Sunday 14 February 2016

வில் அம்பு விமர்சனம்-விக்கல் எடுத்தவன் ஒருத்தன், வெந்நீர் குடிச்சவன் வேறொருத்தன்

விக்கல் எடுத்தவன் ஒருத்தன், வெந்நீர் குடிச்சவன் வேறொருத்தன் என்கிற மாதிரி, ஒருவனால் இன்னொருவனுக்கு ஏற்படுகிற சங்கடமும், சவுக்கியமும்தான் இந்த வில் அம்பு. படம் சொல்லும் நீதி? நல்லதோ, கெட்டதோ… அதுல நாம மட்டும் சம்பந்தப்படல. வேற வேற ஆட்களாக நடமாடிகிட்டு இருக்கிற இந்த சமூகமும்தான்!

விட்டால் விண்கல் மண்டையில லேண்ட் ஆகிற அளவுக்கு சிக்கலான கதை. அதை சர்வ சுலபமாக டீல் பண்ணியும், சகலவிதமான வித்தைகளை காட்டியும் படம் முழுக்க நம்மை கவர்ந்துவிடுகிறார் இயக்குனர் ரமேஷ் சுப்ரமணியம்.

பிறந்ததிலிருந்தே பெற்றோர் ஆசியுடன் தறுதலையாக வளர்கிறார் ஸ்ரீ. பிறந்ததிலிருந்தே பெற்றோரின் பேச்சை கேட்டு நல்ல பிள்ளையாக வளர்கிறார் ஹரீஷ். இருவருக்கும் நேரடி பழக்கமும் இல்லை. ஆனால் சம்பந்தமேயில்லாமல் ஒருவர் வழியில் இன்னொருவர் கிராஸ் ஆகிறார்கள். இருவருமே போலீசில் சிக்குகிறார்கள். செய்யாத தப்புக்கு அவஸ்தைப்படும் ஹரீஷ், அதற்கு காரணமானவர்களை தேடிக் கிளம்புகிறார். படம் முழுக்க க்ரைம் கூலிங் கிளாசோடு நடமாடும் ஸ்ரீ, காதலிக்காக திருந்தி போலீஸ் லத்தி சார்ஜ்களுக்கு குட்பை சொல்லிவிட்டு கிளம்புகிறார். க்ளைமாக்சில் கூட, இவ்வளவு பிரச்சனைக்கும் இவன்தான் காரணம் என்பதை அறியாமல் ஒரு கைக்குலுக்கல்களோடு இருவரும் விடை பெற்றுக்கொள்ள, நடுநடுவே வரும் திகில் பிகில் சமாச்சாரங்கள்தான் கதை.

வழக்கு எண் படத்தில் அறிமுகமான ஸ்ரீதான் அந்த ‘பை பர்த்’ ரவுடி. ஆக்டிங் பிரம்ம்மாதம்! லோக்கல் ரவுடியின் பாடி லாங்குவேஜ் அப்படியே பொருந்துகிறது அவருக்கு. படபடவென துறுதுறுவென இருக்கும் அந்த வேகமும், டயலாக் டெலிவரியும் அவரை நல்ல இடத்திற்கு கொண்டு சேர்க்கும். லவ்வில் விழுந்த பின்பும் கூட தன் துறுதுறுப்பை குறைத்துக் கொள்ளாமல், விர்ரென பாய்ச்சல் காட்டுகிற அம்பாக இருக்கிறார். நட்ட நடு ராத்திரி. காதலி வீட்டிற்குள் இவர். திடீரென காதலியின் அப்பா வந்துவிட, தப்பித்து வெளியேறவும், அதே நேரத்தில் காதலியை யாரும் குறைவாக நினைத்துவிடவும் வாய்ப்பில்லாத மாதிரி ஒரு முடிவெடுக்கிறாரே… பலே!

