Sunday 24 January 2016

ஆஸ்கரை வெல்லுமா இந்த அமேசான் காட்டின் கதை?!‘Embrace of the Serpent’

ஆஸ்கர் விருதுகளுக்கான போட்டி சூடுபிடிக்க துவங்கிவிட்டது. வழக்கம்போல, உலகின் பல பகுதிகளில் இருந்து, பல கலைப்படைப்புகள் ஆஸ்கரை நோக்கி நகர்ந்துகொண்டிருக்கின்றன.

இந்நிலையில் முதன்முறையாக கொலம்பிய சினிமா ஒன்று ஆஸ்கர் இறுதிப்பட்டியலுக்கு தேர்வாகியிருக்கிறது. கொலம்பிய நாட்டில் இருந்து முதல்முறையாக ஒரு இயக்குநர்,  சினிமா ஆர்வலர்களால் ஆச்சரியத்துடன் பார்க்கப்படுகிறார் ஒரே படைப்பில் அத்தனை பேரையும் கவனிக்க வைத்த அந்த இயக்குனர் சிரோ கியூரா.

அமேசான் காடுகள் என்றவுடன் நமது நினைவுக்கு வருவது என்னவாக இருக்கும் ? சிலருக்கு அரியவகை மூலிகைகள் கிடைக்குமிடம் என தோணலாம். சிலருக்கு ‘உலகின் நுரையீரல்’ என அழைக்கப்படும் அதன் பெருமைகள் நினைவுக்கு வரலாம். இயற்கை ஆர்வலர்களுக்கு, அழிந்து வரும் இயற்கையின் பொக்கிஷம் என்ற கோபம் கூட இருக்கலாம். இதெல்லாம் தற்போது நாம் வாழும் வாழ்க்கையுடன் தொடர்பு கொண்ட ஞாபகங்கள். மொத்த உலகத்திற்கும், அமேசான் என்றால், அதன் பொதுப்புத்தியில் இருக்கின்ற விஷயங்கள் இவ்வளவுதான்.

இவ்வளவு சிறப்பு வாய்ந்த அமேசான் வனங்களுக்கு பின்பு இருக்கும் இனப்படுகொலைகள், தொழில்புரட்சி என்ற பெயரில்  நடந்த மனித உரிமை மீறல்கள், அமேசான் மண்ணின் மைந்தர்களுக்கு ஏற்பட்ட கொடுமைகள் யாவும் உலகம் அறியாதது. இந்த  வரலாற்றையும், அமேசான் பகுதியின் நூறாண்டுக்கு முந்தைய அழகையும் ஒருசேர, ‘Embrace of the Serpent’ என்ற படத்தின் மூலம் திரைக்கு கடத்தியிருக்கிறார் சிரோ கியூரா. திரையிடப்பட்ட எல்லா இடங்களிலும், பாராட்டுகளும், விருதுகளும் குவிய,  தற்போது ஆஸ்கருக்கு அருகில் நிற்கிறது இந்த படம். கேன்ஸ் திரைப்பட விழாவில், ‘டைரக்டர்ஸ் போர்ட்நைட்’ பிரிவில், 2015 க்கான சிறந்த படமாகவும் தேர்வு செய்யப்பட்டிருக்கிறது.

என்ன கதைக்களம்?

  “கடந்த நூற்றாண்டில் இருந்த அமேசானின் அழகில், பாதிகூட இப்போது இருக்கும் அமேசான் காட்டிற்கு இல்லை” என்கிறார் சிரோ. அதனை அப்படியே பதிவு செய்ய விரும்பிய சிரோ, நிஜத்திற்கு மிக நெருக்கமாக இருப்பதற்காக கடந்த நூற்றாண்டில் அமேசான் காட்டை ஆராய்ச்சி செய்து, குறிப்புகள் எழுதிய இரண்டு விஞ்ஞானிகளின் டைரிக்குறிப்பையே கதைக்கான ஆதாரமாக கொண்டு, கதையை வடிவமைத்திருக்கிறார்.

அமேசான் காட்டின் பூர்வகுடி பழங்குடி இனத்தில்,  கடைசி மனிதனாக வாழ்ந்து வருகிறார் கரமகட்டே. தான்தான் தனது இனத்தின் கடைசி மனிதன் என்ற கவலையில் இருக்கும் கரமகட்டேவை,  1909 ம் ஆண்டில், சந்திக்கிறார் பண்பாட்டியல் ஆய்வாளரான, தியோடர் கோச் க்ரன்பெர்க். தனது நோயை தீர்க்கவும், வாழ்நாளை நீட்டிக்கவும் உதவும் யாக்ருனா என்னும் ஒரு அதிசய செடியைத்தேடி வந்த தியோடர், கரமகட்டேவின் உதவியை நாடுகிறார். அந்த மந்திரச்செடியை கண்டுபிடிக்க உதவினால் , மற்ற பகுதிகளில் இன்னும் வாழும் கரமகட்டேவின் இனத்தினரை காட்டுவதாக உறுதியளிக்கிறார்.

