Thursday 25 February 2016

‘ஒப்புக்கொன்னாரா?” - விசாரணை பாணியில் பாரதிராஜாவும் மாட்டிக்கொண்ட கதை

நேற்று  பிரசாத் ஸ்டுடியோவில் நடைபெற்ற விசாரணை படம் குறித்த கருத்துரைக்கு, இயக்குநர் இமயம் பாரதிராஜா கலந்து கொண்டு தலைமை தாங்கினார். படத்தை வெகுவாகப் பாராட்டிய அவர், ‘வெளில வந்ததும்.. ச்சே நாம்ள்லாம் என்ன படம் எடுத்திருக்கோம்’ என்று நினைக்க வைத்துவிட்டார் வெற்றிமாறன் என்றார்.

அவர் பேசுகையில் தான் போலீஸ் ஸ்டேஷன் சென்ற அனுபவத்தைப் பகிர்ந்து கொண்டது பார்வையாளர்களை வெகுவாகக் கவர்ந்தது.

"அப்ப ஜெமினில அசிஸ்டெண்ட்டா வேல செஞ்சிட்டிருந்தேன். அப்பவே இங்க்லீஷ் படிக்கணும்னு ஆசைல அமெரிக்கன் லைப்ரரி போவேன். மொத்தமா இருபத்தஞ்சு பைசாதான் இருக்கும். அங்கிருந்து ரெண்டு புக் எடுத்துட்டு தேனாம்பேட்டை டிக்கெட் கேட்கறேன். பத்து பைசா. ’டென் என்பி ஒண்ணு குடுங்க’ன்னேன். கண்டக்டர் ’ட்வெண்டி என்.பி டிக்கெட் குடுத்துட்டார். இருந்ததே 25 காசுதான்னு எனக்கு கோவம். ’என்ன டென் NP கேட்டா, ட்வெண்டி NP டிக்கெட் குடுத்துட்டீங்க?’ன்னு கேட்டேன். கண்டக்டர் கோவமா ‘என்ன டென் NP? பெரிய இங்க்லீஷ் படிச்சவரு! பத்து காசுன்னு கேட்க மாட்டியா’ ன்னு கேட்டார். ‘நான் மடத்தனமாப் பேசாதய்யா’ன்னுட்டேன். அப்டியே சண்டை பெரிசாகி, கண்டக்டரை அடிச்சுட்டேன்.

டக்னு பஸ்ஸை பாண்டிபஜார் போலீஸ் ஸ்டேஷனுக்கு விட்டுட்டாங்க. ஒரு பெரியவர் மட்டும் ‘நான் இருக்கேன்யா.. உன் பக்கம் கொஞ்சம் நியாயம் இருக்கு’ன்னு வந்தார். ஆனாலும் கேஸ் போட்டுட்டாங்க. நம்ம சினிமாலதான் கோர்ட், ஸ்டேஷன்லாம் பார்த்திருக்கோம். என்ன பண்ணுவாங்கன்னு தெரியலையேன்னு உட்கார்ந்திருந்தேன். அந்த இன்ஸ்பெக்டர் நல்லவரு, ‘அடிச்சேன்னு சொல்லாத. பாதுகாப்புக்கு கையால தடுத்தேன்’னு எழுது’ன்னார். எழுதினேன். வெளில உன்னை அடிக்க ஆளுக நிக்கறாங்கன்னு சொல்லி, ஜீப்ல என்னை இறக்கிவிட ஏற்பாடு பண்ணினார். ’ரெண்டு நாள் கழிச்சு வாங்க.. கிழிச்சுப் போட்டுடலாம்னார். ரெண்டு நாள் கழிச்சுப் போனா.. அந்த இன்ஸ்பெக்டரை மாத்திட்டாங்க.

அது வேறொரு பிரச்னை. ஒரு கோவில்ல புதுசா புள்ளையார் மொளைச்சு, அவரு பால் குடிக்கறார்னு வதந்தி பரவி, அந்தப் பிரச்னைல அவரை மாத்திட்டாங்க. நானும் விட்டுட்டேன்.

மூணு மாசம் கழிச்சு, கங்கை அமரன் ஏதோ கவர் வந்திருக்குன்னு கூப்டான். பார்த்தா, கோர்ட்ல இருந்து சம்மன். சைதாப்பேட்டை கோர்ட்டுக்கு வரச்சொல்லி. லாயர்லாம் பார்க்கல நாங்க. நாமதான் பராசக்தி பார்த்திருக்கோமே! ‘நீதிமன்றம் விசித்திரமான பல வழக்குகளை’ன்னு ஆரம்பிச்சு இந்த கண்டக்டர் என்னென்ன பண்ணினார்னான்னு அந்த ஜட்ஜுக்கு வெளக்கிரலாம்டான்னு நானும், இளையராஜா அண்ணன் பாஸ்கரும் போனோம். கோர்ட்ல என்னடான்னா எங்களை கூப்டவேல்ல. வெய்ட் பண்ணிப் பண்ணி, நேரமாகுதுன்னு ஒரு போலீஸ்கிட்ட கேட்டா, ‘வாய்யா.. ஒன்னத்தான் தேடிட்டிருந்தேன்’ன்னு கூட்டீட்டு போய் ஒக்கார வெச்சுட்டார். ‘கூப்பிடுவாங்க, போன உடனே பேசிர்றது’ன்னு நான் ரெடியா இருக்கேன்.

