Saturday 23 January 2016

கமல், ரஜினி அலையில் தாக்குப்பிடித்த நாயகர்கள்! 80களின் சினிமா

 ‘ஜப்பானில் கல்யாணராமன்’ படத்தின் க்ளைமாக்ஸ் சண்டைக் காட்சி. கப்பலில் இருந்து கீழே விழும் நாயகன் கமல் ஹாசன், வில்லன் சத்யராஜின் கால்களில் சிக்கியுள்ள கயிற்றைப் பிடித்து மேலே ஏறுவார். ‘‘இவ்ளோ பெரிய ஹீரோ. வில்லனில் உதவியோடு ஏன் மேலே ஏற வேண்டும்” என்று படம் வெளியான 1985 ல் கமல் ரசிகர்கள் கேள்வியை எழுப்பினர். நிகழ்ச்சி ஒன்றில் கலந்துகொள்ள வந்த கமலிடம் அப்போது அதற்கு விளக்கம் கேட்கப்பட்டது. ‘வில்லனாக நடித்திருந்தாலும் சத்யராஜ் மீது எனக்கு எப்போதுமே நம்பிக்கை உண்டு.

நிஜ வாழ்க்கையில் அவரை ஒரு தன்னம்பிக்கை நிறைந்த மனிதராகத்தான் பார்க்கிறேன். அந்த நம்பிக்கைதான் அந்தக் காட்சியைப் படமாக்கும்போதும் எனக்கு வந்தது” என்று சொன்னார். அதே நம்பிக்கையோடுதான் அடுத்தடுத்த ஆண்டுகளில் ராஜ்கமல் இண்டர்நேஷனல் பிலிம் தயாரிப்பில் தான் எடுத்த ‘விக்ரம்’, ‘கடமை கண்ணியம் கட்டுப்பாடு’ ஆகிய படங்களில் சத்யராஜுக்கு அழுத்தமான கதாபாத்திரங்கள் கொடுத்தார் கமல்.

இப்படிப்பட்ட காலகட்டம்தான் தமிழ் சினிமாவின் எண்பதுகளின் கட்டம். திரைத்துறையில் நம்பிக்கை அதிகமாகவும் பொறாமைக் குணம் குறைவாகவும் நிரம்பியிருந்த காலம் அது.

எம்.ஜி.ஆர்., சிவாஜியை அடுத்து அதே வரிசையில் ரஜினி, கமல் இருவரும் முன்னணி நாயகர்களாக ஒரு இடத்தை உருவாக்கி அதைத் தக்கவைத்துக்கொள்ளப் போராடிக்கொண்டிருந்த நேரம். அப்போது சத்யராஜ், விஜயகாந்த், கார்த்திக், பிரபு, மோகன், முரளி ஆகியோரும் களத்தில் இருந்தனர். ஒவ்வொருவரும் ஒவ்வொரு பாணியைப் பின்பற்றினார்கள்.

ராஜாவின் இசை

சமூகம் சார்ந்த படங்கள் வந்து கொண்டிருந்த காலகட்டத்தில் கதையின் கோணத்தை மாற்றி குணச்சித்திர விஷயங்களைச் சேர்த்து கதாபாத்திரங்களுக்கு முக்கியத்துவம் கொடுக்கும் படங்களை ஏவி.எம், கவிதாலயா உள்ளிட்ட சில நிறுவனங்கள் கையில் எடுத்தன. அந்த நிறுவனங்களின் படங்களில் ரஜினி, கமல் இருவரில் ஒருவர் இடம் பிடித்தது அப்போதைய மற்ற நடிகர்களுக்கு கிடைக்காத ஒரு வாய்ப்பு என்றே சொல்லலாம்.

