Wednesday 24 February 2016

கணிதன் விமர்சனம் - கொஞ்சூண்டு குமாரசாமி! நிறைய்ய நிறைய்ய குன்ஹா!

செய்யாத தப்புக்காக ‘சேதாரம்’ ஆகும் ஒருவன், தப்பு செஞ்சவனுக்கு தருகிற ‘செய்கூலி’தான் கணிதன்! தனி மனித தடால் புடால்கள் இல்லாமல், பொது நோக்கத்திற்காக போர் வாளை வீசியிருக்கும் இப்படத்தின் டைரக்டர் டி.என்.சந்தோஷுக்கு ஒரு வெரிகுட் சர்டிபிகேட் வழங்கலாமா? (போலி சர்டிபிகேட் இல்லேங்க)

எப்படியாவது பிபிசி சேனலில் நிருபராகிவிட வேண்டும் என்று துடிக்கும் டி.வி நிருபர் அதர்வாவுக்கு எந்நேரமும் அதே நினைப்புதான். அந்த நேரம் பார்த்துதான் அவர் வேலை பார்க்கும் துக்கடா டி.வி ஒன்றின் உரிமையாளர் மகள் கேத்ரீன் தெரசா, அதர்வாவின் லைஃப்-ல் கிராஸ் ஆகிறார். காதல்…! முழுசாக ஒரு டூயட் முடிவதற்குள் ட்விஸ்ட்! இன்டர்வியூவின் போது இவர் கொடுத்த சர்டிபிகேட்டுகளை சரிபார்க்க போலீஸ் உதவியை நாடுகிறது பிபிசி சேனல். பார்த்தால்… இவரது போலி சர்டிபிகேட்டை பயன்படுத்தி வெளிநாட்டு வங்கிகளில் கடன் பெறப்பட்டு ஏப்பம் விட்டதாக சொல்கிறது க்ரைம் ரெக்கார்ட்! அதர்வா மட்டுமல்ல, தமிழ்நாட்டிலிருக்கும் ஏராளமான இளைஞர்களின் சர்டிபிகேட்டுகள் சம்பந்தப்பட்ட பல்கலைகழகங்களின் உதவியுடன் போலி எடுக்கப்பட்டு இத்தகைய வெளிநாட்டு வங்கிகளில் பல கோடிகள் ஸ்வாகா செய்யப்பட்டிருக்க, செய்யாத தப்புக்காக ஜெயிலுக்கு போகிறார் ஹீரோ! பெயிலில் வெளியே வரும் அதர்வா, போலிகளை கண்டுபிடித்து தோல் தனியே, ரத்தம் தனியே பிய்த்து எடுப்பதுதான் மீதி!

துப்பறியும் கதைகளுக்குள் தோட்டாவாக பொருந்துகிற அளவுக்கு கூர்மையாக இருக்கிறார் அதர்வா. தட்டிவிட்டால் விண்னென்று ஜம்ப் ஆகிற உடல்வாகு வேறு இருக்கிறதா? ஆக்ஷன் காட்சிகளில், அதிர்கிறது வெண்திரை! அப்பா மகன்களின் உறவில் இருக்கிற தலைமுறை இடர்பாடுகள் இவர் விஷயத்திலும் இருக்கிறது. ஆனால் அதுதான் சுவாரஸ்யம். தாத்தா காலத்திலிருந்து ஆல் இண்டியா ரேடியோவில் செய்தி வாசிக்கிற குடும்பமாக இருந்தாலும், “போதும்டா… எங்க கஷ்டம். நீயாவது வேலைய மாத்திக்கோ” என்று கெஞ்சும் அப்பா நரேனும், “அடைந்தால் பிபிசி” என்று துடிக்கும் மகன் அதர்வாவும் பிரமாதமான டேக் ஆஃப்!

அதர்வா- கேத்ரின் காதல், ஒப்புக்கு ஒத்தடமாக இருந்தாலும் கேத்ரின் அழகு ஆங்காங்கே தூவப்பட்ட ரோசா இதழ்கள். அவருக்கு டப்பிங் கொடுத்த பெண் யாரோ? கொஞ்சல் ஓவர்தான். அது ஒருபக்கம் இருக்கட்டும்… ஆபத்தான இடங்களுக்கு கூடவா இவரையும் சூட்கேஸ் மாதிரி இழுத்துக்கொண்டு போக வேண்டும்? போங்கப்பா… கேத்ரீன் காஸ்ட்யூமருக்கு எக்ஸ்ட்ரா பேமென்ட் கொடுக்கலாம். உடைத்தேர்வுகளில் அப்படியொரு அழகும் நேர்த்தியும்.

போலி சர்டிபிகேட் அடிக்கும் கும்பலோடு குடித்தனமே நடத்தியிருப்பார் போலிருக்கிறது டைரக்டர் டி.என்.சந்தோஷ். இண்டு இடுக்கு விடாமல் இழுத்துப்போட்டு பந்தி வைத்துவிட்டார். இனி எங்காவது நம் சர்டிபிகேட்டுகளை ஜெராக்ஸ் எடுக்கக் கொடுப்பது கூட எவ்வளவு ஆபத்து என்றாகிறது மனசு! அதுமட்டுமல்ல, வசனங்களில் துணிச்சல் வழிகிறது. “அண்ணா யுனிவர்சிடியிலிருந்துதான் சர்டிபிகேட்டுகள் போயிருக்கணும்” என்று அப்பட்டமாக பேசுகிற அளவுக்கு துணிச்சல் மிகுந்த வரிகளை மீண்டும் நினைத்தால் ஆச்சர்யமே மிஞ்சுகிறது. (எப்படிய்யா அனுமதிச்சாங்க?)

நட்புக்காக மட்டுமே கருணாகரன் சிக்கிக் கொண்டு உயிர் பிழைப்பதெல்லாம் ஓணானை இழுத்து வேட்டிக்குள் விட்டுக் கொள்வதை விட கொடுமையானது. காமெடியும் குணச்சித்திரமும் கலந்து கைதட்டல் பெறுகிறார் கருணாகரன். வில்லன் தருண் அரோரா சும்மா பார்வையாலேயே மிரட்டுகிறார். பாக்யராஜ் இருக்கிறார். அதிகம் வேலையில்லை.

தட தட வேகத்தில் செல்லும் திரைக்கதை, இரண்டாம் பகுதியின் கடைசியில் லேசாக பள்ளத்தில் விழுந்து தப்பித்தோம் பிழைத்தோம் என்று ஓடுவதை தவிர்த்திருக்கலாம்.

ட்ரம்ஸ் சிவமணியின் இசையில் எல்லா பாடல்களும் கொள்ளையடிக்கிறது. பின்னணி இசை மட்டும் வேறொருவர். அவரும் கொடுத்த வாய்ப்பை மிக சரியாக பயன்படுத்தியிருக்கிறார்.

கணிதன்- கொஞ்சூண்டு குமாரசாமி! நிறைய்ய நிறைய்ய குன்ஹா!

0 comments:

Post a Comment