Sunday 31 January 2016

இறுதிச்சுற்று… அதிரடியான பாக்ஸிங் பன்ச்..திரைவிமர்சனம்

அலைபாயுதே படத்தில் பணியாற்றிய மணிரத்னம், பிசி ஸ்ரீராம் மற்றும் ஏஆர் ரஹ்மான் ஆகியோரின் உதவியாளர்களுடன் 16 வருடங்களுக்கு பிறகு அதே நாயகன் மாதவன் இணைந்துள்ளார். இவரின் மூன்று வருட கடின உழைப்பில் உருவாகியுள்ள இப்படம் எப்படி என்பதை பார்ப்போமா?

நடிகர்கள் : மாதவன், ரித்திகா சிங், நாசர், ராதாரவி, காளி வெங்கட், சஞ்சனா மோகன் மற்றும் பலர்.
இசையமைப்பாளர் : சந்தோஷ் நாராயணன்
ஒளிப்பதிவு : சிவகுமார் விஜயன்,
படத்தொகுப்பு : சதீஷ் சூர்யா
இயக்கம் : சுதா கொங்கரா பிரசாத்
தயாரிப்பாளர் : மாதவன், சி.வி. குமார் மற்றும் ராஜ்குமார் ஹிரானி

கதைக்களம்…

பாக்ஸிங் பயிற்சியாளர் மாதவன் அரசியல் தலையீடுகளால் டெல்லியில் இருந்து சென்னைக்கு டிரான்ஸ்பர் ஆகிறார். அங்கு சேரியில் இருக்கும் ரித்திகாவை தேர்ந்தெடுத்து பயிற்சியும் பணமும் கொடுத்தும் உருவாக்குகிறார்.

பல தடைகளுக்கு பிறகு உலக போட்டியில் ரித்திகா கலந்து கொள்ள போகும் நிலையில் அவரை பெயர் பட்டியலில் இருந்து நீக்குகிறார் வில்லன் ஜாகீர் உசேன். அவரை பெயர் பட்டியலில் சேர்க்க வேண்டுமென்றால் டிரெய்னர் பதவியை மாதவன் ராஜினாமா செய்ய வேண்டும் என்று நிபந்தனையும் விதிக்கிறார்.

அதன் பின்னர் மாதவன் என்ன செய்தார்? ரித்திகா உலக சாம்பியன் ஆனாரா? என்ற கேள்விகளுக்கான விடையே இந்த இறுதிச்சுற்று.

கதாபாத்திரங்கள்…

மாதவன்… எந்தவொரு ஹீரோவாக இருந்தாலும் தான் ஒரு வீரராக இருக்கவே விரும்புவார். ஆனால் பயிற்சியாளராக இருந்து ஹீரோயினுக்கு முக்கியத்துவம் கொடுத்து இருக்கிறார்.

டிரெயினராக இருந்தாலும் கடுமையான பயிற்சி கொண்ட உடற்கட்டு, அதற்கேற்ற பயிற்சி முறைகள், கோபம், வெறி என அனைத்தையும் அழகாக வெளிப்படுத்தியுள்ளார்.

பெண் பித்தர், சரக்கடித்தல், போர்ட் மீட்டிங் காட்சிகள், தன் மாணவிகளுக்காக பணத்தை செலவழிப்பது என மிரட்டல் பார்வையில் மிரள வைத்திருக்கிறார். இனி மாதவன் சாக்லேட் பாய் அல்ல பாக்ஸர் பாய் என்றே சொல்லலாம். க்ளைமாக்ஸ் காட்சியில் முகத்தை சுழித்து சிரிப்பது கைத்தட்டலை அள்ளும்.

நாயகி ரித்திகா சிங்… அவர்களே சொன்னால் ஒழிய இவர் புதுமுகம் என்று எவரும் நினைக்க போவதில்லை. மீன் விற்பது, புடவை கட்டி மாதவனுக்காக வழிவது, அக்காவுக்காக விட்டுக் கொடுப்பது, நாக் அவுட் செய்வது, அடாவடி செய்வது, குடும்பத்திற்காக ஏங்குவது, கோபம், வீரம் என ரித்திகாவை பற்றி சொல்லிக் கொண்டே போகலாம். அறிமுக படத்திலேயே அசத்திவிட்டார் அம்மணி.