ஸ்ரீக்கு ஜோடி சமஸ்கிருதி. படித்த பணக்கார பெண்கள், லோக்கல் ‘டஸ்ட் பாய்ஸ்’ மீது காதல் கொள்ளும் ஆபத்தான ஃபார்முலாவைதான் இங்கும் பயன்படுத்துகிறார் டைரக்டர். (தப்பு சார், ரொம்ப தப்பு) ஆனால் சமஸ்கிருதி அழகு. “என்னை அவன் பார்க்குறானா பாறேன்…” என்று கூறிவிட்டு அப்படியே கடைக்கண் விழியாலே ஸ்ரீயை கவிழ்த்துப் போடும் அந்த அழகு, சத்தியமாக தியேட்டரையும் சேர்த்துக் கவிக்கும். என்னதான் தன்னை கொல்ல துரத்தினாலும், அப்பா அப்பாதானே? அந்த கடைசி நேர திகிலுக்கு அவர் காட்டும் ரீயாக்ஷன் நிஜம்!

செய்யாத தப்புக்கு சிறைக்குப் போய், அதற்கப்புறமும் போலீசின் சந்தேக வளையத்திற்குள் சிக்கி சின்னாபின்னமாகும் ஹரீஷ், அவ்வளவு சிறப்பாக நடித்திருக்கிறார். தலைக்கு மேல் அவமானம் சூழ்ந்த பின்பும், நான் நிரபராதி என்று நிரூபிக்க அவர் படும் பாடு, அப்படியே நமக்குள் ஜீவனாக இறங்குகிறது. மிக இயல்பாக பதற்றமில்லாமல் அதே நேரத்தில் படக்கென்று அவர் காதலை உடைக்கிற அந்த இடம், அட! ஹரிஷின் சினிமா பயணம் இதற்கப்புறம் நல்லபடியாக வேகமெடுக்கும்!

சிருஷ்டி டாங்கே இருக்கிறார். சமஸ்கிருதி இருக்கிறார். அவர்களுக்கான காட்சிகளும் நிறைய இருக்கிறது. ஆனால் மனசை அள்ளிக் கொண்டு போவதென்னவோ சாந்தினிதான். சிறு வயதிலிருந்தே ஹரிஷின் மேல் க்ரஷ் ஆகி, அதற்கப்புறம் வளர்ந்து நிற்கையிலும் அந்த க்ரஷ்ஷை தொடர்ந்து, கடைசியில் அவருக்கே உதவி செய்து… கடைசியில் அவர் கைக்குள்ளேயே அடைக்கலமாகும் இவர் காதலில், அப்படியொரு அழகு!

படம் முழுக்க நம்மை கைபிடித்து அழைத்து செல்வது நம்ம யோகி பாபுதான். (பன்னிமூஞ்சு வாயன்?) ஒரு வசனம் பேசினாலும், கைதட்டல்களை அள்ளிக் கொள்கிற மாடுலேஷன் புரிந்து வைத்திருக்கிறார் மனுஷன். திருடப் போகிற இடத்தில் கூட என்ன பேசுகிறோம் என்று புரியாமல் பேசி எல்லாரையும் ஸ்டேஷனுக்குள் கொண்டு சேர்கிற அவரது அப்பாவித்தனம் சிரிப்பொலிக்கு உத்தரவாதம். அடிக்கடி, ‘வருத்தம் செய்றீங்க வருத்தம் செய்றீங்க’ என்று சொல்லிக் கொண்டேயிருக்கிறார். ஆனால் அருமை செஞ்சீங்க யோகி பாபு!

அவ்வளவு படித்த ஒரு இளைஞன், தன்னை தவறான ஒரு வேலைக்குதான் அழைத்துச்செல்கிறார்கள் என்பதை புரியாமலா இருப்பான்? அந்த ஒரு இடத்தில் மட்டும், ‘இடிக்கிறது’ என்று சாதாரணமாக சொல்ல முடியாது. டைரக்டரின் திரைக்கதையில் ஏற்பட்ட மகாமக நெருக்கடி!

மார்ட்டின் ஜோ வின் ஒளிப்பதிவு திரையிலிருந்து பார்வையையும் கவனத்தையும் திரும்ப விடாமல் காப்பாற்றுகிறது. இசை நவீன். கேட்க கேட்க பிடிக்குமோ என்னவோ?

வில்லிலிருந்து அம்பாக பாய வேண்டிய அத்தனை திறமைகளையும் கொண்டவர்தான் இப்படத்தின் இயக்குனர் ரமேஷ் சுப்ரமணியம். வித்தை தெரிந்த ‘மாஸ் அர்ஜுனன்கள்’ தவறாமல் அழைத்து கதை கேட்கலாம்!

0 comments:

Post a Comment