Wednesday 17 February 2016

'இப்படி ஆறுதல் சொல்ல 'கொரியர் சர்வீஸ்' போதுமே..!'- ராணுவ வீரர் அஞ்சலியில் ஓய்வெடுத்த மந்திரிகள்!

காஷ்மீரின் சியாச்சின்  பகுதி பனிச்சரிவில் 10 இந்திய ராணுவ வீரர்கள் கடந்த 3-ம் தேதி சிக்கிக் கொண்டனர். ஒன்பது பேர் சடலமாக மீட்கப்பட்ட நிலையில், கர்நாடகாவின் ஹனுமந்தப்பா மட்டும் உயிருடன் மீட்கப்பட்டு பின்னர் தீவிர சிகிச்சை நிலையிலேயே இறந்து போனார். உயிரிழந்த வீரர்களின் உடல்கள்  ராணுவ ஹெலிகாப்டர்கள் மூலம்  கொண்டு செல்லப்பட்டு அவர்களின் உறவினர்களின் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டது.

ராணுவ அதிகாரிகள்,  மாவட்ட ஆட்சியர்கள், போலீஸ் சூப்பிரண்டுகள், அரசியல் பிரமுகர்கள், மந்திரிகள்  வீரர்களின் உடல்களுக்கு வீரவணக்கம் செலுத்தினர்.  தமிழகத்தைச் சேர்ந்த ஏழுமலை, குமார், கணேசன், ராமமூர்த்தி ஆகிய ராணுவ வீரர்களின் குடும்பத்திற்கு தலா 10 லட்ச ரூபாய் உதவிப் பணத்தை மந்திரிகள் வாயிலாக முதல்வர் ஜெயலலிதா வழங்கினார்.

ஓசூருக்கும் கிருஷ்ணகிரிக்கும் இடையில் உள்ள 'குடிசாதனப் பள்ளி' கிராமத்தைச் சேர்ந்த வீரர் ராமமூர்த்தியின் உடல் அதே போன்று அவரது உறவினர்களிடம் ஒப்படைக்கப் பட்டது.

உயிரிழந்த ராமமூர்த்தியின்  உடலுக்கு மலர் வளையம் வைத்த பின் தமிழக மந்திரிகள் இருவர்  'அம்மா' கொடுக்கச் சொன்னதாக தெரிவித்து அவர் குடும்பத்தாரிடம் ரூ.10 லட்சத்துக்கான காசோலையை  திங்கட்கிழமை இரவு வழங்கினர். அப்போது நேரம் 11.45.

சின்னதாய் ஒரு ஃப்ளாஷ் பேக்...

நெடுஞ்சாலை, சிறு மற்றும் குறு துறைமுகங்கள் துறை மந்திரி எடப்பாடி பழனிச்சாமி, உயர்கல்வித்துறை மந்திரி பழனியப்பன் ஆகியோர் உயிரிழந்த தமிழகத்தின்  ராணுவ வீரர் ராமமூர்த்தியின் உடலுக்கு அஞ்சலி செலுத்த,  'கான்வாய்' சகிதமாக  திங்கட் கிழமை இரவு 8 மணியளவில்  கார்களில் வந்து கொண்டிருந்தனர்.

அவர்களுக்குப் பின்னால், மாவட்டம், ஒன்றியம், வார்டு , உள்ளாட்சி மன்றம், அரசு அதிகாரிகள் என்று பத்து கார்கள்  குடிசாதனப் பள்ளியை நோக்கி விரைந்து கொண்டிருந்தது.

"ராணுவ வீரர் ராமமூர்த்தியின் உடல் வந்து சேரவில்லை. இன்னும் சிலமணித்துளிகள் ஆகலாம்" என்ற தகவல் காரில் வந்து கொண்டிருந்த மந்திரிகளுக்குப் போய்ச் சேர...  அடுத்த நிமிடமே அந்த கார்கள் அப்படியே சாலை ஓரமாக 'பார்க்கிங்' செய்யப்பட்டது.

அந்த இடம் 'நெரிகம்' என்ற கிராமம். அடுத்த சில நிமிடங்களில் அந்த கிராமத்தில் இருந்த முக்கிய  அதிமுக நிர்வாகியின் வீட்டு முன்பாக கட்டில் போடப்பட்டுள்ளது. காரிலிருந்து இறங்கிய மந்திரிகள் , கட்டிலில் அமர்ந்து மணிக்கணக்கில் இளைப்பாறல் முடித்து விட்டு  'ராணுவவீரர் ராமமூர்த்தியின்  உடலை கொண்டு வந்ததும் சொல்லுங்க' என்று அலெர்ட் போட்டுவிட்டு அங்கேயே காத்திருக்கத் தொடங்கி விட்டனர்.

சரியாக, இரவு  மணி 11.20 ... ராமமூர்த்தியின் உடல் குடிசாதனப் பள்ளி கிராமத்துக்குள்  ராணுவ மரியாதையுடன் நுழைந்தது. இந்த தகவல் வந்ததும் மந்திரிகள்  'நெரிகம்' கிராமத்திலிருந்து புறப்பட்டு   சரியாக 11.35-மணிக்கு ராமமூர்த்தியின் உடல் வைக்கப்பட்டிருந்த கிராமத்தை அடைந்தனர். அதாவது  'நெரிகம்' கிராமத்திலிருந்து வெறும் மூன்று கிலோ மீட்டர் தூரமே இருந்தது அந்த கிராமம்.

ராமமூர்த்தியின் உடலுக்கு ராணுவ அதிகாரிகள், அரசு அதிகாரிகள்,  போலீசார்  ஆகியோருடன் இணைந்து மாண்புமிகு மந்திரிகளும் அஞ்சலி செலுத்தி முடித்த போது இரவு மணி 11.45. அதற்கடுத்த சில நிமிடங்களில் ராமமூர்த்தியின் குடும்பத்தாரிடம், "அம்மா இந்த உதவியை (ரூ.10 லட்சம் காசோலை) செய்யச் சொன்னாங்க..." என்றபடி அந்த நிதியை அவர்களிடம் கொடுத்தனர்.

குடிதானப்பள்ளியில் மந்திரிகள் இப்படி அஞ்சலி செலுத்தியதுதான் கிருஷ்ணகிரியில் தொடங்கி, தர்மபுரி வரை பேசப்படுகிறது.

"மூன்றுகிலோ மீட்டர் தூரத்திலேயே காரை நிறுத்தி விட்டு  ராணுவ வீரர் ராமமூர்த்தியின் உடல் வந்து விட்டதா? என்று கேட்டுத் தெரிந்து கொண்டு, உடல் வந்தபின்னரே அங்கு வந்து 'மரியாதை'க்காக ஒரு அஞ்சலியை செலுத்தியுள்ளனர் தமிழக மந்திரிகள்.

முன்னதாகவே  கிராமத்துக்கு வந்து,  அந்த வீரரின் குடும்பத்துக்கு அருகிருந்து ஒரு ஆறுதலை சொல்லி இருக்கலாமே.... தமிழக அரசு கொடுத்த பணத்தை கொண்டு போய் 'மட்டும்' சேர்க்க 'கொரியர்' சர்வீஸ் போதாதா... மந்திரிகள் எதற்கு ? இதுதானா ஆறுதலும், அஞ்சலியும்...?!"  எனக் குமுறுகிறார்கள்  அப்பகுதி மக்கள்!


0 comments:

Post a Comment