கூப்டாங்க.

போய் நின்னு, ‘ஐயா.. நடந்தது என்னன்னா’ன்னு நான் ஆரம்பிக்கறேன். ஜட்ஜ் என்னைப் பார்க்காம, குமிஞ்சுட்டே ‘ஆர் யு கில்ட்டி ஆர் நாட் கில்ட்டி?’ன்னு கேட்கறார்.

'இல்லய்யா.. வந்து நடந்தது என்னன்னா..’

“ஆர் யு கில்ட்டி ஆர் நாட் கில்ட்டி??”

“ஐயா... அது வந்து ஐ’ம் நாட் கில்ட்டி..’ன்னு ஆரம்பிக்கறதுக்குள்ள போலீஸ் என்னைப் பிடிச்சு இழுத்துடுச்சு. எனக்கு பக்னு ஆய்டுச்சு. ‘ஐயா அது என்னன்னான்னு பேசறேன். ஜட்ஜ் குமிஞ்சுகிட்டே தஸ் புஸ்னு ஏதோ எழுதி தூக்கிப் போடறார். என்னைக் கூப்டு உள்ள ஒக்கார வெச்சுட்டாங்க.

என்னன்னு கேட்டா, ‘ஒரு லாயர் இல்லாம நீ வெளில போகமுடியாது’ன்னுட்டாங்க. ‘என்னடா சொல்றானுக. நாம நியாயம் பேச வந்திருக்கோம்.. இவரென்ன வக்கீல் வந்துதான் எடுக்கணும்கறார்’ன்னு நெனைச்சேன். போலீஸ் வேற மெரட்டறாங்க. ‘இன்னும் அரை மணிநேரம் இருக்கு. வக்கீல் வர்லைன்னா உள்ள தள்ளீடுவோம்கறான். புக் படிக்க விடலை.  பெஞ்ச் விட்டு எந்திரிக்க விடலை. பசி வேற.

வக்கீல் வரணும்னா அவருக்கு இருவது ரூவா குடுக்கணும். இளையராஜா அப்ப ஏவிஎம்ல ரெகார்டிங்கல இருக்கார். சாயந்திரமானா ரெகார்டிங் முடிச்சு, அறுபது ரூவா கெடைக்கும். சரின்னு பாஸ்கரை அனுப்ச்சி எப்படியாவது காசு வாங்கிட்டு வரச்சொன்னேன். அப்பறம் இருவது ரூவா குடுத்து ஒரு வக்கீலை வெச்சு என்னை எடுத்தாங்க. என்னை யார்னே தெரியாது, ஆனா இருவது ரூவா வாங்கிட்டு இவனைத் தெரியும்னு கையெழுத்து போட்டு வெளில எடுத்தாங்க.

அப்பறம் ஆறுமாசம் வாய்தா வாய்தான்னு அலையவிட்டு, எவ்ளோ காசு செலவாச்சுன்னுகூட கணக்கில்ல. எங்க லாயர், ‘யோவ் கில்ட்டின்னு ஒத்துக்கய்யான்னு சொன்னார். என்னய்யா ஆறுமாசம் கழிச்சு இப்ப ஒத்துக்கய்யான்னா என்ன அர்த்தம்னு தோணிச்சு. சரின்னு கையக்கட்டி ‘ஆமங்கய்யா.. கில்ட்டிங்கய்ய்யா’ன்னேன். அம்பது ரூபா கட்டச் சொல்லி விட்டுட்டாங்க.

இப்ப ஏதோ வளர்ந்துட்டோம், இதைக் காமெடியாப் பேசறோம். ஒரு பாமரனா எனக்கு என்ன தெரியும்? விசாரணை படம் மாதிரி உள்ள கூட்டீட்டுப் போய் நொக்கு நொக்குன்னு நொக்கீருப்பாங்க”

இந்தக் கதையைச் சொல்லி படத்தைப் பாராட்டியவர் ‘எங்களுக்கு வயசாய்டுச்சுன்னு நெனைக்காதீங்க. நாங்களும் உங்களை ஜெயிக்க புதுசு புதுசா யோசிச்சுட்டு களத்துல இறங்கறோம் பாருங்க’ என்று வெற்றிமாறனுக்கு செல்லமாக சவாலும் விட்டார்.

0 comments:

Post a Comment