Friday 19 February 2016

மிருதன் - திரைவிமர்சனம் - ‘தனி ஒருவனாக’

ஹாலிவுட்டில் Resident evil, Warm Bodies , Dawn of the dead எண்ண முடியாத அளவிற்கு சோம்பி வகை படங்கள் வந்து விட்டது. முதலில் சோம்பி என்றால் என்ன? வேறு ஒன்றும் இல்லை, ஊரில் எங்காவது ஒரு வைரஸ் பரவும், அந்த வைரஸ் ஒருவர் உடலுக்கு புகுந்துவிட்டால், மிருக குணம் வந்து அனைவரையும் கடித்து கொன்றுவிடுவோம். இது தான் சோம்பி கான்செப்ட்.

இவை பாலிவுட்டில் கூட சையிப் அலிகான் நடிப்பில் go goa gone என்று ஒரு படம் வெளிவந்தது, தமிழில் முதன் முறையாக நாய்கள் ஜாக்கிரதை இயக்குனர் சக்தி சௌந்தர் ராஜன் இயக்கத்தில் வெளிவந்துள்ள தமிழ் சோம்பி படம் தான் இந்த மிருதன்.
கதைக்களம்

ஊட்டியில் ஒரு கெமிக்கல் தொழிற்சாலையில் சில கெமிக்கல்களை ஊழியர்கள் தெரியாமல் தவறவிடுகிறார்கள். இது தேங்கியிருக்கும் ஒரு நிலத்தடி நீரில் கலக்க, அதை ஒரு நாய் குடிக்கின்றது. இதைத் தொடர்ந்து அந்த நாய் சோம்பியாக மாற, பின் ஊர் முழுவதும் அந்த வைரஸ் பரவுகின்றது.

இதே ஊட்டியில் அண்ணன் -தங்கையாக ஜெயம் ரவி-அனிகா சந்தோஷமாக வாழ்ந்து வருகின்றனர். ரவி சாதுவான ட்ராபிக் போலிஸாக இருந்தாலும், தன் நண்பருக்காக MLA R.N.R.மனோகரிடம் முறைக்கின்றார்.

இதை தொடர்ந்து அனிகா திடிரென்று ஒரு நாள் தொலைந்து போக, பதறி வெளியே வரும் ஜெயம் ரவியை சோம்பிகள் துரத்துகின்றது, இதே ஊரில் மருத்துவராக இருக்கும் லட்சுமி மேனன் தன் சக மருத்துவர்களுடன் இணைந்து இந்த வைரஸிற்கு மாற்று மருந்து கண்டுப்பிடிக்க முயற்சி செய்கின்றார். தங்களை ஒரு இடத்திற்கு அழைத்து செல்ல இவர்களுக்கு ஜெயம் ரவி உதவி தேவைப்படுகிறது.

இதற்காக லட்சுமி மேனன், அனிகாவை காப்பாற்ற ரவிக்கு உதவி செய்ய, பிறகு ‘எங்களை பாதுகாப்பாக கோயமுத்தூர் அரசு மருத்துவமனைக்கு அழைத்து செல், அப்போது தான் இதற்கு மாற்று மருந்து கிடைக்கும்’ என லட்சுமி மேனன் கூறுகிறார். பின் தன் “மிஷின் கன்”னை முதுகில் மாட்டி கிளம்ப, ஜெயம் ரவி இவர்களை காப்பாற்றி சொன்ன இடத்திற்கு அழைத்து சென்றாரா? இதற்கு மாற்று மருந்து கண்டிப்பிடித்தார்களா? சோம்பிகளை எப்படி வேட்டையாடுகிறார் என்பதை எதிர்ப்பாராத கிளைமேக்ஸுடன் கூறியிருக்கிறார் இயக்குனர்.
படத்தை பற்றிய அலசல்

ரோமியோ ஜுலியட், தனி ஒருவன், பூலோகம் என தொடர் வெற்றிகளை தொடர்ந்து மீண்டும் அதே வேகத்தில் இந்த ஆண்டும் வெற்றி கணக்கை தொடங்கிவிட வேண்டும் என ரவி களத்தில் இறங்கியுள்ளார். படத்தில் அன்புள்ள அண்ணனாக மனதை ஈர்க்கின்றார். அதே நேரத்தில் சோம்பிகளை வேட்டையாட துப்பாக்கியை தூக்கி வேட்டைக்கு கிளம்பும் இடத்திலும் சபாஷ் பெறுகிறார். ஆனால், எப்படி இவருக்கு இத்தனை புல்லட் கிடைத்தது என்பது லாஜிக் மீறலோ மீறல். இன்னும் கொஞ்சம் சுட்டால் ஸ்கிரீனை தாண்டி இரண்டு புல்லட் நம் மீது பாய்ந்திருக்கும்.