இசையமைப்பாளர் இளையராஜா ‘பிரியா’ படத்தில் ‘ஸ்டீரியோ போனிக்’ என்ற புதிய தொழில்நுட்ப இசையைப் புகுத்தி தனது இசையில் குறிப்பிட்ட சில வித்தியாசமான சத்தங்களை கொண்டு வந்தார். கதை, கதாநாயகர்களுக்கு இணையாக இளையராஜாவின் இசைக்கு மவுசு ஏற்பட்டது. மோகன், முரளி, ராமராஜன் மாதிரியான நாயகர்களின் படங்கள் இளையராஜாவின் இசை அமைந்தாலே படம் ஹிட் என்ற நிலைமை இருந்தது.

புதியவர்களை நம்பிய விஜயகாந்த்

தனக்கு அமையும் கதைகளில் மனதுக்குப் பிடித்தமான கதைகளைத் தேர்வு செய்து நடித்து வந்த விஜயகாந்த் ஒருகட்டத்தில் ஆபாவாணன், ஆர்.கே. செல்வமணி மாதிரியான ஜெயிக்க வேண்டும் என்று வந்த புதிய இயக்குநர்களைத் தன் பக்கம் இழுத்துக்கொண்டார். அதனால்தான் ‘செந்தூரப்பூவே’, ‘ஊமை விழிகள்’, ‘புலன் விசாரணை’ மாதிரியான படங்களைக் கொடுத்துத் தனித்து நின்றார். ரஜினிக்கு இணையாகப் பேசவும் பட்டார்.

நடிகர் மோகன் படங்களில் அவரது மேனரிஸம்தான் ஸ்பெஷல். ‘நம் பக்கத்து வீட்டுப் பையன் மாதிரிப்பா..!’ என்று அந்த நாட்களில் அவரும் ஒரு பட்டாளத்தைச் சேர்த்தார். அவரது படங்களுக்கு இளையராஜா பெரிய பலம். ‘குங்குமச் சிமிழ்’, ‘மௌனராகம்’, ‘உதய கீதம்’ இவை மோகனின் வெற்றிப் பட்டியலில் முக்கியமான படங்கள்.

சத்யராஜிடம் இருக்கும் தனித்துவம்தான் அவரது இன்றளவும் திரைப்பயணத்தைத் தீர்மானித்து வருகிறது. பார்வை, நக்கலான பேச்சு, எந்தக் கதாபாத்திரத்தையும் ஏற்கும் துணிச்சல்தான் இப்போதும் ஆடுகளத்தில் நின்றுகொண்டிருக்கிறார். அவரைப் பட்டை தீட்டியவர்களில் இயக்குநர் மணிவண்ணன் முக்கியமானவர். அதை சத்யராஜ் பல இடங்களில் பதிவு செய்துவருகிறார். படத்தின் பட்ஜெட், சூழல் உணர்ந்து சம்பளம், கால்ஷீட் உள்ளிட்ட விஷயங்களில் கெடுபிடி இல்லாமல் தன்னை இயக்குநர்களுக்கு அர்ப்பணிப்பவர். தயாரிப்பாளர்களுக்குப் பிடித்தமான நடிகரும்கூட.

அப்பாவின் பிள்ளைகள்

பாரதிராஜாவின் ‘அலைகள் ஓய்வதில்லை’ படத்தின் வெற்றியால் உயரம் கண்டவர் கார்த்திக். அந்தப்படம் வெளியான அந்தக் காலகட்டத்தில் பதின் வயதினர் பலரும் தங்களை ‘அலைகள் ஓய்வதில்லை’ படத்தில் வந்த விச்சுவாகவும், மேரியாகவும்தான் நினைத்துக்கொண்டனர். அந்த வெற்றியில் இளையராஜாவின் பங்களிப்பு அதிக கார்த்திக்கைப் போல அப்பாவின் நிழலில் நின்று வளர்ந்த மற்றொரு நாயகர் பிரபு.

