Monday 25 January 2016

ரஜினிக்கு பத்மவிபூஷண்! எல்லாம் ஒரு கணக்குதான்

கர்மவீரர் காமராஜர், புரட்சித்தலைவர் எம்ஜிஆர், கலைஞர் கருணாநிதி, புரட்சித்தலைவி ஜெயலலிதா, கேப்டன் விஜயகாந்த், சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்… இப்படி இந்த சாதனையாளர்களின் பெயருக்கு முன்னால் இருக்கிற பட்டங்கள் அனைத்தும் மக்களால் தரப்பட்டவை. இதே தலைவர்களுக்கு அதிகாரபூர்வமாக எத்தனையோ விருதுகள் வழங்கப்பட்டுள்ளன. ஒருமுறை அந்தந்த விருதுகளை அவரவர் பெயருக்கு முன்னால் எழுதி சந்தோஷப்பட்டதில்லை மக்கள். அவ்வளவு ஏன்? இந்தியாவின் சிறந்த குடிமகன் என்ற விருதை பெற்ற விஜயகாந்தை ஒருமுறை கூட அப்படி சொல்லி அழைத்ததில்லை உலகம்.

அதே நேரத்தில், இந்த பத்ம விருதுகளை பெயருக்கு முன்னால் போட்டுக் கொள்ளக் கூடாது என்றும் கூறுகிறார்கள். (அப்புறம் எதுக்காம்?)

வருடத்திற்கொரு முறை தரப்படுகிற பத்ம விருதுகள், வீட்டு அலங்கார பொருட்களாகவே பல இடங்களில் காட்சி தருகின்றன. வேடிக்கை என்னவென்றால், இந்த பத்ம விருதுகள் பாதி பேருக்கு இறந்த பின்பு வழங்கப்படுவதுதான். அட… இருக்கும்போதே வழங்கியிருந்தால் இன்னும் நாலு வருஷம் உயிரோடு இருந்திருப்பாரே… என்று கூட இது பற்றியெல்லாம் விமர்சனங்கள் உண்டு.

விருதுகள் விஷயத்தில் இப்போது நிலைமை சரியில்லாத நேரம். மத்திய அரசு கொடுத்த விருதுகளையெல்லாம் திருப்பிக் கொடுத்து வருகிறார்கள் பல அறிஞர்கள். இந்த நேரத்தில் ரஜினிகாந்த் உள்ளிட்ட சிலருக்கு இந்த பத்ம விபூஷண் விருது வழங்கப்பட இருப்பதாக அறிவிப்புகள் வந்திருக்கின்றன. விரைவில் டெல்லியில் நடைபெறும் பிரமாண்ட விழாவில் ஜனாபதி பிரணாப் முகர்ஜி கைகளால் இந்த விருதை பெறப் போகிறார் ரஜினி.

தகுதியானவருக்கு தரப்படும் தகுதியான விருதுதான். ஆனால் தேர்தல் வரப்போகிற இந்த நேரத்தில் இப்படியொரு விருதை அறிவித்திருப்பது வேறு பல சந்தேகங்களுக்கு வழி வகுத்துள்ளது. “நம்ம தலைவருக்கு விருது கொடுத்த கட்சிக்குதான் என் வோட்டு” என்று ரஜினி ரசிகர்கள் சொல்கிற பட்சத்தில், இந்த சந்தேகம் சரியானதுதான். ஆனால் அப்படியெல்லாம் நடக்குமா? நடந்தாலும் தமிழ்நாட்டில் பா.ஜ.கவில் பசுமை தெரியுமா என்பதுதான் பலமான கேள்வி

0 comments:

Post a Comment