Wednesday 24 February 2016

“இனிமே யாரும் இப்படிப் பண்ணாதீங்க ப்ளீஸ்..!’’ - குமுறும் லட்சுமி ராமகிருஷ்ணன்

‘என்னம்மா இப்படிப் பண்றீங்களேம்மா...’ - ’சொல்வதெல்லாம் உண்மை’ நிகழ்ச்சியில் போகிற போக்கில் லட்சுமி ராமகிருஷ்ணன் சொல்லிய ஒரு கேப்ஷன்தான்,

இப்போது தமிழக தேர்தல் திருவிழாவையே  துவக்கி வைத்திருக்கிறது. கோடிகளைக் கொட்டி தி.மு.க. வெளியிடும் தேர்தல் விளம்பரங்களில், ‘என்னம்மா இப்படிப் பண்றீங்களேம்மா’ என்பதுதான் ஹேஷ்டேக் போல உள்ளது. இடையில் திடீரென லட்சுமி ராமகிருஷ்ணனே அந்த பிரசாரத்தை ஆதரிக்கிறார் என்பது போல செய்திகள் வெளியாக, ’என்ன நடக்கிறது?’ என்று அவரிடமே கேட்டேன்.

குமுறிக் கொட்டத் தொடங்கி விட்டார். ‘’என்னைக் கேக்காம என்னைப் பத்தி எப்படி தப்பான தகவல் பரப்பலாம். எனக்கும் குடும்பம் இருக்கு. என் பொண்ணு அமெரிக்காவில இருந்து வந்திருக்காங்க. அவங்ககூட எனக்கு நேரம் செலவழிக்க முடியலை. இது பத்தி நான் எங்கேயும் எந்த இடத்துலயும் பெரிசா பதில் சொன்னதே இல்லை. அப்புறம் ஏன் எல்லாரும் என்னை டார்கெட் பண்றீங்க!

இந்த ஒரு சின்ன வார்த்தை எங்கே போய் நிக்குதுனு பாருங்க. சின்னச் சின்னதா கிண்டல் பண்ணி, கடைசியில தமிழ் நாட்டோட முதலமைச்சரவே கிண்டல் பண்ற அளவுக்கு வளர்ந்து நிக்குது. அந்த அரசியல் விளம்பரம் லட்சுமி ராமகிருஷ்ணன்ங்ற ஒரு சாதாரண மனுஷிய டார்கெட் பண்ணல. அதுக்கும் எனக்கும் எந்த சம்மந்தமும் இல்லை. தமிழ்நாட்டு அரசியல் பத்தி விளம்பரம் பண்றாங்க. அதனால அது பத்தி என்கிட்ட கேக்குறதே தேவையில்லாத விஷயம்.

அந்த வார்த்தை என்னை ஏன் இவ்ளோ சுத்துதுனு தெரியலை. முன்னாடி சிவகார்த்திகேயன் அந்த வார்த்தைக்கும் எனக்கும் எந்தச் சம்பந்தமும் இல்லைனு சொல்லியிருந்தாரு. ’என்னம்மா இப்படி பண்றீங்களேம்மா’ பாட்டு ஹிட் ஆனதுக்கு லட்சுமி மேடம் காரணம் இல்லை. பாட்டை உருவாக்கின டீம்தான் காரணம்’னு சொல்லியிருந்தாரு. அதான் எனக்கு கோபம் வந்து ட்வீட் பண்ணேன். ஏன்னா, அப்போ அது எனக்கு பெரிய ஆதங்கமா இருந்தது. என்னதான் கோடி கோடியா சம்பளம் வாங்குற ஹீரோ ஆகிட்டாலும், எனக்கு சிவா இன்னமும் பழைய சிவாதான். என் வீட்டுப் பையனாதான் அவரைப் பார்க்கறேன். கதை விவாதத்துல எல்லாம் என் கூடவே பல நாள் கலந்துட்டு இருக்காரு. அப்படி இருக்கும்போது, அப்படி ஏன் சொல்லணும். அதான் நான் அப்படிக் கேட்டிருந்தேன்.

எல்லாத்துக்கும் மேல விஜய் டிவி ஷோவுலயும் என்னை அவமானப்படுத்தினாங்க. என்னை மாதிரியே கெட்டப் போட்டுக்கிட்டு, ஒருத்தர் மேல கை வைக்கிற மாதிரியெல்லாம் நடிச்சு, என் சுயமரியாதைய சீண்டியிருந்தாங்க. அதை ஒரு தடவ செஞ்சா பரவாயில்லை. திரும்பத் திரும்ப அதை கிண்டலடிச்சு பெரிசாக்கிட்டாங்க. அதனாலதான் நான் கோபப் பட்டேன். ஆனா, இப்போ நிலவரம் வேற. இந்த பிரச்னைல என்னை இழுக்கறது தேவையில்லாத விஷயம்.

என்னை அவங்க டார்கெட் பண்ணல, அப்படி இருக்கும் போது நான் ஏன் ரியாக்ட் பண்ணணும் பதில் சொல்லணும். இன்னைக்கு வந்திருந்த டெய்லி பேப்பர்ல இருக்கறதுகூட நான் சொல்லாதது. அந்த பத்திரிகைல கேட்டப்ப, ‘எதுவும் சொல்ல விரும்பல’ன்னுதான் சொல்லியிருந்தேன். அவங்களா ஏதோ எழுதிட்டாங்க. இத்தோட இதை விட்ருவோம்!’’

- சாந்தமாக முடித்துக் கொள்கிறார் லட்சுமி ராமகிருஷ்ணன்.

0 comments:

Post a Comment