Friday 26 February 2016

நையப்புடை - திரைவிமர்சனம்

ல வெற்றி படங்கள் மட்டுமில்லாமல் தமிழ் சினிமாவிற்கு இளைய தளபதி எனும் வெற்றி நாயகனையும் கொடுத்த பிரபல இயக்குனர் எஸ்.ஏ.சந்திரசேகரரும், பிரபல பாடலாசிரியராக இருந்து கதாநாயகனாக அவதாரம் எடுத்த பா.விஜய் அவர்களும் இணைந்து நைய்யப்புடைக்க களமிறங்கியிருக்கிறார்கள்.
கதை

தனது 70 வயதினிலும் அநியாயத்தை தட்டிக்கேட்கும் துணிச்சல் மிகுந்த, ஒய்வு பெற்ற ராணுவ அதிகாரியான எஸ்.ஏ.சி அவர்கள் ஒரு நாள் பேருந்தில் பயணிக்கும் பொழுது கலாட்டா செய்யும் லோக்கல் ரவுடிகளை துவம்சம் செய்ய அதை ஒரு மாணவி வீடியோ எடுத்து சமூக வலைத்தளங்களில் பதிவேற்றம் செய்ய மிக பிரபலமாகிறார் எஸ்.ஏ.சி. அதனால் பத்திரிக்கையாளரான பா. விஜய்யுடன் அறிமுக ஏற்பட பின் இருவரும் சேர்ந்து பல சமூக பிரச்சனை எதிர்க்கொண்டு எதிரிகளை எவ்வாறு நைய்யப்புடைக்கிறார்கள் என்பதே படத்தின் மீதிக்கதை.
படத்தை பற்றிய அலசல்

70 வயதை தாண்டினாலும் இப்போது நடிக்க வந்த நடிகனைப்போல் ஆர்வம் காட்டி, சண்டை காட்சிகளில் கூட நடித்துள்ளார் எஸ்.ஏ.சந்திரசேகர் அதற்காகவே அவரை பாராட்டிதான் ஆகவேண்டும், Captain, இளைய தளபதியை எல்லாம் நடிக்க வைத்தவருக்கு நடிப்பு வராமலாயிருக்கும். ஆனால் அடுத்தவர்களுக்கு பிரச்சனை எனும் போது ஆவேசம் காட்டும் இவர் தனக்கு வரும் சில பிரச்சனைகளில் பேக் அடிப்பது என்ன லாஜிக் என இயக்குனர் தான் சொல்ல வேண்டும். பா.விஜய் அவருக்கு என இருக்கும் களத்தை அவர் இன்னும் சரியாக பயன்படுத்தியிருக்களாம். சாந்தினி காதல் காட்சிகளில் மட்டும் தலையை காட்டி செல்கிறார். படத்தின் வில்லன்களாக வரும் எம். எஸ். பாஸ்கரும் நான் கடவுள் ராஜேந்திரனும் வில்லத்தனம் காமெடியென பட்டைய கிளப்புகிறார்கள் குறிப்பாக எம் எஸ் பாஸ்கர் தனது கைத்தேர்ந்த நடிப்பை வெளிக்காட்டியுள்ளார். விஜி சந்திரசேகர் தன் மகன் உயிர் இழக்கும் வேளையில் மிக எதார்த்தமான நடிப்பை வெளிப்படுத்தியுள்ளார், அவரின் மகன் முத்துபாண்டியாக வரும் மாஸ்டர் ஜாக்சன் கவனம் ஈர்க்கிறார்.

படத்தின் இசை தாஜ் நூர், க்ளைமேக்ஸில் வரும் குத்துப்பாடல் ரசிக்கவைக்கிறது, பின்னணியில் புதிதாக எதுவும் இல்லையென்றாலும் பெரிதாக குறை சொல்லி விட முடியாது. படத்தின் கதைக்கான நோக்கம் சரியாக இருக்கலாம். ஆனால் அதை ரசிகர்களிடம் சரியாக கொண்டு சேர்ப்பதில்தான் தான் அப்படத்தின் வெற்றி இருக்கிறது. திரைக்கதையின் சுவாரஸ்யம் இன்னும் கொஞ்சம் இருந்திருக்கலாமே என்று முணுமுணுக்க வைக்கிறது. படத்தில் சில இடங்களில் எதிர்பார்ப்பை ஏற்படுத்தினாலும் அதற்கு பிறகு வரும் காட்சிகள் சற்று தொய்வை ஏற்படுத்துகிறது. படம் சோஸியல் த்ரில்லராக இருந்தாலும் நகைச்சுவை நன்றாக வந்துள்ளது.

கதையை கையாண்ட விதத்தில் புதியதாக எதும் இல்லாமல் போனது ஒரு குறையே. லாஜிக் மீறல்களும், ஏதார்த்தமின்மையும், நாடகத்தனமும் சற்று அதிகமாக உள்ளது. தற்போது வரும் படங்களில் ‘தல’ பற்றிய புகழாரங்கள் அதிகமாக வருவதால் அதை ‘ஹெவி தளபதி’ ரெஃபெரன்ஸ் வைத்து ஒரேடியாக ஈடுகட்ட முயற்சித்துள்ளார் எஸ்.ஏ.சி. இதையெல்லாம் தாண்டி எஸ்.ஏ.சி.யின் முயற்சிக்காக, எம்.எஸ்.பாஸ்கரின் நடிப்பிற்காக, படத்தில் ரசிக்க வைக்கும் இடங்களுக்காக, 19 வயதில் படத்தை இயக்கிய விஜய் கிரணுக்காக இக்குழுவை பாராட்டலாம்.
க்ளாப்ஸ்

போராட்ட குணத்தை முதுமை அழித்துவிட முடியாது, நல்லது செய்ய வயது ஒரு தடை இல்லை எனும் எஸ்.ஏ.சி முயற்சி, எம் எஸ் பாஸ்கர் ராஜேந்திரனின் நகைச்சுவை கலந்த வில்லத்தனமான நடிப்பு.
பல்ப்ஸ்

படத்தை கையாண்ட விதம், திரைக்கதையில் சுவாரஸ்யம் இல்லாமல் போனது. லாஜிக் மீறல்களும், எதார்த்தமின்மையும், நாடகத்தனமும் சற்று அதிகமாக உள்ளது. இதனாலேயே படத்துடன் ரசிகர்களால் ஒன்றமுடியாமல் போகிறது. 

0 comments:

Post a Comment