Sunday 17 January 2016

பொங்கல் படங்கள் - வசூல் நிலவரம் என்ன ?

ஒவ்வொவரு புது வருடத்தின் ஆரம்பமும் திரையுலகத்தைப் பொறுத்தவரை பொங்கல் முதல்தான் தங்களது வசூல் கணக்கைத் துவக்குகிறது. இந்த வருடம் பொங்கலுக்கு ஒரு நாள் முன்னதாகவே போகிப் பண்டிகை அன்றே அனைத்துத் திரைப்படங்களும் வெளிவந்துவிட்டன. அதுவே அவற்றிற்கு ஒரு மைனஸ் பாயின்டாகவும் அமைந்துவிட்டது. பொங்கல் அன்றுதான் ரசிகர்களிடமும் ஒரு உற்சாகம் இருக்கும். அன்றுதான் அவர்களும் படம் பார்க்கும் ஆவலில் இருப்பார்கள். அதனால், ஒரு நாள் முன்னதாக இந்த வருடம் வெளிவந்த நான்கு படங்களும் முதல் தினத்தன்று பெரிய ஓபனிங்கைக் கொடுக்கவில்லை. 'ரஜினி முருகன்' படம் மட்டுமே ஓரளவிற்கு தியேட்டர்கள் நிறைந்தது. மற்ற படங்களுக்கு காலை காட்சிகளில் பாதி தியேட்டர் கூட நிரம்பவில்லை என்றுதான் தகவல்கள் வெளிவந்தன.

பொங்கல் தினத்தன்றும், நேற்று மாட்டுப் பொங்கல் தினத்தன்றும் 'ரஜினி முருகன்' படம் பெரும்பாலான தியேட்டர்களில் அரங்கு நிறைந்திருக்கிறது. அதற்கடுத்த இடங்களில் 'கதகளி, தாரை தப்பட்டை, கெத்து' ஆகிய படங்கள் இருந்ததாகத் தெரிவிக்கிறார்கள். நாம் முன்னரே சொன்னபடி 'ரஜினி முருகன்' படம் ஒரு முழுமையான பொழுதுபோக்குப் படமாக இருந்ததால் அந்தப் படத்திற்கு நல்ல வரவேற்பு கிடைத்து வருகிறது. இந்த மூன்று நாட்களில் சுமார் 10 கோடி ரூபாய் வரை படம் வசூலித்திருக்கும் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன. 'கதகளி' படம் இன்னும் விறுவிறுப்பாக எடுக்கப்பட்டிருந்தால் சிறப்பான வசூலைக் கொடுத்திருக்கும் என்றும் சொல்கிறார்கள். 'கெத்து' படத்திற்கு இவ்வளவு செலவு செய்து எடுத்தவர்கள், நல்ல கதையைத் தேர்வு செய்யவில்லை என்றும், 'தாரை தப்பட்டை' படம் பாலாவின் முந்தைய படங்களிலிருந்தே திரும்பவும் ஒரு படத்தை எடுத்திருக்கிறார் என்றும்தான் பேச்சுக்கள் வெளிவருகின்றன.

மொத்தத்தில் 'ரஜினி முருகன்' படம் மற்ற படங்களைக் காட்டிலும் வினியோகஸ்தர்களுக்கும், தியேட்டர்காரர்களுக்கும் அதிக லாபத்தைத் தரும் என்ற எதிர்பார்ப்பு இன்னும் அதிகமாகியுள்ளது.

0 comments:

Post a Comment