Sunday 17 January 2016

'தாரை தப்பட்டை'யை இன்னொரு பாலா படம் என்ற விதத்தில் வரவேற்கலாம்.

 பாலா இயக்கத்தில் வெளியாகும் ஏழாவது படம், குரு இயக்கத்தில் சிஷ்யர் சசிகுமார் நடிக்கும் முதல் படம், இளையராஜா இசையில் வெளியாகும் 1000-வது படம் என்ற இந்த காரணங்களே 'தாரை தப்பட்டை' படத்தின் மீதான எதிர்பார்ப்பை ஏற்படுத்தின.

பொதுவாக பாலா படமென்றால் வன்மம், குரோதம், கொடூரமாகப் பழிவாங்கும் படலம், குரல்வளையைக் கடித்து துப்புவது, ரத்தம் தெறிப்பது என்ற டெம்ப்ளேட் நிச்சயமாக இருக்கும்.

'தாரை தப்பட்டை' படத்துக்கு 'ஏ' சான்றிதழ் கொடுத்திருப்பதால், அதீத வன்முறை பீதியுடன் தயங்கியே தியேட்டருக்குள் நுழைந்தோம்.

'தாரை தப்பட்டை' படம் எப்படி?

சசிகுமார் சன்னாசி தாரை தப்பட்டை மற்றும் கரகாட்டக் குழுவை நடத்தி வருகிறார். அதில் முக்கிய அங்கம் வகிக்கும் கரகாட்டக்காரர் வரலட்சுமியை இன்னொருவருக்கு திருமணம் செய்து வைக்க முயற்சிக்கிறார். அந்த முயற்சி என்ன ஆனது? கரகாட்டக் கலைஞர்கள் என்ன ஆகிறார்கள்? என்பது மீதிக் கதை.

'போராளி' படத்தில் சசிகுமார் தோற்றத்தை பார்த்திருக்கிறோம். அதன் இன்னொரு முழுமையான தோற்றப் பரிமாணம்தான் சன்னாசி சசிகுமார். குழு தலைவனாக நடந்துகொள்வது, கோபத்தில் வார்த்தைகளை சிதற விடுவது, காதலில் கலங்குவது, நடந்ததை உணர்ந்து வெகுண்டெழுவது என தன் பங்களிப்பை சிறப்பாக வழங்கியிருக்கிறார்.

வரலட்சுமி சரத்குமார் நடிப்பிலும், கரகாட்டக்காரராக பேச்சு, உடல்மொழி, நடனத்திலும் பின்னி எடுக்கிறார். உன் பேரு என்ன? என்று கேட்கும்போது 'மிஸ்டர் சூறாவளி' என கெத்து காட்டுகிறார். நாயகனின் லாவகப் பேச்சு பிடிக்காமல் எட்டி உதைத்து தன் கோபத்தை வெளிப்படுத்தி நடிக்கத் தெரிந்த நடிகை என்பதை நிரூபித்திருக்கிறார். முதல் பாதி முழுக்க வரலட்சுமி தான் ப்ரொட்டாகனிஸ்ட் என்ற உணர்வை ஏற்படுத்துகிறார்.

ஜி.எம்.குமார் திறமையுள்ள கலைஞனாக, மிடுக்காகவும், அதே சமயத்தில் அழுத்தமாகவும் நடித்திருக்கிறார்.

கருப்பையா கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் தயாரிப்பாளர் சுரேஷ் (அறிமுகம்) இரு வேறு குணநலன் கொண்ட கதாபாத்திரங்களையும் சரியாக செய்திருக்கிறார். அமுதவாணன், காயத்ரி ரகுராம், அந்தோணி தாஸ், சதீஷ் கௌஷிக் ஆகியோர் பொருத்தமான தேர்வு.

இளையராஜாவின் இசையும், செழியனின் ஒளிப்பதிவும் படத்துக்குப் பெரும் பலம்.

வதன வதன வடிவேலனே என்ற மோகன் ராஜனின் பாடல் அறிமுகப் பாடலாய் கரகாட்டக் கலைஞர்களின் வாழ்வியலைப் பேசுகிறது. இளையராஜா எழுதி இசையமைத்த உள்ளம் என் கோயில் பாடலுக்கு தியேட்டரே மெய் சிலிர்த்தது. தேவையான இடங்களில் மட்டும் பின்னணி இசை அமைத்து ஆட்சி செலுத்திய விதத்தில் இளையராஜா ஈர்க்கிறார்.

கரகாட்டக் கலைஞர்கள் பின்புலத்தையும், அவல நிலையையும் செழியன் தன் கேமராவில் கடத்தி இருக்கிறார்.

கரகாட்டக் கலைஞர்களின் வாழ்வாதாரத்தைக் குறித்த நிலையை சொல்லும் திரைக்கதை வழக்கமான பாலா படமாக ஒரு கட்டத்தில் மாறும்போது தடுமாற்றமும், தடம் மாற்றமும் நிகழ்கிறது.

உணர்வுகளை உருக்கமும் நெருக்கமுமாகக் காட்டிய பாலா அதற்கடுத்த காட்சிகளில் வேறு திசையில் பயணிக்க வைக்கிறார். அது படத்துக்கு பெரிய பாதகத்தை ஏற்படுத்தவில்லை என்றாலும், இது டெம்ப்ளேட் தானே. இன்னும் ஏன் இதை பாலா விடாமல் வைத்துக்கொண்டு அடம்பிடிக்கிறார் என்ற கேள்வி எழாமல் இல்லை.

ஆனால், அந்த இடங்களில் இளையராஜா தன் இசையால் நிரப்பி சரி செய்ய முயற்சித்ததை சொல்லியே ஆக வேண்டும். சில இடங்களில் லாஜிக் மிஸ் ஆவதை மறுப்பதற்கில்லை.

அனுராக் காஷ்யப், ராஜ்குமார் ஹிரானி முதலான இந்திய சினிமாவின் முக்கிய இயக்குநர்கள் கண்டு வியக்கும் தமிழ் இயக்குநர் பாலா. ஒரு முக்கிய சினிமா படைப்பாளிக்கு காட்சிப்படுத்துதலில் தனக்குரிய பொறுப்பை உணர்ந்து செயல்பட வேண்டும் என்று மூத்தவர்கள் சொல்வது உண்டு. கொடூரமான வன்முறைக் காட்சிகளை பாலா படமாக்கும் விதம் மென்மேலும் கோரமாக உருவெடுத்து வருகிறது. அப்படிக் காட்சிப்படுத்துவதைவிட, ரத்தத்தைத் திரையில் தெளிக்காமல் - வன்முறையின் தாக்கத்தை ரசிகர்கள் துல்லியமாக உணரும் வகையிலான சினிமா மொழியைக் கையாள்வதே நல்ல உத்தியாக இருக்கும் எனத் தோன்றுகிறது.

நிஜ வாழ்வில் கலைஞர்கள் நிலையை திரையில் காட்டியதற்காகவும், மனிதத்தை கீழே விழாமல் பிடித்ததற்காகவும் இந்த 'தாரை தப்பட்டை'யை இன்னொரு பாலா படம் என்ற விதத்தில் வரவேற்கலாம். 

0 comments:

Post a Comment