Friday 22 January 2016

மணல் கயிறு பாகம் 2 – அப்படின்னா ‘அந்த’ எட்டு கண்டீசன் என்னான்னு தெரியணுமா?

‘குடும்பம் ஒரு கதம்பம்’ என்ற படத்தில் இயக்குனராக அறிமுகமான விசு, இயக்கிய இரண்டாவது படம் ‘மணல் கயிறு’. கடந்த 1982ஆம் ஆண்டு வெளிவந்த இந்த திரைப்படம் தமிழகத்தில் சூப்பர் ஹிட் ஆகியது. எஸ்.வி.சேகர், விசு, கிஷ்மு, மனோரமா, சாந்தி கிருஷ்ணா, கமலா காமேஷ் மற்றும் பலர் நடித்த இந்த படத்தின் இரண்டாம் பாகத்தை தயாரிக்க இருப்பதாக நடிகர் எஸ்.வி.சேகர் கூறியிருந்ததபடி ஷூட்டிங்கை தொடங்கி விட்டார்

‘மணல் கயிறு’ படத்தில் எஸ்.வி.சேகர் திருமணத்திற்கு முன் போடும் எட்டு கண்டிஷன் கள்தான் படத்தின் கதை.இரண்டாம் பாகத்தில் ஒரு பெண் தனக்கு எப்படிப் பட்ட மாப்பிள்ளை வேண்டும் என்று போடும் எட்டு கண்டிஷன்கள்தான் படத்தின் கதை என்று கூறப்படுகிறது. தற்போதைய கால கட்டத்தில் ஆண்கள் கண்டிஷன்கள் போடும் நிலையில் இல்லை என்பதால் இந்த படத்தின் கதையை இவ்வாறு மாற்றியதாக எஸ்.வி.சேகர் கூறியுள்ளார்.

சாப்ட்வேர்ல வேலை பார்க்கற பொண் போட்ட கண்டிஷன்ல அவுங்க அப்பா கிட்டுமணி ,அம்மா உமா கதி கலங்கி நம்ம நாரதர் நாயுடு கிட்ட கூப்பிட்டு வராங்க. அந்த பொண்ணுக்கு ஏதாவது பேரு வைக்கணுமே.வித்யான்னு வெச்சிடுவோம்.

நாரதர் நாயுடு: வாம்மா வித்யா. நீ போட்ட கண்டிஷன்ல உங்க அப்பா, அம்மாக்கு ஒரு மாசமா சாப்பாடே இறங்கலயாமே.எங்க அந்த கண்டிஷனெல்லாம் எங்கிட்ட சொல்லும்மா. நான் நல்ல பையனா பாக்கறேன்.

வித்யா: நான் MCA படிச்சிருக்கேன்.

நா.நா: அதுக்கென்னம்மா. ஒரு நல்ல இஞ்சினியர் படிச்ச பையனா பார்த்துடலாம்.

வித்யா: BE படிச்ச பையனா? அது UG தானே. நான் PG படிச்சிருக்கேனே.

நா.நா: சரிம்மா. ME படிச்ச மாப்பிள்ளையா பார்த்துடுவோம்.

வித்யா: ME MCAவைவிட பெரிய படிப்புனு என்னை மட்டம் தட்டுவாரே.

நா.நா: சரிம்மா. அப்ப MCA படிச்சவரே பார்த்துடலாம்.

வித்யா:எனக்கு சமமா மாப்பிள்ளை பார்த்தா,என் மதிப்பு குறைஞ்சிடுமே.

நா.நா: என்னம்மா, BE படிச்ச மாப்பிள்ளைனா வேண்டாங்கற, ME, MCAவும் வேண்டாங்கிற.அப்ப என்ன தான் படிச்சிருக்கனும்.

வித்யா: PG பண்ணிருக்கனும். ஆனா அது 6 வருஷ கோர்ஸா இருக்க கூடாது. MSc Software,Engineering இந்த மாதிரி ஏதாவது 5 வருஷம் படிச்சிருக்கனும்.

நா.நா: முதல் கண்டிஷனே சூப்பரா இருக்குமா. அடுத்து..?

வித்யா: எனக்கு என் கேரியர் தான் முக்கியம்!

நா.நா: டிபன் கேரியரா? நல்லதா பார்த்து வாங்கி தர சொல்றேன்.

