Monday 25 January 2016

நாகார்ஜுனா, பிரகாஷ்ராஜுடன் கடைசிநாள் படப்பிடிப்பு, கலந்துகொள்ளாமல் விடைபெற்ற கல்பனா

'சின்ன வீடு 'கல்பனா என்றால்தான் தமிழகத்தில் பலருக்கும் தெரியும். தனது தனித்தன்மையான நடிப்பால் மலையாளத்தில் மட்டுமல்லாமல்  தமிழ் சினிமா ரசிகர்கள் மத்தியிலும் இடம் பிடித்த கல்பனா, இன்று உயிருடன் இல்லை.  திடீரென்று மரணம் அவரைத் தழுவிக் கொண்டது. என்னதான் நடந்தது கல்பனாவுக்கு?

நாகார்ஜுனா, கார்த்தி, தமன்னா நடிக்கும் தோழா சினிமா சூட்டிங்கில் கலந்து கொள்ள நேற்று அவர் ஹைதரபாத் சென்றுள்ளார். இன்றைக்கு அவர் கலந்துகொள்ளும் கடைசிநாள் படப்பிடிப்பாம். நாகார்ஜுனா மற்றும் பிரகாஷ்ராஜுடன் அவர் நடிக்கவேண்டிய காட்சியை இன்று படமாக்கத் திட்டமிட்டிருந்தார்களாம். அதற்காகத்தான் ஐதராபாத் வந்திருக்கிறார்.

அங்கு தங்கியிருந்த ஹோட்டல் அறையில் இன்று மயக்கமடைந்த நிலையில் கிடந்துள்ளார்.   உடனடியாக அப்பல்லோ மருத்துவமனைக்கு கல்பனாவை கொண்டு சென்றுள்ளனர். மருத்துவர்கள் மாரடைப்பு காரணமாக இறந்தே கிடந்துள்ளதாக தெரிவித்துள்ளனர். ஆனால் கல்பனா எப்படி இறந்தார் என்பது குறித்து இன்னும் உறுதிப்படுத்தப்பட்ட தகவல் கிடைக்கவில்லை.

கடந்த சில ஆண்டுகளாக கல்பனாவுக்கு இதய வால்வு பிரச்னை இருந்து வந்துள்ளது. கொச்சியில் உள்ள அமிர்தா மருத்துவமனையில், அதற்கு தொடர்ந்து சிகிச்சை எடுத்து வந்துள்ளார். மருந்து மாத்திரைகளும் சாப்பிட்டு வந்துள்ளார். அத்துடன் கல்லீரல் மாற்று அறுவை சிகிச்சையும் அவருக்கு செய்யப்பட்டுள்ளது.

தனக்கு உடலில் இவ்வளவு வியாதிகள், வலிகள் இருந்தாலும் அதனை சூட்டிங் ஸ்பாட்களில் கல்பனா காட்டிக் கொண்டதே இல்லையாம். படத்தில் எப்படி கலகலப்பாக வருவாரோ... அது போலவே நிஜத்திலும் பழகி வந்துள்ளார். ஒரு போதும் தனக்குள்ள பிரச்னையை அடுத்தவர்களிடம் சொன்னது கிடையாதாம். தனக்கிருந்த நோய்களை சீரியசாகவும் எடுத்துக் கொண்டது கிடையாம்.

ஒரு வேளை ஹோட்டல் அறையில் துணைக்கு யாராவது இருந்திருந்தால் கூட மாரடைப்பு ஏற்பட்டவுடனே மருத்துவமனைக்கு கொண்டு சென்றிருக்க முடியும். பொதுவாக இதயநோய் இருப்பவர்கள் தனியா உறங்க கூடாது . எனவே, 'ஒருவரை துணைக்கு வைத்துக் கொள்' என்று  உறவினர்கள் வற்புறுத்தியுள்ளனர். ஆனால் கல்பனா அதையெல்லாம் சட்டை செய்தது கிடையாதாம்.

நாடக நடிகர் வி.பி.நாயர், விஜயலட்சுமி தம்பதியரின் மூத்த மகள்தான் கல்பனா. இயற்பெயர் கல்பனா ரஞ்சனி. இவரது தங்கைதான் நடிகை ஊர்வசி,மலையாள நடிகர் அனிலை திருமணம் செய்து கொண்ட கல்பனா, கடந்த 2012-ம் ஆண்டு அவரிடம் இருந்து விவகாரத்து பெற்றார். இந்த தம்பதியருக்கு 16 வயதில் ஸ்ரீமாயி என்ற மகள் உண்டு. விவாகாரத்துக்கு பிறகு மகளுடன் கல்பனா வாழ்ந்து வந்தார்.

கடந்த 1983-ம் ஆண்டு  புகழ்பெற்ற மலையாள இயக்குநர் எம்.டி. வாசுதேவன் நாயர் இயக்கிய 'மஞ்சு' என்ற படத்தில்தான் கல்பனா முதலில் அறிமுகம் ஆனார். அதற்கு இரண்டு வருடம் கழித்து தமிழில் அப்பாவி மனைவியாக அவர் நடித்த  'சின்னவீடு ' சக்கை போடு போட்டது. அதுபோல் ' சதிலீலாவதி ' படத்திலும் கல்பனாவின் நடிப்பு பேசப்பட்டது.

அதற்கு பின், தமிழகத்தில் நடிகை கல்பனா பற்றிய பேச்சு இல்லை. அவரது இறப்பு செய்திதான் இப்போது எட்டியிருக்கிறது!

0 comments:

Post a Comment