அதனை ஏற்றுக்கொண்டு கரமகட்டேவும் செடியை கண்டுபிடிக்க உதவிசெய்கிறார். இதற்காக படகில் இருவரும் ஒன்றாக இணைந்து பயணம் செய்கின்றனர். இந்த பயணம் கரமகட்டேவின் இளமைக்காலத்தில் நடக்கிறது. திரைப்படத்தின் மற்றொரு இணை கதையாக, கரமகட்டேவின் இன்னொரு பயணமும் வருகிறது. 1940 ல் தியோடரைப்போலவே தாவரவியல் விஞ்ஞானி  ரிச்சர்ட் இவான் ஷல்ட்டஸ்,  அமேசான் காட்டிற்கு வருகிறார். அவரும் அதே போன்றதொரு  தாவரத்தை தேட கரமகட்டேவை சந்திக்கிறார்.

முதிய வயதில் இந்த பயணத்தை தொடங்குகிறார் கரமகட்டே. இந்த பயணங்களின் இடையே, அமேசான் காட்டின் அழகை விவரித்துக்கொண்டே செல்லும் கேமரா, பின்பு அமேசான் காடுகளை மொத்தமாக அழித்துவிட்டு, அங்கு ரப்பர் தோட்டங்களை நிறுவ ஆசைப்பட்ட ஐரோப்பியர்களால் எப்படி அமேசான் சிதைந்தது என்பதையும் காட்டுகிறது. ரப்பர் தோட்டங்களை நிறுவி, காடுகளை அழித்ததோடு, அந்த மண்ணின் மக்களையும் அங்கிருந்து விரட்டி, கொத்துக்கொத்தாக மக்களை கொன்று தீர்த்தது, அமேசானின் பிள்ளைகளாக வாழ்ந்து வந்த, அந்த இனமக்களை அதே காட்டில் கொத்தடிமையாக்கியது என இதுவரை பேசப்படாத வரலாறையும், அறியப்படாத அமேசானின் முகத்தையும் ஒருசேர காட்டுகிறது படம்.

அந்த விஞ்ஞானிகளின் பயணம் என்ன ஆனது? அந்த கடைசி மனிதன் கரமகட்டே என்ன ஆனார்? போன்ற முதல்பாதி கேள்விகளை, வரலாறோடு சேர்த்து, இரண்டாம் பாதியாக்கி இருக்கிறார் சிரோ கியூரா. அமேசான் காடு, பழங்குடியின மக்களின் வாழ்க்கை, வரலாற்றுக்கதை என ஒளிப்பதிவில் வர்ணஜாலம் நிகழ்த்த வாய்ப்புகள் இருந்தும், படம் முழுவதையும் கருப்பு-வெள்ளையிலேயே படமாக்கியிருக்கிறார்கள்.

சவால்கள் நிறைந்த இந்த படத்தினை பற்றி பகிர்ந்து கொள்கிறார் சிரோ.

“ அமேசான் காட்டைப்பற்றிதான் படம் எடுக்கப்போகிறோம் என்பதை முதலில் முடிவு செய்துவிட்டேன். எனவே அவற்றை பற்றி நிறைய விஷயங்களை தேட முடிவு செய்தேன். உலகில் எல்லாருக்குமே அமேசான் காடுகள் என்றால், ஓரளவுக்குத்தான் தெரியும். பிரேசில் நாட்டு மக்களுக்கு கூட, அதைப்பற்றி  அவ்வளவு தெரியாது. எனவே அமேசான் பற்றி வரலாறுகளில் தேடினேன். அப்போதுதான் அமேசான் காட்டிற்கு சென்று, அங்கேயே ஆராய்ச்சி மேற்கொண்டு, வாழ்ந்த அந்த இரண்டு விஞ்ஞானிகள் பற்றி தெரிந்தது. அவர்களின் டைரிக்குறிப்புகளையே அமேசானின் முந்தைய நூற்றாண்டு பதிவாக எடுத்துக்கொண்டேன். அதே சமயம் யாருமறியாத, ஒரு கதையை சொல்லப்போகிறோம் என்ற போது, அதில் பிழைகள் வந்துவிடாது இருக்க நிறைய ஆராய்ச்சிகளும் செய்து, வரலாற்றை உறுதிப்படுத்தி கொண்டேன். அந்த வரலாற்றை தப்பாமல் எடுத்துக்கொண்டு, கதைக்கு தேவையான கற்பனை அம்சங்களையும் சேர்த்து, கதையின் கதாபாத்திரங்களை உருவாக்கினேன்.  இப்படித்தான் கதை தயார் ஆனது.

