Sunday 31 January 2016

"அடடா இந்த ரூமுக்கு ஏன் வந்தோம்?... மூளையை சுறுசுறுப்பாக்க 4 வழிகள்

"அடடா இந்த ரூமுக்கு ஏன் வந்தோம்?"

"என்னாச்சு! அம்மா கடைக்குப் போகச் சொன்னாங்க, கடைக்கு வந்துட்டோம், என்ன வாங்கணும்னு மறந்திடுச்சே..."

"இன்னிக்குத்தானே படிச்சோம் அதுக்குள்ளே மறந்துபோச்சே!"
"வண்டி சாவிய எங்க வச்சேன்னு ஞாபகம் இல்லியே!"

அன்றாடம் இதுபோன்ற எண்ணங்கள் நமக்குத் தோன்றியோ அல்லது மற்றவர்கள் சொல்லியோ நாம் கேட்டுகொண்டிருக்கிறோம். பயப்பட வேண்டாம். இது நோய் இல்லை. எல்லோருக்கும் ஏற்படக்கூடியதுதான். அதற்காக இதை அப்படியே விட்டுவிட வேண்டும் என்று இல்லை. ஞாபகமறதியைக் கட்டுப்படுத்த, மூளை சுறுசுறுப்பாக இயங்க நான்கு வழிகளைக் கடைப்பிடிக்கச் சொல்கிறார்கள்.

1. மெமரி டயட்

அட! இது என்னடா புது டயட்டா! எனத் தலைப்பைப் படித்துவிட்டுச் சோர்ந்துவிடாதீர்கள். ஆன்டிஆக்ஸிடன்ட் நிறைந்த உணவுகள் சாப்பிட்டால், ஞாபகமறதியைத் தவிர்க்கமுடியும் என்கிறார்கள் ஆராய்ச்சியாளர்கள். பச்சை நிறக் காய்கறிகள், பூண்டு, கேரட் போன்றவற்றை உணவில் சேர்த்துவந்தால் ஞாபகமறதி நீங்கும். ஒமேகா-3 நிறைந்திருக்கும் மீன், முட்டையில் இருக்கும் பேஃட்டி அமிலங்கள் மூளை சிறப்பாக செயல்பட உதவும்.

2. மூளைக்கான வொர்க்அவுட்ஸ்

மூளைக்குச் சிறந்த வொர்க்அவுட் புதிர்களை விடுவிப்பதுதான். சுடோகோ, குறுக்கெழுத்து போன்றவை உங்களது நினைவில் தேங்கியிருக்கும் பழைய விஷயங்களை மீட்டெடுக்க உதவும். செஸ் விளையாடுவது, புதிய மொழிகளைக் கற்பது போன்றவையும் சிறந்த வொர்க் அவுட்கள்.

3. நன்றாகத் தூங்குங்கள்

தூக்கம் மிகவும் அவசியமான ஒன்று. நான்கு நாட்கள் மாடு போல உழைத்துவிட்டு, தூங்கும் நேரத்தில் படம் பார்ப்பது, வெட்டிப் பேச்சு பேசுவது, வாட்ஸ்அப் சாட்டிங் செய்வது என இருந்துவிட்டு, இரண்டு நாட்கள் முழுவதும் தூங்கியே கிடப்பது தவறு. தினமும் தூங்க வேண்டும், அளவாக அதே சமயம் நல்ல ஆழ்நிலை தூக்கம் பெற வேண்டும். எந்தக் காரணத்துக்காவும் இரவு 10 மணிக்கு மேல் விழிக்காதீர்கள்.

இரவு 10 முதல் காலை 5 என்பதுதான், உறங்குவதற்குச் சரியான நேரம் என்கின்றனர் ஆராய்ச்சியாளர்கள். குறைந்தது ஏழு முதல் எட்டு மணி நேரம் நன்றாகத் தூங்கினாலே, மூளை புத்துணர்ச்சி அடைந்துவிடும்.

4. இன்று... நேற்று...நாளை

கடந்த காலத்தில் என்ன நடந்தது, தற்போது என்ன நடந்துகொண்டிருக்கிறது, வருங்காலத்தில் என்ன நடக்க வேண்டும், என்ன நடக்கப்போகிறது என்பதைப் பற்றிய புரிதல் வேண்டும்.

சரித்திரம் முதல் இன்ஸ்டாகிராம் வரை அத்தனையும் நினைவில் வைத்திருக்க, எந்தவொரு விஷயத்தையும் முதலில் நினைவில் நிறுத்தி, பின்னர் முறையானப் பயிற்சிகள் மூலம் நினைவை மீட்டெடுக்க வேண்டும். க்விஸ் போட்டி சிறந்த பயிற்சி. குடும்பம், நண்பர்கள் என எல்லோரும் குழுகுழுவாக இணைந்து க்விஸ் பழகினால், மூளை புத்துணர்ச்சியாக இருக்கும்.

சரி பாஸ்! இந்தக் கட்டுரையோட தலைப்பை ஸ்க்ரோல் பண்ணாம, டக்குனு சொல்லுங்க பார்ப்போம்.

0 comments:

Post a Comment