இதுவரை தமிழ் சினிமா பாக்ஸிங் வீரர்களையே கொடுத்துள்ளது. முதன்முறையாக பாக்ஸிங் வீராங்கனை கிடைத்துள்ளார். க்ளைமாக்ஸ் காட்சியில் வில்லனை அடித்து விட்டு மாதவனை தேடி ஓடிச் செல்லும் காட்சியில் கண்களை குளமாக்குகிறார். வெல்டன் ரித்திகா.

இவர்களுடன் நாசர், ராதாரவி, காளி வெங்கட்.. மூவரும் தங்கள் பாத்திரங்களில் ஜொலிக்கிறார்கள். நாசரும், காளி வெங்கட்டும் சீரியஸான பாக்ஸிங் படத்தை போராடிக்காமல் கொண்டு செல்ல உதவி இருக்கிறார்கள்.

ரித்திகாவின் அக்காவாக மும்தாஸ் சர்கார், பாக்ஸிங் தலைவர் ஜாகீர் உசேன் உள்ளிட்டோர் அருமையான தேர்வு.

தொழில்நுட்ப கலைஞர்கள்…

சிவக்குமார் விஜயன் ஒளிப்பதிவில் மீன் மார்கெட், சேரி வாழ்க்கை, பயிற்சி பெறும் இடங்கள், தண்ணியடிக்கும் காட்சிகள் என அனைத்தையும் கண்களுக்கு விருந்தளித்துள்ளார்.

எடிட்டர் சதீஷ் சூர்யா படத்திற்கு பலம் சேர்த்துள்ளார். படத்திற்கு எது தேவை, எது தேவையில்லை என்பதை உணர்ந்து படத்தை விறுவிறுப்பாக கொண்டு செல்கிறார்.

சந்தோஷ் நாராயணன் பின்னணி இசையில் சபாஷ் பெறுகிறார். கதையுடன் ஒட்டிச் செல்லும் பாடல்கள். எந்தவொரு வெளிநாட்டு தேசங்களுக்கும் கொண்டு செல்லாத பாடல் காட்சிகள். தீ பாடிய ஏய் சண்டக்கார, உசுரு நரம்பிலே பாடல்கள் கேட்கும் ரகம்.

படத்தின் ப்ளஸ்…

    ரித்திகா சிங் + மாதவன் ஆக்டிங்
    பாக்ஸிங் உலகின் யதார்த்த வாழ்க்கை
    பாக்ஸிங் பாலிடிக்ஸ்
    படத்தை ஷார்ப்பாக முடித்தது

இயக்குனர் சுதாவுக்கு ஒரு பெரிய பூங்கொத்து கொடுத்து வரவேற்கலாம். எந்தவொரு இடத்திலும் சொதப்பாத திரைக்கதை. மாதவனின் படுக்கை அறிமுக காட்சியில் தொடங்கி படத்தை கொண்டு செல்லும் முறையில் ஜெயித்திருக்கிறார்.

க்ளைமாக்ஸ் நீண்ட நேரம் என்றாலும் அதையும் ரசிக்கும்படி சீட்டின் நுனியில் உட்காரவைத்திருக்கிறார்.

விளையாட்டை பொருத்தவரை திறமையானவர்கள் நாட்டின் எந்தவொரு மூலையிலும் இருப்பார்கள். அவர்களை ஊக்குவித்து வழிகாட்ட தேவை ஒரு பயிற்சியாளர் மட்டுமே. அப்படி செய்தால் இந்தியா எப்போதும் தங்கப்பதக்கம் வெல்லும் என்ற ஆணித்தரமான கருத்தை சொன்னதற்கு ஹேட்ஸ் ஆப் சுதா.

மொத்தத்தில் இறுதிச்சுற்று… அதிரடியான பாக்ஸிங் பன்ச்..

0 comments:

Post a Comment