Sunday 14 February 2016

ஜில் ஜங் ஜக் -விமர்சனம்

ஒரு சில படங்களை பார்த்து வீட்டுக்கு வந்தால் நைட்டு 12 மணிக்கு அலாரம் வைத்து யோசித்து சிரிப்பார்கள். இன்னும் சொல்ல வேண்டும் என்றால் நம்ம ஊர் உலக நாயகன் கமல்ஹாசன் காமெடி படங்களை கூறலாம்.

டார்க் ஹியூமர் எனப்படும் நகைச்சுவை ட்ரண்டை பலர் உருவாக்கினாலும் கமல் தான் இதில் கில்லாடி, இதே பார்முலாவில் தமிழில் சூதுகவ்வும், மூடர்கூடம் என பல படங்கள் வர அதே வரிசையில் சித்தார்த் தயாரித்து நடித்து, தீரஜ் வைத்தி இயக்கத்தில் வெளிவந்திருக்கும் படம் ஜில் ஜங் ஜக்.
கதைக்களம்

உலகமே பொருளாதார வீழ்ச்சி, பெட்ரோல் விலை ஜெட் வேகத்தில் உயர 2020ல் படம் ஆரம்பிக்கின்றது. தேவநாயகம் பெரிய கடத்தல் காரர், அவருடைய தொழில் நஷ்டமடைந்து கொண்டே வர, கடைசியாக இருக்கும் 4 கிலோ போதைபொருளை சைனிஸ் சிலருக்கு விற்க முயற்சி செய்கிறார்.

இதற்காக போதை மருந்தை ஒரு விஞ்ஞானியின் உதவியுடன் காரில் பெயிண்டு போல் அடித்து ஒரு பிங்க் கலர் வண்டியை ரெடி செய்கிறார். இந்த காரை சொன்ன நேரத்தில் கொண்டு சேர்க்க, ஜில்(சித்தார்த்), ஜங்(அவினாஷ் ரகுதேவன்), ஜக்(சனந்த்) என மூன்று இளைஞர்களை தேர்ந்தெடுக்கின்றனர்.

மூவரும் காரை ஓட்டி செல்லும் இடத்தில் எதிர்ப்பாராத விதமாக பல அசம்பாவிதம் நடந்து கார் வெடிக்கின்றது, இதை தொடர்ந்து தேவநாயகத்திற்கு தெரிந்தால் உயிரை எடுத்துவிடுவான்.

இதன் காரணமாக கொஞ்சம் தன் மூளையை பயன்படுத்தி தேவநாயகத்தின் பரம எதிரியான ரோலெக்ஸ் ராவுத்தர் (ராதாரவி)யை தூண்டி விடுகிறார் சித்தார்த். இதன் பிறகு அந்த கும்பலிடம் சித்தார்த் அன் - கோ எப்படி தப்பிக்கின்றனர் என்பதை கலகலப்பாக கூறியிருக்கிறார் அறிமுக இயக்குனர் தீரஜ்.
படத்தை பற்றிய அலசல்

இந்த மாதிரி பீரியட் படங்களுக்கு டீட்டெய்ல் தான் மிக முக்கியம். 1990, 1980 என காட்டினால், பலரும் பார்த்த உலகம், இதனால், பல செட் அமைக்க வேண்டியிருக்கும், ஆனால் இப்படம் 2020ல் நடப்பதால் நாம் அங்கு போய் பார்க்க முடியாது என்பதால், பலதும் கற்பனையே. ஆனால் அதற்காக பறக்கும் கார், அதி டெக்னாலஜி செல்போன் என இல்லாமல் கதைக்கு என்ன தேவையோ அதை மட்டும் தெளிவாக காட்டியுள்ளனர்.

சித்தார்த் தொடர்ந்து குறும்பட இயக்குனர்களுக்கு வாய்ப்பளித்து வருகிறார். அதிலும் திறமையான இளைஞர்களாக தேடிப்பிடிக்கின்றார். படத்தின் கதாபாத்திரத்தின் பெயருக்கே இயக்குனர் தனி கோர்ஸ் செய்திருப்பார் போல, ஜில் ஜங் ஜக்கில் ஆரம்பித்து அட்டாக் ஆல்பர்ட், ரோலெக்ஸ் ராவுத்தர் என பெயரிலேயே ஈர்க்கின்றார்.

