Saturday 30 January 2016

இப்பதான் பழ.கருப்பையா வீட்ல கல் விழுந்திச்சு, இதுல இவரு வேற?

“ஆட்டுக்கு தாடி மாதிரி இது எதுக்குங்க அநாவசியமாக?” இப்படியொரு கேள்வியை எழுப்பி எழுப்பி தொண்டை வறண்டு போய் கிடக்கிறது கோடம்பாக்கம். எது குறித்து இப்படியொரு பதற்றம்? வேறொன்றுமில்லை, படங்களுக்கு தரப்படும் வரிவிலக்கு தொடர்பான அலுப்பும் அனத்தலும்தான் இது. தொடர்ந்து தன் படங்களுக்கு வரிவிலக்கு மறுக்கப்படுவதாக உதயநிதி நீதிமன்றத்தில் வழக்கு போட்டு வருகிறார். அது தொடர்பான விவாதங்களும் ஆங்காங்கே நடந்து வருகின்றன. அவராவது முன்னாள் முதல்வரின் குடும்பம். காரசாரமான எதிர்கட்சியின் வாரிசு. ஐயோ பாவம்… இந்த கதிர் என்ன பண்ணினார்?

முதலில் யார் இந்த கதிர்? ‘காந்தர்வன்’ என்ற படத்தில் அறிமுகமான ஹீரோ. அதற்கப்புறம் நீண்ட இடைவெளிக்குப் பின் அவர் ஹீரோவாக நடிக்கும் படம் ‘ஒன்பதிலிருந்து பத்து வரை’. சென்னையிலிருந்து காஞ்சிபுரம் நோக்கி செல்லும் ஒரு காரின் டிரைவர் கதிர். கூடவே பயணம் செய்யும் ரேடியோ ஜாக்கி ஸ்வப்னா மேனன். இவர்கள் இருவருக்கும் நடுவில் வரும் மோதல் என்று கதை பயணிக்கிறது. திடீரென இவர்கள் ஒரு பிரச்சனையில் மாட்டிக் கொள்ள பின்னாலேயே விரட்டி வரும் போலீசிடம் இவர்கள் சிக்கினார்களா? ஏன் போலீஸ் துரத்தியது? என்பது மிச்சசொச்சம். விஜய் சண்முகவேல் ஐயனார் இயக்கியிருக்கிறார்.

இந்த படத்திற்குதான் வரிவிலக்கு தராமல் சுமார் ஆறு மாதங்களாக இழுத்தடித்தார்களாம். “என்னை கேட்டால், இந்த முறையே தேவையில்லே சார். பேசாம எல்லா படத்துக்கும் கூட வரி போடலாம். இவங்க வரிவிலக்கு கொடுப்பாங்கன்னு கொடுப்பாங்கன்னு அலையுறதிலேயே எங்களுக்கு தோதான ரிலீஸ் டைம் போயிடுது” என்று புலம்புகிறார் கதிர். வரிவிலக்குன்னு போனாலே இது வேணும் அது வேணும்னு கேட்கிறாங்க. நான் அப்படியெல்லாம் கொடுக்கிற ஆள் இல்ல. இப்பவும் எங்க ஊர்ல உள்ள ஸ்கூலுக்கு ஐந்து சென்ட் நிலம் வாங்கிக் கொடுத்திருக்கேன். எங்க ஊர் கோவிலை 45 லட்சம் செலவு பண்ணி புதுப்பிச்சிருக்கேன். செலவு அதுக்கு பண்ணலாம். இந்த வரிவிலக்குக்காக ஏன் பண்ணணும்?” என்று மேலும் மேலும் சூடாகிக் கொண்டே போனார்.

பழ.கருப்பையா வீட்ல கல்லெறிஞ்சுட்டாங்கன்னு இப்பதான் நியூஸ் வந்திச்சு. இந்த கதிர் வேற… கன்னா பின்னான்னு பேசிகிட்டு இருக்காரே? சினிமா ஹீரோ… சமாளிப்பார்னு நம்புவோம்!

0 comments:

Post a Comment