சிவாஜியுடன் சேர்ந்து நடித்துக்கொண்டிருந்த வரைக்கும் பெரிதாக அடையாளம் எதுவும் இல்லை. ‘அக்னி நட்சத்திரம்’, ‘நினைவுச் சின்னம்’, ‘சின்னதம்பி’ மாதிரியான படங்கள் அவருக்குத் திருப்புமுனை. சின்ன வயதில் சிவாஜியைப் பார்த்த மாதிரி இருக்கிறார் என்றே பலரும் சொன்னார்கள்.

ரஜினி கமல் நட்பும் ராஜ்யமும்

இன்றைய இளம் தலைமுறை விஜய், அஜித் ரசிகர்களுக்குள் நேரடியாகவும், சமூக வலைத்தளங்கள் வாயிலாகவும் வாக்குவாதங்கள் எப்படி நடக்கிறதோ, அதேபோல எம்.ஜி.ஆர்., சிவாஜி ரசிகர்களுக்குள் அந்தக் காலகட்ட பின்னணியில் சண்டைகளும், சர்ச்சைகளும் இருக்கவே செய்திருக்கிறது. அதுவே ரஜினி, கமல் இருவரது ரசிகர்களுக்குள் சண்டை வந்ததில்லை.

அதற்கு முக்கியக் காரணம், தனித்தனிப் பாதையைத் திரையில் வகுத்துக்கொண்டதுடன், மேடையில் அவ்வப்போது இருவரும் ஒன்றாகச் சேர்ந்து, ‘நாங்கள் மிக நெருக்கமான நண்பர்கள். நீங்களும் அப்படித்தான் இருக்க வேண்டும்’ என்று பதிவு செய்து வந்தனர். அதை இன்றைக்கும் கடைப்பிடித்து வருகிறார்கள்.

எந்த மாதிரியான கதையைத் தேர்வு செய்ய வேண்டும், தன்னை யார் இயக்க வேண்டும், எந்த நிறுவனத்துக்குப் படம் பண்ண வேண்டும் இப்படி எல்லாவற்றையும் திட்டமிட்டுக்கொண்ட ரஜினி, கமல் இருவரும், தாங்கள் வளந்துவரும் போதே தனக்கான ரசிகர் பட்டாளத்தையும் வளர்த்தெடுத்தார்கள். ‘மாஸ்’ ஹீரோ என்ற அடையாளத்தைப் பெற்ற பிறகும் அதைச் செய்தார்கள். அந்தக் காலகட்டத்தில் உதித்த மற்ற ஹீரோக்கள் அதைச் சரியாகச் செய்தார்களா என்றால் இல்லை. படம் நடிப்பது மட்டுமே இலக்காகக் கொண்டதோடு சரி. ஆனால், ரஜினி, கமல் இருவரும் ரசிகர்களுக்கான படங்கள் கொடுப்பதில் தெளிவாக இருந்தனர்.

குறிப்பாகத் தங்களை நேசிக்கும் ‘ஏ; ‘பி’ அன்ட் ‘சி’ வரிசை ரசிகர்களுக்கான படங்களை மாறிமாறிக் கொடுப்பதிலும், அதற்கான அதிகம் மெனெக்கெடு வதிலும் நேரம் செலுத்தினார்கள். இந்த ரசிகர்கள் பட்டாளமே அவர்களது படங்களின் வியாபார வளர்ச்சிக்குப் பெரிய பாலமாகவும் இருந்தது.

இன்றளவும் அந்த ‘மாஸ்’ சமஸ்தானம் இருக்கவும் செய்கிறது. அப்படிப்பட்ட ரஜினி- கமல் என்கிற இருபெரும் நட்சத்திரங்களின் அலையில் தாக்குப்பிடித்து நின்ற சத்யராஜ், விஜயகாந்த், மோகன், முரளி, கார்த்திக், பிரபு ஆகியோர் அதன் காரணமாகவே திரை வரலாற்றிலும் இடம்பிடித்திருக்கிறார்கள்.

0 comments:

Post a Comment