படத்தில் பல வசனங்கள் 10 நிமிடம் கழித்து தான் புரிகின்றது, வசனத்திற்கு மிகவும் மெனக்கெடுத்து இருப்பது தெரிகின்றது. ‘ஒரு பெரிய வேலையை நன்றாக செய்ய வேண்டும் என்றால் 9 சின்ன வேலைகளை சரியாக செய்ய வேண்டும்’ என்பது தான் படத்தின் ஒன் லைன். இதை வைத்தே கதையை நகர்த்தி அதற்கான காட்சி அமைப்புகளை அழகாக காட்டியுள்ளார் இயக்குனர்.

மேலும், இந்த GUNஓட பெயர் கை, இத......................அடுத்த வரியை நாங்கள் சொல்ல மாட்டோம், இப்படி பல யோசித்து சிரிக்கும் டபூள் மீனிங் ஜோக்ஸ் நிரம்பி வழிகின்றது.

ஸ்ரோயஸ் கிருஷ்ணனின் ஒளிப்பதிவு படத்தின் களத்திற்கு தேவையான ஒரு ட்ரையான காட்சியமைப்புகளை சலிப்பு தட்டாமல் காட்டியுள்ளார். அதேபோல் விஷால் சந்திரசேகரின் பின்னணி இசை தமிழ் சினிமாவிற்கு ஒரு சூப்பர் இசையமைப்பாளர் கிடைத்து விட்டார் என சொல்லலாம் மிரட்டியுள்ளார்.

படம் என்ன தான் டார்க் ஹியுமர் புரிஞ்சு சிரிக்கனும் என்று கூறினாலும், மல்டிப்ளக்‌ஸ் ஆடியன்ஸை விட விசில் அடித்து ஆரவாரம் செய்து பார்க்கும் ஆடியன்ஸ் தான் நம்மூரில் அதிகம் அவர்களுக்கு புரியும் படி சில காட்சிகள், வசனங்களை வைத்திருக்கலாம்.
க்ளாப்ஸ்

படத்தின் கதாபாத்திரங்கள், ஜில் ஜங் ஜக் மூவருமே கலக்கியுள்ளனர். அதிலும் நம்மூர் கைக்கு உகாண்டா வேஷம் கட்டும் இடத்தில் திரையரங்கமே சிரிப்பில் அதிரும்.

தேவநாயகம் கூடவே வரும் பை கதாபாத்திரம் கலகலப்பிற்கு பஞ்சமே இருக்காது (ஒன்லி வாட்ஸ் அப் பயன்படுத்தும் இளைஞர்களுக்கு மட்டும்).

படத்தின் இசை மிகப்பெரும் பலம் என கூறலாம், எந்த காட்சிக்கு எப்படி இசை வேண்டும் என்பதை இயக்குனர், இசையமைப்பாளர் இருவருமே நன்கு அறிந்து கொடுத்துள்ளனர்.

வித்தியாசமான முயற்சி, நாவல் அமைப்பில் காட்சியமைப்புகள் என புது முயற்சிக்கு தீரஜ், சித்தார்த்தை மனம் திறந்து பாராட்டலாம்.
பல்ப்ஸ்

சின்ன படம் என்றாலும் இரண்டாம் பாதி மிகவும் நீளமாக இருப்பது போல் தெரிகின்றது. எல்லோருக்கும் இந்த மாதிரியான காமெடிகள் புரியுமா என்று தெரியவில்லை.

கிளைமேக்ஸில் பல கதாபாத்திரங்கள் வருவது கொஞ்சம் தலை சுற்றசெய்கின்றது.

மொத்தத்தில் மல்டிப்ளக்‌ஸ் ஏ செண்டர் ஆடியன்ஸுகளுக்கு ஜில்லாகவும், பி, சி செண்டர் ரசிகர்களுக்கு ஜங்காகவும் அமைந்துள்ளது. 

0 comments:

Post a Comment