வித்யா: அங்கிள். நான் சொல்றது என்னோட ப்ரஃபஷன். எந்த காரணத்துக்காகவும் என்னை வேலையை விட சொல்லக்கூடாது.

நா.நா: சரிம்மா. அதுக்கென்ன, வேலைக்கு போற பொண்ணு வேண்டும்னு சொல்ற மாப்பிள்ளையை பார்த்துட்டா போகுது.

வித்யா: அப்படி கண்டிஷன் போடற மாப்பிள்ளை எல்லாம் வேண்டாம். இப்படி சொல்ற மாப்பிள்ளை நாளைக்கே மாற வாய்ப்பிருக்கு. அவர் இஷ்டப்படறார்னு எல்லாம் நான் வேலைக்கு போக முடியாது. என் இஷ்டப்படி தான் நான் வேலைக்கு போவேன்.

நா.நா: சரிம்மா. உன் இஷ்டப்படி விடற மாப்பிள்ளையே பார்த்துட்டா போச்சு.

வித்யா: கண்டிஷன் நம்பர் 3. பையன் என் கண்ணுக்கு பாக்கறதுக்கு சல்மான் கான் மாதிரி தெரியனும், பேசறதுல ஷாருக்கான் மாதிரி இருக்கனும், டேலண்ட்ல அமிர்கான் மாதிரி இருக்கனும். ஆனா மத்தவங்க கண்ணுக்கு பார்க்கறதுக்கு விஜய் மாதிரி தெரியனும், பேசறதுல அஜித் மாதிரி தெரியனும், டேலண்ட்ல ரவி கிருஷ்ணா மாதிரி இருக்கனும்.

நா.நா : மொத்ததுல உன் கண்ணுக்கு ரெமோவா தெரியனும். மத்தவங்க கண்ணுக்கு மண்ணு லாரில ஆக்ஸிடெண்ட் ஆன சுமோவா தெரியனும். அப்படித்தானே?

வித்யா : ஆமாம். மாப்பிள்ளைக்கு குறைஞ்சது ஒரு 7-8 பேருக்காவது Non-Veg சமைக்க தெரியனும். ஏன்னா என் ஃபிரெண்ட்ஸ் எல்லாரும் வீக் எண்ட் வீட்டுக்கு வருவாங்க. அவுங்களுக்கு எல்லாம் டேஸ்டா சமைக்க தெரியனும். நானும் பக்கத்துல
நின்னுட்டு ரெசிப்பி எல்லாம் படிச்சி கைடன்ஸ் பண்ணுவேன். அதனால பயப்பட வேண்டாம்.

நா.நா: ஹிம்ம்ம்… கேஷ்மீரீ பிரியாணில இருந்து செட்டிநாடு சிக்கன் வரைக்கும் செய்ய தெரிஞ்ச பையனா பிடிச்சிடுவோம்.

வித்யா: கண்டிஷன் நம்பர் 5. பையனுக்கு அமெரிக்கன் அக்செண்ட்ல பேச தெரிஞ்சிருக்கனும்.

நா.நா: ஏம்மா. நீ என்ன கால் சென்டருக்கா ஆள் எடுக்கற? விட்டா மதர் டங் இண்ஃப்ளூவன்ஸ் எல்லாம் இருக்க கூடாதுனு சொல்லுவ போல.

வித்யா: அதெல்லாம் இல்லை அங்கிள். இந்த தடவை எப்படியும் எனக்கு விசா கிடைச்சிடும். அங்க போனா கம்பெனில நான் எப்படியும் சமாளிச்சிக்குவேன். ஆனா பார்ட்டிக்கெல்லாம் கூப்பிட்டு போனா அக்சண்ட்ல பேசனா தான் பெருமையா இருக்கும்னு சொல்லி கேள்விப்பட்டிருக்கேன்.

நா.நா: சரிம்மா. நம்ம சப்போர்ட்ல இருக்கற பையனா பார்த்து பிடிச்சிடுவோம் அடுத்த கண்டிஷன சொல்லு.