இதில் நடிக்க வைக்க, அமேசான் பகுதியில் தற்போது வாழ்ந்து கொண்டிருக்கும் பழங்குடியின மக்களையே பயன்படுத்தலாம் என நினைத்து, காடுகளுக்குள் பயணம் செய்தேன். சில மக்களை சந்திக்க முடிந்தது. அவர்களிடம் படம் பற்றி எடுத்து சொன்னவுடன் எந்த தயக்கமும் இன்றி, அவர்கள் நடிக்க முன்வந்தனர். அவர்களின் ஒரே கோரிக்கையாக இருந்தது, அவர்களுக்கு உண்மையாக இருக்க வேண்டும் என்பதுதான். அந்த மக்களுக்கு நடிப்பு கற்றுக்கொடுக்க வேண்டும் என்பதற்காக மூன்றுமாதங்கள்  பயிற்சி அளித்தோம்.

 அவர்கள் இயற்கையாகவே சிறந்த புத்திசாலிகள். ஒரு விஷயத்தை கேட்டவுடன் புரிந்து கொண்டனர். இன்றும் கூட, இயற்கையின் மீது மிகுந்த நம்பிக்கை வைத்திருக்கின்றனர். மரங்கள் , விலங்குகள் எல்லாம் சக்தி கொண்டவை என நம்புகின்றனர். அவைதான் பூமியை இன்னும் காப்பாற்றுகின்றன, சக்தியளிக்கின்றன என்பவற்றில் நம்பிக்கை கொண்டவர்களாக இருக்கின்றனர். நானும் அவர்கள் நம்பிக்கையை மதிக்கிறேன். காற்றை நம்மால் காண முடியாது. மனித சிந்தனைகளை கண்ணால் காண முடியாது. ஆனால் இரண்டுமே இருக்கிறதுதானே? அது போல, அவர்கள் நம்பிக்கையும் உண்மையாக இருக்கலாம். படப்பிடிப்பு நடந்த எல்லா நாட்களும் நாங்கள் இயற்கையோடு ஒன்றி வாழ்ந்தோம். அவர்கள் எங்களுக்கு இயற்கையை கற்றுத்தந்துவிட்டனர். அமேசான் பகுதிகளில் வாழும், மொத்தம் 60 பழங்குடியின மக்களை படத்தில் நடிக்க வைத்தோம்.

அதே போல, அமேசான் பழங்குடியின மக்களின் அழிவுக்கு காரணமாக அமைந்தது ரப்பர் தொழிற்சாலைகள். ஐரோப்பியர்கள் இதற்காக ஏராளாமான காட்டை அழித்தும், மக்களை கொன்றும், ஒரு லட்சத்திற்கும் மேலான மக்களை அடிமையாக்கியும் வைத்திருந்தனர். வரலாற்றில் நடந்த பெரும் துயரங்கள் இவை. இன்றைக்கு துபாய் எந்தளவு, செல்வ செழிப்பான நகரமாக இருக்கிறதோ, அப்படி இருந்தது அன்றைய பிரேசிலின் மனாஸ் நகரம். தற்போதைய பெட்ரோலை போல விலைமதிப்பானதாக அப்போது இருந்தது ரப்பர். அதனை இந்த படத்தில் பதிவு செய்யும் வகையில், எனது கதையை அமைத்தேன். இந்த கதையை பார்த்து அதற்கான வண்ணங்களை ரசிகர்களே உருவாக்கிக்கொள்ள வேண்டும் என்பதற்காகத்தான் படம் முழுக்க, கருப்பு-வெள்ளையில் பதிவு செய்தோம்.

வண்ணப்புகைப்படங்களை விட, கருப்பு- வெள்ளை புகைப்படங்கள் அதிக தாக்கத்தை ஏற்படுத்தும். அப்படி, கதாபாத்திரங்களின் நிறத்தையும், ரசிகர்களின் கற்பனைக்கே விட்டிருக்கிறேன். பல சமயங்களில் படத்தின் காட்சியை விட, அதோடு ஒன்றிப்போகும் பார்வையாளர்களின் கற்பனைகளே மனதிற்கு நெருக்கமாக இருக்கும்” என்கிறார் சிரோ.

இப்படி உலகின் பேசப்படாத வரலாற்றின் பக்கங்கள் இன்னும் நிறைய இருக்கின்றன..!

0 comments:

Post a Comment