புதுமையாக யோசித்து ஒரு குளத்தை சுத்தம் செய்திருக்கிறார் கோழிக்கோடு கலெக்டர் பிரஷாந்த் நாயர்.

இவரது புதுமை என்னவென்றால்,  குளத்தைச் சுத்தம் செய்பவர்களுக்கு 1 பிளேட் பிரியாணி, அதுவும் சுவையான மலபார் பிரியாணி இலவசமாக வழங்கப்படும் என்பதுதான். கொயிலாண்டியில் உள்ள பிஷாரிக்காவு குளம் 14 ஏக்கர் நிலப்பரப்பு உடையது. முழுவதும் குப்பை, ஆகாயத் தாமரையால் நிறைந்து இருக்கும் ஒரு குளத்தைச் சுத்தம் செய்வது என்பது அவ்வளவு எளிதான ஒரு விஷயம் இல்லை.

இந்த குளத்தைச் சுத்தம் செய்ய வேலையாட்களுக்கு பணம் கொடுத்து இருக்கலாம். ஆனால், அந்த பணம் நேரடியாக எந்த ஊழலும் இல்லாமல் மக்களிடம் சென்றடைகிறதா என்பது முதல் கேள்வி. மேலும், அந்த காசு மக்களின் வயிற்றை நிறைக்கிறதா, வீண் விரயம் ஆக்கப்படுகிறதா என்பது இரண்டாம் கேள்வி. இது எதற்கும் வழி வகுக்காமல் சுத்தம் செய்ய முன்வருபவர்களுக்கு சுவையான பிரியாணியை அளித்திருக்கிறார் பிரஷாந்த். இந்த பிரியாணிக்கான காசை மாவட்ட நிர்வாகத்தின் வறட்சி தடுப்பு நிதியில் இருந்து பெற்றுக் கொண்டார்.

 "மக்கள் ஒருவருக்கு ஒருவர் உதவியாக இருக்க வேண்டும். ஒரு கருணைமிகு சமுதாயமாக இது மாற வேண்டும் என்பதே என் ஆசை. நமது பார்வை வெறும் கட்டடம், கல், மண், பணம் இவற்றில் இருந்து மனிதர்களை நோக்கி மாற வேண்டும்" என்கிறார் பிரஷாந்த்.

இவர் மீது மக்கள் வைத்திருக்கும் அன்பு,  இவரது முகநூல் பக்கத்தில் 1,60,000 லைக்குகளில் பிரதிபலிக்கிறது.

இவர் இதற்கு முன்னர்,  உள்துறை அமைச்சருக்கான செகரெட்ரியாகப் பணியாற்றி வந்துள்ளார். இவர் இதற்கு முன்பு கொண்டுவந்த "ஆப்ரேஷன் சுலைமானி" ஏகப்பிரபலம் அடைந்தது குறிப்பிடத்தக்கது. இதன்படி, கலெக்டர் அலுவலகத்தில் இருந்து கூப்பனை பெற்று,  கோழிக்கோடு முழுவதும் குறிப்பிட்ட சில கடைகளில் கொடுத்து வயிறார உணவு உண்ணலாம். அந்த உணவிற்கான காசு sponsorship மூலம் வழங்கப்படும்.

ஒவ்வொரு ஊரிலும் இதுபோல அழிந்துவரும் குளங்கள், ஆறுகள் ஏராளம். இதே நிலைமை நீடித்தால் குளம் என்றால் என்ன? என கேட்கும் தலைமுறை உருவாகும்.

நாம் இழந்த செழிப்பை மீட்க இதுபோல "மாத்தி யோசிக்கும்" தளபதிகள், தலைவர்கள் நம் நாட்டிற்கு தேவை!

0 comments:

Post a Comment