வித்யா: கண்டிஷன் நம்பர் 6. எந்த காரணத்தை கொண்டும் என்னை டிபண்டண்ட் வீசால கூப்பிட்டு போக முயற்சி பண்ணக் கூடாது.எனக்கு வீசா கிடைச்சா அவர் விருப்பப்பட்டா என் கூட டிபண்டண்ட் வீசால வரலாம். அதுல எனக்கு எதுவும் பிரச்சனையில்லை.

நா.நா: சரிம்மா. உனக்கு தான் விசா கிடைச்சிடுமே. அப்பறம் என்ன?

வித்யா: இப்பவெல்லாம் விசா, லாட்ல பிக் அப் பண்றாங்க. எனக்கு கிடைக்காம போகவும் வாய்ப்பிருக்கு. அதான்.

நா.நா: சரிம்மா. உன் கூடவே வர மாப்பிள்ளையையா பார்த்துடுவோம்.

வித்யா: இது தான் ரொம்ப முக்கியமான கண்டிஷன். நான் கொஞ்ச ஜாலி டைப். அதனால என் டீம்ல இருக்கற ஃப்ரெண்ட்ஸ் எல்லாம் எனக்கு அடிக்கடி கால் பண்ணுவாங்க. அதை தப்பா நினைக்கக்கூடாது.

நா.நா: உன் பிரெண்ட்ஸ் கூட நீ பேசறதால என்னமா பிரச்சனை. உன் பிரெண்ட்ஸ் கூட அவர் அதிகமா பேசினா தானே பிரச்சனை.

வித்யா: அங்கிள். நான் சொல்ற பிரெண்ட்ஸ் எல்லாம் பசங்க. என்னைக்கு பொண்ணுங்க, மத்த பொண்ணுங்களுக்கு செலவு பண்ணி ஃபோன்ல பேசுவாங்க. எப்பவும் பசங்க தான் செலவு பண்ணி ஃபோன் பேசி, ஜாலியா மொக்கை போடுவாங்க.

நா.நா: சரிம்மா. நீ உன் பசங்க பிரெண்ட்ஸ் கிட்ட பேசும் போது பிரச்சனை பண்ணாம, அந்த பையனை அவனோட பிரெண்ட்ஸ் கிட்ட பேச சொல்லிடுவோம்.

வித்யா : நாங்க இந்தியால இருக்கற வரைக்கும் அவுங்க அப்பா, அம்மா எங்க வீட்டுக்கு சனிக்கிழமை ஃபுல் டே வந்து தங்கிட்டு போகலாம். ஆனா என்னை சமைக்க சொல்லக் கூடாது.

நா.நா : இது ஒரு கண்டிஷனாம்மா. முதல் வாரம் நீ சமைச்சு போட்டா அவுங்க உன் வீட்டு பக்கமே தலை வைக்க மாட்டாங்க. இன்னும் ஏதாவது இருக்கா?

வித்யா: இது தான் கடைசி கண்டிஷன். எங்க ரெண்டு பேருக்கும் ஏதாவது பிரச்சனை வந்து டைவர்ஸ் ஆகிடுச்சினா

நா.நா: ஏம்மா இப்படி அபசகுனமா பேசற. வாய கழுவும்மா.

வித்யா: இருங்க அங்கிள் சொல்லி முடிச்சிடறேன். ஏதாவது பிரச்சனை வந்து டைவர்ஸ் ஆகிடுச்சுனா அவர் கண்டிப்பா வேற கல்யாணம் பண்ணிக்கனும்.

நா.நா: இங்க தாம்மா. இங்க தாம்மா. நீ தமிழ் பொண்ணுனு நிருபிக்கற.

வித்யா: அதெல்லாம் இல்லை அங்கிள். அதுக்கப்பறம் அந்த பையன் எப்படி சந்தோஷமா இருக்கலாம். அதான்

நா.நா மயக்கம் போட்டு விழுகிறார்..

முதல் பாகத்தில் நடித்த அனைத்து நடிகர்களையும் இரண்டாவது பாகத்தில் நடிக்க வைக்க தான் முடிவு செய்துள்ளதாகவும், அந்த படத்தில் நடித்த கிஷ்மு தற்போது உயிரோடு இல்லை என்பதால் அவருடைய கேரக்டரில் நடிக்க ஒரு பெரிய நடிகரிடம் பேச்சுவார்த்தை நடந்து வருவதாகவும் எஸ்.வி.சேகர் கூறியுள்ளார்.

0 comments:

Post a Comment