லட்சுமி மேனன் மருத்துவராக வருகிறார், ரவியுடன் பின்னாலே ஓடுகிறார், இரண்டு டூயட்டுக்கு உதவுகிறார் தவிர பெரிதாக நடிக்கும் கதாபாத்திரம் இல்லை, உண்மையை சொல்ல வேண்டுமென்றால் ரவி-லட்சுமி மேனன் கெமிஸ்ட்ரியை விட ரவி-காளி வெங்கட் கெமிஸ்ட்ரி நன்றாக ஒர்க் அவுட் ஆகியுள்ளது. எப்போதும் போல் தன் கவுண்டர் வசனங்களால் காளி கலக்குகின்றார். அதிலும், சுட தெரியாமல், அவர் சரியாக சுட்டு, அங்க எய்ம் வச்சேன் மச்சான், அதான் இங்க சுட்டேன், தப்பா சரியாக சுட்டேன்ல என்று கேட்கும் காட்சிகள் சிரிப்பு சரவெடி. அதேபோல் சில நேரம் வந்தாலும் ஸ்ரீமனும் தன் பங்கிற்கு கலகலப்பூட்டுகிறார். மனோகரும் வில்லன் போல் காட்டினாலும் போக போக, ‘எல்லாரும் சொல்லிட்டாங்க இருந்தாலும் நானும் சொல்றேன், என்னம்மா இப்படி பண்றீங்களேமா’ என தன் பங்கிற்கு சிரிக்க வைக்கின்றார்.

தமிழ் சினிமாவின் முதல் முயற்சி என்பதால் கண்டிப்பாக சோம்பி படம் பார்க்காதவர்களுக்கு இது புது அனுபவத்தை தந்தாலும், ஹாலிவுட் படங்கள் பார்த்தவர்களுக்கும் இது பல படங்களை நியாபகப்படுத்தும். இயக்குனர் காதலை வைத்து திரைக்கதையை நகர்த்தியிருந்தாலும், ரவி-அனிகாவின் அண்ணன், தங்கை பாசம் ரசிகர்களை கவர்ந்த அளவிற்கு காதல் காட்சிகள் எடுபடவில்லை. கொஞ்சம் தேவையில்லாத திணிப்புகள், இப்படி மாற்றியிருக்கலாமே என ரசிகர்களையே முணுமுணுக்க வைக்கின்றது.

வெங்கடேஷின் ஒளிப்பதிவு படத்தில் பல காட்சிகள் சோம்பிகளை அருகில் காட்டி அச்சுறுத்துகின்றனர், இதற்கெல்லாம் மேல் டி.இமான் தான் இப்படத்திற்கு இசையா என்று கேட்கும் அளவிற்கு மிரட்டியுள்ளார் பின்னணி இசையில்.
க்ளாப்ஸ்

இதுவரை தமிழ் சினிமா ரசிகர்கள் தமிழில் கண்டிராத கதைக்களம் என்பதால் அதற்காகவே மனம் திறந்து பாராட்டலாம்.

ஜெயம் ரவி-அனிகா செண்டிமெண்ட் காட்சிகள், படத்தின் முதல் பாதி விறுவிறுவென செல்கின்றது.

டி.இமான் பின்னணி இசையில் மிரட்டியுள்ளார், மேலும், படம் ஆரம்பித்து வேறு திசையில் செல்லாமல் ஆரம்பத்திலேயே கதைக்குள் செல்கின்றது.
பல்ப்ஸ்

இரண்டாம் பாதி என்ன தான் சுவாரசியமாக சென்றாலும், முதல் பாதி அளவிற்கு இல்லையே என்று சொல்ல வைக்கின்றது.

பல இடங்களில் லாஜிக் மீறல்கள், பெரிய ஆக்ஷன், விறுவிறுப்புடன் செல்கையில் காதலை வைத்து கிளைமேக்ஸை நகர்த்தி செல்வது சில தரப்பு ரசிகர்களுக்கு ஏமாற்றம் தான்.

படத்திற்கு மிகப்பெரிய பலம் டி.இமானின் பின்னணி இசை என்றாலும், கிளைமேக்ஸில் மீண்டும் மீண்டும் வரும் ஒரே இசை கொஞ்சம் காதை பதம் பார்க்கின்றது.

மொத்தத்தில் ஹாலிவுட்டில் சோம்பி கதைகள் எத்தனை வந்தாலும், தமிழில் ‘தனி ஒருவனாக’ நின்று படத்தை சுமந்து செல்லும் ஜெயம் ரவிக்காகவும், புதிய முயற்சிக்காகவும் கண்டிப்பாக இந்த சோம்பியுடன் பயணிக்கலாம்.

0 comments:

Post a Comment